Wednesday, January 7, 2009

ஹே பாட்டி நீ இன்னும் பியூட்டி!

பாட்டிக்கு வயது எழுபத்தி ஐந்து ஆகி விட்டதாம் ! இப்படி எல்லோரையும் போல என் பாட்டிக்கும் வருஷா..வருஷம் வயது ஏறிக் கொண்டே போவது எனக்கு கொஞ்சமும் பிடிக்கவே இல்லை.பாட்டியின் வயது அருபதிலேயே அப்படியே நிலைத்து நின்று விட்டிருக்கக் கூடாதா என்ற ஏக்கம் இன்னும் எனக்குண்டு,"

என்றும் பதினாறைப் போல

என் செல்லப்பாட்டி ஏன் ...

என்றும் அறுபதாய் நீடிக்கக் கூடாது?"

கடந்த ஒரு வாரம் முழுக்க நானும் பாப்புவும் பாட்டியுடன் இருந்த போது முன்னெப்போதையும் விட மனம் வெகு கவனமாக அந்த நிமிடங்களை எல்லாம் பத்திரமாகப் பதிவு செய்து கொண்டது.ஒவ்வொரு நிகழ்வையும் பாட்டியின் நினைவுகள் அர்த்தமுள்ளதாக மாற்றிக் கொண்டே செல்லும் அற்புதம் சமீப காலாமாகத்தான் தொடங்கியது.

எழுபது கடந்தும் பம்பரமாக வீட்டு வேலைகளில் சுற்றிச் சுழலும் பாட்டியின் வேகமும் சிரத்தையும் கண்டு என் சோம்பேறித்தனத்தின் மீது எனக்கே மிகக் கோபம் வந்தது.இப்போது கொஞ்சம் சுறுசுறுப்பாகி விட்டேன்.(அது தனிக் கதை)

பாட்டி மிகச் சிறந்த உழைப்பாளி ;தாத்தாவின் தோட்டமெனும் அட்சய பாத்திரம் பாட்டியின் தங்க விரல்கள் பட்டுப் பட்டு நவரத்தினங்களைப் போல பல வண்ணங்களில் ஜிலு...ஜிலுப்பாய் ஜில்லென்று வருடம் முழுக்க காய்த்துக் குலுங்கி ஓய்ந்ததெல்லாம் ஒரு காலம் ! இன்று அது ஒரு கனாக் காலம் !இப்போது நினைத்துப் பார்த்தாலும்

"நெஞ்சுக்குள் பெய்திடும் மாமழை

நீருக்கும் மூழ்கிடும் தாமரை

சட்டென்று மாறுது வானிலை " தான்

(சிச்சுவேசன் சாங் இல்லை போலத்தான் தோன்றும் ! எனக்கு இது சிச்சுவேசன் சாங் தான் அந்த நாளைப் பற்றி நினைத்தால் அந்த நாளுக்கே அழைத்துச் சென்று விடும் மாயம் பாட்டியின் ஞாபகங்களுக்கு மட்டுமே உண்டு

அதான் "சட்டென்று மாறுது வானிலை " !!!இந்த இடத்துக்கும் பொருந்தும்) இதனாலெல்லாம் தான் ;

கடவுளே என் பாட்டி இன்னும் நிறைய நாட்கள் ஜீவித்து இருக்கட்டும்...குடும்பத்தின் எல்லோருடைய ஆயுளிலும் குறைந்தது இரண்டு வருடங்களை பங்கிட்டுத் தந்து விட்டால் என்ன? பாட்டி எங்களுக்கு என்றென்றைக்குமே வேண்டும்...வேண்டும்...வேண்டும் என்றெல்லாம் அர்த்தமில்லாமல் யோசிக்க வைக்கிறது பாட்டியின் நேசம்!!!

இதனாலெல்லாம் நிஜம் என்ற ஒன்று இல்லையென்று ஆகி விடுமா என்ன ?பாட்டிக்கு வயதாகி விட்டது உண்மை தான் .

