Friday, June 10, 2011

பஷீர்,பெருமாள் முருகன்.ஸ்ட்ராபெர்ரி : (சில புத்தகங்கள்)

வாசிப்பின் ஊடே சில புத்தகங்கள் (நிழல் முற்றம் ,மதில்கள்,ஸ்ட்ராபெர்ரி)

பெருமாள் முருகனின் நிழல் முற்றம் :

வாழ்வின் எல்லாக் கசடுகளையும் அள்ளிப் போட்டுக் கொண்ட ஒரு தியேட்டருக்குள் ஒடுங்கி உட்கார வைக்கப் பட்டு உலக நடப்பின் ஒவ்வொரு கோணல் பக்கத்தையும் அந்த இற்றுப் போன தியேட்டரின் சோடாக் கம்பெனி தண்ணீர் தொட்டிக்குள்ளும் ,டிக்கெட் கிழிக்கும் கியூ வரிசையிலும்,கட்டில் கடையிலுமாய் நான்லினீயர் காட்சிகளாக நிர்பந்தப் படுத்தப்பட்டு மூன்று மணி நேரப் படமாய் பார்க்க நேர்ந்தால் என்ன நேரும்?! தினமும் பரோட்டா சாப்பிடுவது ஒன்றே அந்தப் பையன்களின் வாழ்வில் ஷன நேர விமோஷனமாயிருக்கக் கூடும். அந்த நிலையிலும் சக்தி வேலின் அகஉலகில் உடைபடும் மனித வாழ்வின் அகோரப் பக்கங்கள் வாசிக்கும் நமக்கே பிரமை தட்டச் செய்கின்றன எனில் அனுபவப் படும் அந்த ஜீவன்களின் மீதெழும் பரிதாப உணர்வை தாண்டிச் செல்லத் தான் வேண்டி இருக்கிறது.

சக்திவேலின் தகப்பன் குஷ்டரோகி ,நடேசனின் அம்மா ஓடிப் போனவள்,படக்காரன் வாழ்வின் நிர்பந்தம் காரணமாய் கல்யாணம் கட்டியும் பிரம்மச்சாரி , நாவலில் வரும் ஒவ்வொருவரின் வாழ்வும் பல கோணங்களில் கோணல் மாணலாய் விலகிப் பல்லிளிக்கையில் கலைடாஸ்கோப்பில் தாறுமாறாய் உருளும் உடைந்த வளையல் துண்டுகளின் ஞாபகம் வருகிறது. திக்குத் தெரியாத வாழ்வே தான் எனினும் இவர்களுக்கும் சின்னச் சின்னதாய் வாழ்வு ருசிக்கத் தான் செய்கிறது .இல்லா விட்டால் வாழ முடியாதே. இரண்டும்கெட்டான் வயதில் வேறு போக்கிடம் அற்றுப் போன பையன்களின் வாழ்க்கை என்னாகும் ? நிழல் முற்றம் வாசித்தால் தெரிந்து கொள்ளலாம். அவர்கள் வாழக் கற்றுக் கொள்கிறார்கள் எப்படியாயினும்.

பஷீரின் "மதில்கள் " :அம்மாடியோவ் ... பஷீரை வாசிக்கும் போதெல்லாம் எழுத்திலும் வாசிப்பிலும் இன்னும் கடக்க வேண்டிய தூரம் கண்ணைக் கட்டுகிறது .

என்னய்யா கதை இது ?!

கட்டக் கடைசியில் ;

"மங்களம் ... நாராயணீ சர்வ மங்களம் "

என முடிக்கையில் சிறை வாசலின் சிறு கேட்டின் முன் நமக்கும் மூளை ஸ்தம்பித்து நின்று விடத்தான் வேண்டும் ஒரு நொடியேனும். அந்தப் பெண் நாராயணீ அதற்கு பிறகு பஷீரை தேடி இருக்க மாட்டாளா ?! அதையெல்லாம் நமக்கு நாமே கண்டபடிக்கு கற்பனை செய்து கொள்ள வேண்டியது தான் ,பஷீர் தான் ஒரு இரக்கமற்ற படைப்பாளி என்பதை தனது ஒவ்வொரு படைப்பின் வழியும் நிரூபித்துச் சென்றிருக்கிறார்.

"உங்க உப்புப்பா கொம்பானை குழியானையாம் புள்ளே " எங்க உப்பப்பாவுக்கொரு யானை இருந்தது நாவலில் வரும் குஞ்ஞுதாச்சும்மா வின் அரற்றலுக்கும் , இங்கு பஷீர் விடுதலைக்குப் பின் சிறை மதில்களைத் தாண்டி வந்து தெருவோடு நின்று கொண்டு மனதிற்குள் சொல்லும் ;

"மங்களம்...நாராயணீ சர்வ மங்களம் "

முடித்துக் கொள்ளும் முறித்துக் கொள்ளும் தன்மை கொண்ட என்ன ஒரு இரக்கம் கெட்ட வார்த்தைகள் ! ஸ்தம்பிப்பது மூளை அல்ல இங்கே கதை தான்.பஷீர் அளவில் ஒரு குன்றி மணி அளவுக்காவது எழுத முடியுமா என யோசிக்கையில் நமக்கும் மூளை ஸ்தம்பித்துப் போகலாம்.

