சொல்லில் இருந்து மௌனத்துக்கு ' எனும் பௌத்த அய்யனாரின் நேர்காணல்கள் தொகுப்பு ஒன்று வாசிக்கக் கிடைத்தது ,தமிழின் சிறந்த படைப்பாளிகளுடனான அவரது நேர்காணல்கள் இந்த தொகுப்பில் பதியப் பட்டுள்ளன ,புத்தகத்தை புரட்டியதில் நகுலனின் நேர்காணல் தட்டுப் பட என்னைக் கவர்ந்த கேள்வி பதில்களை மட்டும் இங்கே பகிர்ந்திருக்கிறேன்.
ஏமாற்றம் ,ஏமாற்றம்,ஏமாற்றம் தான் மிச்சம் - நகுலன் .
திருவனந்தபுரம் Marivanious ' கல்லூரியில் முப்பது ஆண்டுகள் ஆங்கிலப் பேராசிரியராகப் பணி புரிந்து ஓய்வு பெற்று ,திருவனந்தபுரத்தில் வசிக்கும் டி.கே.துரைசாமியின் இலக்கியப் பெயர் நகுலன் .
உங்களோட கதை ,கவிதை ,நாவல் எதை எடுத்தாலும் "சுசிலா" என்ற பெயர் தொடர்ந்து வருகிறதே ?
இதப்பத்தி அசோகமித்திரன் ரொம்பப் பிரமாதமா எழுதிஇருக்கார் ,'சுசிலாங்கறது ' ஒரு அய்க்கண்,ஐக்கண்டா உங்களுக்குத் தெரியுமோ ? ஐக்கண்ணு சொன்னா நாம சரஸ்வதி தேவியை தெய்வமா பூஜிக்கறோம்,அந்த தெய்வாம்சம் தவிர்த்து,அவளோட Body Relation வச்சுண்டா நாம் தொலைஞ்சோம்.ஒவ்வொரு பொண்ணும் ஒரு தெய்வாம்சம்,அதா நான் மறுக்கல,மதிக்கறேன். 'சுசிலா இருக்கான்னு சொன்னா ,அந்த அம்மா மனசு எவ்வளவு வருத்தப் படும் ,இது தெய்வீகமான உறவாக்கும்,அதனால 'சுசிலா இருக்கா இல்ல' 'சுசிலாவின் சிறப்பு சுசிலாவிடம் இல்லை ' இப்படி ஞானக்கூத்தன் எழுதினர்.
எழுத்து பத்திரிகையில் எப்படி எழுத ஆரம்பிச்சிங்க ?
அவாளுக்கு எழுத ஆள் கிடைக்கலை,எழுத்துக்கு நானாத்தான் எழுத ஆரம்பிச்சேன் ,வேற ஒருத்தரும் என்னோட எழுத்த போடா மாட்டா ,அப்போ ஆனந்த விகடனும் போடா மாட்டா .
ஆனந்த விகடனும் போடறதா இருந்தா அனுப்பி இருப்பிங்க இல்ல ?
ஆமா ,ஒன்னும் பிரச்சினை இல்லை,எழுத்துக்கு கதை அனுப்பினேன் ,போட்டா .அதனால தொடர்ந்து எழுதினேன் ,அப்புறம் கா.நா.சு க்கு என்கிட்டே பெரிய மதிப்பு,அவரது 'இலக்கிய வட்டம்' பத்திர்கையில எது எழுதினாலும் போடுவா .'செல்லப்பா'க்கு தான் பெரிய குரு ,தான் சொன்ன படி தான் நடக்கனும்னுட்டு நெனப்பார்.க.நா.சு கிட்ட இது கிடையாது ,அதுக்கப்புறம் 'நடையில் ' கொஞ்சம் எழுதி இருக்கேன் .
அந்தக் காலத்துல உங்களோட எழுத ஆரம்பிச்சவங்க யார் யார்?
ராஜகோபாலன் ,முத்துச்சாமி சிறுகதை எழுதி இருக்கார் ,அப்புறம் தெரு நாடகம் எழுதினர் ,என்ன காரணம் தெரியுமோ ? Board Foundation -லேர்ந்து அனுமத் கொடுத்தா ,அதிலேர்ந்து அவர் திசை மாறினார் .'நீர்மை'ன்னு நல்ல சிறுகதைத் தொகுப்பு வந்திருக்கு ,அதிலேர்ந்து விட்டுட்டார் ,பசுவய்யா எழுதினர் .பசுவய்யா திறமைசாலி.
பிரமிள் ?
Gifted Fellow .அவர் நல்ல திறமையான எழுத்தாளர்,என்னைப் பத்தி சிறப்பா எழுதி இருக்கார்,என்னைப் பத்தி மகா மோசமாகவும் எழுதி இருக்கார் ,நல்ல கவிஞர் , 'கண்ணாடியுள்ளிருந்து ' 'கைப்பிடியளவு கடல்' - இதெல்லான் நேக்குப் பிடிச்சது ,அவருக்கு ரத்த அழுத்தம் கூடி பக்கவாதம் வந்து செத்துட்டார் ,என்ன செய்யிறது.
உங்களை பாதிச்ச தமிழ் எழுத்தாளர்கள் ?
புதுமைப் பித்தன்,மௌனி,லா.ச.ரா,அழகிரி சாமி ,அப்புறம் ஒரு கட்டம் வரை ஜெய காந்தன் .
முதல்ல உங்கள எழுதத் தூண்டியது யார்?
க.நா.சு
ஜெயமோகன் ,தமிழில் நாவல் என்ற வடிவத்தை சரியாகப் பயன்படுத்தவில்லை என்கிறாரே ?
அவர்,தமிழின் முதல் நாவல் 'பிரதாப முதலியார் சரித்திரம்' 'பத்மாவதி சரித்திரம்','கமலாம்பாள் சரித்த்திரம் ' இதை எல்லாம் சரியான முறையில் படித்தாரா? மகாபாரதத்தில் கதை,உப கதை,மிருகங்கள் எல்லாம் வருகின்றன,மகாபாரதத்தை முழுசாகப் படிச்சிருக்காரா? தமிழில் நாவலுக்கென்று தனி உருவம் இருக்கிறதுன்னு அவருக்குத் தெரியுமா? ஆங்கில இலக்கியத்தை முறையாகப் படித்திருக்கிறாரா? எதையும் ஓங்கி அடித்துச் சொல்வது காலப் போக்கில் எடுபடாது .
உங்களுக்குப் பிடித்த இந்திய எழுத்தாளர் ?
மலையாளம் நிறைய வாசிச்சிருக்கேன் ,பஷீர் தான் எனக்குப் பிடிச்ச எழுத்தாளர் ,அவர மாதிரி தமிழ்ல எழுத யாரும் இல்ல,கன்னடத்துல மாஸ்தி வெங்கடேச ஐயங்கார் ,வங்காளத்தில் "ஆரோக்கிய நிகேதனம் " மிகவும் விருப்பமான நாவல்.
Monday, July 4, 2011
நகுலன் - நேர்காணல் (பௌத்த அய்யனார்)
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment