Friday, February 25, 2011

ஜெலூசில் மனிதர்கள்





கானக நடுவில் கனி பறிக்கா தருவொன்று
கிளிகளுக்கும் , காட்டுக் குருவிகளுக்குமாய் ...
பிரப்பங் கொடிகளும் பின்னிலாக் காலங்களும்
விரி மரம் தாவும் உரமுள்ள பட்சிகளுக்கும் குரங்குகளுக்குமாய்
என்றிருந்த நாட்கள் மாண்டன ;
யத்தனங்களின் பிரயத்தனத்தில் ஜனித்த
ஜெலூசில் மனிதர்களைப் பீடித்த
அஜீரணச் சீரகமிட்டாய் குழந்தைகள்
வனமழித்து திரும்புகையில் புறத்துக் கவிந்தன
குறுந்தொகை மேகங்கள் ;
தவழ்ந்து இறங்கின நைலான் மழைத் தூறல்கள்
வகைக்கொரு நிறம் பூண்டு
சிவந்த மூக்கு கிளிகளுக்கோ தவிட்டு நிறக் குருவிகளுக்கோ
என்றைக்கு புத்தியில் உரைக்குமோ ?
பின்னோடிகள் பின்னோடிப் போதல் விதியென்று
இந்த பூமி மனிதர்களுக்கானதாம்
மனிதர்கள் என்றால் மனிதர்கள் மட்டும் தானாம்
வனம் என்றால் அடர் வனம் !
இருட்டு அதன் நிறம் .

நோட் :


இந்தக் கவிதை ஆதியில் இருந்தே அபார்ட்மெண்டுகள் கட்டுவதெற்கென ஆக்கிரமிக்கப் பட்ட காடுகள் மற்றும் ஏரிகளுக்கு சமர்ப்பணம் .



Thursday, February 24, 2011

விகடன் இந்த வாரம் -வாசகர் வாய்ஸ்



வெள்ளிக் கிழமை காலை வரும்போது என் டேபிளில் விகடன் இல்லைன்னா ...பயங்கரமாக் கோபம் வரும்.அது ...எங்கயாவது கூட்டிட்டுப் போறதா சொல்லிட்டு லவ்வர் வராம வெயிட் பண்றப்போ வர கோபம் ." கீழ படிச்சிட்டு இருக்காங்க சார்'ங்கரதைக் கேட்டா ,ஏதோ நம்ம ஆளை இன்னொருத்தன் தள்ளிட்டுப் போயிட்ட மாதிரி டென்சன் ஆகும் .ஏன்னா இத்தனை வருசங்களில் எனக்கும் விகடனுக்குமான தொடர்பு அவ்வளவு லவ்வபிள்! (இதை சொன்னது யார் தெரியுமோ?! )


அறிவுமதியின் மழைப்பேச்சில் இந்த முறை மணியம் செல்வத்தின் ஓவியம் கியூட் (அடடா...இது இன்பத் தமிழ் :)


"எல்லோரும் ஏன் எழுத்தாளர் ஆக வேண்டும் ? வேறு ஏதாவது ஆகலாமே!" ;))) இதை சொன்னது யார் தெரியுமோ?! விடைகள் கடைசியில் .


இணையத்தில் எழுதுவதை நான் அதிகம் வாசிப்பதில்லை,ஆனால் எல்லோருக்குமே எழுத்தாளராக வேண்டும் என்று ஆசை இருப்பது மட்டும் தெரிகிறது .

ஞானபீட விருது கொடுப்பதில் எல்லாம் ஏகப் பட்ட லாபி இருக்கிறது ,குறிப்பாக கன்னட எழுத்தாளர்களுக்கும் மலையாள எழுத்தாளர்களுக்கும் அதிகம் விருதுகள் கொடுப்பதில் லாபி இருக்கிறது என்று நினைக்கிறேன்,சிலர் "எனக்கு தாமதமாக கிடைத்த விருது " என்று அங்கலாய்த்துக் கொள்கிறார்கள் .அது தேவை இல்லை என்று நினைக்கிறேன்.


ஒரு தெருக்கூத்துக் கலைஞருடன் தங்கர் பச்சானின் உரையாடல் நிறைவாய் இருந்தது வாசிக்க.


( "மாற்றம் வந்தாதானேமக்களுக்கு பெனிஃபிட்டு !" )
தெருக்கூத்து நாடகங்கள் எதையும் நான் முழுதாகப் பார்த்ததில்லை இதுவரை. முன்னிரவு முதல் விடிகாலை வரை நடத்தப் படும் என்றால் இப்போது அதை யார் அத்தனை நேரம் செலவழித்து உட்கார்ந்து பார்க்க முடியும்! ? இந்த உரையாடலில் அந்தக் கலைஞர் சொன்னதைப் போல தெருக்கூத்து நாடகங்களைப் பார்க்க கிராமத்து ஜனங்களை விட நகர மக்களுக்கு ஆர்வம் அதிகம் தான் ஆனால் நேரம் விழுங்குவது மிகப் பெரிய மைனஸ் அந்தக் கலைக்கு. தெருக்கூத்தை நவீன மயமாக்கி முன்பு டி.டி யில் ஒரு மணி நேர நாடகங்களாக வருமே ராஜராஜ சோழன் குந்தவை நாடகங்கள் அப்படி குட்டிக் குட்டி நாடகங்களாகப் பகுத்துப் போடடால் ஒரு வேலை சோர்வின்றி பார்க்க கூட்டம் கூடலாம்.


வீட்டுக்கு வீடு தொலைக் காட்சிப் பேட்டிகள் அற்றுப் போய் பொழுது போக்கிற்கு பஞ்சாயத்து டி.வி க்களை நம்பி இருந்த காலத்தில் ஜனங்கள் பாவைக்கூத்தையும் ,தெருக்கூத்தையும் ...உள்ளூர் சர்கஸ் கம்பெனியின் வீர தீர விளையாட்டுகளையும் சலிக்காமல் பார்த்துக் கொண்டிருந்தார்கள்.இப்போதெல்லாம் ஒரு முறைக்கு மேல் எதிலும் ஆர்வமின்றி சலிப்படைந்து விடுகிறார்கள்.

