- செவிக்கு இனிய நல்ல சங்கீதத்தைப் போல...
- நல்ல ருசியான சாப்பாட்டைப் போல ...
- முதலில் இருந்து முடிவு வரை சுவாரஸ்யம் சற்றும் குறையா சிறுகதையைப் போல...
- அழகான அர்த்தமுள்ள கவிதையைப் போல...
- அன்பான கணவன் மனைவியின் இனிமையான தாம்பத்தியத்தைப் போல...
- அனுசரணையான பெற்றோர்களின் அனுபவம் வாய்ந்த வழிகாட்டலைப் போல ...
- அழகான ...புத்திசாலிக் குழந்தைகள் அமையப் பெறுவதும் ஆஷிர்வதிக்கப் பட்ட ஒரு கொடுப்பினையே!
குழந்தை வளர்ப்பு என்பது ஏனோ தானோவென்று இன்றைய சூழலில் அமைந்து விட முடியாது.முதலில் குழந்தை பெற்றுக் கொள்வதற்கே இப்போதெல்லாம் திட்டமிட்டே ஆகவேண்டிய சூழலில் இன்றைய இளம் பெற்றோர்கள் இருக்கிறார்கள் என்பதே நிஜம்.
மகப் பேரு மருத்துவர்கள் கேட்கும் முதல் கேள்வியே ...
"நீங்க இந்தக் குழந்தைக்காக ப்ளான் பண்ணினிங்களா ...இல்ல தற்செயலா ?"
மேலோட்டமாகப் பார்த்தால் இந்தக் கேள்வி சங்கோஜத்தைத் தரலாம்...ஆனால் சற்று யோசித்தால் அதிலுள்ள அர்த்தம் பிடிபடும் .வாழ்க்கையில் எல்லாவற்றையுமே திட்டமிட்டு நிகழ்த்துதல் என்பது அனைவருக்கும் சாத்தியமில்லாமல் போகலாம் .ஆனால் ஒரு சில காரியங்களை மட்டுமேனும் நாம் முன்கூட்டியே திட்டமிட வேண்டிய அவசியம் இன்றைக்கு நிலவுகிறது.
- பொருளாதார நசிவுத் தன்மை...
- விலைவாசி உயர்வு ...
- கூட்டுக் குடும்பங்கள் நலிந்து தனிக் குடித்தனங்கள் மலிந்து விட்ட நிலை,
- ஒரு வீட்டில் இரண்டு மூன்று குழந்தைகள் என்ற நிலை மாறி இப்போதெல்லாம் பெரும்பாலும் ஒரே ஒரு குழந்தை என மாறி விட்ட சூழல் .
இவற்றை எல்லாம் கணக்கில் கொண்டு ஆராய்ந்தால் இன்றைய குழந்தைகளை சமூகத்தில் புத்திசாலிகளாக வெளிக் கொணர்வதில் பெற்றோர்களின் பங்கு மிக மிக அவசியமாகி விட்டது .கல்வி என்பது அறிவை மட்டுமே பட்டை தீட்டக் கூடும்.தனக்கான நன்மை தீமைகளை ஆராய்ந்து அறியக் கற்றுத் தருவது பெற்றவர்களின் தலையாய கடமை .
சென்ற வாரத்தில் ஒருநாள் டி.வி செய்திகளில் ..."நொய்டாவில் விவரமறியா சிறுமிகளிடம் பாலியல் கொடூரங்களை நிகழ்த்தியவர்களுக்கு மரண தண்டனை விதிக்கப் பட்டுள்ளது." என்ற வரிகள் காதுகளில் விழுந்தது.வளர் இளம்பருவத்தில் குழந்தைகளைப் பெற்ற எல்லாப் பெற்றவர்களையும் மிகுந்த பயத்தில் ஆழச் செய்த ஒரு சம்பவம் (கொடூரம் என்பதே சாலப் பொருந்தும்!)அல்லவா அது?!குழந்தை வளர்ப்பிற்கும் இதற்கும் என்ன தொடர்பு என்று சிலர் யோசிக்கலாம்.நிச்சயம் தொடர்பு இருக்கத்தான் செய்கிறது.
சில நாட்களுக்கு முன்பு வெளியிடப்பட்ட ஆய்வுச் செய்திகள் ஒன்றில் இன்னும் இருபது வருடங்களில் உலகின் பெரும்பான்மையான மக்கள் ஒரு கொடிய நோயால் பாதிக்கப் பட்டு அழிவைத் தேடிக் கொள்ளப் போகிறார்கள் .அதிலிருந்து தற்காத்துக் கொள்ள முயலா விட்டால் ஒட்டு மொத்த மனித சமுதாயத்திற்கும் அபாயமே " என்று கூறப் பட்டிருந்தது.அந்த நோய் ...
- AIDS அல்ல(ACQUIRED IMMUNO DIFICIANCY ச்ய்ன்றோம்)
- கேன்சர் அல்ல...
- காச நோய் அல்ல
வேறென்னவாக இருக்கும் என்கிறீர்களா? சுருங்கச் சொன்னால் ;
மனச்சிதைவு நோயாம்.
