Friday, December 10, 2010

ஜெயமோகனின் கன்யாகுமரி ( புத்தக விமர்சனம் )ஒரு வேலை அதீதமாய் தன்னில் மூழ்கிப் போனவர்களுக்கு மட்டுமேனும் இந்தநாவலை வாசித்து முடித்ததும் காதோரமாய் கடலின் இரைச்சலைக் காட்டிலும்அதிகமாய் மனதின் இரைச்சல் கேட்கத் துவங்கலாம். இந்த நாவலுக்குரியவெற்றியென கூறலாம் அதை.

சதா தன்னியல்பற்று தனக்குள் பேசிக் கொண்டே இருக்கும் ஒரு மனிதன் (ரவி)கதையை நகர்த்திக் கொண்டு போகிறான். இங்கு கதை என்பதை விட அவன் தனக்குள்பேசிக் கொண்டே கடக்க முடியாமல் கனத்துச் சுமக்கும் சம்பவங்களின் கோர்வைஎன்பது பொருந்திப் போகலாம்.

விமலாவை,பிரவீனாவை,ரமணியை,ஷை லஜாவைப் புரிந்து கொள்ள முடிவதை வாசிப்பின்ஆழம் என்று சப்பைக் கட்டு கட்டினாலும் இந்தப் பெண்கள் புனிதம்,தெய்வீகம், செண்டிமெண்ட் etc ..etc கான்செப்டில் சிக்கிக் கொள்ளாமல்நழுவிச் செல்வதை எந்த ஆட்சேபமுமின்றி நீடித்த புன்னகையுடன் கடக்கமுடிகிறது.

இவர்களில் கன்யாகுமாரி யார்?

கன்யாகுமரியின் ஐதீகக் கதையை பின்புலமாக வைத்துக் கொண்டு இந்தக் கதையைஎழுதியதாக ஜெயமோகன் தன் குறிப்பில் கூறி இருந்தாலும் கூட இது ஒட்டுமொத்தமாய் பெண்களின் அக மனதை எப்படியேனும் வென்று விட எத்தனிக்கும் ஒருமனிதனின் தனிப்பட்ட துக்கமாகவே மனதில் பதிகிறது.

பெண் சதை தாண்டி யோசிக்கப் பட்டிருக்கிறாள் இங்கு.

ஆனாலும் வெற்றி கொள்ளப்படவில்லை, அவளை வெல்ல முடியாத ஆணின் இயலாமை அவனைதன்னியல்பாய் சுழலுக்குள் தள்ளி சுளித்து மறையுமிடத்தில் முடிகிறது கதை.

கன்யாகுமாரி அவள் ஒரு போதும் எந்த ஆணாலும் வெற்றி கொள்ளப்படப் போவதும்இல்லை ,அவளது தடைகள் மறுப்புகள்...ஏதுமின்றியே படைப்பின் மாயாஜாலம் ஆடும்கண்ணாமூச்சு இது.
ஒரு ஆண் வெறுமே ஆணாக மட்டுமே இருக்கும் போது பெண் குறித்த அவனதுகண்ணோட்டம் படு இழிவானதாகவும் இருக்க முடிந்திருக்கிறது,அவனே தந்தை எனும்நிலையில் பெண்ணைக் குறித்து யோசிக்கையில் அவர்களைப் பாதுகாக்கும்கடமையினால் சதா பருந்திடம் இருந்து குஞ்சுகளைக் காக்கும் தாய்க்கோழிநிலைக்கு துரத்தப் பட்டு விடுகிறான். தலை கீழ் மாற்றம் தான்,ஆனாலும் இதுசில கால இடைவெளிகளில் நிகழ்ந்து விடுகிறது என்பதே நிஜம் .இதற்கொருஉதாரணம் இந்த நாவலில் வரும் பெத்தேல்புரம் ஸ்டீபன் .

ரவியை ஒரு சாதாரண மனிதனாக மதிக்கத் தோன்றவில்லை,படு ஆபத்தான சூழ்நிலைப்பிராணியாகவே சித்தரிக்கப் பட்டிருக்கிறான். எந்நேரமும் அதென்ன மனஉளைச்சலோ?! அறிவு ஜீவியாகவும் இருக்க வேண்டும் ,அழகாகவும் இருக்கவேண்டும் மனைவி என்ற எதிர்பார்ப்பு பொதுப் புத்தி என்று தவிர்த்துவிட்டாலும் கூட கதைப் படி என்ன தான் சாதனையாள இயக்குனராக இருந்தாலும்இத்தனை துஷ்ட சிந்தனை தேவை இல்லை என்றே எண்ண முடிகிறது.அடுத்தொரு இமாலயவெற்றியைக் கொடுத்தே ஆக வேண்டிய நிர்பந்தம் என்று அவனது சலனங்களைசமாளிக்கத் தேவை இல்லை. இந்த நாவல் முழுக்கவுமே அவன் தன்னைப் பெரியஇவனாகத் தான் நினைத்துக் கொண்டு உலவிக் கொண்டிருக்கிறான்.

