Monday, March 30, 2009

ஜவ்வு மிட்டாய்





அம்பையின் "காட்டில் ஒரு மான்" சிறுகதைத் தொகுப்பு வாசித்துக் கொண்டிருந்தேன் நேற்று மதியம்,அப்போது தான் சட்டென்று "ஜவ்வு மிட்டாய்" ஞாபகம் வந்தது.ஜவ்வு மிட்டாய்க்கும் நான் வாசித்த சிறுகதைக்கும் சம்பந்தம் ஏதுமில்லை சிறுகதை எனது சிறு வயது நினைவுகளைத் தட்டி எழுப்பியதில் ஜவ்வு மிட்டாய் கலர்...கலராய் மின்னி மறைந்தது எண்ணங்களின் ஓடையில் .

உலக்கை அளவுக்குப் பருமன் இல்லை ...அதற்காக வாக்கிங் ஸ்டிக் மாதிரி ரொம்ப ஒல்லியாகவும் இல்லாமல் ஒரு அளவான நீண்ட கழியில் மேற்பாகத்தில் வெண்ணிற தகர மூடியால் மூடப்பட்டு மிட்டாய் உள்ளே இருக்கும் அதை மிட்டாய்க் காரர் தனது இடது தோளில் சாற்றி வைத்துக் கொண்டு வியாபாரம் செய்வார். கூடவே கெரசின் ஊற்றப் பயன்படுத்தும் பெரிய சைஸ் புனல் போல ஒரு ஊதுகுழல் வேறு வைத்துக் கொண்டு அடிக்கொரு தரம் அதை ஊத்தி சத்தமெழுப்பி மிட்டாய் வாங்க ஊர்ப் பிள்ளைகளுக்கெல்லாம் அழைப்பு விடுத்துக் கொண்டிருப்பார்.

அவரது குழல் சத்தம் கேட்டதோ இல்லையோ என்னையொத்த என்னை விடப் பெரிய ..சிறிய பிள்ளைகள் எல்லோரும் அவரைச் சுற்றி குழுமி விடுவார்கள்.இந்த ஜவ்வு மிட்டாயின் ஸ்பெசலே அந்த மிட்டாய்க் காரர் செய்து தரும் டிசைன்களில் தானே இருக்கிறது .

கைக்கடிகாரம்,ரயில்,கார்,பஸ்,மூக்குக்கண்ணாடி,பாம்பு,மயில்,நெக்லஸ்,ப்ரேஸ்லெட்,இப்படி விதம் விதமான டிசைன்களில் சில அடிக்கும்v நிறங்களில் மிட்டாய் செய்து தருவார். நிறங்கள் பெரும்பாலும் சிறுவர்...சிறுமிகளை ஈர்க்கும் படியாகவே இருக்கும்.ரோஸ்...மஞ்சள்...வெளிர் நீலம்,சிவப்பு,பச்சை ,வெள்ளை இந்த நிறங்களில் தான் .பெரும்பாலும் மனதில் நிர்ப்பது ரோஸ் நிறம் தான்.

ஜவ்வு மிட்டாயின் இனிப்பு அதை சாப்பிட்டு முடித்த பின் வெகுநேரம் வரையிலும் கூட நாக்கின் அடியில் தித்திக்கும் பல நேரங்களில் ,இப்போதெல்லாம் கிராமங்களிலும் கூட ஜவ்வு மிட்டாய்க்காரர்களைக் காணோம்,அந்த மிட்டாய் சுகாதாரமானதா இல்லையா என்பதை எல்லாம் தாண்டி மிட்டாயின் நிறமும் அடர் இனிப்புச் சுவையும் மட்டும் இன்ன்னும் நீங்காமல் நினைவுகளோடு .


இப்படி இன்னும் பல நிறம் மாறா நிஜமான சந்தோசங்களை அள்ளித் தந்த பருவம் அது. சிறுமியாகவே இருக்கத்தான் முடியாது ஆனால் அந்த நேரத்து வாழ்வின் வர்ண ஜாலங்களை வருடங்கள் சில..பல கடந்த பின்னும் நினைத்துப் பார்ப்பதென்னவோ நல்ல அருங்கோடையில் கிராமத்து வீட்டின் வேப்பமர முன் தாழ்வாரத்தில் சிலீரென்று காற்று தாழ்ந்து பரவ சுகமாய் ஒரு சிறு தூரலில் நனைவதைப் போன்ற சிலீரென்ற அனுபவம் அது.

நீங்கள் சாப்பிட்டு ரசித்ததுண்டா கலர்...கலர்..ஜவ்வு மிட்டாய்களை ,அப்படியென்றால் எழுதுங்கள் உங்கள் இனிமையான சிறு பிராயத்து மலரும் நினைவுகளை பின்னூட்டங்களாக .

21 comments:

நட்புடன் ஜமால் said...

ஆஹா!

நன்றிங்கோ!

காலையிலேயே அந்த கால நினைவுகளுக்குள் சென்று வரச்செய்ததற்கு


அதிகம் வாட்ச் தான் விரும்பி வாங்குவேன்.

அதை அழகு பார்த்துக்கொண்டேயிருப்பேன்

மற்றவர்கள் விரைவில் தின்று விட்டு
என்னிடம் எடுத்து அழ செய்துவிடுவார்கள்

பரவாயில்லை என்று பிறகு தோன்றும்

அடுத்து முறை வாங்கும் வரை.

Thamiz Priyan said...

எனக்கும் நல்லாநினைவில் இருக்கு.. கைக் கடிகாரம் தான் என்னொட பேவரைட்.. அதோடு கொசுறா சிறு துண்டை கன்னத்தில் ஒட்டி விடுவார். ரொம்ப நேரம் எடுக்காம வச்சு இருப்போம்.. ;-)

ஆ.ஞானசேகரன் said...

எங்க ஊருல் வரும் மிட்டாய் காரர் பாடும் பாட்டு இன்னும் மனதில் உள்ளது. கவிஞர் பட்டுக்கோட்டை பாட்டு. "சின்ன சின்ன இழை பின்னி பின்னி வர சித்திர கைத்தறி சேலையடி, நம்ம தென்னாட்டில் கொண்டாடும் வேலையடி மிட்டாய்ய்ய்ய்ய்..." இன்னும் மறக்கமுடியாத நினைவலைகள்

குடுகுடுப்பை said...

நானும் சாப்பிட்டிருக்கேன். எனக்கு கல்கோனாதான் ரொம்ப விருப்பம்.பின்னர் காலேஜ் போனப்புறம்
கள் கோனாவா மாறிடிச்சு.

தமிழ்நதி said...

நினைவுகளைக் கிளர்த்திய பதிவு. எங்கள் ஊரில் தும்புமிட்டாய்தான் பிரபலம். இப்போதும் வாங்கிச் சாப்பிட ஆசை. ஆனால்... பயம்:)

ராமலக்ஷ்மி said...

நல்ல நினைவலைகளைக் கிளப்பி விட்டிருக்கிறீர்கள்:)!

//அந்த மிட்டாய் சுகாதாரமானதா இல்லையா என்பதை எல்லாம் தாண்டி //

இப்போ ஆயிரம் கேள்விகள் எதைப் பார்த்தாலும், முன்னே இந்த நினைப்பெல்லாம் கிடையவே கிடையாது:))!

வாட்ச் கட்டும் ஜவ்வு மிட்டாய் எங்க காலத்தில இல்லை. ஆனா அது போன்ற பிரவுன் நிற மிட்டாய் பள்ளி வாசலில் உண்டு. அதும் பேரு ச்சவ் ச்சவ் மிட்டாய்:)! அது போல சோன்பப்டி வண்டியில் வைத்து மணியடித்த படி வருவார் வாசலில். அதும் பேரு ‘டிங்டிங்’ மிட்டாய்.

துளசி மேடம் பள்ளி நினைவுகள் பதிவைப் படித்ததிலிருந்து இதையெல்லாமும் சேர்ந்து ஒரு பதிவெழுத ரொம்ப நாளா ஒரு எண்ணம். உங்க பதிவு அதை நினைவு படுத்தி விட்டது. பார்க்கலாம்:)!

அபி அப்பா said...

டவுட் அக்கா, அந்த ஜவ்வு மிட்டாய் கடிகாரம் கையிலே கட்டி விட்ட பின் அந்த ஜவ்வு மிட்டாய் காரர் ஒரு சின்ன பீஸ் கொசிறு நம் கன்னத்தில் ஒட்டுவாரே அதை சொல்லலியே! எப்பவும் கொசுறு தான் ரொம்ப இனிப்பா இருக்கும்!!!

அபி அப்பா said...

ஆஹா நான் சத்தியமா தமிழ்பிரியன் கமெந்த் பார்க்கலை! அதே தான் சொல்லியிருக்கார் அவரும்!

KarthigaVasudevan said...

//அதிகம் வாட்ச் தான் விரும்பி வாங்குவேன்.

அதை அழகு பார்த்துக்கொண்டேயிருப்பேன்

மற்றவர்கள் விரைவில் தின்று விட்டு
என்னிடம் எடுத்து அழ செய்துவிடுவார்கள்

பரவாயில்லை என்று பிறகு தோன்றும்

அடுத்து முறை வாங்கும் வரை//

கைக்கடிகாரம் தான் ரொம்ப பிரபலம் ஜவ்வு மிட்டாயில் ...நல்ல நினைவுகள் தான்...நன்றி ஜமால்

KarthigaVasudevan said...

//தமிழ் பிரியன் said...

எனக்கும் நல்லாநினைவில் இருக்கு.. கைக் கடிகாரம் தான் என்னொட பேவரைட்.. அதோடு கொசுறா சிறு துண்டை கன்னத்தில் ஒட்டி விடுவார். ரொம்ப நேரம் எடுக்காம வச்சு இருப்போம்.. ;-)//

ஆமாம் ...கொசுறை மறந்து விட்டேன் போல...நன்றி தமிழ்பிரியன்

KarthigaVasudevan said...

//ஆ.ஞானசேகரன் said...

எங்க ஊருல் வரும் மிட்டாய் காரர் பாடும் பாட்டு இன்னும் மனதில் உள்ளது. கவிஞர் பட்டுக்கோட்டை பாட்டு. "சின்ன சின்ன இழை பின்னி பின்னி வர சித்திர கைத்தறி சேலையடி, நம்ம தென்னாட்டில் கொண்டாடும் வேலையடி மிட்டாய்ய்ய்ய்ய்..." இன்னும் மறக்கமுடியாத நினைவலைகள்//


பாட்டு அருமை ஆ.ஞானசேகரன் ...எங்க ஊர் ஜவ்வு மிட்டாய்க்காரர் பாட்டெல்லாம் அவரோட மிட்டாய் மாதிரியே இழுவையா தான் இருக்கும் ...நீங்க சொல்லி இருக்கற பாட்டு எவ்ளோ அர்த்தமுள்ளது ,நன்றிங்க பகிர்வுக்கு

KarthigaVasudevan said...

/குடுகுடுப்பை said...

நானும் சாப்பிட்டிருக்கேன். எனக்கு கல்கோனாதான் ரொம்ப விருப்பம்.பின்னர் காலேஜ் போனப்புறம்
கள் கோனாவா மாறிடிச்சு.//

கல்கோனா..கல்கோனான்னு எல்லாரும் சொல்லக் கேள்விப் பட்ருக்கேன் ...என்னது அது கல்கோனா ...கல்லைக் கோணலா பிடிச்சு வேக வச்சு சர்க்கரை போட்டு சாப்பிடத் தருவாங்களோ?! குடுகுடுப்பை அண்ணா விளக்கம் கொடுங்க ப்ளீஸ் .

KarthigaVasudevan said...

//தமிழ்நதி said...
நினைவுகளைக் கிளர்த்திய பதிவு. எங்கள் ஊரில் தும்புமிட்டாய்தான் பிரபலம். இப்போதும் வாங்கிச் சாப்பிட ஆசை. ஆனால்... பயம்:)//


நிஜம் தான் தமிழ்நதி ...முன்பு விரும்பிச் சாப்பிட்ட பல தின்பண்டங்கள் இப்போதெல்லாம் பயத்தை அழிப்பது வாஸ்த்தவமே...உருளை..உருளையாக ஐந்து பைசா அப்பளம் முதற்கொண்டு தென் மிட்டாய்கள் வரை பலதும் இப்பொது சாப்பிட பயமே

KarthigaVasudevan said...

வாங்க ராமலக்ஷ்மி மேடம்.

பகிர்தலுக்கு நன்றி .

//துளசி மேடம் பள்ளி நினைவுகள் பதிவைப் படித்ததிலிருந்து இதையெல்லாமும் சேர்ந்து ஒரு பதிவெழுத ரொம்ப நாளா ஒரு எண்ணம். உங்க பதிவு அதை நினைவு படுத்தி விட்டது. பார்க்கலாம்:)!//

சீக்கிரம் பாருங்க.

