Thursday, December 25, 2008

டியர் தேவ் ...!

டியர் தேவ் ...

இன்றோடு நீங்கள் ஊருக்குக் கிளம்பிப் போய் ஐந்து முழு நாட்கள் முடிந்தே விட்டன,இது வழக்கம் தான் ! ஆனாலும்...என்ன எப்போதுமே மூன்று அல்லது ஐந்து நாட்களுக்குள் திரும்பி விடுவீர்கள்,இந்த முறை என்னவோ பத்து நாட்கள் என சற்று நீண்ட பிரயாணமாகி விட்டது?!

கம்பெனி செலவில் டூர் என்ற பெயரில் நீங்கள் "டர்"(காஸ் டிரபிள் தான் வேறென்ன??) ஆகி வருவதை இன்றைக்கு நேற்றா நான் பார்க்கிறேன்?எனக்கு அது ஐந்தரை வருடப் பழங்கதை ஆயிற்றே?!

ஆரம்பத்தில் செல்ல அழுகையில் பிரிவுத் துயரை கண்ணீரில் கரைத்து காணமல் போகவைக்க முயன்றேன் ,அதற்கடுத்த வருடம் பாப்பு பிறந்ததும் அழுகை நின்றது மாறாக நீங்கள் டூர் கிளம்பும் ஒவ்வொரு முறையும் சின்ன சின்ன ஊடல்கள் வந்து வந்து மறைந்தன.மூன்றாம் வருடம் பாப்பு பேச ஆரம்பித்ததும் யாராவது "உங்க அப்பா எங்க பாப்பு என்று கேட்டால் "ஊர் சுத்தப் போயிருக்கார்" என்று பதில் சொல்லத் தொடங்கினாள்.அவள் சொல்வதைக் கேட்டு விட்டு சிரித்தாலும் சின்னக் குரலில் நீங்கள் கிளம்புவதைப் பற்றி ஆட்சேபித்து முணுமுணுப்பதை அந்த வருடம் முழுக்க தொடர்ந்தேன் என்றே நினைக்கிறேன்.

இப்போது நினைத்தால் "சிறுபிள்ளைத்தனமாக" தோன்றினாலும் , அன்றைக்கு அதெல்லாம் தேவையாய் இருந்ததை நீங்களும் நானும் மட்டுமே உணர முடியும் தேவ்.இன்றைய நமது அந்நியோன்யத்தை நிர்ணயித்ததில் அன்றைய அந்தப்பொழுதுகளை நாம் மறந்ததில்லை என்றுமே !

இப்போது அந்த செல்ல அழுகைகளோ...நீளும் முனுமுணுப்புகளோ இல்லாமல் போய் நெடு நாட்களாகின்றன.நானே பெட்டி அடுக்கித் தரும் அளவுக்கு முன்னேறி விட்டேன்.வேறென்ன தான் செய்வதாம் ? "பழகிப் போச்சு " என்று ஒற்றை வார்த்தையில் முடிக்கத் தெரிந்து விட்டது மனதுக்கு.எல்லாம் நம் பாப்புவின் "எதிர்காலத்துக்காக " என்ற சமாதானங்கள் மட்டுமே வியாபித்து நிற்கின்றன இப்போதெல்லாம்;

நான் என்னவோ இயல்புக்கு வந்து விட்டேன் தான் ...;

ஆனால் பாப்பு ...

பாப்பு பற்றி நினைத்தால் தான் கொஞ்சம் கஷ்டமாக இருக்கிறது . முன்பு மழலையில் சொல்ல முடிந்ததைப் போல இப்போது அவளால் "அப்பா ஊர் சுத்தப் போயிருக்கார்" என்று சொல்ல முடியவில்லை போல ?!வளர்ந்து கொண்டிருக்கிறாள் அல்லவா? முதல் நாளில் இருந்தே கடந்த நான்கு நாட்களாய் விடிந்ததும் படுக்கையில் நீங்கள் இல்லாத வெற்றிடத்தை பார்த்து...பார்த்து முகம் சுணங்குகிறாள்.

