Saturday, November 27, 2010

அயோத்தி தீர்ப்பு சர்ச்சைகளும் சாமான்யர்களின் சில சந்தேகங்களும் :



அயோத்தி தீர்ப்பு மூன்று தரப்பினருக்கும் சர்ச்சைக்குரிய 2 1 /2 ஏக்கர் நிலத்தைப் பங்கிட்டுக் கொடுத்துள்ளது ,இந்த தீர்ப்பு நேர்மையான தீர்ப்பில்லை என பலரும் விமர்சிக்கிறார்கள். பத்தரிகைகளில் வாசிக்கிறோம். எனக்கொரு சந்தேகம்

மொத்தமுள்ள நிலமும் பாபர் மசூதி இருந்த காரணத்தால் முஸ்லீம்களுக்கே சொந்தம் என்று தீர்ப்பு வந்திருந்தால் அப்போதும் அது நேர்மையான தீர்ப்பென்று யாரும் ஒத்துக் கொண்டிருக்கப் போவதில்லை.
அல்லது இது பாபர் மசூதிக்கும் முன்பே ராமர் கோயில் இருந்த இடம் ,முஸ்லீம்கள் ஆக்ரமித்த இந்துப் பகுதி இது எனக்கூறி இந்துக்களுக்கே மொத்தமுள்ள நிலத்தையும் சொந்தம் என தீர்ப்பு வழங்கி இருந்தால் அதையும் நேர்மையான தீர்ப்பென்று யாரும் ஒப்புக் கொண்டிருக்கப் போவதில்லை.


மூன்று தரப்பையும் சாந்தப் படுத்தலாம் என்று நிலத்தை மூன்றாகப் பிரித்து தீர்ப்பு வழங்கினால் அதுவும் நேர்மையான தீர்ப்பில்லை .
அந்த நிலம் இந்துக்கள் மற்றும் முஸ்லீம்களின் புனித பூமி என்ற புனித பிம்பத்தை அலட்சியப் படுத்தி அரசாங்கமே அந்த நிலத்தை கையகப்படுத்திக் கொண்டு தன் பொறுப்பில் அரசு பொது சொத்தாக அறிவித்து தீர்ப்பளித்தால் என்ன நிகழும்?


"அயோத்தி மியூசியம் " என்று தகர போர்ட் மாட்டி அந்த நிலத்தை புராதன அடையாளங்களில் ஒன்றாய் அறிவித்து யாருக்கும் சொந்தமில்லை என்று ஆக்கி விட்டால் அப்போது இந்த தீர்ப்பைக் குறித்து என்ன பேசிக் கொள்வார்கள் எல்லோரும்!!!

சரி அப்படியானால் இந்த வழக்கில் மூன்று தரப்பினரையும் மனமொத்து ஏற்றுக் கொள்ள வைக்கும் படி நேர்மையான தீர்ப்பை எப்படி வழங்கலாம் என்று யாராவது இதுவரை பரிந்துரைத்திருக்கிரார்களா?அப்படி ஒரு பரிபூரணமான தீர்ப்பை யாராவது வைத்துக் கொண்டு அதை கொண்டு சேர்க்க ஆளின்றி தவிக்கிறார்களா?


இந்த வழக்கில் இன்னும் எந்த விதமான தீர்ப்பை எதிர்பார்க்கிறார்கள் ?
ராமாயணம் கற்பனை ஆனால் அயோத்தி கற்பனை அல்ல ...வரலாறும் கற்பனைக் கதை அல்ல, ராமன் கடவுள் அல்ல ,ஆனால் ராமன் என்ற இளவரசன் இருந்திருக்க வாய்ப்பு உண்டு. அசோகரை ஒப்புக் கொண்டால் ராமனையும் கொஞ்சம் கன்சிடர் செய்தாக வேண்டும் . எழுதி வைக்கப் படாத வரலாறு பல கற்பனைகளைத் திறந்து விடுகிறது.


