Monday, July 18, 2011

என் ப்ரிய சோபி ( சிநேகிதிக்கு )

சோபி (சோபனா ) யிடம் பேச வேண்டும் என்று தினமும் நினைத்துக் கொள்வேன் ,ஆனால் நிரந்தரமாக அது முடியாமலே போய் விடுமோ என்றிருக்கிறது இப்போதெல்லாம் . மதி கடந்த வாரம் என்னிடம் பேசுகையில் பகிர்ந்து கொண்ட விசயங்களில் மனம் கனத்துப் போனது .

"கார்த்தி ரொம்ப நாள் கழிச்சு போன வாரம் ஒரு வெள்ளிகிழமை சோபி எனக்கு போன் பண்ணி பேசினா "

"சோபியா உனக்குப் பேசினாளா ! என்கிட்டே அவ பேசி வருசக் கணக்காகுதே மதி !

"ம்ம் ...ப்ளீஸ் உன்கிட்ட பேசலன்னு அவள கோச்சுக்காத கார்த்தி "

"கோச்சுக்கலாம் இல்ல ..ஆனா ஏன் மதி ? அவ ஏன் என்கிட்டே பேசாமலே இருக்கா ?"

"சோபி ரொம்பப் பாவம் கார்த்தி "

" ஏன் என்னாச்சு ?"

"அவ போன் எடுத்ததும் என்கிட்டே என்ன சொன்னா தெரியுமா? "

"...................."

"எப்டி இருக்க சோபின்னு மட்டும் என்கிட்டே கேட்டுடாத மதி ...நான் தாங்க மாட்டேன் இந்த வார்த்தைய -இதான் சொன்னா போன் எடுத்து நான் ஹலோ சொன்னதும்"

"எப்டி இருக்கன்னு கேட்கக் கூடாதா !!! ஏன் சோபிக்கு அப்டி என்ன ஆச்சு ?

"அவ ஹஸ்பண்ட்க்கு ப்ளட் கேன்சராம் கார்த்தி ,இங்க தான் அடையார் கேன்சர் இன்ஸ்ட்யூட்ல ட்ரீட்மென்ட் எடுக்கறாங்களாம். "

"என்ன சொல்ற மதி , ஷாக்கிங்கா இருக்கு எனக்கு . "

"ஆமாம் கார்த்தி ...கல்யாணம் ஆகி முதல் குழந்தை டெலிவரி ஆகா ரெண்டுமாசம் முன்னவே தெரிஞ்சிடுச்சாம் கேன்சர் இருக்கறது ,அப்போல இருந்து அவ நாம் பிரெண்ட்ஸ் யார்கிட்டயும் பேசறதே இல்லையாம்... பினான்சியலா வசதி இருந்தும் கூட மனசளவுல அவள ரொம்பக் கஷ்டப்படுத்தறாங்க போல கார்த்தி அவ ஹஸ்பண்ட் வீட்ல "

"கஷ்டப்படுத்தறாங்களா சோபியவா ? சோபி ன்னா நம்ம காலேஜ் ,ஜூனியர் ஸ்டூடண்ட்ஸ் லெக்சரர்ஸ் ,பிரெண்ட்ஸ் வீடுகள் இப்டி எல்லாருக்கும் பிடிக்குமே மதி ,அவ எவ்ளோ அருமையான பொண்ணு ,அவள ஏன் கஷ்டப்படுத்தனும் ! அவ பொண்ணுக்கு எத்தனை வயசாகறது இப்போ ,குழந்தை எங்க இருக்காளாம்?"

"அது ஒரு பெரிய கொடுமை கார்த்தி ,குழந்தை பிறந்த நேரம் தான் அது அப்பாக்கு இப்டி ஆயிடுச்சுன்னு கரிச்சு கொட்டினதுல குழந்தைய சோபி அம்மா வீட்ல கேரளால வளர்க்கறாங்கலாம். அது அவங்க அப்பா முகத்தையே பார்க்க கூடாதாம் ,ஜாதகம் அப்டி இருக்குன்னு நம்பறாங்க அவ ஹஸ்பண்ட் வீட்ல "

"ஏன் இப்டி ஆயிடுச்சு சோபிக்கு ?"

"எனக்கு ஒரு வாரமா தூக்கமே வரலை கார்த்தி ,நம்ம சோபிக்கு இப்டி ஆயிருக்க கூடாதுன்னு தினம் நான் இவர்கிட்ட சொல்லிட்டே இருக்கேன்,வேணும்னா ஒரு தடவ சென்னைக்கு போய் அவளை பார்த்துட்டு வேணா வாயேன் இங்கருந்தே சும்மா புலம்பிட்டே இருந்தா என்ன புண்யம்கறார் எங்க பாவா "

"ம்ம்...அவர் சொல்றதும் சரி தான் ,ஆனா நீ இரு ,நான் சென்னைல தான இருக்கேன் அவ நம்பர் தா ,நான் போய் பார்க்கறேன் அவள ,அப்றமா வீக் எண்ட்ல நீ வா"

"நோட் பண்ணிக்கோ கார்த்தி **********"

"சரி மதி நான் அவகிட்ட பேசிட்டு போய் பார்க்கறேன் ,அப்றமா உனக்கு சொல்றேன்"

"சரி ...குழந்தைங்க ஸ்கூல் வேன் வர டைம் நான் அப்றமா பேசறேன் கார்த்தி "

"எனக்கும் தான் ....சரி மதி "

நாங்கள் இருவரும் இப்படிப் பேசிக் கொண்டு மூன்று மாதங்கள் ஆகின்றன .

அதற்குப் பிறகும் நான்கைந்து முறை சோபி விசயமாகப் பேசிக் கொண்டோம் தான்.

ஆனால் இன்று வரை சோபியை நாங்கள் போய் பார்த்திருக்க வாய்க்கவே இல்லை ,அவளோ அவளது கணவரோ அடையாறு கேன்சர் இன்ஸ்ட்யூட்டில் இல்லை. அவளது ஊருக்கு தொலை பேசலாம் என்றால் பழைய எண்கள் எதுவும் இப்போது வேலைக்காகவில்லை.எல்லாம் மாறி இருந்தன. அவளை எப்படித் தொடர்பு கொள்வதென்று புரியவில்லை.வீட்டில் கம்பியூட்டர் இருக்குமா என்பதை விட அப்படியே இருந்தாலும் அவளுக்கு அதைப் பயன்படுத்தும் உரிமைகளும் சுதந்திரமும் இருக்குமாவென்பது கேள்விக்குறி.

சோபி ,நான்,மதி,சுபா,பரிமளா , நான்கு பெரும் காலேஜ் நாட்களில் நாங்க நாலு பேர் கணக்காக சுற்றிக் கொண்டிருப்போம் .ஒரே டிபன் பாக்ஸில் நான்கு பேருக்கும் லஞ்ச்,கேம்ப் பில் கலந்து கொண்டாலும் டூர் போனாலும் ஏன் சில சமயம் லீவ் எடுப்பதென்றாலும் கூட சொல்லி வைத்து கூட்டாகச் செய்வது . செமஸ்டர் விடுமுறைகளில் ஒருவர் மாற்றி ஒருவர் வீடுகளில் மொத்தமாய் டேரா போட்டு மொத்தக் கல்லூரிக் கதைகளையும் விடாது பேசி பிழிந்து காய வைப்பது இப்படி இருந்தவர்கள் தான் .இப்போது திசைக்கொருவராய் இருந்தாலும் மற்றவர்களுடன் எப்போதாவது அலைபேசி விட முடிகிறது .


என் பிரியா சோபி உன்னுடன் கல்லூரி நாட்களின் பின் எனக்கும் உனக்கும் குழந்தை பிறக்கும் முன் எண்ணி இரண்டே முறை தான் பேச முடிந்தது.இதற்கு நானும் காரணம் அல்ல ,நீயும் காரணம் அல்ல .எனக்கது புரிந்தே இருக்கிறது.நீயாக தொடர்பு கொண்டால் தவிர உன்னைப் பற்றி அறிந்து கொள்ள முடியாத இந்த வாழ்வியல் சூழலை என்னவென்பது?


கனத்துப் பெயர்கின்றன நிமிடங்கள் .

1 comment:

நட்புடன் ஜமால் said...

மனசு கனத்து தான் போச்சு

ஏதும் சொல்ல முடியல‌

எமது பிரார்த்தனைகள் உங்கள் தோழிக்கும் அவர்கள் குடும்பத்திற்கும்