Thursday, January 28, 2010

தமிழ்நதியின் "நந்தகுமாரனுக்கு மாதங்கி எழுதுவது" சிறுகதை தொகுப்பு


நந்தகுமாரனுக்கு மாதங்கி எழுதியதை வாசிக்கையில் என்னுள்ளே உறைந்து போன மௌனத்தைக் களைக்கும் விருப்பம் கிஞ்சித்தும் இல்லாமல் போகவே பின்னிரவின் நிசப்தத்தை சுவாசத்தால் ரசித்து அருந்தியவாறு அரூபமாய் மெல்லக் கதைக்குள் நீந்தித் திளைப்பது இதமாக இருந்தது. நதி நீர் இருக்கும் வரை ஓடக் கூடியதே.நீரே இல்லாமல் போனாலும் நதியின் போக்கு வழித் தடமாயேனும் நீடித்திருக்கக் கூடும். தண்ணீரே இல்லா விடினும் நீரின் ஜில்லிப்பு உணர்ந்தேன் நானும். சந்தியா காலத்தில் சில்லிடும் மணல் தன்னுள் பதுக்கி வைத்துக் கொண்ட குளிர்மையை உணர நதியில் நீர் இருந்து தான் ஆக வேண்டும் என்பதில்லையே!

சுகுணா திவாகரின் மிதக்கும் வெளியில் "கவித்துவ மொழிதலுக்கு" தமிழ்நதி என்றொரு வாசகம் தென்பட்டது. அழகுத்தமிழில் படைப்புகள் ஒவ்வொன்றிலும் ஆழ்ந்த பாதிப்பை ஏற்படுத்த முடியுமெனில் அந்த வாசகம் எத்தனை நிஜமானது! அபாரமான கூடவே மனதுக்கு மிக நெருக்கமான எழுத்து நடை,வியக்க வைக்கிறீர்கள் தமிழ்நதி.

விமர்சனம் அல்ல...இந்தப் புத்தகத்தை அப்படி விமர்சனம் என்ற பெயரில் எதுவும் செய்யத்தகுமென தோன்றவில்லை எனக்கு,என் போன்றவர்கள் புத்தகம் குறித்து ஒரு அனுபவப் பகிர்வாக வேண்டுமானால் எழுதலாம் .

"எசமாடன் கேட்கட்டும் " ஒரே சிரிப்பாணியாய் இருந்தாலும் பலதையும் யோசிக்க வைக்கிறது .

"பெண் எனும் ஞாபகம் " "கவரிமான்கள்",நந்தகுமாரனுக்கு மாதங்கி எழுதுவது" கதைகள் எல்லாம் எப்படிப்பா இப்படி எழுத நினைக்கறதை கச்சிதமா வார்த்தைல வடிக்க முடியுது ?! கேட்க வைக்க வல்லவை. அந்தத் தொகுப்பின் உள்ளே "வீடு" வாசிக்கையில் மணி இரவு 1.30 ,வாசித்து முடித்த பின் அடுத்து வேறேதும் தொடரத் தோன்றவில்லை .

//துருவத்தின் குளிர் தாங்கி தனிமையின் துயர் பொறுத்து இரவும் பகலும் வேலையின் சக்கரத்தில் தன்னைப் பொருத்தி அவர் சுற்றியதன் பயனே இந்த வீடு,கூட்டத்திற்குள்ளே அவரை என் விழிகள் தேடி அணைத்தணைத்து மீள்கின்றன. //

பேசாமல் காரண காரியங்களே அற்றுப் போய் ஒரு பாட்டம் அழுது தீர்த்தால் தேவலாம் எனும் உணர்வு மேலெழுந்த வாசிப்பு அனுபவம் , தனிமையில் வாசிக்கையில் இன்னும் அழுத்தமான சிநேகிதத்தை ஏற்படுத்தும் வல்லமை கொண்ட எழுத்து.

அயல் நாடுகளில் புலம் பெயர்ந்தவர்களாய் வாழ விதிக்கப்பட்டவர்களின் "இருப்பு" இருப்பில் ஊடாடும் வலி இரும்பை விடக் கனக்கிறது.

என் பெயர் அகதி எனும் கதையில் வரும் வரி இது...

ராணுவம் சோதனை என்றபெயரில் தேடலைக் காட்டிலும் இளம் பெண்களை மானபங்கம் செய்வதில் மிகுந்த முனைப்புடன் செயல்பட்ட பயங்கரம் ,இதனை அமானுஷ்ய பயமளிக்கும் நினைவு கொளல் எனக் கூறலாம்

" வீட்டின் ஒவ்வொரு அறையிலும் சப்பாத்துத் தடங்கல் பதிந்தன,சாமிகளெல்லாம் சட்டங்களுக்குள் உறைந்திருந்தன"

குழந்தைகள் பொம்மைகளைப் பிய்த்தெறிந்து விளையாடுவதைப் போல ராணுவம் இளம்பெண்களை தங்களது பாலியல் வக்கிராங்களுக்குப் பரிசோதித்துப் பார்ப்பதை விளையாட்டைப் போல கைக்கொண்ட ஒரு நாட்டில் பிறந்து அகதிகளென பெயர் சூட்டிக் கொண்ட பாவத்தை என்னவென்று சொல்வது?!

போரினால் தன் பிள்ளைகள் அனைவரும் புலம் பெயர தனிமையில் தவிக்கும் ஒரு முதியவரின் "காத்திருப்பு"மரணத்தில் முடிந்த பின் சுற்றம் சூழ நடக்கும் இறுதிச் சடங்கு,எதற்கு காத்திருந்தார் அவர்?! இதற்கா!

குளிர் நாடுகளில் தஞ்சமடைந்து திசையறியாப் பறவைகளாய் திகைத்துப் போன ஞாபகச் சுவடுகள் "கப்பற்பறவைகளாய்"

கரை தேடிச் சிறகடித்து நடுக்கடலில் திசையறியாது திகைத்தபடி மீண்டும் மீண்டும் கப்பலுக்கே திரும்பும் பறவைகலானோம், கப்பலிலும் தங்கவியலாது ,கரைக்கும் திரும்பவியலாது,அங்குமிங்கும் அலைக்கழிந்ததில் உதிர்ந்து கொண்டிருக்கிறது வாழ்வு"

எத்தனை நிஜமான வலிகள் இவை !?

நிலம் மற்றுமோர் நிலா எனும் பகிர்வில் 'போராளியாய் இருந்த பெண்ணொருத்தி பின்னாட்களில் இயல்பு வாழ்க்கை வாழ்வதைக் காணுகையில்...சொல்லத் தெரியாத விருப்பமற்ற திகைப்பாய் உள்ளோடும் வார்த்தைகளாய் இவை,

"தேவதைகளின் பாதங்கள் மண்ணைத் தொடுவதை சாதாரணர்கள் சகிப்பதில்லை"

அந்தப் பெண் மறுபடி போராளியாக்கப்படவும் கூடும்,நிச்சயமற்ற தன்மை நிலவும் ஒரு நாட்டில் தேவதைகள் செத்துப் பிழைக்கின்றன.

ஊர் எனும் சிறுகதையில் ...

அந்த கிராமத்தில் நடமாடித் திரிந்த மனிதர்கள் அயல் கிராமங்களுக்கு அடித்து விரட்டப் பட்டனர்,உலக வரை படத்தில் விரல்களால் உணரப் பட்ட தேசங்களெங்கும் சிதறினார்கள்.நட்ட மரம்,வெட்டிய கிணறு,வளர்த்த பிராணிகள்,வயல்கள்,தண்ணீரும்..வியர்வையும் ஊற்றிப் பாடுபட்ட தோட்டங்கள்,தேடிய தேட்டங்கள் எல்லாம் விட்டுப் பெருமூச்செறிந்து பிரிந்தது அக்கிராமத்தின் உயிர் .

உயிர் பிரிந்தாலும் ஊரின் ஆன்மா அங்கே வாழ்ந்து எங்கெங்கோ சிதறியவர்களை அமைதிப் பேச்சுவார்த்தை அறிவிக்கப் படும் காலம் தோறும் எல்லா...மற்றெல்லா அச்சங்களையும் மீறி மேவி அழைத்துக் கொண்டே இருக்கின்றது .

ஊரின் உயிர் அங்கிருந்து வலிந்து பிரிக்கப் பட்டவர்களின் கண்ணில் திரையிடும் நீரில் கோடென வழிந்து துடைக்கப் பட்டுக் கொண்டே தான் இருக்கிறது போலும் . எத்தனை துடைத்தாலும் அழியாக் கோடுகள் .

கதை சொன்ன கதை யில் இப்படி ஒரு வாக்கியம்...

"வாசிக்க வாசிக்க தெளிவுங்கறாங்க..எனக்கு வாசிக்க வாசிக்கத் தான் குழப்பமே உண்டாகுது"சிரிக்கத் தோன்றினாலும் நிஜமென்னவோ இது தான்.


கதைத்தொகுப்பினைக் குறித்த நிறைகளைப் பாராட்ட வேண்டுமானால் முழுப் புத்தகத்தையுமே மேற்கோள் காட்ட வேண்டி வரும்,நடந்த துயரமான சம்பவங்களை நேர்த்தியாய் ஈர சிமென்ட்டில் பதித்த கைத் தடம் போல மனம் ஒட்டச் செய்தமை துன்பியல் அழகு .

இதை கதைத்தொகுப்பாக எண்ணிக்கொள்ள இயலாது,பட்ட ரணங்களின் மிச்சமான வடுக்கள்,புலி தன் காயங்களை மிக்க ஆதூரத்துடன் நாவால் வருடுவதைப் போலத்தான்...கையெட்டும் தூரத்தில் காலம் காலமாய் நிகழ்த்தப் பட்டுக் கொண்டிருக்கும் இனப்படுகொலைகளின் அகோரங்களை வலிக்க வலிக்க படிக்கக் கிடைத்த அனுபவத் தொகுப்பு எனலாம்.


தொகுப்பில் அனைத்துப் பகிர்வுகளுமே அருமையாக இருந்தாலும் ஜென்ம ஜென்மாந்திர தொடர்புகள் போல நினைவை விட்டு அகலாத தன்மையுடன் ;

வீடு
ஊர்
இருப்பு
காத்திருப்பு

இந்த நான்கினையும் கூறலாம் ,நுண்ணிய அதிர்வுகளை ஏற்படுத்தி அழ வைக்கத்தக்கன.எனக்குப் பிடித்திருக்கிறது,வாசித்த...இனி வாசிக்கப் போகும் அனைவரும் விரும்பத்தக்க நுட்பமான அழகு தமிழ்நதியின் படைப்புகள் .

இவரது பிற படைப்புகள் ;

கானல் வரி குறுநாவல் -உயிர்மை வெளியீடு
இரவுகளில் பொழியும் துயரப்பனி -ஆழிபதிப்பக வெளியீடு

தொகுப்பில் ஓரிடத்தில் "இது கதையாக இருக்கக் கூடும் என்று நினைக்கிறீர்களா?" என்றொரு கேள்வி வருகிறது.

எனது பதில் ...நிச்சயம் இது கதையல்ல...கதையாக இருக்க வாய்ப்பில்லை.

புத்தகம் -நந்தகுமாரனுக்கு மாதங்கி எழுதுவது
ஆசிரியர் -தமிழ்நதி
விலை -ரூ/90
வெளியீடு -காதை பதிப்பகம்
நோட்:
புத்தகத்தின் புகைப்படம் கிடைக்கவில்லை,தமிழ்நதியின் புகைப்படம் மட்டுமே கிடைத்தது அதையே பதிவிலிட்டு விட்டேன்.

இந்திரன் கடவுளா அல்லது ஆரியப்போர்த்தலைவனா?
இந்திரனைப் பற்றி பேசுமிடத்து நாம் ஆரியர் என்போர் வரலாறு யாதெனவும் சற்று திரும்பிப் பார்த்தல் நலம் .


ஆரியர்கள் என்போர் யார்?

மத்திய ஆசியாவிலிருந்து (தற்போதைய உஸ்பெகிஸ்தான்)இடம்பெயர்ந்து கால்நடைகளுடன் வாழ்வாதாரம் தேடி வடமேற்கு கணவாய்கள் வழியாக இந்தியப் பகுதிகளில் நுழைந்தவர்கள் அனைவரும் ஆரியர்களா?

பண்டைய வரலாற்றில் பின்னோக்கிப் பயணித்தால் பல வித ஆச்சரியங்கள் மொட்டவிழ்க்கின்றன. இந்திய வரலாறு என்பது எங்கிருந்து ஆரம்பிக்கிறது.கீழ் வகுப்புகளில் கற்பிக்கப் பட்டதைப்போலஹரப்பா...மொகஞ்சதாரோ ...அகழ்வாராய்ச்சிகளில் இருந்து தான் இந்திய வரலாறு துவங்குகிறதா?!


பூர்விக இந்திய குடிகள் யார்?ஆரியம் என்பது வெளுப்பு என்றும் திராவிடம் என்பது கறுப்பென்றும் வகுத்தது எவரோ?!

வேதங்கள் ,உபநிடதங்கள்,இதிகாசங்கள் என்று கற்பனைகள் விரிகின்றன.ராமாயணமும் மகாபாரதமும் கற்பனை கதைகளே ,அதிலொன்றும் ஆச்சரியமில்லை.அப்படிப் பார்க்கின் ரிக் வேதம் என்பதும் கூட கற்பனையான கவிதைகளின் தொகுப்பு தான்,ஆரியர்கள் எனப்படுவோர் ஈரானியர் என்கிறது ஒரு வரலாற்று ஆய்வுப் புத்தகம்.அங்கிருந்து உணவு சேகரிப்புக்காக இடை விடாத இடப் பெயர்ச்சி மூலம் இந்தியப் பகுதிகளில் ஊடுருவிய மக்களே ஆரியர்கள் எனப்பட்டனராம்.அப்படியாயின் அவர்கள் முன்பு இருந்த நிலப் பகுதியில் இருந்த பற்றாக்குறை அல்லது வறட்சியே அவர்களை இடம்பெயர வைத்ததென்பது தெளிவு.


அப்படி ஊடுருவிய ஆரியர்கள் தமது ஆதிக்கத்தை நிலை நாட்டிக் கொள்ள இங்கிருந்த பூர்விக இந்தியக் குடிகளை அவர்கள் பாணியில் சொல்ல வேண்டுமானால் தஸ்யூக்கள்(தாசர்கள்) ,தஸ்யூக்களை போரில் வென்று அடிமைகளாக்கி தமது இருப்பை ஸ்திரப் படுத்திக் கொண்டிருந்தனர்.இருப்பினும் ஆரியர்களுக்கும் தஸ்யூக்களுக்குமான போர் இடை விடாது நடந்த வண்ணமே இருந்தது.இதற்க்கான கற்பனை முலாம் பூசிய ஆரியக்கதைகள் தான் ராமாயணமும் மகாபாரதமும் என்பது அறிஞர்களின் வாதம்.

