Tuesday, August 10, 2010

ஹமீதாக்கா ...

நட்டநடு நிஷி ஹமீதாக்கா கதவைத் திறந்து போட்டு விட்டு வாசலில் இறங்கி இடுப்பில் உரமாய் கைகளை ஊன்றி நின்று கொண்டு ஹோவென்று வெறிச்சோடிப் போயிருந்த தெருவை அமானுஷ்யமாய் பார்த்துக் கொண்டிருந்தாள்.


ஹமீதாக்காவுக்கு இன்னும் கல்யாணம் ஆகவில்லை,அவளின் அக்கா ரஷீதாவை போன வருஷம் தான் மதுரையில் கட்டிக் கொடுத்தார்கள் ,கல்யாணமான மாயத்தில் ரசீதாவுக்கு உம்மா வீடு இல்லைஎன்றானது,வாப்பா போட்ட நகை பத்தலையாம்.ஒரு பொண்ணைக் கரை சேர்க்கக் கொள்ளவே வாப்பாவுக்கு நெஞ்சு வலி கண்டு விட ஆஸ்பத்திரிக்கும் வீட்டுக்குமாய் நடை கழண்டு கொண்டிருந்தது.

குடி இருக்கும் வீடும் சொந்த வீடில்லை வாடகை வீடு தான்,வாப்பா முன்னைப் போல சரி வர உத்தியோகத்துக்குப் போக ஏலாத நிலையில் ஆறு மாத வாடகை பாக்கி வேறு அச்சுறுத்திக் கொண்டிருந்தது.

உம்மா அழுது அழுது அதிலேயே கரைந்து விட்டவள் போல எந்நேரமும் வாப்பாவின் கட்டிலருகே ஒரு சேரைப் போட்டுக் கொண்டு உறங்கியும் உறங்காத நிலையில் ஏதோ பேருக்கு ஜீவித்திருப்பதைப் போல எந்தப் பிரஞ்சையும் இன்றி அவள் பாட்டுக்கு இருந்தாள்,நல்ல நாள் பொல்லாத நாளுக்கு ஒரு புதுத் துணி கிடையாது,வாய்க்கு ருசியாய் ஒரு மட்டன் பிரியாணி ,அடச்சே ...பிரியாணியாம்...பிரியாணி இந்தக் கேடு கேட்ட கெண்டை மீனுக்கு கூட வக்கில்லை இப்போதெல்லாம் ,ஒரு ரசம் வைத்து உளுத்துப் போன உப்புக் (வாளைமீன்) கருவாட்டை சுட்டு வைப்பது தான் ஹமீதாக்காவின் பிரமாத சமையல் வேலை,இது தவிர அவள் நாளெல்லாம் பொழுதுக்கும் சும்மாவே தான் இருந்தாள்.

ஏழாம் மாதமும் வாடகை பாக்கி நிற்கவே விடிந்த கொஞ்ச நேரத்தில் எல்லாம் வீட்டுக்காரி ராஜம் டீச்சர் உம்மாவிடம் வந்து ,

"மாமி நீங்க வேற வீடு பார்த்துகிடுங்க ,என் மக பிரசவத்துக்கு வரா பாம்பேல இருந்து,தொணைக்கு எங்க அம்மா வருவா,எங்க வழி உறமுறைங்க மருமகன் வழி சொந்தக்காரவுக வேற ரொம்பப் பேரு வரப் போக இருப்பாங்க.எங்க போர்சன்ல எட வசதி பத்தாது.இந்த வீட்ட ஒழிச்சுக் கொடுத்திங்கன்னா தான் சரிப்படும் ,ஆனது ஆச்சு,இந்த கொற மாசத்துக்கு இருந்துக்கிடுங்க,தாயா புள்ளையாப் பழகிட்டு டீச்சர் இப்பிடிச் சொல்லுதேன்னு நெனைக்காதீக.எங்களுக்கு வீடு வேணும் ,என்ன நாஞ் சொல்றது? அம்புட்டுதேன்"

சொல்லி முடித்து சனி விட்டது பாவனையில் அவள் போய் விட்டாள்.

டீச்சர் சொன்னதைக் கேட்ட மாயத்தில் உம்மாவுக்கு கண்ணைக் கட்டிக் கொண்டு வர ,தலையைப் பிடித்துக் கொண்டு ,

"ஹமீதா அரை லோட்டா கடுங்காப்பி போட்டு எடுத்தா,தலையச் சுத்துதுடி "

என்று மறுபடி கட்டிலில் தலையை முட்டுக் கொடுத்து சரிந்து விட்டாள் .வாப்பா தூங்கவில்லை,ஆனால் தூங்குவதைப் போல கண்களை மூடிக் கொண்டிருந்தார்.இல்லா விட்டாலும் தான் அவர் அதைத் தவிர என்ன செய்து விடப் போகிறார்?