அப்பா வேண்டும் என எப்போதும் போல ஒரு பாட்டம் அழுது முடிப்பாள் என்று தான் எப்போதும் போல இன்றைக்கும் அதற்குத் தேவையான கொஞ்சல் கெஞ்சல் சமரசங்களுடன் காத்திருந்தேன் நான் ! என்ன நினைத்தாலோ பாப்பு ?!அப்பாவின் வாசம் (அப்பாவி வாசம் ...என்று வாசித்து விடாதீர்கள்!!!) இன்றி அம்மாவுக்கும் தான் கஷ்டம் என்று விட்டாளோ ? சென்ற நாட்களைப் போல "அப்பா எப்போவருவார்...இன்னைக்கு...இப்போவே...பின்ன எப்போ தான் ? " என்று நச்சரிக்காமல் ;இந்த முறை என் கழுத்தைக் கட்டிக் கொண்டு " சரி வா மம்மி ...ம்ம்...என் டாடி வரும்போது வரட்டும் ...ஒரு ஒன் வீக் நாம போய் உன் டாடியைப் பார்த்துட்டு வரலாம் " என்று குளுகுளு ஆச்சர்யம் தருகிறாள்.

அதெப்படி அத்தனை சீக்கிரத்தில் கண்டு பிடித்தாள் ? என் முகத்தில் இருந்து என் மனதை அறியும் பக்குவம் அதற்குள் அவளுக்கு வந்து விடுமா என்ன ?எப்படிக் கண்டுபிடித்தாள்?அவளைப் போலவே நானும் என் அப்பாவைப் பார்க்க வேண்டும் என நினைத்திருக்கக் கூடும் என்பதை எப்படித்தான் அவள் அறிந்து கொண்டாளோ?

நான்கு வயதுக் குழந்தை இப்படி எல்லாம் சிந்திக்குமா என்ன?(கொஞ்சம் ஓவர் தற்ப்புகழ்ச்சியா இருக்கு இல்ல!!! அது அப்படித்தான் போங்கப்பா ... ) அதென்னவோ அந்தக் கணத்தில் எனக்கு என்னென்னவோ ஞாபகங்கள் வர ஆரம்பித்து விட்டன,

அட நம் மகளா...நம் பாப்புவா...நம் சிட்டுக்குட்டியா...நம் செல்ல புஜ்ஜியா...பட்டுப்பூனைக்குட்டியா இது? இத்தனூண்டு குட்டிப் பஞ்சுப் பொதியலாய் அவளை முதல் முறை உங்களிடம் நான் நீட்டியபோது (அப்போதும் நீங்கள் ஒரு டூரில் இருந்து தான் திரும்பி வந்திருந்தீர்கள் ...ஞாபகமிருக்கிறது தானே...தேவ் ?) ஏதோ ஒரு பெரிய சாம்ராஜ்யத்தை வென்ற சக்ரவர்த்தியைப் போல எத்தனை பரவசமாய் அவளை பட்டுப் போல ஏந்திக் கொண்டு கொஞ்சினீர்கள்.

இடை இடையே நான் ஏதோ சாதனை மங்கை போல என்னைப் பார்த்தும் பெருமிதம் கலந்த புன்னகை வேறு .நான் உங்கள் சாயலை அவளிடத்தில் தேடித் தேடி சொல்ல நீங்களோ என் சாயலை தேடித் தேடி சொல்லிக் கொண்டிருந்தீர்கள் .அத்தனை சந்தோசங்களுக்கும் காரணமான அந்த குட்டிப் பாப்புவா இவள்...கொஞ்சம் வளர்ந்து விட்டாள் ...இன்னும் நிறைய வளருவாள் தான்.

எனக்கென்ன ஆச்சர்யம் என்றால் ? அப்படி அன்றைக்கு நம் கையில் சின்ன சத்தம் கேட்டால் கூட குட்டி வாயை அழகாய் கோணிக் கொண்டு சதா அழுது கொண்டிருந்த பாப்புவா இவள்?