ஆரியர்களின் இந்திய ஊடுருவல் அல்லது ஆதிக்கத்தை தெய்வீக வண்ணம் பூசி இங்கிருந்த பூர்விக குடிகளை அரக்கர்களாக சித்தரித்து அவர்களை ஒடுக்கிய பராக்கிரமசாலிகள் ஆரியர் என்பதை மனதில் பதிய வைக்க எழுதப் பட்ட வியாசரின் புனைவே மகாபாரதம் ,புனைவிலும் இருக்கும் நிஜம் எதுவெனில் அது ஆரியர்கள் என்போருக்கும் ஆரியர் அல்லாதோருக்கும் அப்போது நிகழ்ந்த போர்,அந்தப் போர் தான் ஆரிய ஆதிக்க வரலாற்றின் சான்றாக இருக்கக் கூடும்,தென்னிந்தியாவில் சங்கப் பாடல்கள் எப்படி பண்டைய தமிழக வரலாற்றை சிறிது புகட்டுகின்றவோ அவ்விதமே வட இந்திய இதிகாசங்கள் சொல்ல வருவது கற்பனை கட்டுக் கதைகள் மட்டுமல்ல அப்போதைய வட இந்திய வரலாற்றையும் தான்.

இந்த வரலாற்று நூலறிஞர்களின் சரித்திர மேற்கோள் ஆதாரங்களைப் பாருங்கள்.
 1. இராமாயணம் வரலாற்றை உணர்த்தும் இதிகாசமேஇராமாயணம், மகாபாரதம் எனும் இரண்டு இதிகாசங்களும் ஆரியர் பரவிய பருவங்களை வெகு தெளிவாகக் குறிப்பிடுகின்றன.மகாபாரதம் கங்கைநதி வெளியில் ஆரியர்கள் பரவியதையும், இராமாயணம் தென்னிந்தியாவை அவர்கள் கைப்பற்றியதையும் உணர்த்துகின்றன.(முன்பு கல்வி அமைச்சராக இருந்த கனம் சி.ஜே. வர்க்கி எம்.ஏ., எழுதிய இந்திய சரித்திரப் பாகுபாடு என்னும் புத்தகத்தின் 15 ஆவது பக்கம்).


 2. //இராமாயணமும், மகாபாரதமும் இந்தோ-ஆரியர் காலத்தையும், அவர்களுடைய வெற்றிகளையும், உள்நாட்டுச் சண்டைகளையும் பற்றிக் கூறுவதாகும் . . . இவைகள் உண்மையென்று நான் நம்பியதேயில்லை. பஞ்சதந்திரம், அராபியன் நைட் முதலிய கற்பனைக் கதைகளைப் போன்றவை என்பதே என் கருத்து.(பண்டிட் ஜவஹர்லால் நேரு அவர்கள் எழுதியுள்ள டிஸ்கவரி ஆஃப் இந்தியா பக்கம் 76-77).
  இராமாயணம் என்பது தென்னிந்தியாவில் ஆரியர் பரவியதைக் குறிப்பதாகும்.(டிஸ்கவரி ஆஃப் இந்தியா பக்கம் 82)


 3. ஆரியர்கள் இந்தியாவுக்குள் நுழைந்ததனால் புதிய பிரச்சினைகள் கிளம்பின. இனத்தாலும், அரசியலாலும், மாறுபாட்ட திராவிடர்கள், ஆரியரால் தோற்கடிக்கப்பட்ட திராவிடர்கள் நீண்ட கால நாகரிகத்துடன் வாழ்ந்து வந்தபடியால், இவர்களை விடத் தாங்கள் உயர்ந்தவர்கள் என்று கூறிக் கொண்ட ஆரியர்களுக்கும் இவர்களுக்கும் இடையே விரிந்த - பெரிய - பிளவு ஏற்பட்டது.(டிஸ்கவரி ஆஃப் இந்தியா பக்கம் 62).

இதிகாசங்கள் ரிஷிகள் என்று கற்பிக்கப்பட்டவர்கள் அனைவரையும் ரிக் வேதம் புரோகிதர்கள் என்று காட்டுகிறது ,வஷிஸ்டர் புரோகிதர் என்றால் இங்ஙனம் வால்மீகியும் ஒரு புரோகிதர் ! வேத வியாசரும் புரோகிதரே அன்றோ !!!புரோகிதர் என்பதற்கு சரியான விளக்கம் வேதங்களில் உள்ள மந்திரங்களை சரியான படி உச்சரிப்பவர் என்பதாம்.


ரிக் வேத பாசுரத்தில் வழிபாடு செய்யப் படும் இந்திரனும் ஆதி ஆரியத்தலைமகனும் ஒரு ஒப்பீடு:-

ரிக் வேதம் காட்டும் இந்திரன் வரலாறு கட்டமைத்த ஆரியன் ஒருவனுக்கு உகந்ததான மூர்க்கத் தனம் நிரம்பியவனாக ஒரு போர்த் தலைவனைப் போல சித்தரிக்கப் படுகிறான்.தெளிந்து நோக்குகையில் பராக்கிரமம் பொருந்திய ஒரு ஆரிய படைத் தலைவனைத் தான் அக்காலத்திய கவிகள் அலது ரிக் வேதத்தை வாய் மொழியாக மனனம் செய்து கொள்ளத் தக்க பாரம்பர்யத்தில் வந்த புரோகிதர்கள் இந்திரனை தெய்வ நிலைக்கு உயர்த்திப் பிடித்ததனரோ எனும் சந்தேகம் வலுப் பெறுகிறது. பகைவர்களுக்கு எதிரான போருக்கு அழைக்கும் போதும் சரி ,வெற்றி அடைந்த பின்பும் சரி ரிக் வேதப் பாசுரங்களில் சோம பானம் அருந்த(போதை நிறைந்த மது) வரச் சொல்லி பல முறை இந்திரன் அழைக்கப் படுகிறான்,இது ஒரு படைத் தலைவனை உருவேற்றும் சங்கதியன்றோ!. 1. சான்று :

  நம்மைச் சுற்றி நாலு பக்கங்களிலும் தஸ்யூக் கூட்டத்தார் (திராவிடர்கள்) இருக்கிறார்கள். அவர்கள் யாகங்களைச் செய்வதில்லை. ஒன்றையும் நம்புவதில்லை; அவர்களுடைய பழக்க வழக்கங்களே வேறாக இருக்கின்றன. ஓ! இந்திரனே, அவர்களைக் கொல்லு; தாசர் வம்சத்தை அழித்துவிடுவாயாக.(ரிக் வேதம் அதிகாரம் 10 சுலோகம் 22-8).


 2. இராமாயணத்தில் குடிகாரர்களை சுரர்கள் என்றும், குடியை வெறுத்தவர்களை அசுரர்கள் என்றும் பிரித்துக் கூறப்பட்டிருக்கிறது.(ஹென்றி ஸ்மித் வில்லியம், எல்.எல்.டி., எழுதிய சரித்திரக்காரர்களின் உலக சரித்திரம் வால்யூம் 2 இல், பக்கம் 521).


 3. .இந்தியாவிலுள்ள ஆரியர்களிடம் மனிதனைக் கொன்று யாகம் செய்யும் வழக்கம் இருந்திருக்கிறதென்று நிச்சயமாகச் சொல்லலாம்.(இம்பீரியல் இந்தியன் கெஜட் 1909 ஆம் வருடத்திய பதிப்பு வால்யூம் 1 இல் 405 ஆவது பக்கம்

நதிகளை விடுவித்த தீரச் செயலுக்காக இந்திரன் ரிக் வேதப் பாடல்களில் மறுபடி மறுபடி போற்றப்படுகிறான்.மழை பெய்வதற்கும் இந்திரன் தான் அழைக்கப் படுகிறான்,அவ்விதமே இந்திரன் மழைக் கடவுளானான்,வானில் மேகமாகக் குவிந்துள்ள மழையை அவனே விடுவிக்கிறான் என்று நம்பினர் .


இந்திரானால் விடுவிக்கப் பட்ட நதியில் செயற்கையான தடுப்புகளைப் போட்டு ஓட்டத்தை தடை செய்தான் "விரித்திரன் "எனும் அரக்கன்,அவன் ஒரு பாம்பைப் போல மலைச் சரிவின் குறுக்கே படுத்துக் கொண்டு நதியின் போக்கை தடுத்தான்,இந்திரன் அவனைக் கொன்றதும் வண்டிச் சக்கரங்களைப் போல கற்கள் உருண்டன இறந்த அரக்கனின் உயிரற்ற உடல் மீது நீர் பிரவாகமாக ஓடியது .இது ரிக் வேதப் பாசுரத்தில் சொல்லப் பட்டது.

இயல்பாக சொல்லப் போனால் ஆரியனான இந்திரனுக்கும் ஆரியன் அல்லாத ஒரு பூர்வ குடி தலைவனுக்கும் இடையில் நதியின் காரணமாக நிகழ்ந்த போரில் இந்திரன் வென்ற ஒரு வரலாற்று நிகழ்வு தான் இவ்விதம்கற்பனை மேவி உவமை நயத்துடன் பாடலாகப் பாடப்பட்டது என்பதை ஊகிக்கலாம் .


ஆரிய நாகரீகமோ திராவிட நாகரீகமோ எந்த நாகரீகம் நிலை பெற வேண்டும் என்றாலும் நீர் போக்கை வைத்தே அவை தீர்மாணிக்கப் படக் கூடும் என்பது வெட்ட வெளிச்சம்,இன்றைக்கும் நதி நீர் பங்கீட்டில் நாடுகளுக்கும் மாநிலங்களுக்கும் இடையே நிலவும் பூசல்களை சொல்லவும் வேண்டுமோ?!

இன்னும் சான்று வேண்டுமெனில் இதைப் படியுங்கள்,

ரிக் வேதத்தில் ஆரியர் அல்லாதோரில் பாணி என்போர் முக்கியமானவர்கள்,பாணி என்பது ஆரியச் சொல் இல்லை,'வணிக்' என்ற சமஸ்கிருதச் சொல்லின் மூலம் பாணி,சமஸ்கிருதத்தில் பணா என்றால் நாணயமாம்.ஆகா ரிக் வேதம் காட்டும் பாணிகள் தற்போதைய வட இந்திய பனியாக்களின் (வணிகர்கள்) மூதாதையர்களாக இருக்கலாம். ஆரியரது இந்திய வருகையின் போது இந்தப் பாணிகள் வட இந்தியாவில் நதிப் புற குடிகளாக செல்வாக்கோடு வாழ்ந்திருந்தோர் எனலாம்.

இந்தப் பாணிகள் இந்திரனோடு எதிர்த்துப் போராட வலுவற்றவர்கலாக சித்தரிக்கப்படுகிறார்கள்,அப்படியாயின் இந்திரன் தேவர்களின் தலைவன் கடவுள் என்பதெல்லாம் சுத்த ஹம்பக் என்று கேலி செய்வோர் அநேகம் பேர் .


காரணம் சான்றுகளுடன் ;

மொகஞ்சதாரோ ...சிந்து சமவெளி அகழ்க்வாராய்ச்சியின் போது அப்பகுதிகளில் கிடைத்த போர்க்கருவிகளைஒப்பிடுகையில்ஆரியரதுபடைத்தளவாடங்கள்மிகவலிமை வாய்ந்தவை,
ரதங்கள்அமைப்பதில் போர்கருவிகள் தயாரிப்பதில் ஆரியர்கள் வல்லவர்களாய் இருந்தார்கள்.பாணிகளிடம் அத்தகைய வலுவான போர்க்கருவிகள் இல்லை அதனால் பாணிகள் ஆரியர் படைத் தலைவனுக்கு திறை செலுத்தும் படி மிரட்டப் படுகிறார்கள் .

வேதிய விளக்க உரைகள் பாணிகள் இந்திரனின் கால்நடைகளைத் திருடி ஒழித்து வைத்து விட்டனர் என்றும் இந்திரனின் தூதாக வரும் நாய் தேவதை சராமா அவற்றை மறுபடி இந்திரனிடம் சேர்பித்து விடும்படி பாணிகளிடம் கேட்டுக் கொள்வதாகவும் ரிக் வேதப் பாசுரம் ஒன்று பிரபலமானது. உண்மையில் அந்தப் பாசுரம் சொல்வது இதையல்ல மேற்சொன்ன "பாணிகள் ஆரியத் தலைவன் இந்திரனுக்கு கப்பம் கட்ட வேண்டும் என்று மிரட்டப் படுவதே" ஆகும் என்று டி.டி.கோசாம்பியின் "பண்டைய இந்தியா "ஆய்வுகள் கூறுகின்றன.
இப்படியெல்லாம் பகுத்துப் பார்த்துக் கொண்டே போனால் தெய்வ நம்பிக்கை மிஞ்சக் கூடுமா என்பது சந்தேகமே!

சிலப்பதிகாரத்தில் இந்திர விழா வருகிறது,வசந்த கால கானல் திருவிழாவாக வரும் இதில் இந்திர பூஜை நடக்கிறது,அப்படியானால் சோழப் பிரதேசமான பூம்புகாரில் திராவிட பூமி என்று நாம் கருதும் இடத்தில் ஆரியக் கடவுளான இந்திர வழிபாடு வழக்கத்தில் இருந்ததென்றால் இப்போதிருப்பவர்கள் ஆரிய திராவிட கலப்பினங்கள் என்று தானே சொல்லிக் கொள்ள முடியும்! கலப்பற்ற ஆரியர்கள் அல்லது திராவிடர்கள் என்போர் யார்?இது ஒரு விடையற்ற கேள்வி தான்.

இப்படித்தான் தெய்வ ரூபங்கள் தோன்றி இருக்கக் கூடும் எனில்,மனிதர்களில் செயற்கரிய காரியங்களை செய்பவர்கள் அனைவரும் பின் வரும் தலை முறையினருக்கு தெய்வங்கள் தான்.


