Friday, January 16, 2009

அண்டை வீட்டுக்காரர்கள் (NEIGHBOURS)

அண்டை நாடுனாலும் சரி அண்டை வீடுனாலும் சரி தொடர்ந்து குறிப்பிட்ட கால இடைவெளியில் சின்னதாகவோ...பெரிதாகவோ தொல்லைகள் கொடுத்துக் கொண்டே இருப்பது தான் மரியாதை என்று இந்தமக்களுக்கு யார் தான் கற்றுக் கொடுத்திருப்பார்களோ?

இந்தியாவுக்கு பாகிஸ்தான் ..இலங்கை...பங்களா தேஷ் ...பர்மா...சீனா போல நம் எல்லோருக்குமே பக்கத்து வீட்டு ஜானகி மாமி ...எதிர் வீட்டு மோசஸ் அங்கிள் ...கோடி வீட்டு ஹசீனா பேகம் பின்வீட்டு வெங்கிடு சார் இப்படி அண்டை ...அசல் வீட்டுக் காரர்கள் இருக்கத் தான் செய்கிறார்கள்!அவர்கள் இருப்பதில் நமக்கேதும் பிரச்சினை இருக்க முடியாது .

இந்தியா பாகிஸ்தான் நல்லுறவைப் போலவே அடிக்கடி ஊடுருவுதலோ அல்லது ஆக்கிரமிப்போ நிகழும்வரை நமது இருவீட்டு நல்லுறவுக்கும் எந்தக் குந்தகமும் ஏற்பட வாய்ப்பே இல்லை தான்,ஆனால்" விதி வலியது" ஆக்கிரமிப்பு என்பது மனித சமூகத்தின் நாகரீக வளர்ச்சியில் வலுவான காரணிகளில் ஒன்றாயிற்றே?! ஆகவே கண்டிப்பாக அது நிகழ்ந்தே தீரும்.இல்லாவிட்டால் நீங்கள் அடுத்த வீட்டுக் காரர்களால் "அப்பிராணி"..."லூசு"..."கேணை" என்று பட்டம் சூட்டப் படலாம்!

இந்த இடத்தில் ஊடுறுவுதல் மற்றும் ஆக்கிரமிப்பு என்றால் என்ன ? என்பதைப் பற்றி சற்று விளக்கமாகச் சொல்லியே ஆக வேண்டும் ,அதற்க்கு முன் நாம் எல்லோரும் "அண்டை வீட்டுக் காரர்களே "என்ற எண்ணத்தை விட்டொழித்து விட வேண்டும்.அந்த சுற்று வட்டாரத்தில் நமது வீடு மட்டுமே தனி வீடு(அது அப்பார்ட்மென்டாக இருந்தாலும் சரி !) என்று வாழும் நாள் முழுக்க எண்ணிக் கொள்ள வேண்டும்.அப்போது தான் நீங்கள் ஒரு சிறந்த அண்டை வீட்டுக் காரர் பட்டத்தை பெற முடியும்.

ஊடுருவுதலைப் பற்றி இப்போது பார்ப்போம்...நீங்கள் ஏற்கனவே ஒரு அபார்ட்மென்டில் வசித்துக் கொண்டு இருக்கிறீர்கள்.அங்கே புதிதாக ஒரு அண்டை வீட்டுக் காரர் குடியேறுகிறார்.(கவனம் இதற்குப் பெயர் ஊடுறுவுதல் இல்லை),வந்த கொஞ்ச நாட்களில் அந்த அண்டை வீட்டுக் காரர் நீங்கள் பயன்படுத்தும் பல இடங்களில் ஊடுருவுகிறார்.. உதாரணமாக துணி உலர்த்தும் இடம்...இரண்டு சக்கரமோ...நான்கு சக்கரமோ எதோ ஒன்றை பார்க் செய்யும் இடம்.வடாம் காய வைக்கும் இடம் .நீங்கள் அரட்டை அடிக்கும் இடம் .இப்படிப் பல இடங்கள்.இதை ஆக்கிரமிப்பு என்று சொல்ல முடியாது ஏனென்றால் அது கொஞ்சம் பெரிய வார்த்தை. அண்டை வீட்டுக் காரர்கள் ஊடுருவிய இடங்கள் எல்லாம் நமது தொடர் கண்காணிப்பில் சில பல வாய் சண்டைகளின் பின் உடனே மீட்கப் பட்டு விடும்.(மறுபடியும் ஊடுறுவுதல் நிகழாது என்று சொல்வதற்க்கில்லை...அது என்றென்றும் ஒரு தொடர் நிகழ்வே!!!(தொடர் பதிவு போல!)