"தாங்க்ஸ் பாப்பு ...ஐ லவ் யு டா குட்டிம்மா ..."அந்தப் பஞ்சு மிட்டாயை என்னோடு சேர்த்து இறுக்கிக் கொண்டபோது என்னை அறியாமல் ஒரு அம்மாவாக ஆனந்தமாய் அழுகை வந்தது .என் கண்கள் பணிப்பதைக் கண்டதும் அவள் "சமாதானப் படுத்துபவல் போல...ஐ லவ் யு மம்மி...டோன்ட் க்ரை "என்றாள் .

பாப்பு இப்படிச் சொன்ன தருணத்தில் தான் நான் உங்கள் மேல் உள்ள அன்பும் காதலும் பல மடங்கு பெருக இப்படி முடிவெடுத்தேன் ....

அதாகப் பட்டது ...;

  1. காலையில் அரக்கப் பரக்க அலுவலகம் கிளம்பும் போது "ஜட்டி...பனியன் தேடி அது கிடைக்காமல் கண்ணாமூச்சு ஆடினாள்...சிவு சிவுக்கும் கோபத்தில் தினம் என்னைத் திட்டுவீர்களே "இதான் நீ வீட்டைப் பார்த்துக்கற லட்சணமா?" இதற்க்கெல்லாம் நான் பதிலுக்கு எகிறியதுண்டு இதுநாள் வரை!!! இனி அப்படி இல்லவே இல்லை தேவ். (கணவனே....கண் கண்ட தெய்வம்)
  2. வெறும் காது குடையும் பட்சுக்கும் ...டைரி மில்க்குக்கும் ...ஏன் அந்த நாசமாய்ப் போன கிங் ஃபிஷருக்காகவும் கூட கூசாமல் ஐந்நூறு ரூபாய் நோட்டை மாற்றுவீர்களே !!!அந்தக் கண்ராவிக்கெல்லாம் முன்பு போல கத்திப் பேசி குத்திக் காட்டாமல் போனால் போகட்டும்(போடா...!!!) என்று தெனாவட்டாக விட்டு விடலாம் என்று முடிவு செய்திருக்கிறேன்.(அதற்காக இனி உங்கள் பர்சில் தினம் வெறும் ஐம்பத்து ரூபாய் மட்டுமே வைத்து அனுப்பப் போவது தனிக்கதை)
  3. மன்த் எண்டு டார்கெட் பிரசரில் நீங்கள் குழம்பிப் போய் ஒரு டவலுக்கு மேல் ஒரு டவலாக நான்கைந்து டவல்களை கட்டிக் கொண்டு வாசிங் மிசினில் குவித்தால் கூட (நோ விவாதம்) இனி நான் ஒன்றும் சொல்லப் போவதே இல்லை. இப்படிப் பல முடிவுகளை எடுத்திருக்கிறேன்.

முக்கிய குறிப்பு:- இந்த முடிவுகளுக்கு ஆயூள் இன்னும் நிர்ணயிக்கவில்லை என்பதையும் தெரிவித்தே ஆக வேண்டும் தேவ் .குறைந்த பட்சம் உங்கள் திருமுகம் காணும் வரை இப்போதைக்கு கட்டாயம் நீடிக்கும் ...அதனால் சீக்கிரம் வாருங்கள்....வந்து விடுங்கள் என்னருமை தேவ்)

23 comments:

வல்லிசிம்ஹன் said...

அப்பாவைப் போய்ப் பார்த்தீங்களா இல்லையா:0)

நாங்க்களும் இதையெல்லாம் சந்தோஷமாக அன்பவித்திட்டு,
இப்ப எல்லாம் யாரும் தனி டூர் போறது இல்லை. போனால் இருவரும். இல்லாவிட்டால் நோ டூர்:)

PoornimaSaran said...

//...அதனால் சீக்கிரம் வாருங்கள்....வந்து விடுங்கள் என்னருமை தேவ்)
//

இங்கையும் அதே கதை தான் ஓடுதா? கவலைப் படாதிங்க சீக்கிரம் வந்திருவார்.. (நாமெல்லாம் சேர்ந்து ஸ்ட்ரைக் பண்ணினால் என்ன)

thevanmayam said...

