ஹம்பி ( வரலாற்றுப் புனைவு )
கதையின் கதை :-
ஹம்பி என்று அழைக்கப்படும் விஜயநகரத்தை கி.பி 1357 இல் தொடங்கி கி.பி 1485 வரை சங்காமா வம்சத்து மன்னர்கள் ஆண்டனர் .இவர்களில் கி.பி 1422 முதல் 1426 வரை ஆண்ட இரண்டாம் தேவராயன் காலத்தில் விருபாசர் கோயிலுக்கென ஒரு தேர்வீதி அமைக்கப்பட்டது .அவனே அந்தத் தேர்வீதியில் முதன் முதலாக தேர்த்திருவிழாவையும் தொடங்கி வைத்தான் .
அப்போது நிக்கோலா கேன்டி என்ற ஐரோப்பியப் பயணி ஹம்பியின் திருவிழாவுக்கு முதன் முதலாக வந்து கலந்து கொண்டார் என்பது வரலாறு .
அதே சமயம் கி.பி 1485 இல் சங்காமா வம்சத்தின் மூன்றாம் விருபாசனை அவனது கீழிருந்த சாளுவ நரசிம்மன் எனும் சிற்றரசன் பதவி இறக்கம் செய்தான் , பின் ஹம்பி சாளுவர்களின் வசமானது ...ஆக தேர்த்திருவிழாவையும் சங்காமர் ..சாளுவர்களுக்கிடையிலான பகைமையையும் அடிப்படையாக வைத்து எழுதப்பட்ட கற்ப்பனைக் கதையே இது ...
ஒரு ஆச்சர்யமான விஷயம் என்னவெனில் கி.பி 15 ஆம் நூற்றாண்டில் தொடங்கப்பட்ட அந்தத் தேர்த் திருவிழா இன்றும் கூட ஹம்பியில் மார்ச் ...ஏப்ரல் மாதங்களில் நடைபெறுகிறது என்பது தான் .
இடம் - ஹம்பி அல்லது விஜயநகரம்
வருடம் -கி.பி. ௧௪௨௩
மாதம் - மார்ச்
நேரம் -அந்தி மாலைப் பொழுது
நிகோலாவுக்கு நகரெங்கும் ஒருவித நறுமணம் நிறைந்த கோலாகலம் நிரம்பி வழிவதைப் போல பிரமை ஏற்ப்பட்டது ,கூட நடந்து வந்து கொண்டிருந்த நண்பன் ஹரிஹரனிடம் மெல்லத் திரும்பினான் .
"நண்பா இதென்ன வாசனை ? என் மனம் இங்கு வந்த நாள் முதல் இதில் மிகவும் லயித்து போகிறது, நீ மட்டும் உடனில்லா விட்டால் நான் இதன் ஏகாந்தத்தில் மயங்கிப் போய் இங்கேயே இரவு முழுவதும் நின்றாலும் ஆச்சர்யப்படுவதர்க்கில்லை ! இத்தனை சுகந்தமாய் இருக்கிறதே இதென்ன ஹரிஹரா ?
நிகோலாவின் ஆச்சர்யத்தைக் கண்டு மெல்ல நகைத்தஹரிஹரன் ,வேடிக்கையாக நண்பனின் முதுகில் ஓங்கிக்குத்தினான் ;
"நிகோலா நீ ஐரோப்பாவிலிருந்து யாத்ரிகனாக இங்கே வந்தாலும் வந்தாய் ; எங்கள் ஹம்பியில் வான் மழை பொழிகிறதோ இல்லையோ உன்னிடமிருந்து ஒரே கேள்வி மழை பொழிந்து கொண்டே தான் இருக்கிறது போ என்றான் .
ஹரிஹரன் கி.பி 1422 லிருந்து 26வரை ஹம்பியை ஆண்டு வந்த சங்காமா வம்சத்து மன்னன் இரண்டாம் தேவராயானின் சேனாதிபதி அப்பண்ணாவின் கடை இளவல் ,
நாளந்தா பல்கலைக்கழகத்தில் அரசியல் பாடம் பயிலபோன நேரத்தில் நிகோலா எனும் வெள்ளை நண்பன் கிடைத்தான் .நிகோலா வேற்று தேசத்தவன் ஆனாலும் பாரதத்தின் தென்பகுதியில் சில காலம் தங்கி அங்குள்ள மக்களுடன் அளவளாவி அவர்களது வாழ்வுமுறைகளை தெரிந்து கொள்வதில் மிக்க ஆவலுடநிருந்தான் .
