Saturday, May 15, 2010

ஆற்றில் இறங்கிய அழகரும் குதிரையும் ...கூடவே நானும் என் செல்ல மகளும்விடுமுறையில் சொந்த ஊருக்குப் போவதென்பது என்னைப் பொறுத்தவரை வருடம் ஒருமுறை நான் கொண்டாடும் மிகச்சிறந்த விசயங்களில் ஒன்று.வருடம் முழுமைக்கும் தேவையான புத்துணர்வை அந்த ஓரிரு நாட்கள் மீட்டுக் கொடுத்து விடக்கூடும்.அதுவும் நாம் செல்லும் நாட்கள் திருவிழாக் காலங்களாக இருந்து விட்டால் விட்டுப் போன நட்புகளை சொந்தங்களை மெனக்கெட்டு தேடி அலையும் சிரமம் இன்றி ஒரே இடத்தில் பார்த்து விடும் வாய்ப்பும் கூட.அப்படித் தான் சென்ற மாதம் நான் பிறந்த ஊரில் அழகர் ஆற்றில் இறங்கும் திருவிழா என்று போயிருந்தோம் .
சித்திரையில் மதுரையில் அழகர் எப்போது ஆற்றில் இறங்குகிராரோ அதே நாள் அதே நேரம் தான் எங்கள் ஊர் வைகையிலும் அழகர் பச்சைப் பட்டுக் கட்டி குதிரையோடு ஆற்றில் இறங்கி எங்களைக் காண வந்தார்.எப்போதும் அழகர் ஆற்றில் இறங்கியதும் எங்களுக்கென்று காட்சி தருவது ஆற்றங்கரை பிரம்மாண்டமான அரச மரத்தடியில் தான். அரசின் நிழல் குறுக்கு வாட்டில் பாதி ஆற்றுக்கு கிளை விரித்திருக்கும்.சென்ற வருடம் கூட அந்த நிழலைக் கண்டேன்.இந்த வருடம் அரச மரத்தை காணோம் ,அதன் தூர் மட்டும் அனாதையாய் சில பசும் துளிர்களோடு ...அரசின் நிழலின்றி அழகரை பார்க்க பகீரென்று இருந்தது.

சிவப்பு நாக்கைத் துருத்திக் கொண்டு உருட்டி விழித்த கண்களோடு பச்சைக் குதிரையில் வெள்ளை சம்பங்கியும் பசுந்துளசியும் கலந்து கட்டிய அலங்கார மாலையில் சிங்காரமாய் பொன்னும் மணியுமாய் கல்நகைகளோடு அழகர் பவனி வருவதை காணும் போது பெற்று வளர்த்து ஐந்தாறு வயது நிரம்பிய சின்னஞ்சிறு மகனை அலங்கரித்து தெரு வழியே பெருமிதமாய் அழைத்துச் செல்கையில் கிடைக்கும் உற்சாகமும் சந்தோசமுமாய் மனம் நிறைந்து போனது.

தேனிப்பக்கம் கோடையில் கூட முன்னெல்லாம் வெயில் அத்தனை வாட்டி வதைக்கவில்லை என்றே நம்பியிருந்தேன் ,அந்த எண்ணத்தை மறக்கடிக்கும் வண்ணம் இந்த ஆண்டு வெயிலோ வெயில் கொள்ளையாய் வாட்டி எடுத்து புண்ணியம் கட்டிக் கொண்டது.ஊரைச் சுற்றிலும் நிறைய காற்றாலைகள் புதிது புதிதாய் ...முன்னைப் போல தண்ணீர் வசதி காணோம் ,தேனியில் தண்ணீர் பஞ்சம் என்பது நான் எதிர் பாராதது.ஆனால் நிஜம் அது தான்,தேனி நகருக்குள் லாரிகளில் தண்ணீர் விலைக்கு வாங்கி வாரம் ஒருமுறை டேங்கை நிரப்பிக் கொள்ளும் நிலை வந்து விட்டது. நிலத்தடி நீர் வற்றிப் போகும் அளவுக்கு தேனி இன்னும் அத்தனை வளர்ந்து விடவில்லை தான்.இன்னும் மாசு கலக்காத ஊர் என்றே அதை எண்ணிக் கொண்டிருக்கிறேன் நான்.ஆனால் அப்படியெல்லாம் இல்லை என்கின்றன சமீபத்திய அதன் மாற்றங்கள்.புதிதாய் வந்த காற்றாலைகளுக்கும் தேனியின் தண்ணீர் பஞ்சத்திற்கும் ஏதாவது சம்பந்தம் இருக்கக் கூடுமோ ?யாரோ சொன்னார்கள் தூத்துக்குடி திருசெந்தூர் பகுதிகளில் தண்ணீர் பஞ்சம் வர அங்கு ஏராளமாய் பெருகிப் போன காற்றாலைகளும் காரணம் என்று. காளியா பிள்ளையின் இயற்கை காற்றாலைகள் அமைத்தால் இப்படி பஞ்சம் வராமல் தடுக்கக் கூடுமோ என்றெல்லாம் சும்மா யோசித்துக் கொண்டிருந்தேன் கொஞ்ச நேரம்.நமது வருத்தங்கள் எல்லாம் ஏட்டளவில் தானே ,அதை விட என்ன செய்து விட முடியும் என்று தெரியாத காரணத்தால் இங்கே பதிவதோடு விடுபடுகின்றன அந்தக் கவலைகள்.

