Showing posts with label கடிதம். Show all posts
Showing posts with label கடிதம். Show all posts

Monday, July 18, 2011

என் ப்ரிய சோபி ( சிநேகிதிக்கு )

சோபி (சோபனா ) யிடம் பேச வேண்டும் என்று தினமும் நினைத்துக் கொள்வேன் ,ஆனால் நிரந்தரமாக அது முடியாமலே போய் விடுமோ என்றிருக்கிறது இப்போதெல்லாம் . மதி கடந்த வாரம் என்னிடம் பேசுகையில் பகிர்ந்து கொண்ட விசயங்களில் மனம் கனத்துப் போனது .

"கார்த்தி ரொம்ப நாள் கழிச்சு போன வாரம் ஒரு வெள்ளிகிழமை சோபி எனக்கு போன் பண்ணி பேசினா "

"சோபியா உனக்குப் பேசினாளா ! என்கிட்டே அவ பேசி வருசக் கணக்காகுதே மதி !

"ம்ம் ...ப்ளீஸ் உன்கிட்ட பேசலன்னு அவள கோச்சுக்காத கார்த்தி "

"கோச்சுக்கலாம் இல்ல ..ஆனா ஏன் மதி ? அவ ஏன் என்கிட்டே பேசாமலே இருக்கா ?"

"சோபி ரொம்பப் பாவம் கார்த்தி "

" ஏன் என்னாச்சு ?"

"அவ போன் எடுத்ததும் என்கிட்டே என்ன சொன்னா தெரியுமா? "

"...................."

"எப்டி இருக்க சோபின்னு மட்டும் என்கிட்டே கேட்டுடாத மதி ...நான் தாங்க மாட்டேன் இந்த வார்த்தைய -இதான் சொன்னா போன் எடுத்து நான் ஹலோ சொன்னதும்"

"எப்டி இருக்கன்னு கேட்கக் கூடாதா !!! ஏன் சோபிக்கு அப்டி என்ன ஆச்சு ?

"அவ ஹஸ்பண்ட்க்கு ப்ளட் கேன்சராம் கார்த்தி ,இங்க தான் அடையார் கேன்சர் இன்ஸ்ட்யூட்ல ட்ரீட்மென்ட் எடுக்கறாங்களாம். "

"என்ன சொல்ற மதி , ஷாக்கிங்கா இருக்கு எனக்கு . "

"ஆமாம் கார்த்தி ...கல்யாணம் ஆகி முதல் குழந்தை டெலிவரி ஆகா ரெண்டுமாசம் முன்னவே தெரிஞ்சிடுச்சாம் கேன்சர் இருக்கறது ,அப்போல இருந்து அவ நாம் பிரெண்ட்ஸ் யார்கிட்டயும் பேசறதே இல்லையாம்... பினான்சியலா வசதி இருந்தும் கூட மனசளவுல அவள ரொம்பக் கஷ்டப்படுத்தறாங்க போல கார்த்தி அவ ஹஸ்பண்ட் வீட்ல "

"கஷ்டப்படுத்தறாங்களா சோபியவா ? சோபி ன்னா நம்ம காலேஜ் ,ஜூனியர் ஸ்டூடண்ட்ஸ் லெக்சரர்ஸ் ,பிரெண்ட்ஸ் வீடுகள் இப்டி எல்லாருக்கும் பிடிக்குமே மதி ,அவ எவ்ளோ அருமையான பொண்ணு ,அவள ஏன் கஷ்டப்படுத்தனும் ! அவ பொண்ணுக்கு எத்தனை வயசாகறது இப்போ ,குழந்தை எங்க இருக்காளாம்?"

