Monday, August 30, 2010

மிலிட்டரி நாயக்கர் ...



அந்த ஊரில் மிலிட்டரி நாயக்கர் வீடென்றால் அது சீமை ஓடு வேய்ந்த எட்டுக் கட்டு வீடு ;

அந்த வீட்டுக்கு ரெண்டு வாசத்திண்ணைகள் இருந்தன.

விடியற்கருக்கு...இன்னும் இருட்டு விலகாத சித்திரை மாசத்து கோடை ராத்திரி ,ராப்பூச்சி ரீங்காரம் இருட்டின் குறட்டை சத்தம் போல மெல்லக் கசிந்தபடி இருக்க இந்த வீட்டுத் தொழுவத்தில் சாணி அள்ளவென்றே ஜென்மமம் எடுத்தவளாய் ஊர் குப்பைக்காரன் செல்லாண்டியின் பெண்டாட்டி வெள்ளையம்மா அந்தண்டை வாசதிண்ணையில் குப்புறப் படுத்து தூங்கிக் கொண்டிருந்தாள் ,

இந்தண்டை வாசத்திண்ணையில் செல்லியும் அவள் மாமியாரும் வீட்டின் எல்லாக் குஞ்சு குளுவான்களோடு நல்ல சயனத்தில்;

வீட்டு ஆம்பளை மிலிட்டரி நாயக்கரை அவரது அம்மாவும் ,மனைவியும் வெளித்திண்ணையில் படுத்து தூங்க அனுமதிப்பதில்லை என்பதால் அவர் மட்டும் வீட்டுக்கு உள்ளே தூங்கிக் கொண்டிருந்தார். நாயக்கரை திண்ணையில் படுக்க விடாததற்கு ஒரு ரசமான கதை இருந்தது அவர்களிடம் ;இந்த இருட்டில் அந்தக் கதை என்னத்திற்கு?!

இன்னும் கொஞ்ச நேரத்தில் விடிந்து விடும்.அப்படி இருக்கக் கொள்ள தான் திடீரென்று எதிர் வீட்டு முருங்கை மரத்திலிருந்து ஜிங்கென்று குதித்து இறங்கினாள் பெரிய கோதை ;அவள் இறங்கிய அறிகுறியோ என்னவோ கொல்லையில் கிணற்றுச் சகடம் "கட..கடவென்று "உருண்டு ஓய்ந்து நின்றது .

வீட்டு நாய் விக்கி சன்னமாய் குழந்தை அழுவது போல ஊளையிட்டு அடங்கியது ,என்ன இருந்தாலும் அவள் வளர்த்த நாய் ஆச்சுதே?


"செல்லி ..."

"செல்லி ..."

"ஏய் செல்லி ...வாயேன் எவ்ளோ நேரமா கூப்டுட்டு இருக்கேன் ...வா நல்லதண்ணிக் கெணறு வரைக்கும் ஒரு நட போயிட்டு வருவோம்."

வரும் போதெல்லாம் எப்படி வழக்கமோ அது போலவே அன்றும் வாசற்படியில் ஒரு காலும் தெருவில் ஒரு காலும் வைத்து நின்ற வாக்கில் தண்டை மெலிதாய் குலுங்க செந்தூரக்கமிட்ட முகத்தில் உறைந்து போன சிரிப்புடன் பெரிய கோதை சின்ன செல்லியை அழைக்க ஆரம்பித்தாள் .

செல்லி தூக்கம் கலையாதவளாய் ; கோதை தன்னைக் கையை பிடித்து இழுத்த பாவனையில் கையை உதறிக் கொண்டு ;

"இந்தா ...நான் வரல ...நீ போ ...எம்புள்ளைங்க அழும்.சின்னவன் நானில்லாம ஒத்தப் பருக்க திங்க மாட்டான்."

அவள் சொன்னால் விட்டு விடுவாளோ கோதை ;

"ஏய் கிறுக்கி ... போயிட்டு வெரசா ...வந்துரலாம்டி" இந்தா இருக்கு நல்ல தண்ணிக் கெணறு ,எந்திரி ...எந்திரி "

"ம்ம்ஹூம் ...நான் வல்ல ...நீ போ எம் புருஷனுக்கு சோறாக்கனும் ... கெழக்குத் தோடத்துல மொளகா நாத்து புடுங்கனும் ...அம்மோய் எம்புட்டு வேலயிருக்கு ! ... நான் வல்ல ...நீ போயேன் "

கோதையின் முகத்தில் உறைந்திருந்த சிரிப்பு சன்னமாய் சுணங்க...

"ம்ம்...தண்ணிக் கெணத்துக்கு தான் வல்லேங்கற ...வெறகு பெறக்க காட்டுக்காச்சும் வா போவோம் ..."

"வேணாம்...வேணாம் நான் வல்ல ...நான் எங்கயும் வல்ல "

"ஊர்கம்மாய் ரொம்பிக் கிடக்காம் ,அழுக்குத் துணி எடுத்தா ...போய் புள்ளைங்க துணியன்னாலும் துவைச்சிட்டு வரலாம் ...எந்திரி ..வா...வா "

" அழுக்குத் துணி எடுக்க வண்ணாத்தி வருவாளே ...கம்மாய்க்கு ஏன் கூப்டற நான் வல்ல..."

செல்லி மறுக்க மறுக்க கோதைக்கு ஆங்காரம் கூடிக் கொண்டே போனது போலும் ;

உக்கிரமாய் விழிகளை உருட்டியவள் கொடிக் கயிற்றில் காய்ந்து கொண்டிருந்த செல்லியின் சிவப்பு சுங்கிடிச் சேலையை படக்கென்று உருவி எடுத்து அதை சுருக்கிட்டு அதே கொடியில் தொங்க விட்டாள்,

கட்டக் கடைசியாய் ஒரு முறை அழைப்பவள் போல ;

"அடியே ...இப்ப நீ வரப் போறியா ...இல்லியா?"

அப்போதும் தூக்கக் கலக்கத்துடன் தான் செல்லி பதில் சொல்லிக் கொண்டிருந்தாள் ;

"நானெதுக்கு உன்கூட வரணும் ?" நான் வல்ல நீ போ "

" எதுக்கு வரணுமா? வரணும்டி ...நான் கூப்ட்டா நீ வரணும்.எம் புருஷன் கூப்டோடன மட்டும் வந்துட்டியில்ல ....நாலு புள்ளைங்க கூட பெத்துகிட்டியில்ல. எந்திரிச்சு வா வெள்ளன கெணத்துக்குப் போவோம்

" ஆங் ...உம்புருஷனா ... செல்லிக்குப் பொட்டில் அடித்ததைப் போல உணர்வு

"உம்புருஷனா ...உம்புருஷனா ...அம்மாடியோவ்

அ...த்...தே...அத்...தே ... யாரு வந்துருக்கா இதாரு....? ...எந்திரிங்கத்தே...எந்திரிங்க ... ..."

