Friday, January 16, 2009

மயிலு...மயிலு...மயிலம்மா!!!


மயில் எவ்ளோ அழகா இருக்கு இல்ல?

எங்கம்மாவோட பட்டுச் சேலை போல எவ்ளோ கலர்?கழுத்து பாரு இவ்ளோ நீளமா !வழு வழுன்னு இருக்கு பாரு .

ராஜி தான் கேட்டுக்கொண்டிருந்தாள்...எத்தன எத்தன கலர் பாரேன் ?!

அந்தக் கடங்கார மல்லீஷ் ராஜியை மட்டும் மயிலைத் தொட்டுப் பார்க்க அனுமதித்தான்...என்னை அதன் கொண்டையைக் கூட தொட விடவில்லை .அவன் மீது சும்மாவே எனக்கு நல்ல நட்பு இல்லை.எப்போதடா யாரிடமாவது அவனுக்கு தர்ம அடி வாங்கித் தரலாம் என்ற நல்லதொரு எண்ணத்தில் இருந்தேன் நான்.

அவனுக்கும் எனக்கும் வகுப்பறை சண்டை வெகு பிரசித்தம் .

விமலா டீச்சருக்கு எப்போதுமே என்னைத்தான் ரொம்பப் பிடிக்கும்.(நன்றாகப் படிப்பவர்களைத் தானே டீச்சருக்கு பிடிக்கும்!!!) விமலா டீச்சர் எப்போது பாடத்தில் கேள்வி கேட்டாலும் மல்லீசுக்கு பதில் தெரியாமல் தான் போகும் .பதில் தெரியாத எல்லோருமே வரிசையில் நிற்க வேண்டும்.யாருக்கு பதில் தெரியுமோ...அதாவது யார் பதில் சொல்கிறார்களோ அவர்கள் நிற்பவர்களைக் குனிய வைத்து முதுகில் நங்கென்று குத்தலாம்.(எவ்வளவு பலமாக முடியுமோ அவ்வளவு பலமாக!)

அப்படித்தான் ஒருமுறை அல்ல பலமுறை அவன் என்னிடம் அடி வாங்கினான்.அந்தக் கடுப்பு.மயிலை சரியாகவே பார்க்க விடவில்லை.எனக்கும் மயில் பார்ப்பதில் எல்லாம் அவ்வளவு அதிக ஆர்வம் இல்லையென்றாலும் இவன் இவ்வளவு பிகு செய்கிறானே என்று தான் "இவனென்ன தடுப்பது"என்ற ஆக்ரோஷம் வேறு! அவன் மயிலை மறைக்க ...மறைக்க இவனை ஏதாவது ஒரு விசயத்தில் மாட்டி விட்டே தீருவது என்று முடிவே செய்து விட்டேன்.

என்ன செய்யலாம் இவனை? திடுமென்று தான் அப்படி முடிவு செய்தேன் .அவன் என்னவோ ஏதோ...நாய்...பூனையை விரட்டுவது போல எல்லாரையும் விரட்டிக் கொண்டு இருந்தான் .மயில் பார்க்க வந்த பையன்களிலும்... பெண்பிள்ளைகளிலும் அவனது கூட்டாளிகள் யாரோ அவர்களிடம் மட்டும் தனி கரிசனம் காட்டினான் .மற்றவர்களை சூ...சூ என்று விரட்டினான். இதெல்லாம் அராஜகம் இல்லையா? (மயில் என்ன இவன் தாத்தா வீட்டு சொத்தா என்ன? எங்கேயோ யாருடைய தோட்டத்திலோ சோளம் கொத்தித் தின்ன வந்த அப்பாவி மயில் அது! அதைப் போய் எப்படித்தான் அதற்குத் தெரியாமல் பொறி வைத்துப் பிடித்தானோ?!

எல்லோரிடமும் பீற்றிக் கொள்கிறான்,அவனே அவன் கையால் மயிலை பொறி வைத்துப் பிடித்ததாக .எனக்குத் தெரியும் நான் நம்பவே இல்லை.இது அவனது தாத்தா வேலையா வேலையாகத் தான் இருக்கும்!!! அவர் தான் தோட்டம் தோட்டமாக மயில் பிடித்துக் கொண்டு திரிவார்.மயில்கறி அப்போது எங்கள் ஊரில் பேமஸ் .

பெரும்பாலும் விவசாயக் குடும்பங்கள் என்பதால்,மயில்கள் கூட்டம் கூடமாக வந்து பயிர்களை அழித்து விட்டுப் போகும் தொல்லை பொறுக்க மாட்டாமல் தொட்ட சொந்தக்காரர்கள் யாரும் வேலையாவை ஒன்றும் சொல்வதில்.சில வீடுகளில் மயில் பிடிக்க அவருக்கு கூலி கூட தருவதுண்டு.

வேலையா மயில் பிடிக்கப் போவது எனக்கு என் பாட்டி சொல்லித் தெரியும்.மயில் முட்டை பெருசாக இருக்கும் கோழி முட்டையை விட என்பார் வேலையா.நான் பார்த்தது இல்லை.வேலையா வந்தால் என்னையும் மயில் பார்க்க விடுவார் என்று நினைத்துக் கொண்டேன் நான்.

அந்த மல்லீஸ் ஏதேதோ அளந்து கொண்டிருந்தான் எல்லோரிடமும்.மயில் தான் இனி அவனுக்கு ரொம்ப நெருங்கிய கூட்டாளியாம்.தினம் காலையில் அதற்க்கு சோறு வைத்து விட்டுப் பிறகு தான் இனிமேல் இவன் சாப்பிடுவானாம் .மயிலை அதன் காலில் ஒரு சின்னக் கயிறு கட்டி அந்தக் கயிற்றின் அடுத்த முனியை அவன் வீட்டு ஜன்னல் கம்பியில் கட்டி இருந்தான் அவன்.பாவம் மயில்!அது பாட்டுக்கு எங்கேயோ பறந்து திரிந்திருக்கும் நேற்று வரை .

முதலில் அவன் கயிற்றை அதன் கழுத்தில் தான் கட்டினானாம்.மயில் அகோரமாய்க் கத்தவே பிறகு தான் இவனாகவே புரிந்து கொண்டு காலில் கயிற்றை கட்டினானாம்.(பெரிய அறிவாளின்னு நினைப்பு இவனுக்கு ) அவன் மயில் பிடித்த கதை இப்படியாக நீண்டு கொண்டே போனது.வீட்டில் அவனைத் தவிர வேறு யாரும் இல்லை ,வேலையா எங்கே போனாரோ?!இப்போது வந்தாரென்றால் இவனைப் பற்றி வண்டி வண்டியாகப் புகார் சொல்லி விட்டு மயிலையும் ஆசை தீர தொட்டுப் பார்த்து விட்டு என் வீட்டுக்கு ஓடி விடலாம் என்று நினைத்துக் கொண்டிருந்தேன் நான்.

மயில் நமது தேசியப் பறவை என்று சோசியல் டீச்சர் சொன்னது ஞாபகம் வந்தது.புக்கில் பார்த்த மயிலின் தோகை ரொம்பப் பெரிசு இந்த மயிலுக்கு தோகை கொஞ்சம் சின்னதாக இருந்தது. கணக்கு சார் மகள் மேனகா அவனிடம் ;

"மல்லீஸ்...மல்லீஸ் இந்த மயிலை தோகை விரிச்சி ஆட வையேன் ...ஒரே ஒரு தடவை டா என்று கெஞ்சினாள்.அவனுக்கு குழப்பமாகி விட்டது.இந்தப் பொண்ணு சரியான லூசு ...மயில் நாம சொன்னாலாம் ஆடாது...அதுக்கா தோணினா தான் ஆடும் என்றாள் பாலாமணி அத்தையின் மகள் வேணி.