வெயில் காலமென்றால் அப்பாவைப் பெற்ற பாட்டி உயிரோடு இருக்கும் வரை வீட்டுக்கு வெளியே தெரு வாசலில் மண் தரையில் பாய் விரித்து படுக்கையைப் போடுவது கிராமங்களில் சர்வ சகஜம் ,பல நாட்கள் நிலாவையும் நட்சத்திரங்களையும் எண்ணிக் கொண்டு கண்ணை அசத்தும் காற்றில் தெருப்பிள்ளைகளோடு விளையாடிக் களைத்த மேனி வியர்வை மெல்ல காய பாட்டி சொன்ன சுண்டெலி இளவரசி கதை கேட்டுக் கொண்டே கண்ணயர்ந்தது உண்டு.அந்த மண் தரை இப்போது எங்கேயும் இல்லை கிராமங்களில் .தெருவுக்குத் தெரு சிமென்ட் தரை ,தெரு முக்கு முடுக்குகளைக் கூட விட்டு வைக்கவில்லை.வீடுகள் இருக்கும் இடமெல்லாம் மண்ணின் மூச்சை இறுக்கி சிமென்ட் பூசி இருந்தார்கள்.மூச்சடக்கிய மண்ணின் சமாதி போல வெள்ளை சிமென்ட் தெருக்கள் இருந்தன.சுத்தம் பராமரிக்க எளிமை என்ற பெயரில் இன்னும் என்னவெல்லாம் செய்யக் கூடுமோ!

எது எப்படி இருந்தாலும் திருவிழாவுக்காக சிறுவர்களுக்கென்று நடத்தும் விளையாட்டுப் போட்டிகள் எல்லாம் அப்படி அப்படியே தான் இருந்தன இன்று வரையிலும் அதில் ஒரு சின்ன சந்தோசம்.பாப்பு கண்கள் மின்ன அம்மா நான் கலந்துக்கறேன்மா எல்லா போட்டியிலயும் என்று என்னைக் கேட்கையில் உடனே சரி சொல்லி விட்டேன்.எல்லாப் போட்டிகளிலும் கலந்து கொண்டாள்...கலந்து கொண்ட அதே வேகத்தில் எல்லா போட்டிகளிலும் இருந்தும் முதல் ரவுண்டிலேயே வெளியில் வந்தாள் முகம் கொள்ளா சிரிப்போடு.அம்மா நான் தோத்துப் போயிட்டேன் என்று சிரித்தவளை நானும் சிரிப்போடு இழுத்து அணைத்துக் கொண்டேன். போட்டியில ஜெயிக்கறதும் தோக்கறதும் முக்கியமே இல்லை,சந்தோசமா கலந்துகிட்டியா ...என்ஜாய் பண்ணியா அவ்ளோ தான் அம்மா தன் பேத்தியிடம் சொல்லிக் கொண்டிருந்தார்.இன்னொரு முறை சிரித்தேன் நான்.ஜெயிக்கறதா தோக்கனுமானு அவ தான் முடிவு பண்ணனும்டா ...நாம இல்லை அம்மா போகிற போக்கில் சொல்லிப் போக எந்த சிரமத்தையும் இலகுவாக எடுத்துக் கொண்டு அடுத்தது என்ன என ப்ராக்டிகலாக இருக்கும் என் தம்பி தங்கையின் ஞாபகம் வந்தது எனக்கு .நானும் அப்படித் தானோ! அம்மா எங்களை நன்றாகத் தான் வளர்த்திருக்கிறார்,நான் கூட பாப்புவை நன்றாகவே வளர்ப்பேன் எனக்குள் சொல்லிக் கொள்கிறேன். :)))