இந்து மதத்தின் வேதங்கள்,உபநிசத்துகள்,வெறும் கற்பனைகள் மட்டுமாக இருக்க முடியாது,யாகங்கள்,பலிகள்,வர்ணாசிரம முறைகள்,கடவுள் கொள்கைகள்,வழிபாட்டு முறைகள். இதையெல்லாம் புறம் தள்ளி தெளிவான கண்ணோட்டத்தில் வரலாற்றை விளக்கும் நூல்கள் இருக்கக் கூடும்.
வரலாற்று நூல்கள் ராமர் பிறந்த இடம் அயோத்தி என்றே உறுதி செய்திருக்கின்றன. ராமனை கடவுளாக எண்ணி அல்ல. பூர்வ பழங்குடி தலைவனின் மகனாக ராமன் இருந்திருக்கலாம். ராமன் இருந்த பொது அதே காலத்தில் எழுதப் பட்டதல்ல ராமாயணம், மகாபாரதமும் நிகழ்ந்த அதே காலத்தல் எழுதப் பட்டதல்ல. மனிதன் நாகரிக வளர்ச்சி அடையும் தோறும் சிறிது சிறிதாக பல பிற் சேர்க்கைகளுடன் இந்த இரண்டு காவியங்களும் படைக்கப் பட்டிருக்கலாம்.

அசோகர் மரம் நட்டார்,குளம் வெட்டினார், கலிங்கப் போருக்குப் பின் புத்த மதத்தில் ஈடுபாடு கொண்டு இந்தியாவில் சாந்தி நிலவ நிறைய கட்டளைகள் பிறப்பித்தார் என்று தான் நம் பள்ளிகால வரலாற்றுப் பாடம் சொல்கிறது. அசோகர் ஒரு கொடுங்கோல் மன்னராகவும் இருந்திருக்கிறார் என்றால் அதை உடனே மறுக்க ஒரு கூட்டம் இருக்கும்.

இப்படித்தான் நடந்த நிஜ சம்பவங்களில் எவை தமக்கு சாதகமாக இருக்க கூடுமோ அவற்றை மட்டுமே மிகைப்படுத்தி எழுதி இருக்கிறார்கள் அன்றைய வரலாற்று ஆசிரியர்கள். ராமாயணத்தையும் மகாபாரதத்தையும் புறம் தள்ளி விட்டு ராமன் கடவுள் என்ற எண்ணத்தையும் புறம் தள்ளி விட்டு வெறுமே பண்டைய இந்திய வரலாற்றை மட்டுமே கையில் எடுத்துக் கொண்டால் .


இந்தியாவில் பலம் பொருந்திய பேரரசு நிலையில் ஆட்சி செலுத்திய மௌரியர்களுக்கு முன்பு மகதர்களே சொல்லிக் கொள்ளும் படியான அரசாட்சியை வழங்கி இருக்கிறார்கள். மகதர்களுக்கு இணையான அன்றைய மற்றொரு அரசு கோசலம் .

மகதர்களும் கோசலர்களும் மட்டுமே அரசுகள் என்றிருந்த நிலையில் கோசலம் மகதத்தைக் காட்டிலும் செல்வாக்குடன் இருந்ததற்கு சான்றுகள் உள்ளன பண்டைய சரித்திரத்தில்.

நினைவல் கொள்ளுங்கள் ;

மௌரியர்களுக்கு முன்பே இந்தியாவில் மனித பெருக்கம் சில லட்சங்களில் மட்டுமே இருந்திருக்க வாய்ப்பிருந்த அந்த நாட்களில் வடக்கில் இருந்த இரண்டே ராஜ்யங்கள் மகதமும் கோசலமும் மட்டுமே. இதற்கான சான்று ;

//Stone age To Modern age ...( Population -A Look )

இங்கிலாந்திலும் வேல்ஸிலும் பழைய கற்காலத்தில் சுமார் 250 மனிதர்கள் தான் இருந்தனர் ,அவர்களும் 10 சிறு சிறு கூட்டங்களாகப் பிரிந்திருந்தனர் என புதை பொருள் ஆராய்ச்சியாளர் கிரஹாம் க்ளெர்க் கூறுகிறார்.