முகம்...கை...கால்கள்...தூங்கும் போது நான் ஒரு புறம் ,என் தங்கை ஒரு புறம் என கைகளைப் போட்டு இறுக்கிக் கட்டிக் கொள்ளும் பாட்டியின் இடுப்பு ,எல்லா இடங்களிலும் வளமை போய் பழுத்து நெடு நாட்கள் ஆன நிறை இலையின் ஒரு வித சோர்வு அப்பட்டமாய்த் தெரிந்த போது ஏனோ சொல்லிக் கொள்ளாமல் கண்ணோரம் கசிந்து நின்றது .

மொட்டை மாடியில் பாட்டியும் நானும் நின்று பேசிக் கொண்டு இருந்தோம்,சிறிது நேரத்தில் அலைபேசி அழைக்க நான் பேசி முடித்து விட்டு வரும் போது பாட்டி வீட்டின் மறுபுறம் பெரிதாய் வியாபித்து நின்ற மலைகளைப் பார்த்துக் கொண்டு ஏதோ யோசித்துக் கொண்டு இருப்பது தெரிந்தது.

மனதில் இனம் புரியாமல் ஏதோ ஊர் உணர்வு அழுத்த ;

அலைபேசியின் வீடியோவை ஆன் செய்து விட்டு பக்கத்தில் போய் "பாட்டி" என்று அழைத்து

"ஏமிரா ...என்று திரும்பிய பாட்டியின் குரலையும் அந்த நிமிடத்தையும் அப்படியே பதிவு செய்து கொண்டேன்.என்னால் அது மட்டும் தானே முடியும்!காற்றில் எங்கிருந்தோ கரைந்து வந்து காதோடு மனதையும் நிறைத்தது இந்த வரிகள்

"இதயத்தின் மொழிகள் புரிந்து விடின்

மனிதற்கு மொழியே தேவை இல்லை

காற்றின் மொழி ஒலியா இசையா ?"அந்த நிமிடத்தில் மட்டுமல்ல இனி எங்கே இந்த வரிகளைக் கேட்டாலும் எனக்கு என் பாட்டி " ஏமிரா" என்று சொன்னது மட்டும் எப்போதும் மறக்காது,என்னைப் பொறுத்தவரை இது தான் இதயத்தின் மொழி !பத்திரமாய் பாதுகாப்பேன் மொழியை !

முக்கியக் குறிப்பு:- (தெலுங்கில் ஏமிரா என்றால் என்னடா என்று அர்த்தம் தாமிரா என்று வாசித்து விடாதீர்கள் !!!)

வால்பாறை...வட்டப்பாறை...மயிலாடும் பாறை...மஞ்சள் பாறை...பாறை!!!

மலை ஏற

ஆசை ...!

வால் பாறை

வட்டப்பாறை

வழுக்குப்பாறை

நொடியில் தாண்டி

இலைப்பச்சை

தளிர்பச்சை

கரும் பச்சை

மரச்செடிகள்

கண் காணாப் புறந்தள்ளி

ஓடோடி சிகரம் தொட்டேன் ;

என் வீட்டு மொட்டை மாடி காண...

மலை ஏறிய பின் தான்

பின் தான் ...

பின் தான் ...

தெரிந்தது !

மாடியிலிருந்த

பிரம்மாண்டமிங்கே

மலையிலிருந்த

எலிப் புழுக்கை முன்

செத்துச் சுண்ணாம்பாக

ஏமாற்றத்தில் துவண்டு

மேலிருந்து கீழ் நோக்க

உச்சி மீது வானிடிந்து வீழ்ந்ததடா...

வந்த வழி தான் மறந்து போனதடா ...

இதோ

காத்திருக்கிறேன்

ஆடு மேய்க்கும்

சிறுவர்களுக்காய்...?!