Friday, February 25, 2011

ஜெலூசில் மனிதர்கள்





கானக நடுவில் கனி பறிக்கா தருவொன்று
கிளிகளுக்கும் , காட்டுக் குருவிகளுக்குமாய் ...
பிரப்பங் கொடிகளும் பின்னிலாக் காலங்களும்
விரி மரம் தாவும் உரமுள்ள பட்சிகளுக்கும் குரங்குகளுக்குமாய்
என்றிருந்த நாட்கள் மாண்டன ;
யத்தனங்களின் பிரயத்தனத்தில் ஜனித்த
ஜெலூசில் மனிதர்களைப் பீடித்த
அஜீரணச் சீரகமிட்டாய் குழந்தைகள்
வனமழித்து திரும்புகையில் புறத்துக் கவிந்தன
குறுந்தொகை மேகங்கள் ;
தவழ்ந்து இறங்கின நைலான் மழைத் தூறல்கள்
வகைக்கொரு நிறம் பூண்டு
சிவந்த மூக்கு கிளிகளுக்கோ தவிட்டு நிறக் குருவிகளுக்கோ
என்றைக்கு புத்தியில் உரைக்குமோ ?
பின்னோடிகள் பின்னோடிப் போதல் விதியென்று
இந்த பூமி மனிதர்களுக்கானதாம்
மனிதர்கள் என்றால் மனிதர்கள் மட்டும் தானாம்
வனம் என்றால் அடர் வனம் !
இருட்டு அதன் நிறம் .

நோட் :


இந்தக் கவிதை ஆதியில் இருந்தே அபார்ட்மெண்டுகள் கட்டுவதெற்கென ஆக்கிரமிக்கப் பட்ட காடுகள் மற்றும் ஏரிகளுக்கு சமர்ப்பணம் .



5 comments:

பா.ராஜாராம் said...

அருமையாய் இருக்கு கார்த்திகா!

ஜெய்லானி said...

நான் இன்னும் தமிழ் கத்துக்க வேண்டியது இருக்கோ..!! அவ்வ்வ்வ் :-))

//சிவந்த மூக்கு கிளிகளுக்கோ தவிட்டு நிறக் குருவிகளுக்கோ
என்றைக்கு புத்தியில் உரைக்குமோ ?//

ம் ஏதோ கோவத்துல இருக்கீங்க போலிருக்கு :-)

புகழேந்தி said...

சகோதரிக்கு ,
தங்களால் தமிழிலேயே சிறப்பாக கவிதை சொல்ல முடியும் போது எதற்காக மணிப்பிரவாள நடை? தெள்ளத்தெளிந்த தங்களது தமிழ் நீரோடையில் ஆங்காங்கே சில குப்பைகள்!

KarthigaVasudevan said...

மிக்க நன்றி பா.ரா :)

நன்றி ஜெய்லானி (கவிதைல கோவமா ஒன்னுமில்லையே ,சாதாரணமாத்தான இருக்கு ! )
:)


@புகழேந்தி

கருத்துக்கு நன்றி சகோதரரே , முற்றாகத் தமிழ் சொற்களை மட்டுமே பயன்படுத்தி எழுதுவது மிக்க நயமானதே ,இந்தக் கவிதைக்கு இப்படி மணிப்பிரவாளமாய் எழுதினால் எளிமையாய் இருக்கும் புரிந்து கொள்ள எனத் தோன்றியதால் இப்படி அமைந்தது.


ஜெலூசில் இந்த மருந்தின் பெயரை எப்படித் தமிழ் படுத்துவது என்று தெரியாமல் போனதும் ஒரு காரணம் போலவே நைலான்
யத்தனம் ,பிரயத்தனம் ,அஜீரணம் ,சீரகமிட்டாய் இந்த வார்த்தைகள் எல்லாவற்றையும் கலப்பில்லாத தமிழில் இந்த கே கவிதைக்குப் பயன்படுத்தி இருந்தால் எப்படி இருக்குமென முயன்று பார்க்கிறேன். :)

வல்லிசிம்ஹன் said...

அன்பு கார்த்திகா, எனக்குப் புரிகிற மாதிரி கவிதை. ஏனெனில் நானும் இந்த பிரம்மாண்ட காட்டிடங்களைப் பார்த்து வருந்துவதுணு, வெறுமே வருந்தத்தான் முடிகிறது.
விளைநிலத்தில் குடிவைத்து வியட்நாம் அரிசியையும்,பஞ்சாப் கோதுமையையும் வாங்கும் நாள் வெகுதூரத்தில் இல்லை.