Monday, February 1, 2010

கக்கூசும் ஒரு உரிமைப் போராட்டமும் (!!!)
தாத்தா குளித்து ஒரு மாதமிருக்கும் ...

இப்போதெல்லாம் குளிக்க ரொம்பவே அசௌகரியப்பட்டார் ,பல்லும் கூட விளக்குவதில்லை,வேப்பங்குச்சி தான் அவருக்கு பிரஸ்,கிட்டக் கொண்டு போனாலே
'த்தூவென்று' துப்ப ஆரம்பித்ததும் ,எதற்கிந்த அனத்தம் பிடித்த வேலையென்று அம்மாவோ சித்தியோ பல்லை விளக்கிவிட அவரிடம் போவதில்லையென சபதம் எடுத்துவிட்டார்கள் இன்று காலை பத்துமணி முதல் .


வீட்டுக்குள் கக்கூஸ் இருந்தும் தாத்தா அதில் ஒரு தடவையும் உட்காரப் போனதில்லை.எப்போதும் கண்ணன்கோயில் கம்மாக்கரை தான்.காலங்காலையிலேயே போய் விட்டு தண்ணீர் பதனமாய் இருந்தால் அங்கேயே குளிப்பையும் கூட முடித்து வந்து விடுவார் , தாத்தா வீட்டுத் திண்ணை நல்ல உயரம்,அகலம் அகலமான ஐந்தாறு படிகள் ஏறித்தான் வீட்டுக்குள் நுழைய முடியும், பித்தளைப்பூணிட்ட கம்பை ஊணிக்கொள்ள ஆரம்பித்த நாள் தொட்டு கம்மாக்கரை செல்வதிலும் சுணக்கம் தான்.

இந்த ஒரு மாதமாய் பாட்டிக்குப் பிடித்த பல்வேறு அனர்த்தங்களில் ஒன்று ;தாத்தா இந்த தெருவில் யார் வீட்டு முன் மலம் கழித்தார் ,எங்கே ஒன்னுக்கிருந்தார் என்று
யாரேனும் கொண்டு வரும் புகார்களை ;


இங்கயும் உண்டுமா கொடுமை ரேஞ்சில் கன்னத்தில் கை பதித்துக் கேட்பது;

அன்றைக்கு அப்படித்தான் செல்லத்தாயம்மாள் வீட்டுத் திண்ணையடியில் விட்டை விட்டையாய் பெரிய சைஸ் ஆட்டுப் புழுக்கைகள் போல தாத்தா இயற்கை கடன் கழித்து விட...அந்த அம்மாள் விக்கி விரைத்துப் போய் திக் பிரமை அடைந்து ;


"என்ன மாமா...இப்படிச் செய்யுறாரு !? வீட்டுக்குள்ள தான் கக்கூசு இருக்குல்ல ,அங்கன கழிக்கலாம்ல! நெடுங்கண்டம் ...நெடுங்கண்டமா மூணு ஆம்பளைப் புள்ளைங்களும் மாசா மாசம் காசு அனுப்பி வீட்டுக்குள்ள கக்கூசென்ன...பளிங்கு கல்லு பதிச்ச ஜல்ஜாரி (கொச்சைத் தெலுங்கில் பாத்ரூமைக் குறிக்கும் சொல் )என்ன?இங்கன வந்து இப்பிடிப் பண்ணி வச்சாருன்னா ... இப்ப நான் என்ன செய்யுவேன்?! "

என்று புலம்ப ஓடைப்பட்டி அத்தை அந்த நிமிஷமே கர்மமே கண்ணாயினளாய் பாட்டியிடம் வந்து போட்டுக் கொடுக்க ,

அந்தம்மாள் பாட்டியிடமே நேரடியாகப் புலம்பியிருந்தாலும் பாட்டி சரி..சரி போ என்று சொல்லியிருக்கக் கூடும் ,இப்படி இன்னொருத்தர் வந்து சொல்லும் படியாயிற்றே என்ற விசனத்தில் பாட்டியின் தன்மான உணர்வு திடுதிப்பென்று சிலிர்த்து எழுந்து விட்டது ,

