Wednesday, July 8, 2009

உயிரோடை சிறுகதைப் போட்டிக்காக எழுதப் பட்ட சிறுகதை

சூடாமணியின் கணவர்(கள்) !?
நான் மதுசூதனன்,
இரவு தான் வைசாக் வந்தேன் ;

ஒரு தொழில் முறைச் சந்திப்புக்காக ....
படேல் வருவதாகச் சொல்லியிருந்தான் இன்று மாலை சரியாகஆறு முப்பதுக்கு ...ம்ம்...காத்திருக்கிறேன் மதியம் மூன்று மணியிலிருந்தே ?! அந்த இத்துப் போன படேல்லுக்காக அல்ல !
ஒவ்வொரு மாதமும் இப்படி ஒரு காத்திருப்பு அவசியமில்லை தான்...ஆனாலும் மனம் சொல்வதை உடல் பெரும்பாலும் கேட்பதே இல்லையே!!!
ஆர்ப்பாட்டமாகச் சிரிக்கும் பழக்கமுடைய ஆந்திர கோங்குராக்களை அவர்களின் நிறத்துக்காக மட்டுமல்ல சொல்லக் கூடாத இன்னும் பல அதிரடி சாகசங்களுக்காக அடிக்கடி ...அடிக்கடி ...அடிக்கடியும் நான் தரிசிப்பது உண்டு தான்.
சூடாமணிக்கும் தெரிந்திருக்கக் கூடும் !!!
ஒரு யூகம் தான்...
அவள் என்னிடம் இதுநாள் வரை கேட்டதே இல்லை...
சமீப காலங்களில் அவள் என்னிடம் இது விசயமாக குடைந்து...குடைந்து கேள்வி கேட்டு பெரிதாகச் சண்டை போட வேண்டும் என்ற அல்ப ஆசை என்னை பெரும் பிசாசைப் போலப் பிடித்து ஆட்டுகிறது.
அவளென்னவோ எதைப் பற்றியும் அலட்டிக் கொண்டதாகத் தெரியவில்லை.
என்னைப் பொறுத்தவரை ...நான் இதுவரை செய்ததும்...செய்வதும்...செய்து கொண்டிருப்பதும் எனக்கொன்றும் பெரிய மன ஆறுதலையோ இன்பத்தையோ...உல்லாசத்தையோ நிச்சயமாகத் தரவேயில்லை ...அதைத் தான் என்னால் நம்ப முடியவில்லை.
ஏன்???
இப்போது கூட சூடாவை செல்லில் அழைத்துப் பேசினேன். எப்போதும் போலத் தான் பேசினாள் ;

டிபன் சாப்டிங்களா ?கொண்டு போன திங்க்ஸ் எல்லாம் பத்திரம்...போன தடவை மாதிரி வாட்சை ஹோட்டல் பாத்ரூமுக்குள்ள வச்சிட்டு டிரெயின் ஏறிடாதிங்க .

நான் எனக்குள் சிரித்துக் கொண்டேன் ...இந்த முறை வாட்ச் இல்லை...சூடாவின் காசுமாலை !!!???

இது சூடாவுக்குத் தெரிந்திருக்க நியாயமில்லை.அவள் செல்லில் என்னுடன் பேசிக் கொண்டிருக்கும் போது அவளருகில் வேறு யாரோ பேசிக் கொண்டே இருக்கும் அரவம் எனக்குக் மகா எரிச்சலைத் தந்தது.

யாராக இருக்கும் ?

அவளிடமே கேட்டேன் .

என் ஃப்ரெண்டு சித்ராவும் அவ ஹஸ்பண்டும் வந்திருக்காங்க ...நாங்க பேசிட்டு இருக்கும் போது தான் நீங்க கூப்பிட்டிங்க ...வச்சிடவா ?நானென்னவோ அவர்களுக்கு இடைஞ்சல் போல அவள் இப்படிக் கேட்டது எனக்கு கொஞ்சமும் பிடிக்கவில்லை. கோபத்தை அடக்கிக் கொண்டு செல்லை அணைத்தேன்.

படேல் எங்கே போய் ஒழிந்தான் ?மணி ஏழு ...சூடாவின் மேல் பொங்கிய கோபத்தை இவனிடம் கொட்டலாம் என்று யோசிக்கும்போதே அறைக்கதவு தட்டப் பட்டது .

எஸ்...கம் இன் ...

படேல் இல்லைதிருப்பதி லட்டு போல திருப்தியாய் ஒரு சின்னப் பெண் .

கண்களில் நிறைய அப்பாவித் தனம் தெரிந்தது.மிரட்சி எல்லாம் இல்லை.ஒருவேளை இதெல்லாம் அவளுக்குப் பழகிப் போன ஒன்றோ என்னவோ ?!வா ...என்றேன். வந்து அருகில் உட்கார்ந்து கொண்டாள்.

அநேகமாய் பள்ளி மாணவியாய் இருக்கலாம் என எண்ணிக் கொண்டேன் ,அவளிடம் அதெல்லாம் கேட்கவில்லை நான் ...அதுவா முக்கியம் ?!

தான் அணிந்திருந்த சல்வாரின் மேல் துணியை எடுத்து கட்டிலில் வீசி விட்டு ... ஏமி சார் ...ஸ்டார்ட் சேஸ்த்தமா? என்று பழக்கி வைத்த மோகனப் புன்னகையும் வசீகரப் பார்வையுமாய் அந்தப் பெண் என்னை நெருங்கி வர...

இரு...இரு...என்ன அவசரம்? படேல் முன்னாடியே விவரம் சொல்லிக் கூட்டிட்டு வரலையா உன்னை என்று அவளை விலக்கி நிறுத்தினேன். அவள் என்னைப் புதிராகப் பார்த்துக் கொண்டே பக்கத்தில் இருந்த மோடாவில் அமர்ந்து கொண்டு கால்களை ஒயிலாகத் தூக்கி கட்டிலில் போட்டுக் கொண்டாள்.

எனக்கு சூடாவுடனான முதல் இரவு ஞாபகத்தில் மிதந்து நழுவியது. சொன்னால் நம்பமாட்டீர்கள்!!! எனக்கும் அது தான் முதல் இரவு?!

கல்யாணமான புதிதில் சூடாவைப் பிரிந்திருப்பது எனக்கு கடுங்கோபத்தைத் தரும் நிகழ்வாக இருந்தது. சதா சர்வ காலமும் போகும் இடங்களுக்கெல்லாம் அவளை கூடவே கூட்டிக் கொண்டு அலைவது என்பது நடைமுறைக்கு சாத்தியப் படவில்லை. என் வியாபார நிமித்தம் நான் மாதத்தில் குறைந்த பட்சம் ஒரு வாரமேனும் அவளைப் பிரிந்தே ஆக வேண்டிய துரதிர்ஷ்டம் அப்போது.

முதல் ஆறுமாதம் நான் இப்படிப் புறப்படும் போதெல்லாம் அவள் கண்ணைக் கசக்கினால் அணைத்துக் கொஞ்சி அவள் சிணுங்கலை ரசித்து...முத்தங்களால் அவள் கண்ணீரைத் துடைப்பது ஒரு ஜாலியான விளையாட்டைப் போல பரவசமாகத் தான் இருந்தது.

அதுவே தொடர் கதையான போது ? எனக்கு என் வியாபாரத்தின் மேல் கோபம் வந்தது...சிறிய அளவில் தொடங்கி படிப் படியாக வளர்த்து...வளர்ந்து இப்போது என்னை நகரில் ஒரு பிரபலஸ்த்தனாக ஆக்கி வைத்திருக்கும் என் சொந்த வியாபாரத்தை எப்படி என்னால் புறக்கணிக்க முடியும்?

சூடாவையும் புறக்கணிக்க முடியாது தான்!

தொடர்ந்த பயணங்களில் நேர்ந்த பிரிவுகளில் சூடாவின் எதிர்பார்ப்புகளுக்கு என்னால் ஈடு கொடுக்க முடியவில்லை என்று தான் நினைக்கிறேன். அவள் என்ன எதிர்பார்க்கிறாள் என்பதே எனக்குப் புரியாமல் போனது தான் பெரும் துக்கமாகிப் போனது.

அவளது கவனம் என்னிலிருந்து துளித் துளியாகக் களைய நானே அனுமதித்தது போலத் தான் ஆகி விட்டது.

அவளுக்கு ஓவியத்தில் கொஞ்சம் ஈடுபாடு இருந்தது.அடிக்கடி எதையோ வரைந்தேன் என்று எடுத்துக் கொண்டு வந்து காட்டுவாள்.அந்த நேரம் எனக்கு ஏதோ வேலை இருக்கும்...இருந்து கொண்டே இருக்கும் வார இறுதிகளில் முழு ஓய்வு என எனக்குத் தூக்கம் பெரிதாகிப் போகும் . மேலோட்டமான எனது வெற்றுப் பாராட்டுக்கள் அவளுக்கு சோர்வையும் வெறுப்பையும் கொடுத்திருக்கக் கூடுமே என்னவோ?

அவளுக்கென சில நண்பர்களை சம்பாதித்துக் கொள்வதென அப்போது தான் அவள் தீர்மானித்திருக்கக் கூடும்.

சூடா...என் சூடாமணி .அவளைப் பிரிவதெல்லாம் என்னால் முடியவே முடியாத காரியம் . அதிலும் மணி...மணியாய் ரத்ன விக்கிரகம் போல அருமையான இரண்டு பெண் குழந்தைகள் எங்களுக்கு .சூடாவைப் போல ஒருத்தி ...என்னையே உரித்துக் கொண்டு இன்னொருத்தி. பிளஸ் டூவும் ... ஒன்பதாம் வகுப்புமாக அவர்கள் இருவரும் ஸ்கூட்டியில் பறக்கும் போது பெற்ற மனம் ரெக்கை கட்டிக் கொண்டு கூடவே பறக்கும் தானே? வெளியில் இருந்து பார்ப்பவர்களுக்கு "என் குடும்பம் குங்குமச் சிமிழ் "தான்.

போதுமான பேங்க் பாலன்ஸ் ...சூடாவின் நகைப் பெட்டி நிறைக்க...நிறைக்க வைரங்களும் உண்டு. பெண்கள் இருவருக்கும் போதுமான சேமிப்பு. சொந்தங்களின் மத்தியில் ஆரவாரமான வரவேற்ப்பு ,வாழவேண்டும் என்ற ஆசையை ஏற்ப்படுத்தும் அழகழகான இரண்டு பெண் குழந்தைகள் .குறையேதும் இல்லை தான் பார்ப்பவர் கண்களுக்கு .

பிறகென்னடா குறை உனக்கு என்கிறீர்கள் தானே? என் சூடா என் பக்கத்தில் தான் இருக்கிறாள் ...ஆனால் வெகு தூரமாகிப் போய்விட்ட பிரமை எனக்கு , பேசிக் கொண்டிருக்கும்போதே துண்டிக்கப் படும் எனது வார்த்தைகள்...நான் ஏதும் கோபப் பட்டுத் திட்டினாலும் புறக்கணிக்கப் படும் எனது கோபங்கள் .வலியப் போய் காதலாகப் பேசத் துவங்கினாலும் பத்தே நிமிடங்களில் தூங்கி விடும் அவளது அலட்சியம் .

எங்கே என் சூடா ?

சூடி ...சூடி என்று அவளை அழைத்துக் கொண்டு ஒரு ஓவிய நண்பன் வருவான்வீட்டுக்கு ..அவனென்னவோ இந்தியாவிலேயே பெரிய ஓவிய மேதையாம் ,சிரிக்கச் சிரிக்கப் பேசி தன் கையால் சமைத்துப் போட்டு சாப்பிட வைத்து பிரமாதமாகக் கொண்டாடுவாள் அவனை ;

சார் டைம் ௭.30 அய்போத்துந்தி ...நெக்ஸ்ட் கஸ்டமர் waiting ...மீறு ஒஸ்தாரா...லேதண்டி ?

ஆந்திர கோங்குரா சின்னக் குரலில் கடுப்படித்தாள். சும்மாவா பின்னே வெறும் ஒருமணி நேரத்துக்கு இருபதாயிரம் கொடுத்தல்லவா இவளை எனக்காக புக் செய்தான் படேல் .

சூடாவுக்கு நவீன மோஸ்தர் நகைகளைக் காட்டிலும் "காசுமாலை...கல் அட்டிகை...மாங்காய் ரத்ன மாலை ,கல் மாலை பவள வளையல் இப்படித் தான் எப்போதும் ஆர்வம் .முத்துக்களின் மீதும் அபரிமிதமான ஈடுபாடு அவளுக்கு .

