Monday, January 10, 2011

ஜிப்ஸிகளும் நரிக்குறவர்களும் காணாமல் போன இந்திய வரலாற்றுப் பக்கங்களும் :


மேட்டிமை மிக்க தேவடியா மகனே :

( கவிதை -இயான் ஹான்குக் -ஜிப்ஸி வரலாற்று ஆய்வாளர் (இங்கிலாந்து)

சீருடையுடனும் உறைந்த புன்னையுடனுமிருக்கும்
மேட்டிமை மிக்க தேவடியா மகனே,
உனது அன்னை எப்படி இருக்கிறாள் ?
எனது அன்னையை
நான் நீண்ட நாட்களாகப் பார்க்கவில்லை

இரண்டாவது அபிப்ராயத்துக்கு இடமில்லையா?
இன்னொருமுறை சொல்
உனது பெருமைக்குரிய கனடாவுக்கு
நான்
பொருத்தமில்லை எனச் சொல்கிறாயா ?

எம்மைப் போன்ற குடிஎற்றதாரர்கள்
பொருத்தமில்லை என்கிறாயா?
சட்டத்திற்கு ஒப்ப அழுத்தமான வார்த்தைகளில்
நான்
குடியேற்றத்திற்கு பொருத்தமில்லை என்கிறாயா?
பரவாயில்லை .

இந்த நரகலை நாங்கள்
உம்மைப் போன்றவர்களிடமிருந்து
எமது வாழ்வு முழுக்க கேட்டு வருகிறோம் .

சிறை அதிகாரிகள்குடியேற்ற அதிகாரிகள்போலீஸ்காரர்கள்.
முகங்கலில்லை எமக்கு சப்தமற்ற ஒன்றரைக்கோடி தொண்டைக்குழிகள் உங்களது தகப்பன் களாலும் உங்களது குழந்தைகளாலும்
பல்லாயிரம் ஆண்டுகளாக நாங்கள்
விரட்டப்பட்டு வருகிறோம்

நீ உருவாக்கி வைத்திருக்கிற எமது உணர்வுகளை
கற்பனையிலேனும் நீ நினைத்துப் பார்த்ததுண்டா ?

என்னை மன்னித்து விடு

உன்னைப் போலவே நடந்து கொள்வதற்கு
என்னை முயற்சி செய்ய விடு
என்னை உள்ளே விடு
என் தந்தையை நான் தழுவிக் கொள்கிறேன் .


அப்புறம் நான் இப்படி மோசமாக நடந்து கொள்ள மாட்டேன்.
//அப்புறம் நான் இப்படி மோசமாக நடந்து கொள்ள மாட்டேன்//
உலகெங்கும் நாடற்றவர்களாக அலைந்து திரியும் ஜிப்ஸிகளின் துயரம் சொல்ல இந்தக் கவிதை ஒன்று போதாதோ?

இந்த அப்புறம் என்ற சொல் இங்கே மிக வலிக்கச் செய்கிறது. யமுனா ராஜேந்திரனின் "ஜிப்சியின் துயர நடனம் " புத்தகத்தில் இருந்த ஒரு கவிதை இது .அவர் ஜிப்ஸிகள் இந்திய பூர்வ குடிகள் என ஆதாரங்களுடன் குறிப்பிடுகிறார்.

ஈழத் தமிழர்களும் இந்திய பூர்வ குடிகள் தான்.நாம் இந்தியர்கள் என்று ஒருமித்த நோக்கில் கண்டால் மட்டுமே. அவர்கள் தமிழகப் பூர்விக மக்கள் என சுருக்கப் பட்டு விட்டார்கள்,அதனால் ஈழத் தமிழனுக்கு என்ன ஆனாலும் வடக்கில் கவனம் பெறத் தக்க வகையில் எந்த எதிர்ப்பும் எழ வகையற்றுப் போனது,போலவே வட கிழக்கில் ஒடுக்கப் பட்ட மக்களுக்கு என்ன ஆனாலும் தெற்கே நமக்கும் போதிய அக்கறையின்றிப் போயிற்று.

