Tuesday, November 2, 2010

சம்பவாமி யுகே யுகேவும் மனம் நடுங்க வைத்த சம்பவங்களும் ...



மனம் நடுங்க வைத்த சம்பவம் 1  :


அடுக்கு மாடிக் குடியிருப்பு ஒன்றில் பள்ளி முடிந்து வந்ததும் மாலையில் தினமும் பூ விற்றுக் கொண்டிருந்த  சிறுவன் காளீஸ்வரன் லிப்ட் கதவில் சிக்கி காலில் தொடங்கி உடல் இரண்டாகப் பிளக்கும் வண்ணம் துடிக்க துடிக்க ரணப்பட்டு இறந்துள்ளான் ,இது விபத்தா ? இது விபத்தில் சேர்த்தியா? அலட்சியம் தானே முதல்  காரணம் , லிப்ட் ஆப்பரேட்டர்கள் என்ன ஆனார்கள்? மெயிண்டனன்ஸ் என்ற பெயரில் வீடு ஒன்றிற்கு ரூ 1000  இல் இருந்து 2000  வரை வசூலிக்கும் அபார்ட்மென்ட் அசோசியேசன் தான் இதற்கு பதில் சொல்ல வேண்டும்.
 
 
சென்னை முழுக்கவும் இப்போதும் பேப்பர் போடுவது, அடுக்குமாடிக் குடிஇருப்புகளில்  பூ விற்பது ,பால் பாக்கெட் போடுவது ,இஸ்திரிக்கு துணிகள் வாங்கிப் போவது, போன்ற வேளைகளில் பெரும்பான்மையும் சிறுவர்களும் சிறுமிகளும் தான் ஈடுபடுத்தப் படுகின்றனர். பீச்சில் ,பார்க்கில் சுண்டல் விற்கும் சிறுவர்களே இல்லை எனும் நிலையை  முற்றிலுமாக ஏற்படுத்த  முடியவில்லையே அரசின் குழந்தைத் தொழிலாளர் தடுப்பு மற்றும் சிறுவர் நல மேம்பாட்டுத் துறையினரால்.


 மனம்நடுங்க வைத்த  சம்பவம் 2  :

 
கோவை ஜெயின் சமூகத்து குழந்தைகள் இருவர் வழக்கமாகப் பள்ளிக்குப் போய் வந்து கொண்டிருந்த கால் டாக்சி டிரைவரால் கடத்தப்பட்டு கொலை செய்யப் பட்டிருக்கிறார்கள். பிசாசு பிடித்த மிருகங்கள் அந்தப் பெண் குழந்தையை  பலாத்காரம் செய்திருக்கின்றனர் .விசாரணையில் குற்றத்தை ஒப்புக் கொண்டுள்ள  குற்றவாளிகளுக்கு மேல் விசாரணை தேவையா கல்லால் அடித்தே கொன்றால் என்ன?
 
"பரித்ராணாய ஸாதூனாம்  விநாசாய ஷதுஸ்க்ருதாம் 
தர்ம  சம்ஸ்தாபனார்தாய சம்பவாமி யுகே யுகே "-
 
எங்கே போனார்கள் நம் கடவுளர்கள்?!
 
அந்தச் செய்தியை வாசித்ததில் இருந்து மனம் ஒரு நிலையில் இல்லை.  இயலாமை மிகுந்த கோபத்தில்  உலகில் எங்கெலாம் விவரம் அறியா சிறுவர்கள், சிறுமிகள் பலவந்தப் படுத்தப் படுகிறார்களோ ,அட்லீஸ்ட் அப்போதேனும் அங்கேனும் கிருஷ்ணா பரமாத்மா ஏன் வந்து காப்பாற்றாமல் போனார்?! என்று லூசுத்தனமான சிந்தனை எல்லாம் வந்து போனது.
 
அவசியமோ இல்லையோ தினமும் வேனிலும் பள்ளிப்பேருந்திலும் பள்ளிக்குப் போய்வரும் குழந்தைகளிடம் இரவில்  தூங்கப்  போகும் முன் பள்ளியிலும் வேனிலும் நிகழ்ந்த  அன்றைய சம்பவங்களை பேச்சு வாக்கில் விசாரித்து வைப்பதே ஆரோக்கியமானது,சில நேரங்களில் பெற்றோர் குழந்தைகள் தாமாக சொல்ல வருவதைக் கூட கேட்டுக் கொள்ள விரும்பாமல் அவர்களை சாப்பிட வைப்பதிலும் தூங்க வைப்பதிலும் வீட்டுபாடம் முடிக்க வைப்பதிலும் தான் முனைப்பாக இருக்கிறோம்.சிறுவர்களுக்கெதிரான பல அநீதிகளின் ஆணி வேர்  இது தான். இங்கிருந்தே ஆரம்பமாகிறது நம் குழந்தைகளுக்கு எதிரான செயற்பாடுகள். குழந்தைகள் தமது சந்தேகங்களையும் கவலைகளையும் பகிர்ந்து கொள்வதற்கு பெற்றவர்களைக் காட்டிலும் நம்பிக்கைக்குரிய நபர்கள் வேறு யாராகவும் இருக்க முடியாது.
 
இந்த அவசர யுகத்தில் எது வேண்டுமானாலும் எப்போது வேண்டுமானாலும் எப்படி வேண்டுமானாலும் நிகழலாம்,எல்லாம் ஒரு வினாடி செய்தியாக ப்ளாஷ் நியூசில் மின்னி மறைந்து விடும். பாதிக்கப் பட்டவர்கள் காலத்திற்கும் அழுது கரைய வேண்டியது தான்.அதனால் எங்கும் எப்போதும்  குழந்தைகளைப் பொறுத்தவரை  அதிக பட்சம் ஜாக்கிரதையாக இருப்பது ஒன்றே நம்மால் ஆகக் கூடிய காரியம். வேறு என்ன சொல்வதாக இருந்தாலும் அதில் அர்த்தமிருக்கப் போவதில்லை.
 
:((


No comments: