Monday, May 17, 2010

கல்திண்ணை...



அந்த வீடு பழமையான வீடு.கல் கட்டிடம் .. எண்ணெயில் கழுவி விட்டதைப் போன்ற அதன் பள பள கருங்கல் திண்ணைகளில் உண்டு உறங்கி விளையாடிக் களித்திருக்கிறோம் நானும் என் தம்பி தங்கைகளும் ,சின்ன மாமா ஆறடி நீள கனக்கும் இலவம் பஞ்சு மெத்தை தையல் விட்டுப் போனால் படரக் கிடத்தி அதை தைப்பது இந்தத் திண்ணையில் வைத்து தான்.பெரிய மாமா தண்டால் எடுக்கும் போது பிள்ளைகள் நாங்கள் ஆள் மாற்றி ஆள் அவர் முதுகில் ஏறி கும்மாளமாய் சிரித்துப் புரண்டது இந்தத் திண்ணையில் தான்.

அம்மாவும் சித்தியும் அத்தையும் ஈர்விளியும் பேன் சீப்புமாய் குழந்தைகளை இழுத்துப் பிடித்து உட்கார வைத்து சீவி சிணுக்கெடுத்து அலங்கரித்து சிங்காரம் பண்ணிக் கொள்வதும் இந்தத் திண்ணையில் தான்.எதேச்சையாய் பொங்கல் தீபாவளிகளில் உறவுகளும் நட்புகளும் ஒன்று சேர்ந்தால் சீட்டுக் கச்சேரி களை கட்டும் இதே கல் திண்ணையில் தான்.இந்த வீடு யாருக்குச் சொந்தமென்று அதுவரை பேதம் காண தோன்றவில்லை.வளர்ந்தோம் திண்ணையோடு திண்ணையில்.

ஒருநாள் அம்மாவைப் பெற்ற பாட்டியின் அண்ணனுக்குச் சொந்தம் என்றார்கள் அந்த திண்ணை வீட்டை.பாட்டியோ வாரிசில்லாத அண்ணன் சொத்து மூன்று அக்கா தங்கைகளுக்கும் பொதுவென்று எண்ணிய தன் மடத்தனத்தை எண்ணிக் கொண்டு பேச்சிழந்து நிற்க திண்ணையோடு வீடு மொத்தமும் அந்த தாத்தாவுக்கும் அவர் மனைவிக்கும் என்றாக ,திண்ணைகள் வெறிச்சோடின.

பிள்ளைகளின் அரவமின்றி திண்ணை அழுததோ!

அதற்குப் பின் அப்படி ஓர் திண்ணை வைத்த வீட்டை வாடகைக்கு குடி இருக்க கூட கண்டுபிடிக்க முடியாமலே போனது,எத்தனையோ வீடுகளில் வாழ்ந்து இன்று சொந்த வீட்டில் வாழும் போதும் அந்த வீட்டுத் திண்ணையில் ஆடிய நினைவுகள் ஆழ்ந்து கனக்கும் மனசின் ஓரம்,அது ஒரு சுகமான சுமை.மூடி வைத்த முதல் காதலைப் போல இது திண்ணைக் காதல்,மனிதர்களை மனிதர்கள் நேசிப்பது மட்டும் தான் காதலாக முடியுமா என்ன! ? அம்மா இல்லாத நேரங்களில் அம்மா வரும் வரை அந்தத் திண்ணையை அம்மாவாய் உணர்ந்த காலங்களும் உண்டு.கூடடைந்த பறவையின் நிம்மதியென்றும் கொள்ளலாம் .அது ஒருநாள் மீளாமலே போனது.

இன்றும் திண்ணை இருக்கிறது ...தாத்தாவுடையதாய் அல்ல .

வாரிசில்லை ... சொத்துக்களை விற்றுத் தின்னும் நிலை வந்த பின் திண்ணை வைத்த வீடு மிஞ்சவில்லை.ஊரில் யாருக்கோ அதை விற்று விட்டார்கள்,வாங்கியவர்கள் இன்னும் அந்த வீட்டையும் திண்ணையையும் இடித்துப் புது மோஸ்தரில் கட்டிக் கொள்ளவில்லை,வீடும் திண்ணையும் அப்படியே தான்இருக்கின்றன.எப்போதாவது விடுமுறையில் அகஸ்மாத்தாய் அந்த ஊருக்குப் போகையில் கண்ணில் படும் கல் திண்ணை .

என்றோ ஜெக ஜோதியாய் எரிந்து முடிந்த தீப்பந்தத்தில் எஞ்சி உதிர்ந்த சாம்பலைப் போல போல வெளுத்த முகமும் வெறித்த பார்வையுமாய் உறவுகளைத் தொலைத்த தாத்தாவை அந்த திண்ணையில் காணும் போது மனம் ஒரு நொடி நின்று துடிக்கிறது.

"வீட்டை வாங்கிய கடங்காரன் அதை இடிச்சுத் தொலைச்சா என்ன? "

பாட்டி துக்கம் அதிகரிக்கையில் கத்தி ஓய்வது திண்ணை கடக்கையில் செவியில் அறைகிறது !சொல்ல மறந்தது இப்போது தாத்தாவும் பாட்டியும் வசிக்கும் வீடு அவர்களுக்கு உரிமையானதல்ல.