பதிவுக்கு சம்பந்தமில்லாத ஒரு ராமாயணக்கிளைகதை :


சீதையும் ராமனும் ஒரு நதிக்கரையில் அமர்ந்து பேசிக் கொண்டிருக்கையில் சீதையின் அழகில் மயங்கிப் போன இந்திரன் மகன் ஜெயந்தன் காக உருவில் சீதையின் கன்னம் தொட வந்தானாம் அவ்வேளையில் ராமனது ஞான திருஷ்டியில் அவன் காகமல்ல ஜெயந்தன் எனத் தெரிந்து கோபம் கொண்ட ராமன் எய்திய அம்பு காக உருவில் வந்த ஜெயந்தனின் இடது கண்ணில் தைத்து அவன் அன்றிலிருந்து ஒன்றரைக் கண்ணன் ஆனான்.காகங்கள் தலை சரித்துப் பார்ப்பதற்கு ஒரு கண் பார்வை இழப்பே காரணம் என்பது ஒரு ராமாயணக் கிளைக்கதை. இதற்கு சரித்திரச் சான்று தேட முடியாது. இது இந்தப் பதிவுக்கு தேவை இல்லாத செய்தி தான் ,ஆனாலும் ஜெயந்தனின் கதைகள் (நிராயுதபாணியின் ஆயுதங்கள்)வாசிக்கையில் அட்டைப்பட காகம் இந்தக் கதை சொல்லத் தூண்டியது.மனித மனங்களுக்கே உரிய சலனத்தை தான் ஜெயந்தன் காக உருவில் உணர்த்துகிறானோ!!!(பார்க்க இடது புற சைடு பார் புத்தகப் படம்.)


Wednesday, January 27, 2010

மல்லை..கடல் மல்லை...கடற்கோயில்
கடல் மல்லை...கடற்கோயில் ... வாழ்வில் உன்னதம் என்று சொல்லத்தக்க பல நிமிடங்கள் பல சமயங்களில் நம்மையறியாமலே வந்து வந்து சென்றிருக்கலாம் ,அதிலொரு நிமிடம் மல்லை கடற்கோயில் கண்ட பொழுதுகளில் கரைந்தது.ராஜசிம்ம பல்லவன் கட்டிய கடல் மல்லை கடற்கோயில் காணக் காண தெவிட்டாது கண்களுக்கு இனிய விருந்து.


நாங்கள் அவ்விடம் சென்றிருக்கையில் ஒரு அயல்நாட்டுப் பெண்மணி கோயிலைச் சுற்றி இருந்த கற்திண்டொன்றில் (கல்லாலான திண்டு) ஏகாந்தமாய் அமர்ந்து கொண்டு சிகரத்தில் வழுக்கி வழுக்கி அமர எத்தனிக்கும் கடற்காகங்களிலும் அதற்கும் மேலே தண்மையாய் ஒளி விட்ட அரைச் சந்திர நிலாவிலும் யுகம் போலாயின கணங்களில் லயித்துப் போயிருந்தார்.இன்னதென்றறியா ஏதோ ஒரு மயக்கம்!!! அங்கு அமருகையில் எனக்கும் அப்படித்தான் இருந்தது.


இரண்டு லிங்க ரூபங்களும் கிடந்த கோலத்தில் ஒரு பள்ளி கொண்ட மூர்த்தியுமாய் மூன்று கோயில்கள் காணக் கிடைக்கின்றன கற்றளியின் உள்ளே.கிடந்த கோலத்தில் பள்ளி கொண்ட தேவரை கடந்து போன காலமும் கடலின் உப்பிசமும் சிதைத்த பின்னும் கூட அழியாக் கோலமாய் வடிவுரு வதனம்.தொட்டுக் கும்பிட்டு நகர்ந்தவர்கள் அனைவருக்கும் அதன் தொன்மம் தெரிந்திருக்குமோ?!லிங்கத்தின் முனை அரிக்கப் பட்ட சிதிலம்.


சவுக்கு மரங்களை ஏராளமாய் நட்டும் கற்களை குவியல் குவியலாய் அண்டக் கொடுத்தும் ஆழிப் பேரலைகள் எழும்போதெல்லாம் பல்லவ புராதனப் பெருமை அழியாமல் காக்கும் வண்ணம் உலக பாரம்பரியச் சின்னமாக இதை கட்டிக் காத்து வரும் சுற்றுலாத் துறைக்கு பார்வையாளராக வந்தனங்களைத் தெரிவித்துக் கொள்வதில் மல்லைக்கு சுற்றுலா செல்லும் ஒவ்வொருவரும் கடமைப்பட்டிருக்கிறோம் .


சிவ வழிபாடும் உண்டு,பிற்காலப் பல்லவ மன்னர்கள் பௌத்தமும் தழைத்திருக்க உதவினர் போலும்,சமணத் துறவிகள் சயனத்துக்கு ஏற்படுத்திக் கொண்ட கற்படுக்கைகளும் ,உணவருந்த பாறைகளில் தோண்டிய சின்னச்சின்ன குழிகளும் ராமானுஜ மண்டபத்தை ஒட்டி காட்சிக்கு கிடைக்கின்றன.சயனப் பெருமாள் கோயில் காலத்தால் மாமல்லன் காலத்துக்குப் பிற்பட்டதாய் இருப்பினும் கடற்கோயிலின் உள்ளிருக்கும் பள்ளி கொண்ட தேவரை நோக்குங்கால் வைணவமும் பாங்காக வளர்க்கப் பட்டுள்ளமை காணலாம் .முதலில் சைவமும் வைணவமும் பிற்பாடு புலிகேசியுடனான போருக்குப் பின் பௌத்தமும் சமணமும் இங்கே நிலை கொண்டிருக்கலாம், தெய்வ ரூபங்கள் எதுவாயிருப்பினும் கலைக் கண்ணால் காணுகையில் கற்கள் ஒவ்வொன்றும் கவிதைகளாயின இங்கு.


சிம்ம ரூபங்கள் சிற்பங்களாக வேறெங்கேயும் விட இங்கே கனத்த கம்பீரம் காட்டுகின்றன. யானைகள் நிஜ யானைகளைக் காட்டிலும் அழகு,ஏனெனில் இவை பாகனுக்குப் பயந்து பிச்சைக்குப் பழக்கப் படவில்லை பாருங்கள்!!!,யாளிகளும் சில இடங்களில் சிலா ரூபமாய்,இந்த யாளிகள் தான் டிராகன்களின் ரிஷி மூலங்கலாம்.இருக்கலாம்.


ஐந்து ரதங்கள் ஒற்றைக் கல்லால் செதுக்கப் பட்ட கற்கோயில் வடிவங்களுக்கு மாதிரிகள்,பஞ்ச பாண்டவர்களுக்கும் இதற்கும் சம்பந்தம் இல்லாவிட்டாலும் பல்லவர் காலக் கட்டிடக் கலைக்கு பிரமிப்பூட்டும் உதாரணங்களாய் அன்றும் ...இன்றும்...இனி என்றென்றும் இவை தன்னிகரிலாதவை.தர்ம ராஜ ரதத்தில் செதுக்கப் பட்ட சிவனின் அர்த்தநாரீஸ்வர வடிவம் கோயில் சிற்பக் கலைக்கு பெருமைக்குரிய ஒன்றென அங்கிருக்கும் குறிப்புகள் சொல்கின்றன. ஐந்து ரதங்களுமே விமானங்கள் அமைப்பில் மாறுபடுகின்றன.ஒற்றைக் கல் யானை ,ஒற்றைக் கல் சிம்மம் என பிரமிப்பில் ஆழ்த்தும் பல்லவப்படைப்புகள் .மகிஷாசுர மர்த்தினி மண்டபம்,ராஜ சிம்மன் எழுப்பிய புலிக்குகை,இப்படி நிதானமாய் பார்த்து ரசிக்க வேண்டிய சிற்பங்கள் நிறைய உண்டங்கு.


பேருந்து நிலையத்தின் அருகிலேயே அரசு கல்லூரி அருங்காட்சியகம் இருக்கிறது,இரண்டு ரூபாய் டிக்கட்டில் உள்ளே போய் பார்க்கலாம்.சிலம்பேந்திய கண்ணகியுடன், புலியை முறத்தால் அடித்துத் துரத்திய வீரத் தமிழ் தாயொருத்தி சிற்பமாய் நிற்கிறாள்,விரி குழல் ஓவியம் போல் சிதறிப் பறக்க தூக்கிய பாதங்களுடன் சதிராடும் நடராஜ விக்கிரகங்கள் சிலைகளாய்,ரதி மதன் ரூபங்கள் சிலைகளாய்,ஆலிலை கிருஷ்ண விக்கிரகம் சிலையாய்,பல்லவ காலப் பெண்கள் சிலைகளாய்,பருத்த பானை வயிற்றோடு வினாயப் பெருமானார்.எல்லாவற்றுக்கும் நட்ட நடுவில் மாமல்லன் சிலை ,உயரமான கறுத்த வழ வழப்பான கற்சிலை.


நரசிம்ம வர்ம பல்லவன் மிகச் சிறந்த மல்லன்,மல்லர்களில் மகா மல்லன் (மற்போர் புரிபவர்கள் ) ஆயுதங்கள் ஏதும் ஏந்தாமல் தோள் வலிமை கொண்டு போரிடுவோர் மல்லர்கள் (மல்யுத்தம்) என்றால் சாலப் பொருந்தும் .அங்ஙனமே நரசிம்ம வர்மன் மாமல்லன் என்றானான். வாழ்ந்த காலம் கி.பி 634 to கி.பி.670 .அவனது காலத்தில் ஐந்து ரதங்கள் திருப்பணி ஆனது.கடற் கோயில் அவனது பேரன் ராஜசிம்மன் (இரண்டாம் நரசிம்ம வர்மன்) காலத்தைய திருப்பணி.ஸ்தல சயனப் பெருமாள் கோயில் இவர்களை அடுத்து வந்த பரமேஸ்வர வர்மன் காலத்தைய திருப்பணி.ராஜசிம்மன் கட்டியது தான் காஞ்சி ஏகாம்பரேஸ்வரர் ஆலயம் என்றும் எங்கோ வாசித்த ஞாபகம்.


மல்லையில் மொத்தம் மூன்று விதமான கட்டிடப் பாணிகள் காணப்படுகின்றனவாம்.


1.முதலாம் வகை ஒற்றைக்கல் கோயில் மாதிரிகள் (உதாரணம்-பஞ்ச பாண்டவர் ரதம்)


2.இரண்டாம் வகை குடவரைக் கோயில்கள் (உதாரணம்-ராமானுஜ மண்டபம்)


3.மூன்றாவது கற்றளிகள் கல்லால் கட்டப் பட்ட கோயில்கள் (கற்களை ஒன்றன் மீது ஒன்றாக அடுக்கிக் கட்டும் முறை) உதாரணம்-கடற்கோயில் )


புகைப்படங்கள் எடுக்கும் நோக்கம் இல்லாமல் தேமேவென மாமல்ல புரம் போய் வந்ததற்கு என்னை நானே பலமுறை நொந்து கொண்டாயிற்று,இனி யாரேனும் மல்லைக்குப் புறப்பட்டால் கேமரா இல்லாமல் போகாதீர்கள் என்பதே என் வரையில் உகந்த வழிகாட்டல்.


"கல்லிலே கலை வண்ணம் கண்டார் " மல்லைக்குப் பொருத்தமான வரிகள்...மாமல்ல புறத்தில் இருந்து வெளியேறும் வரை காதருகே குதிரைகளின் குளம்படிச் சத்தங்களும் கற்களில் உளி பதியும் "டணார்,டணார் " ஒலிகளும் சூழ்ந்து கொண்டிருந்து விலகியதைப் போலொரு பிரமை .கூடவே எந்த சிற்பத்தைக் கண்டாலும் அதைத் தொட்டுத் தடவுகையில் ஒட்டி நிற்கையில் ,புகைப்படம் எடுத்துக் கொள்கையில் இங்கே எப்போது எந்த பல்லவ மன்னன் ,எந்த பல்லவ இளவரசி ஓர் நொடி நின்றிருக்கக் கூடுமோ எனும் ஆச்சர்யம் கலந்த உவகையில் பெருமிதம் நிறைந்து தழும்பியது.


நீலக்கடலும் பால் நுரைப்பூக்களாய் பொங்கிப் பிரவாகித்துப் பின் அமிழும் அலையோடும் கரையும்,கரை நின்று கால் நனைக்கும் மனித முகங்களுமாய் மாமல்லபுரம் பல்லவர் பெருமை பேசுகிறது பல்லாண்டுகளாய். நாங்கள் சென்று வந்தாயிற்று நேற்று .


நாளை மறுநாள் பௌர்ணமி .பூர்ண பௌர்ணமியில் கடற்கோயிலைக் காண்பது தனி ரகம்..அலாதியான ரசனை அது ,யாருக்கெல்லாம் கொடுத்து வைத்திருக்கிறதோ அதைக் காண அவர்கள் பாக்கியவான்கள் .இப்போதெல்லாம் தொல்பொருள் துறை அனுமதிக்குமா என்று தெரியவில்லை . விடுமுறை என்றால் குழந்தைகளை அழைத்துக் கொண்டு போய் காண்பியுங்கள் சிற்பங்களையும் கூடவே பல்லவ பூமியையும்.

நோட்:

படம் கூகுளில் தேடி பெறப் பட்டது .

Sunday, January 24, 2010

சொப்பனக்களிறு

ஆம் என்று மனம் ஒத்துக் கொள்ளும்
எதையுமே;
சரி என்று ஏற்றுக் கொள்ளாமல்
முரண்டு பிடிக்கும் லாவகம் ...
புத்திக்கு எப்போதும் வாய்த்திருக்கிறது;
பாட்டிக்கும் அத்தைக்குமான சச்சரவுகளில்
அத்தையின் கண்ணசைவில்
மௌனமாகும் மாமாவைப் போல்
சட்டை செய்யாது
தாண்டி நடக்க ஆசை தான் ;
மனம் முன்னிழுக்க
புத்தி பின்னிழுக்க
சாலை நிழற்குடையில்
ஒய்யாரமாய் சாய்ந்து நிற்கும்
நவ யுக நாகரீக யுவனில்
கண் பதிக்காமல் புறக்கணித்து விட்டதாய்
எட்டி நடக்கையில்
எப்போதும் போல் பரிகசித்தது மனம்
என் சாகசத்தைச் சொல்லிச் சொல்லி
சொப்பனக் களிறுகளை
பிணைத்துக் கட்டும் புத்திச் சங்கிலிகள்
அறுந்து அறுந்து விழுந்தாலும்
இற்றுப் போக விடாத
என்ன ஒரு சாகசம்?!

Thursday, January 21, 2010

கிருஷ்ணி...

கிருஷ்ணி கடலலைகளைப் போல ஓயாது பேசிக்கொண்டே வந்தாள்.

நல்ல வெயில் நேரத்தில் குளத்தின் அடியில் வெது வெதுப்பாகவும் மேலே சில்லென்றும் உணரவைக்கும் நீரின் மாயாஜாலம் அவள் குரலுக்கும் இருந்தது.குளத்துக் குளியலைப் போல அவள் குரல் கேட்க கேட்க மயக்கம் தருவதாய் அவளில் லயித்துப் போயிருந்தேன் நான்.

