நேற்று காலை கலைஞர் டி.வி யில் அவார்டு வழங்கும் நிகழ்ச்சி ஒன்று நடந்து கொண்டிருந்தது...அதில் பிலிம் நியூஸ் ஆனந்தன் அவர்களுக்கு கலை வித்தகர் விருதை கே.பாலசந்தர் வழங்கினார்.இதல்ல விஷயம் ;அதோடு நில்லாமல் திரு .ஆனந்தனின் காலைத் தொட்டும் வணங்கினார் கே.பி .ஆனந்தன் தமிழ் சினிமாவைப் பொறுத்தவரை ஒரு பொக்கிஷப் பெட்டகமே ...அதில் ஐயமேதுமில்லை.தமிழ் சினிமாவில் பி.ஆர்.ஓக்களுக்கான ஒரு நல்லதொடக்கம் உருவாக அவரே காரணமாக இருந்தார் என கே.பி அவரைப் பாராட்டினார்.
இதில் எனக்கு கே.பி ; ஆனந்தன் அவர்களின் காலைத் தொட்டு வணங்கிய நிகழ்ச்சி ஏனோ பிடித்துப் போனது...வயதிற்காக மட்டும் இன்றி அவரது திறமைக்காகவும் எல்லாராலும் கொண்டாடப் படும் தமிழ் சினிமாவின் மூத்த இயக்குனர் ஒருவர் இவ்வாறு செய்தது பாராட்டப் பட வேண்டிய ஒரு விசயமே.(காலில் விழும் கலாச்சாரத்தை எல்லாம் ஆதரிப்பதாக யாரும் நினைத்து விடாதீர்கள் ...போலிச் சாமியார்கள்...சுயநல அரசியல்வாதிகள்...இவர்களின் கால்களில் பலர் தினம் தினம் விழுது எழுவதைப் பார்க்கையில்
கே.பி ஒரு மூத்த அனுபவசாலியான பெரியவரின் கால்களில் அவரது வித்தகத் தன்மைக்காக வணங்கி எழுத்து ஏனோ அந்த நிமிடத்தில் மனதில் ஒரு இணக்கமான உணர்வைத் தோற்றுவித்தது. அவ்வளவே!
நான் இப்போது சொல்ல வந்த விசயமே வேறு .இந்த நிகழ்வைப் பற்றியும் ஒரு வரி எழுத தோன்றியதால் அதை முதலில் சொல்லி விட்டேன் .
பாலசந்தர் படங்கள் பிடிக்காதவர்கள் யாரேனும் உண்டோ??? சும்மா விமர்சிக்கிறேன் பேர்வழியென்று அவரது படங்களை குறை சொல்லலாம் தான்.ஆனாலும் அவரது பெரும்பான்மையான படங்கள் நல்லதொரு பாதிப்பையே ஏற்படுத்தியுள்ளன இது வரையிலும்...;எத்தனையோ படங்களை சொல்லலாம் .அதில் எனக்குப் படித்தமானவற்றைப் பற்றி மட்டும் நான் இப்போதுபட்டியலிடுகிறேன்.
1.அவள் ஒரு தொடர் கதை
2.எதிர் நீச்சல்
3.இரு கோடுகள்
4.பாமா விஜயம்
5.அரங்கேற்றம்
6.மன்மத லீலை
7.இளமை ஊஞ்சலாடுகிறது
8.நினைத்தாலே இனிக்கும்
9.உன்னால் முடியும் தம்பி
10. .சிந்து பைரவி
11. புதுப் புது அர்த்தங்கள்
12.வானமே எல்லை
"கல்கிக்குப் "பிறகு வந்த பாலசந்தர் படங்கள் எதுவுமே என்னை ஈர்த்ததே இல்லை."சமீபத்தில் "பொய் " என்றொரு படம் வந்தது ...பாலசந்தர் எங்கே என்று குழப்பமாகி விட்டது...எதில் தவறு ?கதையிலா? அதைப் படமாக்கிய விதத்திலா? அல்லது பாத்திரப் படைப்பிலா ? அல்லது பாத்திரங்கள் தேர்விலா? ஏதோ ஒரு குறை ! முந்தைய நேர்த்தி இல்லாது போனதால் கவனம் கலைவதோடு பார்வையாளர்கள் உட்கார்ந்து பார்க்கும் பொறுமையும் இல்லாது போகிறது. சரி பதிவு பாலசந்தரின் பிந்தைய படங்களைப் பற்றியதல்ல ...நான் வேறொரு விஷயம் சொல்ல நினைத்தேன் .