"கூத்துக் கலையை வளர்க்க ஏதாவது யோசிக்கணும் -"


யோசிச்சிங்க ..யோசிங்க - கடந்த ஆண்டு சென்னை சங்கமம் திருவிழா வேலம்மாள் மெட்ரிக் பள்ளி முகப்பேரில் நடத்தப் பட்ட போது சரியான கூட்டம் .தொடக்கத்தில் திரண்ட கூட்டம் களையவே இல்லை கடைசி வரை ,விழா முடிந்த இரவிலும் கூட மக்கள் பள்ளி இருந்த தெருவெங்கும் நின்று கொண்டு அவர்களுக்கு மிகப் பிடித்துப் போன கலைஞர்களை ஒன்ஸ்மோர் கேட்டு ஆட வைத்துக் கொண்டும் பாட வைத்துக் கொண்டும் இருந்தார்கள். பாரம்பர்ய கலை வடிவங்களை மக்கள் ரொம்பவே ரசித்தார்கள். ஓவர் டோஸ் ஆகாமல் கொடுத்தால் எப்போதும் ரசிப்பார்கள் என்று நம்பலாம்.


சொல்வனத்தில் பா.ரா மற்றும் நாவிஷ் செந்தில் குமார் கவிதைகள் வழக்கம் போல அருமை .


ஷாஜியின் மலேசியா வாசுதேவன் பற்றிய நினைவுக் கட்டுரை வாசிக்கையில் தேவ் க்கு மிகப் பிடித்த ஆல் டைம் பேவரிட் பாடல் "ஆகாய கங்கை பூந்தேன் மழை தூவும் " ...." பாடல் ஒலித்துக் கொண்டிருந்தது நினைவடுக்குகளில் . ம்ம்...சில வாரங்களுக்கு முன்பு இதே விகடனில் மலேசியா வாசுதேவன் தனது இருப்பைப் பற்றி சலனப் படாத தன்னை மறந்து போன தனது திரையுலக நட்புகளை பற்றி ரொம்ப வருத்தமாய் ஒரு பேட்டி கொடுத்திருந்தார் இன்றவர் இல்லை . நிச்சயம் அந்த நட்புகள் பலவும் இரங்கல் தெரிவிக்க அவரில்லாத வீட்டில் அவரைச் சுற்றி குழுமி இருப்பார்கள்! எங்கிருந்தாவது பார்த்துக் கொண்டு வாசு அரூபமாய் சிரித்திருப்பார் என்று நம்புவோமாக!


நா.முத்துக் குமாரின் "அணிலாடும் முன்றில் "

அ .முத்துலிங்கத்தின் "ஜகதலப்பிரதாபன் "

கவின் மலரின் "தொடர்பு எல்லைக்கு வெளியே "
வேணுவனம் சுகா வின் "மூங்கில் மூச்சு "


இவை அனைத்தும் வாசிக்கப் பிடித்திருந்தன.


எட்டெட்டு இந்த தரம் கொஞ்சம் போர் .


வாசகர் கேள்விகளுக்கு சூர்யா பதில் சொல்லி இருக்கிறார் இந்த வாரம் . பாலா பதில்கள் அளவுக்கு பர பரன்னு எதிர்பார்ப்பை கிளப்பி விடலை .ஆனா நல்லா இருக்கு வாசிக்க. :))


ஒரு கேள்வி பதில் சாம்பிள்க்கு பாருங்க :


ஜோதிகாவை சந்திக்காமல் இருந்திருந்தால் ?


"வாழ்க்கை இவ்ளோ அழகா" ன்னு தெரியாமலே போயிருக்கும்!.


"உலகக் கணவர்களே தாங்கள் யாவரும் இப்படியே பதில் சொல்லக் கடவீர்களாக ,உலக மனைவிகளின் உலகம் உய்யும் . " :))


"ங்கே!" என்று வாசித்துக் கடந்த சில ஸ்டேட்மெண்டுகள் : :


திருமா வளவனுக்கு முதுகெலும்பு முறிந்து விடவில்லை.எனவே,நான் எந்தப் பக்கமும் சாய மாட்டேன் எதுவாக இருந்தாலும் தி.மு.க கூட்டணியில் தான் தொடர்வேன் !" - திருமாவளவன்


"காங்கிரஸ் கூட்டணிக்கு தி.மு.தி.க வந்தால் ,சிவப்புக் கம்பளம் போட்டு வரவேற்பேன் " - ஈ.வி.கே.எஸ்.இளங்கோவன்


"தமிழக மீனவர்களுக்கு ஈழத்து மீனவர்களுக்கும் பகையைத் தூண்டுகிற வேலையை இலங்கை நேரடியாகவும் ,இந்தியா மறைமுகமாகவும் செய்து வருகின்றன !" - சீமான்


விடைகள் :


முதல் விடை லிங்குசாமி - நானும் விகடனும் தலைப்பில் இப்படிப் பேசி இருந்தார் இந்த வாரம்

அடுத்த விடை -அசோக மித்திரன் :))


காசு கொடுத்து விகடன் வாங்கிப் படித்ததில் பெரிதாய் பழுதொன்றுமில்லை இந்த வாரமும்.


"நன்று"


லைப்ரரி ...

லைப்ரரி


இன்றைக்கு ...

தரையில் இறங்கும் விமானங்கள் -இந்துமதி
மாயலோகம் - சா.கந்தசாமி
நினைத்துப் பார்க்கிறேன் (தொகுப்பு) -ஜெயகாந்தன்
விகடன் தீபாவளி மலர் 2010 - விகடன்

இவை நான்கையும் எடுத்துக் கொண்டேன் .முன்பே buzz இல் யாரோ கேட்டிருந்தார்கள் ஞானியின் " தவிப்பு " நாவல் இப்போது கிடைக்கிறதா என்று! கிடைக்கிறது விகடன் வெளியீடு விலை ரூ -80 பத்துப் பதினோரு வருடங்களுக்கு முன்பு வாசிக்கையில் மிகப் பிடித்திருந்தது ,மீள் வாசிக்கும் எண்ணம் இல்லாததால் அதை எடுக்கவில்லை.
தி.ஜா வின் சக்தி வைத்தியத்தை தேடித் பார்த்தேன் சென்ற முறை கண்ணெதிரில் இருந்தது,இப்போது தேடினால் கிடைக்கவில்லை . பல முறை தி.ஜா புத்தகங்கள் எடுக்கும் போது முன்னால் முன்னால் வந்து கண்ணில் படும் ,இப்போது வேண்டு விரும்பி தேடப் புறப்பட்டால் கைக்கோ பார்வைக்கோ சிக்கக் காணோம் . சக்தி வைத்தியத்திற்கு தான் சாகித்ய அகாடமி விருது வழங்கப் பட்டதாம் என்று இணையத்தில் பார்த்தேனா ...அதில் என்ன இருக்கிறது என்று பார்த்தாக வேண்டிய கட்டாய மனநிலை உருவாகி அதைத் தேடிக் கொண்டிருக்கிறேன்.

