Saturday, June 4, 2011

எங்க உப்பப்பாவுக்கொரு ஆனையிருந்தது(பஷீர்-நாவல்))













இன்றைய கோட்டா ;







பஷீரின் நாவல்களோ சிறுகதைகளோ எதுவாக இருந்தாலும் வாசிக்கும் முன்பு பெரும் தயக்கம் இருக்கும் எனக்கு.படைப்புகளில் இம்மியளவு கூட கதாபாத்திரங்களின் மீதான இரக்கமே இருக்காது பஷீரின் எழுத்துக்களில்.இவர்கள் இப்படித்தான் என்ற ரீதியில் நாம் பாத்திரங்களின் இயல்புகளை உள்வாங்கிக் கொள்ள வேண்டும். இந்த சிறுநாவலில் குஞ்ஞு ஃபாத்துமாவைப் படைத்து அவளுக்காக நாவலை வாசிப்பவர்களை எல்லாம் வருத்தப் பட வைத்து கடைசியில் ஒரு வழியாக அவளை நிஸார் அகமதுவிடம் சேர்த்து வைத்து விட்டார் என்று நினைத்து ஆசுவாசம் கொள்ள வகையில்லை,







// "ஒனக்கே உப்பப்பாக்கே ...பெரீய கொம்பானே ...குழியானேயாம்புள்ளே.குழியானேயாம்!" //







கடைசியில் குஞ்ஞுதாச்சும்மா தன்னைக் கேலி செய்யும் அண்டை அயல் குழந்தைகளின் பேச்சில் பெரிதும் காயப்பட்டுப் போய் ஃபாத்துமாவிடம் இப்படிக் கண்ணீருடன் புலம்புகையில் நாவலின் இடையில் அவள் மீது ஏற்பட்டுப் போன எரிச்சலும் அசூயையும் அவள் மீதான கருணையாக மாறிப் போகிறது.

பாவம் பழம் பெருமை பேசியே செத்துப் போகப் படைக்கப் பட்ட பிறவி இவளாக்கும்!




குஞ்ஞு ஃபாத்துமாவின் உம்மா குஞ்ஞுதாச்சும்மா எப்போதும் பழம் பெருமையில் உழலும் கிரகம் பிடித்த பிறவி .







அவளது அப்பாவிடம் ஒரு கொம்பானை இருந்ததாம் அதைத்தான் அவள் கதை முழுதும் சொல்லிக் கொண்டு திரிகிறாள். வாட்டனடிமை என்று கம்பீரமாய் ஊரை வலம் வந்த பிரமுகரான தன் கணவர் ஒரு கட்டத்தில் நிலை தாழ்ந்து செம்மீனடிமையாக சொத்துக்களை எல்லாம் இழந்து பெரிய வீட்டை நீங்கி ஊரை விட்டு ஒதுக்குப்புறமாய் ஓலைக் கீற்றுக் கொட்டகையில் தம்மை வாழக் கொணர்ந்த வாழ்வின் இறக்கம் அவளைப் படாத பாடு பட்த்துகிறது. பிறகு குஞ்ஞுதாச்சம்மை சதா தன் ஒரே செல்ல மகள் ஃபாத்துமாவையும் கணவரான வாட்டனடிமையையும் பெருங்குரலில் திட்டித் தீர்க்கிறாள் .







முல்லீம் பெண்கள் தமது மார்கத்தில் சொல்லித் தரப்பட்ட ஐதீகங்களை எப்படி ஒரு கேள்வியுமின்றி அட கேள்வி கேட்க வேண்டுமென்ற எண்ணம் கூட இன்றி ஏற்றுக் கொள்ள நேரிடுகிறது என்பதை பஷீரை விட வேறு யாராலும் இத்தனை எளிதாக விளக்கி விட முடியாது .பாவம் ஃபாத்துமாவுக்கு கூந்தலை சீப்பு கொண்டு வாறிப் பின்னலிடக் கூட கூட உரிமை இல்லையெனில் பார்த்துக் கொள்ளுங்கள்.







வாழ்வின் எல்லாத் தாழ்வுகளுக்கும் , எல்லாக் கஷ்டங்களுக்கும் காரணம் இபிலீஸ் எனும் பகைவன் தானே தவிர வேறெந்த காரணமும் இல்லை என நம்புமிடத்தில் குஞ்ஞு ஃபாத்துமா மீது தாங்கவொண்ணாத இரக்கம் பொங்கி வழிகிறது .அப்படி இரக்கப் பட்டு தான் நிஸார் அவளை மணந்து கொள்கிறானோ என்னவோ?!