எல்லா பாலசந்தர் படங்களிலும் பெண்களுக்கு கண்டிப்பாக முக்கியத்துவம் தருவார்.ஏன் பெண்களை ஹீரோயினை மையப் படுத்தியே அவரது படங்கள் இருக்கும் ஹீரோ சும்மா தான் என்று ஒரு குற்றச் சாட்டே கூட அவரது படங்களின் மீது உண்டு .இது ஒரு ஆதாரமற்ற குற்றசாட்டு என்பது படத்தோடு பொருந்திப் போய் விட்டால் புரியும்.பெண்களுக்கு முக்கியத்துவம் என்று சொல்வதைக்காட்டிலும் ...அந்தந்த படங்களில் காட்டப் படும் அல்லது முன்வைக்கப் படும் சூழ்நிலைகளை கவனித்தாலே "கதை" தான் அங்கு முன்னிலைப் படுகிறது என்பதை அறியலாம்.
பொதுவில் "அவள் ஒரு தொடர் கதை" படத்தை எடுத்துக் கொண்டால் ...கவிதாவின் (சுஜாதா) கோபங்கள் நியாயமானவையே !அவளுக்கும் விருப்பு..வெறுப்புகள் இருக்கலாம் என்பதையே சிந்திக்க மறந்த அல்லது சிந்திக்க விரும்பாத அல்லது...சிந்திக்க இயலாத ஒரு குடும்பத்தின் சம்பாதிக்கும் மூத்த மகள் என்ற வகையில் அவளது பாத்திரப் படைப்பு மிக அருமையான ஒன்று ...அவள் அப்படித்தானே இருக்க முடியும்!!!
இதில் விகடகவியாக வரும் கமல் ...கவிதாவின் காதலனாக வந்து பின்பு அவளது தங்கையை மணக்கும் விஜயகுமார் ...கவிதாவின் தோழியாக வரும் "படாபட்" ஜெயலக்ஷுமி அவளது தாய் ...;தாய் ..மகள் இருவரையும் ஏமாற்றும் சுகுமாரன்(மலையாள நடிகர்)உருப்படாத அண்ணன் ஜெய்கணேஷ் .
உருப்படாத உதவாக்கரை கணவனாயினும் அவனது ஆசைகளையும் ஒதுக்கித் தள்ள முடியாத நிலையில் இருக்கும் அப்பாவி அண்ணி கதாபாத்திரம்.அப்புறம் விளையாட்டுத் தனம் நிறைந்த தங்கை கதா பாத்திரம் .சில வினாடிகளே வந்தாலும் "கவிதாவின் "சுளீர் பதில்களால் " மனதில் பதியும் விஜயகுமாரின் அம்மா கதாபாத்திரம் ...இப்படி படம் முழுக்கவே எல்லோருக்கும் முக்கியத்துவம் இருந்து கொண்டே தான் செல்கிறது .
இதில் கவிதா முன்னிலைப் படுத்தப் படவில்லை...இன்னின்ன காரணங்களால் "அவள் ஒரு தொடர் கதை ஆனாள்" என்பதை விளக்கவே இப்படி ஒரு படம் .
இதே உதாரணங்களை நாம் "அரங்கேற்றம் " படத்திலும் காணலாம் .அதிலும் பிரமிளா என்று இல்லை எல்லா பாத்திரங்களுமே முக்கியத்துவத்துடன் தான் ஒவ்வொரு காட்சியிலும் தென்படுகிறார்கள்.பிரமிளாவின் நண்பனாக வந்து பிறகு அவள் மீது கொண்ட பரிவால் காதல் வயப் படும் சிவக்குமார் ...அவரது தந்தை செந்தாமரை (சிவகுமாரை விட செந்தாமரை நிச்சயம் இளையவராகவே இருப்பாரோ!!! டவுட் தான் வேறென்ன?! )
பிரமிளாவின் தந்தையாக வரும் எஸ்.வி.சுப்பையா ...தாய் எம்.என்.ராஜம்...அத்தையாக வரும் ஒரு வாயாடிப் பாட்டி ...அவளது லூசுப் பெண் ...தங்கைகளாக வரும் ஜெய சுதாவும்...ஜெய சித்ராவும் ...இந்தப் படத்தில் வரும் இன்னொரு மறக்க முடியாத நபர்(நிறையப் பேர் மறந்தும் இருக்கலாம்) சசிக்குமார் என்றொரு நடிகர் (நீங்கள் கெட்ட பாடல் விஜய சாரதியின் தந்தை ) இவர் பின்னாளில் தீவிபத்தில் மனைவியைக் காப்பாற்றப் போய் தானும் ரணப் பட்டு இறந்து விட்டார். இவரது பாத்திரப் படைப்பும் இயல்பான அறிமுகமே!பிரமிளா தன் தம்பியான கமலின் மருத்துவப் படிப்புக்காக நகரத்தில் சந்திக்கும் பல தரப் பட்ட ஆண்களின் குணங்களும் அவர்களின் இரக்கமற்ற எதிர்பார்ப்புகளும்
தான் கதையை நகர்த்துகின்றன.