அந்த ஆவலே அவனை ஹரிஹரனின் நண்பனாக்கி இன்று ஹம்பிக்கும் அழைத்து வந்து அதன் அழகான தேர்வீதியில் லயித்துப் போய் நடக்க வைத்திருக்கிறது .நகரில் தென்படும் சிறு சிறு விஷயங்களைக் கூட கண்டு அதிசயப்பட்டு கேள்வி மேல் கேள்வியை துளைத்தெடுக்கும் நிகோலாவை புன்னகையுடன் பார்த்து விட்டு நடையைத் தொடர்ந்தான் ஹரிஹரன் ,
"என்ன நண்பா , என் கேள்விக்கு நீ இன்னும் பதில் அளிக்கவேயில்லையே ; சொல் ஹரிஹரா ...இதென்ன மணம் ...மனதைக் கிறக்கும் நறுமணம் ? எங்கிருந்து வருகிறது ? அதிலும் ஒவ்வொரு அந்தி மாலையிலும் என்னை ஏதோ செய்து அடிமையாக்கும் இந்த சுகந்தம் எதற்காகவேன்றேனும் சொல்லி விடேன் "
நிகோலா விழி மூடி நாசி நிரம்ப காற்றை உள்ளிழுத்து அனுபவித்துச் சொன்னான் .
சற்றே விஷமம் கலந்த குறும்போடு நிகோலாவை ஏறிட்டு நோக்கிய ஹரிஹரன் ,அதே குறும்பான நகைப்புடன்
"சரி நான் ஒன்று கேட்கிறேன் , பட்டென்று பதில் சொல் பார்போம் ,இந்த நறுமணத்தை நுகர்ந்தவுடன் உனக்கு என்னென்ன ஞாபகங்கள் வந்தனவோ உண்மை சொல் நிகோலா "
என்று கண்களைச் சிமிட்டினான் .
இன்னும்...இன்னும் ...இன்னும் நன்றாக அந்தப் புகை போன்ற வாசம் நிறைந்த காற்றை மூக்கால் முடிந்தவரை நுரையீரல் முழுக்க நிரப்பி சுகானுபவமாய் கண்களை மூடியவாறு மெய் மறந்தவன் போல நிகோலா மென்குரலில் ரகசியம் போல ;
"சொல்லட்டுமா ஹரிஹரா ...
வேறு என்ன ஞாபகம் ஹரிஹரா அங்கே கண்ணுக்கு எட்டாத தொலைவில் லண்டனில் எனக்காக ஒவ்வொரு விடியலிலும் எங்களது மூன்று குழந்தைகளுடனும் ...இன்னும் சற்றேனும் குறையாத காதலுடனும் காத்திருக்கும் எனது இனிய மனைவி மார்கரெட்டின் நினைவு தான் சட்டென்று மனதை இறுக்குகிறது ... பின் இதமாய் தளர்ந்து பறக்கிறது ...! இது சுகமா ? சோகமா ? பிடிபடவில்லை ஆனாலும் ஏதோ ஒரு இனம் புரியா சந்தோசம் உள்ளுக்குள் ததும்பி வழிந்து என்னை மூழ்கடிப்பதென்னவோ முற்றிலும் நிஜம் ."
எங்கேயோ பார்வை நிலைக்க நிகோலா லண்டனுக்கே போய் விட்டான் தன் நினைவுகளின் பின்னே ...
"அதே தான் நிகோலா ;கடல் கடந்தும் இந்த நறுமணம் உன் மனைவியை உனக்கு ஞாபகப்படுத்துகிறதே , அப்படித் தான் எம் நாட்டு வாலிபர்களுக்கு தம் மனைவிகளின் காதல் நிறைந்த காத்திருப்புகளை இந்த மனோகரமான சுகந்தம் மீண்டும் ...மீண்டும் மீள முடியாமல் நினைவுபடுத்தி ...
"மடையர்களே போதும் உங்கள் பொருள் தேடல் ; வாருங்கள் உங்கள் இல்லாளைத் தேடி " இந்நேரம் உங்கள் மனைவிமார்கள் உங்கள் மனைகளிலெல்லாம் அரிசியும் நெல்லும் பரத்தி அகல் விளக்குகளை ஏற்றி வைத்து இல்லுறை தெய்வங்களை வணங்கி விட்டு உங்கள் வருகையை எதிர்கொண்டு உள்ளுக்கும் வாசலுக்கும் நிலையின்றி கண் பதித்துக் காத்திருப்பார் ;
அன்னம் ...நாரை ...புறக்களால் தான் பறந்து வந்து தூது சொல்ல முடியுமா என்ன?நான் கூட பறந்து வருவேன் தூது செல்ல " என்று இந்த பொல்லாத நறுமணம் அவர்களை பரிகசித்து தழுவி தாண்டி செல்லும் ,மொத்தத்தில் இங்கு மாலைப் பொழுதுகளில் இனிமை கூட்ட "நறுமண விடு தூது " என்று கூட நீ எண்ணிக் கொள்ளலாம் நிகோலா ... "
இப்படிச் சொல்லி விட்டு ஹரிஹரன் தனக்குள் நகைத்துக் கொண்டான் .
