Thursday, April 16, 2009

அழகரும் ஆற்றுக்கொலைகளும் ..திரி திரி பொம்மக்காவும்

அழகர் ஆற்றில் இறங்கும் காட்சி கண்கொள்ளாக் காட்சி மதுரையில் மட்டும் அல்ல ...எங்கள் ஊரிலும் தான் ,முழங்கை உயர கம்பீர வெண்கலச் சிலையாய் மரக் குதிரையில் பச்சைப் பட்டோ ...சிவப்புப் பட்டோ உடுத்தி கழுத்து கொள்ளா நகைகளோடு அழகர் எங்கள் ஊர் வைகை ஆற்றின் நடுவில் எழுந்தருளும்போது பெரும்பாலும் பிற்பகல் நேரம் ஆகிவிடும் ..தக தகவென சூரிய ஒளியில் ஆற்று மணல் வெள்ளியாய் மின்ன , கரையோர தென்னை மரங்கள் அழகரை கீற்றசைத்து வரவேற்க அந்த பின் மாலைப் பொழுது வெகு ரம்யமாய் தோன்றும் .

அழகர் ...ஏன் எப்போதும் முழுக்கை சட்டை போட்டுக் கொண்டிருக்கிறார் ? என்று ஒரு குழந்தை தன் அம்மாவிடமோ..பாட்டியிடமோ கேட்டுக் கொண்டிருப்பதும்...பொடிப் பொடியாய் நசுக்கிய வெல்லத் தூள் பிரசாதமாக தரப் படுவதும் ,துளசி தீர்த்தமும் அதன் சில்லிப்பு வாசமும் ...ஜடகோபுரம் கவிழ்த்து ஆசிர்வதிக்கப் படும் விதம் விதமான தலைகளும் ... பலவர்ணத் துணிகளால் தயாரான பட்டுக் குஞ்சலங்கள் ஆடும் பெரிய பெரிய குடைகளும் கண்முன்னே விரிகின்றன .

ஒவ்வொரு வருடமும் மதுரை சித்திரைத் திருவிழா அன்று எங்கள் ஊர் வைகை ஆற்றிலும் கள்ளழகர் கண் நிறைக்க எழுந்தருளி மறுநாள் காலையில் ஊரெல்லாம் பவனி வருவார். அது ஒரு கோலாகலத் திருவிழா .சென்ற வருடம் இதே திருவிழாவுக்கு ஊருக்குப் போன எனக்கு கொஞ்சம் அல்ல பெரிய அதிர்ச்சி அங்கே காத்திருந்தது .

அழகரை எப்படி குதிரையிலிருந்து பிரிக்க முடியாதோ அப்படியே வைகை ஆற்றிலிருந்தும் பிரித்து விட முடியாது,அழகர் என்றாலே வைகை ஆறு தானே ஞாபகம் வரும் . இப்படிப் பசுமையான நினைவுகளோடு அழகரை தரிசிக்க ஆற்றில் இறங்கினால் கண்ட காட்சியில் கண் நிறைய கண்ணீர் தளும்ப கேவி கேவி அழுது விட்டால் தேவலை என்று ஆகி விட்டது .

ஆறு கிடந்த கோலம் வயிற்றுக்குள் ஏதோ பிசைந்த உணர்வு ,ஆற்றோரப் புளிய மரம் தன் தூரில் மண் ஒட்டாமல் அனாதையாய் பரிதாபமாய் நின்று கொண்டிருந்தது ...என் குழந்தைப் பருவத்தில் அந்த மரத்தின் தூர் கண்ணுக்கு புலப் பட்டு கண்டதில்லை நான் ...அரை வாசி மரம் ஆற்று மணலில் புதையுண்டு சாய்ந்து விளையாட வாகாய் நின்றிருக்கும் தண்டு ..இன்றோ சண்டையிட்டுப் பிரிந்து போன சேக்காளிகள் போல அது தனியே ஒரு ஓரம் தூர் தனியே மறு ஓரம் ..வேர் கூட வெளித் தெரிய பரிதாபத் தோற்றம் .

அதை விடுங்கள் ...இன்னும் கொஞ்சம் பார்வையை வீசிப் போட்டால் நட்ட நடு ஆற்றில் மருந்துக்கும் மணல் இல்லை ...ஏதோ எல்லா மணலையும் பெயர்த்து எடுத்துக் கொண்டு போய் விட்டார் போல தரை மட்டும் அசிங்கமாய் தன் முகம் காட்டிக் கொண்டு நின்றது தகிடு முகடாய் .