குடியிருப்புப் பகுதி தாண்டி நகரின் ஒதுக்குப் புறத்தில் இருக்கும் ஜிப்சம் பேக்டரியை சுற்றிப் பார்க்க வேண்டுமென்று அவளாய்த்தான் என்னுடன் கிளம்பி வந்தாள்.என் சைக்கிள்ளில் தான் போய்க் கொண்டு இருக்கிறோம்.

முன்புறம் உட்கார்ந்து கொள்ளச் சொன்னதற்கு ,

"வேண்டாம் நான் கீழ விழுந்துடுவேன்... "

கருப்பு ரிப்பனில் தூக்கிக் கட்டிய ரெட்டை ஜடைகளில் ஒன்று முன்புறமும் மற்றொன்று முதுகிலும் துள்ளி விழ ப்ளூ கலர் பாலிஸ்டர் யூனிபார்ம் பாவாடை அழுந்த பின்புற கேரியரில் குதித்து ஏறி அமர்ந்து கொண்டாள். பிஞ்சென்று வகுக்க முடியாது. சிரிக்கையில் பூவாய் முகம் விரிந்தாலும் இவள் பூவில்லை.

என் போன்ற கல்யாணம் கழிந்தும் பிரம்மச்சரியம் அனுஷ்டிக்கும் கட்டாயத்தில் உழல்பவன கண்ணுக்கு எப்போது வேண்டுமானாலும் பழுக்கக் காத்திருக்கும் காய் தான் . திட்டாதிர்கள் நினைப்பதைச் சொன்னேன்.

சைக்கிள் முன்புறக் கம்பியில் உட்காராத கிருஷ்ணியை மனதிற்குள் திட்டிக் கொண்டே ஹார்மோன்களை சபித்துக் கொண்டு வேகமாக பெடலை மிதித்தேன்.

மெயின் ரோடில் இருந்து பிரியும் செம்மண் பாதை ,ஆளரவமே இல்லை ,இன்னும் இரண்டு கிலோ மீட்டர் போனால் தான் ஜிப்சம் பேக்டரி வரும். மெல்லத் தூண்டில் போட்டுப் பார்க்கும் ஆசையில் ...மீன் மாட்டினால் மீன்( இல்லையேல் ..கற்பனை பிடிக்கவில்லை!!!)

கிருஷ்ணி பக்கத்துல தான் நான் தங்கி இருக்கற ரூம் ,அங்க போயிட்டு போலாமா ? !

சன்னமான யோசனையுடன் ,

அங்கிள் உங்க ரூம் இங்கயா இருக்கு ?சிட்டிக்குள்ள இல்ல இருக்கிங்கன்னு சொன்னாங்க அமுதா ஆன்ட்டி!

ஒரு சிறுமியின் கேள்வி மிதக்கும் கண்கள் என்னைக் குற்றவாளியாக்கி விடும் வாய்ப்பு ....தப்பித்து விடும் வேகத்தில் ,

ஆமா ஆனா இங்கயும் ரூம் இருக்கு,பேக்டரி இங்க இருக்குல ,நைட் லேட் ஆச்சுனா ரெஸ்ட் எடுக்க இந்த ரூம்,என் பிரெண்ட் தங்குவான் ...

சும்மா ஒரு 10௦ மினிட்ஸ் அங்க போயிட்டுப் போலாமா ?சமாளித்தேன் .

வேண்டாம் அங்கிள் அங்க போயிட்டு போக லேட் ஆயிடும் ,அம்மா திட்டுவாங்க.(சுலபமாய் மீன் நழுவியது.)

சும்மா ஒரு காப்பி சாப்பிட்டுப் போலாம்னா வேண்டாங்கற... நான் நல்லா காபி போடுவேன் தெரியுமா?

படிப்பது ஏழாம் வகுப்பு தான் , பாலில் விழுந்த திராட்சையாய் மிதக்கும் கருவிழிகள்,அகஸ்மாத்தாய் கைகள் தீண்டும் போதெலாம் இளநீரின் சில்லிப்பை உணர்த்தும் இதமான ஸ்பரிசம் , ஈரம் மினுங்கும் பன்னீர் ரோஜாக்களாய் பரிசுத்த உதடுகள்.தேகமெங்கும் இழுத்துக் கட்டிய வில்லின் நிமிர்வு ,புதிதாய் வரையப் பட்ட வளைவுகளும் நெளிவுகளும் ,சிறுமி தான் ...வளரிளம் சிறுமி ...அதனாலென்ன ! இத்தனை வனப்பாய் என் கண்ணை உறுத்தியது அவள் குற்றமே!

தூரத்தில் ஜிப்சம் பேக்டரி மரங்களின் நடுவில் கண்ணில் பட்டது.கிருஷ்ணி முதன் முதலில் என் கண்ணில் விழுந்ததைப் போல,

அங்கிள் அந்த பில்டிங் தான ?

முகம் முழுக்க சிரிப்பை விதைத்துக் கொண்டு கிருஷ்ணி கேட்டாள் ,அமுதா ஆண்ட்டியோட அங்கிள் இருப்பாங்க இல்ல அங்க?

ஜிப்சம்னா என்ன? அது எதுக்கு யூஸ் பண்றாங்க ?அதனோட மூலப் பொருள் எது?அது இந்தியால எங்க அதிகமா கிடைக்கும் ?எல்லாமே ...எல்லா கேள்விக்கும் பதில் தெரியும் எனக்கு,ஆனா கூட இந்த ஜிப்சம் கல்லையும் எடுத்துட்டுப் போய் காட்டினா எங்க ஜியாகிரபி மிஸ் என்னை ரொம்ப ப்ரைஸ் பண்ணுவாங்க தெரியுமா?

ஹை ..நாளைக்கு நான் ஜிப்சம் கொண்டு போவேனே ஸ்கூல்க்கு.ஹை...ஹை..ஹை புஷ்பா தோத்துப் போவா பாருங்க ,நாளைக்கு நான் தான் வின் பண்ணுவேன்.

நான் அவளை இளம் பெண்ணாக வரைய முயல சித்திரம் சிறுமியையே மீண்டும் மீண்டும் காட்டிக் காட்டி இம்சித்தது.

நேரம் கரைகிறதென்ற பிரஞ்ஞை இருந்தும் என்ன செய்து விட முடியும்?!

அங்க பாருங்க அங்கிள் ...அமுதா ஆண்ட்டியோட அங்கிள் வரார்.கிருஷ்ணி சைக்கிள்ளை நிறுத்தும் முன் குதித்து இறங்கி பாக்டரிக்குள் ஓடினாள் ...;

முகம் வரவேற்று சிரிப்பதாய் தோன்றினாலும் "என்னப்பா இது வில்லங்கம்?!" ரீதியில் என்னிடம் வந்த அமுதாவின் கணவன் ;

வா கணேசா...கிருஷ்ணி உன்கூட வந்திருக்கா,இங்க எதுக்கு கூட்டிட்டு வந்த என்றான்.

ஜிப்சம் வேணுமாம் ...ஸ்கூல்ல காட்டணும்னு கேட்டா அதான் இங்க இருக்க்குனேன்,கூட வந்துட்டா.

கடற் கிளிஞ்சல்களாய் கலர் கலராய் குன்று போல சிதறிக் கிடந்த ஜிப்சக் குவியலில் சின்னதும் பெருசுமாய் சிலவற்றை கிருஷ்ணி தேடித் தேடி எடுத்து பிளாஸ்டிக் பையில் சேகரித்துக் கொண்டாள்.

இது எதுக்கு கிருஷ்ணி ஒனக்கு ?!சம்பிரதாயமாய் அவன் ஏதோ கேட்டு விட்டு பதிலை எதிர்பாராதவனாய் ,

நேரமாகுது ...சீக்கிரமா கொண்டு வீட்ல விட்று,அமுதா எப்பிடி ஒன்கூட அனுப்பினா இவள?!நட்பின் இலகுவில் நோகாது அவன் கேட்க .

அவ தான் என்னை கூட்டிட்டு வந்தா,வழி காட்ட,நீ என்னப்பா இப்பிடிக் கேட்கற! சிரித்தேன் நான்.

பாம்பின் கால் பாம்பறியும்.

இருட்டப் போகுது கணேஷா ... பத்திரமா கொண்டு போய் வீட்ல விட்று ,

கிருஷ்ணியின் அமுதா ஆன்ட்டி என் நண்பனின் மனைவி,அவன் வீட்டுக்கு அடிக்கடி போகும் ஆசையை என்னுள் பதித்ததில் நண்பனை விட பக்கத்து வீட்டுச் சிறுமியான இந்தக் கிருஷ்ணிக்கு தான் பெரும் பங்கு.

அமுதா நல் மனையாள் இலக்கணம் பிசகாதவள்,,என்னை கணவனின் நண்பன் எனும் கோட்டிற்குள் நிறுத்தக் கற்றிருந்தாள் .இப்போதும் கிருஷ்ணி என்னுடன் வந்ததை அவள் அத்தனை ரசிக்கவில்லை என்பதை அறிந்தே இருக்கிறேன் நான்.,

"கிருஷ்ணி...பயமறியாக் கன்று " ருசி கண்ட பூனையுடன் ஒரு பச்சைக் கிளியாக்கும்?! எனக்கே சகிக்கவில்லை என்கற்பனைகள்.

சந்தர்பங்களை நொந்து நண்பனிடம் சொல்லிக் கொண்டு கிருஷ்ணி பின்புற கேரியரில் அமர வீட்டுக்குப் போகும் பாதையில் சைக்கிளை விட்டேன் .

குளிரத் தொடங்கி இருந்தது. உடலைக் குறுக்கிக் கொண்டு பெடலை மிதித்தேன்.சட்டைப் பையில் செல் ...

நெஞ்சுக்குள் பெய்திடும் மாமழை
நீருக்குள் மூழ்கிடும் தாமரை " யாய் கிணு கிணுத்து கிறங்கடிக்க ...

என் மனைவி தான் உற்சாகமாய் எடுத்துப் பேசினேன். சொல்லுடா...

....................................

இன்னும் ரூம்க்கு போகலப்பா நான். ..

.....................................

இனிமே தான் சாப்பிடனும் ராகவனோட ஜிப்சம் பேக்டரில இருந்து இப்ப தான் கிளம்பறேன்...

..................................

ம்...சரி...நீ சாப்டியா ?

..........................................................

சரிடா ...ரூம்க்கு போனதும் கூப்பிடறேன்.வச்சுடவா! ...

.........................

அங்கிள் உங்க வீட்டு ஆன்ட்டியா? கிருஷ்ணி தான்.

ம்...ஆமாம்.

அவங்கள ஏன் ஊர்ல விட்டுட்டு வந்துட்டிங்க?

அவங்க அங்க வொர்க் பண்றாங்களே ! ஒடனே இங்க மாத்திக்க முடியாது. அதான்.

ஓ...புரிந்தவளைப் போல ஜிமிக்கிகள் அசைய அவள் தன் சின்னஞ்சிறு தலையை ஆட்ட ...

ம்...என்றேன்.

அடுத்ததாய் ... ம்...எங்க அம்மாவப் போல இல்ல?!

சின்னக் கேள்வி தான் ஆனாலும் சுக்கு சுக்காய் உடைந்தேன் நான்.


இந்த மாசம் அப்பா வருவாரே லீவ்ல...ஜாலி தான் .

கிட்ட வரத் தொடங்கியிருந்த குடியிருப்புகளின் வெளிச்சத்தை நோக்கி இருளுக்குப் பயந்தவனைப் போல வேக வேகமாய் பெடல் மிதித்தேன்.

பாட்டியின் நிழல் கண்டதும் சந்தோசமாய் பிடி நழுவாமல் ஜிப்சப் பையை எடுத்துக் கொண்டு உள்ளே ஓடினாள் கிருஷ்ணி.

White ஜோக்ஸ் ...(முறைவாசல்)நேற்று பாப்புவை பக்கத்தில் உள்ள பார்க்குக்கு அழைத்துப் போயிருந்தேன் ,அவள் விளையாடப் போனதும் கையோடு கொண்டு போன புத்தகத்தை விரித்துக் கொண்டு அதன் மீது ஒரு கண்ணும் பாப்புவின் மீது ஒரு கண்ணுமாய் அங்கிருந்த ஒரு பெஞ்சில் உட்கார்ந்துகொண்டேன் .

சற்றுத் தள்ளி மூன்று நடுவயதுப் பெண்கள் சளசளவென்று பேசிக் கொண்டிருந்தனர்.ரொம்ப நேரமாய் பேசிக் கொண்டிருப்பார்கள் போலும்.காற்றின் தயவால் என் காதுகளிலும் வந்து விழுந்தது அவர்களது பேச்சு .

பக்கத்து வீட்டுக்காரி அவ மொறவாசல் செய்றப்போ என் வீட்டு வாசப் படியில தண்ணி தெளிக்கிறாலோ இல்லையோ நான் என் மொறவாசல் வரும் போதெல்லாம் அவ வீட்டு வாசப்படியையும் தண்ணி தெளிச்சு நல்லாப் பெருக்கி கொட்டிருவேன் .முன்னாடி ரெண்டு கூடு இழுத்து கோலம் கூட போட்டு வைப்பேன் ,அந்தப் பொம்பள ஒருநா நான் இல்லன்னு நெனச்சுக் கிட்டு நாம் போட்ட கோலத்தைப் பார்த்து இப்பிடி..இப்பிடி மூஞ்சக் காட்டுனாளா (பொறாமை பிடித்த பெண்கள் முகத்தை தோள்பட்டையில் இடித்துக் கொள்வதைப் போல பாவனை செய்கிறார் )அன்னிலருந்து கோலம் மட்டும் போடமாட்டேன்.யப்பாடி சரியான பொம்பிள அது!

இரண்டாமவர் ஆச்சர்யத்துடன் கேட்கிறார்...ஒன் வீட்டு வாசலைப் பெருக்கற சரி அவ வீட்டு வாசல்ல ஏன் கோலமெல்லாம் போட்டு வைக்கிற நீ? ஒனக்குத் தேவையா இது?எதுக்கு அவளுக்கெல்லாம் நீ தண்ணி தெளிக்கற?

அதேன் கேட்கற போ ...! அவ தண்ணி தெளிக்கற லட்சணம் பாக்கணுமே?!

என்னமோ யாரும் பார்த்துரக் கூடாதுன்னு திருடப் போறவ மேனிக்கு அப்படி அங்கிட்டு இங்கிட்டும் முழிச்சிக்கிட்டு ஒரு சொம்புத் தண்ணி கொண்டாந்து சலுப்புன்னு வாசல்ல கொட்டி தொடப்பத்தால அங்கிட்டு இங்கிட்டு வெரசி விட்டுப் போயிடுவா.இதான் மொறவாசலாக்கும்?!எங்கியும் கண்டதுண்டா?அதன் நான் ரெண்டு கோலம் போட்டு வச்சுட்டு இருந்தேன்.அதையும் கெடுத்துட்டா மவராசி.

