Saturday, December 20, 2008

பாப்பு vs பிங்க் கலர் பூதம்

டைணிங் ஹாலில் உட்கார்ந்திருந்த குழந்தை அஷ்விதாவைக் கண்டதும் ஜன்னல் மேல் தாவி ஏறிக்கொண்டது , ஏய் மேல ஏறாத விழுந்து வைக்கப் போற பதட்டமாய் அவள் கத்தினாள் .
சரி ..சரி இரு நீ கிட்ட வராத நானே இறங்கிடறேன் ...குழந்தை அவளே இறங்கி வந்து படுக்கை அறைக்குள் நுழைந்து விட்டாள்,
பாப்பா பப்பு மம்முடா சூப்பர் டேஸ்ட்...ஒரு வாய் சாப்டுப் பார் அப்புறம் நீயா வேணும் ...வேணும்ப, வா வந்து வாங்கிக்கோ என் செல்லக்குட்டி இல்ல !
அஷ்விதா படுக்கை அறைக்கு வந்ததும் குழந்தை அவள் எட்டிப் பிடிக்க முடியாதபடி வழுக்கிக் கொண்டு பின்வாசலுக்கு ஓடினாள்.
ஹை..உங்கைல தான் மம்மு பிளேட் இருக்கே ..என்ன எப்படி நீ பிடிப்ப ? தள்ளி நின்று கொண்டு எக்காளமாய் சிரித்தது.சரி..சரி விளையாண்டது போதும் வா ..வந்து "ஆ " வாங்கிக்கோ அப்போ தான் ஈவினிங் பார்க் கூட்டிட்டுப் போவேனாம் ; உள்ளே வந்த கோபத்தை அடக்கிக் கொண்டு சிரித்துக் கொண்டு சமாளிப்பாய் கெஞ்சினாள்,
பார்க் எல்லாம் வேண்டாம் "அபிராமிக்குப் போலாம் இன்னைக்கு " அப்போ தான் நான் "ஆ " வாங்கிக்குவேன் ,
அபிராமிக்கா ..!!! OK ..OK பாப்பு என்ன சொல்றாளோ அங்கேயே போலாம் ,நீ பஸ்ட் சாப்பிட்டு முடி அப்புறம் டைம் ஆயிடும்ல மூடிடுவாங்க இல்ல ?
இரு மம்மி வரேன் ..குழந்தை இப்போது பாத்ரூம் பக்கம் போய் விட்டாள் .
பாப்பு பாத்ரூம்குள்ள சும்மா ..சும்மா போக கூடாது நு எவ்ளோ வாட்டி சொல்லிருக்கேன் ,
பேட் ஹாபிட் கால் வாஷ் பண்ணிட்டு வெளிய வா ,கையில் சாதம் ஏந்தியவாறு அஷ்விதா குரலில் லேசாக கடுமை ஏற்றிக் கூறினாள்.அதிகம் கத்தக் கூடாதே ..உள்ளதும் போன கதையாகி விடுமே ,
எப்படியாவது பாப்புவை சாப்பிட வைக்கவேண்டும் , காரியம் ஆக வேண்டுமே .
ஆம் !!!அஷ்விதா குழந்தைக்கு சாதம் பிசைந்து ஊட்டிக்கொண்டிருந்தாள் , சும்மா பத்து நிமிஷ வேலை என்று நினைத்து விடாதீர்கள் ...ஒரு மணி நேரமாக ஊ ...ட்..டிக் கொண் ..டே ..இருக்கிறாள் ,
அவளும் என்னென்னவோ சொல்லி குழந்தையை ஏமாற்றி சேர்ந்தாற்போல ஒரு ரெண்டு பிடி சாதத்தையாவது வாய்க்குள் தள்ளி விடலாமென்று தான் பிரம்மப் பிரயத்தனம் செய்து பார்க்கிறாள் .