கடிதம் நல்லாஎழுதியிருக்கீங்க!
உண்மையான கடிதமா இல்லை சும்மா வலைக்காக எழுதப்பட்டதா என்று என்னால் புரிந்து கொள்ள முடியவில்லை!!
தேவா..

அதிரை ஜமால் said...

அண்ணன் தேவ் எங்கிருந்தாலும் உடனே வரவும் ...

SUREஷ் said...

me the first

SUREஷ் said...

//நான் உங்கள் சாயலை அவளிடத்தில் தேடித் தேடி சொல்ல நீங்களோ என் சாயலை தேடித் தேடி சொல்லிக் கொண்டிருந்தீர்கள் //


கல்யாணம் பண்ணப் போற மக்களே இதெல்லாம் தெரிஞ்சுக்கோங்கப்பா...

அது சரி said...

//
அதற்காக இனி உங்கள் பர்சில் தினம் வெறும் ஐம்பத்து ரூபாய் மட்டுமே வைத்து அனுப்பப் போவது தனிக்கதை
//

என்ன அநியாயம்...அம்பது ரூபாய்க்கு ஒரு பாக்கட் கிங்ஸ் கூட வாங்க முடியாது...எங்க இருந்து அவர் கிங் பிஷர் வாங்கிறது....:0))

இப்பிடி நீங்க கடும் நிதி நெருக்கடி ஏற்படுத்தினா அப்புறம் க்ரெடி க்ரஞ்ச் ஆயிடும்...க்ரெடிட் கார்ட்ல எகிறணுமா?

வருங்கால முதல்வர் said...

வெறும் காது குடையும் பட்சுக்கும் ...டைரி மில்க்குக்கும் ...ஏன் அந்த நாசமாய்ப் போன கிங் ஃபிஷருக்காகவும் கூட கூசாமல் ஐந்நூறு ரூபாய் நோட்டை மாற்றுவீர்களே !!!அந்தக் கண்ராவிக்கெல்லாம் முன்பு போல கத்திப் பேசி குத்திக் காட்டாமல் போனால் போகட்டும்(போடா...!!!) என்று தெனாவட்டாக விட்டு விடலாம் என்று முடிவு செய்திருக்கிறேன்.(அதற்காக இனி உங்கள் பர்சில் தினம் வெறும் ஐம்பத்து ரூபாய் மட்டுமே வைத்து அனுப்பப் போவது தனிக்கதை)//

கடிதம் நல்லாருக்கு, ஆனா 50 ரூவா பத்தாதுங்க அவருக்கு பாவம் அவுரு.

குகு

அபி அப்பா said...

வாவ்! என் லைப்ரரியில் சேர்த்து வைக்க போகும் பதிவு இது!!

மிசஸ்.டவுட், நான் இது தான் முதல் தடவை உங்க்க பதிவை படிப்பது. நான் கொஞ்சமும் எதிர்பார்க்கவில்லை!இது பற்றி நான் விமர்சனம் எழுதினால் ஒரு உண்மைதமிழன் பதிவின் அளவு பெரியதாக இருக்கும்.

நல்லா நிறைய எழுதுங்கப்பா!

என்னையடுத்தவர் போலருக்கு தேவ்! தேவ் சீக்கிரம் போய்யா! பொண்டாட்டி புள்ளைங்களோட சந்தோஷமா இருய்யா!

மிஸஸ்.டவுட் said...

//அப்பாவைப் போய்ப் பார்த்தீங்களா இல்லையா:0)//

வாங்க வல்லிசிம்ஹன்...

அப்பா...அம்மா...பாட்டி,சித்தி,சித்தப்பா,அத்தைகள்...எல்லாரையும் ஒரு ரவுண்ட் போய் பார்த்துட்டு வந்தாச்சு, அடுத்த ரவுண்ட் ஹாலிடேய்ஸ்க்காக வெயிட்டிங் மேடம் !