தேவனின் மல்லாரி ராவ் கதைகள் இருந்தது எடுப்போமா வேண்டாமா என்று யோசித்து விட்டு பிறகு வாசிக்கலாம் என்று வைத்து விட்டேன். சில கதைகளை வாசிக்க சில மனநிலைகள் தேவைப்படுகின்றன. எல்லா நேரங்களிலும் எல்லாவற்றையும் வாசித்து விட முடிவதில்லை ...இப்போதைய தேடல் பரிந்துரைகளின் அடிப்படையில் இயங்குவதால் பலரும் பாராட்டிய இந்துமதியின் "தரையில் இறங்கும் விமானங்களை "எடுத்துக் கொண்டேன் .விகடன் பொக்கிஷத்தில் இரு வாரங்களுக்கு முன் ஒரு சோற்றுக் கடை அம்மாளைப் பற்றி ஜெயகாந்தன் எழுதி இருந்த ஒரு கட்டுரை பிரசுரமாகி இருந்தது இந்தத் தொகுப்பில் இருந்து தான் எடுக்கப் பட்டதோ என்னவோ தெரியவில்லை ,வாசிக்க பிடித்ததால் " நினைத்துப் பார்க்கிறேன் "தொகுப்பை எடுத்துக் கொண்டேன் .

எப்போதுமே பல்சுவைக்கு எனது விருப்பங்களில் முதலிடம் அந்தக் கணக்கில் பழையதானாலும் பரவாயில்லை இன்னும் வாசிக்க வில்லையே என்று 2010 விகடன் தீபாவளி மலரையும் எடுத்து வந்திருக்கிறேன். புரட்டிப் பார்த்ததில் நிறைய சுவாரஸ்யங்கள் இருக்கும் போலத் தான் தெரிகிறது ,வாசித்துப் பார்த்தால் தெரியும் .

பேருந்தில் வருகையில் முன் சீட் அம்மணி ஒருவர் நீளக் கூந்தலை விரித்துப் போட்டு சிக்கெடுத்துக் கொண்டிருந்தார். எனக்குப் பக்கத்தில் அமர்ந்திருந்த அம்மணியோ சாவதானமாக காலடியில் வைத்திருந்த மூன்று குட்டிச் சாக்குகளில் இருந்து விதம் விதமாக பூக்களை எடுத்து சரம் கட்டிக் கொண்டே வந்தார் இறங்க வேண்டிய நிறுத்தம் வரும் வரை ,

சிட்கோ நகர் நிறுத்தத்தில் பேருந்தில் ஏறிய ஒரு பெண்மணி குள்ளமாகத் தான் இருந்தார் அவரது கூந்தல் பின்னலிடப் பட்டு அவரை விட உயரமாக இருந்தது .இத்தனை நீளக் கூந்தலா ! தலைக்கு அப்படி என்ன தான் போட்டுக் குளிப்பாளோ இந்தம்மாள் என்று யோசித்துக் கொண்டிருந்தேன் .டென்த் படிக்கையில் லதா என்றொரு சினேகிதி இருந்தாள் அவளுக்கும் பட்டுப் போல நீளப் பின்னல் தான் ஆனால் கருப்பின்றி செம்பட்டை வாய்ந்த கூந்தல் ..."தலைக்கு என்னத்தையடி தேய்த்துக் குளிப்பாய் என்று கேட்டதற்கு 501 சோப்பு தான் கார்த்தி "என்று சிரித்திருக்கிறாள் . அவளது செம்பழுப்புக் கூந்தல் அதை நிஜம் என்று கூட நம்ப வைத்தது.அன்றிலிருந்து எத்தனை அடர்த்தியான பின்னலைப்பார்த்தாலும் தலைக்கு என்ன தேய்த்துக் குளிப்பாய் என்று யாரையும் நான் கேட்டதில்லை.

சொல்ல அந்த விஷயம் பதினோரு மணிக்கு மேல் சென்னை நகரில் பேருந்துகள் இடைஞ்சல் இல்லாமல் நெருக்கடி இல்லாமல் பெண்கள் தங்கள் தலை முடியை விரித்துப் போட்டு உலர்த்திக் கொண்டும் பூக் கட்டிக் கொண்டும் பயணிக்கிற வசதியில் இருக்கின்றன என்பதைத் தான் .
வந்தது தான் வந்தோம் வீட்டுக்கு கொஞ்சம் பழங்கள் வாங்கிக் கொள்ளலாம் என்று பழக்கடைப் பக்கம் ஒதுங்கினால் அகச்மாத்தாகவோ அசரீரியாகவோ காதில் பாய்ந்த ஒரு ஸ்டேட்மென்ட்டை பாருங்கள் ; அங்கே ஒரு சிவப்புச் சேலை பெண்மணி கூட வந்திருந்த இன்னொரு மஞ்சள் சேலை பெண்மணியிடம் இப்படிச் சொல்லிக் கொண்டிருந்தார்.

// "நல்ல பெண்டாட்டிக்கு நல்ல புருஷன் அமையறதில்லை ,நல்லபுருஷனுக்கு நல்ல பெண்டாட்டி அமையறதில்லை "//

அப்படியா மக்களே !?

இதிலிருந்து என்ன சொல்ல வருகிறார் என்று ஒரு நொடி குழம்பி விட்டு தலையை குலுக்கி அந்த வார்த்தையில் இருந்து விடுபட்டுக் கொண்டு வீட்டுக்கு வந்து சேர்ந்தேன் .

Wednesday, February 23, 2011

ஷாம்பூ (சுமங்கலி முதல் பேன்டீன் வரை)









இது ஒரு ஷாம்பூ விவகாரப் பதிவு .ஒவ்வொருவருக்கும் ஒவ்வொரு பிராண்ட் பிடிக்கும் என்றால் அத்தனை பாட்டில்களா வாங்கி ஸ்டாக் வைக்க முடியும் மாதந்திர பட்ஜெட்டில். ம்ஹூம் ...எனக்கு பயங்கர அலுப்பு இது விசயத்தில் . எனக்கு எப்போதும் சன்சில்க் ப்ளாக் வேண்டும் என நினைப்பேன் . சும்மா நினைப்பேன் அவ்வளவு தான் :))) . என் மகளுக்கு ஜான்சன் அண்ட் ஜான்சன் பேபி ஷாம்பூ (நீ ஏன் எப்போ பார் இதையே வாங்கற எனக்கு,பார் டி .வி ல வர குழந்தைங்க எல்லாம் கிளினிக் ப்ளஸ் தான் போட்டுக்கறாங்க அதான் முடி நீளமா இருக்கு ...நீ குட்டை குட்டையா முடி வெட்டறதுக்காக முடி வளரவே கூடாதுன்னு தான் இப்டி ஷாம்பூவா வாங்கற எனக்கு ...துரோகி அம்மா நீ ! துரோகியா ?! இந்த என்ற வார்த்தை என்னை அதிர்சியாக்கி ஒரு நிமிடம் ஸ்தம்பிக்க வைத்தது.