பாத்ரூமில் இருந்து வெளியே வந்த குழந்தை இவளது நல்ல நேரமோ என்னவோ அவள் மடியில் வந்து பாசமாய் உட்கார்ந்து கொண்டது ,உச்சி குளிர்ந்து போனவளாய்,
என் தங்கமாச்சே ...என் அம்முக்குட்டியில்ல என் செல்ல புஜ்ஜியில்ல..தங்கக் கட்டியில்ல "ஆ " காட்டும்மா ...ஒரே ஒரு வாய் தான் அப்புறம் மம்மி (சாரி பாஸ் எகிப்த் மம்மி இல்ல இது தமிழ் மம்மி ) உன்ன சாப்பிடச் சொல்லி தொந்திரவே பண்ண மாட்டேனாம் ;
அதுவரை மடியில் உட்கார்ந்திருந்த குழந்தை மெல்ல நழுவி சோபாவுக்குச் சென்றது ; இரு மம்மி சாப்பிடறேன் ...வெயிட் ...வெயிட் கையால் சைகை காட்டிவிட்டு ,ரைஸ் எதுக்கு சாப்பிடனும் ?
நூடுல்ஸ் தா அதான் வேணும் ,
அஷ்விதா முறைத்தாள்;முன்னாடியே சொல்றதுக்கென்ன ஒரு மணி நேரமா உன் பின்னாடி தான அலையறேன் ?
கோச்சுக்காத மம்மி நூடுல்ஸ் தா சாப்பிடறேன் ...என் செல்ல மம்மி இல்ல !!!உள்ளெழுந்த அத்தனைக் கோபத்தையும் காட்டினால் காரியம் சுத்தமாய்க் கேட்டு விடுமே ,ஐந்தே நிமிடத்தில் நூடுல்ஸ் தயாரித்துக் கொண்டு குழந்தையை தேடினால் காணோம் .
பாப்பு வேர் ஆர் யு ? டெல் மீ ...அஷ்விதா வீடு முழுதும் தேடி கடைசியில் பூஜை ரூம் கதவு மூலையில் பாப்புவைக் கண்டுபிடித்து இழுத்து வந்து மறுபடி டைணிங் ஹால் மேஜையில் அமர வைப்பதற்குள் போதும் ..போதும் என்று வந்தது அவளுக்கு ,
நூடுல்ஸ் ரெடி போர்க் வச்சு நீயா சாப்பிடுவயாம் ,மம்மி சும்மா உட்கார்ந்து பாப்பு சாப்பிடறத பார்த்துட்டே இருந்து பினிஷ் பண்ணதும் வெரி குட் சொல்வேனாம் ..ஒ.கே வா ?
என்ன நினைத்தாலோ என்னவோ ஒரே ஒரு வாய் நூடுல்ஸ் எடுத்து போர்க்கால் வாயிலிட்ட பாப்பு "ஓ என்று தனக்குத் தானே உமட்டிக் கொண்டு மறுபடி போர்க்கை கீழே போட்டு விட்டாள் .
மம்மி வாமிட் வருது மம்மி நூடுல்ஸ் இப்போ வேணாம்..அப்புறமா சாப்டுக்கறேன் .என்றாள் . ஏய் என்னடி இது சாதம் தான் வேண்டாம்ன சரி நூடுல்ஸ் கேட்டஎனு செஞ்சு எடுத்துட்டு வந்த இதுவும் வேணாம்கற ...எத தான் சாப்டப் போற நீ ?இப்ப ஏதாவது ஒன்னு சாப்பிடப் போறிய.. இல்ல பூதத்தைக் கூப்பிடவா ?
