Thursday, January 21, 2010

White ஜோக்ஸ் ...(முறைவாசல்)



நேற்று பாப்புவை பக்கத்தில் உள்ள பார்க்குக்கு அழைத்துப் போயிருந்தேன் ,அவள் விளையாடப் போனதும் கையோடு கொண்டு போன புத்தகத்தை விரித்துக் கொண்டு அதன் மீது ஒரு கண்ணும் பாப்புவின் மீது ஒரு கண்ணுமாய் அங்கிருந்த ஒரு பெஞ்சில் உட்கார்ந்துகொண்டேன் .

சற்றுத் தள்ளி மூன்று நடுவயதுப் பெண்கள் சளசளவென்று பேசிக் கொண்டிருந்தனர்.ரொம்ப நேரமாய் பேசிக் கொண்டிருப்பார்கள் போலும்.காற்றின் தயவால் என் காதுகளிலும் வந்து விழுந்தது அவர்களது பேச்சு .

பக்கத்து வீட்டுக்காரி அவ மொறவாசல் செய்றப்போ என் வீட்டு வாசப் படியில தண்ணி தெளிக்கிறாலோ இல்லையோ நான் என் மொறவாசல் வரும் போதெல்லாம் அவ வீட்டு வாசப்படியையும் தண்ணி தெளிச்சு நல்லாப் பெருக்கி கொட்டிருவேன் .முன்னாடி ரெண்டு கூடு இழுத்து கோலம் கூட போட்டு வைப்பேன் ,அந்தப் பொம்பள ஒருநா நான் இல்லன்னு நெனச்சுக் கிட்டு நாம் போட்ட கோலத்தைப் பார்த்து இப்பிடி..இப்பிடி மூஞ்சக் காட்டுனாளா (பொறாமை பிடித்த பெண்கள் முகத்தை தோள்பட்டையில் இடித்துக் கொள்வதைப் போல பாவனை செய்கிறார் )அன்னிலருந்து கோலம் மட்டும் போடமாட்டேன்.யப்பாடி சரியான பொம்பிள அது!

இரண்டாமவர் ஆச்சர்யத்துடன் கேட்கிறார்...ஒன் வீட்டு வாசலைப் பெருக்கற சரி அவ வீட்டு வாசல்ல ஏன் கோலமெல்லாம் போட்டு வைக்கிற நீ? ஒனக்குத் தேவையா இது?எதுக்கு அவளுக்கெல்லாம் நீ தண்ணி தெளிக்கற?

அதேன் கேட்கற போ ...! அவ தண்ணி தெளிக்கற லட்சணம் பாக்கணுமே?!

என்னமோ யாரும் பார்த்துரக் கூடாதுன்னு திருடப் போறவ மேனிக்கு அப்படி அங்கிட்டு இங்கிட்டும் முழிச்சிக்கிட்டு ஒரு சொம்புத் தண்ணி கொண்டாந்து சலுப்புன்னு வாசல்ல கொட்டி தொடப்பத்தால அங்கிட்டு இங்கிட்டு வெரசி விட்டுப் போயிடுவா.இதான் மொறவாசலாக்கும்?!எங்கியும் கண்டதுண்டா?அதன் நான் ரெண்டு கோலம் போட்டு வச்சுட்டு இருந்தேன்.அதையும் கெடுத்துட்டா மவராசி.

ஒன் வீட்டு வேலையே ஓம்பதூட்டு வேளக்கிச் சமானம் ,வேண்டாதாதா செஞ்சிட்டு ஏன் பொலம்புற?(இது மூன்றாவதாக உட்கார்ந்து பேசிக் கொண்டிருந்த பெண்)

அவ வீட்டு வாச ,அவ எப்படியும் தெளிச்சுக்குறா ! நேரமாச்சு எந்திரிங்க போவம்.

இப்போது முதலில் பேசிய பெண்)

அதென்ன அப்பிடிச் சொல்லிட்ட. ஒழுங்கா மொறவாச செஞ்சாத்தான பூமா தேவி நம்மள நல்லாத் தாங்குவா.(!!!)

மற்ற இரண்டு பெண்களும் ஒரு நொடி "ங்கே" என்று முழிக்க தொடர்ந்த அந்தப் பெண் ...

ஆமா ...இல்லாட்டிப் போனா செத்தப்புறம் அரக்கப்பரக்க அள்ளிட்டுப் போயி இல்ல அடக்கம் பண்ணுவாங்க.செத்த அன்னிக்கு நாம மொறவாச செஞ்ச அழக ,நன்றிய நெனச்சுப் பாத்து இவ நல்லா நம்மள சுத்தமா வச்சுக்கிட்டானு அந்த பூமா தேவி நம்மள நல்லாக் கெடக்க வச்சு நிதானமா அனுப்புவா.இல்லாட்டிப் போனா வெரசா வெரசமா அள்ளிட்டுத் தான் போவாக .