ஒன் வீட்டு வேலையே ஓம்பதூட்டு வேளக்கிச் சமானம் ,வேண்டாதாதா செஞ்சிட்டு ஏன் பொலம்புற?(இது மூன்றாவதாக உட்கார்ந்து பேசிக் கொண்டிருந்த பெண்)

அவ வீட்டு வாச ,அவ எப்படியும் தெளிச்சுக்குறா ! நேரமாச்சு எந்திரிங்க போவம்.

இப்போது முதலில் பேசிய பெண்)

அதென்ன அப்பிடிச் சொல்லிட்ட. ஒழுங்கா மொறவாச செஞ்சாத்தான பூமா தேவி நம்மள நல்லாத் தாங்குவா.(!!!)

மற்ற இரண்டு பெண்களும் ஒரு நொடி "ங்கே" என்று முழிக்க தொடர்ந்த அந்தப் பெண் ...

ஆமா ...இல்லாட்டிப் போனா செத்தப்புறம் அரக்கப்பரக்க அள்ளிட்டுப் போயி இல்ல அடக்கம் பண்ணுவாங்க.செத்த அன்னிக்கு நாம மொறவாச செஞ்ச அழக ,நன்றிய நெனச்சுப் பாத்து இவ நல்லா நம்மள சுத்தமா வச்சுக்கிட்டானு அந்த பூமா தேவி நம்மள நல்லாக் கெடக்க வச்சு நிதானமா அனுப்புவா.இல்லாட்டிப் போனா வெரசா வெரசமா அள்ளிட்டுத் தான் போவாக .

இந்த இடத்தில் எனக்குச் சிரிப்புப் பொத்துக் கொண்டு வர அவர்களறிய சிரித்து விட்டேன் போல பேசிக் கொண்டிருந்த பெண்மணி என்னைத் திரும்பிப் பார்த்து விட்டு சங்கோஜமாய் முழித்து விட்டு குரலைத் தாழ்த்திக் கொண்டார்.

வீட்டு வாசலை சுத்தமாகப் பராமரிக்க வேண்டும் என்ற அந்தப் பெண்ணின் எண்ணம் சிரிப்புக்குரியது அல்ல. பாராட்ட வேண்டிய விசயமே. ஆனாலும் வெள்ளந்தியாய் அதற்கு அவர் கொடுத்த விளக்கம் என்னை வெகுவாய் நகைப்பில் ஆழ்த்தியது.வைட் ஜோக்ஸ் னா வெள்ளந்தி ஜோக்ஸ் ன்னு வச்சிக்கலாம் மக்களே.
நோட்:
படம் கூகுளில் தேடி எடுத்தது. நன்றிகள் இப்படத்தை அப் லோட் செய்தவர்களுக்கு.

Tuesday, January 19, 2010

க்விஸ்...(check your knowledge)

க்விஸ்...

1.தமிழ் இலக்கணப்படி மாத்திரை அளவீட்டில் ஒற்று எழுத்துக்கு எத்தனை மாத்திரை?

2. நேர்..நேர் =தேமா ...இந்த வரிசையில் நிரை நிரைக்கு என்ன வாய்ப்பாடு?

3. ஐ வகை நிலங்களில் நிலமும் நிலம் சார்ந்த பகுதியும் எவ்விதம் அழைக்கப் படுகிறது?

4. பெண்ணின் பெருமை இந்த நூலின் ஆசிரியர் யார்?

5. குற்றாலக்குறவஞ்சியை இயற்றியது யார்?

6.சேக்ஸ்பியரின் "மெர்ச்சன்ட் ஆப் வெனிசில்" வில்லன் பெயர் என்ன?

7.அருந்ததி ராய்க்கு புக்கர் பரிசு வாங்கித்தந்த ஆங்கில நாவலின் பெயர் என்ன?

8.ஷாஜகானின் அப்பா பெயர் சலீம் சரியா தவறா?

9.தமிழ்நாட்டின் முதல் பெண் முதலமைச்சர் யார்?

10.ராமாயணக் கதையில் வரும் கிஷ்கிந்தை இப்போதைய எந்த நிலப்பகுதியில் வருகிறது?

11.துத்தநாகத்தின் அறிவியல் குறியீடு என்ன?

12."மண்ணில் இந்தக் காதலன்றி " இந்தப் பாடலை எழுதியவர் யார்?

13.பல்லவர் காலத்து காபாலிகர்கள்,காளாமுகர்கள் இவர்கள் சார்ந்திருந்த இந்து மதப் பிரிவு எது? ( 1 st கேள்வி தப்பாக் கேட்டுட்டேன் போல!!!)?

14.முகலாயர் வரலாற்றில் மதாம் அங்கா யார்?

15.இந்தியாவின் தேசிய விளையாட்டு எது?

இப்போதைக்கு இந்தக் கேள்விகள் போதும் , யாரெல்லாம் பதில் சொல்றாங்கன்னு பார்த்துட்டு சரியான பதில்கள் இறுதியில் வெளியிடப்படும்.

check your knowledge .

Monday, January 18, 2010

கி.ராவின் "அந்தமான் நாயக்கர்"
கி.ரா வின் அந்தமான் நாயக்கரை நான் வாங்கியது 2007 ஆம் வருட புத்தகக் கண்காட்சியில்.இரண்டு மூன்று முறை வாசித்து விட்டேன்.ஒவ்வொரு முறையுமே வாசிக்க அலுப்பில்லாத கதை இது.

' கோபல்ல கிராமம்' போலவே சமகால நிகழ்வை கதை வடிவில் கூறும் உத்தி வெள்ளந்தியான பேச்சு நடையில் வசீகரிக்கிறது.கி.ரா வைப் பொறுத்தவரை நாவல்களில் கதை மட்டுமல்ல கதையில் நடமாடும் மனிதர்களும் ஏதோ அறிந்த ரொம்பத் தெரிந்த உறவுகளைப் போன்ற உணர்வை ஏற்படுத்திச் செல்வார்கள். அது இந்த நாவலுக்கும் பொருந்துகிறது .

அந்தமான் நாயக்கரின் அடிநாதம் நம்பிக்கை மோசமும் துரோகத்தின் வலியுமே .

நம்பிக்கை மோசத்தின் வெவ்வேறு வடிவங்களை இங்கே கிளைக்கதைகளிலும் கூட நாம் காணலாம் .நாவலை வாசித்து விட்டு நாம் நமக்குப் பிறர் செய்த துரோகங்களையும் நாம் பிறருக்குச் செய்த துரோகங்களையும் ஒருமுறையேனும் நேர்மையுடன் சிந்தனையில் ஓட்டிப் பார்க்கத் தக்க ஆழ்ந்த படைப்பு இது.

இனி கதைக்குப் போகலாம் ;

கதாபாத்திரங்கள் :-
 1. அந்தமான் நாயக்கர்
 2. பல்ராம் நாயக்கர் (கதையில் அழகிரி அந்தமான் ஆனபிறகு வந்து பல கிளைக் கதைகள் சொல்பவர்)
 3. ஆண்டியப்பன் அந்தமானின் பக்கத்து வீட்டுக்காரர்)
 4. பட்டா மணியம் நாயக்கர்(ஊர்ப் பெரியதனக்காரர்)
 5. பொம்பளே வண்டி நாயக்கர் என்ற புலிவாரு பொன்னையா நாயக்கர்
 6. பொண்டுகன் செட்டியார் (பட்டப் பெயர் தான் இவர் ஒரு கிழங்கு வியாபாரி நிஜப் பெயர் நாவலில் இல்லை)
 7. சங்கரப்பன் (இளைய தலைமுறைக்கல்லூரி மாணவன்)
 8. வெங்கிடம்மா (இளம் அழகிரியின் மானசீகக் காதலி)
 9. சொக்கய்யர்

  பேரம்மா (இளம் அழகிரியின் அம்மா)

"ஒரு குற்றமும் அறியாத விவசாயி ஒருத்தனை சுதந்திர இந்தியாவின் போலீஸ் அடித்தே
கொன்று போடும் அவலம் தான் இக்கதை. "

வெள்ளை அரசை எதிர்த்து நடந்த கோடிப் போராட்டத்தின் போது ஒரு கரிசல் கிராமத்தில் விளையாட்டுப் போல ஒரு இளைஞன் மூவர்ணக் கொடியை மரத்தில் ஏறி கட்டி விடுகிறான்,
மணியாச்சி ஜங்ஷனில் வாஞ்சிநாதன் வெள்ளைக்கார கலெக்டரை சுட்டுக் கொன்றதற்குப் பிறகு சுற்று வட்டார ஊர்களில் எந்த சாதாரணக் குற்றங்கள் நடந்தாலும் கொடூரமாக நடந்து கொள்ள ஆரம்பித்தது வெள்ளை அரசு.

கை ராட்டை சின்னம் பதித்த மூவர்ணக் கொடியை ஊர்க்கரை மரத்தின் உச்சியில் கொண்டு போய் ராவோடு ராவாய் விளையாட்டுப் போல கட்டி வைத்து விட்டு வந்து விடுகிறார் இளம் அழகிரி ,அந்தக் காலத்தில் அது சட்ட விரோதம் ,ஊர்ப்பெரியதனம் மணியம் நாயக்கர் அழகிரி தான் இதைச் செய்தான் என்பதை அறிந்து அழகிரியையே மரத்தில் ஏறி ஏற்றிய கொடியை இறக்கச் சொல்கிறார். அதற்கு அழகிரி ,

"ஏதோ கட்டிட்டேம் ,ஏத்துன கொடிய எப்பிடி எங்கையாலையே எரக்குறது ,இனிமே இப்பிடிச் செய்ய மாட்டேம். "

என்று நல்ல தனமாகவே மரியாதையோடு பதில் சொல்கிறார்,மணியம் கெத்தான ஆள் "ம்ம் ...என்ற செருமலோடு அவர் அழகிரியைப் போகச் சொல்லவே ஊர்க்காரர்கள் மணியம் மன்னித்து விட்டார் என்றே நினைக்கிறார்கள். ஆனால் மணியம் செருமியதற்கு அர்த்தம் இளவட்டமான அழகிரி ஜெயிலுக்குப் போய் அந்தமான் நாயக்கர் எனும் கிழவனாக திரும்பி வருவதில் முடிகிறது.

"வெள்ளைக்காரன் என்ன மணியம் நாயக்கரோட பாட்டனா ?அப்படி என்ன விசுவாசம் அவருக்கு?!"

சொல்லிச் சொல்லி பேசிப் பேசி ஆதங்கமும் ஆற்றாமையுமாக ஓய்ந்து போகிறார்கள் கரிசல் காட்டு சம்சாரிகள்.

மணியம் நாயக்கரின் வெள்ளைப் பாசத்துக்கும் அர்த்தம் இல்லாமல் இல்லை ,அரையணா சம்பளம் என்றாலும் அவர் அதை நேரடியாக இங்கிலாந்து மன்னர் ஐந்தாம் ஜார்ஜிடம் இருந்து அல்லவா பெற்றுக் கொண்டு இருந்தார் அப்போது, இன்னும் சொல்லப் போனால் அவரது வீட்டுப் பட்டா சாலையில் மன்னர் ஐந்தாம் ஜார்ஜ் ஒரு கையில் உலக உருண்டையோடும் மறுகையில் செங்கோலும் ஏந்திக் கொண்டு கோஹினூர் வைரம் பதித்த அழகிய கிரீடத்துடன் அளவான மீசையும் மிதமான தாடியுமாய் நீலக் கண்களோடு நிற்கும் பெரிய சைஸ் படம் சட்டமிடப்பட்டு வைக்கப் பட்டிருக்கும் அதைப் பார்த்தாலே பார்ப்போர் எவரும் உருகி விடுவார்கள்...மணியத்தை என்னவென்று சொல்ல!!!

சரி இனி அழகிரிக்கு வருவோம் அவர் தானே கதையின் நாயகர்.

வெள்ளைக் காரன் ஆண்ட காலத்திலேயே ஒரு ஜென்மம் அல்லது (ஆயூள்) 21 வருசம் நல்ல தனமாக இருந்தால் 18 வருசம் ...டங்கா முறித்து தப்பிக்கப் பார்த்ததால் ரெட்டை ஜென்மம் ஆக மொத்தம் 42 வருசம் தண்டனை அனுபவிக்கிறார் அழகிரி.

ஓட்டப் பிடாரம் சிதம்பரம் பிள்ளைக்கும் ரெட்டை ஜென்மம் தான் (வ.ஊ.சிதம்பரனார்) அவரென்ன கொலையா செஞ்சார் ?!அந்த தீர்ப்பை எதிர்த்து அன்றைக்கு தான் முதல் முதலாக "கடையடைப்பு" நடந்ததாம் திருநெல்வேலியிலே.கதையில் சொல்லப் படும் செய்தி இது.

"கசாகூளம்" இந்த வார்த்தை கி.ராவால் இரண்டு மூன்று இடங்களில் சொல்லப் படுகிறது இங்கே அர்த்தம் பிடிபடவில்லை.இப்படி கொடூரமான தண்டனை அளிப்பதற்கு காரணம் "இப்பிடிச் செஞ்சா தாம் சர்காரை எதுக்குறவங்களுக்கு ஒரு பயம் நாளைப் பின்ன இருக்கும்னுட்டு தாம்" என்பதே .

அழகிரி ஜெயிலுக்குப் போனது ஒரு கதை என்றால் அவர் ரெட்டை ஜென்மம் முடிந்து அந்தமான் நாயக்கராக திரும்பி வந்து விடுகிறார் . அங்கே மறுபடியும் பரபரப்பாக கதை ஆரம்பிக்கிறது.

திரும்பி வந்த அழகிரி நாயக்கரை வரவேற்க அவரது குடும்பத்தில் எவரும் மிச்சம் மீதியில்லை ,அவரது ஓட்டு வீடும் தூரத்து உறவுக்காரியான ஒரே ஒரு வயதான அத்தையும் மட்டுமே மீள்கிறார்கள்,வயிற்றுப் பாடு என்பது ஜெயிலுக்குப் போய் வந்தவனுக்கும் இருக்கும் தானே,

அழகிரி தரிசாய்ப் போன தன் நிலத்தை மறுபடி செம்மையாக்க முயல்கிறார்.அங்கிருந்து அந்தமான் நாயக்கராக தொடங்கும் அவரது பயணம் கதை முடிவில் எந்தக் கொடியால் ஜெயிலுக்குப் போனாரோ அந்தக் கொடி மண்ணில் வீழவும் அந்தமான் போலீசின் அராஜக வன்முறையால் விவசாயப் போராட்டத்தில் லத்தியடி பெற்று கண்களை ஒரேயடியாக மூடிக் கொள்வதில் முடிந்தே போகிறது முற்றிலுமாய் .