அதென்ன மனச் சிதைவு நோய் ?எதனால் இந்த நோய் வரக் கூடும்?குழந்தை வளர்ப்பிற்கும் இதற்கும் என்ன சம்பந்தம் ?நிறைய சம்பந்தம் இருக்கிறது என்கிறார்கள் மனநல மருத்துவர்கள் .மனச் சிதைவுக்கான ஆரம்ப விதையே குழந்தைப் பருவம் முதற்க் கொண்டு நடக்கும் சம்பவங்களின் தாக்கங்களே என்கிறார்கள் .ஏதோ பெற்றோம் ...வளர்த்தோம் என்றெல்லாம் இப்போது இருந்து விட முடியாது என்பதையும் தாண்டி பல விஷயங்கள் குழந்தை வளர்ப்பில் .
பெரிதாய் எதையேனும் சொல்லப் போவானேன்.
சென்ற வாரம் நிகழ்ந்த ஒரு சின்ன சம்பவம் ...எப்போதுமே "சுட்டி டி.வி யில் பாப்பு செட்ரிக் பார்ப்பது எனக்கு கொஞ்சம் நெருடலாகவே இருக்கும் ."எட்டு வயதுப் பையன் உடன் படிக்கும் எட்டு வயது மாணவியை நேசிப்பதைப் போல அந்த தொடரில் காட்டப் படுவது எனக்கு அத்தனை விருப்பமில்லை.
ஆனால் பாப்பு சென்ற வருட விடுமுறையில் பாட்டி வீட்டிற்குப் போனதிலிருந்து அங்கிருந்த மற்ற குழந்தைகளுடன் சேர்ந்து அந்த தொடரைப் பார்க்க ஆரம்பித்து விட்டிருந்ததால் இப்போதும் ஆர்வத்துடன் கண்டினியு செய்து கொண்டிருந்தாள்.வேண்டாம் வேறு ஏதானும் சேனல் பார் என்று மாற்றினால் அவளுக்கு கோபம் வந்தது.அதையே வை என்று அதிகாரமாக சொன்னாள்.
சில நாட்கள் பார்க் ...நண்பர்கள் வீடு என்று விளையாடப் போய்விட்டால் மறந்து விடுவாள்.ஆனால் மீண்டும் வீட்டில் இருக்கும் பொது அத்தொடரைப் பார்ப்பது நிற்கவே இல்லை.எனக்கோ சுத்தமாக விருப்பமே இல்லை .ரொம்பவும் ஸ்ட்ரிக்டாக சொன்னாள் பின்விளைவுகள் வேறு விதமாக இருக்குமோ என்று சங்கடமாக இருந்தது.
இது இப்படியே சில மாதங்கள் தொடர்ந்தது.நானும் ஒவ்வொரு முறையும் அவள் செட்ரிக் பார்க்கும் பொது மட்டும் அப்படி யோசித்து விட்டு பிறகு மறந்து போனவளானேன்.ரொம்பவும் வேண்டாம் ...பார்க்கவே கூடாது என்று வலியுறுத்திச் சொல்லவும் தயக்கம்.எதை நாம் வேண்டாம் என்கிறோமோ அதை தானே குழந்தைகள் பிடிவாதமாக வேண்டும் என்பார்கள்.(இது எழுதப் படாத விதி ஆயிற்றே!)
இப்படியோ போய்க் கொண்டிருந்த இந்த விஷயம் கடைசியில் இரண்டு நாட்களுக்கு முன் ஒரு வழியாக முடிவுக்கு வந்தது. அந்த தொடரில் வரும்"குட்டிப் பையன்(ஹீரோ) செட்ரிக் தன் உடன் படிக்கும் மாணவி ஜேனை நினைத்து" நான் உன்னை ரொம்பவும் நேசிக்கிறேன் ஜேன்" என்று சொல்வதாக ஒரு வசனம் வரவே ...
பாப்பு என்னிடம் "புருவங்களை ஆச்சர்யம் போல உயர்த்தி "மம்மி லவ் பண்றானாம் ...பாரேன் என்றாள். நான் திடுக்கிட்டு சட்டென்று ...கண்ணம்மா அப்படியெல்லாம் பேசக் கூடாதுடா என்றேன் புத்தி சொல்வதைப் போல...
பாப்பு என்னை ஒரு பார்வை பார்த்தாள்.
(அந்தப் பார்வை நான் என்னவோ அவளது குழந்தை போலவும்...அவளென்னவோ எனது அம்மா போலவும் எனக்கு உணர்த்தியது )
பிறகு பாப்பு தொடர்ந்து சொன்னாள்.
என்னம்மா நீ?
இது சும்மா டி.வி.ப்ரோக்ராம்னு எனக்கு தெரியாதா?
its only for seerial
என் கிட்ட யாராச்சும் boys அண்ட் girls இப்படி சொன்ன
" no friend dont say லைக் திஸ் ? its bad ...it is a prograam .not real ...go and sit ur place னு சொல்வேன் .என்றாள்.
கொஞ்ச நேரம் என்னால் சிரிப்பை அடக்க முடியவில்லை .
பாப்புவும் ..நானும் சேர்ந்து சிரித்துக் கொண்டோம் .
என்னை விட பாப்பு தெளிவாகவே வளர்கிறாள் என்று நினைத்துக் கொண்டேன் நான். குழந்தை வளர்ப்பில் அன்றொரு பாடம் கற்ற நிறைவு வந்தது.
குழந்தைகளிடம் எந்த ஒரு விசயத்திலும் ஆக்ரோசமாக எதிர்ப்புக் காட்டாமல் மென்மையாகச் சொல்லியோ அல்லது நமது கவலையை சுருக்கமாகப் புரிய வைத்தாலோ பல பிரச்சினைகள் தீரும்.