இதிலும் "கதையின் நாயகி என்பவள் ஒரு மையப் புள்ளி அல்ல ...அவளை சுற்றி மட்டுமே கதை நகரவில்லை.அவளது கண்ணோட்டத்தில் "இதனால் இப்படி ஆனது " என்ற வாழ்வியல் நிதர்சனம் காட்டப் படுகிறது அவ்வளவே! படம் பார்த்தவர்கள் எவரானாலும் இந்தக் கேள்வியை உங்களுக்குள் கேட்டுப் பாருங்கள் .அவள் ஒரு தொடர் கதை சுஜாதாவையும்...அரங்கேற்றம்" பிரமிளாவையும் அவர்களது அந்தந்த பாத்திரப் படைப்புகளை வைத்து ஒத்திட்டுப் பாருங்கள் .
கவிதாவின் (சுஜாதா) தைரியமும் தெளிவும் பிரமிலாவுக்கு இல்லை ,
ஆனால் அவளும் ஒருவிதத்தில் துணிவான பெண்ணாகவே சித்தரிக்கப் பட்டிருக்கிறாள்.இது இரு வேறுபட்ட பெண்களின் சூழ்நிலை சார்ந்த தனித் தன்மைகளே இவை.
கல்கி படத்தில் வரும் கதாநாயகி மட்டுமா அப்படத்தில் முக்கியமாகக் கருதப் படுகிறாள்? அதில் அவளைத் தவிரவும் செல்லம்மா என்ற பாடகி (கீதா) அவளுக்கு பணிப்பெண்ணாக வரும் கோகிலா(பாத்திமாபாபு),ரேணுகா...நாயகன் பரஞ்சோதி...பிரகாஷ் ராஜின் கதாபாத்திரம் இப்படி எல்லாமே தனித்தன்மையுடன் தான் படைக்கப் பட்டுள்ளது.
இதே போல "சிந்து பைரவியிலும்" சுகாசினி(சிந்து) ,நாயகன்(பி.கே.பி) சிவக்குமார், அவன் மனைவி பைரவி (சுலோச்சனா) தவிரவும் முக்கியத்துவம் வாய்ந்த பல பாத்திரங்கள் வருகின்றன. தவில் வாசிக்கும் குருமூர்த்தி(டெல்லி கணேஷ்),சிந்து தங்கியிருக்கும் பதிப்பக மாடி அறையின் உரிமையாளர் பிரதாப் போத்தன்...அந்த ஜட்ஜ் கதாபாத்திரம் ,அவரது கார் டிரைவராக வரும் கவிதாலயா கிருஷ்ணன் ...சிவசந்திரன் இப்படி படத்தில் வரும் அத்தனை கதாபாத்திரங்களையுமே முக்கியத்துவம் பெற வைப்பதே பாலசந்தரின் தனித் திறமை தான்.
இந்தப் படங்கள் தான் என்றில்லை ;
"எதிர் நீச்சலில் "வரும் எல்லா கதாபாத்திரங்களுமே அப்படத்தில் கதையின் நாயகன் ...நாயகிகளே! நாம் தினம் தோறும் கடந்து செல்லும் அல்லது நம்மைக் கடந்து செல்லும் நபர்களின் சாயலை அவரது பாத்திரப் படைப்புகளில் நாம் காணலாம்."பட்டு மாமி...கிட்டு மாமாவை மறக்க முடியுமா? நாயர் முத்துராமனை மறக்க இயலுமா?எந்நேரமும் அந்தப் படத்தில் பேப்பர் படித்துக் கொண்டிருக்கும் மனோரமாவின் தந்தை கதாபாத்திரத்தை மறக்க முடியுமா? ஜெயந்தி என்ற அருமையான ஒரு நடிகையை மிகச் சரியாக கே.பி மட்டுமே பயன்படுத்தி இருப்பார் என நினைக்கிறேன் ,மாடிப் படி மாது மட்டுமா அதில் நாயகன் ? மேலே நான் குறிப்பிட்ட அத்தனை பேர்களும் இல்லாவிட்டால் கதை ஏது?