ஹமீதாக்காவுக்கு நியாயப்படி உம்மாவின் மீதும் வாப்பாவின் மீதும் கொள்ளை கொள்ளையாய் கோபம் இருந்தாலும் அவர்களை எதுவும் சொல்ல முடியா இயலாமை குடைந்து கொண்டிருந்தது,

"ரசீதாவ கட்டிக் கொடுத்தாப்பில என்னையும் எங்கனயாச்சும் கட்டிக் கொடுத்திருங்க..."

என்று மூன்று மாதங்களுக்கு முன் தொணதொணத்துப் பார்த்தாள்.உம்மாவுக்கு அழுவதா சிரிப்பதா என்று புரியாத நிலை!

"ஏய் ...இவளே,ஒனக்கு நிக்ஹா பண்ணிப் பார்க்கற நெலமையிலயா நாங்க இங்கன இருக்கம்?! வாப்பாவுக்கு மொதல்ல நெஞ்சு வலி குணமாகட்டும் ஹமீதா ...பெறகு பார்ப்போம்.இப்பமென்ன ஒனக்கு இருபது வயசு தான ! "

உம்மா மெல்ல முணு முணுத்துக் கொண்டு வாப்பாவை ஆஸ்பத்திரிக்கு கிளப்பிக் கொண்டு வெளியேறினாள்.

அப்புறமும் ஹமீதாக்கா விட்டு விடுவாளா ?

அவள் பாட்டுக்கு தொண தொணவென்று நச்சரிக்க உம்மாவுக்கு எரிச்சல் வந்தது;

"இந்தாருடி ...ஏன் கெடந்து நிக்ஹா பண்ணிக்க இந்த அல அலையற ?! "

சுள்ளென்று உம்மா கேட்க ஹமீதாக்காவுக்கு பளாரென்று கன்னத்தில் அறை பட்ட வலி நெடு நேரம் இருந்தது.அதற்குப் பிறகு அவள் நிக்ஹா பேச்சை எடுக்கவே இல்லை.

உம்மாவின் பொட்டு பொடுசு நகைகள் கற்பூரமாகி குடும்பத்தின் வறுமைத் தீயில் எரிந்து பதங்கமாக ஹமீதாக்கா தெரு வாசலில் சும்மா வேடிக்கை பார்க்க கூட வந்து நிற்க முடியாதவளாகிப் போனாள்.அவளுக்கு காது மூக்கில் கூட பொட்டுத் தங்கம் இன்றி பிறர் கண்ணில் காட்சிப் பொருளாவது ரொம்ப அவமானமாகத் தெரிந்தது.

முன்னெல்லாம் ராஜம் டீச்சரின் அம்மா ஊரிலிருந்து வந்தாளானால் ஹமீதாக்கா அந்த முதியவளுடன் சரிக்குச் சரி வாயடிப்பாள்.அந்தம்மாள் பொல்லாதவள் ,ஆனாலும் மகள் பள்ளிக்குப் போய் விட்டால் அப்போதெல்லாம் அவசரத்துக்கு கடைக்குப் போக,ஆஸ்பத்திரிக்குப் போக,முட்டி வலி தைலம் தேய்க்க இப்படி பொழுதை தள்ள ஹமீதாவை தான் நம்பி இருந்தாள் அந்தப் பாட்டியம்மாள்.


அதனால் ஹமீதாக்காவின் மீது நிஜமாய் பாசமே இல்லையென்றாலும் கூட தனக்கு ஹமீதாவென்றால் தனிப் பாசம் என்பதாய் எல்லோரிடமும் காட்டிக் கொள்வாள்,இது ஹமீதாக்காவுக்கும் தெரிந்தே தான் இருந்திருக்கக் கூடுமோ என்னவோ! ஆனாலும் அவள் பாட்டியுடன் மிகுந்த விருப்பத்தோடு தான் எப்போதும் பேசுவாள்,பாட்டி அளந்து விடும் ஊர்க் கதைகள் அதற்கொரு காரணமாய் இருந்திருக்கலாம் .