தேவி...புவனாக்களின் டாஸ்மாக் கணவர்கள்

மீள் உறக்கங்களுக்கு
தயாராகி நிற்கும் ஓராசிரியர் பள்ளிகள்.
மத்யானச் சோற்றுக்கு மாணவப் போர்வையில்
காலை முதல் காத்திருக்கும் பசித்த கோழிக் குஞ்சுகள் ;
பருந்துப் பார்வையில் எங்கேனும் தட்டுப்படத்தான் செய்கின்றன
இன்றும் கூட ;
ஒரு ரூபாய் அரிசி பாலீஸ் போடப்பட்டு
மறுபடி மளிகைக் கடை சாக்குகளில்
ஏழைகள் வாங்க இயலா விலையில் ;
உலை கொதித்தடங்கும்
நீர்க்குமிழிகளாய்
இலவச வண்ணத் தொலைக்காட்சிப் பெட்டி
உரக்கக் கத்துகிறது காலமயக்கங்களின்றி
"டாடி மம்மி வீட்டில் இல்லை
தடை போட யாருமில்லை "
மான் ஆடி...மயில் ஆடி குடும்பம் குழந்தை குட்டிகள் ஆடி
குட்டையில் வீழ்ந்த இனமான தமிழ் சமுதாயம்.
அடுத்தென்ன ...!
கேஸ் அடுப்பாமே ?!
வாங்க விற்க என்னை அணுகுங்கள்
அறிவிப்பு பலகை தொங்காத குறை;
இங்கிட்டு வாங்கி
அங்கிட்டு வித்துருவோம்ல
எல்லோரும் வியாபார காந்தங்களே அன்றேனும் .
பணம்
பத்திரிகை
சேனல்
அதிகாரம்
இவை போதும் அரசமைக்க .
மக்களுக்காக மக்களால் தேர்ந்தெடுக்கப் பட்ட பிரதிநிதிகள் ஆளும்
மக்களாட்சி இது மக்களாட்சி
வாழ்க குடிமக்கள் ,
யார் எக்கேடு கெட்டால் யாருக்கென்ன?!
டாஸ்மாக் இருக்கும் வரை
தடையின்றி தாக சாந்தி,
எடுக்கலாம் எப்போதும் வாந்தி
மற்றதெல்லாம் வெறும் காராபூந்தி .

NOTE :

வீட்டு வேலைக்கென்று தேவி என்ற பெண் என் வீட்டுக்கு கடந்த ஒரு வருடமாய் வந்து போகிறாள்,வேலை சுத்தமாக இருக்கும்,கையும் படு சுத்தம்,அளவான பேச்சு.,மொத்தத்தில் நல்லவள்,இரண்டு மகன்கள் மற்றும் கணவரோடு எங்கள் தெருவில் தான் அவளும் வசிக்கிறாள்.கணவர் ஒரு மருத்துவரிடம் டிரைவர் ஆக வேலையில் இருப்பதாகக் கூறி இருக்கிறாள். விடிகாலையில் முறைவாசல் செய்வதில் தொடங்கும் அவளது வேலை நேரம் என் வீடு உட்பட இன்னும் நான்கைந்து வீடுகளில் முடிய எப்படியும் பிற்பகல் மூன்று மணி ஆகி விடும்.இந்த வேலைகளை செய்வதால் அவளுக்கு கிடைக்கும் மாத சம்பளம் நான்காயிரம் ,அவளது கணவருக்கு ஐந்தாயிரம் மாத சம்பளமாம்.ஆனால் அவர் அதை அப்படியே வீட்டுக்குத் தருவதில்லையாம்,தினமும் டாஸ்மாக் போகா விட்டால் அந்த ஆளுக்கு பைத்தியம் பிடிக்குமாம்,அப்படிக் கரைத்தது போக மிஞ்சும் சொற்ப பணம் மகன்களின் அரசுப் பள்ளி கட்டணம் கட்டக் கூட போதவில்லை என்று தேவி பலமுறை சொல்வதுண்டு,கணவரிடம் எதிர்த்து வாதாடியதில் ஒரு முறை அந்த மனிதன் இடுப்பில் எட்டி உதைக்க பாவம் இவள் மூன்று நாட்கள் லீவு எடுத்துக் கொண்டு அடுத்த நாள் அழுது வீங்கிப் போன முகத்தோடு வேலைக்கு வந்தாள்.

இவள் மட்டும் அல்ல சென்ற வருடம் என் வீட்டில் வேலை செய்து பாதியில் காணாமல் போன புவனாவுக்கும் இதே தான் பிரச்சினை,புவனாவின் கணவன் குடிக்க காசு கேட்டு அவளை அடிப்பதாக அவள் ஒருநாளும் சொன்னதில்லை கடைசியில் ஒருநாள் ஒரு வாரம் லீவெடுத்து வலது பக்க காதறுந்து மறுநாள் வேலைக்கு வரும் வரை,குடிக்க காசில்லை என்று மனைவியின் காதில் இருந்த கம்மலை அந்த ஆள் பிடுங்கிய வேகத்தில் அறுந்த காது அது.

ஒரு தேவி...ஒரு புவனாவின் கதை மட்டும் தானா இது!

இலவசங்களால் இவர்களின் துயரம் குறைந்ததாய் காணோம்.