Friday, March 19, 2010

கமலக்கண்ணன் S/O அம்சவேணி ...கனகவல்லி டீச்சரின் மகள் அனிதா மகனை ஸ்கூல் வேனில் ஏற்றி விட பஸ் ஸ்டாண்டுக்கு தினம் இந்தப் பக்கமாய்த் தான் நடந்து போகிறாள்...அவளைப் பார்த்து விட்டால் ஒரு பத்து நிமிடங்களாவது நிற்க வைத்து விசாரணை செய்து அனுப்பாமல் மனம் ஆறுவதில்லை சொர்ணவல்லி டீச்சருக்கும் இந்திராணிக்கும்.

மரகதமும் இந்த கூத்தைப் பார்த்துக் கொண்டு தான் இருக்கிறாள் .

சொர்ணவல்லி டீச்சரின் மகள் சத்யபாமா இப்போது புருஷன் பிள்ளைகளோடு குப்பை கொட்டுவது நியூயார்க்கில்,மகளின் அமெரிக்கப் பெருமையை டீச்சரைக் காட்டிலும் டீச்சர் புருஷன் வாயால் தான் நித்தம் கேட்க வேண்டும்.காது ஜவ்வு கிழியாத குறை தான்.

பெரிய நாயக்கர் மகனாயிற்றே என்று டீச்சர் புருஷனை எல்லாவற்றிலும் கலந்து கொள்வார்கள் ஊர் பஞ்சாயத்தார்.வேறு என்ன விவகாரம் அங்கே ஓடிக் கொண்டிருந்தாலும் மனிதர் அங்கேயும் போய் மகள் அமெரிக்காவில் டைட்ஸ் போட்டுக் கொண்டு தான் ஷாப்பிங் போவாள் என்று லஜ்ஜையே இல்லாமல் சொல்லிக் கொண்டிருப்பார்.

சத்யபாமாவும் இந்திராணி மகள் ராஜியும் பிளஸ் டூ வரை கூடப் படித்தவர்கள் கோட்டை வீட்டு கமலக் கண்ணனும் இவர்களுடன் தான் படித்தான்.

கண்ணனின் அப்பாவுக்கு இரு தாரங்கள்,மூத்த மனைவி புருஷனின் ரெண்டாம் திருமணம் பிடிக்காமல் ஒதுங்கிக் கொள்ள கண்ணனின் அம்மா அம்சவேணியோடு ஊருக்கு வெளியே தோட்டத்தில் குடியிருந்து கொண்டார் கண்ணனின் அப்பா.அம்சவேணி உத்தர தேசத்துக் காரி என்று சொல்லிக் கொள்வாள் தன்னை,முதலில் கல்யாணமாகி ஒத்து வரவில்லை என்று பிரிந்து பிறகு கண்ணனின் அப்பாவை மணந்து கொண்டாள்.கண்ணன் ரெண்டாம் கணவருக்குப் பிறந்தவன் தான்.

அம்சவேணி விவரிக்க முடியாத அடர் கருப்பு.கருப்பில் அப்படி ஒரு மினு மினுப்பை இந்த ஊர் அவளுக்கு முன் பார்த்திருக்காது .புட்டம் தாண்டி அசையும் கூந்தலுக்கு அழுந்த எண்ணெயிட மாட்டாள்,பஞ்சு பஞ்சான கூந்தலை பட்டுப் போல மெத்தென்று வாரி இறுக்கப் பின்னலிட்டு டிஸ்கோ ரப்பரில் அடக்கி கட்டித் தொங்க விட்டுக் கொள்வாள்,அப்போதைய fashion அது!!!

அந்தக் கால சாவித்திரிக்கு கருப்பு மேக் அப் போட்டார் போல சருமத்தில் மாசு மருவே இல்லாத நிகு நிகு உடல் வாகு...கிழங்காட்டம் தாட்டிமையான பெண் அவள்.அவளிடம் கண்ணனின் அப்பா மயங்கியதில் ஊருக்கு எந்த ஆச்சரியமும் இல்லை ,மனிதர் தூணுக்கு சேலை சுற்றினாலே இமைக்காமல் பார்க்கும் ஜாதி."மூத்த மனைவி புண்ணியவதி" இவரிடமிருந்து தப்பித்து விட்டாள் என்று தான் வீட்டுப் பெண்கள் அரசல் புரசலாய் எப்போதும் பேசிக் கொள்வார்கள்.