"ஏண்டா குட்டி இந்த வோர்ட்ஸ் எல்லாம் எங்க கேட்ட நீ? "





"நாங்க ஸ்கூல்ல கா விட்டுக்கும்போதேல்லாம் ரிஷிதா சொல்லுவா "





"ஒ ...ரிஷிதா இனிமே அப்படிச் சொன்ன சொல்லக் கூடாதுன்னு சொல்லுடா குட்டி"





"முடியாது ம்மா ...அவ உன்ன ஒரு தடவ ஸ்கூல்ல பார்த்தப்போ - உங்க மம்மி சூப்பரா இருக்காங்கன்னு சொன்னா " இப்படி சொன்னா உங்க மம்மி நல்லாவே இல்லைன்னுடுவா ...நான் அவ கிட்ட சொல்ல மாட்டேன்.





"நல்லா இல்லைன்னு சொன்னா சொல்லட்டும் ...நீ போய் சொல்லு "








"கம்பெல் பண்ணாத மம்மி ...போ எனக்கு கிளினிக் ப்ளஸ் வாங்கி வை இனிமே. "





இந்த சம்பாஷனை இப்படி முடிய.




தம்பிக்கு ஹெட் அண்ட் சோல்டர் தான் வேண்டுமாம் (பெட்ரோமாக்ஸ் விளக்கே தான் வேணுமாம் ...வேறு ஷாம்பூ இருந்தால் குளிக்கவே மாட்டாராம் ...ஆபீசுக்கு லேட்டானாலும் பரவாயில்லை சாப்பிடாமல் போனாலும் பரவாயில்லை அவசர அவசரமாய் கடைக்கு ஓடி ஹெட் அண்ட் சோல்டரை வாங்கி வந்து குளித்தால் தான் அவனுக்கு ஜென்ம சாபல்யமாம் :))) )
அத்தைக்கு திரவ ஷாம்பூ ஆகவே ஆகாது . மீரா சிகைக்காய் தூள் பாக்கெட் பாக்கெட்டாய் ஸ்டாக் செய்து வைத்துக் கொண்டுள்ளார். என்ன இருந்தாலும் சிகைக்காய்னு போட்டுருக்கான்ல நயம் சிகைக் காய் வாங்கி காய வச்சு அரைக்கத் தான் முடியல அதுக்கு இது தேவலாம் என்பார் .
அப்பா என் அன்பான அப்பா எப்போதும் ஷாம்பூ தேடியதோ ... தேடுவதோ இல்லை .,எனக்கு விவரம் தெரிந்த நாள் முதலாய் ஹமாம் சோப்பையே தான் தலைக்கும் போட்டுக் கொள்வார் . அப்பாவால் ஷாம்பூ பிரச்சினையே எழுந்ததில்லை வீட்டில் .என்னே யாம் செய்த புண்ணியம்!
என்னருமைக் கணவர் அடடா...இப்படி ஒரு மனிதரை கணவராக அடைய ஏழேழு ஜென்மம் தவம் பண்ணி இருக்க வேண்டும் நான் .நான் ஷாம்பூ என்ற பெயரில் எதை வாங்கி வைத்தாலும் ஒரு கேள்வி இல்லை அவரிடத்தில் .நீ என்ன செய்தாலும் அது என் நன்மைக்கே என்ற விதத்தில் அத்தனை சாத்வீகமிருக்கும் இந்த ஷாம்பூ விஷயத்தில் மாத்திரம்.
தங்கைக்கு பெர்பெக்ட் தங்கை இருக்கிறாள். எங்கே போனாலும் அவளுக்கே அவளுக்கென்று ஒரு பேக் தனியே பயணிக்கும்.அவளும் யாருடைய ஷாம்பூ ,சோப்பு,சீப்பு ,எண்ணெய் இத்த்யாதி இத்யாதிகளை உபயோகிக்க மாட்டாள் ...பிறரையும் (சில நேரங்களில் சொந்த அக்காவாகவே இருந்தாலும் தான் ) உபயோகிக்க அனுமதிக்க மாட்டாள். தான் ..தன்னுடைய சுகாதாரம் என்று அத்தனை பெர்பெக்ட்.
அடேங்கப்பா ! பெரும்பாலும் ஷாம்பூவில் இருந்து க்ரீம் வரை ஹிமாலயாஸ் ப்ராடக்டுகள் தான் உபயோகிப்பாள். வேறு என்ன இருந்தாலும் ரிஜக்ட் தான் .
அம்மாவும் நானும் ஏகதேசிகள் ...எது இருக்கிறதோ அது ...எது கிடைக்கிறதோ அது ! இந்த ரீதியில் ஷாம்பூ முதல் சோப்பு வரை எந்த கண்டீசன்களும் இல்லை எங்களிடத்தில்.





இந்த இடத்தில் தான் எனக்கு பழைய "சுமங்கலி ஷாம்பூ "ஞாபகம் வந்து தொலைத்திருக்க வேண்டும்.





அது இன்றைய ஷாம்பூக்களுக்கு எல்லாம் அம்மா ஷாம்பூ .





மஞ்சள் நிறத்தில் ட்ரான்ஸ்பரன்ட் பிளாஸ்டிக் உறைக்குள் நீர்க் கரைசலாய் நெளிந்து கொண்டிருக்கும் .அம்மா ஞாயிற்றுக் கிழமை ஆனால் எனக்கொன்று தங்கைக்கு ஒன்று என்று வாங்கி வந்து கொல்லைப்புறத்து துணி துவைக்கும் கல்லில் உட்கார்த்தி வைத்து தலைக்கு தேய்த்து ஊற்றி விடுவார் . அந்த ஷாம்பூவில் இன்றைய ஷாம்பூக்களைப் போல நுரை ததும்பிப் பொங்கியதில்லை.என்னவோ ஷாம்பூ என்ற பெயருக்கு ஒரு ஷாம்பூ அது.





அதை அடுத்து கிராமப் புறங்களில் சிக் ஷாம்பூ சக்கைப் போடு போட்டது .சிக்கைத் தொடர்ந்து கடல் ஷாம்பூ அது மட்டுமா அப்புறம் வெல்வெட் ஷாம்பூ வாங்க ஆரம்பித்தார்கள் அனேக வீடுகளில் .








இந்த மூன்று ஷாம்பூகளில் சிக் தவிர கடல்,வெல்வெட் எல்லாம் இன்றைக்கு நகரங்களில் பெரும்பாலும் காணக் கிடைக்கவில்லை . ஊருக்குப் போனால் கடைகளில் தொங்க விட்டிருப்பார்களோ என்னவோ தெரியவில்லை .





