Wednesday, February 23, 2011

ஷாம்பூ (சுமங்கலி முதல் பேன்டீன் வரை)









இது ஒரு ஷாம்பூ விவகாரப் பதிவு .ஒவ்வொருவருக்கும் ஒவ்வொரு பிராண்ட் பிடிக்கும் என்றால் அத்தனை பாட்டில்களா வாங்கி ஸ்டாக் வைக்க முடியும் மாதந்திர பட்ஜெட்டில். ம்ஹூம் ...எனக்கு பயங்கர அலுப்பு இது விசயத்தில் . எனக்கு எப்போதும் சன்சில்க் ப்ளாக் வேண்டும் என நினைப்பேன் . சும்மா நினைப்பேன் அவ்வளவு தான் :))) . என் மகளுக்கு ஜான்சன் அண்ட் ஜான்சன் பேபி ஷாம்பூ (நீ ஏன் எப்போ பார் இதையே வாங்கற எனக்கு,பார் டி .வி ல வர குழந்தைங்க எல்லாம் கிளினிக் ப்ளஸ் தான் போட்டுக்கறாங்க அதான் முடி நீளமா இருக்கு ...நீ குட்டை குட்டையா முடி வெட்டறதுக்காக முடி வளரவே கூடாதுன்னு தான் இப்டி ஷாம்பூவா வாங்கற எனக்கு ...துரோகி அம்மா நீ ! துரோகியா ?! இந்த என்ற வார்த்தை என்னை அதிர்சியாக்கி ஒரு நிமிடம் ஸ்தம்பிக்க வைத்தது.





"ஏண்டா குட்டி இந்த வோர்ட்ஸ் எல்லாம் எங்க கேட்ட நீ? "





"நாங்க ஸ்கூல்ல கா விட்டுக்கும்போதேல்லாம் ரிஷிதா சொல்லுவா "





"ஒ ...ரிஷிதா இனிமே அப்படிச் சொன்ன சொல்லக் கூடாதுன்னு சொல்லுடா குட்டி"





"முடியாது ம்மா ...அவ உன்ன ஒரு தடவ ஸ்கூல்ல பார்த்தப்போ - உங்க மம்மி சூப்பரா இருக்காங்கன்னு சொன்னா " இப்படி சொன்னா உங்க மம்மி நல்லாவே இல்லைன்னுடுவா ...நான் அவ கிட்ட சொல்ல மாட்டேன்.





"நல்லா இல்லைன்னு சொன்னா சொல்லட்டும் ...நீ போய் சொல்லு "








"கம்பெல் பண்ணாத மம்மி ...போ எனக்கு கிளினிக் ப்ளஸ் வாங்கி வை இனிமே. "





இந்த சம்பாஷனை இப்படி முடிய.




தம்பிக்கு ஹெட் அண்ட் சோல்டர் தான் வேண்டுமாம் (பெட்ரோமாக்ஸ் விளக்கே தான் வேணுமாம் ...வேறு ஷாம்பூ இருந்தால் குளிக்கவே மாட்டாராம் ...ஆபீசுக்கு லேட்டானாலும் பரவாயில்லை சாப்பிடாமல் போனாலும் பரவாயில்லை அவசர அவசரமாய் கடைக்கு ஓடி ஹெட் அண்ட் சோல்டரை வாங்கி வந்து குளித்தால் தான் அவனுக்கு ஜென்ம சாபல்யமாம் :))) )
அத்தைக்கு திரவ ஷாம்பூ ஆகவே ஆகாது . மீரா சிகைக்காய் தூள் பாக்கெட் பாக்கெட்டாய் ஸ்டாக் செய்து வைத்துக் கொண்டுள்ளார். என்ன இருந்தாலும் சிகைக்காய்னு போட்டுருக்கான்ல நயம் சிகைக் காய் வாங்கி காய வச்சு அரைக்கத் தான் முடியல அதுக்கு இது தேவலாம் என்பார் .
அப்பா என் அன்பான அப்பா எப்போதும் ஷாம்பூ தேடியதோ ... தேடுவதோ இல்லை .,எனக்கு விவரம் தெரிந்த நாள் முதலாய் ஹமாம் சோப்பையே தான் தலைக்கும் போட்டுக் கொள்வார் . அப்பாவால் ஷாம்பூ பிரச்சினையே எழுந்ததில்லை வீட்டில் .என்னே யாம் செய்த புண்ணியம்!
என்னருமைக் கணவர் அடடா...இப்படி ஒரு மனிதரை கணவராக அடைய ஏழேழு ஜென்மம் தவம் பண்ணி இருக்க வேண்டும் நான் .நான் ஷாம்பூ என்ற பெயரில் எதை வாங்கி வைத்தாலும் ஒரு கேள்வி இல்லை அவரிடத்தில் .நீ என்ன செய்தாலும் அது என் நன்மைக்கே என்ற விதத்தில் அத்தனை சாத்வீகமிருக்கும் இந்த ஷாம்பூ விஷயத்தில் மாத்திரம்.
தங்கைக்கு பெர்பெக்ட் தங்கை இருக்கிறாள். எங்கே போனாலும் அவளுக்கே அவளுக்கென்று ஒரு பேக் தனியே பயணிக்கும்.அவளும் யாருடைய ஷாம்பூ ,சோப்பு,சீப்பு ,எண்ணெய் இத்த்யாதி இத்யாதிகளை உபயோகிக்க மாட்டாள் ...பிறரையும் (சில நேரங்களில் சொந்த அக்காவாகவே இருந்தாலும் தான் ) உபயோகிக்க அனுமதிக்க மாட்டாள். தான் ..தன்னுடைய சுகாதாரம் என்று அத்தனை பெர்பெக்ட்.
அடேங்கப்பா ! பெரும்பாலும் ஷாம்பூவில் இருந்து க்ரீம் வரை ஹிமாலயாஸ் ப்ராடக்டுகள் தான் உபயோகிப்பாள். வேறு என்ன இருந்தாலும் ரிஜக்ட் தான் .
அம்மாவும் நானும் ஏகதேசிகள் ...எது இருக்கிறதோ அது ...எது கிடைக்கிறதோ அது ! இந்த ரீதியில் ஷாம்பூ முதல் சோப்பு வரை எந்த கண்டீசன்களும் இல்லை எங்களிடத்தில்.