அம்சவேணியைப் பற்றி எப்போதுமே கண் சிமிட்டலோடு தான் பேசிக் கொண்டார்கள் ஊர் இளவட்டங்கள்,அதையெல்லாம் சேலையில் ஒட்டிய தூசியாய் தான் அம்சவேணி நினைத்திருக்கக் கூடும்,வீட்டுப் பாதாள அறையில் பணமும் நகைகளுமாய் குவித்து வைத்த புருஷனே இவளது போக்கை வெட்கம் கெட்டு ரசிக்கையில் அவளுக்கென்ன "தினம் ஒரு புருஷன் கூட வைத்துக் கொள்வாள்" இவ அம்மாளுக்கு அம்மா ஜம்பளிபுத்தூர் கதளி நரசிங்கப் பெருமாள் கோயில்ல பொட்டுக் கட்டின தாசியாம்! பெண்கள் கூடும் இடங்களில் இந்தப் பேச்சு தவறாது இருந்தது சில காலம்.

கமலக் கண்ணன் பிளஸ் டூ முடித்ததும் பாலிடெக்னிக் படிக்கப் போனவன் எப்படி இந்திய ராணுவத்தில் சேர்ந்தானோ !படிக்கப் போனவன் ஐந்தாறு வருடங்களில் மிலிட்டரி விடுப்பில் உடுப்போடு தான் ஊர் திரும்பினான்."கன்னிப் பருவத்திலே" என்றொரு படம் பாக்யராஜ் வடிவுக்கரசி நடித்தது அதில் ராஜேஷ் தான் ஹீரோ.அப்போதைய நடிகர் ராஜேஷின் சாயலில் இருந்தான் கமலக்கண்ணன்.

அந்த அம்சவேணி ஒரு நாள் சொர்ணவல்லி டீச்சர் வீட்டுப் படியேறி வந்து உறவுமுறை சொல்லி அழைத்து ;

மதினி உங்க மக சத்யபாமாவ எம் மகன் கண்ணனுக்கு கொடுத்தா என்ன? ராஜாவாட்டம் பையன் .எம் மருமகளுக்கு நான் நூறு சவரன் பரிசம் போட்டு கட்டிகிட்டுப் போறேன்.என்ன சொல்றிங்க என்று கேட்டு விட்டாள் துணிந்து.

அப்படி...இப்படி தயங்கிக் கொண்டிருந்த சொர்ணவல்லி டீச்சர் ...எப்படி சரி சொன்னாரோ ! கண்ணன் தான் டீச்சர் வீட்டு மாப்பிள்ளை என்று சுமார் ஒன்னரை வருடம் ஊர் முழுக்கப் பேசிக் கொண்டிருந்தார்கள்...அவன் லீவில் வந்தால் டீச்சர் வீடே கதியென இருந்தான்.

சொர்ணவல்லி டீச்சருக்கு திலகா..திலகா என்று அக்கா மகள் ஒருத்தி உள்ளூரிலேயே வாக்கப் பட்டிருந்தாள்,அவள் புருஷன் பாண்டியன் பஸ் கண்டக்டர்.சத்யா அவனுக்கு ஒன்று விட்ட கொழுந்தியாள் ஆகிப் போனாளா!

எக்கண்டமும் எகடாசியுமாய் பேசுவதில் சமர்த்தனான மனிதன் வாய்க்கு அவல் சிக்கியதைப் போலத் தான் ...சத்யா அக்காவைப் பார்க்க வீட்டுக்கு வரும் போதோ இல்லை இவன் அவள் வீட்டுக்கு போக வாய்த்தாலோ ....

"சத்தி ...உங்க அத்தைய விருதுநகர்ல பார்த்தேன் நேத்து ...முந்தாநேத்து எங்க டிப்போலருந்து குற்றாலம் டூர் போயிருந்தோம் டிரைவர் கண்டக்டர்கள் எல்லாரும்...பரமசிவம் பிள்ளை மகன் முருகன் தான் காட்டினான் அங்கயும் உங்கத்தை தான் ...கூட வெள்ளையும் சொள்ளையுமா ரெண்டு தடித் தடி ஆம்பளைங்க...அடுத்த வாரம் மெட்ராஸ்க்கு போக டிக்கட் சொல்லி வச்சிருக்குதாமே ...நல்ல சம்பாத்தியம் உங்கத்தைக்கு. ..."
என்று நமுட்டுச் சிரிப்பாய் சுதி ஏற்றி விட...