"அது ஒரு பெரிய கொடுமை கார்த்தி ,குழந்தை பிறந்த நேரம் தான் அது அப்பாக்கு இப்டி ஆயிடுச்சுன்னு கரிச்சு கொட்டினதுல குழந்தைய சோபி அம்மா வீட்ல கேரளால வளர்க்கறாங்கலாம். அது அவங்க அப்பா முகத்தையே பார்க்க கூடாதாம் ,ஜாதகம் அப்டி இருக்குன்னு நம்பறாங்க அவ ஹஸ்பண்ட் வீட்ல "

"ஏன் இப்டி ஆயிடுச்சு சோபிக்கு ?"

"எனக்கு ஒரு வாரமா தூக்கமே வரலை கார்த்தி ,நம்ம சோபிக்கு இப்டி ஆயிருக்க கூடாதுன்னு தினம் நான் இவர்கிட்ட சொல்லிட்டே இருக்கேன்,வேணும்னா ஒரு தடவ சென்னைக்கு போய் அவளை பார்த்துட்டு வேணா வாயேன் இங்கருந்தே சும்மா புலம்பிட்டே இருந்தா என்ன புண்யம்கறார் எங்க பாவா "

"ம்ம்...அவர் சொல்றதும் சரி தான் ,ஆனா நீ இரு ,நான் சென்னைல தான இருக்கேன் அவ நம்பர் தா ,நான் போய் பார்க்கறேன் அவள ,அப்றமா வீக் எண்ட்ல நீ வா"

"நோட் பண்ணிக்கோ கார்த்தி **********"

"சரி மதி நான் அவகிட்ட பேசிட்டு போய் பார்க்கறேன் ,அப்றமா உனக்கு சொல்றேன்"

"சரி ...குழந்தைங்க ஸ்கூல் வேன் வர டைம் நான் அப்றமா பேசறேன் கார்த்தி "

"எனக்கும் தான் ....சரி மதி "

நாங்கள் இருவரும் இப்படிப் பேசிக் கொண்டு மூன்று மாதங்கள் ஆகின்றன .

அதற்குப் பிறகும் நான்கைந்து முறை சோபி விசயமாகப் பேசிக் கொண்டோம் தான்.

ஆனால் இன்று வரை சோபியை நாங்கள் போய் பார்த்திருக்க வாய்க்கவே இல்லை ,அவளோ அவளது கணவரோ அடையாறு கேன்சர் இன்ஸ்ட்யூட்டில் இல்லை. அவளது ஊருக்கு தொலை பேசலாம் என்றால் பழைய எண்கள் எதுவும் இப்போது வேலைக்காகவில்லை.எல்லாம் மாறி இருந்தன. அவளை எப்படித் தொடர்பு கொள்வதென்று புரியவில்லை.வீட்டில் கம்பியூட்டர் இருக்குமா என்பதை விட அப்படியே இருந்தாலும் அவளுக்கு அதைப் பயன்படுத்தும் உரிமைகளும் சுதந்திரமும் இருக்குமாவென்பது கேள்விக்குறி.

சோபி ,நான்,மதி,சுபா,பரிமளா , நான்கு பெரும் காலேஜ் நாட்களில் நாங்க நாலு பேர் கணக்காக சுற்றிக் கொண்டிருப்போம் .ஒரே டிபன் பாக்ஸில் நான்கு பேருக்கும் லஞ்ச்,கேம்ப் பில் கலந்து கொண்டாலும் டூர் போனாலும் ஏன் சில சமயம் லீவ் எடுப்பதென்றாலும் கூட சொல்லி வைத்து கூட்டாகச் செய்வது . செமஸ்டர் விடுமுறைகளில் ஒருவர் மாற்றி ஒருவர் வீடுகளில் மொத்தமாய் டேரா போட்டு மொத்தக் கல்லூரிக் கதைகளையும் விடாது பேசி பிழிந்து காய வைப்பது இப்படி இருந்தவர்கள் தான் .இப்போது திசைக்கொருவராய் இருந்தாலும் மற்றவர்களுடன் எப்போதாவது அலைபேசி விட முடிகிறது .