இதே போல"பாமா விஜயத்தையும்" சொல்லலாம் ; இதற்கும் நீளமான விளக்கம் அளித்தால் சிலருக்கு போர் அடிக்கலாம் .அதனால் வேண்டாம். ஒரு நடிகை தம் வ்வீட்டுக்கு வருகிறாள் என்பதற்காக ஒரு நடுத்தரக் குடும்பத்தின் மூன்று மருமகள்களும் அடிக்கும் கூத்துக்களும் அவர்களை நல்வழிப் படுத்தி நிதர்சனத்தை அறிய வைக்க அவர்களது மாமனாராக ...பள்ளி ஆசிரியராகப் பணிபுரிந்து ஓய்வு பெற்ற பழம் பெரும் நடிகர் திரு.டி.எஸ் .பாலையா செய்யும் முயற்சிகளுமே "பாமா விஜயம்" படத்தின் கதை .நல்ல நகைச்சுவையை விரும்புவோர் தாராளமாகப் பார்க்கலாம் எப்போதுமே!
இதில் தான் ...
"வரவு எட்டணா செலவு பத்தணா
கடைசியில் துந்தனா " எனும் அருமையான சூபர் ஹிட் பாடல் இடம் பெற்றுள்ளது .
இன்னும் புதுப் புது அர்த்தங்கள் ...
இளமை ஊஞ்சலாடுகிறது...
நினைத்தாலே இனிக்கும் ...
உன்னால் முடியும் தம்பி ...;
இப்படி எல்லாப் படங்களுமே சில நாட்கள் இடைவெளியில் மறுபடி பார்க்கத் தகுந்த படங்களே.
இந்த வரிசையில் "உன்னால் முடியும் தம்பி ...இருகோடுகள்...புதுப் புது அர்த்தங்கள் "இந்த மூன்று படங்களையும் ஆறுமாத இடைவெளியில் மறுபடி மறுபடி பார்த்தாலும் அலுப்பில்லாத படங்களே என்பார் என் அம்மா...அது நிஜம் தான் என்பது முதல் முறை படம் பார்த்தபோது புரிந்தது .
சரி இனி தலைப்பிற்கும் இந்தப் பதிவிற்கும் என்ன தான் சம்பந்தம் இன்று குழப்பத்தை ஏற்படுத்தாமல் சொல்ல வந்த விஷயத்தை சொல்லி முடிக்கிறேன் .அம்மாவின் பணி மாறுதல் காரணமாக ஒரே ஒரு வருடம் சொல்லப் போனால் முக்கால் வருடம் மட்டும் "மானாமதுரையில் " வசிக்க நேர்ந்தது .அங்கே நானும் ...தங்கையும் அங்கே அரசினர் மகளிர் மேல்நிலைப் பள்ளியில் முறையே ஏழாம் வகுப்பும்...ஆறாம் வகுப்பும் சேர்க்கப் பட்டோம்.அங்கே எங்களுக்கு கணிதப் பாடம் எடுத்தவர் தான் "ஆண்டாள் டீச்சர் ... !
அங்கே எத்தனையோ ஆசிரியர்கள் பணி புரிந்திருக்கலாம் ஆனால் ஆண்டாள் டீச்சரை மட்டும் ஏனோ மறக்க இயலுவதில்லை .டீச்சர் மிக அருமையாகப் பாடம் எடுப்பார்(ஆனால் என்ன எனக்குத் தான் கணக்கு எப்போதுமே பெரும் பிணக்கு ) சுத்தமாக கணக்கு வராது என்பதை விட கணக்கு பாடமே அப்போது பிடிக்காது எனக்கு .
வீட்டுக் கணக்கு போடாமல் வந்து விட்டு டீச்சரிடம் அடி வாங்குவதிலிருந்த தப்ப எத்தனையோ முறை என்னென்ன காரணம் சொல்வது சரியாக இருக்கும் என்று பெரிய ...பெரிய பிளான்கள் எல்லாம் போட்டதுண்டு அப்போது .