//இது கன்யாகுமரி தானா ? கன்யாகுமரி தான் ஆனால் அவனுடன் சேர்ந்துஅந்நகரையே கை விட்டு விட்டு மற்ற அத்தனை பெரும் சென்றுவிட்டிருந்தார்கள்,வெளியேறிவிட வேண்டும் என்ற வேகம் எழுந்த போது தான்பாதைகளோ வண்டிகளோ இல்லாமல் அங்கு அகப் பட்டுக் கொண்டு விட்டதை அறிந்தான்//

இப்படி அவன் அகப்பட்டுக் கொண்டு திணறுவதாகக் கதை முடிகையில்எதிர்பார்த்தது போலவே சந்தோசம் எழுவதை தவிர்க்க முடியவில்லை.

நாவலில் ஜெய மோகனின் சில வார்த்தைப் பிரயோகங்களும் அவற்றின்பயன்பாடுகளும் மிக்க ஆழமானவை. தன் கல்லூரிக் கால தோழியும்,காதலியுமானவிமலாவின் பாதங்களைப் பற்றி ரவி நினைத்துப் பார்க்கையில் இப்படி ஒருவாக்கியம் ;

//ஆழத்து வேர் போன்ற அசாதாரமான வெண்ணிறம் //

அவளைப் பற்றியகற்பனைகளில் எல்லாம் நர்கீஸ் போல அவளை எண்ணிக் கொள்வது. அப்படியானால்ஆரம்பத்தில் இருந்தே ரவி விமலாவின் தோற்றத்தில் நர்கீஸை தான்காதலித்திருக்கிறான். என்ன ஒரு ஏமாற்றுத் தனம் ! தன்னைத் தானேஏமாற்றிக் கொள்வதின் உச்சம் இது. ஆனால் எல்லோருக்கும் அப்படித் தான்வாய்க்கிறது. இது உலகநியதி.

நாவல் சொல்ல விரும்பியது பெண்ணின் களங்கமற்ற தன்மையாக இருக்குமென்றுநினைக்கிறன். ஒரு சிறுமியாக ,சகோதரியாக ,காதலியாக,மகளாக காலத்திற்கு தகபெண்கள் கொள்ளும் வேஷங்களில் எதோ ஒரு பொழுதில் அவளது நிஷ்களங்கம்தரிசிக்கப் படுகிறது,அந்த மகா தரிசனத்தை ஆண் அவன் எந்த உறவு முறைகொண்டவனாக இருந்த போதிலும் அவனால் அந்த நிஷ்களங்கத்தின் பரிசுத்தத்தின்முன் இயல்பாய் இருக்க முடிவதில்லை, அந்தப் பெண்ணை அவன் வெற்றி கொள்ளநினைக்கிறான். ,முடியாத பட்சத்தில் அவள் மீது அதீத வெறுப்பை அடைகிறான்.மீண்டும் அன்பைத் தேக்கி குழந்தையாகி அவளிடமே சரணாகதி ஆகிறான்,இந்தசக்கரத்தின் சுழற்சியில் சிக்கிக் கொண்டு வெளி வரத் தெரியாமல்பைத்தியமாகிறான் .

இந்து புராணங்களில் இதனால் தான் சிவனை "பித்தா பிறை சூடி " என்றெல்லாம்பாடி வைத்தார்களோ என்னவோ ?!

தேவியை மணந்து கொள்ள ஸ்தாணுமாலயன் வந்து கொண்டிருக்கிறார்!யுகம் யுகமாய் நீண்டு கொண்டிருக்கும் பயணம் அது...இன்னும் முடியக்காணோம்...தேவி ஸ்தானுமாலயனை எதிர் நோக்கி ஒற்றைக் கல் மூக்குத்தி மினுங்க கடற்கரை மொட்டைப் பாறையில் அர்த்த ராத்திரிகள் தோறும் தவமிருக்கிராளாம்.

