Sunday, April 5, 2009

மாத்திரைகளும்...மருந்தும் செய்யாத மாயாஜாலம்

பானு தினமும் என்னோடு வாக்கிங் வருவாள் மாலை 4.30 க்கு ஆரம்பிக்கும் நடை 5.30 க்கு முடியும் சாவதானமாக ஒரு 15 நிமிடங்கள் காற்றாட வாக்கிங் நடக்கும் இடத்தில் போட்டிருக்கும் கல் பெஞ்சில் உட்கார்ந்து கதை பேசி விட்டு 6 மணிக்கெல்லாம் வீட்டிற்கு வந்து விளக்கேற்றி விட்டு இரவு சமையல் வேலை தொடங்குவோம்.அவளது வீடு என் வீட்டு மாடி .

இன்று வாக்கிங் வரும் போது பானு சுரத்தே இல்லாமல் நடந்து கொண்டிருந்தாள் .என்னாச்சு பானு ?என்றேன் ;அம்மா ஊர்ல இருந்து ட்ரீட்மென்ட் காக இங்க வந்திருக்காங்க ரத்னா என்றாள்.எப்போ வந்தாங்க நான் பார்க்கலையே ...உங்க வீட்ல இருந்து ஒரு சத்தத்தையும் காணோமே! கெஸ்ட் வந்தா வீடே அமர்க்களப் படுமே உன் பையன் ஓடி வந்து என்கிட்டே சொல்லி இருப்பானே இந்நேரம் "என் பாட்டி தாத்தா வந்திருக்காங்க ஆண்டி னு. இன்னிக்கென்ன ஒன்னையும் காணோம்.

ஹம்.......பானு நீள மூச்செடுத்து பின் மீண்டும் அமைதியானாள்.

பானுவின் அமைதியின் பின் என்ன இருக்குமோ என்ற யோசனையுடன் அன்றைய வாக்கிங் முடிந்தது.அவளிடம் நான் ஏனோ ...ஏன் ..எதற்கு..எப்படி என்று தூண்டித் துருவ மனமின்றி கல் பெஞ்சில் உட்கார்ந்தோம் இருவரும்.பானுவின் கண்கள் லேசாகக் கலங்குவதைப் போல தோன்றியது .சரி சொல்லும் விஷயம் என்றாள் அவளே சொல்லக் கூடும் ...ஆறுதலுக்கு கேட்கிறேன் பேர்வழியென்று அவளது மனக் கஷ்டத்தை தூண்டியது போல் ஆகி விடக் கூடாதே என்று அவளை ஆராயாமல் மேலே பறந்து கொண்டிருந்த காகங்களிலும் கீழே ரயில்வே ட்ராக்கில் தேமே என நின்று கொண்டிருந்த எருமை மாடுகளிலும் பார்வையை ஓட்டினேன் ,

ஐந்து நிமிடங்கள் கழிந்தபின் ...பானுவே சொன்னாள் .

வீட்ல வேலை எல்லாம் முடிச்சதும் கொஞ்சம் மேல என் வீடு வரை வந்துட்டுப் போயேன் ரத்னா என்று , மெல்ல புன்னகையுடன் "என்ன பிரச்சினை என்றாலும் மனசை ரொம்ப போட்டு அலட்டிக்காதே பானு .நான் நைட் சமையல் முடிஞ்சதும் மாடிக்கு வரேன் உன் வீட்டுக்கு "என்று முடித்தேன் .

ஏற்கனவே பிசைந்து வாய்த்த கோதுமை மாவு ஃபிரிஜ்ஜில் இருந்ததை எடுத்து எனக்கு மூன்று சப்பாத்திகள் என் கணவருக்கு நன்கு சப்பாத்திகள் என் மகளுக்கு இரண்டு சப்பாத்திகள் ஹாட் பாக்கில் தொட்டுக் கொள்ள பச்சைப் பட்டாணி குருமா ,கூட ஒரு சிறு கிண்ணத்தில் கெட்டித் தயிரில் துருவிய கேரட் கொஞ்சம் போட்டு கலந்த ராய்த்தா என்று எடுத்து உணவு மேஜையில் வைத்தேன் தண்ணீர் பாட்டிலும் எடுத்து வைத்த பின் ஹால் சோபாவில் உட்கார்ந்து படித்துக் கொண்டிருந்த மகளிடம் அம்மா பானு ஆண்டி வீடு வரைக்கும் போயிட்டு வரேன் ...அப்பா வந்தா ரெண்டு பேரும் சாப்பிடுங்க எனக்காக வெயிட் பண்ண வேண்டாம் ..என்று தகவல் சொல்லி விட்டு மாடிப் படிகளை கடந்தேன்.

பானு வீட்டில் நிலவிய அசாத்திய அமைதி கண்டு முதல் முறையாய் எனக்கு ஒரு மாதிரியாக ஆகி விட்டது ...பானுவின் அம்மா இதற்க்கு முன்பும் சில முறைகள் இங்கே வந்திருக்கிறார்...மகள் வீட்டுக்கு விருந்தாளியாய்...!?

மங்கள கரமான பெண்மணி ...முகத்தில் அன்பு ததும்பும்...பேச்சில் கனிவு பொங்கும்...என் அம்மாவைப் போல அவர் வேலை பார்க்கும் அம்மா இல்லை ...எப்போதும் வீடு ...வீடு..வீடு தான் அவரது உலகமாம் .

குழந்தைகள் படிப்பு...கல்யாணம் என்று ஆனதும் அவர்களது பிள்ளைகள் அவர்களது வருகை ...இப்படியே தான் அவரது வாழக்கை சுழன்றது இதை அவரது பேச்சின் மூலம் நான் கிரகித்தேன் .பானுவும் சொல்லி இருக்கிறாள் அவளது அம்மாவைப் பற்றி கொஞ்சம்...

அவளது வீட்டுக்குள் நுழைந்ததும் கண்கள் அவளது அம்மாவைத் தான் தேடின ... அம்மா அப்போது சமையல் உள்ளில் இருந்தார்கள் ...கையில் ஒரு பழந்துணி கொண்டு சமையலறை ஜன்னல்களைத் துடைத்துக் கொண்டிருந்தார்கள். பானு ஹால் சோபாவில் உட்கார்ந்து கொண்டிருந்தாள் முகத்தில் வெளிச்சமில்லை .

நான் அவளருகில் சென்று அமர்ந்தவாறு...

எப்போ வந்தீங்கம்மா ? சத்தமே காணோம் ...நீங்க வந்தா உங்க பேரன் இந்த அபார்ட்மென்ட் முழுக்க விளம்பரம் பண்ணுவானே ! இந்த வாட்டி அருவமே இல்லையே...ஊர்ல எல்லாரும் சௌக்கியம் தானே?

பானுவின் அம்மாவுக்கு நான் பேசியது ..என் விசாரணை எல்லாமே மிகத் தெளிவாக கேட்கும் தூரம் தான்...ஆனாள் அவரென்னவோ திரும்பியும் பார்க்கவில்லை. அவர் என்னைப் பார்க்கவே இல்லை போல என்று அருகே செல்ல எழுந்த என்னை ,பானு மெல்லக் கை அசைத்து என்னை அமைதியாக உட்காரும் படி தன்னருகில் இருத்தினால்.

ஆச்சர்யமாக இருந்தது எனக்கு.

சமையல் அரை ஜன்னலைத் துடைத்துக் கொண்டிருந்த அம்மா இப்போது கேஸ்

ஸ்டவ்வை துடைத்துக் கொண்டிருந்தாள் ...,நானும் பானுவும் உட்கார்ந்து பார்த்துக் கொண்டிருந்தோம் ...நாங்கள் பார்த்துக் கொண்டிருக்கும் போதே அடுத்தடுத்து பாத்திரங்கள்...தட்டுக்கள்...தம்ளர்கள் ...சமையல் மேடை ....குடம்...கிரைண்டர்....மிக்சி...பிரிஜ் ...அவன் ....எல்லாம் துடைத்து முடித்து விட்டு பிறகும் அந்த அம்மா கையில் இருந்த பழந்துணியை கீழே வைத்ததாகத் தெரியவில்லை.