என் பிரியா சோபி உன்னுடன் கல்லூரி நாட்களின் பின் எனக்கும் உனக்கும் குழந்தை பிறக்கும் முன் எண்ணி இரண்டே முறை தான் பேச முடிந்தது.இதற்கு நானும் காரணம் அல்ல ,நீயும் காரணம் அல்ல .எனக்கது புரிந்தே இருக்கிறது.நீயாக தொடர்பு கொண்டால் தவிர உன்னைப் பற்றி அறிந்து கொள்ள முடியாத இந்த வாழ்வியல் சூழலை என்னவென்பது?


கனத்துப் பெயர்கின்றன நிமிடங்கள் .

Thursday, December 25, 2008

டியர் தேவ் ...!

டியர் தேவ் ...

இன்றோடு நீங்கள் ஊருக்குக் கிளம்பிப் போய் ஐந்து முழு நாட்கள் முடிந்தே விட்டன,இது வழக்கம் தான் ! ஆனாலும்...என்ன எப்போதுமே மூன்று அல்லது ஐந்து நாட்களுக்குள் திரும்பி விடுவீர்கள்,இந்த முறை என்னவோ பத்து நாட்கள் என சற்று நீண்ட பிரயாணமாகி விட்டது?!

கம்பெனி செலவில் டூர் என்ற பெயரில் நீங்கள் "டர்"(காஸ் டிரபிள் தான் வேறென்ன??) ஆகி வருவதை இன்றைக்கு நேற்றா நான் பார்க்கிறேன்?எனக்கு அது ஐந்தரை வருடப் பழங்கதை ஆயிற்றே?!

ஆரம்பத்தில் செல்ல அழுகையில் பிரிவுத் துயரை கண்ணீரில் கரைத்து காணமல் போகவைக்க முயன்றேன் ,அதற்கடுத்த வருடம் பாப்பு பிறந்ததும் அழுகை நின்றது மாறாக நீங்கள் டூர் கிளம்பும் ஒவ்வொரு முறையும் சின்ன சின்ன ஊடல்கள் வந்து வந்து மறைந்தன.மூன்றாம் வருடம் பாப்பு பேச ஆரம்பித்ததும் யாராவது "உங்க அப்பா எங்க பாப்பு என்று கேட்டால் "ஊர் சுத்தப் போயிருக்கார்" என்று பதில் சொல்லத் தொடங்கினாள்.அவள் சொல்வதைக் கேட்டு விட்டு சிரித்தாலும் சின்னக் குரலில் நீங்கள் கிளம்புவதைப் பற்றி ஆட்சேபித்து முணுமுணுப்பதை அந்த வருடம் முழுக்க தொடர்ந்தேன் என்றே நினைக்கிறேன்.

இப்போது நினைத்தால் "சிறுபிள்ளைத்தனமாக" தோன்றினாலும் , அன்றைக்கு அதெல்லாம் தேவையாய் இருந்ததை நீங்களும் நானும் மட்டுமே உணர முடியும் தேவ்.இன்றைய நமது அந்நியோன்யத்தை நிர்ணயித்ததில் அன்றைய அந்தப்பொழுதுகளை நாம் மறந்ததில்லை என்றுமே !

இப்போது அந்த செல்ல அழுகைகளோ...நீளும் முனுமுணுப்புகளோ இல்லாமல் போய் நெடு நாட்களாகின்றன.நானே பெட்டி அடுக்கித் தரும் அளவுக்கு முன்னேறி விட்டேன்.வேறென்ன தான் செய்வதாம் ? "பழகிப் போச்சு " என்று ஒற்றை வார்த்தையில் முடிக்கத் தெரிந்து விட்டது மனதுக்கு.எல்லாம் நம் பாப்புவின் "எதிர்காலத்துக்காக " என்ற சமாதானங்கள் மட்டுமே வியாபித்து நிற்கின்றன இப்போதெல்லாம்;

நான் என்னவோ இயல்புக்கு வந்து விட்டேன் தான் ...;

ஆனால் பாப்பு ...