அலறிக் கொண்டு விழித்த செல்லி உடம்பெலாம் உதறலெடுக்க பக்கத்தில் செத்துப் போனவளைப் போல உறங்கிக் கொண்டிருந்த தான் மாமியாளை உலுக்கோ உலுக்கென்று உலுக்க ;

கோரைப் பாயில் படுத்துக் கொண்டிருந்த அந்தம்மாளும் அதிரி புதிரியாய் சேலையை அள்ளிப் போட்டுக் கொண்டு எழுந்து உட்கார்ந்து கொண்டு ;

இந்தா செல்லி ...எதுக்குத்தா ...இப்பிடி பயந்து கத்தற... மருமவளே என்னடி ஆச்சு ?

பக்கத்தில் உறங்கிக் கொண்டிருந்த தன் ஐந்து வயது கடைக்குட்டி மகனை மடியிலிட்டு இறுக்கிக் கொண்டும் மற்ற பிள்ளைகள் மூன்றையும் எங்கோ கண்ணுக்குத் தெரியாத பூதத்திடம் இருந்து காப்பவளைப் போன்ற பாவனையில் தான் வலது கையை நீளமாக அவர்கள் மேல் பரப்பி வைத்துக் கொண்டு மூச்சுக் கிடைக்காதவளைப் போல மேல் மூச்சு கீழ் மூச்சு வாங்க நடுங்கிப் போனவளாய் செல்லி அரண்டு போய் இருட்டில் கண்களை உருட்டிக் கொண்டிருந்தாள் ;
அதற்குள் சத்தம் கேட்டு தொழு வாசத்திண்ணையிலிருந்து அரக்கப் பரக்க ஓடி வந்தாள் வெள்ளையம்மா ;

"சின்ன மொதலாளிம்மா ...சும்மா இருங்க .சும்மா இருங்க ..ஒண்ணுமில்ல..ஒண்ணுமில்ல என்று செல்லியின் கைகளை இருக்கப் பிடித்துக் கொண்டு மிலிட்டரி நாயக்கரின் அம்மாவிடம் திரும்பி குசு குசுப்பாய் ...

சத்தம் போடாதிங்கம்மா ...எல்லாம் நம்ம பெரிய கோதையம்மா வேலையாத்தேன் இருக்கும்

போய் செல்லேரியம்மன் துன்னூறு எடுத்தாங்க ...பூசி விட்டா தொந்திரவு இருக்காது "



அவளா ...அவ செத்து மண் மூடிப் போயிட்டாளே...இப்ப எங்கருந்துடி வந்தா ? அச்சத்தால் வறண்டு போன நாக்கு மேலண்ணத்தில் ஒட்டிக் கொள்ள அந்தம்மாள் திரு திருவென விழித்துக் கொண்டு வெள்ளையம்மாளிடம் கேட்டாள் .

செத்தாலும் ...பொழச்சாலும் நாயக்கரு மொதல்ல கட்டினது கோதை அம்மாளைத் தானுங்கம்மா ,அந்தப் பாசம் விட்டுப் போகுமா !

நாண்டுகிட்டு செத்தவளுக்கு என்னடி புருஷன் பாசம்? விடிஞ்சதும் மொத்தக் காரியமா கோடாங்கிக்கு ஆள விட்டனுப்பு .

அதற்குப் பிறகு பல வருடங்கள் உருண்டு ஓடியே போயின .

செல்லி பாட்டியாகி ..கொள்ளுப் பட்டியான பின்னும் கூட இன்னும் நம்புகிறாள் அவ்வப்போது கோதை தன்னை கிணற்றில் தள்ளி சாகடிக்க அழைப்பதாக ;

உப்புப் பெறாத சுங்கிடிச் சேலைக்காக புருஷனோடு மனஸ்தாபப் பட்டுக் கொண்டு ஆறு மாத சிசுவை வயிற்றில் சுமந்திருந்த போதிலும் தூக்குப் போட்டுச் செத்துப் போன மூத்த சம்சாரம் கோதை ஆண்டாள் இன்னும் செல்லியை அழைத்துக் கொண்டே தான் இருக்கிறாளாம்.

செத்து செத்து விளையாடுவதற்காய் இருக்கக் கூடும் .

மிலிட்டரி நாயக்கர் திண்ணையில் தூங்குவதில்லை .அந்த மட்டும் புரிந்திருக்க வேண்டும் .

Saturday, August 28, 2010

பென்சில் மேனியா...

சும்மா சும்மா பென்சில் துருவிக்கிட்டே இருந்தா அதுக்குப் பேர் பென்சில்மேனியாவாம்,ஹரிணி சொன்னா ,அவளுக்கு இருக்காம்.இதுல இருந்து அவளை நான் காப்பாத்திட்டேன்னா நான் சொல்றதெல்லாம் அவ கேட்பாளாம். 
 
ரொம்ப ஈசின்னு நினைச்சு தான் சரின்னு சொன்னேன்.
 
நேத்து  காலைல சின்ன ஸ்கேல்  நீளத்துக்கு அழகா துருவி  கொடுத்து விட்ட   பென்சில் ஸ்கூல் விட்டு வந்தோடனே  பேக்ல செக் பண்ணா அவ கை சுண்டு விரலுக்கும் பாதி நீளம் தான் இருந்தது.i was shocked .
 
இன்னைக்கும் அதே தான் ...i was shocked ...
 
இது தப்பான வழக்கமாச்சேன்னு ...
 
ரொம்ப நேரம் இப்படிலாம் சும்மா சும்மா துருவினா பென்சில் God   கிட்ட போய் அழும்,என் முனை எல்லாம் ஷார்ப் பண்ணி ஷார்ப் பண்ணி புல்ஸ்டாப் வைக்கிறேன் புல்ஸ்டாப் வைக்கிறேன்னு நோட் புக்ல   அழுத்தி அழுத்தி அந்த ஹரிணி பாப்பா உடைச்சு உடைச்சு விடறா அப்புறம் திருப்பி பென்சில் ஷார்ப்பாவே இல்லை...ஷார்ப்பாவே இல்லைன்னு சொல்லிட்டு எனக்கு வலிக்க வலிக்க என் தலையை பிடிச்சு ஷார்பனர்க்குள்ள விட்டு  துருவிகிட்டே இருக்கா ...எனக்கு வலிக்குதே...ஐயோ God எனக்கு  வலிக்குதேன்னு  உன்னை பத்தி கோள் சொல்லும்னு சொல்லி வச்சேன்.
 
ம்ம்...நிஜமாவான்னு கொஞ்ச நேரம் எம்மூஞ்சியவே பார்த்துட்டு இருந்துட்டு ...
 
 God  நல்லவர் ஒன்னும் பண்ண மாட்டார் , அம்மா நீ பொய் தான சொல்றன்னா...
 
இல்ல நிஜம்மா தான் ,நீ மட்டும் பென்சில் சும்மா சும்மா துருவினேன்னு வை மிட்நைட் ல பென்சில் பூதங்களெல்லாம் கூட்டு சேர்ந்துட்டு உன்னை பயமுறுத்தப் போகுது பாருன்னேன் .
 
நீ வேணா ட்ரை பண்ணி பாரேன்னா
 
எதை ட்ரை பண்ண?
 
நான் எதுக்கு பென்சில் துருவினேன் ஷார்ப்பா இல்லைன்னு தான ? பென்சில் ஏன் ஷார்ப்பா இல்லை முனை உடைஞ்சதால தான?
 
ம்ம் ...
 
முனை ஏன் உடைஞ்சது ?
 
ஏன் ?
 