என்னிடம் முகம் கொடுத்துப் பேசவில்லை ...சரி நான் யாரோ பக்கத்து வீட்டுப் பெண் ...ஆனாள் பானு அவரது மகள் இல்லையா? அவளிடமும் ஒன்றும் பேசிய பாடில்லை .நாங்கள் இரண்டு பேர் அங்கே உட்கார்ந்து கொண்டு அவரை வேடிக்கை பார்க்கிறோம் என்ற சுவாதீனமே இல்லை அவருக்கு.அவர் பாட்டுக்கு துடைத்துக் கொண்டே இருந்தார் ஒவ்வொன்றாய் ...

துடைத்தல் எல்லாப் பொருட்களையுமே ஒன்று விடாமல் துடைத்தல் கையில் இருக்கும் பழந்துணி அழுக்கு நிறைய சேர்ந்து விட்டதென்று அவருக்குத் தோன்றினால் அதை பரபரவென்று சோப்புப் போட்டுத் துவைத்து பிழிந்து ஜன்னல் கம்பியில் உலரப் போட்டு விட்டு இன்னொரு பழந்துணி கிழித்து மறுபடி கிடைத்ததை துடைக்க ஆரம்பித்து விடுவார்.

கிட்டத் தட்ட ஒருமணி நேரம் இதே கதை தான்.நானும் பயந்து தான் போனேன் இதைப் பார்த்து ; பானுவிடம் எதுவும் ஆறுதல் சொல்ல வகையின்றி ...அம்மாவுக்கு என்ன பானு ? என்றேன்!

அவளோ அடக்க மாட்டாமல் அழுது விடுபவளைப் போல முகத்தை வைத்துக் கொண்டு "அதான் தெரியலை ரத்னா ...நேத்து நைட் வந்தாங்க ...அப்போ இருந்தே இதே கதை தான்...ரஞ்சன் பாட்டிய பார்த்ததும் எப்பவும் போல ஓடிப் போய் கட்டிக்கிட்டு கொஞ்சினான். அம்மாவுக்கு அது உணரலை போல...அவன விலக்கி விட்டுட்டு அப்போ போய் கிச்சன்ல இப்படி துடைக்க ஆரம்பிச்சவங்க தான் ...நைட் தூங்கவே இல்லை ...இதே தான்...மேலே பேச முடியாமல் அவளுக்குத் தொண்டை அடைத்துக் கொண்டது.

எனக்கு எப்போதோ ஆனந்த விகடனில் மதன் கேள்வி பதிலில் படித்திருந்த "அப்சசிவ் கம்பல்சிவ் டிஸ் ஆர்டர் தான் நினைவில் நெருடியது . எங்க காட்டறீங்க ? அம்மாவை என்றேன் அண்ணா வீடு திருவான்மியூர்ல இருக்கு அங்க ஒரு டாக்டர்.

அம்மாவுக்கு வயது 65 இருக்கும் போல தெரிந்தது ...அவர்கள் டாக்டரிடம் கொண்டு பொய் அம்மாவை காண்பிப்பதில் எனக்கொன்றும் மாற்றுக் கருத்து இல்லை ...வெறும் மருந்து மாயங்களில் இந்த அம்மாள் பழையபடி மங்களம் துலங்க என்னை "வாம்மா ரத்னா " எப்படி இருக்கே ? என்று முகமெல்லாம் பளிச்சிட அழைத்து விட்டால்...எனக்கும் பரம சந்தோசம் தான் .

எனக்கென்னவோ சில ஆண்டுகளுக்கு முன் இறந்து விட்ட என் ஒன்று விட்ட பாட்டியின் ஞாபகம் தான் மனம் முழுக்க வியாபித்தது பானுவின் அம்மாவைப் பார்த்ததில் இருந்து .