பாப்பு பற்றி நினைத்தால் தான் கொஞ்சம் கஷ்டமாக இருக்கிறது . முன்பு மழலையில் சொல்ல முடிந்ததைப் போல இப்போது அவளால் "அப்பா ஊர் சுத்தப் போயிருக்கார்" என்று சொல்ல முடியவில்லை போல ?!வளர்ந்து கொண்டிருக்கிறாள் அல்லவா? முதல் நாளில் இருந்தே கடந்த நான்கு நாட்களாய் விடிந்ததும் படுக்கையில் நீங்கள் இல்லாத வெற்றிடத்தை பார்த்து...பார்த்து முகம் சுணங்குகிறாள்.

அப்பா வேண்டும் என எப்போதும் போல ஒரு பாட்டம் அழுது முடிப்பாள் என்று தான் எப்போதும் போல இன்றைக்கும் அதற்குத் தேவையான கொஞ்சல் கெஞ்சல் சமரசங்களுடன் காத்திருந்தேன் நான் ! என்ன நினைத்தாலோ பாப்பு ?!அப்பாவின் வாசம் (அப்பாவி வாசம் ...என்று வாசித்து விடாதீர்கள்!!!) இன்றி அம்மாவுக்கும் தான் கஷ்டம் என்று விட்டாளோ ? சென்ற நாட்களைப் போல "அப்பா எப்போவருவார்...இன்னைக்கு...இப்போவே...பின்ன எப்போ தான் ? " என்று நச்சரிக்காமல் ;இந்த முறை என் கழுத்தைக் கட்டிக் கொண்டு " சரி வா மம்மி ...ம்ம்...என் டாடி வரும்போது வரட்டும் ...ஒரு ஒன் வீக் நாம போய் உன் டாடியைப் பார்த்துட்டு வரலாம் " என்று குளுகுளு ஆச்சர்யம் தருகிறாள்.

அதெப்படி அத்தனை சீக்கிரத்தில் கண்டு பிடித்தாள் ? என் முகத்தில் இருந்து என் மனதை அறியும் பக்குவம் அதற்குள் அவளுக்கு வந்து விடுமா என்ன ?எப்படிக் கண்டுபிடித்தாள்?அவளைப் போலவே நானும் என் அப்பாவைப் பார்க்க வேண்டும் என நினைத்திருக்கக் கூடும் என்பதை எப்படித்தான் அவள் அறிந்து கொண்டாளோ?

நான்கு வயதுக் குழந்தை இப்படி எல்லாம் சிந்திக்குமா என்ன?(கொஞ்சம் ஓவர் தற்ப்புகழ்ச்சியா இருக்கு இல்ல!!! அது அப்படித்தான் போங்கப்பா ... ) அதென்னவோ அந்தக் கணத்தில் எனக்கு என்னென்னவோ ஞாபகங்கள் வர ஆரம்பித்து விட்டன,

அட நம் மகளா...நம் பாப்புவா...நம் சிட்டுக்குட்டியா...நம் செல்ல புஜ்ஜியா...பட்டுப்பூனைக்குட்டியா இது? இத்தனூண்டு குட்டிப் பஞ்சுப் பொதியலாய் அவளை முதல் முறை உங்களிடம் நான் நீட்டியபோது (அப்போதும் நீங்கள் ஒரு டூரில் இருந்து தான் திரும்பி வந்திருந்தீர்கள் ...ஞாபகமிருக்கிறது தானே...தேவ் ?) ஏதோ ஒரு பெரிய சாம்ராஜ்யத்தை வென்ற சக்ரவர்த்தியைப் போல எத்தனை பரவசமாய் அவளை பட்டுப் போல ஏந்திக் கொண்டு கொஞ்சினீர்கள்.

இடை இடையே நான் ஏதோ சாதனை மங்கை போல என்னைப் பார்த்தும் பெருமிதம் கலந்த புன்னகை வேறு .நான் உங்கள் சாயலை அவளிடத்தில் தேடித் தேடி சொல்ல நீங்களோ என் சாயலை தேடித் தேடி சொல்லிக் கொண்டிருந்தீர்கள் .அத்தனை சந்தோசங்களுக்கும் காரணமான அந்த குட்டிப் பாப்புவா இவள்...கொஞ்சம் வளர்ந்து விட்டாள் ...இன்னும் நிறைய வளருவாள் தான்.