ஸ்தாணுமாலயன் சிவன்,விஷ்ணு,பிரம்மா மூன்றும் கலந்த திரி சக்தி ரூபம்.ஆக்கல்,அழித்தல்,காத்தல் மூன்றையும் உள்ளடக்கிக் கொண்ட க்ரியா சக்தி அவன்என்கிறார் ஜெயமோகன் . எத்தனை திறமைகள் இருந்தும் பாவம் இன்னும் தேவியைஆட்கொள்ளக் காணோம்.


காமம் ...யாமம் நாவலின் ஓரிடத்தில் எஸ்ரா இப்படி எழுதி இருக்கிறார்,முசாபர் அலி அத்தர் யாமம் தயாரிக்கும் கலையை தனக்கடுத்த சந்ததிக்கும்கடத்தும் நோக்கத்தில் ஒரு ஆண் குழந்தையைப் பெறுவதற்காக தன்னிலும் மிகஇளைய சுரையா என்ற பெண்ணை மூன்றாம் தாரமாக மணந்து அழைத்துவருமிடத்தில்...
அவளோடான கூடலில் சுரையா அந்த நிகழ்வை கணவனுடனான காமம் தனக்கு மூக்குசிந்தி போடுவதைப் போல தான் என்று நினைத்துக் கொள்வதாக ஒரு வரி.சுரையாவுக்கு வயிற்றுப் பாடே பிரதானமாக இருத்தலைப் போல இங்கு கன்யாகுமரியில் பிரவீனாவுக்கு தான் விருது வாங்கும் நடிகையாவதே பிரதானம்.அதற்காக ரவியைப் புறம் தள்ளி வேணு கோபாலனுடன் சென்று விடுகிறாள் அவள்.

காமம் பெண்களின் கன்னிமையை பாதிப்பதில்லை ,அவள் எதற்காகவோ நீண்டகாத்திருப்பில் தன்னைக் கரைத்துக் கொண்டிருக்கிறாள். இதை மிகஅந்தரங்கமான ஓரிடத்தில் அவள் பாதுகாத்து வைத்திருக்க கூடும் ,அந்தஅந்தரங்கத்தை அறிந்து கொள்ள முடியாமல் சதா தோற்றுப் போகும் நிலையில் தான்ஆண் மிக்க குழப்பத்திற்கு ஆளாகிறான். பெண்ணின் மீதான அவனின் வெறுப்பும்விருப்பும் மாறி மாறி இங்கிருந்து தொடங்கி சதா இளைப்பாறுதல் இன்றிசுழன்றடிக்க ஆரம்பிக்கிறது.

இந்த நாவலை கி.ரா வின் கன்னிமை சிறுகதையின் பாதிப்பில் எழுதியதாகஜெயமோகன் கூறி இருக்கிறார் தன் முன்னுரையில். ஒப்பிட்டுப் பார்த்துஏற்றுக் கொள்ள முடிகிறது. கி.ரா வின் நாச்சியாருக்கும் ஜெயமோகனின்விமலாவுக்கும் ...ஏன் பிரவீனாவுக்கும் பெரிதாய் ஒன்றும் வித்யாசங்கள்இல்லை மனதளவில் அவர்கள் எடுத்துக் கொள்ளும் தீர்மானங்களின் அடிப்படையில்.


இந்த நாவலில் ஆட்சேபிக்கத் தகுந்த ஒரே ஒரு இடமென்றால் அது இது தான்.


// அழகில்லாத பெண்கள் ஆண்களை குரூரமானவர்களாக ,அற்பமானவர்களாக,நீதியுணர்வே இல்லாதவர்களாக ஆக்கும் விதத்திற்கு இணையான ஒன்றைக் கூறவேண்டுமெனில் மான் குட்டியை அடித்துக் கிழித்துத் தின்னும் சிங்கத்தின்இயற்கையான குரூரத்தை தான் //

கூடவே கன்யாகுமரியின் ஐதீகம் தேவி ஸ்தானுமலயனுக்காக கடற்கரையில்காத்திருப்பதாகச் சொல்லப் பட்டிருப்பது சரி தான்,ஆனால் ஸ்தாணுமாலயன் ஏன்அவளைக் காக்க வைத்தார்? இன்னும் வராமல் போனதற்கு காரணக் கதைகள்ஏதுமில்லையா? அது சொல்லப் படவில்லை இங்கே ,அதனால் ஒரு முற்றுப் பெறாததன்மை ...ஒரு வேளை எனக்கு மட்டும் தான் அந்த ஐதீகக் கதை முழுமையாகத்தெரியாம்லிருக்கிறதோ என்னவோ! கதை தெரிந்தவர்கள் யாரேனும் ஜெயமோகன் இந்தநாவலில் சொல்லாமல் விட்டதை வந்து முடித்து வையுங்கள்


நாவல் - கன்யாகுமாரி
ஆசிரியர் - ஜெயமோகன்
பதிப்பகம் - கவிதா பப்ளிகேசன் வெளியீடு
விலை - ரூ 90


8 comments:

உமாஷக்தி said...