பாட்டி பெரிய பணக்காரி ...அந்தக் காலத்தில் தங்கப் பல் கட்டிக் கொண்ட சீமாட்டி. விடுமுறையில் ஊருக்குப் போனால் வாயிலிருக்கும் தங்கப் பல் டாலடிக்க "எப்போ வந்தேடி குட்டிப் பொண்ணே?! என்று

அந்தப் பாட்டிக்கு இரண்டு பெண்கள் ...கணவர் நல்ல உழைப்பாளி தான்..ஆனாலும் கொஞ்சம் சோக்குப் பேர்வழி என்று என் பாட்டியும் தாத்தாவும் பேசுகையில் கேட்டிருக்கிறேன் .ஆனாலும் பணம் நிறைய இருந்ததால் நன்றாகத் தான் இருந்தார்கள் .

கடைசியில் ஒருநாள் இதே போல அந்தப் பாட்டியை அவளது மூத்த மகளான எனது ஒன்று விட்ட அத்தையின் வீட்டுக்கு ட்ரீட்மென்ட்க்கு கூட்டி வந்தார்கள் ஒருநாள் விடிகாலையில் ,

பாட்டி இயல்பான நடவடிக்கையில் தான் தோற்றம் தந்தாள் ...ஆனால் இருந்தார் போல் இருந்து தன்னை யாரோ செய்வினை வைத்து விட்டார்கள்...செத்துப் போன தன் மாமியார் வந்து மிரட்டுகிறாள் நேரில் ஆவியாய் ...ஒரு பூனை கிட்டே போனால் கூட "ஐயோ இது என் மாமியார் தான் என்னை அவளோடு க்கூட்டிப் போக வந்து விட்டால் ...என்று அலறுவார் ...அத்தையும் ...மாமாவும் என்னென்னவோ வைத்தியம் எல்லாம் செய்து பார்த்தார்கள் ...பாட்டிக்கு குணமான பாடில்லை.

உச்ச கட்டமாக தங்கப் பல் டாலடிக்க சிரித்து வரவேற்கும் பாட்டி பல்லெல்லாம் கொட்டி முடி எல்லாம் சடை பிடித்து திரி ...திரியாகத் தொங்க தன் உடைகளைத் தானே கிழித்துக் கொண்டு உளரும் நிலை வந்ததும் ஒருநாள் திடீரென்று செத்துப் போனார்கள்.

ஊருக்குள் பேசிக் கொண்டார்கள் ...அந்த பாட்டிக்கு தென்னை மர மாத்திரை கொடுத்து விட்டார்கள் வீட்டினரே என்று...கருணைக் கொலையா இது என்று மனம் அதிர்ந்தது சில விநாடிகள் .

பானுவின் அம்மாவைக் கண்டதும் எனக்கு ஏன் அந்தப் பாட்டி ஞாபகம் வந்ததோ?!

ஆனால் கண்களில் நீர் தளும்பி நீழே உதிரட்டுமா என்றது ..பானுவிடம் என்ன சொல்ல என்று புரியாமல் மாடிப் படிகளைக் கடந்து கீழே என் வீட்டுக்கு வந்தேன்.

வெறும் மாத்திரைகள்..........மருந்துகள்.....டாக்டர்கள்......வேறு....வேறு......வேறு ...டாக்டர்கள்.

வெறும் மாத்திரைகள் ...மருந்துகள் ....என்ன செய்யக் கூடுமோ ?!!!

இது ஒரு பயங்கர நோயா ? என்ற சந்தேகமே என்னை அரித்துக் கொண்டிருந்தது.

மறுநாள் என் மகளுக்கு கோடை விடுமுறை விட்டார்கள் , இரண்டு வருடங்களாய் வேலைப் பளு ...மகளின் படிப்பு ...இதர திறமைகளை வளர்த்துக் கொள்ளும் படிப்புகள் ...பாட்டுக் கிளாஸ்...டான்ஸ் கிளாஸ் ...கம்பியூட்டர் கிளாஸ் ...ஸ்கேட்டிங் கிளாஸ் எல்லாம் மூட்டை கட்டி வைத்தோம் குறைந்த பட்சம் ஒரு மாதத்துக்கு,

என் கணவர் அவரது அலுவலக வேலைகளை எல்லாம் முடியுமட்டும் விரைவாக்கினார்...முடித்தார் .பதினைந்து முழுநாட்கள் விடுமுறை கிடைத்தது அவருக்கு.