நிகோலா தான் இப்போது லண்டனுக்குப் போய்விட்டானே ;
"ஓ மை டியர் மார்கரெட் ...! இன்னும் ... இன்னும் ...எத்தனை ... எத்தனை நாட்களோ ; இல்லையில்லை மாதங்களோ என் அன்பே ! "
மனைவியைப் பற்றிய தாபத்தால் நீண்ட நெடிய ஏக்கப் பெருமூச்சு விட்ட நண்பனை ஆதரவாய் தோளோடு அணைத்து;
"ஆயிற்று நிகோலா ; இதோ நீ ஆவலோடு எதிர்பார்த்த எங்கள் ஹம்பியின் விருபாசா ஆலயத் தேர்த்திருவிழா இன்னும் இரு தினங்களில் துவங்குகிறது ,பிறகென்ன அது முடிந்ததும் நீ உன் பயணத்தை முடித்துக் கொண்டு ஐரோப்பா சென்று விடப் போகிறாய் ,
அதுவரை இதோ "இந்த நறுமணம் உன்னோடு வாழட்டுமே நண்பா " என்றான் .
நண்பனின் ஆறுதல் வார்த்தைகள் நிகோலாவை மீண்டும் ஹம்பிக்கு அழைத்து வரவே சிலிர்ப்புடன் தலையை உலுக்கி கொண்டு கண்கள் விரிய சொன்னான் .
"ஹரிஹரா நான் எனது தேசம் செல்லும் போது மறவாமல் இந்த நறுமணத்தையும் என்னுடன் அழைத்துச் செல்வேன் .அதை எனக்காக நீ பரிசாகத் தருவாயா என் அருமை நண்பனே ! "என்றான் .
அவனது அளவற்ற ஆர்வம் கண்டு கேலி இழையோட உரக்கச் சிரித்த ஹரிஹரன்.
"நிச்சயமாக நிகோலா ...ஆனால் முழுதாக நறுமணத்தைப் பரிசளிக்க யாராலும் முடியாது அப்பனே ! வேண்டுமானால் அந்த வாசனையை எழுப்பும் வேர்கள் , பட்டைகள் , (அகில் ,சந்தனக் கட்டைகள் ,கற்பூர மரவில்லைகள் , தைல மரப்பட்டைகள் ) இவற்றை எல்லாம் நான் உனக்கு எனது அன்புப் பரிசாகத் தருகிறேன் , உன் ஊரை அடைந்ததும் அதை நெருப்பிலிட்டு எரித்தால் நீ மாய்ந்து மாய்ந்து ரசிக்கும் நறுமணம் உன்னோடு உன் வீட்டையும் நிறைத்திடலாம் ;
"ஓ நன்றி ஹரிஹரா ...அப்படியே செய் " என நிகோலா முடிக்கவும் ஹரிஹரனின் மாளிகை வரவும் சரியாக இருந்தது .
இவர்கள் மாளிகையை அடைந்த நேரம் சேனாதிபதி அப்பண்ணா மனையிலிருந்தார்,
"வா நிகோலா ;எப்படியிருக்கிறது எங்கள் ஹம்பி ? அயல் தேசத்திலிருந்து இங்கே வந்திருக்கும் நீ ஹம்பியின் விருந்தினன் ;உன்னை உபசரிப்பதும் உன் தேசத்தைக் கௌரவிப்பதும் வேறு வேறல்ல ...உனக்கான சௌகர்யங்களில் குறைவேதுமில்லையே இளைஞனே ... எதுவானாலும் சொல் நிகோலா "
என்றபடி தம் கனமான பார்வையை பார்வையை அவ்விரு இளைஞர்களிடம் படர விட்டார் .
"மிக்க நன்றி மதிப்பிற்குரிய சேனாதிபதி அவர்களே;ஹரிஹரன் இருக்கும் போது எனக்கென்ன குறை இருந்து விடும் ? அதோடு நீங்கள் மேன்மை வாய்ந்த பதவியில் இருப்பவர் உங்களது இந்த அன்பான விசரிப்பே போதும் , எனக்கு இங்கே ஒரு சௌகர்யக் குறைவும் இல்லை ,என் மனம் மகிழும் வண்ணமே எல்லாம் நடக்கிறது ."