அதை விடுங்கள்...டீச்சரைப் பற்றி பார்ப்போம்; ஆண்டாள் டீச்சர் பேருக்குப் பொருத்தமாக "ஆண்டாள் "போலவே ரொம்ப அழகானவர். எலுமிச்சை நிறம்;அளவான உயரம் ...கை தேர்ந்த சிற்பி நேர்த்தியாக செய்து ஓட்ட வைத்ததைப் போல பொருத்தமான மூக்கு ...எத்தனை தூரம் ஒழிந்து மறைந்தாலும் ...கண்டு பிடித்து அவரது நாற்காலி முன்னே மண்டி போட வைக்க தக்க கூர்மையான பார்வை .
இத்தனை அழகான கண்களை வைத்துக் கொண்டு இந்த டீச்சர் ஏன் இப்படி எந்நேரமும் கண்களில் சிரிப்பே காட்ட மறுக்கிறாரோ ? என்றெல்லாம் நாங்கள் பேசிக் கொள்வதுண்டு..இத்தனை இலக்கிய நயமாக அல்ல? "இந்த டீச்சருக்கு என்ன வந்துச்சுல ? எல ஏம்லா இவ்ளோ அழகா கண்ணு முழி மீன் மாதி வச்சிக்கிட்டு ஏம்லா இப்பிடி அடிசுக்கினே இருக்காங்க எப்போ பார்த்தாலும் ?அவங்க கைய தேளு புடுங்க ...! (இவை தவிர்க்க முடியாத திட்டுக்கள் என்ன செய்ய பள்ளி வாழ்க்கையில் இதெல்லாம் சகஜம் தானே!
எங்கள் வகுப்பில் மட்டுமே அப்போது 130 பேர் என்றால் பார்த்துக் கொள்ளுங்களேன்!!!) மொத்தம் மூணு செக்சன்கள் வேறு ...நான் "எ" செக்சன் .)ஒழிந்திருக்கும் மாணவியைத் தேடிக் கண்டு பிடித்து குச்சியால் சாத்தி தனது கணக்குப் பாடத்தை மூளையில் கஷ்டப் பட்டேனும் ஏற்றி விடக் கூடிய பிடிவாதமான பாசக்கார டீச்சர் அவர்.
அப்படிப் பட்ட டீச்சர் "கல்யாணமே செய்து கொள்ளவில்லை என்பது எனக்கு நான் அந்தப் பள்ளியை விட்டு விலகும் போது தான் தெரிய வந்தது, அதற்கும் ஒரு குட்டி கதை சொன்னார்கள் உடன் பயின்ற மாணவிகள்.
விசாலம் டீச்சர்..விசாலம் டீச்சர் என்று ஒரு டீச்சர் இருந்தார் அங்கே அப்போது...அவர் "சி " செக்சனுக்கு கணிதப் பாடம் எடுப்பார் .அவரும் எங்கள் ஆண்டாள் " டீச்சரும் சின்ன வயதில் ஒன்றாகவே படித்தவர்களாம்...நெருங்கிய சிநேகிதிகளும் கூடவாம் ...ஒன்றாகவே கல்லூரி வரை படிக்கையில் இருவரும் ஒரு சபதம் செய்தார்களாம்.அதாகப் பட்டது " நாம் இருவரும் வாழ்க்கையில் கல்யாணம் என்ற ஒன்றை இறுதி வரை நினைத்தே பார்க்க கூடாது ...கல்யாணமில்லாமல் வாழ்ந்து முடிக்கலாம் என்று .
இதற்க்கு அந்தக் காலகட்டத்தில் அவர்களுக்கு குடும்ப ரீதியாக எதோ சில காரணங்கள் இருந்திருக்கலாம்...அதைப் பற்றி ஏதும் எனக்கு தெரியவரவில்லை .இதில் காலம் செல்ல செல்ல விசாலம் டீச்சர் மனம் மாறி வீட்டினர் பார்த்த வரனை மணந்து வாழ்க்கையில் செட்டில் ஆகி விடவும் "ஆண்டாள் டீச்சர் "அவருடன் பேசுவதில்லையாம் .அவர்களின் நட்பு இதனால் ரத்தாகி இருக்கக் கூடும் என்று என்னால் அப்போது அன்றைய தினம் சிந்திக்க முடியாவிட்டாலும் மற்றவர்கள் சொன்னதை உண்மை என எண்ணிக் கொண்டேன்.நான் பார்த்த வரையில் அப்படித் தான் என நினைக்கிறேன் .