இதோ கிளம்பி விட்டோம் எங்கள் பெற்றோரைக் காண ...இனி விடுமுறைக் காலங்கள் அவர்களுக்கே .

அம்மா...அப்பா...மாமியார்...மாமனார்...எல்லோரோடும் மனம் விட்டுப் பேசலாம்...பேசிச் சிரிக்கலாம் அவர்களை சிரிக்க வைக்கலாம்.பேரன் பேத்திகளோடு விளையாடலாம் ..விளையாட வைக்கலாம் ...எங்கே போய் விடப் போகின்றன? டான்ஸ் கிளாசும் ...கம்பியூட்டர் கிளாசும் சும்மா ஒரு மாத இடைவெளியில்?!

எங்கள் ஊருக்கு செல்லும் பஸ்ஸில் ஏறி சீட்டில் அமர்ந்து சாய்ந்து உட்கார்ந்ததும் அதுவரை இருந்த திணறல் நீங்கி நிம்மதியாக மூச்சு விட முடிந்தது.


வெறும் மாத்திரைகளும்...மருந்தும் செய்யாத மாயஜாலம் தான்.

16 comments:

நட்புடன் ஜமால் said...

\\அப்சசிவ் கம்பல்சிவ் டிஸ் ஆர்டர் தான் நினைவில் நெருடியது\\

முழு விளக்கும் எங்காவது இருக்குமா.

நட்புடன் ஜமால் said...

\\கம்பியூட்டர் கிளாசும் சும்மா ஒரு மாத இடைவெளியில்?! எங்கள் ஊருக்கு செல்லும் பஸ்ஸில் ஏறி சீட்டில் அமர்ந்து சாய்ந்து உட்கார்ந்ததும் அதுவரை இருந்த திணறல் நீங்கி நிம்மதியாக மூச்சு விட முடிந்தது.
வெறும் மாத்திரைகளும்...மருந்தும் செய்யாத மாயஜாலம் தான்.\\

ஆம்!

நல்ல விடயம் தான்.

Dhiyana said...

உண்மை மிஸஸ்.தேவ். விடுமுறைக்குக் கூட வராத பேரன் பேத்திகளை எப்பொழுதும் நினைத்துக் கொண்டேயிருக்கும் தாத்தா பாட்டிகள் அதிகரித்துவிட்டார்கள் இந்த கிளாசுகளால்.

பழமைபேசி said...

நல்லதுங்க!

அது சரி(18185106603874041862) said...

நீங்கள் ஏதோ ஒரு உண்மைக் கதையை எழுதியிருப்பதாக தெரிகிறது...ஆனால் இது O.C.D. போல தெரியவில்லை... எனக்கு தெரிந்த வரை ஒ.சி.டியில் மற்ற விஷயங்களில் ஈடுபாடும் இருக்கும்..

இது மனநிலை பிறழ்ந்தது போல் தெரிகிறது..ஒரு லூப்புக்குள் மாட்டி அங்கேயே உறைந்து விட்ட மூளை, விட்ட இடத்திலிருந்து மீண்டும் மீண்டும் தொடர்கிறது...

இதற்கு மருந்தென்று பெரிதாய் எதுவுமில்லை...ட்ரன்க்விலைசர் கொடுத்து, மெதுவாக மீட்பார்கள்...சில நேரங்களில் மீளலாம்...சில நேரங்களில் இல்லை...பெரும்பாலும் லித்தியம் பேஸ்ட் மெடிசின்ஸ்...கொஞ்சம் கொஞ்சமாய் மூளையை சாகடிக்கும் விஷம்...

அவர்களை மீட்டெடுக்க உறவுக்காரர்கள் போராட்டமும், அதற்கு அவர்கள் ஒத்துழைக்க மறுப்பதும்.....பூலோக நரகம்...சம்பந்தப்பட்ட எல்லாருக்கும்!