அப்புறமாய் பொடுகுக்கு என்று கிளினிக் ப்ளஸ் விளம்பரங்கள் பிரசித்தி அடைய ஆரம்பித்தன எல்லா இடங்களிலும் .கொஞ்ச நாட்கள் நுனி கேள்விக் குறி போல வளைந்த நீல நிற கிளினிக் ஷாம்பூ பாட்டில்கள் எங்கள் வீட்டில் இடம் பிடித்துக் கொண்டிருந்தது.





இப்போது தம்பி "ஆல் கிளியர் ஷாம்பூ " மட்டும் தான் தலைக்குப் போடுவானாம் .





தங்கை "பேன்டீன் ஷாம்பூ " இல்லா விட்டால் தலைக்கு குளிப்பதையே ஒத்திப் போட்டுக் கொள்வேன் என்கிறாள் .





என் மகள் "விளம்பரத்துல வர பொண்ணு போல நீளமா தலை முடி வேணும் எனக்கு அந்த ஷாம்பூ தான் வேணும் இல்லனா தலைக்கு குளிக்க வைக்க விட மாட்டேன் போ " என்று விட்டாள்.





அப்பாவைப் பற்றிச் சொல்ல என்ன இருக்கிறது.ஷாம்பூ விஷயத்தைப் பொறுத்தமட்டில் பிரச்சினையே கிளப்பாத அவரொரு கண்கண்ட தெய்வம். :)))





தேவ் ..அடடா அடுத்த ஜென்மத்துக்கும் இவரே என் கணவர் ...நானே இவர் மனையாட்டி ( யாரா இருந்தாலும் சரி பேக்கிரவுண்ட்ல "நீயே தான் எனக்கு மணவாட்டி பாட்டு "ஓட வச்சுக்கிட்டு தான் இந்த வரிகளை வாசிக்கணும் ஆமாம் சொல்லிப் போட்டேன் தெரிஞ்சுதா?





அப்புறம் என்னைப் பற்றிச் சொல்லி முடிக்க வேண்டும் இல்லையா? ஷாம்பூ விஷயத்தில் அம்மாவும் நானும் இன்றும் அப்படியே தான் தொடர்கிறோம் எங்கள் நிலைகளில் எந்த மாற்றங்களும் இன்றி. :)








Monday, February 21, 2011

மெர்குரிப்பூக்கள் (பால குமாரன்)

மெர்குரிப் பூக்கள் ஒவ்வொரு கதாபாத்திரமும் அதனதன் இயல்பில் அப்படி அப்படியே பதிந்து நிற்கிறது மனதில் .

சாவித்ரியும் மன்னியும் வைராக்யக் காரர்கள் போல சித்தரிக்கப் பட்டுள்ளனர். பெண்கள் பெரும்பான்மையும் இங்கு அப்படித்தானே!அவர்களிடத்தில் போலித் தனம் இல்லை வேஷம் இல்லை.இன்ன விஷயம் இப்படித் தான் அதைக் கடந்து வந்தால் ஆகப் போவது அத்தனைக்கும் பொறுப்பை ஏற்கவோ தாங்கிக் கொண்டு தாண்டிச் செல்லவோ முடியாதவர்களுக்கு புத்தியும் அறிவும் குறிப்பிட்ட எல்லையில் சைக்கிள் போல ஸ்டாண்ட் இட்டு நிறுத்தி வைக்கப் படுதலே சால உத்தமம் என்ற நிஜத்தை அறிந்தவர்களாக அவர்கள் இருப்பதில் கண்ணாடி பார்த்துக் கொள்வதைப் போல உணரத் தான் வேண்டி இருக்கிறது.

சியாமளி ஆரம்பத்தில் பயமுறுத்துகிறாள் .அவள் நியாயம் அவளுக்கு ,அதை தவறென்று சொல்லல் ஆகுமோ!? குழந்தை கூட ரெண்டாம் பட்சம் என அவளை எண்ண வைத்தது எது ? தண்டபாணி என்ன மனிதனய்யா அவன்? அட அசடே என்ற எண்ணமே மேலோங்குகிறது .மளிகைக் கடை கல்லாப் பெட்டியில் பொங்கிக் குலுங்கும் சில்லரைகளாய் இப்படிப் பட்ட கணவர்கள் நிறைந்த தேசம் தானே நம்முடையது.மனைவியைப்புரிந்து கொண்டு அவளைக் கொண்டாடுவது என்பது கன கஷ்டமான காரியம் தான் போலும் . இடம் கொடுத்தால் உச்சந்தலையில் ஏறி உட்கார்ந்து கொள்ளக் கூடும் என்று எவர் போதித்திருப்பார்கள் அவர்களுக்கு ? அம்மாக்களா ? அப்பாக்களா? ஆயின் அவர்களே இப்படிப் பட்ட கணவர்களுக்கு பிரதிநிதிகள் . பிறகு சியாமளி அவனை நொந்து கொண்டு வெறுத்து பிரயோஜனம் என்ன?!

சியாமளி சங்கரனுடன் பேசும் இடங்கள் எல்லாம் அவளது நியாயத்தை புத்திக்கு உரைத்தாலும் கடைசியில் அவள் சங்கரனுக்கு எதிராக முற்றாக வெறுத்து கதவடைக்கையில் எஞ்சும் நிம்மதியே பரி பூரணமாகத் தெரிகிறது .தொடர்ந்து கலவரத்துடனே படித்துக் கொண்டு கடக்கையில் இவ்விடம் ஒரு சின்ன சந்தோசம் எழுவதை தவிர்க்க இயலவில்லை .இதுவே சியாமளிக்கு நல்லது என்று ஆட்டு மந்தை சமூகத்தின் அடுத்த வாரிசாய் சொல்லிக் கொள்ள முடிகிறது.

அவள் சங்கரனுடன் ரயிலேறிப் போயிருந்தாலும் தண்டபாணி அவளது குழந்தை மற்றும் மன்னியின் உலகம் ஒன்றும் ஸ்தம்பித்து நின்றிருக்கப் போவதில்லை .அவரவர் பாடு நிகழ்ந்து கொண்டே தான் இருந்திருக்கும். ஆனால் ஊர் வாய்க்கு மெல்ல அண்டா நிறைய அவல் கிடைத்திருக்கும். சியாமளி அப்படிப் போனதற்கு மன்னிய விடுங்கள் அவளது பெண் சிலுவை சுமக்க நேர்ந்திருக்கும் . இதை சியாமளி உணர அவளுக்கு மன்னி வேண்டியிருந்திருக்கிறாள்.