நான் புல்ஸ்டாப் வச்சதால தான ?
 
ம்ம்...
 
நீயும் புல்ஸ்டாப் வச்சுப் பாரும்மா?
 
எதுக்கு?
 
நீ வை நான் சொல்றேன்.
 
சரி என்று அவளுடைய ஹோம் வொர்க் நோட் எடுத்து fill ups மட்டும் எழுதிக் கொடுத்தேன் ,பத்து புல்ஸ்டாப் வைக்க வேண்டியிருந்தது .
 
அவளைப் போலவே நோட் புக்கில் அழுத்தி புல்ஸ்டாப் வைத்ததில் பத்து முறை முனை உடைந்தது.பென்சிலை பத்து முறை துருவினேன் .
 
சரி..சரி போதுமென்றாள்.
 
நோட் புக்கை மூடி வைத்தேன் . இப்ப புரிஞ்சதா ? இனிமே இப்டி சும்மா சும்மா பென்சில் துருவி துருவி போட்டு ஒருநாளைக்கு மூணு பென்சில் காலி ஆக்க மாட்டயில்ல  ?
 
ம்ம்...மம்மி இப்ப பென்சில் பூதங்களை வரச் சொல்லு ?
 
என்னது?
 
ஆமாம் நீயும் தான பென்சில் துருவி துருவி உடைச்ச ,உன்னையும் சேர்த்து தான பயமுறுத்தும் ,அப்படின்னா பரவாயில்லை .பூதங்களை ஒன் பை ஒன் வரச் சொல்லு ...be quick .
 
ங்கே !  (  நான் தான்) 
 
இப்பலாம் அடிக்கடி பென்சில் உடைக்கறது நானும் தான்!
 
இதற்குப் பெயரும் பல்பென்று சொல்லத் தகுமோ?!
 

Tuesday, August 24, 2010

இங்லாந்து லெட்டர்...(Inland cover)

சென்ற வருடம் இதே போன்றதோர் நல்ல மழை நாளில் இதை எழுதினேன் என்று ஞாபகம்...!

கரண்ட் வேறு இல்லை அப்போது...;டி.வி யும் பார்க்க முடியவில்லை ...கூடப் பேச என் தம்பியைத் தவிர யாரும் இல்லை.அவனும் நண்பன் அழைத்தான் என்று வெளியில் கிளம்பிக் கொண்டிருந்தான்.

சரி என்னத்தையாவது கிறுக்குவோம் என்று எண்ணிக் கொண்டு தான் இதை ஆரம்பித்தேன்.போகும் போது என் நோட் புக்கில் எட்டிப் பார்த்த தம்பி சொன்னான் ;

கவிதை ...கதை நு எழுதறதை விட இப்படியும் ட்ரை பண்ணி பாரேன் , எங்க ஹெச் .ஆர் ஒரு தடவை எங்க கிட்ட இந்தியன் போஸ்டல் சர்வீஸ் விளம்பரத்துக்கு காப்பி ரைட்டிங் பண்ண சொல்லிக் கேட்டார் ...யாரோடது பெஸ்ட்னு பார்க்கலாம்னு ?நாங்க ட்ரை பண்ணலை அதுக்குள்ளே செமெஸ்டர் வந்துடுச்சு ...!!!

நீ சும்மா தான என்னத்தையோ எழுதிட்டு இருக்க ...இத வேணா ட்ரை பண்ணேன் என்றான்."சும்மா இருந்த சங்கை ஊதிக் கெடுத்த கதை போல" உங்களுக்குத் தோணினால் நான் பொறுப்பில்லை.



1.

"DONT ROAR

WE AT

YOUR DOOR" IPS (INDIAN POSTAL SERVICE)



2. "THINK WITH INK

PRESSING BUTTONS IS NOT EQUAL TO

IMPRESSING THE MINDS

START TO ...

THINK WITH INK " IPS (INDIAN POSTAL SERVICE)


3. "DONT TAKE RISK

WE ARE

AT YOUR DESK"

IPS (INDIAN POSTAL SERVICE)


4.

"CHOOSE INDIAN POSTAL SERVICE

CHAZE INDIAN POLICE SERVICE

WE BEST TO PASS YOUR DREAMS"


5.

" IPS IS THE PLACE OF YOUR ESSENCE OF FEELINGS PROTECTED"



6.

"BROWSING CENTRE

CYBER CAFE

DESK TOP

LAP TOP

MOBILE PHONE

CRUSH CRUSH CRUSH

EVERY WHERE CRUSH

JAM JAM JAM

EVERY WHERE JAM

COME TO SEE MY NAME

I AM VERY ... FAME ...IPS(INDIAN POSTAL SERVICE)"

Friday, August 20, 2010

கர்ண பரம்பரைக் கதைகளும் பாவைக்கூத்தும் :


 



கர்ண பரம்பரைக்கதைகள் :



கூகுளில் கர்ண பரம்பரைக் கதைகள் தேடியதில் சில கதைகளின் மூலப் புத்தகங்கள் சிக்கின.அந்தக் கதைகள் ;
 
நல்ல தங்காள் கதை

ஆரவல்லி சூரவல்லி கதைகள்

கர்ண மகாராஜன் சண்டை

காத்தவராயன் கதை

கோவலன் கதை

பஞ்ச பாண்டவர் வனவாசம்

மயில் ராவணன் கதை

சபரி மோட்சம்

சதி அனுசுயா

கட்டபொம்மன் தளபதி பாதர் வெள்ளை சண்டைக்குப் புறப்படும் கதை


பவளக்கொடி கதை 



மருதுபாண்டியர் கதை ...
 
அடேயப்பா ...இன்னும் நிறைய இருக்கும் போல ஆனால் ஒரிஜினல் வெர்சன் படிக்க படு சிரமமாக இருக்கிறது.இந்த கதைகளை எல்லாம் படிக்க விருப்பமிருப்பவர்கள் ;
 
http://www.tamilheritage.org  இந்த இழைக்குள் நுழையலாம்.
இங்கே மேலே நான் குறிப்பிட்ட எல்லாக் கதைகளும் இருக்கின்றன.வாசிக்க விருப்பமிருப்பவர்கள் வாசிக்கலாம் ,பெரும்பாலும் பாடல் வடிவம் தான்
 

கர்ண பரம்பரைக் கதைகள் என்றால் செவி வழிக் கதைகள் என்றும் சொல்லலாம் ,பரம்பரை பரம்பரையாக தலைமுறை தோறும் குடும்பத்தின் மூத்தவர்கள் வாயிலாக வாரிசுகள் இந்தக் கதைகளை அறிந்து கொள்கின்றனர்,பெரும்பாலும் பாடல் வடிவில் தான் இந்தக் கதைகள் அமைந்துள்ளன .பால்யத்தில் "பாவைக் கூத்து,தெருக்கூத்து நாடகங்கள் பார்க்க வாய்த்தவர்களுக்கு ஓரளவுக்கு இந்தப் பாடல்கள் புரியக் கூடும் .