இங்கிலாந்து ,ஸ்காட்லாந்து ,அயர்லாந்து ஆகிய பகுதிகளில் இடைக்கற்காலத்தில் மனித சமூகத்தில் 4500 நபர்களும் ;

புதிய கற்காலத்தில் 20,000 நபர்களுமே வாழ்ந்திருக்க சாத்தியமிருப்பதாக மேற்படி தொல்லியல் ஆய்வுகள் கூறுகின்றன.

வரலாற்றுக்கு முந்தைய கற்காலங்களில் வாழ்ந்த பூர்வகுடியினர் வேட்டைத்தொழில் செய்தே வாழ்ந்து வந்தனர்.அந்த மனிதர்களுக்கு உணவை சேகரிக்க மட்டுமே தெரிந்திருந்தது.

உணவு உற்பத்தி பற்றி அம்மக்கள் அறிய நேர்ந்த பல ஆயிரம் ஆண்டுகளின் பின் கி.மு 2000 ஆண்டுக் காலத்தில் புதிய கற்காலத்தில் இருந்த மனிதர்களின் எண்ணிக்கையைப் போல இரு மடங்கு எண்ணிக்கை கொண்ட மனிதர்கள் மட்டுமே வாழ்ந்திருக்க சாத்தியம் உண்டு.

இதற்கு சம காலத்தில் இந்தியாவிலும் இதைப் போல ஒரு மதிப்பீடு சாத்தியமில்லை ,இந்திய துணைக் கண்டத்தில் எந்த ஒரு பகுதியிலும் கற்காலத்தில் பத்து சதுர மைல்களுக்கு ஒருவருக்கு மேல் இருந்திருந்தால் அதுவே மிகவும் வியப்புள்ளது.

ஆதார நூல்கள் :

பண்டைய இந்தியா -D .D .KOSAMBI
மித் அண்ட் ரியாலிட்டி -D .D .KOSAMBI
பதினோராம் வகுப்பு -வரலாறு புத்தகம்
THE HISTORY OF ARYAN RULE IN INDIA - E .B .HAWELL //


மற்றவை எல்லாம் சிந்திச் சிதறிக் கிடந்த பழங்குடி வம்சங்கள் .பழங்குடி வம்சங்களில் இருந்து வந்தவையே இவ்விரு ராஜயங்களும்,

கோசலத்தின் தலைநகரமாக அயோத்தி இருந்திருக்கிறது ,அன்றைய காலத்தில் மன்னருக்கு வயது வந்த மகன்கள் இருப்பின் அதிகாரப் போட்டியில் இளவரசர்களே தந்தையை கொள்ளும் அபாயம் இருந்ததால் சில மன்னர்கள் வயது வந்த மகன்களை நாடு கடத்தும் தண்டனை வழங்கி நாட்டை விட்டு அனுப்பி இருக்கிறார்கள்.

இத்தகு பல உதாரணங்கள்;

மகதத்தின் இளவரசன் அஜாத சத்ரு இப்படி நாடு கடத்தப் பட்டவனே

கலிங்க இளவரசன் விஜயன் நாடுகடத்தப் பட்டு இலங்கைத் தீவில் வந்திறங்கிய கதை மகாயானத்தில் உண்டு .

இப்படித் தான் ராமன் நாடு கடத்தப் படும் தண்டனை அடைந்த இளவரசனாக தென்னிந்தியாவுக்கு வந்திருக்க கூடும் ,

சீதையைப் பற்றி சரித்திரத்தில் சான்றுகள் காணோம்.