இந்த இடத்தில் எனக்குச் சிரிப்புப் பொத்துக் கொண்டு வர அவர்களறிய சிரித்து விட்டேன் போல பேசிக் கொண்டிருந்த பெண்மணி என்னைத் திரும்பிப் பார்த்து விட்டு சங்கோஜமாய் முழித்து விட்டு குரலைத் தாழ்த்திக் கொண்டார்.

வீட்டு வாசலை சுத்தமாகப் பராமரிக்க வேண்டும் என்ற அந்தப் பெண்ணின் எண்ணம் சிரிப்புக்குரியது அல்ல. பாராட்ட வேண்டிய விசயமே. ஆனாலும் வெள்ளந்தியாய் அதற்கு அவர் கொடுத்த விளக்கம் என்னை வெகுவாய் நகைப்பில் ஆழ்த்தியது.வைட் ஜோக்ஸ் னா வெள்ளந்தி ஜோக்ஸ் ன்னு வச்சிக்கலாம் மக்களே.
நோட்:
படம் கூகுளில் தேடி எடுத்தது. நன்றிகள் இப்படத்தை அப் லோட் செய்தவர்களுக்கு.

12 comments:

அமிர்தவர்ஷினி அம்மா said...

ஒழுங்கா மொறவாச செஞ்சாத்தான பூமா தேவி நம்மள நல்லாத் தாங்குவா.(!!!)

:)))))))))))

வெள்ளந்தி ஜோக்ஸ் நு நீங்க சொன்னது முற்றிலும் சரியே

நட்புடன் ஜமால் said...

முறைச்சிக்காம இருந்தா சரிதான்

-----

நல்லா கேக்குதுங்க காது ...

Vidhoosh said...

how innocent... in chennai???? !!!!!!!!!!!!

Unknown said...

பக்கத்து வீட்டுக்கு கோலம் போட்டா பூமாதேவி என்ன தருவான்னு நீங்க கேக்கலையா??

அண்ணாமலையான் said...

உங்களுக்கு மூனாவது கண் இருக்குது, இல்லேன்னா பாப்பு மேல ஒரு கண், புத்தகத்துல இன்னொரு கண் அப்புறம் அந்த பெண்மணி உங்கள திரும்பி பாத்தாங்கன்னு கவனிக்க மூனாவது கண்.. வைக்க முடியுமா? கண்டிப்பா கடவுள் அவதாரம்தான்... (ஒட்டுக் கேக்கறத கூட ஒரு பதிவா போடலாம்னு இப்ப நான் கத்துக்கிட்டேன்..) வாழ்த்துக்கள்..

அண்ணாமலையான் said...

நல்லா காது கேக்குது உங்களுக்கு..

அது சரி(18185106603874041862) said...

ட்ரான்ஸ்லேஷன் நல்லாருக்கு...:0)))

(ஆமா, என்ன புக் படிச்சீங்க?? நிராயுதபாணியின் ஆயுதங்களா?)

சந்தனமுல்லை said...

.அதென்ன அப்பிடிச் சொல்லிட்ட. ஒழுங்கா மொறவாச செஞ்சாத்தான பூமா தேவி நம்மள நல்லாத் தாங்குவா.(!!!)

மற்ற இரண்டு பெண்களும் ஒரு நொடி "ங்கே" என்று முழிக்க தொடர்ந்த அந்தப் பெண் ...
/

:-)))))

நானும்தான்...ஙே!!!

வல்லிசிம்ஹன் said...

எந்தப் பார்க்குப்பா. நானும்
போய்க் கேக்கலாமேன்னுதான். பாவம்பா. பெண்களுக்கு விடுதலை அவங்க எண்ணங்கள் கிட்டேயிருந்து வேணும்.

KarthigaVasudevan said...

நன்றி சாரதா...(சாரதா சொன்னா சரி தான் )

நன்றி ஜமால்(அதெப்படின்னு தெரியலைப்பா)

நன்றி விதூஷ் (ஆமாம் சென்னைல தான்)

நன்றி முகிலன்(நீங்களா இருந்தா கேட்ருப்பிங்க இல்ல!!! :)))

நன்றி அண்ணாமலையான்(நான் கடவுள் தெரியாதா என்ன?! :)))

KarthigaVasudevan said...

நன்றி அதுசரி(ஆமாங்க ஆமாம் நிராயுதபாணியின் ஆயுதங்கள் தான்,தலைப்பு நல்லா இருக்கு இல்ல?)

நன்றி முல்லை (ஆமாம்"ங்கே" :)))

நன்றி வல்லிம்மா (எங்க வீட்டுக்குப் பக்கத்துல இருக்கற பார்க்,வாங்க கூட்டிட்டுப் போய் காட்டறேன் ,நல்லா கேளுங்க :)))

முனைவ்வ்வர் பட்டாபட்டி.... said...

:-))