என்.டி.டி வியில் நவீன பாவைக்கூத்து தொடர் சில வருடங்கள் முன்பு பார்த்த ஞாபகம் இருக்கிறது."பப்பட் ஷோ "  என்ற பெயரில் அரசியல் கேலி தொடராக ஒளிபரப்பாகிக் கொண்டிருந்தது,இப்போதும் உண்டா என தெரியவில்லை,ஆனால் பாவைக் கூத்துக் கலை இன்று நலிந்து  விட்டதென்று தான் சொல்ல வேண்டும், தசாவதாரம் படத்தில் ஒரு பாடல் காட்சியில் வருமே ;
 
"முகுந்தா முகுந்தா ...என்று அசின் பாடுவாரே அதே பாடலில் திரையில் கண்ணனின் தச அவதாரங்களை படத்துண்டுகள் ,மற்றும் பொம்மைகளின் நிழல் உருவங்களாக நிஜம் போலக் காட்டுவார்களே ,அது  தான் பாவைக் கூத்து.வெகு அருமையான  கலை  வடிவம் இது ,
 
வெறும் நாலணாவுக்கு 90 களில் பாவை கூத்து நாடகங்களை கிராமம் தோறும் வந்து போட்டுக் காட்டுவார்கள்.இதை நாகரீகமாகவோ நவீன மயமாகவோ வளர்த்தெடுக்க நம்மிடையே ஆட்கள் பஞ்சமோ என்னவோ.குழந்தைகளிடம் பாவைக் கூத்து என்றால் என்னவென்று கேட்டுப் பாருங்கள் ,பெரும்பாலும் அறிந்திருக்க வாய்ப்பில்லை,பள்ளிகளில்  இந்த பாவைக்கூத்து நாடகங்களை குழந்தைகளுக்கு அறிமுகப் படுத்தலாம் .
 
பாவைக்கூத்து முற்றிலும் கர்ண பரம்பரைக் கதைகளை மையமாக வைத்தே நடத்தப் பட்டு வந்திருக்கலாம் .


மேலும் கர்ணபரம்பரைக் கதைகள்
என்றவுடன் நாட்டுப்புறத்து கதைமாந்தர்களை மட்டுமே அடிப்படையாக வைத்து எழும்பிய கதைகள் என்று எண்ணி விடல் ஆகாது,முக்காலும் மூன்று வீசம்  ராமாயணக் கிளைக் கதைகள் ,ஐம்பெருன்காப்பியங்களின் கிளைக் கதைகள்,விடுதலைப் போராட்ட காலத்திய நிஜக் கதைகள் இப்படி சகல விதமான இலக்கிய வடிவங்களில் இருந்தும் இந்தக் கதைகள் உருப்பெற்றுள்ளன.உதாரணம் மேலே குறிப்பிடப் பட்டுள்ள கதைகளை பாருங்கள் புரியும்.
 

அம்புலிமாமா :


பள்ளிக் காலங்களில் அம்புலிமாமா படிக்காதவர்கள் யாரேனும் உண்டா? இன்றும் கூட  அம்புலிமாமா சிறுவர் கதைகளை படிக்க விருப்பமிருப்பவர்கள் இங்கே செல்லுங்கள்.
 
 
 நிறம் மங்காத அதே வண்ணங்களுடன் படக்கதைகள் நிறைய உண்டு இந்த தளத்தில் .குழந்தைகளுக்குப் பிடிக்கும் .எழுத்து கூட்டி வாசிக்கப் பழகிய குழந்தைகள் எனில் இதை வாசிக்க சொல்லி விட்டு தினம் ஒரு கதை சொல்லும் அலுப்பில் இருந்து மீளலாம் .
 

சமூக நீதிக்கதைகள் :

வெறும் கற்பனைகளை மட்டும் தூண்டக் கூடிய மாயாஜாலக் கதைகள் வேண்டாம் கொஞ்சம் அறிவார்த்தமான சமூக நீதிக் கதைகள் வேண்டும் என்று நினைப்பீர்களானால் கல்ச்சுரல் இந்தியாவின்  இந்த தளத்தை திறவுங்கள் .
 
 
பகவத் கீதையின் நீதிக் கதைகள் ,பௌத்த ஜாதகக் கதைகள் ,பஞ்ச தந்திரக் கதைகள் எனும் தலைப்புகளில் நிறையக் கதைகள் வகைப்படுத்தப் பட்டுள்ளன.
 
http://tamil.cri.cn/1/more/1457/ZTmore1457.htm  (சீன நாட்டுப்புறக் கதைகளைப் படிக்க இங்கே செல்லுங்கள்)
 
கூகுளில் இப்படி கதைகளை தேடுவது நல்ல பொழுது போக்காக இருக்கிறது ; நேரம் போவதே தெரியவில்லை .
 

Thursday, August 12, 2010

தகவல் பலகை ...

நண்பர்களுக்கு

ஹமீதாக்கா சிறுகதையை இலக்கியப் பத்திரிக்கை ஒன்றிற்கு அனுப்பி இருப்பதால் தற்காலிகமாக அந்த இடுகையை நீக்கி இருக்கிறேன் ,கதையும் அதற்கான பின்னூட்டங்களும் சேமிப்பில் உள்ளன.சில நாட்களில் மீண்டும் பதிகிறேன்.

நட்புடன்

கார்த்திகாவாசுதேவன்

Tuesday, August 10, 2010

ஹமீதாக்கா ...

நட்டநடு நிஷி ஹமீதாக்கா கதவைத் திறந்து போட்டு விட்டு வாசலில் இறங்கி இடுப்பில் உரமாய் கைகளை ஊன்றி நின்று கொண்டு ஹோவென்று வெறிச்சோடிப் போயிருந்த தெருவை அமானுஷ்யமாய் பார்த்துக் கொண்டிருந்தாள்.


ஹமீதாக்காவுக்கு இன்னும் கல்யாணம் ஆகவில்லை,அவளின் அக்கா ரஷீதாவை போன வருஷம் தான் மதுரையில் கட்டிக் கொடுத்தார்கள் ,கல்யாணமான மாயத்தில் ரசீதாவுக்கு உம்மா வீடு இல்லைஎன்றானது,வாப்பா போட்ட நகை பத்தலையாம்.ஒரு பொண்ணைக் கரை சேர்க்கக் கொள்ளவே வாப்பாவுக்கு நெஞ்சு வலி கண்டு விட ஆஸ்பத்திரிக்கும் வீட்டுக்குமாய் நடை கழண்டு கொண்டிருந்தது.

குடி இருக்கும் வீடும் சொந்த வீடில்லை வாடகை வீடு தான்,வாப்பா முன்னைப் போல சரி வர உத்தியோகத்துக்குப் போக ஏலாத நிலையில் ஆறு மாத வாடகை பாக்கி வேறு அச்சுறுத்திக் கொண்டிருந்தது.

உம்மா அழுது அழுது அதிலேயே கரைந்து விட்டவள் போல எந்நேரமும் வாப்பாவின் கட்டிலருகே ஒரு சேரைப் போட்டுக் கொண்டு உறங்கியும் உறங்காத நிலையில் ஏதோ பேருக்கு ஜீவித்திருப்பதைப் போல எந்தப் பிரஞ்சையும் இன்றி அவள் பாட்டுக்கு இருந்தாள்,நல்ல நாள் பொல்லாத நாளுக்கு ஒரு புதுத் துணி கிடையாது,வாய்க்கு ருசியாய் ஒரு மட்டன் பிரியாணி ,அடச்சே ...பிரியாணியாம்...பிரியாணி இந்தக் கேடு கேட்ட கெண்டை மீனுக்கு கூட வக்கில்லை இப்போதெல்லாம் ,ஒரு ரசம் வைத்து உளுத்துப் போன உப்புக் (வாளைமீன்) கருவாட்டை சுட்டு வைப்பது தான் ஹமீதாக்காவின் பிரமாத சமையல் வேலை,இது தவிர அவள் நாளெல்லாம் பொழுதுக்கும் சும்மாவே தான் இருந்தாள்.

ஏழாம் மாதமும் வாடகை பாக்கி நிற்கவே விடிந்த கொஞ்ச நேரத்தில் எல்லாம் வீட்டுக்காரி ராஜம் டீச்சர் உம்மாவிடம் வந்து ,

"மாமி நீங்க வேற வீடு பார்த்துகிடுங்க ,என் மக பிரசவத்துக்கு வரா பாம்பேல இருந்து,தொணைக்கு எங்க அம்மா வருவா,எங்க வழி உறமுறைங்க மருமகன் வழி சொந்தக்காரவுக வேற ரொம்பப் பேரு வரப் போக இருப்பாங்க.எங்க போர்சன்ல எட வசதி பத்தாது.இந்த வீட்ட ஒழிச்சுக் கொடுத்திங்கன்னா தான் சரிப்படும் ,ஆனது ஆச்சு,இந்த கொற மாசத்துக்கு இருந்துக்கிடுங்க,தாயா புள்ளையாப் பழகிட்டு டீச்சர் இப்பிடிச் சொல்லுதேன்னு நெனைக்காதீக.எங்களுக்கு வீடு வேணும் ,என்ன நாஞ் சொல்றது? அம்புட்டுதேன்"

சொல்லி முடித்து சனி விட்டது பாவனையில் அவள் போய் விட்டாள்.

டீச்சர் சொன்னதைக் கேட்ட மாயத்தில் உம்மாவுக்கு கண்ணைக் கட்டிக் கொண்டு வர ,தலையைப் பிடித்துக் கொண்டு ,

"ஹமீதா அரை லோட்டா கடுங்காப்பி போட்டு எடுத்தா,தலையச் சுத்துதுடி "

என்று மறுபடி கட்டிலில் தலையை முட்டுக் கொடுத்து சரிந்து விட்டாள் .வாப்பா தூங்கவில்லை,ஆனால் தூங்குவதைப் போல கண்களை மூடிக் கொண்டிருந்தார்.இல்லா விட்டாலும் தான் அவர் அதைத் தவிர என்ன செய்து விடப் போகிறார்?

ஹமீதாக்காவுக்கு நியாயப்படி உம்மாவின் மீதும் வாப்பாவின் மீதும் கொள்ளை கொள்ளையாய் கோபம் இருந்தாலும் அவர்களை எதுவும் சொல்ல முடியா இயலாமை குடைந்து கொண்டிருந்தது,

"ரசீதாவ கட்டிக் கொடுத்தாப்பில என்னையும் எங்கனயாச்சும் கட்டிக் கொடுத்திருங்க..."

என்று மூன்று மாதங்களுக்கு முன் தொணதொணத்துப் பார்த்தாள்.உம்மாவுக்கு அழுவதா சிரிப்பதா என்று புரியாத நிலை!

"ஏய் ...இவளே,ஒனக்கு நிக்ஹா பண்ணிப் பார்க்கற நெலமையிலயா நாங்க இங்கன இருக்கம்?! வாப்பாவுக்கு மொதல்ல நெஞ்சு வலி குணமாகட்டும் ஹமீதா ...பெறகு பார்ப்போம்.இப்பமென்ன ஒனக்கு இருபது வயசு தான ! "

உம்மா மெல்ல முணு முணுத்துக் கொண்டு வாப்பாவை ஆஸ்பத்திரிக்கு கிளப்பிக் கொண்டு வெளியேறினாள்.

அப்புறமும் ஹமீதாக்கா விட்டு விடுவாளா ?

அவள் பாட்டுக்கு தொண தொணவென்று நச்சரிக்க உம்மாவுக்கு எரிச்சல் வந்தது;

"இந்தாருடி ...ஏன் கெடந்து நிக்ஹா பண்ணிக்க இந்த அல அலையற ?! "

சுள்ளென்று உம்மா கேட்க ஹமீதாக்காவுக்கு பளாரென்று கன்னத்தில் அறை பட்ட வலி நெடு நேரம் இருந்தது.அதற்குப் பிறகு அவள் நிக்ஹா பேச்சை எடுக்கவே இல்லை.

உம்மாவின் பொட்டு பொடுசு நகைகள் கற்பூரமாகி குடும்பத்தின் வறுமைத் தீயில் எரிந்து பதங்கமாக ஹமீதாக்கா தெரு வாசலில் சும்மா வேடிக்கை பார்க்க கூட வந்து நிற்க முடியாதவளாகிப் போனாள்.அவளுக்கு காது மூக்கில் கூட பொட்டுத் தங்கம் இன்றி பிறர் கண்ணில் காட்சிப் பொருளாவது ரொம்ப அவமானமாகத் தெரிந்தது.

முன்னெல்லாம் ராஜம் டீச்சரின் அம்மா ஊரிலிருந்து வந்தாளானால் ஹமீதாக்கா அந்த முதியவளுடன் சரிக்குச் சரி வாயடிப்பாள்.அந்தம்மாள் பொல்லாதவள் ,ஆனாலும் மகள் பள்ளிக்குப் போய் விட்டால் அப்போதெல்லாம் அவசரத்துக்கு கடைக்குப் போக,ஆஸ்பத்திரிக்குப் போக,முட்டி வலி தைலம் தேய்க்க இப்படி பொழுதை தள்ள ஹமீதாவை தான் நம்பி இருந்தாள் அந்தப் பாட்டியம்மாள்.


அதனால் ஹமீதாக்காவின் மீது நிஜமாய் பாசமே இல்லையென்றாலும் கூட தனக்கு ஹமீதாவென்றால் தனிப் பாசம் என்பதாய் எல்லோரிடமும் காட்டிக் கொள்வாள்,இது ஹமீதாக்காவுக்கும் தெரிந்தே தான் இருந்திருக்கக் கூடுமோ என்னவோ! ஆனாலும் அவள் பாட்டியுடன் மிகுந்த விருப்பத்தோடு தான் எப்போதும் பேசுவாள்,பாட்டி அளந்து விடும் ஊர்க் கதைகள் அதற்கொரு காரணமாய் இருந்திருக்கலாம் .

அந்தப் பாட்டி இன்றைக்குக் காலையில் நிலக்கோட்டையில் இருந்து வந்து இங்கே மகள் வீட்டில் இறங்கி விட்டாள் போலும் ,அடுத்த போர்சனில் பேச்சு களேபரமாய் இருந்தது.இருட்டறையில் அடைந்து கிடந்ததைப் போல புழுங்கிப் போயிருந்த ஹமீதாக்காவுக்கு முகத்தில் லேசாய் குளிர் காற்று பட்டார் போல கொஞ்சம் போல சந்தோசம் எட்டிப் பார்த்தது.