ரசமான பகுதிகள் :

பல்ராம் நாயக்கரோடு அந்தமான் தன் நிலத்தை சீர்திருத்த ஆரம்பிக்கிறார் என்று சொன்னேனில்லையா?....

கரிசல்காட்டு சம்சாரிக்கு முதல் எதிரி அருகு தான்,வெள்ளைக் காரனைப் போலத் தான் இந்த அருகும் சில இடங்களில் இடுப்பளவு ஆழம் கூட தோண்ட வேண்டியதிருக்கும் ,புஞ்சை முழுவதுமே புரட்டிப் போட்டது போலத் தான்,எத்தனை வேட்டையாடினாலும் பூமியில் எலிகள் இருந்து கொண்டே தானே இருக்கும்..அப்படித் தான் இந்த அருகும்,வெள்ளைக்காரனும்,

அருகெடுப்பது ஒரு நொரநாட்டியம் பிடித்த வேலை,கடப்பாரை தான் இருந்தது வெள்ளைக்காரன் வருவதற்கு முன்னால் ,அது இன்னும் சள்ளை பிடித்த வேலை ,வெள்ளைக்காரன் கொண்டு வந்த பல்க்கம்பி இருந்ததோ தப்பித்தார்கள் சம்சாரிகள்,

இப்படியாகப்பட்ட கஷ்டங்களோடு பல்ராம் நாயக்கரும் அந்தமான் நாயக்கரும் நிலத்தை குடைந்து கடைந்து சீர்திருத்துகையில் கஞ்சிக்கு என்று உணவு இடைவேளை ஒன்று வரக் கூடும் இல்லையா அந்நேரம் அவர்களது குடும்பம் ...இழப்புகள்...போன்ற பாடு பஞ்சங்களைப் பற்றியும் கொஞ்சம் பகிர்ந்து கொள்கிறார்கள்.அப்போது கி.ராவுக்கே உரிய பாணியில் கிளைக்கதைகள் சில சுவாரஸ்யமாகப் பிரிகின்றன .

அந்தக்கதைகள் மிகரசமானவை ,யோசிக்க வைக்கும் பகடிகளும் கூடத்தான்.
அந்த வரிசையில் இந்நாவலில் ;


விரலக்கா கதை
முட்டைக் கோழி கதை
பொம்பளே வண்டி நாயக்கர் கதை
எட்டு இட்லி பொண்டுகன் செட்டியார் கதை
பல்ராம் நாயக்கர் சொல்வதாக வரும் ரயில் வந்த கதை...விருந்தாடியைப் பிடித்து கட்டிப் போட்ட கதை
இப்படிச் சில கதைகள் . இதில் எல்லாக் கதைகளிலுமே கிணற்றுக்குள் மிதக்கும் சூரியனாய் மறைபொருளாய்ப் பளிச்சிடுவது நம்பிக்கை மோசங்களே.

நூல் : அந்தமான் நாயக்கர்
ஆசிரியர் :கி.ராஜநாராயணன்.
விலை : ரூ/100
பதிப்பகம் :அன்னம் வெளியீடு

Wednesday, January 13, 2010

பஷீரின் "பால்யகால சகி"
பஷீரின் "பால்ய கால சகி"

இந்த சிறிய நாவல் ஏற்படுத்தும் பெரிய அதிர்வுகளுக்கு சத்தம் என்னவோ நியூட்ரல் தான்.

பேச்சை விட பலசமயங்களில் மௌனத்திற்கு கிடைக்கும் மரியாதை அலாதியானது.

பால்யகால சகி ....

கொஞ்சம் பெரிய ஒன்னு (மஜீது )
ராஜகுமாரி (சுகறா)

இவர்கள் இருவரைப் பற்றிய கதை அல்ல இது.வாழ்வின் நிர்தாட்சண்யம் குறித்து வாசிப்பவர்களுக்கு சந்தேகம் எழுப்பும் கதை.


ஒன்னும் ஒன்னும் சேர்ந்தா எவ்வளவு ?கணக்கு வாத்தியார் கேள்வி கேட்க மஜீது பதில் சொல்கிறான் "கொஞ்சம் பெரிய ஒன்னு" வாசிப்பவர்களை அவரவர் பால்ய காலத்து வகுப்பறை நாட்களை நினைவிலோட்டிப் பார்க்க வைக்கும் அழகான ரசனை மிக்க வரிகள்.


எஸ்ராவின் வாசகபர்வத்தில் தான் முதன் முதலாக பஷீரைப் பற்றி அறிந்தேன்,அங்கே எஸ்ரா "பால்யகால சகி" பற்றி வெகுவாக சிலாகித்திருப்பார்.நாவலின் தாக்கம் அத்தகையதே என்பதை இப்போது உணர முடிகிறது .பஷீர் ஒரு உன்னத படைப்பாளி ,இரக்கமற்ற படைப்பாளியும் கூட,பஷீரை சொல்வதைக் காட்டிலும் நாம் வாழ்ந்து கொண்டிருக்கும் வாழ்க்கையை அப்படிச் சொல்வதே பொருத்தமாயிருக்கக் கூடும்.சிலருக்கு பலவேளைகளில் வாழ்வின் இரக்கமற்ற தன்மை விதி என்ற பெயரில் புரியாமலே கூட போய்விடக் கூடும்.மேலே ஒன்றும் சொல்வதற்கில்லை .


மஜீதின் வீட்டருகே இருக்கும் மாமரத்திலிருந்து பழுத்து தானே உதிரும் மாம்பழங்களை யார் எடுத்து உண்பது என்பதில் தொடங்கும் சண்டை பிறகு சில நாட்களில் மஜீது ,சுகறாவை நண்பர்களாக்குகிறது,சலனமற்ற நீரோடை போல நகரும் பால்ய நட்பு பின்னொரு காலத்தில் காதலாகி பிறகது மணம் பரப்பும் முன்னே மஜீது தன் வாப்பாவிடம் கோபித்துக் கொண்டு கண்காணாமல் வீட்டை விட்டு ஓடிப் போகிறான் .

தொடர்பே அற்றுப் போன சில ஆண்டுகளின் பின் அவன் ஊருக்கு வரும் போது சுகறாவுக்கு நிக்காஹ் முடிந்து விடுகிறது,சுகறா அவனுக்காக காத்திருக்கவில்லை. அவள் மட்டுமா எதிர்காலமும் கூடத் தான்.

பணக்கார முஸ்லீம் குடும்பத்தில் ஒற்றை மகனாகப் பிறந்தும் மஜீதின் விதி அவனை பின்னாட்களில் ஓட்டலில் எச்சில் பாத்திரம் கழுவிக் கவிழ்த்தும் கடை நிலை வேலைக்காரனாக்குகிறது. சுகறா என்ன ஆகிறாள்? மஜீதின் ராஜகுமாரி பிச்சைக்காரி போல நான்கு நாட்கள் பட்டினிக் கோலத்தில் காசுக்காக கட்டியவனால் விரட்டப் பட்டு தாய் வீட்டுக்கு வருகிறாள்.

இப்படிக் கதை சுருக்கம் சொல்வதற்கு ஏற்ற கதையெல்லாம் இல்லை இது.

வாசித்து வாசித்து உள்ளுக்குள் உணர வேண்டிய பல நிஜங்கள் இதில் உண்டு.
இந்த நாவலை வாசிக்கையில் என் நினைவில் வந்து போன திரைப்படங்கள் இரண்டு ஒன்று பொன்வண்ணனின் "நதி கரையில் (முதலில் ஜமீலா என்று பெயரிடப் பட்டு பிறகு நதி கரையில் என்று வெளிவந்தது)

மற்றொன்று லோகித தாசின் "பாடம் ஒன்னு ஒரு விலாபம்" திரைப்படம்

முன்னுரையில் யூசுப் சொன்னவையாக சில வரிகள் "இந்தக் கதை முஸ்லீம் குடும்பத்தில் நிகழ்வதை ஒரு முஸ்லீம் எழுதுவதை ஞாபகத்தில் இருத்திக் கொண்டு வாசிக்க வேண்டும் என்பதைப் போல வருகின்றன,அதனாலோ என்னவோ இந்தத் திரைப் படங்களும் ஞாபகத்தில் நிழலாடுகின்றன. சுகறாவின் வாப்பா சொல்வார் ஓரிடத்தில் "உண்மையான முஸ்லீம்கள் எல்லாம் வெளியே நகரங்களில் இருக்கிறார்கள்,இங்கிருப்பவர்கள் எல்லாம் வெறும் மூடநம்பிக்கையாளர்கள்" இவர்கள் நம்புவது இஸ்லாத்தை அல்ல சடங்குகளை மட்டுமே என்பதாய்...அதனாலும் கூட அந்தப் படங்கள் ஞாபகம் வருகின்றனவோ என்னவோ!

என்ன தான் குளம் படு சுத்தமாகப் பளிங்கு தண்ணீருடன் மேலே காட்சி அளித்தாலும் உள்ளிருக்கும் அடர்ந்த பாசி போல பால்யமும் அதன் நினைவுகளும் எப்போதும் பசுமையானவையே.அங்கே கசப்புகள் இருக்கலாம்,இனிப்புகளும் இருக்கலாம் அதை எல்லாம் புறம் தள்ளக் கூடிய வயது அது ஒன்று மட்டுமே அல்லவோ!

சுகறா மரித்துப் போனால் என்ன? மஜீது ஓட்டலில் தட்டுக் கழுவினால் என்ன? மனோராஜ்யத்தில் மாளிகை கட்டக் கூடிய மனதுக்காரன் அவன். அவனது ராஜகுமாரி அவன் மனக்கோட்டை மாளிகையில் சௌக்கியமாய் எப்போதும் வாழ்ந்திருப்பாள்.

இதை மட்டுமே சொல்ல முடிகிறது என்னால்.


நூல் பால்யகால சகி
ஆசிரியர் பஷீர்
மூலத்திலிருந்து தமிழுக்கு மொழிபெயர்த்தவர் குளச்சல்.மு.யூசுப்
வெளியீடு காலச்சுவடு
விலை 75 ரூபாய்
நோட்:
புத்தகத்தின் புகைப்படம் தேடினால் கிடைத்தது பஷீரின் படம் தான் .கூகுள் வழியாக இப்படம் யாழிசை தளத்திலிருந்து பெறப் பட்டது.நன்றி யாழிசை .

Monday, January 11, 2010

லா.ச.ரா வின் "அபிதா"
அபிதாவை எப்போதிலிருந்து எனக்குத் தெரியும்?

மூன்று வருடங்களுக்கு முன்பு விகடனில் வண்ணதாசன் அகம்..புறம் எழுதிக் கொண்டிருக்கையில் தவற விடாது வாசித்துக் கொண்டிருந்தேன்,அன்றைய வாரங்களில் ஓர் நாள் இப்போதைப் போலவே விடுமுறைக்காக ஊருக்குப் பிரயாணப் பட்ட நாளொன்றின் இரவில் தான் பெயரளவில் அவள் அறிமுகமானாள்.கதை தெரியாது ...பெயர் மட்டுமே தெரியும் என்றிருந்த நிலை.

பிறகும் அபிதாவைப் பற்றி பலர் சிலாகித்துச் சொல்லக் கேட்க நேர்ந்தது ,சென்ற புத்தகத் திருவிழாவில் அபிதாவை நான் ஏன் தேடவில்லை என்ற கேள்வி இந்த வருடம் அங்கு செல்லும் வரை எங்கேனும் யார் மூலமாகவோ அவள் பெயரை கேட்கவோ பார்க்கவோ நேர்கையில் எல்லாம் அவ்வப்போது உள்ளுக்குள் நெருடிக் கொண்டே இருந்தது .

சில தினங்களுக்கு முன்பு டாக்டர்.ருத்ரனின் தளத்திலும் அபிதாவைக் கண்ட பின்பு "அபிதா" அத்தனை அதிசயமானவளா , எப்படி இத்தனை பேரை வசீகரித்துக் கொள்ள முடிந்தது அவளால் எனும் ஆச்சர்யம் நேற்றிரவில் அவளை வாசித்து அறிந்தபின் தீர்ந்து விட்டாலும் இப்போது வேறொரு எண்ணம் உள்ளே மூளை செல்களில் புரண்டு கொண்டிருக்கிறது.

லா.ச.ரா அபிதாவைக் கொன்றிருக்க வேண்டாம் எனும் ஆதங்கம் தான் அது.

சாவித்திரியை நினைக்கையில் மனம் துக்கத்தில் ஆழ்ந்து "இவளுக்கு என்ன தலை எழுத்து இப்படி ஒரு புருஷனை அடைய!!!" என்ற கேள்வி எழும்பத் தவறவில்லை. கணவனோடு வார்த்தைக்கு வார்த்தை எதிர்த்து நின்றாலும் அவனது செயல்பாடுகளைப் பற்றியோ உள்ளிருக்கும் பொருந்தாத எண்ணங்களைப் பற்றியோ அவளேனும் சுட்டிக் காட்டினாலும் கூட கேட்கக் கூடியவனைப் போல அம்பியின் பாத்திரப் படைப்பு இல்லை.

கரடி மலையில் இருந்து ரயிலுக்கு டிக்கட் எடுக்கக் கூட கதியற்றவனாய் ஊரை விட்டு ஓடிப் போன அம்பி பிறகு பல வருடங்கள் கழித்து தன் இளமை கழிந்த பின் குழந்தை அற்றுப் போன வெற்று வாழ்க்கை போரடித்துப் போகவே மனைவி சாவித்திரியை அழைத்துக் கொண்டு செல்வாக்காய் பணம் படைத்தவனாய் கரடி மலைக்கு திரும்ப வருகிறான்.

கரடி மலைக்கு அவன் வரக் காரணம் சக்கு (சகுந்தலா),அம்பியின் பால்ய கால சகி,இதை அவன் கரடிமலையில் இருந்த காலம் வரை அவன் அவளிடமோ அன்றியும் அவள் அவனிடமோ பிரியத்தை இன்னோரன்ன சொற்களால் காட்டிக் கொண்டதாகக் காணோம். ஆனாலும் அவனது விதி அவளோடே பிணைக்கப் பட்டுளதைப் போல அவனுக்கொரு பிரமை .

அம்பிக்கு தாழ்வுணர்ச்சி. பிறந்தது முதலே உறவுகளை அண்டி வாழ்ந்து குத்தல் பேச்சில் வறண்டு இருண்டு போன பால்யத்தில் சக்குவைக் கண்டதும் பாலாற்றில் நீந்திக் குளித்த ஆசுவாசம் அவனுக்கு,அம்மாவும் அகாலமாய் இறந்து விட சக்குவின் வீடே அவனுக்கு சகலமும் என்று ஆக்கிக் கொள்ளப் பார்த்தவனை விதி விடவில்லை போலும்.