அன்றைக்கு அப்படித்தான் நான் வெளியூர் எங்கும் போகவில்லை. சூடாவையும் ,என் மகள்களையும் அழைத்துக் கொண்டு "மாயாஜால்" போகலாம் என நான் நினைத்து முடிக்கும் முன்பே அவள் ஒரு அறிவிப்புடன் என் முன்னே வந்தால்.

சமையல்காரி இருக்கிறாள்.மதிய உணவைப் பற்றிக் கவலை இல்லை.சாப்பிட்டுக் கொள்ளுங்கள் மது. வெளியில் எங்கேனும் போய் சாப்பிடுவது என்றாலும் சரி தான் ஆட்சேபனை இல்லை ஆனால் அவளிடம் லஞ்ச் வேண்டாம் என்று முன்னதாக பதினோரு மணிக்கெல்லாம் சொல்லி விடுங்கள் ....இல்லாவிட்டால் வீணாகி விடும். நான் என் ஃப்ரெண்டு அவினாஷ் பொண்ணோட பரத நாட்டிய அரங்கேற்றத்துக்குப் போறேன் ...evening வர லேட் ஆனாலும் ஆகலாம். dont mind dear.

அனுமதி எல்லாம் கேட்பதில்லை வெறும் அறிவிப்பு தான்; எனக்குக் கசந்தது. இப்படித் தானே இருந்திருக்கக் கூடும் அவளுக்கும் அவள் என்னை எதிர்பார்த்து நான் அவளோடு வர இயலாமல் போன சமயங்களில் .இப்படித்தான் என்னை சமாதானப் படுத்திக் கொள்கிறேன் பல சமயங்களில்.

திருப்பதி லட்டு இப்போது ஏறக்குறைய என்னை ஒரு அரை லூசு என்று நினைத்து விட்டிருப்பாள் போல..அவளது அசட்டையான பார்வையின் ஸ்பரிசத்தில் உணர முடிந்தது என்னால்.

பின்னே ஒரு அழகான அம்சமான பதினெட்டு வயதுச் சிட்டு ...கையெட்டும் தூரத்தில் மேல் துணியைத் தூக்கிப் போட்டு விட்டு எனக்காக தயாராக காத்திருக்கையில் உங்களுக்கு கதை சொல்லிக் கொண்டிருக்கும் என்னை அவள் பைத்தியம் என்று நினைப்பதில் தவறேதும் உண்டா என்ன?

மெல்ல அவளை நெருங்கினேன் ... நெருங்க..நெருங்க ...விபரீதமாக சூடாவையும் இப்படி யாரேனும் அவளது நண்பர்களில் சிலர் நெருங்கி இருக்கக் கூடுமோ என்று மனம் குரங்காகி முரண்டியது.

உன்னை யாரேனும் இப்படி நெருங்கி இருக்கிறார்களா சூடா ?

டெல்லியில் இருந்து ஒரு இலக்கிய நண்பன் வருவான்...சூடாவை ஜோதா என்று விளித்துக் கொண்டு ...யூ சோ ப்ரெட்டி அண்ட் போல்ட் என்று புகழ்வான் வார்த்தைக்கு....வார்த்தை .அவனைக் கண்டாலே எனக்கு வேப்பங்காய் தான்.

அவனோடும் இன்னும் சில ஆண் நண்பர்களோடும் இணைத்து வைத்து சூடாவை நான் கற்ப்பனை செய்திருக்கிறேன் பலமுறை. வெறும் கற்பனையாக மட்டுமே இருக்க வேண்டும் என்பது தான் என் ஆசை. அதனால் தான் உன்னை யாரேனும் இப்படி நெருங்கி இருக்கிறார்களா? என்றஇந்தக் கேள்வியை அவளிடம் கேட்டு விடும் மன தைரியம் எனக்கில்லை .. .

நான் கேட்டு அவள் ஆம் என்று சொல்லி விட்டால் மிச்ச வாழ்வு நரகம் .

எங்களுக்கென்ன வயது ஆகிவிட்டது? நாற்பதின் இறுதி தான்...ஏன் சூடாவுக்குக் கட்டிலில் அத்தனை விருப்பமில்லை ...அதிலும் என்னோடு மட்டும்? சித்ராவின் கணவனை பாராட்டுகிறாள் அவளிடம் ...யூ லுக்கி சித்து ...என்று அவளிடம் இருக்கும் காதல் அவள் கணவனிடம் இன்னும் குறையவே இல்லையாம். அதற்க்காகவாம்!!!

ஏன் இவள் லக்கி இல்லையா?