எப்போதையும் போல பட்டுக் குஞ்சலக் குடை வரிசை ,தமிழ் நாட்டு மேளத்துக்குப் பதில் இப்போதெல்லாம் கேரள செண்டை தான் முழங்குகிறதாம் ஊர் திருவிழாக்களில் ,செண்டை மேளம் கேட்க கேட்க காதுக்கு இதமாகத் தான் இருந்தது.கேரளாக் காரன் பெரியார் அணையை திறந்து விட்டு தண்ணீர் தரா விட்டால் போகிறான் செண்டை மேலமாவது காதாரக் கேட்டுக் களிக்கலாம் என்று முடிவு செய்து கொண்டவர்களைப் போல எடுத்ததற்கெல்லாம் செண்டை தான்.சென்ற வருடம் பாப்புவின் பள்ளியில் நடந்த சென்னை சங்கமம் நிகழ்ச்சிக்குப் போயிருந்தோம் அங்கேயும் சக்கைப் போடு போட்டது இந்த செண்டை வாத்தியம் தான்.என்னமாய் உயிரைக் கொடுத்து வாசிக்கிறார்கள் அந்த இளைஞர்கள் ! எப்படியெல்லாம் லாவகமாய் வளைந்து ஆடுகிறார்கள்! வாசிப்புக்கும் ஆட்டத்துக்கும் இடையில் என்னவெல்லாமோ வித்தைகள் வேறு ஓணம் படகுப் போட்டியை செண்டை மேளத்தோடு மேடையில் ஆட்டத்தோடு நடத்திக் காட்டுகிறார்கள்,மகாராஜா யானையில் பவனி வருவதையும் இதே ஸ்டைல் ஆட்டமாய் மேடையில் செய்து காட்டுகிறார்கள்.பார்த்துக் கொண்டிருப்பவர்களுக்கு செண்டை ஓசையில் சன்னதம் வந்து ஆடாத குறை தான்.

வாத்திய இசையில் மயங்கிக் கிறங்கிப் போன சிலர் ஆடவும் செய்தார்கள், பொது இடங்களில் மக்கள் இப்படி தங்கள் சந்தோசங்களை மீட்டெடுக்கும் வகையில் சங்கமம் நிகழ்ச்சியை நடத்திய கனிமொழி அவர்களின் முயற்சி நிச்சயம் வரவேற்கப்படவேண்டியதே.திருவனதபுரம் பத்மனாபருக்கு மட்டும் தான் செண்டை முழங்க வேண்டுமா எனக்கில்லையா என்பதைப் போல ...இப்போதெல்லாம் எங்கள் ஊர் வைகையில் இறங்கும் அழகரும் செண்டை மேளம் தான் கேட்கிறார் போலும்!இரண்டு நாள் திருவிழா முழுக்க செண்டை அதிர்ந்து நாடி நரம்புகளை முறுக்கி பிறகு தளர வைத்தது.

பிறகென்ன என்கிறீர்களா? நல்ல கோடையில் ஆற்றில் வந்திறங்கும் அழகரின் பிரசாதமாக நாட்டுச் சர்க்கரையும் துளசி தீர்த்தமும் தான் ஊர் பொதுவில் வழங்குவது வழக்கம்,இம்முறை யாரோ ஜமாய் ஐஸ் க்ரீம் இலவசமாக வழங்கினார்கள்,அந்த இடம் முழுக்க கூட்டம் குறையவே இல்லை.ஆளாளுக்கு நான்கு ஐந்து என்று வாங்கி வாங்கி வெயிலுக்கு வகையாய் முழுங்கிக் கொண்டிருந்தார்கள்(தோம்). "பாப்பு நீ கூட்டத்துல இடிச்சிட்டு போய் ஐஸ் கிரீம் வாங்காத..யாராவது தள்ளி விட்ரப் போறாங்க ..." நான் அவசரமாய் சொல்லச் சொல்ல கேட்காமல் கூட்டத்துக்குள் புகுந்து பயத்தோடு நான் பார்த்துக் கொண்டிருக்க எனக்கொன்றும் அவளுக்கொன்றுமாக இரண்டு ஐஸ் க்ரீம் வாங்கி கொண்டு வந்தாள் பாப்பு. "ஏண்டா மம்மி உனக்கு ஐஸ் கிரீம் வாங்கித் தந்ததே இல்லையா ? ஏன் இப்டி கூட்டத்துல போய் அவதிப் படனும்."