ஊருக்குத் தெரிந்தும் தெரியாத இன்னொரு ரகசியம் வேறு இதில் இருந்ததில் ...பாட்டி தன் பின் கொசுவமிட்ட கோடம்பாக்கம் சேலையை நாலைந்து முறை கொசுவி கொசுவி நீவி விட்டு ஏற்கனவே சுமாராக கொப்பு வைத்து சொருகியிருந்த தலை மயிரை வெடுக்கென பிரித்து உதறி மறுபடி அள்ளிச் சொருகிக் கொண்டு மதில் மேல் நின்று பார்ப்பதைப் போல தன் வீட்டு உயரம் அகலமான படிகளில் மேல்படியில் இடுப்பில் இரண்டு கைகளையும் ஊன்றிக் கொண்டு சண்டி ராணி மாதிரி போஸ் கொடுத்து நின்றவாறு ,

"ஏய் ..செல்லத்தாயி...ஏ.......ஏய்ய்...செல்லத்தாயி " என்று கூப்பிட ;

ஏற்கனவே சில வருடங்களாய் முதுகுத் தண்டு வளைந்து கூனியே நடந்து பழகி விட்ட செல்லத்தாயம்மாள் தன் விதியை நொந்தவளாய் தன் வீட்டு குட்டைப் படிகளின் மேல் சப்போர்ட்டுக்கு நிலையைப் பிடித்துக் கொண்டு நிமிர்ந்து பார்க்க முயற்சித்தவாறு

என்ன கிருஷ்ணம்மா ..ஏன் இப்பிடிக் கத்தற? மெல்லத் தான் கூப்புடேன்...என்று சொல்லிக் கொண்டே
வந்து நின்று கொண்டாள்.

"இந்தா பாரு செல்லமாக்கா...இப்ப நீ என்ன சொன்னயாம்? ஓடப்பட்டி வந்து சொல்லிட்டுப் போறா,ஒரு பெரிய மனுஷன் இம்புட்டு இருந்துட்டாருன்னா..அள்ளிப் போட்டு போவியா?தெருவுல போறவுங்க..வாரவுங்க கிட்டல்லாம் புகார் சொல்லிக் கிட்டிருக்கியாம்?! என்னா சங்கதி?! "

அதட்டலாய் பற்களை கடித்துக் கொண்டு பாட்டி கேட்க ;

முதுகு கூனினாலும் ரோஷம் கூனாத செல்லத்தாயி பாட்டி ;

"அதென்ன அப்பிடிச் சொல்லற கிருஷ்ணம்மா?இப்ப நான் என்னா சொல்லிட்டேன்? கக்கூஸ்ல இருக்கக் கூடாதான்னு தான கேட்டேன்.இதுல என்ன இருக்கு ! வீட்டுக்குள்ள இருக்கு கக்கூசு இத நாஞ்சொன்னா குத்தமாக்கும்?!


அதற்குள் 'சபாஷ் சரியான போட்டி' என்று தெருஜனமெல்லாம் வாசலுக்கு வந்தாயிற்று.

குத்தமா இல்லையோ...நீ அப்பிடிச் சொல்லிருக்க கூடாது செல்லம்மாக்கா! நான் தாலி கட்டிட்டு வந்தவங்கறதுக்காக எனக்கு மட்டுந்தான் பாத்தியதையா என்னா? ஏன் உனக்கில்லையா அவருக்குச் செய்யுற முறம ?! (முறைமை) பாட்டி ஏகதேசமாய் தெருவென்றும் பாராமல் தேங்காய் உடைத்த கணக்கில் அந்தரங்கத்தை போட்டு உடைக்க .

தெரிந்த ரகசியமேஎன்றாலும் புள்ளி விவரமாய் தெரிந்து கொள்ளும் ஆவலில் சில பல தலைகள் இரு வீட்டு வாசல்களுக்கிடையில் மூண்டு விட்ட சண்டையை விலக்கி விடும் பாவனையில் ஒட்டி வந்து காதைத் தீட்டிக் கொண்டு நின்றன.