ஜிப்ஸிகளின் துயரக்கதை பல ஆயிரம் ஆண்டுகளுக்கு முற்பட்டது ,பக்கத்து மாநிலத்தில் நடப்பதைக் கூட வேடிக்கை பார்க்கும் பாவனை மட்டுமே காட்டக் கூடும் அண்டை மனித சமுதாயம் நாம் எங்கிருந்து பூர்வ குடிகளைத் தேடி கண்டெடுத்து போஜித்து காபந்து செய்யப் போகிறோம்!!! ஆனால் இங்கே ஜிப்ஸிகளின் துயரக் கதைகளை வாசிக்க நேர்கையில் பதிந்து வைக்க இயலாமல் போன பழங்குடி வம்சங்கள் குறித்த கையாலாகக் கோபங்கள் எழுகின்றன.

இந்தியாவில் ஆரிய ஊடுருவலை அறிந்து கொள்ள ரிக்.யஜூர்,சாம,அதர்வணம் எனும் நான்கு வேதங்கள் இருக்கின்றன. இராமாயண மகாபாரதக் கதைகள் இருக்கின்றன. திராவிட நாகரிகம் பற்றி அறிய சிந்து வெளி,ஹரப்பா மொகஞ்சதாரோ அகழ்வாராய்வுகள் இருக்கின்றன. இருப்பினும் இந்தியா எனும் நிலப் பரப்பில் ஆரியர்களுக்கு முன்பிருந்தவர்கள் யார்? அவர்கள் என்ன ஆனார்கள்?

பாண்டவர்கள் சரஸ்வதி நதிப் படுகைகளில் அலைந்து திரிந்த காலங்களில் அவர்களுக்கு மிக வலப்பமானதொரு நாகரிகம் இருந்திருந்தது நிஜமென்றால் அவர்களுக்கு முன்பு இந்தியாவில் இருந்தவர்கள் யார்?

பாண்டவர்கள் என்றதும் மகாபாரதக் கதைக்குத் தாவாமல் பாண்டவர்களை ஒரு பழங்குடி இனத் தலைவர்கள் அல்லது வாரிசுகள் என மட்டுமே கொண்டு அவர்கள் தங்களுக்குள் இட்டுக் கொண்ட உட்போரைப் புறம் தள்ளி அவர்கள் யாரிடம் வென்று பெற்ற பகுதி ஹஸ்தினாபுரம் என்று எந்த வரலாறும் எழுதி வைக்கப் படவில்லையா?

சாந்தனு மச்ச கன்னியான மீனவப் பெண்ணை மணந்து அதில் விரிந்த குலம் தானே திருதராஷ்ட்டிரன் பாண்டு உள்ளிட்ட குரு குலம்.சாந்தனுவுக்கு முந்தைய மகாபாரதக் கதை என்ன?!

காண்டவாக் காடுகளை அழித்து பழைய டெல்லியை (இந்திர பிரஸ்தம்) உருவாக்கினார்கள் பாண்டவர்கள் எனில் இந்தியா முழுக்க காடுகளே நிறைந்திருந்தனவா ஆரியர்கள் இந்தியாவுக்குள் நுழைந்த பொழுதில்?! காடு திருத்தி நாடாக்கியதில் பூர்வ பழங்குடிகளுக்கு பங்கேதும் இல்லையா? மிகப் பெரும் புதிர்கள் இவை .இந்தப் புதிர்களை அவிழ்க்கத்தான் புத்தகங்கள் தேட வேண்டும்.யாருக்கேனும் தெரிந்தால் அவசியம் இங்கே இந்தப் பதிவை வாசிக்க நேர்ந்தால் தெரிவியுங்கள் .

நிற்க

ஜிப்சிகளுக்கு வருவோம் ,பதினோராம் நூற்றாண்டில் இஸ்லாமியப் படையெடுப்பை முறியடிக்க நினைத்த ஆரியர்கள் தங்கள் ஆரிய வீரர்களுடன் இந்திய பூர்வ பழங்குடிகளான லோகர்கள்,குஜ்ஜர்கள்,தண்டாக்கள் உள்ளிட்ட ராஜபுத்திரர்களை தம் சத்ரிய படை வீரர்களுடன் கலந்து போர் முனைக்கு அனுப்பினர். இந்த வகையில் இந்த பழங்குடிகள் பல ஒன்றிணைந்து தான் ஜிப்சிக்கள் எனும் தனியானதொரு பிரிவு தோன்றி இருக்கிறது என்கிறார் இந்நூலாசிரியர்.

ஜிப்சி என்ற சொல்லுக்கு (சிறிய எகிப்தியர்கள்) என்று பொருளாம். உண்மையில் ஜிப்ஸிகள் இந்தியாவின் பஞ்சாப் மாகாணப் பிரதேசங்களில் இருந்து இஸ்லாமியர்களுடன் ஆனா போர் காரணமாக உலகின் பல பாகங்களிலும் சிதறிய ஒரு கூட்டமாக இருந்த போதிலும் ஐரோப்பியர்கள் அவர்களை எகிப்தில் இருந்து வந்த கறுப்பின மக்கள் என்று கருதியதால் வந்த பெயர் தான் "ஜிப்ஸி(சிறிய எகிப்தியர்கள்) .

ஜிப்சிகளுக்கு நிகராக தமிழ் நாட்டில் நரிக்குறவர்களைக் கூறுகிறார்கள் .அவர்களது அடர்த்தியான நிறங்களால் ஆன உடைகள்,நாடோடி வாழ்க்கை முறை,குல கட்டுப்பாடுகள் போன்ற காரணிகள் அதை உறுதி செய்கிறது .

நரிகுறவர்கள் தேர்தல் காலம் தவிர்த்து தேடப் படக் காணோம்,அவர்கள் வழக்கப் படி ஊசி பாசி மணிகளை விற்றுக் கொண்டும் கொக்கு குருவி சுட்டுக் கொண்டும் திரிவதை கிராமங்களில் இப்போதும் பார்க்கலாம். அவர்களுக்கென தொகுப்பு வீடுகள் கட்டப் பட்டுள்ளன என்கிறார்கள் ,அந்த வீடுகள் மருவி சமூக விரோதக் கும்பல்களின் சரனாலயங்கலாகித் தான் போகின்றன ஊருக்கு ஒதுக்குப் புறத்தில் .

செங்கல்கள் தூர்ந்த சிமென்ட் பூச்சற்ற சில டப்பா கட்டிடத் தொகுப்புகளை ஊர்களின் ஒதுக்குப் புறங்களில் பேருந்துகளில் கடக்கும் போதெலாம் இந்த வீடுகள் யார்க்காக கட்டப் பட்டவை என்ற குழப்பமே ே மிஞ்சுகிறது,யாருடைய மேம்பாட்டுக்காகவோ என்று!!!

பி.சி,எம்.பி.சி ,எஸ்.சி ,எஸ்.டி , என்று எந்தப் பிரிவிலும் சேர்க்க முடியாதா நரிக்குறவர்களை?

நிஜத்தில் அவர்களுக்கென விண்ணப்ப படிவங்களை நிரப்ப என்ன செய்வார்கள் நரிக்குறவர்கள்?