Unknown said...

அப்புறம் உங்க தோழியின் அம்மாவுக்கு என்ன ஆச்சுன்னு கேட்டு சொல்லிடுங்க.

கணவர் திட்டிய ஒவ்வொரு நாளும், என் தோழியின் அம்மா தூக்கத்தில் பெரிதாய் இரவில் ஊளையிடுவார். "நான் அப்பாவை அடிக்கப் போறேம்மா, வளந்து அப்பாவை விட சம்பாதிச்சு, உன்னை நல்லா வச்சுக்குவேம்மா" என்றவுடன் ஊளை அடங்கும். 2,3 வருடங்கள் இது நடந்தது. பக்கத்து வீட்டுக்காரர்கள் வந்து முதலில் என்ன ஆயிற்று என்று கேள்வி வேறு கேட்பார்களாம்.

திருமதி. தேவ்னு சொன்னா, "மங்களம் துலங்க" திருநிறைந்து இருக்கும்:-)

KarthigaVasudevan said...

நட்புடன் ஜமால் said...
\\அப்சசிவ் கம்பல்சிவ் டிஸ் ஆர்டர் தான் நினைவில் நெருடியது\\

முழு விளக்கும் எங்காவது இருக்குமா.


நன்றி ஜமால் ocd...இதற்கு விளக்கம் எப்படிச் சொல்ல என்று தெரியவில்லை.தெரிந்தவரையிலும் சொல்கிறேன்...இப்போது வீட்டில் இருந்து வெளியில் கிளம்புகிறோம் எல்லா மின் விளக்குகளையும் அணைத்தாயிற்று... fan...காஸ் சிலிண்டர் ...எல்லாம் தான். ஆனால் வெளியில் வந்து கதவைப் பூட்டும் போது மறுபடியும் சந்தேகம் காஸ் சிலிண்டர் off செய்தோமா இல்லையா என்று மறுபடி கதவைத் திறந்து உள்ளே போய் சோதித்துப் பார்த்து விட்டு எல்லாம் சரியாக மூடி விட்டு வெளியில் கிளம்பி வந்தாகி விட்டது...இப்போதும் அதே சந்தேகங்கள் தீராமல் மனதில் இப்படி இருப்பதை தான் ocd என்கிறார்கள் .
பல உதாரணங்களை சொல்லலாம் .
கதவை நன்றாக தாளிட்ட பின்னும் கூட அடிக்கடி கால் மணி நேரத்திற்கு ஒருமுறை மூடி விட்டோமா இல்லையா என சோதித்துப் பார்ப்பது ...பூட்டை பிடித்துக் கொண்டு தொங்கியே தாழ்ப்பாளை சிலர் உடைத்திருக்கக் கூடுமோ என்னவோ இந்த ocd யால்.
தலை முடி கலையாமலே இருந்தாலும் கூட 10 நிமிடங்களுக்கு ஒருமுறை தலையை வாரிக் கொள்ளும் ஆண்களும் ocd யால் பாதிக்கப் பட்டிருக்கக் கூடும் என்றே நினைக்கிறேன் :)

KarthigaVasudevan said...

// தீஷு said...

உண்மை மிஸஸ்.தேவ். விடுமுறைக்குக் கூட வராத பேரன் பேத்திகளை எப்பொழுதும் நினைத்துக் கொண்டேயிருக்கும் தாத்தா பாட்டிகள் அதிகரித்துவிட்டார்கள் இந்த கிளாசுகளால்.//

வாஸ்தவமே திஷூ ...

என்ன செய்யலாம் தாத்தா பாட்டிகளைச் சந்தோசப் படுத்த..அட அடிக்கடிஎல்லாம் கூட வேண்டம் ...வருடம் ஒருமுறை போய் பார்த்து விட்டு வருவது என்ற வழக்கத்தை ஏன் மறுக்க வேண்டும் அவர்களுக்கு.
அலுவலகம் ...குடியிருக்கும் இடம் இங்கெல்லாம் பிடிக்குமோ இல்லையோ பிடிக்காதா நபர்களிடம் கூட நாசூக்கு ..நாகரீகம் என்ற பெயரில் எத்தனையோ பேரிடம் முகச் சிரிப்பு மாறாமல் பேசுகிறோம் தானே...பின் நம்மைப் பெற்றவர்களிடம் மட்டும் ஏன் அலட்சியம் ?! கவனமின்மை?!