ரங்கசாமியின் அம்மா தொழிற்சாலை அடித்து norukkap பட்ட பின்பு அவரைத் தேடிக் கொண்டு வந்து கடைசியாக பேசுகையில் கண்ணாடிக் குவளை விழுந்து நொறுங்கும் சப்தம் கேட்டுக் கொண்டே இருந்தது உள்ளுக்குள்ளே .நாம் எதை எதையோ நமது உடமை என்று நினைத்துக் கொண்டு ரொம்பத் தான் அதைக் கட்டி காப்பாற்றி காபந்து பண்ணிக்கொள்ள பார்க்கிறோம் ,விளைவுகளோ படு பூஜ்யமாய் நம்மைப் பார்த்து சிரிக்கையில் பல குற்றச் சாட்டுகளுக்கு நாம் பொறுபேற்க வேண்டியவர்களாய் ஆகிறோம்.

கணேசன் சாவித்ரியோடு நிறைவாய் குடும்பம் நடத்தி விட்டு எதற்காக சாகிறோம் யாரால் சாகடிக்கப் படுகிறோம் என்பதே அறியாமல் செத்துப் போகிறான். இந்தக் கதையில் பரிபூர்ணமாணவாய் இவனைத் தான் என்ன வேண்டியிருக்கிறது.

அடுத்தவன் மனைவியின் மீது காதல் கொள்ளும் சங்கரன்.
உணர்ச்சி மேலிடப் பேசிப் பேசியே போராட்டத்தை முடுக்கி விட்டு ஒரு வகையில் கணேசன் சாவிற்கு காரனமானவனாகிப் போன கோபாலன் .
மனைவியைக் கொண்டாடத் தெரியாத கற்றுக் கொண்டிருக்காத தண்டபாணி .

அப்பா சேர்த்த சொத்தை மேலும் மேலும் பெருக்கிக் கொள்ளும் ஆர்வம் கூடிப் போய் கல்யாணம் குடும்பம் குழந்தைகள் என்ற பந்தத்தின் சுவை அறியக் கூட மறந்து போன ரங்கசாமி.

இவர்கள் எல்லோரும் எதனெதன் பொருட்டோ கதையில் எஞ்சி நிற்கையில் கணேசனுக்கு எல்லாம் நிறைவாய் கிடைத்த காரணத்தால் தான் அவனது வாழ்வை விதி அப்படி முடித்ததோ !?

Note:
குறைந்த பட்சம் ஒரு வாரம் buzz ,blog சர்வீசை நிறுத்தி வைக்கலாம்னு பார்த்தா சிரங்கு பிடிச்சவன் கை மாதிரி தான் ஆயிடுது கதை.

Tuesday, February 15, 2011

தன்யவதி ஆவேன்

மிஸ்.ராதா கொத்தமங்கலம் சுப்பு (கலைமணி )

கோல் (Goal ) இலியாஹூ எம். கோல்ட்ராட் (தமிழில் அஞ்சனா தேவ் )

சூர்ய வம்சம் சா.கந்தசாமி

மெர்க்குரிப்பூக்கள் பாலகுமாரன்

Goal விகடனில் தொடராக வந்த போதே அதிகம் ஈர்த்தது சேகரித்து வைத்தேன் சில வாரங்கள் மட்டுமே முடிந்தது ...பிறகு என்றாவது ஒருநாள் முழு நாவலாக வாசித்துக் கொள்ளலாம் என்ற சமாதானத்தோடு Goal விடுபட்டது.

தேவனின் படைப்புகள் அத்தனையும் எனக்கு சர்க்கரைப் பாகில் ஊற வைத்த ஜீரா தோசை சாப்பிடுவதைப் போல வாசிக்க அத்தனை ப்ரியங்கள் ,பெரும்பாலும் அவரது தலைப்புக்கள் இப்படித்தான் இருக்கும் ;

கல்யாணி ,மாலதி,மைதிலி ,கோமதி (கோமதியின் காதலன்) ,மிஸ்.ஜானகி இப்படிப் போகும் இந்தக் கதைகளை குறிப்பிட்ட இடைவெளிகளில் எத்தனை முறைகள் வேண்டுமானாலும் வாசிக்கப் பிடிக்கும் எனக்கு .

இதே நினைவில் தான் "தில்லானா மோகனாம்பாள்" எழுதிய கொத்தமங்கலத்தாரின் மிஸ்.ராதா நாவலை எடுத்து வந்தேன். எழுத்தில் ஹாஸ்யம் எத்தனை தூரம் செல்லுபடியாகலாம் என்றால் இன்றைக்கு தேவன் இல்லை சொல்லித் தர ஸ்ரீமான் சுதர்ச்சனத்தையும் ,லக்ஷ்மி கடாட்சத்தையும் அத்தனை எளிதில் மறக்க இயலாது.

சா.கந்தசாமியின் "தக்கையின் மீது நான்கு கண்கள்" வழியே " சாயா வனம் " நாவலை வாசித்து விட்டு இப்போது சூர்ய வம்சம் வரை வர முடிந்திருக்கிறது ,அடுத்து விசாரணைக் கமிஷன் எடுக்கலாம் என்றிருக்கிறேன். கோடையின் பின் மதிய நேரங்களைப் போல ஆர்ப்பாட்டங்களே இல்லாத எழுத்து சா.கந்தசாமி வகை.

ஒருவழியாக நானும் மெர்க்குரிப் பூக்களை வாசிக்கப் போகிறேன். நண்பர்கள் பலருக்கும் பிடித்துப் போய் சிலாகிக்கப் பட்ட நாவல்...என்ன தான் இருக்கிறது அதில் வாசித்ததும் எதையாவது கிறுக்குவேன் என்பது மட்டும் திண்ணம்.

இப்போது கைகளில் விரித்துக் கிடத்திக் கொள்ளப் போவது Goal .

சிறுவர் இலக்கியம்,தலித் இலக்கியம் போல இந்த நாவல் பிசினஸ் இலக்கியம் வகைப்பாடாம் .

முன்னுரையில் சொல்லப்பட்டுள்ளது .

பிசினஸ் இலக்கிய நாவல்கள் வேறு என்னவெல்லாம் இருக்கிறது ,தகவல் அறிந்த நண்பர்கள் பரிந்துரைத்தாலும் சரி இல்லை பகிர்ந்து கொண்டாலும் சரி. தன்யவதி ஆவேன்.

:)

Tuesday, February 8, 2011

நடுச்சமுத்திரத்துல டுமுக்குனுச்சாம் - ஒரு நாட்டுப்புறத்துக் கதை






ஒரு ஊரில் ஒரு காக்கை தம்பதிகள் இருந்தார்களாம் ,அவர்களுக்கு ஆண் ஒன்றும்பெண் ஒன்றுமாய் இரண்டு காக்கைக் குஞ்சுகளும் உண்டு , நேராநேரத்துக்கு இரைகள் கிடைக்க நல்ல நிறைவான பறவை வாழ்க்கையாம்.காகங்களுக்கும் ஆசைகள் ,பேராசைகள் உண்டு போலும் ,வடக்குத் தெருவில்குடி இருந்த இந்த காகத் தம்பதிகளில் ஆண் காக்கா தெற்குத் தெருவில் தன்வசதி வாய்ப்புக்கு ஏற்ப மற்றொரு பெண் காக்காவை வைப்பாட்டியாகவைத்துக் கொண்டதாம் .