ஆனால் வீட்டை காலி செய்யச் சொல்லி விட்ட நாளில் இருந்து சும்மாவேனும் டீச்சர் வீட்டுக்குப் போய் வருவது நின்று விட்டபடியால் ,பாட்டியே வந்து பேசினால் ஒழிய தான் அங்கே போவதற்கில்லைஎன பேசாமல் சமையல் கட்டின் பின் கதவை திறந்து வைத்துக் கொண்டு மீந்து விட்ட பழைய சோற்றை வட்டிலில் இட்டு செத்துப் போன நாக்கை அரிந்து கீழே வீசி விட்டால் தேவலாம் போல கண்ணை மூடிக் கொண்டு பெரிய பெரிய கவளங்களாக உருட்டி உருட்டி முழுங்கிக் கொண்டிருந்தாள்.அன்றைக்கு அந்த பாழாய்ப் போன உப்புக் கருவாட்டுக்கும் வழி இல்லாத நிலை.

பெரிதாய் வீட்டை காலி பண்ணச் சொல்லி விட்டாள் ராஜம் டீச்சர் ,வீடென்னவோ இப்போதே ஏற்கனவே கழுவித் துடைத்து காலி செய்தார் போலத் தான் இருக்கிறது !

இருக்கும் ஒரே நாடாக் கட்டிலை மடக்கி வாப்பா தலையில் வைத்துக் கொண்டால் அதன் மேலேயே ஓரம் நைந்த இரண்டு கோரைப் பாய்கள் அரிசிக் கடைபையால் உறை தைத்துப் போட்ட மூன்று தலையணைகள்,ஒரே நைலான் மூட்டையில் கட்டி வைத்து விடத் தக்க சில தட்டு முட்டுச் சாமான்கள்,மிஞ்சிப் போனால் துணிமணிகள் அடங்கிய ஒரு ஜாதிக்காய் பெட்டி எஞ்சும் ,அதை ஹமீதாக்காவே கையில் சுமந்து கொண்டு போய் விடலாம்,கிழிந்தது ,ரொம்பப் பழசானது என்று கழித்தால் மொத்தமே பத்து துணிகள் தான் தேறும் அந்தப் பெட்டியில் பிறகென்ன! தூக்கிச்சுமந்து கொண்டு இப்போதே கூட நடையைக் கட்டி விடலாம்,அதொன்றும் பெரிய காரியமில்லை தான்,ஆனால் போவதற்கு போக்கிடம் எது?!

இந்தக் கேள்வி தான் பூதம் போல வீட்டில் மூவரையும் பயம் காட்டிக் கொண்டிருந்தது.

ரஷீதா வீட்டுக்கு ...!

நினைத்தமாத்திரத்தில் ஹமீதாக்காவுக்கு பழைய சோறு புரையேறிக் கொண்டு விக்கியது.சொம்புத் தண்ணீரை மடக் மடக்கென்று குடித்து விட்டு உச்சந்தலையை இடக்கையால் படீர் படீர் என தட்டிக் கொண்டாள்.கண்ணில் நீர் வரும் அளவுக்கு புரையேறி தொண்டை கமறியது ;

என்னடி பொண்ணு நீ ! இப்பிடியா புரை ஏறிப் போற அளவுக்கு வட்டிலப் பார்க்காம சோத்த முழுங்குவ !? பாட்டி தான் ...ஹமீதாக்காவைத் தேடிக் கொண்டு சமையல் கட்டுக்கே வந்து விட்டாள்.

சம்பிரதாயத்துக்காக ...

"வாங்க பாட்டி ...இப்ப தான் வந்தீகளா?"

என்று கேட்டுக் கொண்டே
சாப்பாடு கொள்ளாமல் வட்டிலை கொல்லை கிணற்றடியில் போட்டு விட்டு கை கழுவிக் கொண்டு வந்தாள் ஹமீதாக்கா .

அதற்குள் கால் மூட்டைப் பிடித்துக் கொண்டு கொல்லைப் படிக்கட்டில் அமர்ந்த பாட்டி;
"அடியாத்தி வலி இந்தப் பிடுங்கு பிடுங்குதே ...இந்தா இந்த தைலத்தை போட்டு கொஞ்சம் நீவி விடேண்டி அமீதா "
ஹமீதாக்கா பாட்டில் மூடியை திறந்து கொண்டிருக்கும் போதே ... பாட்டி ;
"ஏன் அமீதா ...வீட்டக் காலி பண்ணச் சொல்லிப்பிட்டாளாமே எம்மக,வந்து எறங்குனதும் அவ சொன்னதை கேட்டோடனே எனக்கு ரொம்ப மனத் தாங்கலா ஆயிடுச்சுடி அமீதாக்குட்டி "

"என்னடி இது உங்களுக்கு வந்த கேடு! என்னப்பனே ஈஸ்வரா கிணற்றுத் திண்டில் சாய்ந்து கொண்டு பாட்டி கொஞ்சம் சோகம் போலக் காட்டிக் கொண்டு தான் இதை சொல்லி இருக்க கூடும்;

ஹமீதாக்கா பதில் சொல்வாள் என்று பாட்டி நினைத்திருக்களாம். பதிலுக்காக அவள் முகத்தையே பார்த்துக் கொண்டிருந்தாள் ,

"காலி பண்ணிட்டு எங்க போகப் போறீங்க ரஷீதா வீட்டுக்கா !?"

அடுத்த கேள்வி பாட்டியிடமிருந்து ;

"பேசாம ரஷீதா வீட்டுக்காரனுக்கே ஒன்னையும் கட்டிக் கொடுத்து குடும்பமா அங்க போய் உட்கார்ந்துக்கலாம்னு நினைக்கார உங்க வாப்பா !?" துப்புக் கெட்ட மனுசன்னா அது உங்க வாப்பா தான் . விசமத்துடன் பதிலை எதிர்பாராமல் பாட்டி பேசிக் கொண்டே இருக்கக் கண்டு ;


ஹமீதாக்காவுக்கு பாட்டியை தர தரவென இழுத்து வெளியில் தள்ளி கதவைப் பூட்டி விட்டு ஒரு மூச்சு ஓவென்று அழுது ஓயவேண்டும் போல ஒரே ஒரு கணம் தோன்றி மறைந்தது .

மிஞ்சி மிஞ்சிப் போன வாடக எம்புட்டு தரிங்க மாசம் 600 ரூவா அதுக்கும் ...ஆறு மாசமா ததிங்கனத்தோம்னா எப்டி சகிப்பாங்க....அதான் போகச் சொல்லிப்பிட்ட போல எம்மக ...சரி விடு யாரோ மிலிட்டரிக் காரன் குடும்பமாம் 1200 ரூவா க்கு சரினுட்டாங்கலாம் அடுவான்சு 20 ,000௦௦௦ ரூவான்னா பார்த்துக்கோ ,
உன் வாப்பா தருவாரா அவ்ளோ பணம்?!

நான் சொல்றதக் கேளு புத்தியாப் பொழைக்கப் பாரு.பேசாம ரஷீதா வீட்டுக்கு போய்டுங்க ,முடிஞ்சா அவ புருஷனையே கட்டிக்கோ ...ஊர் உலகத்துல நடக்காத கதையா!