ஒரு மடங்கு பிரியத்தை அவர்களிடம் காட்டினால் அதையே பத்து மடங்காய் நம்மிடம் காட்டுவார்கள் அதுவே பெற்ற மனம் .என்னவோ சொல்லத் தோன்றியது...சொல்லி விட்டேன். இந்த மாதக் கடைசியில் ஊருக்குப் போகிறோம் தாத்தா பாட்டிகளைப் பார்க்க.

KarthigaVasudevan said...

// பழமைபேசி said...

நல்லதுங்க!//

என்ன பழமைபேசி அண்ணா ...வெறுமே நல்லதுங்கன்னு முடிச்சிட்டிங்க ...?!

KarthigaVasudevan said...

//நீங்கள் ஏதோ ஒரு உண்மைக் கதையை எழுதியிருப்பதாக தெரிகிறது...ஆனால் இது O.C.D. போல தெரியவில்லை... எனக்கு தெரிந்த வரை ஒ.சி.டியில் மற்ற விஷயங்களில் ஈடுபாடும் இருக்கும்..//
ஆம் ...நான் சொன்ன கதை ocd இல்லை தான்...ஆனால் இது ocd யின் முற்றிய நிலையாக இருக்கக் கூடும் என்ற என் சந்தேகத்தின் விளைவாக எழுதிய பதிவு. மனப் பிறழ்வு ஒரே நாளில் சட்டென்று நிகழ்ந்து விட முடியாது அல்லவா? அது மன திடத்தைச் சார்ந்த விஷயம் தானே!? கேன்சரைப் போல இதுவும் கொஞ்சம் கொஞ்சமாக மனதை அரிக்கும் வகைப்பட்ட நோயாக இருக்கலாம் !
உங்கள் தெளிவான பின்னூட்டத்திற்கு நன்றி அதுசரி.

இன்னும் இதைப் பற்றி தெளிவாகப் படித்து ஒரு பதிவிட ஆசை தான்.மனநல மருத்துவர்கள் ...பாதிக்கப் பட்டவர்கள்...அவர்களது குடும்பத்தார்கள் இவர்களை எல்லாம் சந்தித்துப் பேச வாய்ப்புக் கிடைத்தால் இன்னும் இதைப் பற்றி தெளிவான விளக்கத்துடன் பதிவிடலாம் தான்.பார்க்கலாம் வாய்ப்புக் கிடைக்குமா என்று?!!!

KarthigaVasudevan said...

அது சரி said...

//அவர்களை மீட்டெடுக்க உறவுக்காரர்கள் போராட்டமும், அதற்கு அவர்கள் ஒத்துழைக்க மறுப்பதும்.....பூலோக நரகம்...சம்பந்தப்பட்ட எல்லாருக்கும்!//


100 சதம் உண்மை இது ..அது நரக வேதனை தான் சம்பந்தப் பட்டவர்கள் எல்லோருக்கும்.

KarthigaVasudevan said...

// கெக்கே பிக்குணி said...

அப்புறம் உங்க தோழியின் அம்மாவுக்கு என்ன ஆச்சுன்னு கேட்டு சொல்லிடுங்க.

கணவர் திட்டிய ஒவ்வொரு நாளும், என் தோழியின் அம்மா தூக்கத்தில் பெரிதாய் இரவில் ஊளையிடுவார். "நான் அப்பாவை அடிக்கப் போறேம்மா, வளந்து அப்பாவை விட சம்பாதிச்சு, உன்னை நல்லா வச்சுக்குவேம்மா" என்றவுடன் ஊளை அடங்கும். 2,3 வருடங்கள் இது நடந்தது. பக்கத்து வீட்டுக்காரர்கள் வந்து முதலில் என்ன ஆயிற்று என்று கேள்வி வேறு கேட்பார்களாம்.