சூடாமணி என்னை எடுத்ததற்க்கெல்லாம் சார்ந்து நின்ற அந்தக் காலம என் கண் முன் வந்து நின்று நகைத்தது. அப்போதெல்லாம் நான் அவளை வார்த்தைகளால் பெரிதாகக் காயப் படுத்தி இருக்கிறேன்...இப்போது தான் உணர்கிறேன் .

சின்னச் சின்ன விஷயங்களுக்காக கூட என்னை கேள்வி கேட்டுக் குடையும் என் பழைய சூடாவை எப்படியோ நான் சில வருட இடைவெளியில் தொலைத்ததே தெரியாமல் தொலைத்திருக்கிறேன்.

சேர்ந்து தான் வாழ்கிறோம்.

சுவாரஸ்யம் இன்றி சில வருடங்களாய்.

நான் பிற பெண்களை நாடிப் போவது அவளுக்குத் தெரிந்திருக்கக் கூடும் .ஆனால் ஏனென்று ஒரு வார்த்தை கேட்கவில்லை.

அவள் கேட்க வேண்டும் என்று எதிர்பார்ப்புடன் தான் இப்போதெல்லாம் வெறுமனே பெண்களை புக் செய்து என்னுடன் ஒருமணி நேரம் சும்மா அறையில் உட்கார்ந்திருக்க வைத்து அனுப்புகிறேன்.

சூடாவும் அவளை என்னிடமிருந்து கவனம் களைய வைத்த அவளது நண்பர்களும் குற்றம் ஏதும் செய்யாத நல்லவர்களாகவே கூட இருக்கலாம். ஆனாலும் வக்கிரம் பிடித்த என் சிந்தனைக்கு நம்பிக்கை இல்லை சூடாவிடமும் அவளது நண்பர்களிடமும்.

ஆந்திரத்து ஜாங்கிரி ...விட்டால் எழுந்து ஓடிப் போய் விடுவாள் போல... அத்தனை குழப்பம் கலந்த பயத்துடன் என்னைப் பார்த்தக் கொண்டிருந்தாள் அவள்.

பிறகென்ன இத்தனை அழகி பக்கத்தில் இருந்தும் ஒன்றும் செய்யாமல் எதையோ யோசித்துக் கொண்டிருக்கும் ஒரு மனிதனை பாவம் அந்தச் சின்னப் பெண் " கதைகளில் வரும் சீரியல் கில்லர் " என்று யூகித்திருந்தாலும் மிகையில்லை. எதற்கு இப்படி யோசிக்கிறான் இந்த மடையன் ? கேள்வி அவளது ஒவ்வொரு அங்கத்திலும் வழிந்தது.

நான் நிதானமாக நடந்து போய் என் பெட்டியைத் திறந்து சூடாவின் காசுமாலையை எடுத்து வந்து அவளிடம் கொடுத்தேன். கூடவே சூடாவின் பட்டுப் புடவைகளில் ஒன்றைக் கொடுத்து...இதைக் கட்டிட்டு வா என்றேன். குழப்பம் கலந்த பயத்துடன் நான் சொன்னதைச் செய்தாள்.

அறையைப் பூட்டி சாவியை என் பாக்கெட்டில் போட்டிருந்ததால் அவள் வெளியில் ஓட முடியாது என்பது எனக்குத் தெரியும். அவளுக்கும் தான்.இத்தனை நேரத்தில் அவள் என்னை சைக்கோ கொலைகாரன் என்றே முடிவு கட்டியிருப்பாள் ...அவளது பயம் எனக்கு ஒரு த்ரில்லான இன்பம் அளித்தது.

அது எனக்குப் பிடிக்கும். மங்களகரமாக அலங்கரித்து தான் இந்தக் கொலைகாரன் பெண்களை வேட்டையாடிக் கொல்வான் போல அந்தச் சின்னப் பெண் இப்படித் தான் பயன்திருப்பால்.

இருக்கட்டும் ...இருக்கட்டும்...பயந்து இருக்கட்டுமே?!

அவள் புடவை கட்டிக் கொண்டு வந்ததும் காசுமாலையை நானே அவளது கழுத்தில் அணிவித்து அழகு பார்த்தேன். முன்பே வாங்கி பிரிஜ்ஜில் வைத்த மல்லிகைச் சரம் மணக்க ...மணக்க எடுத்து வந்து அவளது பின்னலில் சூட்டி முகர்ந்தவாறு மெல்ல எனக்குள் சொல்லிக் கொண்டேன்.