எதற்கு அந்த விஷப் பரீட்சை எல்லாம் அடுத்த புத்தகத்தைப் பற்றி பேசுவதே அதை விட உத்தமாமாய் இருக்க கூடும்! ;))

ஜி.முருகனின் "காண்டாமிருகம் " சிறுகதை தொகுப்பு இந்த வாரம் விகடன் வரவேற்பறையில் நூல் அறிமுகமாக பகிர்ந்து கொள்ளப் பட்டிருந்தது .

ஸ்ரீ.ஷங்கர் தொகுத்து அளித்த "ஸ்ட்ராபெர்ரி" தொகுப்பில் பல எழுத்தாளர்களால் எழுதப்பட்ட மனவியல் , உளவியல், பாலியல் சார்ந்த சிறுகதைகள் வாசிக்க கிடைத்தது.

தமிழ்நதியின் 'உடல் ' சிறுகதையை முன்னமே அவரது வலைப்பூவிலேயே வாசித்திருந்தேன் . இந்த தொகுப்பை முதன்முறை வாசிப்பவர்களுக்கு ஜீரணம் ஆகக் கூடிய சற்றே மென்மையான கதையென இதை மட்டுமே கூறலாம்.

லக்ஷ்மி சரவணக் குமாரின் "இருள்,மூத்திரம் மற்றும் கடவுளின் பட்டுக் கௌபீகத்துணி" சிறுகதையை வாசித்து முடிக்கையில் நமக்குள் நாமே சிரித்துக் கொள்வதை தவிர்க்க இயலாது. சிறுகதை ,

குமார் அம்பாயிரத்தின் "மண்யோனி" சிறுகதை கி.ரா வின் "பெண்மணம்" தொகுப்பில் இருந்த கதைகளை நினைவூட்டிச் சென்றது. வாசித்துக் கொண்டிருக்கும் போதே கதையின் சில பகடிகள் சிரிப்பு மூட்டிச் சென்றது. என்ன ஒரு அசாத்திய கற்பனை வளம் ...ஐயோடா ... வாசிக்கத் தான் கொஞ்சம் லஜ்ஜையாய் இருக்கிறது . கெவி டோஸ்.


ஜி.முருகனின் "கிழத்தி " தேர்ந்த நடை. அட்சர சுத்தமாய் கதையில் வருபவர்களின் மனநிலை சித்தரிக்கப் பட்டிருக்கிறது. ஒரு சின்ன நெருடல் " கிழத்தி " என்ற தலைப்பு பெண்ணை கிழத்தி என்றால் அதே விதமாய் நடந்து கொள்ளும் ஆணை என்னவேன்பார்கள்? அதைப் பற்றி இதுவரை எந்த எழுத்தாளரும் நினைத்துப் பார்க்கவில்லையோ? எம்.கோபால கிருஷ்ணனின் "முனி மேடு" தொகுப்பிலும் இதே போலொரு சிறுகதை "நிலைக் கண்ணாடி " சரி பெண்ணுக்கு இப்படி எல்லாம் நேரக் கூடும் ,அவளை இவிதமாகவேல்லாம் இசைக்கேடாக நினைத்துக் கொள்ளலாம் சரியே ...அதே சமயத்தில் அந்த ஆணை என்னவென்பது , பாதிப்பு பெண்ணுக்கு மட்டுமே தானா ,ஆண் என்ன நடந்தாலும் ஒரு பாதிப்பும் இன்றி கால் சராயில் ஒட்டிய மண்ணை உதறிச் செல்வது போல ஒன்றுமே நடக்கவில்லை எனும் பாவனையில் எல்லாவற்றையும் துடைத்து உதறி விட்டு போய் கொண்டே இருக்கலாமோ?குறைந்த பட்சம் கிழத்தி என்று அசிங்கமாய் பெண்ணை விளிப்பதற்கு ஒப்ப ஆணுக்கும் இதே விதமாய் ஒரு பொருத்தமான பெயரை மட்டுமேனும் வைத்து கதைகளிலேனும் விளிக்கலாம். யாராவது எழுதுங்களேன் எழுத்தாள மகா ஜனங்களே!


சு.தமிழ் செல்வியின் "சாமுண்டி " சிறுகதை கணவனை இழந்த மகனுக்கு கல்யாணம் செய்து வைத்து வாழ்வின் கடமைகளை முடித்து விட்ட முதிரிளம் பெண்களின் மனப் போராட்டத்தை பற்றி பகர்கிறது. மூட நம்பிக்கைகள் ஊடுருவ பெரும்பாலும் கூட்டத்தின் நடுவில் இருக்கையிலும் கூட உள்ளுக்குள் தனிமையாய் உணர்தலே முக்ய காரணமாகி விடுகிறது.


//வாசிக்காத ... வாசிக்காதன்னு சொன்னா கேட்டியா ? இப்ப பார் எழுத வேண்டியாத போய்டுச்சு...

//எனக்கு நானே சொல்லிக்கறேன் //

1 comment:

R. Gopi said...

பதிவு சூப்பர்

\\பஷீர் அளவில் ஒரு குன்றி மணி அளவுக்காவது எழுத முடியுமா என யோசிக்கையில் நமக்கும் மூளை ஸ்தம்பித்துப் போகலாம்.\\

மலையாள இலக்கியம் பஷீரில் தொடங்கி பஷீரில் முடிகிறது

-கண்ணீரைப் பின்தொடர்தல் நூலில் ஜெமோ