நான் அங்கு படித்தது வருடம் சரியாக நினைவில்லை ஆனால் அப்போதே "ஆண்டாள் டீச்சர்" ஓய்வு பெரும் வயதில் இருந்தார்...நான் அப்பள்ளியை விட்டு வந்த அந்த வருடமே அவர்களின் ஆசிரியப் பணியின் கடைசி வருடமாக இருந்தது .அந்த 58 வயதில் தான் டீச்சர் அத்தனை அழகாக இருந்தார் என்பதை நீங்கள் நம்பித்தான் ஆகா வேண்டும்...சொல்லப் போனால் இப்போதைய நடிகை சுஜாதாவைப் போல டீச்சருக்கு "முதுமையே தெரியாத ஒரு வசீகர முகமும் மென்மையான தேகமும் கூட !
பாலசந்தர் படங்களுக்கும் "ஆண்டாள் டீச்சருக்கும் என்ன சம்பந்தம் இருக்க முடியும் என்று இதை வாசிப்பவர்களுக்கு குழப்பம் வரத்தான் செய்யும் .அது என்னவோ மனித மனம் மிக விசித்திரமானது .அது தனக்குப் பிடித்தமானவர்களை ஏதாவது ஒரு பொருளுடனோ அல்லது சம்பவத்துடனோ தொடர்பு படுத்தி ஞாபகம் வைத்துக் கொள்ளும் .அப்படித் தான் நான் எனது"ஆண்டாள் டீச்சரை" " அவள் ஒரு தொடர் கதை " சுஜாதாவுடன் கற்பனயில் பொருத்திப் பார்த்து ஞாபகத்தில் ஏற்றி வைத்தேன்
அது நேற்று அந்த டி.வி காட்சியில் தட்டி எழுப்பப் பட்டு இன்று உங்கள் முன் வாசிப்பிற்கு வந்திருக்கிறது .இத்தனைக்கும் சுஜாதா அவள் ஒரு தொடர் கதையில் "வயதான பெண்ணே அல்ல?!" அவள் ஒரு முதிர்கன்னி என்பதைப் போல தான் காட்டப் பட்டிருப்பார். அதென்னவோ 58 வயதிலும் டீச்சரின் கட்டுப்பாடு கலந்த பாசம் எனக்கு "சுஜாதாவின் சாயலையே காட்டுகிறது .
வருடம் சரியாக நினைவில்லை சற்றேறக் குறைய 1993 அல்லது ௧௯௯௨ ஆக இருந்திருக்கும் சான்றிதழ்களைப் பார்த்தல் ஒரு வேலை ஆண்டு சரியாகத் தெரியலாம்.அப்போது அந்தப் பள்ளியில் ஆண்டாள் டீச்சரிடம் படித்ட மாணவிகள் யாரேனும் இந்தப் பதிவை வாசித்தால் மீண்டும் ஒரு முறை நம் ஆண்டாள் டீச்சரை நினைவு கூர்ந்து மகிழலாம் .அப்படி யாரேனும் இருந்தால் பின்னூட்டத்தில் தெரிவியுங்கள்.
இடம்- மானாமதுரை பள்ளி-அரசினர் பெண்கள் மேல்நிலைப் பள்ளி (அப்போது இந்தப் பள்ளி அங்கே படு பிரபலம் தேர்ச்சி விகிதத்தில் எப்போதும் நல்ல டாப் தான் )
அப்போது அங்கே தலைமை ஆசிரியராக இருந்தவர்- திருநாவுக்கரசு (தேனிக்காரர்)
டீச்சரின் பெயர்- ஆண்டாள் டீச்சர்பாடம்- பெருமை வாய்ந்த கணிதம் (ஆண்டாள் டீச்சர் எடுத்த பாடம் என்பதால்)
இத்தோடு இந்தப் பதிவை முடித்துக் கொள்கிறேன் வாசிப்பவர் நலம் கருதி மட்டுமே!!!
குறிப்பு :
பாலசந்தர் படங்களின் ஹீரோயின்களில் எல்லோருமே தன்னம்பிக்கை வாய்ந்தவர்கள் என்பதோடு தங்களுக்கு என தனிப் பட்ட விருப்பு வெறுப்பு உள்ளவர்களாகவே பெரும்பாலும் காட்டப் படுவார்கள்.யார் என்ன விமர்சித்தாலும் அவரது பெண் கதா பாத்திரங்கள் தங்களது குணநலன்களை மாற்றிக் கொள்ளவே மாட்டார்கள் .ஆண்டாள் டீச்சர் கூட அப்படித்தான் எனக்கு தோன்றினாரோ என்னவோ ?! ஏதோ அந்தப் பாதிப்பில் தான் இந்த பதிவு வந்தது .