தாயே யசோதா உந்தன் ஆயர் குலத்தில் உதித்த
மாயன் கோபால கிருஷ்ணன் செய்யும் ஜாலத்தை பாரடி
தையலே கேளடி ...உந்தன் பையனைப் போலவே
இந்த வையகத்தில் ஒரு பிள்ளை அம்மம்மா நான் கண்டதில்லை ....
தாயே யசோதா உந்தன் ஆயர் குலத்தில் உதித்த
மாயன் கோபால கிருஷ்ணன் செய்யும் ஜாலத்தை பாரடி ;
பாலனென்று தாவி அணைத்தேன் அணைத்த என்னை
மாலையிட்டவன் போல் வாயினில் முத்தமிட்டான்டியசோதா ...
பாலனென்று தாவி அணைத்தேன் அணைத்த என்னை
மாலையிட்டவன் போல் வாயினில் முத்தமிட்டான்டிபாலனல்லடி
உன் மகன் ஜாலமாகச் செய்வதெல்லாம் நாலு பேர்கள் கேட்க சொன்னால் நாணம் மிக ஆகுதடி ...
தாயே யசோதா...
காலிலே சிலம்பு கொஞ்சவே கைவளை குலுங்கிட
முத்து மாலைகள் அசைய தெரு வாசலில் வந்தான்
வானவரெல்லாம் புகழ மானிடரெல்லாம் மகிழ
நீலவண்ணக் கண்ணனவன் நர்த்தனம் ஆடினான் .
தாயே யசோதா...
தாயே யசோதா உந்தன் ஆயர் குலத்தில் உதித்த
மாயன் கோபால கிருஷ்ணன் செய்யும் ஜாலத்தை பாரடி ;
தையலே கேளடி ...உந்தன் பையனைப் போலவே
இந்த வையகத்தில் ஒரு பிள்ளை அம்மம்மா நான் கண்டதில்லை ....
பாடலின் வரிகளை நான் சரியாக வரிசைப் படுத்தி இருக்கிறேனா என்ன என்று தெரியவில்லை,எனக்குத் தெரிந்த வரையில் எழுதியாகி விட்டது ..பலர் இந்தப் பாடலைக் கேட்டிருக்கக் கூடும் .அருமையான பாடல்.
இந்தப் பாடலை எஸ்.பி.பியின் தேன் குரலில் முதன் முதலில் கேட்கும் போதே பரம ஆனந்தமாக இருக்கும் ,பிடித்துப் போனதால் அடிக்கடி இதே பாடலை கேட்டதில் பாடல் மனதில் பதிய பாப்பு பிறந்ததும் அவளைத் தூங்க வைக்க தொட்டில் பாட்டாக இதையே பாடுவேன்.
வீட்டில் அப்பாவிலிருந்து ....தம்பி ...அப்போது அம்மா வீட்டில் இருந்ததால் வார இறுதி விடுமுறையில் எங்களைக் காண வரும் தேவ் ...என் அம்மா எல்லோருமே சிரிப்பார்கள்,ஏனென்றால் பாப்புவை தொட்டிலில் போட்டு எத்தனை தொட்டில் பாட்டுக்கள் (தாலாட்டு ) பாடினாலும் அவள் கண்களை மூடி தூங்குவதற்கான எந்த முகாந்திரமும் தெரியாது.
என் இரு பாட்டிகளும் பழைய தொட்டில் பாட்டுக்கள் நீள...நீளமாக நிறைய பாடுவார்கள் .கிட்டத் தட்ட அரைமணி முதல் ஒருமணி நேரம் வரை பெரிய பெரிய பாட்டுக்கள் எல்லாம் கூட அருமையாகப் பாடுவார்கள் ...பாப்பு அதை எல்லாம் கர்ம சிரத்தையாகக் கேட்டுக் கொண்டிருப்பாள் கால் கட்டை விரலை வாயிலிட்டுக் கொண்டோ அல்லது கை கட்டை விரலை சப்பிக் கொண்டோ ,
ஆனால் கண்களில் மட்டும் பல்ப் எரிவதைப் போல அந்தப் பாட்டுக்களைக் கேட்ட பின் தான் அதிக வெளிச்சம் தெரியும் .அவள் தூங்கப் போவதற்கான அறிகுறியே தெரியாது.;கடைசியில் அவளைத் தூங்க வைக்கப் பாடிப் பாடி களைத்துப் போய் பாட்டிகள் தாங்கள் பாடிய பாட்டுக்கு மயங்கி தாங்களே தூங்கி விடும் வழக்கமாகி விட !!!