ராஜேசுடன் டூயட் பாடிக் கொண்டிருந்த சத்யபாமா கொஞ்சம் கொஞ்சமாய் குழம்ப ஆரம்பித்தாள்.குட்டை குழம்ப குழம்ப லீவில் வீட்டுக்கு வந்த கமலக் கண்ணன் இவளது சுரத்தில்லாத பேச்சில் என்னத்தைக் கண்டு கொண்டானோ...பொது சுவர் வைத்து வீடு கட்டிக் கொண்டு பக்கத்து பக்கத்தில் வசித்த இந்திராணி மகள் ராஜி கிளாஸ்மேட் தானே என்று அங்கே கொஞ்ச நேரம் உட்கார்ந்து அரட்டை அடித்து விட்டுப் போனான் ஒரு நாள்.பிறகு அவன் விடுப்பில் இருந்த வரை அது தொடர் கதையாக ;சத்யாவுக்கும் அவனுக்கும் சண்டையாகி அவன் லீவு முடிந்து ராணுவம் போனான்.

அடுத்த லீவில் சத்யாவை எட்டியும் பார்க்காமல் ராஜி வீடே கதியென சிரிப்பும் கும்மாளமுமாய் பேசிக் கழித்தான்.சொர்ணவல்லி டீச்சர் சத்யாவுக்கு ராஜபாளையம் மாப்பிள்ளையை நிச்சயம் பண்ணி விட்டாள்.விஷயம் தெரிந்து அம்சவேணி "எம்மகனுக்கு என்ன கொற......இப்படி நம்ப வச்சு கழுத்தறுத்திட்டின்களே" என்று வீடேறி சத்தம் போட;

"அம்மா தாயே ஒன் நூறு பவுனும் வேண்டாம்...ஊர் ஊரா அம்பளைங்கள சேர்த்துட்டு சுத்தற மாமியாரும் எம் பொண்ணுக்கு வேண்டாம்.எங்களுக்கு தாங்காது இதெல்லாம்" டீச்சர் ஆர்ப்பாட்டமே இல்லாமல் ஒரே பேச்சாய் முடித்து விட அம்சவேணி தெருவெல்லாம் தனக்குத் தானே பேசிக் கொண்டும் அழுது கொண்டும் போனவள் தான் அப்புறம் இந்த வீட்டுப் படியை மிதித்தாளில்லை.

அதற்காக மகனுக்கு கல்யாணம் பேசாமல் இருப்பாளா ! என்ன இருந்தாலும் தாய்! சத்யா தட்டிப் போன பின் ராஜி தான் நன்றாகப் பேசுகிறாளே என அவளை இந்திராணியிடம் பெண் கேட்டாள் அம்சவேணி.

இந்திராணிக்கும் பெண்ணை தர லேசு பாசாய் இஷ்டம் தான் ...ஆனாலும் "கூழுக்கும் ஆசை மீசைக்கும் ஆசை" என்பதாய் அம்சவேணியின் நடவடிக்கைகள் குறித்து யோசனையாகவும் இருந்தது.

எப்படி ..எப்படியோ யோசித்துப் பார்த்தும் இந்திராணிக்கும் மகளை அம்சவேனிக்கு மருமகளாக்க துணிவில்லாமல் போக ராஜி ஓசூர்டைட்டன் கம்பெனியில் வேலையிலிருந்த மாப்பிள்ளைக்கு மனைவியானாள்.

"காத்திருந்தவன் பெண்டாட்டிகளை நேற்று வந்தவன் கொண்டு போன " கதையாக ...ஒருத்தி அமெரிக்காவுக்கும் ஒருத்தி ஓசூருக்கும் பறந்து போய் விட கமலக் கண்ணனுக்கு வந்த எகனை மோகனையான கோபத்தில் சொர்ணவல்லி டீச்சர் முன்னாள் தானும் ஒரு டீச்சர் மகளைத் தான் மனம் முடித்திருக்கிறேன் பார் என்று காட்ட ...அதே ஊரில் வடக்குத் தெருவில் இருந்த கனகவல்லி டீச்சர் மகளை ஒரே வாரத்தில் நிச்சயம் செய்து விடுப்பு முடிவதற்குள் கல்யாணமும் செய்து கொண்டான்.

