Wednesday, November 3, 2010

ஈசி சைட் டிஷ் ரெஸிபி ...(தீபாவளியை முன்னிட்டு!?)




பல நாட்கள் சப்பாத்திக்கு தொட்டுக் கொள்ள என்ன செய்யலாம் என்ற குழப்பம் தலைமுடியைப் பிய்த்துக் கொள்ள வைத்திருக்கிறதா யாருக்கேனும்? !


கவலை வேண்டாம் இதோ உங்களுக்கு சில நல்ல தீர்வுகள் ;))

வெறும் சப்பாத்தியை எண்ணெய் இல்லாமலோ எண்ணெய் விட்டோ தோசைக் கல்லில் போட்டு எடுத்துக் கொள்ளவும். அதற்கான சைடு டிஷ்கள் பின்வருமாறு;

(சப்பாத்திக்கு திட்டமாக அல்லது வயணமாக மாவு பிசைவது எப்படி என்ற கஷ்ட்டமான கேள்வியெல்லாம் கேட்பவர்கள் மேலே படிக்க வேண்டாம் என கேட்டுக் கொள்ளப் படுகிறார்கள் ,அதெல்லாம் நேரத்திற்கு ,மனநிலைக்குத் தக்க மாறுபடும் கலை,ஸ்பெசல் கோச்சிங் கிளாஸ் தான் போக வேண்டும் )

தேவையான பொருட்கள்:

ஏதாவது ஒரு காய் - எந்தெந்த காய்கறிகள் என்பதை கீழே பட்டியல் பார்த்து தெரிந்து கொள்ளுங்கள்
பெரிய வெங்காயம் - ஒன்று அல்லது இரண்டு
பச்சை மிளகாய் - இரண்டு அல்லது நான்கு
எண்ணெய் - ஒரு டேபிள் ஸ்பூன்
உப்பு - தேவையான அளவு
பூண்டு - உரித்தது மூன்று அல்லது நான்கு பல் (பூண்டு பிடிக்காதவர்கள் தவிர்த்து விடலாம்)

முட்டை ரெஸிபி :

செய்முறை ரொம்ப சிம்பிள் ,ஒன்றோ இரண்டோ ஆட்களின் எண்ணிக்கைக்குத் தக்கவாறு முட்டைகளை உடைத்து அதில் கொஞ்சம் மிளகு அல்லது மிளகாய்த் தூள் அல்லது பச்சை மிளகாய் பிளஸ் சால்ட் கலந்து நன்றாக அடித்துக் கலந்து வைத்துக் கொள்ளவும்,வாணலியில் ஒரு டி ஸ்பூன் எண்ணெய் விட்டு காய்ந்ததும் இந்த கலவையை ஊற்றி வாணலியில் ஒட்டாத பக்குவத்தில் கிளறி ஸ்டவ்வை அனைத்து விடவும்.

இந்த முட்டை வறுவலை ஏற்கனவே சுட்டு வைத்த சப்பாத்திக்கு நடுவில் கொட்டி சுருட்டி சாப்பிடலாம். ஒரு ரெசிபி முடிந்தது .(எவ்ளோ சிம்பிள் ரெஸிபி !)

முட்டை போலவே தான் காய்கறிகளுக்கும் ஒரே செய்முற தான்.

வெஜிடபிள் ரெஸிபிக்கள் :

இதே போலத் தான் வெண்டைக்காய்,கத்தரிக்காய்,முருங்கைகாய் தவிர மற்ற காய்கறிகள் கேரட்,பீட்ரூட்,முட்டைகோஸ்,சுரைக்காய்,பூசணிக்காய்,ஹைபிரிட் புடலை,குடை மிளகாய் ,சவ் சவ்,அவரைக்காய்,பீன்ஸ்,பீர்க்கை,முள்ளங்கி,வாழைத்தண்டு ,வாழைக்காய் சிலர் விரும்ப மாட்டார்கள் ,இல்லா விட்டால் அதையும் கூட சேர்த்துக் கொள்ளலாம்.