அதற்கும் ஹமீதாவிடம் பதிலில்லாமல் போக

"என்னடி அமுக்கினி மாதிரி பேசாம உட்கார்ந்திருக்க ...சத்தமே காணோம்"

.பாட்டி என்னவோ ஹமீதாவுக்கு தான் நல்லதொரு உபகாரம் செய்து விட்ட நினைப்பில் சற்று உரக்கவே கேட்டு ...மு...டிக்..க....கூட இல்லை ;

அரிசி புடைக்கும் முறத்தால் ஹமீதா பாட்டியை முழங்கால் ...தோள்பட்டை தலை என்று பேதம் பிரிக்கவே பிடிக்காதவள் போல சாத்து சாத்தென்று சாத்த ஆரம்பித்திருந்தாள் .

அரண்டு போன பாட்டியின் ஓலம் தெரு முக்கு தாண்டி கேட்டிருக்க கூடும் .

ஆனால் அசரவில்லை ஹமீதாக்கா.

தடுக்க வந்த உம்மாவுக்கு காலால் எட்டி ஒரு உதை. வாப்பாவுக்கு நல்ல செந்தமிழில் அர்ச்சனை ,இத்தனைக்குப் பின் கிட்டே வர ராஜம் டீச்சர் என்ன பைத்தியமா!?

ஹமீதாக்காவுக்கு என்ன ஆச்சு!

ஒருத்தருக்கும் தெரியாது தான் .

ஆனால் தெரிந்தார் போலத் தான் தங்களுக்குள் தினம் பேசிக் கொள்கிறார்கள்.

"அவளுக்கு பேய் பிடிச்சிருக்கு ."

அவளுக்கு சித்த பிரமை ...

அவளுக்குப் பைத்தியம்...

அவள முனி அடிச்சிருச்சு etc ...etc .

நீங்க சொல்லுங்க ஹமீதாக்காவுக்கு என்ன தான் ஆச்சு ?!

Monday, August 9, 2010

அட்ரஸ்...

ஆலங்குலத்து தாத்தா இறந்து விட்டார் என்று தந்தி வந்தது.

இரண்டு மூன்று வருடங்களுக்கு முன்னால் பார்த்த தோற்றம் தான் நெஞ்சில் நிழலாடியது ; சமீபத்தில் அவரைப் பார்க்க நேரவில்லை.

பாட்டி திக்கித்து துக்கித்து உட்கார்ந்தாலும் புலம்பிக் கொண்டே தான் இருந்தாள்...என்ன மனுஷன் ? ...எப்பிடிச் செத்தாரோ? சாமான்யமா போற உசுரா அது?!

தங்கையின் முகம் பார்த்தேன் தாத்தாவின் இறப்புக்காக அவள் நிறைய அழப் போகிறாளோ என்று!

சோகம் போல உட்கார்ந்திருந்தாலும் அழக்காணோம்...எனக்கும் தந்தி பார்த்த கணத்தில் ...என்ன முயன்றும் உடனே பட்டென்று கண்ணீர் தெறிக்கக் காணோம் தான்.

நெடுஞ்சாலையின் மேலிருக்கும் வீடென்பதால் வெளிப்புற குட்டிக் காம்பவுண்டில் உட்கார்ந்து கொண்டு சாலையில் விரையும் ரூட் பஸ்களையும் லாரிகளையும் வேடிக்கை பார்ப்பதைப் போல துக்க நேரத்தில் கொஞ்சத்தை கரைக்க யத்தனித்தேன் .

ஐந்து வயதில் ஆலங்குலத்து தாத்தாவோடு சாத்தூர் ராஜா ஆசாரியிடம் காது குத்திக் கொள்ளப் போனது நன்றாய் நினைவில் இருக்கிறது.ஒரே தடவையில் காது குத்தி இலைத்தோடு போட்டு விட்டாலும் கூட காது புண்ணாகி புண்ணாகி சீல் வைக்கவே அப்படியே கொஞ்சநாள் விளக்கு மாற்றுக் குச்சி உடைத்து காதோட்டையில் சொருகி புண் ஆறியதும் மறுபடி ராஜா ஆசாரி வீட்டுக்கு போவோம் நானும் தாத்தாவும்.

முதல் மரியாதை சிவாஜி சாயலிருக்கும் தாத்தாவுக்கு; கக்கத்தில் ஒரு புத்தம் புது மஞ்சள் பையை இடுக்கிக் கொண்டு வெள்ளைத் துண்டை உருமாக்கட்டாய் கட்டிக் கொண்டு சந்தன நிற சட்டையும் வெள்ளைக் கதர் வேட்டியுமாய் புறப்பட்டு வருவார்.

"மாமா இந்தப் புள்ள ரோட்ல அங்கிட்டு இங்கிட்டு திங்கு திங்குன்னு ஓடுவா...பாத்துக் கூட்டிட்டுப் போயிட்டு வாங்க "

என்றவாறு பாட்டி அவரோடு தன் கையால் வெகு அருமையாக தலை நிறைய எண்ணெய் கவிழ்த்து பின்னி விட்ட கோண வகிட்டு ரெட்டைச்சடையுடன் என்னை அனுப்புவாள்.

பின்னாட்களில் ராஜா ஆசாரியிடம் இரண்டு மூன்று முறை காது குத்திக் கொள்ளும் பெருமைக்காக அப்போது ஆலங்குலத்து தாத்தாவோடு டவுன் பஸ்ஸில் ஏறி ஆசாரி வீட்டுக்குப் போயிருக்கிறேன் நான்.ராஜா ஆசாரி வீடு என்று ஒரு வீடு இப்போதும் சட்டென்று ஞாபகத்தில் வந்தாலும் அந்த வீட்டுக்கு உள்ளே ஒருநாளும் நான் போனதில்லை.

வெளியே கருங்கல் பாவிய பெரிய திண்ணை இருக்கும் பெரிய நீளமான வாசல் படிகளை மிதித்து ஏறி அந்தத் திண்ணையில் உட்கார்ந்தால் வெயிலுக்கு குளு குளுவென்று இதமாய் இருக்கும் ,எனக்கு வெள்ளை வேட்டி சட்டையில் எல்லைக்கருப்பண்ணசாமி போல சிடு சிடு முகம் காட்டும் ராஜா ஆசாரியைக் கண்டு கொஞ்சம் பயம் இருந்தாலும் , ஜிலு ஜிலுப்பான அந்த திண்ணையில் உட்கார ரொம்பப் பிடித்திருந்தது அந்நாட்களில் .என்னைப் பொறுத்தவரை ராஜா ஆசாரி வீடென்றால் இப்போதும் அது கரும் பளிங்கு போல மினுங்கி குளுமையூட்டும் அந்த திண்ணை மட்டும் தான் ,திண்ணை தாண்டி உள்ளே நீளும் வீடாகிய அறைகளைக் குறித்து அலட்டல்கள் எதுவும் மனதில் பதியவில்லை .

ஆலங்குளத்தை விட்டு விட்டு ஆசாரிக்குத் தாவிய மனதை இழுத்துப் பிடித்து மீண்டும் தாத்தாவுடனான சம்பவங்களை கோர்க்கத் தொடங்கினேன் .ஆலங்குலத்து தாத்தா அருமையான தவசுப் பிள்ளையாகவும் இருந்தார் எங்கள் வீட்டு விஷேசங்களில்,அவரே சமையல் ஆட்களுடன் வேண்டி விரும்பி சேர்ந்து கொள்வார். சாப்பாட்டில் அத்தனை பிரியம் மனிதருக்கு.