மிஸஸ்.டவுட் said...

//(நாமெல்லாம் சேர்ந்து ஸ்ட்ரைக் பண்ணினால் என்ன)//

வாங்க பூர்ணிமாசரண்...

ஸ்டிரைக்தான ...எங்க ...எப்போ ...எந்த ஊர்லனு சொல்லுங்க...நான் வரலைப்பா எப்படியும் ரிசல்ட் என்னவோ " கிணத்துல போட்ட கல் " தான் சரி தான நான் சொல்றது ? பழகிடும் விடுங்க மேடம் ...ஸ்டிரைக் பண்ணாலும் ,பண்ணலனாலும் அதே கதை தான் ! இந்த ஆம்பளைங்களே இப்படித்தான் மேடம்!!! என்னத்த சொல்ல?!

மிஸஸ்.டவுட் said...

//கடிதம் நல்லாஎழுதியிருக்கீங்க!
உண்மையான கடிதமா இல்லை சும்மா வலைக்காக எழுதப்பட்டதா என்று என்னால் புரிந்து கொள்ள முடியவில்லை!!//

வாங்க thevanmayam ...

என்னய்யா டவுட் இது?
உங்க டவுட் என்னான்னு விளங்கலையே கொஞ்சம் புரியும்படியா கேளுங்க ;கடிதம் உண்மையானதே...வலைக்காகவும் எழுதப்பட்டது தான்!! இப்போ எதோ புரிஞ்சிருக்குமே!

மிஸஸ்.டவுட் said...

//அண்ணன் தேவ் எங்கிருந்தாலும் உடனே வரவும் ...//

வாங்க அதிரை ஜமால் ...
உங்க அறிவிப்பு காதுல விழுந்திருக்கும் போல அண்ணன் தேவ் வந்தாச்சு...

மிஸஸ்.டவுட் said...

//me the first//

no suresh u the 5 th yar...!

////நான் உங்கள் சாயலை அவளிடத்தில் தேடித் தேடி சொல்ல நீங்களோ என் சாயலை தேடித் தேடி சொல்லிக் கொண்டிருந்தீர்கள் //


கல்யாணம் பண்ணப் போற மக்களே இதெல்லாம் தெரிஞ்சுக்கோங்கப்பா...//

ஆமாம்பா டாக்டர் சார் சொன்னா சரியாத்தான் இருக்கும்...நல்லாத் தெரிஞ்சுக்குங்க மக்கா !

மிஸஸ்.டவுட் said...

வாங்க அதுசரி ...

//
அதற்காக இனி உங்கள் பர்சில் தினம் வெறும் ஐம்பத்து ரூபாய் மட்டுமே வைத்து அனுப்பப் போவது தனிக்கதை
//

என்ன அநியாயம்...அம்பது ரூபாய்க்கு ஒரு பாக்கட் கிங்ஸ் கூட வாங்க முடியாது...எங்க இருந்து அவர் கிங் பிஷர் வாங்கிறது....:0))

இப்பிடி நீங்க கடும் நிதி நெருக்கடி ஏற்படுத்தினா அப்புறம் க்ரெடி க்ரஞ்ச் ஆயிடும்...க்ரெடிட் கார்ட்ல எகிறணுமா//

சும்மா பயமுறுத்த ட்ரை பண்ணாதிங்க ...கிரெடிட் கார்டு யூஸ் பண்ணாதான அந்தக் கஷ்டமெல்லாம் ? கார்டை எடுத்து ஒழிச்சு வச்சிட்டா விட்டது தொல்லை...யோசிக்க வேண்டிய விஷயம் தான்...தகவலுக்கு நன்றி அதுசரி,

மிஸஸ்.டவுட் said...