இல்ல இல்ல ...நான் சொன்ன அது ஆடும். நீங்கலாம் இருக்கீங்க இல்ல அதான் அது ஆடாது இப்ப.நீங்கலாம் போனப்புறம் தனியா ஆடும் ...எவ்ளோ அழகா ஆடும் தெரியுமா?(அதென்னவோ மயில் அவனிடம் பலமுறை தனியாக பத்மினி பரதம் ஆடுவதைப் போல ஆடிக் காட்டியது என்ற பாவனையில் அவன் மெய் மறந்து நூல் விட்டுக் கொண்டிருந்தான்.)

எல்லோரும் அதை நிஜம் போலவே கேட்டுக் கொண்டிருந்தோம்.(நானும் தான் ...மூன்றாம் வகுப்பில் இதெல்லாம் சகஜம்யா!!!)அந்த வயசுல க்ளாஸ் மேட் சொல்றதெல்லாம் உண்மைன்னு தாங்க நம்பி இருப்போம் எல்லோருமே?!)

அவன் தினமும் அவனுக்குப் பிடித்தவர்களை மட்டும் தான் மயிலைத் தொட்டுப் பார்க்க அனுமதிப்பானாம் .இதைச் சொல்லி விட்டு என் பக்கம் குசும்பாய் ஒரு பார்வை வேறு !

இருடா இரு உனக்கு வச்சிருக்கேன் ஆப்பு என்று எனக்குள் நான் சொல்லிக் கொண்டு "போடா லூசு' என்பது போல நான் ராஜியை இழுத்துக் கொண்டு வெளியில் வந்தேன். மனதில் திரும்பத் திரும்ப அவன் மயிலைப் பார்க்க விடாததே வன்மம் வளர்த்துக் கொண்டிருந்தது."இருக்கட்டும் ஒரு நாள் பார்த்துக் கொள்வோம் இவனை" என்று நினைத்தவாறு என் வீட்டுக்குப் போயிருப்பேன் நான் ."விதி வலியது" தான் போல...

அந்நேரம் பார்த்தா அவன் என்னிடம் "தோத்தாக்காலி சொல்ல வேண்டும்?! விளையாட்டில் தோற்றுப் போனவர்களைத் தான் அப்படிக் கேலி செய்வார்கள்.இவன் ஏன் இந்த நேரத்தில் என்னை இப்படிச் சொல்கிறான் ?இங்கே என்ன விளையாட்டு நடக்கிறது? நான் எதில் தோற்றேன் என்று கோபம்..கோபமாய் வந்தது எனக்கு.

அவனுக்கு அன்று என்னவோ கெட்ட நேரம் ...அவன் மட்டும் சொன்னால் கூட போகிறான் கூமுட்டை என்று விட்டு விட்டுப் போயிருப்பேன்.அவன் கூட இருந்த எல்லோரையுமே சொல் வைத்தான்...

தோத்தாக்காலி ...தோத்தாக்காலி ...தோத்தாக்காலி ...

இனியுமா சும்மா இருப்பது?

முடியவே முடியாது ...

சுற்றும் முற்றும் பார்த்ததில் பக்கத்தில் ஒரு பருமனான கல் பார்வைக்குத் தட்டுப் பட்டது .என் கை கொள்ளாது அந்தக் கல், கொஞ்சம் கனமான கல் தான்.கோபத்தில் கனத்தை எல்லாம் யோசிக்காமல் எடுத்தேன்.

விசுக்கென்று எடுத்த வேகத்தில் அதை அவனது முன் நெற்றியில் பலம் கொண்டு வீசி விட்டு திரும்பியே பார்க்காமல் ஓடியே போய் விட்டேன் என் பாட்டி வீட்டுக்கு.

என் வீட்டுக்கே போயிருக்கலாம் தான் ...ஆனால் பின்னாடியேஅவனைக் கல்லால் அடித்த பஞ்சாயத்து வருமே அதற்க்கு என் வீடு சரிப் படாது ..பாட்டி தான் இதற்க்கெல்லாம் சரியான ஆள்.கரெக்ட்டாக நியாயம் வழங்குவார்எப்போதும் என் பக்கம்!!! அதனாலெல்லாம் தாங்க நான் எப்பவுமே பாட்டி செல்லம்!?

11 comments:

நட்புடன் ஜமால் said...

மயிலு --- 16 வயதினிலே ஞாபகம் ...

நட்புடன் ஜமால் said...

\\அழகா இருக்கு இல்ல? \\

என்னா டவுட்?

நட்புடன் ஜமால் said...

\\(நன்றாகப் படிப்பவர்களைத் தானே டீச்சருக்கு பிடிக்கும்!!!) \\

என்னையும் தான் டீச்சருக்கு பிடிக்கும்

நட்புடன் ஜமால் said...

ரொம்ப கோபமா இருக்கற மாதிரி இருக்கே ...

அது சரி(18185106603874041862) said...

//
.அதாவது யார் பதில் சொல்கிறார்களோ அவர்கள் நிற்பவர்களைக் குனிய வைத்து முதுகில் நங்கென்று குத்தலாம்.(எவ்வளவு பலமாக முடியுமோ அவ்வளவு பலமாக!)
//

எத்தினி தடவ நானெல்லாம் குத்திருப்பேன்...இதனாலயே பல பேரு எம் மேல கொலவெறியோட திரிஞ்சானுங்க :0))

SUREஷ்(பழனியிலிருந்து) said...

ஒரிஜினல் மயிலை தூக்கி வைத்திருந்தீங்கன்னு நினைச்சுக்கங்க...


உங்கள மாதிரியே கண்ணை கொத்திப் போடுமாமே...

kajan said...

மாட்டி விட்டே தீருவது என்று முடிவே செய்து விட்டேன் ....................ஏன்.இந்த கொலை வெறி


சரி அது ஒரு வயதின் வேகம் தான்

KarthigaVasudevan said...

//நட்புடன் ஜமால் said...

மயிலு --- 16 வயதினிலே ஞாபகம் ...



நட்புடன் ஜமால் said...

\\அழகா இருக்கு இல்ல? \\

என்னா டவுட்?



நட்புடன் ஜமால் said...

\\(நன்றாகப் படிப்பவர்களைத் தானே டீச்சருக்கு பிடிக்கும்!!!) \\

என்னையும் தான் டீச்சருக்கு பிடிக்கும்

ரொம்ப கோபமா இருக்கற மாதிரி இருக்கே ...

கோபமெல்லாம் இல்லை ஜமால்.நடந்ததை சொன்னேன்.அவ்வளவு தான்.

KarthigaVasudevan said...

// அது சரி said...
//
.அதாவது யார் பதில் சொல்கிறார்களோ அவர்கள் நிற்பவர்களைக் குனிய வைத்து முதுகில் நங்கென்று குத்தலாம்.(எவ்வளவு பலமாக முடியுமோ அவ்வளவு பலமாக!)
//

எத்தினி தடவ நானெல்லாம் குத்திருப்பேன்...இதனாலயே பல பேரு எம் மேல கொலவெறியோட திரிஞ்சானுங்க :0))//

அதுசரி மேல கொலைவெறியா?! அது சரி...அதுசரி!!!

KarthigaVasudevan said...

//SUREஷ் said...

ஒரிஜினல் மயிலை தூக்கி வைத்திருந்தீங்கன்னு நினைச்சுக்கங்க...


உங்கள மாதிரியே கண்ணை கொத்திப் போடுமாமே...//

யாருக்காச்சும் கண்ணு போகட்டும்னு டாக்டருக்கு எப்பேர்ப்பட்ட நல்ல எண்ணம்?!வாழ்க ...வளர்க!

KarthigaVasudevan said...

//kajan's said...

மாட்டி விட்டே தீருவது என்று முடிவே செய்து விட்டேன் ....................ஏன்.இந்த கொலை வெறி


சரி அது ஒரு வயதின் வேகம் தான்//

நீங்களாவது சரியா புரிஞ்சிகிட்டீங்களே...!ரொம்ப நன்றிங்க உங்கள் முதல் வருகைக்கும் கருத்துக்கும்.