அருமையான பதிவு கார்த்திகா ;) ஜெமோவின் எழுத்தின் ஆழத்தை முதல் முதலில் உணர்ந்தது ‘கன்யாகுமரி’யில் தான். பாண்டியராஜ் என்ற நண்பர் ஒருவரும் நானும் சில ஆண்டுகள் முன் இந்நாவலைப் பற்றிக் கிட்டத்தட்ட நான்கு மணி நேரம் விவாதித்தோம். அப்போது (வலைத்தளம் கிடையாது) மீள் வாசிப்பு செய்யத் தூண்டும் பதிவு. பகிர்விற்கு நன்றி ;)))

KarthigaVasudevan said...

நன்றி உமா ... விவாதிக்கத் தகுந்த நாவல் தான். நாவலில் ரவி வழியாக ஜெமோ காட்டும் அக மனதின் சலனங்களில் அந்த கேரக்டரின் மீது வெறுப்பு மட்டுமே மிஞ்சுகிறது. பெரிய அறிவு ஜீவியாக தன்னை பாவித்துக் கொள்ளும் சாதனை இயக்குனரை விட சற்றே வெள்ளந்தி போல தன்னை வெகு இயல்பாய் சாதாரணம் போல வெளிப்படுத்திக் கொள்ளும் விமலா தான் நாவலில் வரும் மற்றெந்தப் பெண்ணைக் காட்டிலும் முதல் கன்யாகுமரி என்பேன் நான்.

;))

அது சரி(18185106603874041862) said...

//

விமலாவை,பிரவீனாவை,ரமணியை,ஷை லஜாவைப் புரிந்து கொள்ள முடிவதை வாசிப்பின்ஆழம் என்று சப்பைக் கட்டு கட்டினாலும் இந்தப் பெண்கள் புனிதம்,தெய்வீகம், செண்டிமெண்ட் etc ..etc கான்செப்டில் சிக்கிக் கொள்ளாமல்நழுவிச் செல்வதை எந்த ஆட்சேபமுமின்றி நீடித்த புன்னகையுடன் கடக்கமுடிகிறது.
//

பெண்கள் புனிதம், தெய்வீகம் என்பதெல்லாம் போலிக் கோஷமிடுபவர்கள் தான் சொல்வார்கள்.கூர்ந்து கவனியுங்கள், இப்படி கோஷமிடும் கும்பல் எதுவென்று. பெரும்பாலும் மதத் தீவிரவாதிகளாய் இருப்பார்கள்.

உடற்கூறு தவிர்த்து எந்த வகையிலும் ஆணுக்கும் பெண்ணுக்கும் வேறுபாடில்லை. ஜெயமோகன் தெய்வீக கான்செப்டில் சிக்காமல் செல்வதில் எந்த ஆச்சரியமுமில்லை. ஏனெனில் உள்ளதை உள்ளபடி பதிவு செய்வது தான் இலக்கியமாகும். பிரச்சாரமும், நன்னெறி நூல்களும், சமையல் குறிப்புகளும் இலக்கியமாகாது.

அது சரி(18185106603874041862) said...

//
பெண்களின் அக மனதை எப்படியேனும் வென்று விட எத்தனிக்கும் ஒருமனிதனின் தனிப்பட்ட துக்கமாகவே மனதில் பதிகிறது.

ஆனாலும் வெற்றி கொள்ளப்படவில்லை, அவளை வெல்ல முடியாத ஆணின் இயலாமை அவனைதன்னியல்பாய் சுழலுக்குள் தள்ளி சுளித்து மறையுமிடத்தில் முடிகிறது கதை.
//

இது ஆணின் பிரச்சினை மட்டுமல்ல, பெண்ணின் பிரச்சினையும் கூடத் தான். ஆண் பெண்ணை வெல்ல நினைக்கிறான், பெண் ஆணை வெல்ல நினைக்கிறாள். இது ஆண் பெண் பிரச்சினை கூட அல்ல (ஆனால், ஆண் பெண் என்று வரும் போது வலிமையாக வெளிப்படுகிறது). வழிமுறைகள் தான் வேறு.