ரேசன் கார்டுகள்ஒட்டுரிமைக்கான அடையாள அட்டைகள்

கலைஞர் காப்பீட்டுத் திட்டத்தை அனுபவிக்க ,

108 அவசர சேவையை அனுபவிக்க

மேற்சொன்ன அட்டைகளை சமர்பிக்கச் சொல்கிறார்களே எந்த அரசு அலுவலகத்திற்குள் நுழைந்தாலும் இவைகளை நரிக்குறவர்களுக்கு வழங்கி முடித்து விட்டார்களா?ஒட்டு மொத்த தமிழக மக்கள் thogaiyil நரிக்குறவர்கள் எத்தனை சதவிகிதம் பேர்?

ஜிப்சிகளைப் பற்றிப் படிக்கப் படிக்க இந்த மாதிரி அனாவசியக் கேள்விகள் எல்லாம் எழுவதை தவிர்க்க முடியாது யாரானாலும்.

எந்த மாதிரியான ஒரு எருமை மாட்டு நிம்மதியில் நாம் உழன்று கொண்டிருக்கிறோம்?!

தலை வழியும் காய்ச்சலும் தனக்கு வந்தால் தான் தெரியும் என்பது வாஸ்தவமே . நரிக்குறவர்களுக்காக ,ஜிப்சிக்களுக்காகப் போராட வேண்டாம் .
ஈழத் தமிழனுக்காக உண்ணா விரதம் இருந்து நமது எதிர்ப்பை பிரகடனம் செய்ய வேண்டாம்.

அவர்களை சக மனிதர்களாக உணர்வதில் என்ன அசூயை ?

முன்னேறிய சமுதாயத்திடம் தாக்குப்ப் இடிக்க இயலாமல் பின் தங்கிப் போனாலும் பரவாயில்லை என காடுகளில் தங்கி விட்ட பழங்குடிகளை அவர்கள் இருக்கும் இடத்திற்கு தேடித் தேடித் போய் விடாது தொல்லை கொடுத்தால் தீவிரவாதிகள் உருவாகாமல் என்ன செய்வார்கள்?!
அடக்கப் பட்ட மக்களே தீவிரவாதிகள் ஆக்கப் படுகிறார்கள்.

வரலாற்றை எடுத்துக் கொண்டால் உலோகம்,மின்சாரம் இதைத் தேடித் புறப்படுகையில் தான் பெரும் பெரும் போர்கள் வெடிப்பதாகக் காண முடிகிறது

இதற்கு யுகக் கணக்குகள் அனாவசியம் .

இப்போதும் தண்டகாரண்யத்தில் கொட்டிக் கிடக்கும் பாக்சைடுக்காக அங்கிருக்கும் பூர்விக பழங்குடி மக்கள் இந்திய அரசால் வேறிடம் செல்லுமாறு அச்சுறுத்தப் படுகிறார்கள்.

வலிந்தவர்களின் தேவைகள் எப்போதும் எளியவர்களை விரட்டி அடித்து அபகரிக்கும் குணத்தை வளர்க்கிறது.அன்றைக்கு அரசர்கள் செய்தார்கள் ,இன்றைக்கு ஆட்சியாளர்கள் செய்கிறார்கள். வித்யாசம் எதுவுமில்லை.

நாம் நமது காட்டுமிராண்டித் தனத்தை நவீன ஆடைகள்,அலங்காரங்களால் புது மோஸ்தரில் காட்டப் பழகி விட்டோம்.
இந்த நாட்டில் ஜாதிகளுக்கு அப்பாற்பட்டு இன்னொரு நீதி உண்டு ஒரே நீதி.

வாழத் தெரிந்தவன் -வாழத் தெரியாதவன் .

இதற்குள் சுருங்கிப் போகிறது எல்லாமும். மனசாட்சிகள்,ராஜ தந்திரங்கள், நடுவர்கள் , தரகர்கள், நண்பர்கள் ,எதிரிகள் ,எல்லோரும் இதற்குள் அடங்கி விடுகிறார்கள்.

இது கட்டுரை அல்ல . மேய்ந்த புத்தகங்களின் செரிமானம் என்று வேண்டுமானால் கொள்ளலாம்.