//அந்த மிட்டாய் சுகாதாரமானதா இல்லையா என்பதை எல்லாம் தாண்டி //

இப்போ ஆயிரம் கேள்விகள் எதைப் பார்த்தாலும், முன்னே இந்த நினைப்பெல்லாம் கிடையவே கிடையாது:))!

சுத்தமாக் கிடையவே கிடையாது .ஆனா அப்போ வராத நோயெல்லாம் இப்போ வருது ...அப்போ வந்த நோயும் வருது ,காலமே ஒரு மார்க்கமா தான் போயிக்கிட்டு இருக்கோன்னு ஒரு பிரமை .என்ன இருந்தாலும் அந்தக் காலம் மாதிரி வருமான்னு இப்போ உள்ள குழந்தைகளும் இன்னும் 25 வருஷம் கடந்து சொல்லப் போறாங்க .இந்த ஜவ்வு மிட்டாய் போய் எக்லர்சையும் ...காட்பரியையும் சொல்வாங்களோ என்னவோ?

KarthigaVasudevan said...

//அபி அப்பா said...

டவுட் அக்கா, அந்த ஜவ்வு மிட்டாய் கடிகாரம் கையிலே கட்டி விட்ட பின் அந்த ஜவ்வு மிட்டாய் காரர் ஒரு சின்ன பீஸ் கொசிறு நம் கன்னத்தில் ஒட்டுவாரே அதை சொல்லலியே! எப்பவும் கொசுறு தான் ரொம்ப இனிப்பா இருக்கும்!!!

ஏற்க்கனவே தமிழ் பிரியன் வந்து சொல்லிட்டு போயிட்டார் அபிஅப்பா

KarthigaVasudevan said...

//அபி அப்பா said...

ஆஹா நான் சத்தியமா தமிழ்பிரியன் கமெந்த் பார்க்கலை! அதே தான் சொல்லியிருக்கார் அவரும்!//


சரி...சரி ...விடுங்க..இப்போ என்ன அதுக்கு ?

narsim said...

தெருவில் விளையாடிய நினைவுகள் மீண்டு வந்தன..ஜவ்வு மிட்டாய்..வாட்ச்..

குடுகுடுப்பை said...

மிஸஸ்.தேவ் said...

/குடுகுடுப்பை said...

நானும் சாப்பிட்டிருக்கேன். எனக்கு கல்கோனாதான் ரொம்ப விருப்பம்.பின்னர் காலேஜ் போனப்புறம்
கள் கோனாவா மாறிடிச்சு.//

கல்கோனா..கல்கோனான்னு எல்லாரும் சொல்லக் கேள்விப் பட்ருக்கேன் ...என்னது அது கல்கோனா ...கல்லைக் கோணலா பிடிச்சு வேக வச்சு சர்க்கரை போட்டு சாப்பிடத் தருவாங்களோ?! குடுகுடுப்பை அண்ணா விளக்கம் கொடுங்க ப்ளீஸ் .//

கடிக்க முடியாத அளவுக்கு சக்கரை பாகோட ஏதோ ஒரு பருப்பு சேத்து செய்வாங்கன்னு நெனக்கிறேன்.

'கள்'கோனாவிற்கு விளக்கம் உங்க வீட்டுக்காரரிடம் கேட்கவும்.

KarthigaVasudevan said...

// narsim said...

தெருவில் விளையாடிய நினைவுகள் மீண்டு வந்தன..ஜவ்வு மிட்டாய்..வாட்ச்..//

நன்றி நர்சிம்

KarthigaVasudevan said...

//'கள்'கோனாவிற்கு விளக்கம் உங்க வீட்டுக்காரரிடம் கேட்கவும்.//


கல்கோனா வுக்கு தான் விளக்கம் கேட்டேன் நான் ...ஆனாலும் குடுகுடுப்பை அண்ணனை அடிச்சுக்க ஆள் இல்லை போல இந்த "நையாண்டி தர்பார் ல" பேசாம இந்தியா வந்த பின்ன யூகி சேது கூட சேர்ந்து நையாண்டி தர்பார் பார்ட்- 2 போட்றலாம் .

ராமலக்ஷ்மி said...

http://www.flickr.com/photos/ramalakshmi_rajan/6978482737/in/photostream

முடிந்தால் இந்தப் படத்தை இப்பதிவோடு சேர்த்திடுங்கள். மகிழ்வேன்:)!