ஆறு எங்கே ? ஆற்று மணல் எங்கே? தானே உதிரும் புளியம் பழங்களை தின்று மிஞ்சிய புளிய முத்துக்களை மணலில் ஓட்டி விளையாடிய "திரி திரி பொம்மக்கா "விளையாட்டு ....எல்லாம் இனி என் மகளுக்கு அங்கே மிச்சம் இல்லையா ?மனம் கண்டபடி சிந்த்தித்து அழ முயல புத்தி இடித்துக் காட்டியது ...
அடி பெண்ணே ...ஆறே இல்லை நீ என்ன பொம்மக்கா விளையாட்டுக்குப் போய் விட்டாய் ? போய் வேறு ஏதும் வேலை இருந்தால் பார் ...ஆறு கொலை செய்யப் பட்டு பல நாட்கள் ஆகிறது ,காலம் கடந்து வந்து வெறும் பார்வையாளராய் கண்ணில் நீர் மிதக்க விட்டு யாதொரு பயனும் இல்லை .

உண்மை தான் இங்கே நான் மட்டுமா பார்வையாளர் ?! அழகரும் அவரது குதிரையும் ...குஞ்சலங்கள் வைத்த பட்டுக் குடைகளும் பார்த்துக் கொண்டு தானே இருக்கின்றன நடப்பதை ,

மணல் கொண்டு இனி ஆற்றை நிரப்ப முடியுமா? கேள்வியோடு வீட்டுக்குத் திரும்பினேன் .

இந்த வருடமும் சித்திரை வந்தாயிற்று ...அழகரும் வருவார் ...எத்தனை தூரம் தரை தெரிய ஆறு அமிழ்ந்து போனாலும் ஆற்றில் தான் இறங்குவார் .சென்று பார்க்கும் அந்த நேரம் மட்டும் மனசாட்சியை ...பால்ய நினைவுகளை கொஞ்சம் தட்டி அடக்கி விட்டால் திருவிழா செல்வதில் பாதகமில்லை .

6 comments:

சந்தனமுல்லை said...

வருத்தமே மிஞ்சுகிறது....

//மணல் கொண்டு இனி ஆற்றை நிரப்ப முடியுமா? கேள்வியோடு வீட்டுக்குத் திரும்பினேன் .//

ஆற்றில் தண்ணீர் இல்லாமல் மணல் இருந்தாலே போதுமென்ற மனநிலைக்கு ஆட்பட்டுவிட்டோமோ, நம் தலைமுறையில்?!!

மிஸஸ்.தேவ்..அழகான எழுத்து நடை உங்களுக்கு!

முத்துலெட்சுமி/muthuletchumi said...

:( ம் அதிர்ச்சி தான்..
ரொம்ப அழகா உங்க அனுபவங்களையும் வருத்தத்தையும் பதிவு செய்திருக்கீங்க..

Kiramathan said...

I am missing Chitirai Thiruvizha and Guram samy for last 3 years.Atleast next year I should make it.Lets see.

அது சரி(18185106603874041862) said...

இன்னும் கொஞ்ச நாள்ல ஆறு இருந்த தடம் கூட இருக்காது...எல்லாம் ஃப்ளாட் போட்ருவாங்க...

அப்புறம் இந்த எடத்தில தான் வைகை இருந்துச்சின்னு மேப்ல தான் காட்டணும்..

பழமைபேசி said...

//கேட்டுக்கிட்டே //

’க்’ இங்க வராது. ஒற்று மிகாது.... இஃகிஃகி!!

ராமலக்ஷ்மி said...

//ஆறு எங்கே ? ஆற்று மணல் எங்கே? தானே உதிரும் புளியம் பழங்களை தின்று மிஞ்சிய புளிய முத்துக்களை மணலில் ஓட்டி விளையாடிய "திரி திரி பொம்மக்கா "விளையாட்டு ....எல்லாம் இனி என் மகளுக்கு அங்கே மிச்சம் இல்லையா ?மனம் கண்டபடி சிந்த்தித்து அழ முயல புத்தி இடித்துக் காட்டியது ...
அடி பெண்ணே ...ஆறே இல்லை நீ என்ன பொம்மக்கா விளையாட்டுக்குப் போய் விட்டாய் ? போய் வேறு ஏதும் வேலை இருந்தால் பார் ...ஆறு கொலை செய்யப் பட்டு பல நாட்கள் ஆகிறது ,காலம் கடந்து வந்து வெறும் பார்வையாளராய் கண்ணில் நீர் மிதக்க விட்டு யாதொரு பயனும் இல்லை .//

பல ‘எங்கே’க்களுக்கு விடை இப்படித்தான். அழகரும் பார்த்தபடியே.