இதேதடா துன்பம் என்று அதற்குப் பின் தான் இந்தப் பாடலை அந்தக் கண்ணனே காதில் விழவைத்தான் போல என்றெண்ணிக் கொண்டோம் , இப்போது பாட்டிகளுக்கு தாலாட்டுப் பாடும் தினப் படி ஹோம் வொர்க்கில் இருந்து சற்றே விடுதலை, இந்தப் பாடலை வேறு யார் பாடினாலும் பாப்பு தூங்க மாட்டாள் ...அவளுக்கு அவளது அம்மா தான் இந்தப் பாடலை பாட வேண்டும் !!!
கற்பனை செய்து பாருங்கள் தினமும் ஆறு மாதக் கைக்குழந்தை ஒன்று பகலெல்லாம் தூங்காமல் ...இரவுகளிலும் அரைமணி நேரத்திற்கு ஒருமுறை விழித்துக் கொண்டு எந்நேரமும் விளையாடிக் கொண்டே இருந்தால் அந்த வீட்டில் கலகலப்புக்கு பஞ்சம் இருக்காது ...கூடவே பெரியவர்கள் (ஐ மீன் தொட்டில் பாட்டுப் பாடி களைத்துப் போன பாட்டிகள் அன் கோ ?) எப்படித் தான் தூங்குவதாம் ?
வந்தது விடியல்!? பாப்பு இந்தப் பாடலைக் கேட்டதும் ஆழ்ந்து தூங்க ஆரம்பித்து விடுவாள் ...எல்லாம் ஒரு இரண்டு மணி நேரம் மட்டுமே...பிறகு மறுபடி ...ம்மா ... ங்கா...ஞ்சா...சத்தம் ஆரம்பிக்கும்...மறுபடி தொட்டில் பாட்டு தான் ...ஆக மொத்தம் எத்தனை பேர் பாடினாலும் கடைசியில் இந்தப் பாடல் பாடினால் மட்டுமே பாப்பு தூங்குவாள்.
இதில் ஒரு ட்ரிக் வேறு வைத்திருந்தாள் பாப்பு ...முதலிலேயே இந்தப் பாடலை பாடி விட்டால் பாப்பு உடனே தூங்கி விடுவாள் என்று முதலில் இந்தப் பாடலை பாடினோம் என்று வையுங்கள் ஒரு பிரயோஜனமும் இல்லை ,பாப்பு கிருஷ்ணா பரமாத்மா போல தொட்டில் நிறைக்க சிரித்துக் கொண்டே தான் இருப்பாள் யார் தொட்டிலை ஆட்டுகிறோமோ அவர்களது முகத்தைப் பார்த்துக் கொண்டு தெய்வீகச் சிரிப்பை சிந்திக் கொண்டு .
சும்மா இரண்டு பாடல்களை முதலில் பாடி முடித்து விட வேண்டும்...கடைசியில் மூன்றாவதாக இந்தக் கண்ணன் பாட்டு பாடினால் ஒரு இரண்டு மணி நேரத்திற்கு நாம் ஓய்வெடுத்துக் கொள்வதற்கு உத்தரவாதம் உண்டு ,பாப்பு இந்தப் பாடலில் தான் தூங்குவதென அப்போதே ஏதேனும் சத்யப் பிரமாணம் செய்து கொண்டிருப்பாளோ என்னவோ?
அதிலும் இந்தப் பாடலை அவளது அம்மாவின் இனிய குரலில் தான் (ஹா ...ஹா..ஹா...ஆறு மாதக் குழந்தைக்கு அம்மாவின் குரல் மட்டுமே இனிமையாக இருக்கக் கூடும் மற்றேல்லாருடைய குரலைக் காட்டிலும் !!!சரி தானே நான் சொல்வது?)கேட்கப் பிடிக்கும் .பாட்டு முடிவதற்குள் தூங்கி விடுவாள்.
இப்போது தெரிந்திருக்கக் கூடுமே ஏன் வீட்டில் அப்பா முதற்கொண்டு எல்லோரும் ஏன் சிரித்தார்கள் என்று ?!
கைக்குழைந்தைகளை தூங்கப் பண்ணுவது என்பதென்ன சாமான்ய காரியமா ? அந்தக் காலத்தில் எல்லாம் குறைந்த பட்சம் ஐந்து அல்லது ஆறு குழந்தைகள் தலா அது அம்மா ...அது அப்பாவிற்கு ! இப்போது இந்த ஒன்றை சமாளிக்கவே புதுசாகக் கற்க வேண்டி இருக்கிறது பல விசயங்களை.