அதில் நீலியாவும் ஒருத்தி;

நீலியா என்றதும் யாரோ இளம்பெண் என்று நினைத்து விட்டீர்களா?

அவளுக்கு இருக்கும் எழுபது வயது ;

பாட்டி கல்யாணமாகி புதுப்பெண்ணாய் இந்த வீட்டுப்படி ஏறிய நாள் தொட்டு நீலியாவும் கூடவே இந்த வீட்டுக்கும் வயலுக்குமாய் தன் வாழ்வை அர்ப்பணித்துக் கொண்டிருக்கிறாள்.நல்ல நாள் பொல்லா நாள் என்றால் சாப்பிட்டு அசந்து வரும் பின் மத்தியானத்தில் தாத்தாவின் தீப்பெட்டி ஆபிஸ் நிழல்கூரையின் கீழ் பெரிய ஆட்டுரலில் சாய்ந்தமர்ந்து எங்களுக்கெல்லாம் முனிக்கதைகளும்,சாமிக்கதைகளும் சொல்வாள்.அவளுக்கு தெரியாமல் எங்கள் வீட்டில் எந்த ரகசியமும் இல்லை .

நீலியாவைக் கண்ட மாத்திரத்தில் பாட்டியும்;

கேட்டியா நீலியா ...அது சொல்றத...இங்கயும் உண்டுமா இப்பிடி ஒரு கொடுமே! என்னான்னு கேளு ? வீட்டுக்குள்ள கக்கூசு இருக்குதாம் ,அப்ப வீட்டுக்குள்ள தான் உட்கார்ந்து எந்திரிக்கனுமாம்...ஒரு மனுஷன் தன்னுஜாறு(தன் உஷார்) இல்லாமக் கெடந்தாலும் அப்பிடிதான் இருக்கனுமாம்.அத இந்தம்மால்ல சொல்லுது ! என்னான்னு கேளு கதைய!

செல்லத்தாயம்மாள் சொன்னதை ஜீரணித்துக்கொள்ள முடியாமல் திணறுபவளைப் போல பாட்டி ஏற்கனவே சிவந்த மூஞ்சி இன்னும் ஜிவு ஜிவுக்க அள்ளி முடிந்த கொப்பை மறுபடி அவிழ்த்து விருட் ..விருட்டென ரெண்டு உதறு உதறி சுருட்டி கூந்தலுள் சொருகிக் கொண்டாள்,(வயதான கிராமத்துப் பொம்பிளைகள் கோபமிருப்பதாக காட்டிக் கொள்ள செய்யும் நடைமுறைகளில் இதுவும் ஒன்றோ என தோன்றத்தொடங்கியது எனக்கு).

நீலியா பாட்டி கட்சி என்ன ஆனாலும் எஜமானியம்மாளாச்சே !

"அந்தம்மாளுக்கு வேலக் கழுதைஎன்ன ? இதுக்கு போயி கூப்பாடு போட்டுக்கிட்டு இருக்காக்கும்? நீங்க நகருங்க முதலாளிம்மா ,நாம் பெருக்கித்தள்ளுறேன்."

நீலியா ரவிக்கை அணிந்து பழக்கமற்ற தனது உடம்பில் முந்தானையை இழுத்து இடுப்பில் செருகி முன்னே வர,

"ஏய் ... இந்தா ...நீ நில்லு "

'அதாரு மூணாவது ஆளு ?!'

தெரு ஜனமெல்லாம் திரும்பிப் பார்க்க ;

ஆவணத்தக்கிழவி(ஆவால் நத்தம் எனும் ஊரிலிருந்து இந்த ஊருக்கு வாக்கப் பட்டு வந்த கிழவி,பெயர் எப்படி மருவி நிற்கிறது பாருங்கள்!) கையில் ஒரு பிளாஸ்டிக் முறத்தை தூக்கிக் கொண்டு ஓடி வந்தாள்.

"எங்க ராசா ...தீப்பெட்டி ஆபிசுல ஓசில தங்கிக்க சொல்லி என்னைய விட்டிருக்காரு.அவருக்கு நான் இல்ல அள்ளிப் போடணும்! நீ தள்ளுடி நீலியாக்கிழவி,நான் அள்ளுவேன் எட்டூரு கக்கூசுன்னாலும் எங்க அய்யாவுக்கு "

சொன்னவள் சடக்கு..புடக்கென்று முறத்தில் அள்ளப் போக நீலியாவுக்கும் ரோசமிருக்காதா என்ன?

"ஏய் ...நீ என்னடி அள்ளுறது ..நான் இந்த வீட்டுல எத்தன நாளா பாடுபடுறேன் ,எனக்கில்லாத உரிமை ஒனக்கா? போ அங்கிட்டு ..எல்லாம் நாங்க பார்த்துகிடுவோம்"

இந்த திடீர் சச்சரவில் திகைத்துப் போனவர்கள் பாட்டியும் ,செல்லத்தாயம்மாளும் கூடத்தான்.

நடந்து போன விசயங்களில் மூர்ச்சையாகி விட்டதைப் போல நின்ற செல்லத் தாயம்மாள் மெல்லத் தன்னுஜார்(தன் உணர்வு) அடைந்தவளைப் போல ,ஏய் போங்க கழுதைகளா ? மானத்த வாங்கிடுவிங்க போல?!நானே அள்ளிப் போட்டுக்கறேன் என்று வீட்டுக்குள் திரும்பி தென்னந்துடைப்பத்தை தேட ஆரம்பித்தாள்.

பாட்டிக்கு மட்டும் ரோசமிருக்காதாக்கும்? நிரூபித்தாகனுமே !

எல்லாருக்குந்தெரிஞ்சி போச்சேன்னு இப்பச்சொல்லுறியாக்கும்? அந்த மனுஷன் எங்க ஊருக்கு என்னைய பொண்ணு பார்க்க வரும் போதே ஒன்ன இல்ல கூட்டிட்டு வந்தாரு,அப்பவே சுனோ(ஸ்னோ ) என்ன? பவுடரு (பௌடர்) என்ன? சும்மா சினிமா நடிக பத்துமினி (பத்மினி) மாரி மினிக்கிகிட்டு இல்ல நீ வந்த?! எனகொன்னும் தெரியாது...நான் ஒன்னும் சொல்ல மாட்டேன்னு இருந்தியாக்கும்?!விடுவனா நானு?!

செல்லத்தாயம்மாள் ரொம்பவே நொந்து போனாள்,கண்ணு கூட கலங்கி நிக்கட்டுமா சிந்தட்டுமா என்று கேட்பதைப் போல் அவளது பழுத்து சுருங்கிய கன்ன மேட்டில் தழும்பி நிற்க தலையைக் குனிந்து கொண்டாள்.

இருந்தாலும் இவ்வளவு பேசும் க்ருஷ்ணம்மாளிடம் எதற்கு விட்டுக் கொடுப்பானேன் ,ஏதாவது சொல்லி வைப்போமே என்ற சாக்கில் ;

"இப்ப எதுக்கு போன கத...வந்த கதயல்லாம் சொல்லிட்டிருக்க ,விடேன்.என்னால ஒனக்கென்னா தொந்திரவு?! நான் எம்பாட்டுக்கு செவனேன்னு இருக்கேன்.பெரிய பெரிய பேச்செல்லாம் சொல்லாத கிட்ணம்மா."(கிருஷ்ணம்மாவை தெலுங்கில் இப்படித்தான் அழைப்பது வழக்கம்)

பாட்டிக்கு வகையாக மாட்டிக் கொண்டாயா எனும் எக்களிப்போ என்னவோ?! செல்லத்தாயம்மாளின் கண்ணில் கலக்கம் கண்ட பின்னும் விடத்தோன்றாமல் ;

"ஊரு ஒலகத்துக்கே தெரிஞ்ச கத ...நான் வந்து டமாரமடிச்ச மாதிரி சொல்ற?! மூடிக்கிட்டு அள்ளிப் போட்டுட்டு போயிருக்கலாம்,இப்ப அத சொல்லாத இதச் சொல்லாதன்னா,எனக்கும் மான ரோசமிருக்குமில்ல?!எம்புட்டு நாளா அடக்கி அடக்கி கொமஞ்சிருப்பேன்(குமைந்திருப்பேன்) மனசுக்குள்ள ! " பாட்டி விடாமல் தன் பாட்டில் இன்னுமேதேதோ சொல்லிக் கொண்டு இரைந்து கொண்டிருந்தாள் ;