கனகவல்லி டீச்சருக்கு குடும்பத்தில் பல பிரச்சினைகள் இருந்தன.மூத்த மகன் குடிகாரன்.கணவர் ஒரு சந்தேகப் பேர்வழி.இன்னும் இரண்டு மகள்கள் கல்யாணத்துக்கு வேறு நிற்கிறார்களே என்ற விசனத்தில் அதிகம் யோசிக்க அவகாசமின்றி உள்ளூர் மாப்பிள்ளை தானே என்ற ஆறுதலில் பெண்ணைக் கொடுத்து விட்டாள்.

அனிதா இப்படித் தான் கமலக் கண்ணன் மனைவியானாள்.

புருஷனோடு மிலிட்டரி குடியிருப்பில் நான்கு வருடங்கள் ஸ்டேட் ஸ்டேட்டாய் அலைந்து விட்டு அலுத்துப் போய் மூட்டை முடிச்சை கட்டிக் கொண்டு சொந்த ஊருக்கே வந்து அம்மா வீட்டில் தங்கி மகனை படிக்க வைத்துக் கொண்டிருந்தாள்.அம்மா வீடு வடக்குத் தெரு ,ஸ்கூல் வேன் ஏற்ற பஸ் ஸ்டாண்டுக்கு தான் வந்தாக வேண்டும் ,சொர்ணவல்லி வீடும் இந்திராணி வீடும் பஸ் ஸ்டாண்டில் தான்,அவர்கள் வீட்டை கடந்து தான் தினம் இவள் போயாக வேண்டும் .

அப்படி போகிறவளைத் தான் பாசம் பொங்க இழுத்து வைத்துக் கொண்டு ...கை கழுவிய மாப்பிள்ளைப் பாசத்தில் உருகிக் கொண்டிருந்தார்கள் சொர்ணவல்லியும்,இந்திராணியும்.

கண்ணன் எப்பம்மா வரான்?! லீவு கெடைக்குமா?!

கொழந்தையும் நீயும் அவன்கூட இருக்க முடியாதா அங்க!?

உங்கத்தை எதுக்கு மருந்து குடிச்சாளாம்!!? கண்ணன் எதுவும் திட்டி சண்டை போட்டுட்டானா போன லீவ்ல வந்துட்டுப் போறப்ப!?

வா கண்ணு வந்து ஒரு தோச தின்னுட்டுப் போயேன் எங்க வீட்ல,நீயும் எம் பொண்ணு மாதிரி தான!

விஷயம் தெரிந்த எதிர் வீட்டு மரகதம் மட்டுமல்ல கோடி வீட்டு சாந்தா...கடைக்கார தனம் எல்லாரும் தான் மூஞ்சியை மூஞ்சியை பார்த்து கண் ஜாடை காட்டி நக்கலாய் சிரித்துக் கொள்கிறார்கள் இவர்களது பாசப்பிணைப்பைக் கண்டு.

"பொண்ணைத் தரலை இல்ல மூடிக்கிட்டு போறது தான ரெண்டும்...எப்டி குழையுதுங்கன்னு பாரு அந்தப் பொண்ணுகிட்ட!"

எல்லாம் ஒரு பெருமை தான்.ஜம்பம் தான்

(அம்சவேணி தென்னைக்கு வைக்கும் பன்னி மாத்திரை முழுங்கி செத்துப் போய் ஆறு மாதம் ஆன பின் தான் இந்தக் கூத்தெல்லாம்!)

கதை முடிந்தது .

18 comments:

அண்ணாமலையான் said...

இந்த அகடெமி விருது உங்களுக்குத்தான்... வாழ்த்துக்கள்

செந்தழல் ரவி said...

புனைவு புனைவு என்று டிஸ்கி போடத்தேவையில்லை. அது படைப்பின் உயிர்ப்பை குறைத்துவிடுகிறது. !!

முத்துலெட்சுமி/muthuletchumi said...

ஏ அப்பா எத்தனை கேரக்டருங்க.பெரியமெகா சீரியலே ஓட்டிட்ட்டீன்க.. :))
நல்லாருக்கு கதை..

முத்துலெட்சுமி/muthuletchumi said...