என் அப்பாவின் அத்தைப் பாட்டி ஒருவர் அவருக்கு ஐந்து குழந்தைகள் எல்லாம் அடுத்தடுத்து பிறந்து விட்டதால் அந்த வீட்டில் நண்டும் சிண்டுமாக எப்போதும் பிள்ளைகளின் குரல் பசிகோ இல்லை தூக்கதிற்கோ அழுவது கேட்டுக் கொண்டே இருக்குமாம் . பாட்டிக்கு ஒத்தாசைக்கு ஆள் இருக்க மாட்டார்களாம் அப்போது அவர்களுக்கு நிலம் நீச்சு ஏகப்பட்டது உண்டு வீட்டு ஆட்களும் வயலுக்குப் போய்விடுவார்கள்.இவர் ஒருவரே கை குழைந்தை முதற்கொண்டு ஐந்து பிள்ளைகளையும் வீட்டில் சமாளிக்க வேண்டும் .
அந்தக் காலம் மட்டும் இல்லை இன்றும் கூட குழந்தைகள் வளர்ப்பில் அது நிலை என்னவென்றால் ...பசிக்கு அழும் குழந்தைகள் அவர்களுக்கென்று பால் கலந்து எடுத்து வருவதற்குள் குய்யோ முய்யோ என்று கத்தித் தீர்த்து விடுவார்கள்.கண்களில் ஜலம் கொட்டும் ,இது எல்லோருக்கும் கிடைத்திருக்கக் கூடிய அனுபவம் தான் .
எல்லா நேரமும் பல வேலைகளுக்கிடையில் சரியான நேரத்திற்கு பிள்ளை அழும் முன் அதன் பசியாற்றுவது என்பது சில சமயங்களில் இயலாது போகலாம்.வேறு வேலை ஏதும் செய்து கொண்டிருப்பின் மறந்தும் விடலாம்,அதற்குள் கத்தல்...கதறல் ஆரம்பித்து விடும்.
இந்தப் பாட்டி சொன்ன செய்தி என்னவென்றால் இப்போதைப் போல அப்போது கேஸ் ஸ்டவ் கிடையாதல்லவா ...ஐந்து பிள்ளைகளும் பசிக்கு அழுதால் விறகடுப்பில் பற்ற வைத்து பால் கலக்கும் வரை பொறுப்பார்களா என்ன? பெரிய குத்து விளக்கு இருக்குமாம் அவர்கள் வீட்டில் அதை ஏற்றி அதில் பாலை சூடு பண்ணி அப்போதைக்கப்போது குழந்தைகளுக்கு தருவாராம்.
இந்தச் செய்தி எனக்குப் புதிது ...ஆச்சர்யம் கூட !? பகிரத் தோன்றியது பதிந்து விட்டேன் . கருத்துக்களை எழுதுங்கள்.
5 comments:
\\வீட்டில் அப்பாவிலிருந்து ....தம்பி ...அப்போது அம்மா வீட்டில் இருந்ததால் வார இறுதி விடுமுறையில் எங்களைக் காண வரும் தேவ் ...என் அம்மா எல்லோருமே சிரிப்பார்கள்,ஏனென்றால் பாப்புவை தொட்டிலில் போட்டு எத்தனை தொட்டில் பாட்டுக்கள் (தாலாட்டு ) பாடினாலும் அவள் கண்களை மூடி தூங்குவதற்கான எந்த முகாந்திரமும் தெரியாது.\\
ஹா ஹா ஹா
//ஆனால் கண்களில் மட்டும் பல்ப் எரிவதைப் போல அந்தப் பாட்டுக்களைக் கேட்ட பின் தான் அதிக வெளிச்சம் தெரியும் .அவள் தூங்கப் போவதற்கான அறிகுறியே தெரியாது.;கடைசியில் அவளைத் தூங்க வைக்கப் பாடிப் பாடி களைத்துப் போய் பாட்டிகள் தாங்கள் பாடிய பாட்டுக்கு மயங்கி தாங்களே தூங்கி விடும் வழக்கமாகி விட !!!//
:-)
குழந்தை வளர்ப்பு ஒரு பெரிய கலைதான். பாட்டிங்க எல்லாம் ரொம்பவே அனுபவசாலிங்க
நல்லா எழுதியிருக்கீங்க மிஸஸ்.தேவ்
நன்றிங்க....பகிர்தலுக்கு...
அனுபவம் நல்லா இருக்கு...ஐடியா?? அது டாப்! எப்படியெல்லாம் யோசிக்கிறாங்க :0))
நன்றி ஜமால்
நன்றி கதிரவன்
நன்றி பழமைபேசி அண்ணா
நன்றி அதுசரி
Post a Comment