உளவியல் ரீதியான ஒரு வகையான இருத்தலிய அதிகாரப் போராட்டம் என்றே எனக்குப்படுகிறது. வேலை, பிஸினஸ், பணம், புகழ் என்று எல்லா இடங்களிலும் மற்றவரை வெல்லவே முயற்சிக்கிறோம். ஆண் பெண் உறவில் அதன் பரிமாணமும் வழிமுறைகளும் வேறாக வெளிவருகிறது.

அது சரி(18185106603874041862) said...

//
ரவியை ஒரு சாதாரண மனிதனாக மதிக்கத் தோன்றவில்லை,படு ஆபத்தான சூழ்நிலைப்பிராணியாகவே சித்தரிக்கப் பட்டிருக்கிறான். எந்நேரமும் அதென்ன மனஉளைச்சலோ?!
//

//
என்ன தான் சாதனையாள இயக்குனராக இருந்தாலும்இத்தனை துஷ்ட சிந்தனை தேவை இல்லை என்றே எண்ண முடிகிறது
//

என்ன துஷ்ட சிந்தனை என்று சொல்லியிருந்தால் எனக்கும் கொஞ்சம் புரிந்திருக்குமோ?

அது சரி(18185106603874041862) said...

//

அவளைப் பற்றியகற்பனைகளில் எல்லாம் நர்கீஸ் போல அவளை எண்ணிக் கொள்வது. அப்படியானால்ஆரம்பத்தில் இருந்தே ரவி விமலாவின் தோற்றத்தில் நர்கீஸை தான்காதலித்திருக்கிறான். என்ன ஒரு ஏமாற்றுத் தனம் ! தன்னைத் தானேஏமாற்றிக் கொள்வதின் உச்சம் இது. ஆனால் எல்லோருக்கும் அப்படித் தான்வாய்க்கிறது. இது உலகநியதி.
//

உப்பளத்தில் எந்த நீரை கொட்டினாலும் உப்பு தான் விளையும்.

அது சரி(18185106603874041862) said...

//
ரவியை ஒரு சாதாரண மனிதனாக மதிக்கத் தோன்றவில்லை,படு ஆபத்தான சூழ்நிலைப்பிராணியாகவே சித்தரிக்கப் பட்டிருக்கிறான். எந்நேரமும் அதென்ன மனஉளைச்சலோ?! அறிவு ஜீவியாகவும் இருக்க வேண்டும் ,அழகாகவும் இருக்கவேண்டும் மனைவி என்ற எதிர்பார்ப்பு பொதுப் புத்தி என்று தவிர்த்துவிட்டாலும் கூட கதைப் படி என்ன தான் சாதனையாள இயக்குனராக இருந்தாலும்இத்தனை துஷ்ட சிந்தனை தேவை இல்லை என்றே எண்ண முடிகிறது.அடுத்தொரு இமாலயவெற்றியைக் கொடுத்தே ஆக வேண்டிய நிர்பந்தம் என்று அவனது சலனங்களைசமாளிக்கத் தேவை இல்லை. இந்த நாவல் முழுக்கவுமே அவன் தன்னைப் பெரியஇவனாகத் தான் நினைத்துக் கொண்டு உலவிக் கொண்டிருக்கிறான்.
//

கதை படிக்கவில்லை என்பதால் எனக்கு குறிப்பிட்ட பாத்திரம் பற்றி தெரியவில்லை.

ஆனால், இமாலய வெற்றியைக் கொடுக்க வேண்டிய நிர்பந்தம் போன்றவை மிகப்பெரிய வாதை. அதன் மன உளைச்சலும், உள்ளே அதிர்ந்து நடுங்கும் உண்மையும் அதில் உள்ளிருப்பவர்களுக்கு மட்டுமே தெரியும். தனக்கும் தனக்குமான போரில் எவர் வென்றாலும் விழப்போவது தன் பிணம் என்பதால் வரும் நடுக்கம் அது. தன்னையே தான் தின்றுக் கொண்டிருப்பதன் வலி அது என்றும் கூட சொல்லலாம். ஜெயமோகன் சொல்வது போல யட்சி கண் திறக்காதவர்கள் பாக்கியவான்கள்.

அது சரி(18185106603874041862) said...

உங்கள் இடுகை இந்த நாவலை கண்டிப்பாக படிக்க தூண்டுகிறது. சம்பிரதாயமாக இல்லாமல் பகிர்வுக்கு உண்மையிலேயே நன்றி.