( 'காக்கை குருவி எங்கள் ஜாதி '...என்றெல்லாம் பாரதியார் பாடி வைக்கும்முன்பே கிராமப் புறங்களில் வழக்கிலிருந்த கதையாம் இது! ஆதலால் பாரதியைஇங்கே சம்பந்தப் படுத்தாமல் விலக்கி விடலாம்.



கணவனான ஆண் காக்கா இப்படி தெற்குத் தெருவில் தனிக் குடும்பம் வைத்துக்கொண்டு பராமரிப்பது நாளடைவில் மனைவியான பெண் காக்காவுக்குத் தெரிய வரஅதற்கு வந்த ஆற்றாமையும் ஆத்திரமும் சொல்லி மாளாது .ஆண் காக்காவின்செயல்களைப் பொறுத்துக் கொள்ள முடியாமல் அதனிடம் இந்த விஷயம் குறித்துசண்டையிடவும் விரும்பாமல் பெண் காக்கா தனக்குள் இந்த விசயத்தைப்போட்டுக் குழப்பிக் கொண்டு நெடு நாட்களாகப் போராடிக் கொண்டிருந்தது .


அக்கம் பக்கம் வேறெந்த காகங்களிடமும் ஆலோசனை கேட்டால் அது தன் குடும்பசமாதானத்திற்கும் நிம்மதிக்கும் தான் இழுக்கு என்றெண்ணியோ என்னவோயாரிடமும் சொல்லாமல் தானாக ஒரு முடிவுக்கு வந்ததாம் .



அந்த முடிவின்படி ஒருநாள் நன்றாக சீவி சிங்காரித்து பூ முடித்து (காக்காபூ வைக்குமா என்றெல்லாம் கேள்வி கேட்க கூடாது இது கதை கதைக்கு காலுண்டா?! ) மதியம் கூட்டுக்கு வந்த ஆண் காக்காவிடம் சிரித்த முகத்துடன் மதியஇரையாக சில பல புழுக்களை உண்ணக் கொடுத்து பேசிக் கொண்டிருந்ததாம்....முடிவில் ...


"நாம் குடும்பத்தோடு கோயில் குலமென்று போய் வந்து பல நாட்கள்ஆகின்றன ,நாமெல்லோரும் சேர்ந்து ஒரு முறை சமுத்திரம் தாண்டியுள்ளசேத்திரங்கள் எதற்காவது போய் வந்தால் சந்தோசமாக இருக்கும் ...போகலாமாமாமா "என்று வெகு சாமர்த்த்யமாகக் கேட்டதாம் .


மனைவியின் சிரித்த முகமும் திருப்தியான இரையுண்ட சந்தோசத்தில் ஆண்காக்காவும் பெரிதாக யோசித்துக் கொண்டிருக்காமல் ;



"அதற்கென்ன போய் விட்டு வந்தால் ஆச்சு...இந்த வாரம் வெள்ளிக் கிழமையேபோகலாம் என்று வாக்கு கொடுத்து விட்டதாம் மனைவியான பெண் காக்காவுக்கு ;


வாக்குக் கொடுத்த கையோடு வைப்பாட்டி வீட்டுக்குப் பறந்த ஆண்காக்கா அங்கிருந்தவளிடமும் "வெள்ளிக் கிழமை "கோயிலுக்குப் போகிறோம்நீயும் கிளம்பத் தயாராக இரு " என்று சொல்லி வைத்ததாம்.



இதை முன்னமே எதிர் பார்த்திருந்த மனைவியான பெண் காக்கா எதேச்சையாகவருவது போல தெற்குத் தெருவில் அந்த வைப்பாட்டிக் காக்காவின் கூட்டின்வழி போனதாம் .அப்படிப் போகையில் வாசலில் இருந்த வைப்பாட்டிக் காகத்தைப்பார்த்து ரொம்பவும் சகோதர வாஞ்சை தவழ ;



"தங்கச்சி நீயும் கோயிலுக்கு வரியாமே ? " என்று போகிற போக்கில்கேட்பதைப் போல கேட்டு வைத்தது.



இந்தப் பக்கம் வைப்பாட்டிக் காக்கா சும்மாஇருந்திருக்கலாம் ...அது அதன் பாட்டில் பெருமைக்கு மாவு இடிப்பதைப் போல ;


"ஆமாக்கா ...நானும் வரேனில்ல ...மாமா தான் என்னையும் வரச் சொல்லி நேத்தேவந்து சொல்லிட்டுப் போயிருக்காங்கல்ல " நானும்தேன் வாரேன் உங்களோடமாமாவோட பிள்ளைகளோட என்றதாம் .



பொசு பொசுவென்று கருகல் நாற்றத்தில் வயிறு புகைந்தாலும் மேலுக்குசிரித்துக் கொண்டு மணவவியான பெண் காக்கா அவளிடம்;



"நீ வாரது சரி...ஆனா கோயிலுக்குப் போகைல இப்படியே வந்திராத ... உன் றெக்கை எல்லாம் உறிச்சுக் கழிச்சுட்டு மஞ்சத் தேச்சு நல்லாக் குளிச்சு,மொழுகி, நெத்தி நிறைய செந்தூரம் வச்சுகிட்டு தான் கோயில் கொலத்துக்குவரணும் " அப்டி வாரதா இருந்தா தான் தாலி பாக்கியம் நிலைக்கும் என்றதாம்.



அடடா...தன் மேல் தான் முதல் மனைவியான மனைவியான இந்த காக்கா அக்காளுக்கு எத்தனை அக்கறை ,எத்தனை விலாவரியாக கோயிலுக்குப் புறப்பட வேண்டியமுறைகளை எடுத்துச் சொல்கிறாள் என்று சந்தோசத்தில் மூழ்கிப் போனவைப்பாட்டிக் காக்கா ;



வெள்ளிக்கிழமை வந்ததும் ;



புருஷன் வருவதற்குள் தன் அலகால் இறக்கைகள் எல்லாவற்றையும் பிய்த்துபோட்டு விட்டு பரக்க மஞ்சள் தேய்த்து குளித்து செந்தூரம் வைத்துக்கொண்டு ஆண் காக்கா வருகைக்காக வழி மேல் விழி வைத்து அதிகாலைக்குளிரில் வெட வெடக்க கூட்டின் வாசலில் காத்துக் கொண்டிருந்ததாம்.