வழக்கம் போல கேரக்டர்ஸ் எல்லாரும் கண் முன் வராங்க. நீங்க் உண்மையில்லன்னலும் எங்க கண்ணுக்கு உண்மைய உருவமா நிக்கிறாங்க.. :)

நேசமித்ரன் said...

அட..!

அகநாழிகை said...

கதை நல்லாயிருக்குங்க. என்னை மெகா சீரியல்ல பிஸியான்னு கேட்டீங்க. நீங்க அதுக்கு தயாராகிட்டே வர்றீங்கன்னு புரியுது. வாழ்த்துகள்.

நட்புடன் ஜமால் said...

கண்ணனின் அப்பாவுக்கு இரு தாரங்கள்,மூத்த மனைவி புருஷனின் ரெண்டாம் திருமணம் பிடிக்காமல் ஒதுங்கிக் கொள்ள கண்ணனின் அம்மா அம்சவேணியோடு ஊருக்கு வெளியே தோட்டத்தில் குடியிருந்து கொண்டார் கண்ணனின் அப்பா.அம்சவேணி உத்தர தேசத்துக் காரி என்று சொல்லிக் கொள்வாள் தன்னை,முதலில் கல்யாணமாகி ஒத்து வரவில்லை என்று பிரிந்து பிறகு கண்ணனின் அப்பாவை மணந்து கொண்டாள்.கண்ணன் ரெண்டாம் கணவருக்குப் பிறந்தவன் தான்.
]]

இதை தாண்டவே நெம்ப நேரமாச்சு.

அது என்ன அம்சா இருப்பவங்களுக்கு அம்சவேணி பேர் வைக்கிறீங்க.

பாத்திரங்குளூடே ரொம்ப பயணிக்க வைக்குது இந்த இடுக்கை.

ஏதோ ஒன்னு முழுசா படிக்க வச்சிருது.

:)

PPattian : புபட்டியன் said...

Too many characters, yet neat narration. Kudos.

நாமக்கல் சிபி said...

மெகா சீரியல் எடுத்தா எனக்கும் ஒரு கேரக்டர் கொடுங்க!

கதை நல்லா இருக்கு!

தாமோதர் சந்துரு said...

கமலக்கண்ணன் S/O அம்சவேணி
அம்சவேணி கதையை எங்கூர்லியே பாத்துப்புட்டோம் மக்கா

நசரேயன் said...

//அகநாழிகை said...

கதை நல்லாயிருக்குங்க. என்னை மெகா சீரியல்ல பிஸியான்னு கேட்டீங்க. நீங்க அதுக்கு தயாராகிட்டே வர்றீங்கன்னு புரியுது. வாழ்த்துகள்.
//

டைரக்டர் வாய்ப்பு எனக்கு கொடுங்க

பா.ராஜாராம் said...

பிடிச்சிருக்கு கார்த்திகா!

முகிலன் said...

கதை நல்லாருக்கு கார்த்திகா.. ஆனா பெயர்கள், அவர்களுக்குள்ள உறவுகள் ரொம்ப சிக்கலா இருக்கு. ஒரு தடவைக்கு மேல படிக்க வேண்டியிருக்கு..

ஒரு வேளை அதுக்கு தான் அப்பிடி எழுதினீங்களா?

கலகலப்ரியா said...

கொஞ்சம் நீளமா இருக்கே... அப்பால வர்றேன்...

♫ ♪ ..♥ .பனித்துளி சங்கர் .♥..♪ ♫ said...

வாழ்த்துக்கள்.

KarthigaVasudevan said...

நன்றி புபட்டியன் ...
நன்றி நாமக்கல் சிபி
நன்றி தாமோதர் சந்துரு
நன்றி நசரேயன்

நன்றி பாரா...
நன்றி முகிலன் ...
நன்றி கலகல ப்ரியா ..
நன்றி பனித்துளி ஷங்கர் ...

KarthigaVasudevan said...

நன்றி அண்ணாமலையான்...
நன்றி செந்தழல் ...(புனைவை எடுத்தாச்சுங்க ...)
நன்றி முத்துலெட்சுமி ...
நன்றி நேசமித்திரன் ...
நன்றி அகநாழிகை ...
நன்றி ஜமால் ...

உயிரோடை said...

உங்க‌ளுக்கு ந‌ல்லா க‌தை சொல்ல‌ வ‌ருது. முத‌லில் உண்மையா த‌லைசுத்திடுச்சி பின்ன‌ புரிஞ்ச‌து.