ஐ லவ் யூ சூடா!!!

கண்களில் என்னைக் கேளாமலே சர சரவென்று கண்ணீர் மடை திறந்து வழிந்தது. அவளைத் தான் நான் சூடா என்று அழைக்கிறேன் போல என்று அந்தப் பெண் பயத்தோடு புன்னகைக்க முயன்று தோற்றுப் போனால்.

எனக்கும் அவளைப் பார்க்க பாவமாகத் தான் இருந்தது. நான் அவளை எதுவும் செய்யவில்லை. அவளது காலடியில் உட்கார்ந்து மெதுவாக ஒவ்வொரு விரலாகச் சொடக்கு எடுத்து விட்டேன்.சூடாவுக்கு இப்படிச் செய்தாள் ரொம்பப் பிடிக்கும் என்பாள் .அந்த ஞாபகம் எனக்கு.

சூடா இந்நேரம் என்ன செய்து கொண்டிருப்பாள்? நிச்சயமாகத் தனியாக இருக்க மாட்டாள்...எனக்குத் தெரியும். அவளுக்கு அவளது நண்பர்கள் இருக்கிறார்கள்!!!

நண்பர்களா ? கணவர்களா?! நினைக்கவே கூசுகிறது தான்... ஆனாலும் இப்படித் தான் நான் நினைக்கிறேன் அவளையும் ..அவளது தனிமையை அவளிடம் இருந்து பிடுங்கி எரிந்து விட்டு என் நினைப்பை அவளிடம் இருந்து கொஞ்சம் கொஞ்சமாக விலக்கி வைத்த அந்த எதிரிகளை . மனைவியின் நண்பர்கள் கணவனுக்கு எதிரிகளா???

நீங்கள் என்னைக் கேட்கலாம்... வெளியில் இல்லை என்பேன்...உள்ளே ஆம்...ஆம்...ஆம் என்று உரக்கச் சொல்வேன் ...என்ன செய்வீர்கள்? என்ன செய்ய முடியும் உங்களால்?

சூடாமணியின் கணவர்களே ...என்ன செய்ய முடியும் உங்களால்?

அந்தப் பெண்ணின் கண்கள் கலங்கி மரண அவஸ்தையில் நெளிந்தாள் அவள் ...காலடியில் ஒரு கம்பீரமான (ஆம் பார்வைக்கு நான் அப்படித்தான்!) ஆண் அவளது பாதங்களைக் கட்டிக் கொண்டு அழுது கொண்டிருந்தாள் அவள் பாவம் என்ன செய்வாள்? தப்பித்தால் போதும் என்ற நிலை அவளுக்கு ...

சரியாக ஒரு மணி நேரம் கழிநததும் அவளிடம் இருந்த என் சூடாவின் பொருட்களை வாங்கிகே கொண்டு அவளுக்கு பேசிய பணத்தை விட அதிகமாகக் கை நிறைய நோட்டுக் கற்றைகளைத் திணித்து " போ " என்று கதவைத் திறந்து விட்டேன்.

சிட்டாகப் பறந்து என்னை விட்டு ஓடிப் போய் வெளியில் பாதுகாப்பான தூரத்தில் நின்று கொண்டு என்னைப் பார்த்து தலையில் அடித்துக் கொண்டு விடுதலையான சந்தோசத்துடன் ...

"போரா பிச்சிவாடா..." என்று அந்த ஹோட்டல் வராண்டா அதிரச் சிரித்துக் கொண்டு உரக்கச் சொல்லி விட்டு திரும்பி பாராமல் ஓடி விட்டால்.

எனக்கும் அடக்க மாட்டாமல் சிரிக்கத் தான் தோன்றியது.

சிரித்தேன்...அறையைச் சாத்திக் கொண்டு சிரித்துக் கொண்டு தான் இருக்கிறேன் இன்னும் கூட

14 comments:

நட்புடன் ஜமால் said...

ஆனாலும் மனம் சொல்வதை உடல் பெரும்பாலும் கேட்பதே இல்லையே\\

ஒரு வித்தியாசமான சிந்தனை

நட்புடன் ஜமால் said...

கொஞ்சம் நேரம் கட்டி போட்டுவிட்டது கதையோட்டம் ...