தன்னை உறிஞ்சி ரத்தம் குடித்த அட்டைக்கும்,அட்டையை விழுங்கிய விரால் மீனுக்கும் இரக்கப் படும் எளியவள் தான் பாத்துமா,அவளது உம்மாவுக்கு மட்டுமே இருந்த "எங்க உப்பாவுக்கொரு ஆனை இருந்தது போன்ற பிரத்யேக லைசன்ஸ் எதுவும் பாத்துமாவுக்கு இல்லை போலும். அவள் தனக்குள் மறுகிக் கொள்ளும் பிறவியாக அடையாளம் காட்டப் படுகிறாள்.




எது எப்படியோ ஃ பாத்துமாவுக்கு கல்யாணம் ஆனதும் வாசகர்களுக்கு அதுவரை நீடித்த அவள் மீதான இரக்கம் சற்றே குறைந்து அது அவளது உம்மாவின் பக்கம் சாய்ந்து விடுகிறது







யானையைப் பற்றிய பெருமை சரியுமிடத்தில் குஞ்ஞுதாச்சும்மா இருந்தும் மரித்தவள் ஆகிறாள். சுத்த இஸ்லாமியர்கள் இறந்தால் மரித்து என்று தான் சொல்ல வேண்டும் என்பதும் ஃபாத்துமாவிற்க்கான குஞ்ஞு தாச்சும்மாவின் கட்டளை தான்.






செத்துப் போவது காபிர்கள் மட்டும் தானாம்.







இன்றும் கூட ஊர்ப்பக்கம் போனால் சில சங்கதிகளை காதாறக் கேட்கலாம்,சில பழம் பெருமைகளை கண்ணாறக் காணலாம் .







"இந்தா இருக்கே இந்த பங்களா எங்க தாத்தா 1953 ல கட்டினதாக்கும் ,தம் பேர்ல எழுதி வைக்கலைன்னு செத்த அப்பனுக்கு கொள்ளி போட மாட்டேன்னு சொல்லி எங்க ஊதாரி மாமா இத்தாம் பெரிய பங்களாவ எங்கம்மா கிட்ட இருந்து எழுதி வாங்கிட்டார். இதான் எங்க பழைய வீடு,நாம் பொறந்து எஸ்.எஸ்.எல்.சி படிக்கற வர இங்க தான் இருந்தோம். இது எங்க வீடு ...இதான் எங்க வீடு - கண்களில் நீர் மின்ன சொல்லும் அப்பாக்கள்,அம்மாக்கள் ,அத்தைகள் ,மாமாக்களை கண்டிருக்கிறேன். //

யாருக்குத் தான் இல்லை பழம் பெருமை?!







அதொன்றும் பஷீர் சொல்வதைப் போல அத்தானாம் பெரிய குற்றம் இல்லை தான்.

ஆனால் பின்னாட்களில் கேலிக்கு இலக்காகி பெருமைக்குரியவரை ஏளனத்தில் தள்ளி வேடிக்கை பார்க்கும் சகல திறமையும் இந்த பழம் பேச்சுக்கு உண்டு.




//எங்க வீட்ல இந்த மூலைக்கும் அந்த மூலைக்கும் வீசி வீசி ஆட அம்மாம் பெரிய தேக்கு ஊஞ்சல் இருந்தது தெரியுமா?


பாட்டி கிட்ட தான் இந்த ஊர்லையே முத முதல்ல பத்துப்பிடி காசு மாலை இருந்ததாம் தெரியுமா?




எங்க வீடு தான் இந்த ஊருக்கே முத கார வீடு தெரியுமா?
எங்கப்பா தான் இந்த ஊருக்கே முத முதல்ல பெரிய பத்து படிச்சவராம் தெரியுமா?


எங்க கல்யாணம்னாலும் எங்கம்மா கிட்ட தான் இந்த ஊரே பட்டுச் சேலை வாங்கி கட்டிகிட்டுப் போகுமாம் தெரியுமா? ...


எங்கண்ணன் தான் இந்த ஊர்லயே முத முதல்ல பிளசர் கார் வாங்கினார் தெரியுமா? ...//

எத்தனை எத்தனை பழம் பெருமைகள் !

பஷீரின் இந்த நாவல் எல்லோரும் படிக்கலாம். வாசித்து முடித்ததும் உள்ளுக்குள் பொங்கும் சிரிப்பில் சன்னமாய் ஒரு வேதனை இலவசம்.