வேழமறுத்து துண்டாடும் கோடைகடுவெயில்
கானக நடுவிற் செவ்வரிமா சிறுமுயல்
காண நாணி கடுகிப் பாய்ந்து தாவி அணைந்தது
பின்னப்பட்ட காசி நகர் சுற்றுக் கோட்டை
கற்சிதைந்த பாழும் கிணற்றில் ;
கிணற்று நீர் சிலும்பிச் சிலும்ப
தழும்பி முகம் காட்டினாள்
நல்லதங்காள் .
தூசு தும்பேஎன்று
அருந்தக் கை குவித்த நீரள்ளி வீசி
மஞ்சள் பூ முகம் மறுத்துத் திரும்பினால்
பசியோ பசியென்று கத்திக் குமிகின்றன
ஆறேழு வெள்ளரிப் பிஞ்சுகள்
மூளி மறுத்த முக்கால் வயிற்றை
உப்பி நிறைத்தது உப்பு நீர் கிணறு ;
கோடைக் கிணறுகள் தோறும்
இன்னுமிருக்கிறார்கள்
நல்ல தங்காளும்
அவளேழு வெள்ளரிப் பிஞ்சுகளும் .