கேட்ட மாத்திரத்தில் பாப்பு அஷ்விதாவின் சேலை நுனியை இறுகப் பற்றிக் கொண்டு தனது அச்சத்தை காட்ட ;குழந்தை கொஞ்சம் பயந்தமாதிரி இருக்கிறதே ..அது தான் சாக்கென்று ;நிஜமாதான் சொல்றேன் இப்போ நீ மட்டும் சாப்பிடலை , கலர் ..கலர் பூதம் (ஹி...ஹி ஏதாவது ஒரு பேர் வேண்டுமே பூதத்துக்கு ) வந்து உன்னைத் தூக்கி பைல போட்டிக்கிட்டு ஓடியே போய்டும் ,
பாப்பு கொஞ்ச நேரம் அமைதி காத்தாள். ஒரே ஒரு நிமிஷம் தான் . அப்புறம் கேட்டாள். எங்கம்மா போகும் பைல போட்டுத் தூக்கிட்டு ?
ஹ்ம்ம் ...அபிராமிக்கு ..எங்க போகும் எங்கயாச்சும் காட்டுல கொண்டு போய் போட்டுட்டுப் போய்டும் .ஆமாம் ...பேசாம சாப்டுறு ,
அஷ்விதா மேலும் கொஞ்சம் பயம் ஏற்றிப் பார்த்தாள்...எல்லாம் அவளை சாப்பிட வைக்கத் தான் ;
பாப்புவா கொக்கா ?!!!
ம்ம்ம் ...மம்மி கலர் கலர் பூதம் தான சொன்ன ?
ஆமாம் பார்க்க ரொம்ப பயங்கரமா இருக்கும் ...வந்திரப் போகுது சீக்கிரம் சாப்டுறு பாப்பு ;
அதில்லம்மா அந்த பூதம் வரும்போது எந்த கலர் ல வரும் ?
நீ இப்படியே கேட்டுக்கிட்டே இரு பூதம் வந்து சாப்பிடாத பிள்ளை எங்க.. எங்க நு தேடி உன்னைப் பிடிச்சி பைல போட்டுக் கட்டித் தூக்கிட்டுப் போயடட்டும் ;இன்னும் இறுக்கமாக அஷ்விதாவின் சேலையைப் பற்றிக் கொண்டு ஒடுங்கி மடியில் அமர்ந்து கொண்டு சேலை தலைப்பால் தன்னை மூடிக் கொண்ட பாப்பு ;
மம்மி பிங்க் கலர் ... ப்ளூ கலர் கூட அந்த பூதம் வருமா மம்மி ? என்றாள்வரும்..வரும் ;இப்ப வரத்தான் போகுது நீ சாபிடாமலே இருக்க இல்ல இதோ வந்திரும் பாரு .
கேட்டுக்கொண்டிருந்த பாப்புவின் கண்களில் இப்போது பயம் போய் மெல்லக் கண்கள் பளிச்சிட ,
மம்மி ..மம்மி ப்ளீஸ் மம்மி அந்த பூதத்தை பிங்க் கலர்ல வரச் சொல்லு மம்மி;வேற கலர் வேணாம் .பிங்க் இல்லன ப்ளூ ஓ.கே ,வரச் சொல்லு மம்மி .
என்னது ?
ங்ஹே வென்று ஒன்றும் புரியாமல் கொஞ்ச நேரம் வெறித்து விட்டு பாப்புவுக்குப் பிசைந்த சாதத்தை அஷ்விதாவே சாப்பிட்டு முடித்தாள் .
வேறு என்ன தான் செய்வதாம் ? !!! ."
"குழந்தையும் தெய்வமும் குணத்தால் ஒன்றுகுற்றம் குறை காணாத இனத்தால் "ஒன்று ".கே.டிவி யில் பாட்டு ஓடிக் கொண்டிருந்தது .