நிகோலாவின் பதிலால் திருப்தி அடைந்த அப்பண்ணா ;
"நல்லது நிகோலா , சரி உணவருந்திவிட்டு விரைவாகவே உறங்கச் செல்லுங்கள் ,அடுத்து வரும் பத்து தினங்களும் நமது மன்னர் இரண்டாம் தேவராயர் கோலாகலமாய் நடத்தும் விருபாசா ஆலயத் திருவிழவால் குதூகலமும் கொண்டாட்டமுமாய் ஹம்பியே திணறிப் போய் அமளிப் படும் , இளைஞர்களான நீங்களும் அதில் ஆழ்ந்து விடுவீர்கள் ; அதனால் இப்போதே ஓய்வெடுத்துக் கொள்ளுங்கள் "
சரி தானே என்றார் .
நல்ல சுவையான இரவு உணவு முடிந்ததும் திறந்திருந்த சாளரங்களின் வழியே உட்புகுந்த மென்காற்றால் கண்களை சுழற்றிக் கொண்டு தூக்கம் வர சயனஅறைகள் பேச்சு மூச்சின்றி நிசப்தத்தில் ஆழ்ந்தன.
மறுநாள் எப்போதும் போல் கழிந்தது ,
அதற்கடுத்த நாள் தேர்த் திருவிழா கனஜோராய் ஆரம்பமானது .
சாதாரண நாட்களில் நிகோலாவின் கருத்தில் அவ்வளவாகப் பதியாத தேர்வீதியின் பிரமாண்டம் அன்று அவனை வெகுவாக வியப்பில் ஆழ்த்தியது
ஒற்றையாய் அகலமான நீண்ட பெரிய நேர்கோடாக அமைந்த தேர்வீதி கிட்டத் தட்ட ஒரு கிலோமீட்ட்ர் நீளமும் 50௦அடி அகலமும் கொண்டதாகப் பறந்து விரிந்திருந்தது . விருபாசா ஆலயத்தின் கிழக்குப் பகுதியில் ஆரம்பிக்கும் வீதி மதங்கா மலையின் வடமேற்கு அடிவாரம் வரை நீண்டு கொண்டே செல்வதைக் கண்டு நிகோலா பெரிதும் ஆச்சர்யப்பட்டுப் போனான் .
உலகில் தான் கண்ட எல்லா சாம்ராஜ்யங்களிலும் கூட இப்படி ஒரு வெகு பிரமாண்டமான தேர்வீதியைக் கண்டதில்லையோ ! என்று அதிசயித்துகொண்டு மீண்டும் அங்கேயே பார்வையை சுழல விட்டான் .
தேர்வீதியின் இருபுறங்களிலும் அழகழகான மாடங்களுடன் கூடிய இரட்டைத் தள வீடுகளும் ; திருவிழாவுக்கென முளைத்த சிறப்பு அங்காடிகளும் , விழாவைக் காண வருவோருக்கென நிறைய சத்திரங்களுமாய் நிரம்பி அந்தத் தேர்வீதியே ஜெகஜோதியாய் ஜொலித்து ஹம்பிக்கு கூடுதல் அழகூட்டிக் கொண்டிருந்தது .
இன்று நிகோலா தனியாகத்தான் ஊர் சுற்றிப் பார்த்துக் கொண்டிருந்தான் . கூடவே புறப்பட்ட ஹரிஹரனுக்கு;
" வெகு அவசரம்... உடனே வா " என அப்பண்ணாவிடம் இருந்து அவரது பணியாளன் ஒருவன் அழைப்பு கொண்டுவர அவன் அங்கே போக வேண்டியதாகி விட்டது.
என்ன தான் படைத்தளபதியின் தம்பியானாலும் ஹரிஹரன் படிப்படியான முன்னேற்றத்தையே விரும்பி ஒரு சாதாரண ஒற்றர் படை வீரனாகவே "சங்காமா " அரசில் பணியில் இருந்தான் . வெகு விரைவாகவே அரசர் இரண்டாம் தேவராயரின் அன்பையும், நன்மதிப்பையும் கூட சம்பாதித்து விட்டான் .
'நண்பன் நல்ல திறமைசாலி தான் ' என்று எண்ணமிட்டவாறு நடந்து கொண்டிருந்த நிகோலாவை ;
அந்தக் குரல் பிடித்து இழுத்து நிறுத்தியது .
"ஐயோ ...காப்பாற்றுங்களேன் ...யாராவது வந்து உதவுங்களேன் ...யாரவது வாருங்களேன் ... யாருமே இல்லையா என்னைக் காப்பாற்ற !!! "
ஒரு இளம்பெண்ணின் அவலக்குரல் அங்கிருந்த ஆடைகளுக்கான அங்காடிப் பகுதியில் இருந்து வலிந்து வெளியேறி வீதியில் போவோர் வருவோரை கட்டி இழுத்து நிறுத்தியது .
நறுமணம் தொடரும்...