ஆனால் ராமன் வடக்கில் (கோசலத்தில்)இருந்து தக்காணம் கடந்து கோதாவரி நதி தாண்டி தென்னிந்தியக் காடுகளை கடந்ததற்கு சான்றுகளாகக் காட்டப் படுபவை உத்திரா பத வணிகப் பாதைகள். ராமன் அயோத்தியில் இருந்து தென்னிந்தியாவுக்கு வந்த பாதையே பிற்பாடு மிகப் பயனுள்ள உத்திரா பத வர்த்தகப் பாதைகலாயின என வரலாற்று ஆசிரியர்கள் உறுதிப் படுத்துகின்றனர்.

ராமர் கோயிலைப் பற்றி ஒன்றும் சொல்வதற்கில்லை ஆனால் ராமர் பிறந்த இடம் அயோத்தியின் அந்த சர்ச்சைக்குரிய நிலமாக இருந்திருக்க வாய்ப்புண்டு என்பது ஏற்றுக் கொள்ளத் தக்க வாதமே.


மகதத்தில் பிம்பிசாரரை அறிவோம் ,கோசலத்தில் பசேனாதி என்றொரு மன்னர் இருந்து ஆண்டிருக்கிறார். மகத கோசல போர்களில் கோசலத்தை பின்னுக்குத் தள்ளி விட்டு மகதம் நிலைபெற்றது. மகதர்களுக்குப் பின்பு மௌரியர்கள் வந்தனர்.


பெரும்பாலான நமது வரலாற்றுப் பாடங்கள் மௌரியர்களில் இருந்து தான் விரிவாகத் தொடங்குகிறது. புறக்கணிக்கப் பட்ட அதற்கு முந்தைய காலங்களை தூசி தட்டி கொஞ்சம் சேர்க்கலாம். அப்படிச் சேர்த்தால் இந்துமத கடவுள் நம்பிக்கை எனும் அடிப்படையே ஆட்டம் காணும் வாய்ப்பிருக்க கூடும் என்பதால் அந்த முயற்சி எதையும் யாரும் செய்யவில்லையோ என்னவோ !

நாகபட்டினத்து புத்த விகாரத்தை இடித்து சூரையாடி அதை வைத்தே ஸ்ரீ ரங்கம் கோயில் கட்டப் பட்டது என்று வினவில் வாசித்தேன் , நாகபட்டினத்தில் மட்டுமல்ல இந்தியாவில் பல இடங்களில் செல்வாக்கோடு இருந்த பல கோயில்களும் பௌத்த ஸ்தூபங்கள்,மடாலயங்களும் இடித்து நிர்மூலப் படுத்தப் பட்டு அங்கிருந்து கிடைத்த அறிய பொருட்களைக் கொண்டே தாங்கள் சார்ந்திருக்கும் அல்லது ஆதரவளிக்கும் மதங்களின் கடவுளர்களுக்கு இந்திய மன்னர்கள் கோயில்கள் கட்டினர். சோழர்கள்,பல்லவர்கள்,விஜய நகர மன்னர்கள்,முகலாயர்கள், என்று விளக்கில்லை இந்தப் புராதன வழக்கத்திற்கு.

வரலாற்றில் ஜெயித்தவர் ...தோற்றவர் என்றே பேதம் பிரித்துப் பார்க்க முடிகிறது,ஆனால் இயல்பான குணநலன்கள் எந்த மன்னர்களுக்கும் சாம்ராஜ்யங்களுக்கும் மாற்றில்லை, ஜெயித்தவர்கள் சூறையாடினர் தோற்றவர்களின் செல்வங்களை,(இந்த செல்வங்கள் என்பதன் கீழ் பெண்கள்,அஃறிணை உயிர்கள்,பொருட்கள்,அரண்மனைகள்,கோயில்கள் எல்லாமே அடங்குகின்றன)

அவர்கள் அன்று இடித்தார்கள் நாங்கள் இன்று இடிக்கிறோம் இந்த நிலை எப்போதும் மாறுவதில்லை.

இதில் எங்கே நிற்கிறது மனித உரிமைகளும் மனித நீதிகளும்?!!!