திருமதி. தேவ்னு சொன்னா, "மங்களம் துலங்க" திருநிறைந்து இருக்கும்:-)//

இதிலிருந்து நாம் தெரிந்து கொள்ள வேண்டிய சங்கதி என்னவென்றால் ...மன ரீதியாக பாதிக்கப் பட்டவர்களுக்கு முதல் தேவை ஆறுதலும் அரவணைப்புமே ...மருந்து மாத்திரைகள் ஒரு பக்கம் உடலை வேண்டுமானால் தேம்பூட்டக் கூடுமே தவிர நெருங்கிய உறவினர்களின் ஆறுதலான நடவடிக்கைகளே பாதிக்கப் பட்டவர்களை இயல்பான நிலைக்குத் திருப்ப உதவக் கூடும்.உங்கள் தோழி விசயத்தில் இது கண்கூடாகத் தெரிகிறது கெக்கேபிக்குணி .
ஆமாம் உங்கள் பெயர் என்ன? எதற்கிந்த பெயர் ? கெக்கேபிக்குணி !!!

//திருமதி. தேவ்னு சொன்னா, "மங்களம் துலங்க" திருநிறைந்து இருக்கும்:-)//

நன்றி ...இப்போ தாங்க பேர் மாத்தினேன் ...கொஞ்ச நாள் ஆகட்டும் அப்புறம் இதையும் பரிசீலிக்கலாம்!!!

வல்லிசிம்ஹன் said...

அப்புறம் என்ன ஆச்சு?
பாதில கதையை விட்டுட்டு ஊருக்குப் போயிட்டா என்ன செய்யறது நாங்க??:)
உங்கள் கருத்துகள் நல்லா இருந்தன.

முத்துலெட்சுமி/muthuletchumi said...

ம் .. நல்ல பதிவு.. நாங்களும் இப்படித்தான் லீவு விட்டமறுநாள் ஓடிருவோம். பின்ன லீவு முடியறப்ப வருவோம்..போலன்னா பாவம் தாத்தா பாட்டி எல்லாம் வருத்தப்படுவாங்கள்ள.. :)

ஆமா அந்த பாட்டி என்ன ஆனாங்க அதையும் சொல்லுங்க..

KarthigaVasudevan said...

வல்லிசிம்ஹன் said...
அப்புறம் என்ன ஆச்சு?
பாதில கதையை விட்டுட்டு ஊருக்குப் போயிட்டா என்ன செய்யறது நாங்க??:)
உங்கள் கருத்துகள் நல்லா இருந்தன.


நன்றி வல்லிம்மா ...
ஊருக்கு இப்போ போகலை...இந்த மாதக் கடைசியில் தான்...அதுவரை என் பதிவு இம்சை தொடரும்...போயிட்டு வாங்க ஊருக்குன்னு எல்லாம் சொல்லி எஸ்கேப் ஆகா முடியாது இல்ல?!:)

என் தோழி இல்லை இந்தக் கதையில் வருவது ,நான் கேள்விப்பட்ட ஒரு விசயத்தோடு என் ஒன்று விட்ட பாட்டியின் கதையை ஒப்பிட்டு எழுதினேன்.ஆகா மொத்தம் பாட்டியின் கதை தான் நான் நேரில் கண்டது.

சீமாச்சு.. said...

வயசானவங்களை அவசியம் பார்த்துக்கணும். என் அப்பாவுக்கு இப்போ 91 வயசு. நான் எங்கிருந்தாலுன் தினமும் காலையில் அவருக்குப் போன் போட்டுப் பேசிவிடுவேன். அவர் உலகம் சிறியது. காலை காலி, ஹிண்டு பேப்பர், டீவீ, கோவில், வாக்க்கிங். இவ்வளவுதான். காலையில் நானோ என் குழந்தைகளோ போன் செய்து பேசுவது.. அவர் வார்த்தையில் சொல்லப்போனால் “டானிக்”.

அன்புடன்,
சீமாச்சு..