எண்ணெய் மிதக்கா விட்டால் எந்தக் குழம்பும் ருசிக்காது என்று நம்புபவர் அவர்.
ஆடு,கோழி,காட்டுப் பன்றி ,ஸ்ரீவில்லிபுத்தூர் பக்கத்து காடுகளில் இருந்து தப்பி வந்து லாரியில் அடிபட்டு செத்த நரியின் கறி ,எப்போதேனும் வயலில் சிக்கும் மயில் ,அவ்வப்போது அவரே பிடித்து வரும் முயல் கறி,வாரம் இருமுறை மீனும் கருவாடும்...இப்படி தனி வயிரானாலும் தன் வயிற்றை அட்டகாசமாய் பல ஐட்டங்களைப் போட்டுத் தாக்கி வாடாமல் வனப்பாய் கவனித்துக் கொண்டவர் தாத்தா .

அவர் சேவல் (மீனை சேவல் என்றும் சொல்வார்கள் ஏனோ!) குழம்பு வைத்தால் எங்கள் தெரு தாண்டி அடுத்த தெருவும் கூட மணக்கும்,அப்போதெல்லாம் ஒட்டு வீடுகள் தானே!காற்றுக்கென்ன வேலி?

தக்காளி பஜ்ஜி ருசிக்க ருசிக்கச் செய்வார்.நெய் வாங்க காசில்லா விட்டால் தஞ்சாவூர் நாயக்கர் கடையில் அடி மண்டியோடானாலும் பரவாயில்லையென்று உள்ளங்கை குவித்து பிடித்து ஒரு முட்டை நல்லெண்ணெய் விட்டு உண்டால் தான் பருப்பு சாதமே ருசிக்கும் அவருக்கு.

உண்டு முடித்த மட்ட மத்தியானத்தில் அவர் வீட்டு சுண்ணாம்புத் திண்ணையில் சாய்ந்து கொண்டு தடித்த கருப்பு சட்டமிட்ட கோழி முட்டை லென்ஸ் கண்ணாடி மூக்கில் சரிய சரிய பெரிய எழுத்து போஜராஜன் கதை படிப்பார்,அசைவ சாப்பாடென்றால் என்ன உல்லாசமோ ! அன்றைக்கு மட்டும் தெரு பிள்ளைகள் எல்லோரையும் கூட்டி வைத்துக் கொண்டு கதை சொல்வார்,மற்ற நாட்களில் கதை சொல்ல சொல்லி நாங்கள் யாரும் நச்சரித்தால் தன் உருமாலைக் கழட்டி சுழட்டி சுழட்டி வீசி "போங்க கழுதைகளா தூங்க விடாம...மனுசன நச்சரிச்சுக்கிட்டு 'என்று விரட்டுவார்.

இப்படி விதம் விதமாய் பசிக்கு மட்டும் இல்லாமல் ருசிக்கு உண்ணும் அந்த ஒற்றை ஜீவன் தூரத்து உறவென்றாலும் கூட ரொம்பப் பக்கத்தில் இருந்ததால் சொந்தத் தாத்தாவாகத் தான் எங்களால் நினைக்கப்பட்டுக் கொண்டிருந்தார்.

அவர் ஏன் துத்தநாகத்தை கரைத்துக் குடித்தார் !

வானம் பார்த்த பூமி .

மழை இல்லை விளைச்சலும் இல்லை .

குவைத்தில் இருக்கும் மகன் குவைத் பற்றி எரிந்ததில் போட்டது போட்டபடி ஓடி வந்தார்.அப்பா வீட்டுக்கு அல்ல ,மனைவி வீட்டுக்கு. ஓரிரு முறை அப்பாவை பார்க்க வந்தார் ,செம்பட்டை அப்பாவை பாசமாய் பார்க்க வந்து போனதில் ஆலங்குலத்து தாத்தாவின் ஒன்னரைக் குழி சொந்த பூமி பட்டாளத்து நாயக்கர் பெயரில் பட்டாவானது .

எலி வலையானாலும் தனி வலை,தனி வலையானாலும் தன் வலை ,என்றிருந்த மகராசன் .வீட்டைக் கூடை மகன் அடமானம் வைக்க உள்ளுக்குள் ஒடுங்கித் தான் போனார்.ஆனாலும் கெத்து விடாமல் இருக்கவும் கொஞ்ச நாட்கள் முயன்று பார்த்தாராம். அப்போது அம்மாவுக்கு வேலை கிடைத்து நாங்கள் மானாமதுரைக்குப் பொட்டி கட்டியிருந்தோம். கூடவே பாட்டியும் தாத்தாவும் .

ஆத்திர அவசரத்துக்கு ஒரு டம்ளர் ரசமோ,ஒரு கிண்ணம் பருப்போ ,கொஞ்சம் சோறோ,வெஞ்சனமோ வாங்கிக் கொள்ளலாம் கூடவே பாடு பஞ்சம் என மனசை ஆற்றிக் கொள்ள பேச்சுத் துணைக்கு இருந்த இந்த உறவும் அற்றுப் போக அவர் நிர்கதியானார்.

மகன் கடனில் இருக்க ...மகள் யாரோவாகிப் போக ...வந்த இடத்து சொந்தங்களும் தூரமாகிப் போக ;

கடைசி கடைசியாய் பெருமாள் சித்தப்பா மகள் சடங்குக்கு பள்ளிக்கு லீவு போட்டு விட்டு அம்மா ஊருக்குப் போகையில் தாத்தா அம்மாவைப் பார்த்து ஆசையாய் ஓடி வந்து பேசினாராம்.

அம்மா கண் கலங்க அவர் கையில் நூறு ரூபாய் நோட்டை திணித்து விட்டு

"வாரேன் சித்தப்பா பஸ்சுக்கு லேட் ஆச்சு "

; என்று ஓடி வந்து பஸ் ஏறியதை அம்மாவே சொல்லக் கேட்டோம் அன்றொரு நாள்.

போகும் போதே பாட்டி அம்மாவிடம் ஒன்றுக்கு பலமுறை சொல்லி அனுப்பிய ஒரு வார்த்தை .

"மறந்தும் இந்த வீட்டு அட்ரஸ் மட்டும் கொடுத்துறாத ஆலங்குலத்து நாயக்கருக்கு" அவர் பாட்டுக்கு பஸ் ஏறி வந்துரப் போறாரு. ஏதாவது பணம் காசுன்னு கேட்டுகிட்டு "

கண்கள் கரித்துக் கொண்டு வரவில்லையா?

ச்சே என்ன பெண் நான்?!

ஊமை வலியில் சூன்யம் பார்த்துக் கொண்டு நெடு நேரம் உட்கார்ந்திருந்தேன் . அம்மாவும் பாட்டியும் எதையோ பேசிக் கொண்டே காபி அருந்திக் கொண்டிருப்பது கலங்கலாய் தெரிந்தது.இமை தட்டியதில் ஒரு துளிக் கண்ணீர் உதிர்ந்து புறங்கை நனைந்தது ;

அழுகிறேன் போல !