//வருங்கால முதல்வர் said...
வெறும் காது குடையும் பட்சுக்கும் ...டைரி மில்க்குக்கும் ...ஏன் அந்த நாசமாய்ப் போன கிங் ஃபிஷருக்காகவும் கூட கூசாமல் ஐந்நூறு ரூபாய் நோட்டை மாற்றுவீர்களே !!!அந்தக் கண்ராவிக்கெல்லாம் முன்பு போல கத்திப் பேசி குத்திக் காட்டாமல் போனால் போகட்டும்(போடா...!!!) என்று தெனாவட்டாக விட்டு விடலாம் என்று முடிவு செய்திருக்கிறேன்.(அதற்காக இனி உங்கள் பர்சில் தினம் வெறும் ஐம்பத்து ரூபாய் மட்டுமே வைத்து அனுப்பப் போவது தனிக்கதை)//

கடிதம் நல்லாருக்கு, ஆனா 50 ரூவா பத்தாதுங்க அவருக்கு பாவம் அவுரு.

குகு//

பாவமாவது...புண்ணியமாவது?! ஐம்பத்து ரூபாயாவது அலோவ்டுனு சந்தோசம் தான் படணும் .

மிஸஸ்.டவுட் said...

//அபி அப்பா said...
வாவ்! என் லைப்ரரியில் சேர்த்து வைக்க போகும் பதிவு இது!!

மிசஸ்.டவுட், நான் இது தான் முதல் தடவை உங்க்க பதிவை படிப்பது. நான் கொஞ்சமும் எதிர்பார்க்கவில்லை!இது பற்றி நான் விமர்சனம் எழுதினால் ஒரு உண்மைதமிழன் பதிவின் அளவு பெரியதாக இருக்கும்.

நல்லா நிறைய எழுதுங்கப்பா!

என்னையடுத்தவர் போலருக்கு தேவ்! தேவ் சீக்கிரம் போய்யா! பொண்டாட்டி புள்ளைங்களோட சந்தோஷமா இருய்யா!//

இருநூறு பதிவு போட்டு பதிவுலகை கலக்கி வரும் நகைச்சுவை வள்ளலே உங்கள் முதல் வரவு நல்வரவாகட்டும்,
பாராட்டுக்கும் ,கருத்துக்களுக்கும் நன்றி அபிஅப்பா .

அன்புடன் அருணா said...

நிறைய இடத்தில் இதே கதை தான் ஓடுதா? சரிதான் நான் மட்டும் தனியில்லையென்ற ஒரு சந்தோஷம் வந்தது படித்ததும்....
அன்புடன் அருணா

இராம்/Raam said...

இதொரு பெண்ணாதிக்க பதிவு.... :(

மிஸஸ்.டவுட் said...

//அன்புடன் அருணா said...

நிறைய இடத்தில் இதே கதை தான் ஓடுதா? சரிதான் நான் மட்டும் தனியில்லையென்ற ஒரு சந்தோஷம் வந்தது படித்ததும்....
அன்புடன் அருணா//

எனக்கும் தான் அருணா .

மிஸஸ்.டவுட் said...

// இராம்/Raam said...

இதொரு பெண்ணாதிக்க பதிவு.... :(

:):):):):):)(infinitive)

அமிர்தவர்ஷினி அம்மா said...

:)

யாத்ரா said...

ரொம்ப நல்ல பத்தி இது. ரொம்ப நல்லா எழுதியிருககீங்க, எழுத்தில் கட்டிப்போடும் ஸ்வாரஸ்யம் இந்த எழுத்தில் இருக்கிறது. உடன் உங்கள் பாப்பு அருமையான குழந்தை, குழந்தைகளே அருமையானவர்கள் தானே. மற்றும் உங்கள் தேவ், ரொம்ப அருமையாக சித்தரித்திருக்கிறீர்கள். நீங்கள் எடுத்து வைத்திருந்த முடிவுகள் அவற்றின் ஆயுள்,,,,,, எல்லாம் கலந்து இந்த பத்தி சிரிக்க உணர்ச்சிவயப்பட குழந்தையாக மாற என நவ உணர்வுகளை உள்ளடக்கி ஆற்றோட்டமான நடையுடன் அழகாக ஸ்வாரஸ்யத்தோடு எழுதியிருக்கிறீர்கள்.