"தாங்க்ஸ் டு தனிஷ்க் பார் திஸ் நைஸ் விசுவல் அண்ட் மெலடி"

அசின் வரும் புதிய தனிஷ்க் விளம்பரம் ஒன்று நேற்று விசேசமாய் கவனத்தை ஈர்த்தது .கேரளத் தம்பதிகள் ஒரு ஓடத்தில் சென்று கொண்டிருக்கிறார்கள்,பின்னணியில் நமது ராஜாவின் மெலடி ரொமாண்டிக் ஹிட்

"கொடியிலே மல்லிகைப்பூ மணக்குதே மானே"...

எடுக்கவா...தொடுக்கவா மயங்கினேன் நானே" மென்மையாக ஒலிக்க அவர்களைக் கடந்து செல்லும் ஓடத்தில் சில பெண்கள் தலை நிறைய மல்லிகைப் பூக்களைச் சூடிக் கொண்டு இவர்களைப் பார்த்து புன்னகைத்துக் கொண்டே தாண்டிச் செல்கின்றனர்.

இதுவரை இது ஒரு சாதா விளம்பரம் தான் .

அதனை அடுத்து ஒரு ஸ்வீட் ட்விஸ்ட் ....!!!

மல்லிகை சூடிச் செல்லும் இளம் பெண்களைக் கண்டு மனைவியாக வரும் அசின் மலர்கள் எதுவும் சூடாமல் முன்புறம் நீண்டு சாட்டை போலத் தொங்கும் தன் பின்னலை எடுத்து அசட்டையாக கொஞ்சம் சடைவுடன் தன் கணவனைப் பார்த்துக் கொண்டே அலட்சியத்துடன் பின்புறம் தூக்கிப் போடவும் ,கணவனாக வருபவர் அசினை சமாதானப் படுத்த வைரம் பதித்த பிளாட்டின நெக்லசை ஏந்திக் கொண்டு மனைவியின் அருகில் நகர்வார்,

கழுத்துக்குத் தானே நெக்லஸ் என்று கழுத்தைக் காட்டும் மனைவியின் பார்வை கணவனின் கை கழுத்து தாண்டி தலைக்குப் போவதைப் புரியாத பாவனையுடன் பின்தொடரும் .கடைசியில் தேர்ந்தெடுத்த வைரம் பதித்த பிளாட்டின நகைகள் அனைத்துமே அசினின் நீண்ட பின்னல் ஜடையிலும் கொண்டையிலும் ரசனையோடு அலங்கரிக்கப் பட்டு நம் கண்களுக்கு விருந்தாகும் .

இந்த விளம்பரம் என்ன சொல்ல வருகிறது? இனிமேல் பெண்கள் தம் தலையில் மல்லிகைப் பூக்களுக்கு பதிலாக நகைகளைச் சூடிக் கொள்ளுங்கள் என்றா ? நகை விற்கும் விலையில் அதெல்லாம் அனைத்துப் பெண்களுக்கும் சாத்தியமா என்ன?

அப்படியெல்லாம் இருக்காது...மல்லிகையின் மனம் மயக்கும் தன்மை பிளாட்டின நகைகளுக்கும் உண்டு என்று குறிப்பால் உணர்த்துகிறார்கள் போல?!எது எப்படியோ ?விளம்பரம் மிக அருமையான விதத்தில் கண்களோடு கவனத்தையும் கவர்கிறது,

அந்த விளம்பரம் முடிந்து ...

அடுத்த விளம்பரம் போட்டு ...

அதற்கும் பின் நீண்ட நேரம் எல்லா நிகழ்சிகளையும் பார்த்து அலுத்து சலித்து டி.வியை அணைத்து விட்டு இரவு தூங்கப் போகும் போதும் கூட ,கண்ணில் அசின் தலையில் சூடிக் கொண்ட வைர நட்ச்சத்திரங்கள் டாலடிக்கின்றன.

கனவில் கூட ...

"கொடியிலே மல்லிகைப் பூ மணக்குதே மானே...ஒலிக்கிறது...

கூடவே மல்லிகைப்பூ வாசம் வேறு ...

"ராஜா ராஜா தான் !

"தாங்க்ஸ் டு தனிஷ்க் ஃபார் திஸ் நைஸ் விசுவல் அண்ட் மெலடி" குறிப்பு:

ஹார்லிக்ஸ் காம்ப்ளான் விளம்பர யுத்தம் கண்டு விளம்பரங்களின் கிரியேட்டிவிட்டி காணமலே போய்விட்டதோ என்று நினைத்த நேரத்தில் இந்த தனிஷ்க் விளம்பரம் கருத்தைக் கவர்வது நிஜம் கலந்த ஆறுதல் .

நம்ம டவுட் :- ராஜாவோட இந்தப் பாட்டு "கடலோரக் கவிதைகள் "படத்துல இருந்து தான் எடுத்திருக்காங்களா இல்ல வேற படமா?