இப்படி எல்லாக் காய்களையும் முறையே தனித்தனியே வெங்காயம்,பச்சை மிளகாய் மட்டும் நறுக்கிக் கலந்து பச்சை வாசம் போகும் மட்டும் வதக்கி ஈசியாக சப்பாத்தி மட்டும் செய்து வைத்துக் கொண்டு அதன் நடுவில் இந்தக் காய்கறிகளைக் கொட்டி சுருட்டி டைனிங் டேபிளில் வைத்து விட்டு வெகு எளிதாக சமையலை முடித்து விடலாம்.

காலை நேர பரபரப்பில் இது ரொம்ப எளிதான ரெஸிபி தான் இல்லையா?

சப்பாத்தி செய்யத் தெரியாது ...ஆனால் ஹெல்த் கான்சியஸ் மக்கள் எனில் ப்ரெட் வாங்கி வைத்துக் கொள்ளுங்கள் ,எப்போதும் ஜாம் அல்லது ,சீஸ் ,பட்டர் போரடிக்கும், சும்மா இப்படி பொரியல் செய்வதைப் போல காய்கறிகளை வதக்கி , ப்ரெட் சூடு செய்து நடுவில் வைத்து சாப்பிடுங்கள் . சுவையாக இருக்கும்.

ஒரு நாளைக்கு ஒரு காய் என்ற கணக்கில் சேர்த்துக் கொள்ளலாம், எல்லாக் காய்கறிகளையும் கலந்து விடாதீர்கள்.அப்புறம் திரும்பவும் காய்கறிகள் வாங்க கடைக்கு அலையை வேண்டும். கூடவே நாட்டுக் காய்களோடு இங்கிலீஷ் காய்கள் கலந்து செய்தால் கண்றாவியாக இருக்கும் டேஸ்ட் :((

உதாரணம் :

பீட்ரூட்டையும் வாழைகாயையும் கலந்து விடாதீர்கள் . எல்லாக் காய்களுக்கும் தனித்தனியே மட்டுமே சுவை,சிறப்பு உண்டென்பதை இந்த ரெசிபி மூலம் நிரூபிக்கலாம் .

கேரட் பீட்ரூட் கூட கலந்து விட்டால் கலர் குழைந்து பயங்கர எபெக்டில் இருக்கும் பார்வைக்கு :(

கேரட்டையும் முள்ளங்கியையும் கலக்கலாம் (சிலருக்குப் பிடிப்பதில்லை)

முட்டைகோசையும்,கேரட்டையும் கூட கலக்கலாம்

பீன்ஸில் முட்டை கலக்கலாம் .

புடலங்காயில் முட்டை கலந்து வதக்கலாம் .

அவரைகாய் மற்றும் சுரைக்காயில் முட்டை கலந்தால் வாயில் வைக்க விளங்காது. :(

பூசணிக்காய் செய்யும் போது ஒரு ஸ்பூன் சர்க்கரை அல்லது ஒரு கியூப் வெல்லம் கூடவே மிளகாய்க்கு பதில் மிளகாய்த் தூள் சேர்த்துச் செய்யலாம் .

முழு கட்டுரையும் படித்து விட்டு(யாராவது ஒருத்தராச்சும் படிக்காமலா போய்ட போறாங்க ) யோசனை இல்லாமல் எல்லாக் காய்கறிகளையும் போட்டு வாயில் வைக்க சகிக்காமல் சைட் டிஷ் செய்து விட்டு ரெஸிபி எழுதியவர்களை கோபித்துக் கொள்ளுதல் மிக மிக அநியாயமான செயல் என்பதை மட்டும் கடைசியாகச் சொல்லிக் கொள்கிறேன் .

டிஸ்க்கி :

கொஞ்சம் காமெடியாக எழுதி இருந்தாலும் இது ஒரு சீரியஸ் பதிவே என்பதில் யாருக்கும் சந்தேகமிருக்க கூடாது .


No comments: