Friday, January 13, 2012
எக்ஸ்கியூஸ் மீ ...
பேருந்தில் இன்றைக்கும் ஒரு இரண்டு வயதுக் குழந்தையைப் பார்த்தேன் அதன் அம்மாவோடு .எனக்கு இடது பக்கம் ஒரு சீட் முன்னாள் உட்கார்ந்திருந்தார்கள்,அதன் அம்மா' பூப் பூவாய் பூத்திருக்கு' படத்தின் அமலாவைப் போல நிறை அழகு ,ஒற்றைக் கல் சிவப்பு மூக்குத்தியில் அவள் வெற்றுப் பார்வையில் கூட வாத்சல்யம் ததும்பி வழிந்தது .
பாப்பாவுக்கு நாவற்பழ நிறத்து சின்ட்ரெல்லா கவுன் அதில் சந்தன நிறத்துப் ப்ரில் வொர்க் பிரி பிரியாய் ஜன்னலில் கசிந்த காற்றுக்கு அவளது சுருட்டை முடிக் கொண்டையோடு சேர்ந்து அசைந்தது அந்த நேரத்தில் ரொம்பத் தீவிரமாய் முகத்தை வைத்துக் கொண்டிருந்த அவளைப் பார்த்ததுமே எல்லோருக்கும் பிடித்துப் போகும் அப்படி ஒரு துறு துறுப்பு.
குட்டிக் குட்டிப் பிஞ்சுக் கைகளில் மெகந்தி இட்டிருந்தாள் அதை தூக்கி அதன் அம்மாவின் முகத்துக்கு நேர நீட்டி என்னவோ சொல்லிக் கொண்டிருந்தாள் ,அதன் அம்மா அதன் விரல்களைப் பற்றி வலிக்காது மடக்கி 1 ,2 ,3 ...சொல்லிக் கொடுப்பது என் இருக்கையில் இருந்து பார்க்க அபூர்வமான ஓவிய அழகு .
செம்பஞ்சாய் சிவந்து பவளமாய் மின்னிய பாப்பாவின் குண்டு குண்டு விரல்களையும் பக்கவாட்டில் மாம்பழம் போல பளபளத்த பளிங்குக் கன்னத்தையும் பார்க்கப்பார்க்க அதன் அம்மாவிடம் எக்ஸ்கியூஸ் மீ கேட்டு அவளைத் தூக்கி என் நிறுத்தம் வரும் வரை மடியில் வைத்துக் கொண்டால் என்ன என்று ஆசை ஆசையாய் இருந்தது .
அதற்குள் எனது நிறுத்தம் வந்து விட்டதால் ...
இறங்கி கீழே நின்று கொண்டு பேருந்து என்னைக்கடக்கும் வரை அந்தக் குழந்தையையே பார்த்துக் கொண்டிருந்து விட்டு பிறகு வீட்டுக்கு வந்து சேர்ந்தேன்.
நடந்து வரும் போது தோன்றியது
"குழந்தைகளை அவதானிப்பது தியானத்துக்கு சமம் "
//என் ஹரிணி பின்னாட்களில் வாசிப்பதற்கான சேமிப்பு //
Subscribe to:
Posts (Atom)