ஆதரவளித்த மாமன் அம்பியையும் சக்குவையும் இணைத்து திண்ணையில் வம்பு பேச அவரை இழுத்துத் தள்ளி வயிற்றோடு கால் பதிய தரையோடு அழுத்தி விட்டு அன்றைக்கு கரடி மலையை விட்டு ஓடியவன் தான் மறுபடி இன்று அவன் வரும் போது அபிதா தான் வரவேற்கிறாள்.

அடக்கி வைக்கப் பட்ட பிரியமும் காதலும் இடம் தெரியாமல் மலர்ந்து இம்சைக்குள்ளாக்குவதைப் போல அம்பி அபிதாவை சக்குவென்றே நம்ப முயற்சிக்கிறான். கதையோட்டம் அம்பியின் மனவோட்டம் நம்மையும் அப்படித் தான் நம்ப வைக்க பிரயத்தனப் படுகிறது. ஆனாலும் பொருந்தவே இல்லை, ஒரு மனைவியாக என்னால் சாவித்திரியின் மனநிலையில் இருந்தே யோசிக்க முடிகிறது.

மகளைப் போல எண்ணவேண்டிய ஒரு பெண்ணை இங்கவன் தான் இழந்து போன சுவர்க்கம் மீண்டு வந்ததைப் போல நம்பிக் கொண்டு அவளைப் பற்றி காதல் கசிந்து உருகுவதாக எண்ணுவது பொருத்தமாயில்லை,ஆயினும் இது நிஜ வாழ்வில் நடக்காத சங்கதி இல்லை என்பதையும் நம்பத் தான் வேண்டும்.

வாழ்வில் திசை மாறிப் பயணித்ததில் அம்பிக்கு என்னவோ நஷ்டம் இல்லை தான்,பாவம் சக்கு அழுது அழுதே உயிரை விட்டு விடுகிறாள் இக்கதையில் ,எந்த கரடி மலை திருவேலநாதர் கோயிலில் அம்பியை தினம் தினம் காண நேர்ந்ததோ அங்கேயே அவன் ஊரை விட்டு ஓடிய பின் சக்கு தன உயிரையும் விடுகிறாள். சும்மா இல்லை ஒரு அப்பாவிக் கணவனையும் அறியாத மகளான அபிதாவையும் அனாதைகளாக இவ்வுலகில் விட்டு விட்டு அம்பியின் பொருட்டு நிறைவேறாத அவள் ஆசையின் பொருட்டு உயிரை விடுகிறாள்.

சக்குவின் மகள் என்றால் அம்பி அவளை தானும் தன் மகள் போலத் தானே எண்ணியிருக்க வேண்டும் என்ற கேள்வி வாசிக்கும் போது எழாமல் இல்லை (போதாக் குறைக்கு அவனுக்கும் சாவித்திரிக்கும் பிள்ளையில்லாக் குறை வேறு!?),ஆனால் அது நாடகத் தனம் என்றாகி விடுகிறதே,அபிதா சக்குவின் மகளானதில் பிழை இல்லை,சக்குவாகவே தான் விட்டுப் போன சக்குவாகவே முதல் பார்வையிலேயே அம்பியின் மனதில் பதிந்து போனதால் அவனைச் சொல்லியும் குற்றமில்லை.

வாழ்கை எப்படியெல்லாம் மனித வாழ்வைப் புரட்டிப் போடுகின்றது என்பதற்கு அபிதா ஒரு உதாரணம். அவளுக்கு இன்பமான நினைவுகள் இல்லாமல் இல்லை அப்பாவின் மறுதாரமாய் வந்த சித்தியின் தம்பி அவளுக்கொரு பிரியமான கணவனாகியிருக்கக் கூடும்,எங்கே அதற்குள் தான் அம்மாவைப் போலவே இவளும் இறந்து விடுகிறாளே.

எனக்கென்னவோ அம்பியின் அழுத்தமான பொறாமையும் அபிதா தனக்கே உரியவள் எனும் அசைக்க முடியாத வன்மமும் தான் அபிதாவை கரடி மலை உடைந்த சிற்பத்தில் தள்ளி கொன்று விட்டதோ என்ற எண்ணமே இன்னும் கூட உள்ளுக்குள் குளத்தில் தவறி விழுந்து முழுகியும் முழுகாமலும் ஒளியைச் சிதறடித்துக் கொண்டிருக்கும் வைர மோதிரம் போல ஆழ்மனதில் மின்னி மின்னி மறைந்து கொண்டிருக்கிறது.

அபிதாவை லா.ச.ரா கொன்றிருக்கக் கூடாது. ஆனால் அவள் இறந்திருக்காவிட்டால் கதை இத்தனை பேரால் பேசப்பட்டு சிலாகிக்கப் படவும் வாய்ப்பில்லை.பத்மினி என்றொரு சினேகிதி முன்னெப்போதோ இருந்தாள் எனக்கு , அபிதாவும் அவளும் வேறு வேறல்ல, அபிதா இறந்து விட்டாள்,அவள் இன்னும் இருக்கிறாள் என்பதைத் தவிர பெரிய முரண்கள் இல்லை.


வாழ்வியல் மனச்சிக்கல்களை அக்கு வேறு ஆணி வேறாக கழட்டிப் பார்த்து கதை எழுதினால் அந்தக் கதைகள் பெரும்பாலும் தி.ஜா வின் அம்மாவந்தாளாகவோ ,லா.சா.ரா வின் அபிதாவாகவோ இருக்கக் கூடும். வாசிப்பவர்கள் என்ன வேண்டுமானாலும் நினைத்துக்கொள்ளுங்கள் இது விஷயம் இப்படித் தான் எனச் சொல்லியும் சொல்லாமலும் கதையை முடிக்கும் லாவகம் சபாஷ் வரிசை.

நூல்- அபிதா
ஆசிரியர் - லா.ச.ராமாமிர்தம்
காலச் சுவடு கிளாசிக் வரிசை வெளியீடு
விலை- ரூ 80
நோட்:
அபிதாவை நான் வாசித்தது காலச்சுவடு வெளியீட்டில் தான்,ஆனால் படம் கூகுளில் தேடுகையில் nhm வெளியீடு தான் கிடைத்தது.

Thursday, January 7, 2010

2012 இல் உலகம் அழியப் போகிறதாமே!!!
இப்படித்தான் எண்பதாம் வருடத்திலும் ஒரு புரளி கிளம்பி அடங்கியதாம்,அன்றைக்கு ஸ்கைலாப் , இன்றைக்கு நிபுரு, இந்த நிபுரு என்ற விண் கோளம் 2012 டிசம்பரில் பூமியைத் தாக்கும் என்பது சில புனைகதை எழுத்தாளர்கள் சொல்கிறார்களாம்.

கிட்டத் தட்ட 400கோடி ஆண்டுகளாக பூமி இருந்து வரும் சூழ்நிலையில் இன்னும் கூட 300 கோடி ஆண்டுகளுக்கு பூமிக்கு எந்த வித சிக்கலும் வரப் போவதில்லை என்று வானியல் அறிஞர்கள் தெரிவித்துள்ள நிலையில் இப்படிப் பட்ட கட்டுக் கதைகள் பொதுமக்களிடையே பரவிக் கொண்டிருப்பதை வெறும் வதந்தி என்றே நம்ப வேண்டியிருக்கிறது.

பூமிக்கு வெளியில் இருந்து பெரிய விண்கல் ஏதாவது பூமியைத் தாக்கக் கூடுமா என்பதை முன்கூட்டியே அறிவதற்காக நாஸா விண்வெளி மையம் தொடர் ஆராய்ச்சி நடத்தி வருகிறதாம் ,அப்படி எந்தத் தாக்குதலும் நேரப் போவதில்லை என்பதே அந்த ஆராய்ச்சியின் முடிவாம்.

அப்படியானால் 2012 க்குப் பிறகு மட்டுமல்ல அதற்குப் பிறகும் பூமி ஒன்றும் அழியப்போவதில்லை

கோடிக்கணக்கான கோள்கள் இருந்தாலும் கூட நாம் வாழும் பூமியில் தான் மனித இனம் வாழத் தகுந்த சூழல் நிலவுகிறது,மலைக்காடுகளை அழிப்பதனாலும் வாகனங்கள் மூலம் வெளியேறும் கார்பன் புகை அதிகமாவதாலும் பூமியின் வெப்பம் அதிகமாகிக் கொண்டே போகிறது. இதனால் பனிமலைகள் உருகுகின்றன,கடல் நீர் மட்டம் உயர்கிறது .சுனாமி போன்ற இயற்கை சீற்றங்கள் அதிகரிக்கின்றன.

இன்னொரு பக்கம் உலக நாடுகளுக்கு இடையே நிலவும் பனிப்போர்கள் உச்சமடைந்தால் மூன்றாம் உலகப் போர் வருவதற்கான சூழலும் நிலவுகிறது. நாட்டு அதிபர்களும் அதிகாரம் படைத்த அதிகாரிகளும் ஒரு பக்கம் கை குலுக்கிக் கொண்டு செய்தி ஊடகங்களுக்கு போஸ் கொடுத்து விட்டு மறுபக்கம் ஒருவருக்கொருவர் குழி வெட்டும் வேளையில் படு ஜரூராக இருக்கிறார்கள். இதற்குப் பெயர் தான் ராஜதந்திரமாம்!!!

ஒரு பக்கம் மக்கள் கூட்டம் கூட்டமாக கொன்று குவிக்கப் பட்டுக் கொண்டிருக்கும் போதே இன்னொரு பக்கம் இந்திய விருந்தினராக வரும் ஜப்பான் பிரதமர் தமக்கு அளிக்கப் படும் இந்திய விருந்தில் சிறப்பு விருந்தினராக தீபிகா படுகோனை டிக் செய்கிறார். (ரொம்பத்தான் தேவை!!!) ரேப் கேம் என்று புது புது சீரழிவு விளையாட்டுக்களை கண்டு பிடித்துத் தள்ளிக் கொண்டிருக்கும் நாடு தானே அது.தொழில் நுட்பம் வளர்ந்து உலகத்துக்கே எடுத்துக் காட்டாக விளங்கிக் கொண்டிருக்கும் ஜப்பானிலிருந்து தான் இப்படி அச்சுறுத்தும் விளையாட்டுக்களும் அறிமுகமாகின்றன.அதனால் அந்நாட்டின் அதிபரை சொல்வதற்கு என்ன இருக்கிறது?

எதையோ சொல்ல வந்து விஷயம் எங்கேயோ போய்க் கொண்டு இருக்கிறது பாருங்கள்! ம்...இதனாலெல்லாம் நாம் அறிந்து கொள்ள வேண்டிய விஷயம் என்னவென்றால் பூமிக்கு வெளியில் இருந்து ஏதாவது வந்து பூமியைத் தாக்கி விடுமோ என்ற அச்சம் நமக்குத் தேவை இல்லை , பூமிக்கு உள்ளேயே அதன் சுற்றுச் சூழலை மனிதர்களாகியா நாம் சிதைத்துக் கொண்டிருக்கும் வேலையை நிறுத்தினாலே போதும்,பூமி அதுபாட்டுக்கு நன்றாகவே இருக்கும்.

ஆழ்துளைக் கிணறுகள் மூலம் சல்லடையாகச் சலித்தாகி விட்டது பூமியை,காடுகளை அளித்து பிளாட் போட்டு விற்பது என்பது இப்போதெல்லாம் சர்வ சாதாரணம்.எல்லோருக்குமே படித்து வைட் காலர் வேலையில் அமரும் ஆசை ,பிறகு விவசாயமே அற்றுப் போகையில் உண்பதற்கு என்ன செய்யலாம்?கிரெடிட் கார்டுகளையும் பிளாஸ்டிக் பைகளையும் தான் தின்ன வேண்டும்,இருக்கும் சூழலில் யாரவது விஞ்ஞானிகள் ப்ளாஸ்டிக்கை ஜீரணிக்க ஏதேனும் மருந்து கண்டுபிடித்தால் தான் கவலை தீரும்.

ஓசோனில் ஓட்டை,பிளாஸ்டிக் கழிவுகளால் மண்ணின் நீர் உறுஞ்சும் தன்மைக் குறைபடுதல் அதனால் மண் சத்து இழந்து போதல்,காடுகளை அழிப்பதால் மரங்களற்ற நிலையில் மண்ணின் பிடிமானமும் இறுக்கமும் வெகுவாகக் குறைந்து நிலச் சரிவுகள் ஏற்படுதல்(சமீபத்திய ஊட்டி பேரழிவுகள்) ,செயற்கை உரங்களால் ஸ்லோ பாய்சன் போல விசத்தை விலைக்கு வாங்கி உண்ணும் மனிதர்களாகிய நாம் நமது சுற்றுச் சூழலை கொஞ்சம் கவனித்தாலே போதும் பூமி அது பாட்டுக்கு சுற்றிக் கொண்டிருக்கும்.

சும்மா பொழுது போக்காக மரம் நடலாம்.(மரத்த வச்சவன் தண்ணி ஊத்துவான் SO மரம் வளர்ந்துரும் :))))

வீட்டுத் தோட்டம் போடலாம் செயற்கை உரங்களைத் தவிர்த்து இயற்கை உரங்களை நாமே தயாரித்து (கடைகளில் விலை கொடுத்து காய்கறி வாங்கி உண்பதை விட நாமே விளைவித்து உண்டால் அதில் கிடைக்கும் ஆனந்தம் சொல்லில் விளக்கி விட முடியாது).

புகை கக்கும் வாகனங்களை விட்டு விட்டு எல்லாரும் சைக்கிள் விடலாம். :))))

மாட்டு வண்டி கூட பெஸ்ட் தான். அதனால பூமியோட சுற்றுச் சூழலுக்கு எந்த அபாயமும் இல்லை.(கண்ணு படப் போகுதையா சின்னக் கவுண்டரே...ரேஞ்சுக்கு கற்பனை விரியுமே . :)))

எது எப்படியோ எப்படியாச்சும் உள்ளிருக்கும் எதிரிகளிடமிருந்து பூமியைக் காப்பாற்றப் பார்ப்போம் .வெளியில் இருந்து தாக்க வரும் எதிரிகளை அப்புறம் பார்க்கலாம். சரி தானுங்ளே!!!