தன் பெண்டாட்டி பிள்ளைகளை



"நீங்க நடந்துகிட்டு இருங்க நான் போய் முக்கியமான ஒருத்தரை கோயிலுக்குகூட்டிகிட்டு வாரேன்."



என்று சொல்லி விட்டு வைப்பாட்டிக் காக்கா இருக்கும் தெற்குத்தெரு கூட்டைநோக்கி பறந்ததாம் .



"அப்பா எங்கே போகிறார் ? "
என்று கேட்ட தன் குஞ்சுகளை சமாதானப் படுத்திவிட்டு


"அவ வீட்டுக்கா போற...போ..போ...இன்னும் எத்தனை நாளைக்கு உன்ஜம்பம் ?! என்று கறுவிக் கொண்ட மனைவியான பெண் காக்கா ;தனக்குள் விஷமத்தனமாக சிரித்துக் கொண்டு தன் குஞ்சுப் பறவைகளோடு நிதானமாக வானில்பறந்து கொண்டிருந்ததாம் .



தெற்குத் தெருவில் வைப்பாட்டிக் காக்காவைக் கண்ட கணவனான ஆண் காக்காஅதிர்ச்சியில் மூர்ச்சை ஆகாத குறை !



"என்னடி இது ? இப்படி ஒரு அவதாரம் போல றெக்கை எல்லாம் உறிச்சிப்போட்டுட்டு நிக்கிற...என்ன கேடு காலம் " என்று சத்தமிட்டதாம்.



"எல்லாம் என் தாலி பாக்கியத்துக்காகத் தான் ,நீங்க பேசிக்கிட்டு நிக்கவேண்டாம் ,உங்க பெண்டாட்டி பிள்ளைக முன்னாடி போயிரப் போறாக ,வாங்கநாமளும் போயி அவுகளைப் பிடிச்சிடலாம்" என்று பறக்கத் துணிந்ததாம் .



றெக்கை முழுக்க தான் உறித்தாயிற்றே ...எங்கிருந்து பறக்க?!


தத்தித் தத்தி கீழே விழுந்து கொண்டிருந்த வைப்பாட்டிக் காக்கா படும்துன்பம் கண்டு அந்த ஆண் காக்கா "நமக்காகத் தானே இவள் இறக்கை எல்லாம்உரித்துப் போட்டுவிட்டு இப்படி கோயிலுக்குக் கிளம்பி வருகிறாள் என்று ஆதூரம் மிக தன்அலகால் வைப்பாட்டிக் காகத்தை கவ்விக் கொண்டு வானில் பறந்ததாம் .



வேகமாகப் பறந்ததில் சமுத்திரத்தின் மேலாகப் பறந்து கொண்டிருந்த தனதுகுடும்பத்தினரை எட்டி விட்டது ஆண் காக்கா அதன் அலகில் இருந்தவைப்பாட்டிக் காக்காவும் தான்.



இவர்கள் வந்த கோலம் கண்டு பொங்கி புழுங்கிய மனைவியான பெண் காக்கா சும்மாஇருக்க வகையின்றி ;



"நானும் எம் பிள்ளைகளும் நடையில ...வைப்பாட்டிக் காக்கா வாயில "
என்றுஅங்கிருந்து புலம்பிக் கொண்டே பறக்க ஆரம்பித்ததாம் நீண்ட சமுத்திரத்துவான வீதி நெடுகிலும் ;



கணவனுக்கோ மனைவியை அடக்கி ஒன்றும் சொல்ல வகையில்லை ,வாயைத் திறக்கத்தான் வழியில்லையே!



இப்போது நிறுத்துவாள் அப்போது நிறுத்துவாள் என்று பொறுத்துக் கொண்டு பறந்துகொண்டிருந்தது.



ஆனால் பெண் காக்கா நிறுத்தக் காணோம் ;



தனது அம்மாக் காகம் புலம்புவதைக் கண்ட குஞ்சுக் காகங்களும் தங்கள் போக்கில் ;



"நாங்களும் எங்கம்மாளும் நடையில...வைப்பாட்டிக் காக்கா வாயில "
என்று நெடுக புலம்ப ஆரம்பிக்க ;



இப்போது வைப்பாட்டிக் காக்காவுக்கு வந்ததே கோபம் ;



பொறுத்துப் பொறுத்து பொறுக்க முடியாமல் ; ஒரு நொடியில் ;



"ஆமா...ஓமா ...அப்படித் தான்னு சொல்லுங்களேன் மாமா "என்றதாம் "



முதலில் அதன் முட்டாள் தனத்திற்கு காது கொடுக்காமல் இருந்த ஆண் காக்காஅதன் கரைச்சல் தொல்லை தாங்காமல் ஒரு நொடியில் ;



"ஆமா ஓமா அப்படித் தான் என்று கரைந்தே விட்டது "



அவ்வளவு தான் நடுச் சமுத்திரத்தில் பறந்து கொண்டிருக்கையில் இப்படிச்சொன்னதால் வைப்பாட்டிக் காக்கா அப்படியே 'தொப்' பென சமுத்திரத் தண்ணீரில்விழுந்து முங்கி போனது .


ஒரு நிமிஷத்தில் தன் வாழ்வில் விடிந்து விட்டதே என்று சந்தோசத்தில்திக்கு முக்காடிய மனைவியான பெண் காக்காவோ ;



"நடுச் சமுத்திரத்தில் டுமுக்குனுச்சாம் ...நானும் எம் பிள்ளைகளும்சுகம் பெத்தோம் "



"நடுச் சமுத்திரத்தில் டுமுக்குனுச்சாம் ...நானும் எம் பிள்ளைகளும் சுகம்பெத்தோம் "



"நடுச் சமுத்திரத்தில் டுமுக்குனுச்சாம் ...நானும் எம் பிள்ளைகளும் சுகம்பெத்தோம் "



என்று பாடிக் கொண்டே வைப்பாட்டிக் காக்கை ஒழிந்த சந்தோசத்தில்சேத்திராடனம் முடித்து கூடு வந்து சேர்ந்ததாம் தன் புருஷன் பிள்ளைகளோடு.



இது ஒரு கிராமியக் கதை.



என் பாட்டி என் சிறு வயதில் எங்களைத் தூங்க வைக்க இந்தக் கதையைஎங்களுக்கு பல நாட்கள் சொல்லி இருக்கிறார்.

முன்பு கீற்று தளத்தில் கி.ரா வின் பக்கங்களில் இதே வாசிக்கக்கிடைத்தது ,இப்போது அங்கே இதைக் காணோம். எனக்குத் தெரிந்த வகையில் அந்தக்கதையை இங்கே பகிர்ந்திருக்கிறேன்.