அந்தப் பாட்டி இன்றைக்குக் காலையில் நிலக்கோட்டையில் இருந்து வந்து இங்கே மகள் வீட்டில் இறங்கி விட்டாள் போலும் ,அடுத்த போர்சனில் பேச்சு களேபரமாய் இருந்தது.இருட்டறையில் அடைந்து கிடந்ததைப் போல புழுங்கிப் போயிருந்த ஹமீதாக்காவுக்கு முகத்தில் லேசாய் குளிர் காற்று பட்டார் போல கொஞ்சம் போல சந்தோசம் எட்டிப் பார்த்தது.


ஆனால் வீட்டை காலி செய்யச் சொல்லி விட்ட நாளில் இருந்து சும்மாவேனும் டீச்சர் வீட்டுக்குப் போய் வருவது நின்று விட்டபடியால் ,பாட்டியே வந்து பேசினால் ஒழிய தான் அங்கே போவதற்கில்லைஎன பேசாமல் சமையல் கட்டின் பின் கதவை திறந்து வைத்துக் கொண்டு மீந்து விட்ட பழைய சோற்றை வட்டிலில் இட்டு செத்துப் போன நாக்கை அரிந்து கீழே வீசி விட்டால் தேவலாம் போல கண்ணை மூடிக் கொண்டு பெரிய பெரிய கவளங்களாக உருட்டி உருட்டி முழுங்கிக் கொண்டிருந்தாள்.அன்றைக்கு அந்த பாழாய்ப் போன உப்புக் கருவாட்டுக்கும் வழி இல்லாத நிலை.

பெரிதாய் வீட்டை காலி பண்ணச் சொல்லி விட்டாள் ராஜம் டீச்சர் ,வீடென்னவோ இப்போதே ஏற்கனவே கழுவித் துடைத்து காலி செய்தார் போலத் தான் இருக்கிறது !

இருக்கும் ஒரே நாடாக் கட்டிலை மடக்கி வாப்பா தலையில் வைத்துக் கொண்டால் அதன் மேலேயே ஓரம் நைந்த இரண்டு கோரைப் பாய்கள் அரிசிக் கடைபையால் உறை தைத்துப் போட்ட மூன்று தலையணைகள்,ஒரே நைலான் மூட்டையில் கட்டி வைத்து விடத் தக்க சில தட்டு முட்டுச் சாமான்கள்,மிஞ்சிப் போனால் துணிமணிகள் அடங்கிய ஒரு ஜாதிக்காய் பெட்டி எஞ்சும் ,அதை ஹமீதாக்காவே கையில் சுமந்து கொண்டு போய் விடலாம்,கிழிந்தது ,ரொம்பப் பழசானது என்று கழித்தால் மொத்தமே பத்து துணிகள் தான் தேறும் அந்தப் பெட்டியில் பிறகென்ன! தூக்கிச்சுமந்து கொண்டு இப்போதே கூட நடையைக் கட்டி விடலாம்,அதொன்றும் பெரிய காரியமில்லை தான்,ஆனால் போவதற்கு போக்கிடம் எது?!

இந்தக் கேள்வி தான் பூதம் போல வீட்டில் மூவரையும் பயம் காட்டிக் கொண்டிருந்தது.

ரஷீதா வீட்டுக்கு ...!

நினைத்தமாத்திரத்தில் ஹமீதாக்காவுக்கு பழைய சோறு புரையேறிக் கொண்டு விக்கியது.சொம்புத் தண்ணீரை மடக் மடக்கென்று குடித்து விட்டு உச்சந்தலையை இடக்கையால் படீர் படீர் என தட்டிக் கொண்டாள்.கண்ணில் நீர் வரும் அளவுக்கு புரையேறி தொண்டை கமறியது ;

என்னடி பொண்ணு நீ ! இப்பிடியா புரை ஏறிப் போற அளவுக்கு வட்டிலப் பார்க்காம சோத்த முழுங்குவ !? பாட்டி தான் ...ஹமீதாக்காவைத் தேடிக் கொண்டு சமையல் கட்டுக்கே வந்து விட்டாள்.

சம்பிரதாயத்துக்காக ...

"வாங்க பாட்டி ...இப்ப தான் வந்தீகளா?"

என்று கேட்டுக் கொண்டே
சாப்பாடு கொள்ளாமல் வட்டிலை கொல்லை கிணற்றடியில் போட்டு விட்டு கை கழுவிக் கொண்டு வந்தாள் ஹமீதாக்கா .