" இல்லம்மா ...இப்டி கூட்டத்துல போய் வாங்கறது புதுசா த்ரில்லா இருக்கு "

சிரிப்புடன் கைகளில் ஐஸ்க்ரீம் வழியச் சொல்லி விட்டு அவள் வயதுப் பிள்ளைகளோடு ஆற்றுக்குள் இறங்கி விளையாட கிளம்பி விட்டாள் என் செல்லப் பாப்பு . அவளுக்கு கிடைத்த அதே குதுகலத்துடன் திருவிழா இனிதே நிறைவடைந்தது.

காத்திருக்கிறோம் ...எதிர்பார்த்திருக்கிறோம் அடுத்த வருடமும் ஆற்றில் இறங்கப் போகும் அழகரையும் அவரது குதிரையையும் எண்ணிக் கொண்டு.

10 comments:

அகநாழிகை said...

//அழகர் பச்சைப் பட்டுக் கட்டி குதிரையோடு ஆற்றில் இறங்கி எங்களைக் காண வந்தார்//

இது கொஞ்சம் ஓவரா தெரியல.

0

நல்லா எழுதியிருக்கீங்க.

சந்தனமுல்லை said...

சுவாரசியம்!

தமிழ் பிரியன் said...

சூப்பர் கார்த்திகா.. ஊரைக் கண் முன் கொண்டு வந்து விட்டீர்கள்.. என் மகனும் இது மாதிரி தான் போட்டியில் தோத்துட்டான்.. ஆனா பரிசா ஒரு சில்வர் வாளி கிடைச்சது.. ஹிஹிஹி

ஜெய்லானி said...

சின்ன விசயத்தக்கூட அழகா சொல்லிருக்கீங்க :-))

பா.ராஜாராம் said...

நேட்டிவிட்டியோட, சுவராசியமான பதிவு.

அந்த கூட்டத்தோட கூட்டமாய் கலந்தது போல் இருந்தது.

இடையில் கிடக்கிற 4000 மைலை நிரப்பியது ஒரு பெருமூச்சு. நன்றி கார்த்திகா!

நேசமித்ரன் said...

//அம்மா நான் தோத்துப் போயிட்டேன் என்று சிரித்தவளை நானும் சிரிப்போடு இழுத்து அணைத்துக் கொண்டேன். போட்டியில ஜெயிக்கறதும் தோக்கறதும் முக்கியமே இல்லை,சந்தோசமா கலந்துகிட்டியா ...என்ஜாய் பண்ணியா அவ்ளோ தான் //

:)

மண்வாசனை .. !

நல்லா எழுதி இருக்கீங்க

அபி அப்பா said...

சூப்பர் கார்த்தி!

கோமதி அரசு said...

அருமையான பதிவு.

எங்களையும் உங்களுடன் கலந்து கொள்ள் வைத்து விட்டீர்கள்.

முத்துலெட்சுமி/muthuletchumi said...

அழகான பதிவு..கார்த்திகா..

KarthigaVasudevan said...

நன்றி அகநாழிகை (ஓவர்லாம் இல்லைங்க அழகரே நம்மளைப் பார்க்க மலையிறங்கி வரார்ன்னு ஒரு பெருமிதம் தான் )

நன்றி சந்தனமுல்லை

நன்றி தமிழ்ப்ரியன் (சொர்கமே என்றாலும் அது நம்மூரைப் போல வருமா ? :)

நன்றி ஜெய்லானி

நன்றி பா.ரா (உங்கள் கவிதையில் மட்டுமல்ல பின்னூட்டத்திலும் அதே வாத்சல்யத்தில் தோய்த்தெடுத்த இயலாமை,திருவிழாக்காலங்களை இழந்த வலி தெரிகிறது.)

நன்றி நேசன்

நன்றி அபிஅப்பா

நன்றி கோமதிஅரசு

நன்றி முத்துலெட்சுமி