Monday, May 17, 2010

கல்திண்ணை...அந்த வீடு பழமையான வீடு.கல் கட்டிடம் .. எண்ணெயில் கழுவி விட்டதைப் போன்ற அதன் பள பள கருங்கல் திண்ணைகளில் உண்டு உறங்கி விளையாடிக் களித்திருக்கிறோம் நானும் என் தம்பி தங்கைகளும் ,சின்ன மாமா ஆறடி நீள கனக்கும் இலவம் பஞ்சு மெத்தை தையல் விட்டுப் போனால் படரக் கிடத்தி அதை தைப்பது இந்தத் திண்ணையில் வைத்து தான்.பெரிய மாமா தண்டால் எடுக்கும் போது பிள்ளைகள் நாங்கள் ஆள் மாற்றி ஆள் அவர் முதுகில் ஏறி கும்மாளமாய் சிரித்துப் புரண்டது இந்தத் திண்ணையில் தான்.

அம்மாவும் சித்தியும் அத்தையும் ஈர்விளியும் பேன் சீப்புமாய் குழந்தைகளை இழுத்துப் பிடித்து உட்கார வைத்து சீவி சிணுக்கெடுத்து அலங்கரித்து சிங்காரம் பண்ணிக் கொள்வதும் இந்தத் திண்ணையில் தான்.எதேச்சையாய் பொங்கல் தீபாவளிகளில் உறவுகளும் நட்புகளும் ஒன்று சேர்ந்தால் சீட்டுக் கச்சேரி களை கட்டும் இதே கல் திண்ணையில் தான்.இந்த வீடு யாருக்குச் சொந்தமென்று அதுவரை பேதம் காண தோன்றவில்லை.வளர்ந்தோம் திண்ணையோடு திண்ணையில்.

ஒருநாள் அம்மாவைப் பெற்ற பாட்டியின் அண்ணனுக்குச் சொந்தம் என்றார்கள் அந்த திண்ணை வீட்டை.பாட்டியோ வாரிசில்லாத அண்ணன் சொத்து மூன்று அக்கா தங்கைகளுக்கும் பொதுவென்று எண்ணிய தன் மடத்தனத்தை எண்ணிக் கொண்டு பேச்சிழந்து நிற்க திண்ணையோடு வீடு மொத்தமும் அந்த தாத்தாவுக்கும் அவர் மனைவிக்கும் என்றாக ,திண்ணைகள் வெறிச்சோடின.

பிள்ளைகளின் அரவமின்றி திண்ணை அழுததோ!

அதற்குப் பின் அப்படி ஓர் திண்ணை வைத்த வீட்டை வாடகைக்கு குடி இருக்க கூட கண்டுபிடிக்க முடியாமலே போனது,எத்தனையோ வீடுகளில் வாழ்ந்து இன்று சொந்த வீட்டில் வாழும் போதும் அந்த வீட்டுத் திண்ணையில் ஆடிய நினைவுகள் ஆழ்ந்து கனக்கும் மனசின் ஓரம்,அது ஒரு சுகமான சுமை.மூடி வைத்த முதல் காதலைப் போல இது திண்ணைக் காதல்,மனிதர்களை மனிதர்கள் நேசிப்பது மட்டும் தான் காதலாக முடியுமா என்ன! ? அம்மா இல்லாத நேரங்களில் அம்மா வரும் வரை அந்தத் திண்ணையை அம்மாவாய் உணர்ந்த காலங்களும் உண்டு.கூடடைந்த பறவையின் நிம்மதியென்றும் கொள்ளலாம் .அது ஒருநாள் மீளாமலே போனது.

இன்றும் திண்ணை இருக்கிறது ...தாத்தாவுடையதாய் அல்ல .

வாரிசில்லை ... சொத்துக்களை விற்றுத் தின்னும் நிலை வந்த பின் திண்ணை வைத்த வீடு மிஞ்சவில்லை.ஊரில் யாருக்கோ அதை விற்று விட்டார்கள்,வாங்கியவர்கள் இன்னும் அந்த வீட்டையும் திண்ணையையும் இடித்துப் புது மோஸ்தரில் கட்டிக் கொள்ளவில்லை,வீடும் திண்ணையும் அப்படியே தான்இருக்கின்றன.எப்போதாவது விடுமுறையில் அகஸ்மாத்தாய் அந்த ஊருக்குப் போகையில் கண்ணில் படும் கல் திண்ணை .

என்றோ ஜெக ஜோதியாய் எரிந்து முடிந்த தீப்பந்தத்தில் எஞ்சி உதிர்ந்த சாம்பலைப் போல போல வெளுத்த முகமும் வெறித்த பார்வையுமாய் உறவுகளைத் தொலைத்த தாத்தாவை அந்த திண்ணையில் காணும் போது மனம் ஒரு நொடி நின்று துடிக்கிறது.

"வீட்டை வாங்கிய கடங்காரன் அதை இடிச்சுத் தொலைச்சா என்ன? "

பாட்டி துக்கம் அதிகரிக்கையில் கத்தி ஓய்வது திண்ணை கடக்கையில் செவியில் அறைகிறது !சொல்ல மறந்தது இப்போது தாத்தாவும் பாட்டியும் வசிக்கும் வீடு அவர்களுக்கு உரிமையானதல்ல.

5 comments:

ஸ்ரீமதன் said...

//"வீட்டை வாங்கிய கடங்காரன் அதை இடிச்சுத் தொலைச்சா என்ன? "//

ஏமாற்றம் ,வேதனை ,விரக்தி எல்லாமே இந்த ஒற்றை வாக்கியத்தில் தெளிவு .நல்ல பதிவு நண்பரே .

malgudi said...

உணர்வோடு திண்ணையை காண்பித்து விட்டீர்கள்.

பா.ராஜாராம் said...

இன்னும் எவ்வளவோ காய்கிறது கார்த்திகா, திண்ணைகளில்.

மிக நெகிழ்வான பகிர்வு.

soorya said...

மனசு கனக்கும்
மனசு சுமக்கும்
திண்ணைச் சுமை இதுவோ...
நல்ல பதிவு.
ஒரு நெருங்கிய கவிதை போல.

KarthigaVasudevan said...

நன்றி ஸ்ரீமதன் ...(விற்றுத் தீர்த்த வீட்டை கண் முன்னே அதே வடிவத்தில் தினம் தினம் பார்ப்பது கொடுமை தானே விற்றவர்களுக்கு )

நன்றி மால்குடி

நன்றி பா.ரா (ஆமாம் திண்ணைகளில் காய்கிற நிலா மட்டுமே பாரபட்சமற்றது பா.ரா ,திண்ணை சுயநலமானதே !)

நன்றி சூர்யா ...