அதற்குள் கால் மூட்டைப் பிடித்துக் கொண்டு கொல்லைப் படிக்கட்டில் அமர்ந்த பாட்டி;
"அடியாத்தி வலி இந்தப் பிடுங்கு பிடுங்குதே ...இந்தா இந்த தைலத்தை போட்டு கொஞ்சம் நீவி விடேண்டி அமீதா "
ஹமீதாக்கா பாட்டில் மூடியை திறந்து கொண்டிருக்கும் போதே ... பாட்டி ;
"ஏன் அமீதா ...வீட்டக் காலி பண்ணச் சொல்லிப்பிட்டாளாமே எம்மக,வந்து எறங்குனதும் அவ சொன்னதை கேட்டோடனே எனக்கு ரொம்ப மனத் தாங்கலா ஆயிடுச்சுடி அமீதாக்குட்டி "

"என்னடி இது உங்களுக்கு வந்த கேடு! என்னப்பனே ஈஸ்வரா கிணற்றுத் திண்டில் சாய்ந்து கொண்டு பாட்டி கொஞ்சம் சோகம் போலக் காட்டிக் கொண்டு தான் இதை சொல்லி இருக்க கூடும்;

ஹமீதாக்கா பதில் சொல்வாள் என்று பாட்டி நினைத்திருக்களாம். பதிலுக்காக அவள் முகத்தையே பார்த்துக் கொண்டிருந்தாள் ,

"காலி பண்ணிட்டு எங்க போகப் போறீங்க ரஷீதா வீட்டுக்கா !?"

அடுத்த கேள்வி பாட்டியிடமிருந்து ;

"பேசாம ரஷீதா வீட்டுக்காரனுக்கே ஒன்னையும் கட்டிக் கொடுத்து குடும்பமா அங்க போய் உட்கார்ந்துக்கலாம்னு நினைக்கார உங்க வாப்பா !?" துப்புக் கெட்ட மனுசன்னா அது உங்க வாப்பா தான் . விசமத்துடன் பதிலை எதிர்பாராமல் பாட்டி பேசிக் கொண்டே இருக்கக் கண்டு ;


ஹமீதாக்காவுக்கு பாட்டியை தர தரவென இழுத்து வெளியில் தள்ளி கதவைப் பூட்டி விட்டு ஒரு மூச்சு ஓவென்று அழுது ஓயவேண்டும் போல ஒரே ஒரு கணம் தோன்றி மறைந்தது .

மிஞ்சி மிஞ்சிப் போன வாடக எம்புட்டு தரிங்க மாசம் 600 ரூவா அதுக்கும் ...ஆறு மாசமா ததிங்கனத்தோம்னா எப்டி சகிப்பாங்க....அதான் போகச் சொல்லிப்பிட்ட போல எம்மக ...சரி விடு யாரோ மிலிட்டரிக் காரன் குடும்பமாம் 1200 ரூவா க்கு சரினுட்டாங்கலாம் அடுவான்சு 20 ,000௦௦௦ ரூவான்னா பார்த்துக்கோ ,
உன் வாப்பா தருவாரா அவ்ளோ பணம்?!

நான் சொல்றதக் கேளு புத்தியாப் பொழைக்கப் பாரு.பேசாம ரஷீதா வீட்டுக்கு போய்டுங்க ,முடிஞ்சா அவ புருஷனையே கட்டிக்கோ ...ஊர் உலகத்துல நடக்காத கதையா!

அதற்கும் ஹமீதாவிடம் பதிலில்லாமல் போக

"என்னடி அமுக்கினி மாதிரி பேசாம உட்கார்ந்திருக்க ...சத்தமே காணோம்"

.பாட்டி என்னவோ ஹமீதாவுக்கு தான் நல்லதொரு உபகாரம் செய்து விட்ட நினைப்பில் சற்று உரக்கவே கேட்டு ...மு...டிக்..க....கூட இல்லை ;

அரிசி புடைக்கும் முறத்தால் ஹமீதா பாட்டியை முழங்கால் ...தோள்பட்டை தலை என்று பேதம் பிரிக்கவே பிடிக்காதவள் போல சாத்து சாத்தென்று சாத்த ஆரம்பித்திருந்தாள் .

அரண்டு போன பாட்டியின் ஓலம் தெரு முக்கு தாண்டி கேட்டிருக்க கூடும் .

ஆனால் அசரவில்லை ஹமீதாக்கா.

தடுக்க வந்த உம்மாவுக்கு காலால் எட்டி ஒரு உதை. வாப்பாவுக்கு நல்ல செந்தமிழில் அர்ச்சனை ,இத்தனைக்குப் பின் கிட்டே வர ராஜம் டீச்சர் என்ன பைத்தியமா!?

ஹமீதாக்காவுக்கு என்ன ஆச்சு!

ஒருத்தருக்கும் தெரியாது தான் .

ஆனால் தெரிந்தார் போலத் தான் தங்களுக்குள் தினம் பேசிக் கொள்கிறார்கள்.

"அவளுக்கு பேய் பிடிச்சிருக்கு ."

அவளுக்கு சித்த பிரமை ...

அவளுக்குப் பைத்தியம்...

அவள முனி அடிச்சிருச்சு etc ...etc .

நீங்க சொல்லுங்க ஹமீதாக்காவுக்கு என்ன தான் ஆச்சு ?!

20 comments:

முகிலன் said...

ரொம்ப நல்லா இருக்கு. ஆனா ஹமீதாக்காவை உபயோகப்படுத்தியதால் எதிர்ப்புகள் வர வாய்ப்பு இருக்கிறது.. ஜாக்ரத.

ஆதவா said...

ஹமீதாவுக்கு பேயும் பிடிக்கவில்லை, பிசாசும் பிடிக்கவில்லை. அவள் பெண்.. அவளுக்கு பெண்மையும் மனவியல் சார்ந்த அறுவறுப்பும் பிடித்திருக்கலாம்.
ஏழை என்பதாலோ, வக்கில்லாதவள் என்பதாலோ இரண்டாம்தாரம் ஆகிக் கொண்டு இன்று இருக்கவில்லை. அவளுக்குள் இருக்கும் ஆசைகள், அவை வயிற்றுக்குப் போக மீதியாகத்தான் இருக்கும். அதை பாட்டி போன்றவர்கள் மிதிப்பது முடியாமல்தான் அவள் மொத்தியிருக்கிறாள் என்று நினைக்கிறேன்! (சீரியஸா பதில் சொல்லிட்டி இருக்கேனோ?)

உங்கள் எழுத்தில் இருக்கும் யதார்த்தமும், எழுத்து நடையும், வட்டாரமொழி ஆளுகையும் ரசிக்க வைக்கிறது. சிற்சில இடங்களில் இன்னும் ரசித்தேன்...

வறுமைத் தீயில் எரிந்து பதங்கமாக

வீடென்னவோ இப்போதே ஏற்கனவே கழுவித் துடைத்து காலி செய்தார் போலத் தான் இருக்கிறது !

பாட்டி, ரஷீதா கணவனுக்குக் கட்டிக் கொடுப்பதை, “ துப்புக் கெட்ட மனுசன்னா அது உங்க வாப்பா தான் என்று சொல்லிவிட்டு பிறகு அப்படியே தோசையைத் திருப்பிப் போடுவதைப் போன்று நான் சொல்றதக் கேளு புத்தியாப் பொழைக்கப் பாரு.பேசாம ரஷீதா வீட்டுக்கு போய்டுங்க ,முடிஞ்சா அவ புருஷனையே கட்டிக்கோ . என்று சொல்லுவது கொஞ்சம் இடறிப் போகிறது வாசிக்கையில்!!

அன்புடன்
ஆதவா

KarthigaVasudevan said...

நன்றி முகிலன் ...
அடடா...பெயரில் என்ன இருக்கிறது?ஹமீதாவுக்குப் பதில் வள்ளியோ...மல்லிகாவோ...டெய்சியோ பெயரை மாற்றிப் போட்டுப் படித்துக் கொள்ள வேண்டியது தான்.பேச்சு வழக்கையும் தான், :)

நீண்ட விளக்கமான பின்னூட்டத்துக்கு நன்றி ஆதவா ...

நீங்கள் சொல்வது சரி தான்.ஹமீதாவுக்கு உளவியல் பிரச்சினை தான்.பேயோ...பைத்தியமோ இல்லை.

அவ்வை சொன்ன மொழிக்கு ஏற்ப

"கொடிது கொடிது வறுமை கொடிது
அதனினும் கொடிது
இளமையில் வறுமை." இதை புரிந்து கொள்ளத் தான் அங்கே ஆட்கள் இல்லை

முத்துலெட்சுமி/muthuletchumi said...

முஸ்லீம் ல பெண்டாட்டியோட தங்கச்சிய கட்டமாட்டாங்கன்னு படிச்ச ஞாபகம்..
மத்தபடி கதை வழக்கம்போல உங்களோட விரிவான விவரணைகளோட நல்லா இருக்கு..

நசரேயன் said...

//நீங்க சொல்லுங்க ஹமீதாக்காவுக்கு
என்ன தான் ஆச்சு //

படிச்ச எனக்குத்தான் என்னவோ ஆகிபோச்சி..

நசரேயன் said...

//
ஹமீதாக்காவை உபயோகப்படுத்தியதால் எதிர்ப்புகள் வர வாய்ப்பு இருக்கிறது.. ஜாக்ரத.
//

ஏன் இந்த கொலை வெறி ?

முகிலன் said...

//அடடா...பெயரில் என்ன இருக்கிறது?ஹமீதாவுக்குப் பதில் வள்ளியோ...மல்லிகாவோ...டெய்சியோ பெயரை மாற்றிப் போட்டுப் படித்துக் கொள்ள வேண்டியது தான்.பேச்சு வழக்கையும் தான், :)//

பேர்ல ஒன்னும் இல்லைங்கிறது உங்களுக்கும் எனக்கும் புரியும். மதக்கண்ணாடியைப் போட்டுட்டு இருக்கிற சில பேருக்குப்புரியாதே 

தமிழ் பிரியன் said...

நல்ல மொழி வழக்கு!பாவம் ஹமீதா.. இதுமாதிரி நிறைய ‘பேய்களை’ ஊரில் பார்க்க முடியும்.. :(

வல்லிசிம்ஹன் said...

வறுமையின் கோரம். நிறையத் தாக்குகிறது. வெகு நாட்களுக்குப் பிறகு இயல்பான கதையைப் படித்த திருப்தி.வாழ்த்துகள் கார்த்திகா.

நட்புடன் ஜமால் said...

முதிர்கண்ணிகளின் நிலை ...

வேறென்ன சொல்ல

வட்டார வழக்குகள் நிறைய தெரிஞ்சி வச்சிருக்கீங்க,

R.Gopi said...

ஹமீதாக்கா.......

படிச்ச உடனே நெஞ்சுல பச்சக்னு பதிஞ்சுட்டாங்க....

அவங்களோட சோகத்த சரியா புரிஞ்சுக்க தான் ஆளில்ல....

ஆதவா, ஜமால் சொன்னது போல், வட்டார பேச்சு வழக்கு அப்படியே எழுத்தில் கொணர்ந்தமை நன்று...

நல்லா இருக்கு.......

ஹுஸைனம்மா said...

அக்காவை விடுத்து, தங்கையை “ஹமீதாக்கா” என்று அழைப்பதும் வித்தியாசமாக இருக்கு.

எல்லாம் சேர்ந்த ஒரு இயலாமைக்கு வடிகாலாக, அந்தப் பாட்டி கிடைத்ததும் அடி பின்னிவிட்டாள் போல - சாது மிரண்டால் என்ற கதையாக!!

இரு சகோதரிகளை ஒருசேரத் திருமணம் செய்ய அனுமதியில்லை இஸ்லாத்தில். அதனாலும் வந்த கோபமாக இருக்கலாம்!!

KarthigaVasudevan said...

நன்றி முத்துலெட்சுமி ... (நீங்க சொன்னதையே ஹூசைனம்மா கூட சொல்லி இருக்காங்க பாருங்க...விசாரிச்சிட்டு திருத்திடறேன் )

நன்றி நசரேயன் ...(என்ன ஆச்சு ஹமீதாவுக்கு இல்ல...உங்களுக்கு?! :)

நன்றி முகிலன் ...(மதக் கண்ணாடி அணிபவர்களை புறந்தள்ளி விட்டால் முடிந்தது விஷயம்.ரொம்பவும் பயமுறுத்தாதிர்கள் முகிலன் :)) )

நன்றி தமிழ் பிரியன் ...

நன்றி வல்லிம்மா ...

நன்றி ஜமால் ...

நன்றி R .gobi ...

நன்றி ஹூசைனம்மா ...(இஸ்லாத்தில் அப்படி ஒரு முறை பின்பற்றப் படுவது எனக்குத் தெரியாது ,பிழையை திருத்தியமைக்கு நன்றி ஹூசைனம்மா ,இந்த ஹமீதா இதற்காகத் தான் அந்தப் பாட்டியை அடித்தாள் என்பது நான் அறிந்த நிஜ செய்தி,பெயர்களை மாற்றி உள்ளேனே தவிர சம்பவம் நிஜமே ,எதற்கும் ஒரு முறை விசாரித்து விட்டு மீண்டும் திருத்தி விடுகிறேன் )

ஜெய்லானி said...

@@@முத்துலெட்சுமி/muthuletchumi //முஸ்லீம் ல பெண்டாட்டியோட தங்கச்சிய கட்டமாட்டாங்கன்னு படிச்ச ஞாபகம்.. //


சரியா சொன்னீங்க... ஒரே நேரத்துல அக்காவும் தங்கையும் ஒரு ஆணுக்கு மனைவியா இருக்க முடியாது . அதுக்கு இஸ்லாத்தில் அனுமதி இல்லை. ஹுஸைனம்மா சொன்னதும் சரிதான்.


இந்த ஒரு பாயிண்ட் கதையின் அஸ்திவரத்தையே ஆட்டம் கான வைத்து விடும். மாற்ற முயற்சி செய்யுங்க.

ஜெய்லானி said...

//நன்றி முகிலன் ...(மதக் கண்ணாடி அணிபவர்களை புறந்தள்ளி விட்டால் முடிந்தது விஷயம்.ரொம்பவும் பயமுறுத்தாதிர்கள் முகிலன் :)) )//


இதில மதக்கண்ணாடி ஒன்னும் இல்லைங்க .இல்லாத விஷயத்தை இல்லைன்னு எடுத்து சொல்றது மட்டுமே.

KarthigaVasudevan said...

நன்றி ஜெய்லானி...

நீங்கள் சொல்வது சரியே ...ஆனால் நான் எழுதியதிலும் தவறு இல்லை .

என் உயர்நிலைப்பள்ளிகாலத்தில் நாங்கள் வசித்த தெருவில் பல வருடங்களுக்கு முன்பு நான் பார்த்த ஒரு நிஜ சம்பவம் தான் இன்று இந்தக் கதையானது ,கதையில் நான் மாற்றியது பெயர்களை மட்டுமே,நிஜத்தில் ரஷீதா ஹமீதாவுக்கு உடன்பிறந்த சகோதரி இல்லை பெரியப்பா மகள்...சிறுவயதில் பெற்றோரை இழந்து விட்ட ரஷீதாவை வளர்த்து திருமணம் செய்து வைத்தது ஹமீதாவின் பெற்றோரே.எப்படிப் பார்த்தாலும் ரஷீதா ஹமீதாவுக்கு சகோதரி தான்,

மேலும் இந்தக் கதையை ஹமீதாவின் மனநலன் சார்ந்த கோபத்தை மையமாக்கி மட்டுமே எழுதினேனே தவிர முஸ்லிம்களின் திருமணச் சட்டங்கள் ,கட்டு திட்டங்களை தெரிந்து கொண்டு நான் எழுதவில்லை,

கதையில் வரும் பாட்டி ஹமீதாவின் ஏழ்மையை மிக கேவலமாக குத்திக் காட்டுவதால் ஏற்கனவே மனம் நொந்திருந்த அவளுக்கு நொடியில் சூழல் மறந்து தன்னிலை தாளாத ஆத்திரத்தில் தன்னை மறந்து எல்லோரையும் அடிக்கத் தொடங்கி விடுகிறாள்.பாட்டிக்கு முஸ்லிம் திருமண முறைகளைப் பற்றி போதிய தெளிவில்லாமல் இருக்கலாம் ,அல்லது வேண்டுமென்றே விசமத் தனமாகக் கூட ரஷீதாவின் கணவனை மணந்து கொள்ளுமாறு கூறி இருக்கலாம்.வயதானாலும் கூட விசமித் தனம் நிறைந்த பாட்டிகளை கண்டதில்லையா நீங்கள்?!

"குட்டி " என்றொரு குறும்படம் அதில் இப்படிப் பட்ட ஒரு பாத்திரத்தை எம்.என் .ராஜம் செய்திருப்பார். ,அதாவது தன்னை விட பிறரை மட்டமாக மதிப்பது பேசுவது என அவர்கள் மனநிலை மிகக் குறுகிப் போயிருக்கும்.

இதை தான் இந்தக் கதை பேசுகிறது.

முடிவாக இந்த ஒரு பாயிண்ட்டை மாற்றினால் கதையே இல்லையென்று ஆகி விடக் கூடும் ,அப்படிப் பார்த்தால் இந்தக் கதையை முழுதாக நீக்கினால் தான் உண்டு.
:)

இன்னொரு விஷயம் சொல்லியாக வேண்டுமே;

கடந்த மாதம் என் தம்பியின் அலுவலகத்தில் பனி புரியும் ஒரு பெண் தனது திருமண அழைப்பிதழ் கொண்டு வந்து கொடுத்தாளாம் நண்பர்களுக்கு ,மணமகன் அவளது சித்தப்பா மகனாம் !!! விமர்சனங்கள் குவிந்தாலும் திருமணம் குறித்த நாளில் நடக்கத்தான் போகிறதாம் .இந்து திருமணச் சட்டம் சகோதர முறை உள்ளவர்களை மணக்க அனுமதிப்பதில்லை,

ஆனால் நானறிந்து ரத்த சொந்தங்கள் அல்லாது பிற சுற்று வழி உறவுமுறைகளில் சகோதர உறவுமுறைகளில் வரன் அமையும் போது ...முன்னைப் போல தவிர்க்காமல் சில இடங்களில் திருமணம் செய்து வைத்து விடுகிறார்கள். சமீப காலத்திய மணமகள் பஞ்சமே கூட இதற்கொரு காரணமாக இருக்குமோ என்னவோ?!

ஜெய்லானி said...

//நிஜத்தில் ரஷீதா ஹமீதாவுக்கு உடன்பிறந்த சகோதரி இல்லை பெரியப்பா மகள்...//

இது ஓக்கே....

//முன்னைப் போல தவிர்க்காமல் சில இடங்களில் திருமணம் செய்து வைத்து விடுகிறார்கள். சமீப காலத்திய மணமகள் பஞ்சமே கூட இதற்கொரு காரணமாக இருக்குமோ என்னவோ?! //


தெளிவா சொல்லிகிட்டு வந்த நீங்க இதில கொழம்பிட்டீங்க ..நெருங்கிய உறவு முறையில் திருமணம் என்ற பேச்சுக்கே இடமில்லை. தெரிந்தே செய்தாலும் தெரியாமல் செய்தாலும்.

KarthigaVasudevan said...

// ரத்த சொந்தங்கள் அல்லாது பிற சுற்று வழி உறவுமுறைகளில் சகோதர உறவுமுறைகளில் வரன் அமையும் போது ...முன்னைப் போல தவிர்க்காமல் சில இடங்களில் திருமணம் செய்து வைத்து விடுகிறார்கள். //

ரத்த சொந்தங்கள் அல்லாத சுற்று வழி உறவுகள்னு தான் சொல்லி இருக்கேன் ஜெய்லானி :)

நீங்க தான் குழம்பி போய்டிங்க. :)

இன்று கூகுள் பஸ்ஸில் நான் பகிர்ந்து கொண்ட தகவல் :

கடந்த மாதம் என் தம்பியின் அலுவலகத்தில் பணி புரியும் ஒரு இந்து மதப்பெண் தனது திருமண அழைப்பிதழ் கொண்டு வந்து கொடுத்தாளாம் நண்பர்களுக்கு ,மணமகன் அவளது சித்தப்பா மகனாம் !!! விமர்சனங்கள் குவிந்தாலும் திருமணம் குறித்த நாளில் நடக்கத்தான் போகிறதாம் .இந்து திருமணச் சட்டம் சகோதர முறை உள்ளவர்களை மணக்க அனுமதிப்பதில்லை,
ஆனால் நானறிந்து ரத்த சொந்தங்கள் அல்லாது பிற சுற்று வழி உறவுமுறைகளில் சகோதர உறவுமுறைகளில் வரன் அமையும் போது ...முன்னைப் போல தவிர்க்காமல் சில இடங்களில் திருமணம் செய்து வைத்து விடுகிறார்கள்.வசதி வாய்ப்புகள், பணம் ...மனம் தாண்டி சமீப காலத்திய மணமகள் பஞ்சமே கூட இதற்கொரு காரணமாக இருக்குமோ ?!

ஹுஸைனம்மா said...

ஜெய்லானி, அவங்க கடைசியா உதாரணமாச் சொல்றது ஒரு இந்துப் பெண்ணின் கல்யாணத்தை. இந்துக்கள் தமது சித்தப்பாவின்/சித்தியின் பிள்ளைகளை மணப்பது வழக்கம் இல்லை என்பதால், இது விமர்சனத்துக்குக்குள்ளாகி இருக்கிறது. நானும் சில இடங்களில் கேள்விப்பட்டிருக்கிறேன்; ஆனால் அவை காதல் திருமணங்கள். மற்றபடி கார்த்திகாவின் விளக்கம் தெளிவாகவே உள்ளது என்று நினைக்கிறேன்.

ஜெய்லானி said...

@@@ஹுஸைனம்மா--//ஜெய்லானி, அவங்க கடைசியா உதாரணமாச் சொல்றது ஒரு இந்துப் பெண்ணின் கல்யாணத்தை.//

அப்ப சரிதான் . :-)