இந்த இடத்தில் தான் எனக்கு பழைய "சுமங்கலி ஷாம்பூ "ஞாபகம் வந்து தொலைத்திருக்க வேண்டும்.





அது இன்றைய ஷாம்பூக்களுக்கு எல்லாம் அம்மா ஷாம்பூ .





மஞ்சள் நிறத்தில் ட்ரான்ஸ்பரன்ட் பிளாஸ்டிக் உறைக்குள் நீர்க் கரைசலாய் நெளிந்து கொண்டிருக்கும் .அம்மா ஞாயிற்றுக் கிழமை ஆனால் எனக்கொன்று தங்கைக்கு ஒன்று என்று வாங்கி வந்து கொல்லைப்புறத்து துணி துவைக்கும் கல்லில் உட்கார்த்தி வைத்து தலைக்கு தேய்த்து ஊற்றி விடுவார் . அந்த ஷாம்பூவில் இன்றைய ஷாம்பூக்களைப் போல நுரை ததும்பிப் பொங்கியதில்லை.என்னவோ ஷாம்பூ என்ற பெயருக்கு ஒரு ஷாம்பூ அது.





அதை அடுத்து கிராமப் புறங்களில் சிக் ஷாம்பூ சக்கைப் போடு போட்டது .சிக்கைத் தொடர்ந்து கடல் ஷாம்பூ அது மட்டுமா அப்புறம் வெல்வெட் ஷாம்பூ வாங்க ஆரம்பித்தார்கள் அனேக வீடுகளில் .








இந்த மூன்று ஷாம்பூகளில் சிக் தவிர கடல்,வெல்வெட் எல்லாம் இன்றைக்கு நகரங்களில் பெரும்பாலும் காணக் கிடைக்கவில்லை . ஊருக்குப் போனால் கடைகளில் தொங்க விட்டிருப்பார்களோ என்னவோ தெரியவில்லை .





அப்புறமாய் பொடுகுக்கு என்று கிளினிக் ப்ளஸ் விளம்பரங்கள் பிரசித்தி அடைய ஆரம்பித்தன எல்லா இடங்களிலும் .கொஞ்ச நாட்கள் நுனி கேள்விக் குறி போல வளைந்த நீல நிற கிளினிக் ஷாம்பூ பாட்டில்கள் எங்கள் வீட்டில் இடம் பிடித்துக் கொண்டிருந்தது.





இப்போது தம்பி "ஆல் கிளியர் ஷாம்பூ " மட்டும் தான் தலைக்குப் போடுவானாம் .





தங்கை "பேன்டீன் ஷாம்பூ " இல்லா விட்டால் தலைக்கு குளிப்பதையே ஒத்திப் போட்டுக் கொள்வேன் என்கிறாள் .





என் மகள் "விளம்பரத்துல வர பொண்ணு போல நீளமா தலை முடி வேணும் எனக்கு அந்த ஷாம்பூ தான் வேணும் இல்லனா தலைக்கு குளிக்க வைக்க விட மாட்டேன் போ " என்று விட்டாள்.





அப்பாவைப் பற்றிச் சொல்ல என்ன இருக்கிறது.ஷாம்பூ விஷயத்தைப் பொறுத்தமட்டில் பிரச்சினையே கிளப்பாத அவரொரு கண்கண்ட தெய்வம். :)))





தேவ் ..அடடா அடுத்த ஜென்மத்துக்கும் இவரே என் கணவர் ...நானே இவர் மனையாட்டி ( யாரா இருந்தாலும் சரி பேக்கிரவுண்ட்ல "நீயே தான் எனக்கு மணவாட்டி பாட்டு "ஓட வச்சுக்கிட்டு தான் இந்த வரிகளை வாசிக்கணும் ஆமாம் சொல்லிப் போட்டேன் தெரிஞ்சுதா?





அப்புறம் என்னைப் பற்றிச் சொல்லி முடிக்க வேண்டும் இல்லையா? ஷாம்பூ விஷயத்தில் அம்மாவும் நானும் இன்றும் அப்படியே தான் தொடர்கிறோம் எங்கள் நிலைகளில் எந்த மாற்றங்களும் இன்றி. :)








3 comments:

அன்புடன் அருணா said...

இன்னும் Dove,L'oreal,Fiama di wills அப்படீனு நிறைய ஷாம்பூ விட்டுட்டீங்களே!

Anonymous said...

ஷாம்புக்கே ஷாம்பூ போட்டீங்க கார்த்திகா அப்படி ஒரு அலசல் .. cute postன்னு சொல்லலாம்..

KarthigaVasudevan said...

@ அருணா

ஷாம்பூ நிறைய வெரைட்டி இருக்குப்பா ,ஆனா எங்க வீட்ல யூஸ் பண்ணதை மட்டுமே இங்க பதிஞ்சு வச்சேன். :)

@ தமிழரசி

ஷாம்பூவுக்கே ஷாம்பூவா நல்லாருக்கே இப்டிச் சொல்ல :)) நன்றி தமிழ் .