அது சரி(18185106603874041862) said...

Brilliant...just Brilliant...

அது சரி(18185106603874041862) said...

பல ஆண்களின் ரகஸியமாய் மூடி வைத்த பக்கங்களை...திறக்க முடியாத கதவுகளை...வெளியில் சொல்ல முடியாத துயரங்களை...வெளிப்படையாக திறந்துவிட்டீர்கள்....

இந்த கதை கண்டிப்பாக வெற்றி பெறும் என்று தோன்றுகிறது...வாழ்த்துக்கள்!

S.A. நவாஸுதீன் said...

நட்புடன் ஜமால் said...

கொஞ்சம் நேரம் கட்டி போட்டுவிட்டது கதையோட்டம் ...

கதையின் ஓட்டம் என்னையும் கட்டிப்போட்டது என்னவோ நிஜம்தான். வெற்றி பெற வாழ்த்துக்கள்

சாணக்கியன் said...

நல்ல நடை. விறுவிறுப்பாக இருந்தது.

சாணக்கியன் said...

உங்கள் கதையை படித்து இரண்டு நாட்கள் கழித்துதான் அந்தக் கவிதையைப் படித்தேன்... பின்னர் போட்டிக்காக எழுதப்பட்ட வேறு இரண்டு கதைகளையும் படித்தேன்.... உங்கள் கதைதான் கவிதையை அப்படியே உரித்து வைத்திருக்கிறது... நிச்சயம் பரிசு கிடைக்குமென நம்புகிறேன்... வாழ்த்துகள்!

அமிர்தவர்ஷினி அம்மா said...

excellent = அப்படின்ற வார்த்தையெல்லாம் இந்தக் கதைக்கு பத்தாது.

கண்டிப்பா இந்தக் கதை வெற்றிபெறும்.

பெற வேண்டும்.

வாழ்த்தெல்லாம் சொல்ல மாட்டேன்,
வெற்றி பெறுகின்ற கதைக்கு.........

Unknown said...

நல்லா இருந்தது...இன்னும் கொஞ்சம் சிரமப்பட்டு வார்த்தைகளை தெரிவு செய்து எழுதினால் நல்ல படைப்பு உங்களிடமிருந்து வெளிவரும் என்பது நிச்சயம்.

அமிர்தவர்ஷணி அம்மா தான் உங்களோட பதிவினை அறிமுகம் செய்தார்கள். அவர்களுக்கு என் நன்றி.

எழுதுங்க எழுதுங்க எழுதிக்கினே இருங்க பதிவுகளை...

வல்லிசிம்ஹன் said...

ஏதோ சுஜாதா கதை படிப்பது போல் ஒரு பிரமை ஏற்பட்டதுமா.
ஒரு கணவனின்
சங்கடங்கள் மனதை நெருடுகின்றன. வெகு அருமையாக
கொடுத்திருக்கிறீர்கள்.

வெற்றி பெற நல்ல வாய்ப்பு இருக்கிறது.

KarthigaVasudevan said...

நன்றி ஜமால்
நன்றி அது சரி
நன்றி நவாசுதீன்
நன்றி சாணக்கியன்
நன்றி அமித்து அம்மா
நன்றி நன்றி கிருஷ்ணப் பிரபு
நன்றி வல்லிம்மா ...

தாமதமான மறுமொழிகளுக்கு மன்னிக்கவும்...நேரமின்மையும் ...சோர்வும் தான் காரணம். தவறாகக் கருதி விட வேண்டாம்,தொடர்ந்து வாசித்து விட்டு எப்போதும் என் வலைப்பூவிற்கு வருகை தரும் சக பதிவர்களைக் குறித்து சந்தோசமாக உணர்கிறேன். உங்களது தொடர் ஆதரவிற்கு நன்றி.

தமிழ்நதி said...

நல்ல விறுவிறுப்பான நடை. கதையின் உச்சத்தை நோக்கிச் செலுத்திக்கொண்டு போகிற திறன் இருக்கிறது உங்களிடம். இந்தக் கதை வெற்றிபெறுமென்றுதான் எனக்கும் தோன்றுகிறது மிஸஸ் தேவ்.

Beski said...

அருமையான நடை, தொய்வில்லாமல்.

வாழ்த்துக்கள்.

KarthigaVasudevan said...

மிக்க நன்றி தமிழ்நதி

மிக்க நன்றி எவனோ ஒருவன்