எனக்கென்ன ஆச்சர்யம் என்றால் ? அப்படி அன்றைக்கு நம் கையில் சின்ன சத்தம் கேட்டால் கூட குட்டி வாயை அழகாய் கோணிக் கொண்டு சதா அழுது கொண்டிருந்த பாப்புவா இவள்?

"தாங்க்ஸ் பாப்பு ...ஐ லவ் யு டா குட்டிம்மா ..."அந்தப் பஞ்சு மிட்டாயை என்னோடு சேர்த்து இறுக்கிக் கொண்டபோது என்னை அறியாமல் ஒரு அம்மாவாக ஆனந்தமாய் அழுகை வந்தது .என் கண்கள் பணிப்பதைக் கண்டதும் அவள் "சமாதானப் படுத்துபவல் போல...ஐ லவ் யு மம்மி...டோன்ட் க்ரை "என்றாள் .

பாப்பு இப்படிச் சொன்ன தருணத்தில் தான் நான் உங்கள் மேல் உள்ள அன்பும் காதலும் பல மடங்கு பெருக இப்படி முடிவெடுத்தேன் ....

அதாகப் பட்டது ...;

  1. காலையில் அரக்கப் பரக்க அலுவலகம் கிளம்பும் போது "ஜட்டி...பனியன் தேடி அது கிடைக்காமல் கண்ணாமூச்சு ஆடினாள்...சிவு சிவுக்கும் கோபத்தில் தினம் என்னைத் திட்டுவீர்களே "இதான் நீ வீட்டைப் பார்த்துக்கற லட்சணமா?" இதற்க்கெல்லாம் நான் பதிலுக்கு எகிறியதுண்டு இதுநாள் வரை!!! இனி அப்படி இல்லவே இல்லை தேவ். (கணவனே....கண் கண்ட தெய்வம்)
  2. வெறும் காது குடையும் பட்சுக்கும் ...டைரி மில்க்குக்கும் ...ஏன் அந்த நாசமாய்ப் போன கிங் ஃபிஷருக்காகவும் கூட கூசாமல் ஐந்நூறு ரூபாய் நோட்டை மாற்றுவீர்களே !!!அந்தக் கண்ராவிக்கெல்லாம் முன்பு போல கத்திப் பேசி குத்திக் காட்டாமல் போனால் போகட்டும்(போடா...!!!) என்று தெனாவட்டாக விட்டு விடலாம் என்று முடிவு செய்திருக்கிறேன்.(அதற்காக இனி உங்கள் பர்சில் தினம் வெறும் ஐம்பத்து ரூபாய் மட்டுமே வைத்து அனுப்பப் போவது தனிக்கதை)
  3. மன்த் எண்டு டார்கெட் பிரசரில் நீங்கள் குழம்பிப் போய் ஒரு டவலுக்கு மேல் ஒரு டவலாக நான்கைந்து டவல்களை கட்டிக் கொண்டு வாசிங் மிசினில் குவித்தால் கூட (நோ விவாதம்) இனி நான் ஒன்றும் சொல்லப் போவதே இல்லை. இப்படிப் பல முடிவுகளை எடுத்திருக்கிறேன்.

முக்கிய குறிப்பு:- இந்த முடிவுகளுக்கு ஆயூள் இன்னும் நிர்ணயிக்கவில்லை என்பதையும் தெரிவித்தே ஆக வேண்டும் தேவ் .குறைந்த பட்சம் உங்கள் திருமுகம் காணும் வரை இப்போதைக்கு கட்டாயம் நீடிக்கும் ...அதனால் சீக்கிரம் வாருங்கள்....வந்து விடுங்கள் என்னருமை தேவ்)