Wednesday, January 6, 2010

மணலும்...கல்லும் (சிறுவர்களுக்கான கதைகள் 1)

இரண்டு நண்பர்கள் பாலைவனத்தின் நடுவே நடந்து போய்க் கொண்டு இருந்தார்களாம். பயணத்தின் இடையில் சிறிது நேரத்தில் அந்த இரண்டு நண்பர்களுக்கிடையே எதையோ குறித்து விவாதம் எழுந்தது,விவாதத்தின் முடிவில் ஒரு நண்பன் கோப மிகுதியில் மற்றவனின் கன்னத்தில் அறைந்து விடுகிறான்.அறை வாங்கிய நண்பன் அதைப் பற்றி ஒன்றும் சொல்லாமல் பாலைவன மணலில் இப்படி எழுதினானாம்.
"இன்று என்னுடைய சிறந்த நண்பன் என் கன்னத்தில் அறைந்து விட்டான்"
பிறகும் அவர்களது பயணம் தொடர்ந்தது,குளிப்பதற்காக ஓரிடத்தில் சிறிது நேரம் தங்க நினைக்கையில் புதைமணலில் சிக்கி அதே அறை வாங்கிய நண்பன் உள்ளே மூழ்கத் தொடங்க அடித்த நண்பன் அடி வாங்கியவனை புதை மணலில் இருந்து கஷ்டப் பட்டு காப்பாற்றி விடுகிறான்.
இப்போதும் காப்பாற்றப் பட்ட நண்பன்எதுவும் சொல்லாமல் ஒரு நீளமான கல்லை எடுத்து அதில் கீழ்க்காணும் வாக்கியத்தைப் பொறித்து வைத்தானாம்.
"இன்று என்னுடைய சிறந்த நண்பன் என் உயிரைக் காப்பாற்றினான் "
என்று.
முதல் தடவை அடித்து விட்டு இப்போது காப்பாற்றிய அந்த நண்பனுக்கு மிகவும் குழப்பமாகி விட்டது.

என்ன இவன் எதற்கும் அலட்டிக் கொள்ளாமல் எதையாவது எழுதி வைத்துக் கொண்டே இருக்கிறானே என்று. அதிலும் முன்பு மணலில் எழுதினான்,இப்போது கல்லில் பொறித்து வைக்கிறானே என்று வேறு சந்தேகம் குடைய.
அதை அவனிடமே ஏன் இப்படிச் செய்கிறாய்? என்று கேட்கிறான்.

அதற்கு அந்த நண்பன் அளித்த பதில்.

நம் காயங்களை நாம் மணலில் எழுதவேண்டும் அப்போது தான் மன்னிப்பு எனும் காற்று அடிக்கையில் அவை கலைந்து மறையும்,அதே சமயம் நமது லாபங்களை நாம் பெற்ற உதவிகளை நான் கல்லில் தான் பொறித்து வைக்க வேண்டும்,எந்தக் காற்றும் வந்து கலைத்து விடாமல் இருக்க. இதுவே இக்கதையின் நீதி.

நோட்:
பாப்புவுக்கு ஸ்டோரி டெல்லிங் காம்பெடிசனுக்கு கதை தேடும் போது கிடைச்ச சிம்பிள் கதைங்க இது.நல்ல இருக்கு இல்ல!!!

ரமணிசந்திரனும் பஞ்சவன்மாதேவியும்( 2 கேள்விகள் )
கேள்வி நம்பர் 1 :

பஞ்சவன் மாதேவி யார் ?

அவள் ராஜராஜனின் மனைவியா ?இல்லை அவரது மகன் ராஜேந்திரனின் மனைவியா ? பொன்னியின் செல்வனில் பஞ்சவன் மாதேவி இல்லை. உடையாரில் ராஜராஜனின் மனைவி என்றே வாசித்தேன். வரலாற்றுச் சான்றுகளோடு எழுதப் பட்ட ஒரு கட்டுரையில் பஞ்சவன் மாதேவிக்கென்று பள்ளிப்படை கோயில் பழையாறையில் இருப்பதாக படித்த ஞாபகமும் உண்டு அதை எழுப்பியது ராஜேந்திரன் என்றும் தன சிற்றன்னைக்காக அவன் எழுப்பினான் என்றும் கண்டிருந்தேன்.

இப்போது கேள்வி என்னவென்றால் "உளியின் ஓசை திரைப் படத்தில் பஞ்சவன் மாதேவி ராஜேந்திரனின் மனைவியாக காட்டப் படுகிறார். படம் வரலாற்றுப் படங்களுக்கு வந்த கேடு என்பதை விட்டுத் தள்ளி விடலாம்,என்னவோ நாடகத்தனத்துடன் அபத்தமாகத் தோன்றியது(நிஜ நாடகங்களை நான் குறை சொல்லவரவில்லை,நாடகம் வேறு திரைப் படம் வேறு இல்லையா?அதற்கு பேசாமல் தென்பாண்டி சிங்கம் போல இதையும் நாடகமாகவே எடுத்து விட்டுப் போயிருக்கலாம்!!!) .அதல்ல விஷயம் அத்திரைப்படத்தின் சிறந்த உரையாடல் ஆசிரியருக்கான விருது முதல்வர் கலைஞர் கருணாநிதிக்கு வழங்கப் பட்டதை டி.வியில் பார்த்ததால் இப்போதாவது இந்த கேள்விக்கான விடையைத் தெரிந்து கொண்டால் என்ன ?எனும் வெட்டி வேலை தான் இது. யாருக்காவது தெரிஞ்சா வரலாற்று ஆதாரத்தோட சொல்லுங்கப்பா .
கேள்வி நம்பர் 2 :

ரமணிச்சந்திரன் எழுத்து மலம் என்று விமர்சிக்கப் பட்டால் அவரது வாசகிகளுக்கு கோபம் வருவதில்லையே ஏன்?

நான் ரமணி சந்திரனை வாசித்திருக்கிறேன்... இனியும் வாசிப்பேன் என்பதால் இந்தக் கேள்வி வந்தது.

இதுவே சாரு.ஜெயமோகன் என்றால் வரிந்து கட்டிக் கொண்டு இலக்கியச் சண்டைகள் போட்டுக் கொள்கிறார்கள் (கொல்கிறார்கள்)

அதென்ன சாருவிலிருந்து நண்பர் அதுசரி வரையிலும் ரமணிசந்திரன் என்றால் அத்தனை இளப்பமா?
பெண்களிடையே பிரபலமான எழுத்தாளர் ,எழுதியதையே திரும்பத் திரும்ப எழுதுபவர்.அரைத்த மாவையே அரைப்பவர் etc ...etc . ம் ...வாசித்தவரை எனக்கொன்றும் சாரு சொன்னதைப் போல மலம் போல தெரியவில்லை அவரது எழுத்து. பொதுவான பெண்களின் எதிர்பார்ப்புகளுக்கு ஏற்ப வணிகமயமாக அவர் எழுதுவதை இத்தனை மோசமாக விமர்சிக்க என்ன நிர்பந்தமோ இவர்களுக்கு?!
காஞ்சனா ஜெயதிலகர் ரமணிசந்திரனின் சாயலில் ஆனால் கூடுதல் துறை சார்ந்த தகவல்களோடு எழுதுவதால் அவர் மீது விமர்சனக் கத்தி பாயவில்லை போலும்!

வாழ்கை என்பது வெறும் தீவிர இலக்கியத்தை மட்டுமே வாசிப்பது அல்ல,அன்பே வா படம் அடையாத வெற்றியா? விஜயின் பிரியமானவளே ...சிவாஜியின் புதிய பறவை...இவையெல்லாம் வெற்றிப் படங்களே, அந்தப் படங்களை ரசிப்பவர்களும் மனிதர்கள் தான்,சுப்பிரமணிய புரத்தை ரசிப்பவர்கள் பிரியமானவளே படத்தையும் ரசிப்பார்கள் தான் .ரசனை என்பது மனம் சார்ந்தது,ஒரு நாவல் என்பது மக்களின் வாழ்க்கை என்றால் ரமணி சந்திரன் எழுதுவதும் மக்களின் வாழ்க்கையை தான். ஒரு கணவன் தன் மனைவி எப்படி இருக்க வேண்டும் என்று விரும்புகிறானோ ஒரு மனைவி தன் கணவன் எப்படி தன்னை ஆராதிக்க வேண்டும் என விரும்புகிறாளோ அதைத் தான் அந்தம்மா எழுதுகிறார்கள். இதை இத்தனை கடுமையான பதத்தில் விமர்சிப்பது என் வரையில் கண்டனத்திற்குரியதே,குறை நிறைகள் இல்லாத இடங்களே இல்லை,அப்படிப் பார்த்ததால் ரமணி சந்திரன் படித்து யாரும் வாழ்வைக் கெடுத்துக் கொண்டதாக செய்தித் தாட்களில் பார்த்த ஞாபகம் இல்லை.)

நாவல்கள் ...தீவிர இலக்கியம் என்பதெல்லாம் சரி தான் உண்மை வாழ்க்கை அதை விட்டு வெகு தூரத்திற்கு அப்பால் இருக்கிறது,எழுதுபவர்களும் சரி படிப்பவர்களும் சரி இதை கொஞ்சம் புரிந்து கொண்டால் தேவலாம்.

சிலர் நினைத்துக் கொள்ளக் கூடும் அடடா. ரமணிச்சந்திரன் எழுத்தை இப்படிச் சொல்லி விட்டார்களே இனி அதை வாசிப்பதை ரகசியமாகத் தான் செய்ய வேண்டும்,இல்லா விட்டால் நம்மை இலக்கியவாதி என்று ஒத்துக் கொள்ள மாட்டார்களே என்று !!! உலகம் இப்படியானதே!!!

வற்புறுத்தல்கள் இல்லாத எல்லா எழுத்தும் என் வரையில் வாசிக்கத் தக்கதே.
எனக்குப் பிடித்த எழுத்தாளர்கள் :
ஆரம்பம் முதலாய் வரிசைப் படுத்தலாம் ..வாண்டு மாமா (அஞ்சாம் கிளாஸ்ல )...தமிழ் வாணன் (சங்கர்லால்) எட்டாங்கிளாஸ்ல) சிவசங்கரி ..அனுராதாரமணன்...( ஒன்பதாம் கிளாஸ்ல இருந்து) ராஜேஷ் குமார்(விவேக் ரூபலா),சுஜாதா(கணேஷ்,வசந்த்),பட்டுக் கோட்டை பிரபாகரின் (பரத் சுசீலா வரிசை கதைகள்) ,சுபா வின் நரேன்..வைஜூ சீரிஸ் ,
அப்புறம் காலேஜ் லீவ்ல தேவன்,கல்கி,சாவி,நா.பார்த்தசாரதி ,பொன்னீலன்,கந்தர்வன்,இப்படிக் கொஞ்சம் ...காலேஜ் இரண்டாம் வருட ஆரம்பத்தில் இருந்து ரமணி சந்திரன் ,காஞ்சனா ஜெயடிலகர்
பி.ஜி படிக்கும்போது எஸ்ரா,நாஞ்சில்நாடன்,ஜெயமோகன்,கி.ராஜநாராயணன்,வண்ணதாசன் .அசோக மித்திரன்,தி.ஜா,
கல்யாணத்திற்குப் பின் உமா மகேஸ்வரி ,கண்மணி குணசேகரன்,வா.மு.கோமு,வேல ராம மூர்த்தி ,ஜெயந்தன் ,சாரு இப்படி எனக்குப் பிடித்த எழுத்தாளர்கள் பட்டியல் இன்னும் கூட நிறைய இருக்கலாம் .ஆனால் யாருடைய எழுத்தும் எனக்கு ரசனைக்குறைவானதாகத் தோன்றவில்லை.அவரவர் பாணியில் அவரவர் எழுத்து வாசிக்க உகந்ததே.

Monday, January 4, 2010

ஓடிப்போனவளின் மலரும் நினைவுகள்
வெட்டி எறியப்பட்ட நகத்துணுக்காய்

வீம்பு விளிம்புகளற்று

எனக்கு நானே சமாதானம் கொண்டவள் போல்

சாவதானமாகவே இருந்தேன்

ஓடிப் போனவள் எனும்

குசுகுசுப்புகளைப் புறம் தள்ளி

கொக்குக்கு இரையே மதி

கொண்டவனுக்கு நானே கதி

என்றொரு காலம்

இருந்தவரை எல்லாமே சரியெனும்

பாவனையில் மூழ்கிப்போய்

சங்கடங்கள் தவிர்க்கப்பழகி

அயர்ந்து உறங்கிப்பின்

விழித்தெழுகையில்

என் மகள் எனைப் போலானாள்...;

மெல்லாது முழுங்காது
தொண்டைக்குள் உருளும் பம்பரமாய்
நான் என் அன்னைக்குச் செய்தது
இன்றெனக்கு !?
உரத்துச் சொல்ல வெட்கி

மச்சு வீட்டில் மூச்சு விடாமல் தேம்பியழுவது

நானாய் இருக்கக்கூடுமோ !!!

Sunday, January 3, 2010

அடையப்படா உச்சம் ...எல்லோர்க்கும் பொதுவென்றே கொள்கிளர்ந்தெழும் வன்மம்
அடங்காக் கோபம்
அன்பில் அமிழும் நெகிழ்வு
இயலாக் குரோதம்
அடையப்படா உச்சம்
உச்சத்தில் முகிழாக் காமம்
எப்போதும் பெருங்கொண்ட ஏக்கம்
எல்லோர்க்கும் பொதுவென்றே கொள்
ஆணுக்கும் பெண்ணுக்கும்
அடையாளம் பிரிக்கும்
உறுப்புகளை மறந்து போ
உள்ளிருக்கும் உயிர்
உறுத்து விழிக்கட்டுமே ;
அந்த வெளிச்சத்தில் பார்
அடித்தால் வலிக்கத்தான் செய்யும்
எறும்புக்கும் !?
ஏடு படித்து எழுத்தை அறிந்ததால்
நீ இந்து
நான் முஸ்லீம்
அவன் கிறிஸ்துவன்
ஏதும் அறியா எண்ணற்ற உயிர்களுக்கு !
அடையாளங்கள் அதிகாரச் சின்னங்கள் ஆனதும்
அதற்கொரு மதிப்பு!
அதற்கொரு மானம் !
அதற்கொரு மதம்.
ம்...மகாப் பெரிய அலுப்பு வந்து தொலைக்கட்டும்
படைத்தவனுக்கு ;
மாயா லோகத்தின்
மயக்கும் வசீகரங்களில்
சில்லறை காசாகி சிதறிச் சிரிக்கும்
ஒவ்வொரு முறையும்
எனக்குள் நான்
கேட்டுக் கொள்வது
நான் யார்?!
இங்கிருந்து வந்தேன் ...
இங்கிருந்தே போவேன் ...
போவதற்கு முன்னால் எப்போதேனும் திரும்பியும் பார்பபேனாய் இருக்கும் !
நோட்:
படம் உதவிக்கு நன்றி கூகுள் .
www.neosurrealismart.com/modern-art-prints/?a...