தாத்தா திடமாய் இருந்த காலத்தில் செல்லத்தாயம்மாள் வீட்டுக்கு போக வர இருந்தாராம்,அப்போதிருந்த புருஷ பயத்தில் ஏனென்று கேட்டு விட முடியாத எல்லாக் கோபமும் இன்றைக்கு இப்படி கொட்டி முழக்கிக் கொண்டு வந்தது பாட்டிக்கு ,இப்போதைக்கு நிறுத்தக் கூடுமென்று தோன்றவில்லை. அது ஆகும் சாயங்காலம் காப்பி குடிக்கும் போது வேறெதுவும் பிரச்சினை அகப்பட்டால் ஒழிய வேறு பேச்சுக்கு தாவக்கூடும் நிலையைக் காணோம் .

ஏதோ சமாதானம் சொல்ல முயல்வதைப் போல வாயைத் திறந்து திறந்து மூடிக் கொண்ட செல்லத்தாயம்மாள் இப்போதைக்கு கிட்ணம்மா ஓயாது என்று தானே ஒரு முடிவுக்கு வந்து
துவைத்துப் பல நாட்கள் ஆன தன் அழுக்கு வெள்ளைச் சேலையின் கிழிசல் முந்தியில் மூக்கையும் கண்ணையும் துடைத்துக் கொண்டு வீட்டுக்குள் .

இவ்வளவு பேச்சுக்கும் சண்டைக்கும் காரணமாகி விட்ட சரித்திரப் பிரசித்தி பெற்ற தாத்தா போட்ட பெரிய சைஸ் ஆட்டுப் புழுக்கைகள் என்ன கதி ஆயிற்றோ என்று கவனமாய் என்னைத் தவிர அப்போது யாரும் கண்டு கொண்டதாய் தெரியவில்லை .

பெரிய மாமாவின் புல்லட் வண்டி சத்தம் கேட்ட மாத்திரத்தில் பாட்டி முக்கா முக்கா மூணு தரம் ரேஞ்சில் அள்ளி முடிந்த கொப்பை மறுபடி சரட்டென்று பிரித்து கோபமாய் உதறி அள்ளி முடிந்து கொண்டு எதுவும் நடக்காததைப் போல வீட்டுக்குள் போய் விட்டாள்.

நீலியா ...

ஆவாணத்தக்கிழவி...

செல்லத்தாயம்மா...

கிட்னம்மா ...

யாருக்கும் என்ன பெரிய உரிமை வைத்து வாழ்கிறது என்னை விட(!!!) என்பதைப் போல பெரிய மாமா வீட்டு விக்கி நாய் தாத்தா போட்ட புழுக்கைகளை சுவாரஸ்யமாய் சுத்தம் செய்து கொண்டிருந்தது.

மறுநாள் உள்ளூர் பள்ளியில் தமிழ் டீச்சராய் இருக்கும் சித்தியும் சத்துணவு டீச்சராய் இருக்கும் அம்மாவும் ரீசஸ் பீரியடில் (அதாங்க இன்டர்வெல் :) ) சாக்பீஸ் எடுக்க வந்த மல்லிகா டீச்சர் மண் பானைத் தண்ணி குடிக்க வந்த ஆனந்தி டீச்சர் மற்றும் சில டீச்சர்கள் மற்றும் வாத்தியார்கள் எல்லோரும் சூழ்ந்திருக்க "எங்கப்பா போன கக்கூசை எடுக்க நீ நான்னு என்னா போட்டி நேத்து ?நீங்க பார்க்கலையே சார் !...நீங்க பார்க்கலையே டீச்சர் என்று முறை வைத்து சொல்லிச் சொல்லி பிரமித்துக் கொண்டிருந்தார்கள் .

ஜனங்கள் (!!!)