ஆக்கிரமிப்பு என்பது என்னவென்றால் எத்தனை வாய் சண்டைகள் போட்ட பின்னும் நமது அனுமதியே இன்றி நாம் பயன்படுத்தும் இடங்களை அஆக்கிரமித்துக் கொள்வது.அவர்களது பயன்பாதடுக்கும் இடம் போதிய அளவில் தாராளமாய் இருந்த போதும் இதை செய்தால் அதுவே ஆக்கிரமிப்பு.உதாரணமாக அவர்களுக்கு கார் பார்க் செய்ய தனி இடம் இருக்கும் அங்கே காரை நிறுத்திக் கொள்வார்கள்.ஆனால் காரை வெளியில் எடுக்கும் போதெல்லாம் ஒவ்வொரு முறையும் நாம் நமது வாகனம் நிறுத்தும் இடத்தில் தான் அவர்களது கார் கவரை(காரை மூட பயன்படுத்தும் உறை ) ஒவ்வொரு முறையும் மறக்காமல் போட்டு வைப்பார்கள்,இந்த விசயத்தில் மட்டும் ஞாபக மறதி என்பதே கிடையாது போல!

இவர்களை என்ன தான் செய்வது அதையாவது ஒழுங்காக மடித்து ஒரு இடத்தில் வைத்து விட்டுப் போகலாம் !முழு அபார்ட்மெண்டும் அவர்களுக்குத்தான் சொந்தம் என்பது போலவே ஓவொரு முறையும் அவர்களது நடவடிக்கை இருக்கும்.இவர்களை என்ன செய்யலாம்?எடுத்து நீட்டாக மடித்து ஒரு இடத்தில் ஓரமாக வைத்து விட்டுப் போகச் சொன்னால் ...காலையில் காரை எடுக்கும் அவசரத்தில் ஒவ்வொரு முறையும் கவரை மடித்து மடித்து வைத்து விட்டுப் போக முடியுமா ? என்று நம்மை முறைப்பார்கள்?! இதெல்லாம் ஆக்கிரமிப்பில் சேர்த்தி தானே?! பிறகு நம் வண்டியை நாம் எங்கே பார்க் செய்து கொள்வதாம்? வீட்டுக்குள்ளா?

வேறு வழியே இல்லை அந்தக் கார் கவரை தூக்கி காம்பவுண்டு சுவருக்கு வெளியே வீசுவதை தவிர!அதை தான் செய்து பார்க்க வேண்டும் இனி!!!

10 comments:

குடுகுடுப்பை said...

ரொம்ப கோபமா இருக்கீங்க போல, பதிவு எழுதாட்டி தேவ் மேல காட்டிருப்பீங்க.வாழ்க பதிவுலகம்.

//
தூக்கி வெளில போடுங்க பாத்துக்கலாம்.கேட்டா குடுகுடுப்பைக்காரர் சொன்னார் சொல்லுங்க.

மிஸஸ்.டவுட் said...

//குடுகுடுப்பை said...
ரொம்ப கோபமா இருக்கீங்க போல, பதிவு எழுதாட்டி தேவ் மேல காட்டிருப்பீங்க.வாழ்க பதிவுலகம்.

//
தூக்கி வெளில போடுங்க பாத்துக்கலாம்.கேட்டா குடுகுடுப்பைக்காரர் சொன்னார் சொல்லுங்க.
//

சொல்லிடறேன் ...அப்படியே ஆகட்டும்

முரளிகண்ணன் said...

cool

நட்புடன் ஜமால் said...

அப்பார்ட்மெண்டின் அவலம் இதெல்லாம்,

என்ன செய்ய life has to go ...

(எழுத்து ஒரு வடிகால் ...)

கோபம் குறைந்ததா ...

துளசி கோபால் said...

எமோஷனல் ஊடுருவலை ( என்னமோ வறுவல் நினைவு வருது) என்ன செய்யலாம்னு தெரியாமல் முழிச்சுக்கிட்டு இருக்கேன் இங்கே.

பக்கத்துவீட்டு ஆட்கள் அப்பப்ப நாலு நாள் அஞ்சுநாளுன்னு குடும்பத்தோடக் காணாமப் போயிடறாங்க. பள்ளிக்கூடம் இன்னும் திறக்கலை. கோடைவிடுமுறை நடக்குது.

போயிட்டுப்போகட்டும் நமக்கென்னன்னு விடமுடியலை. நாயையும் பூனைகளையும் விட்டுட்டுப் போயிடறாங்க. தினம் பெட் மைண்டர் (அது நண்பர்கள் குடும்பமுன்னு நினைக்கிறேன்) வந்து அதுகளுக்குச் சாப்பாடு கொடுத்துட்டுப் போறாங்க.

பூனைகள் கூடுதல் சாப்பாட்டுக்கு நம்ம வீட்டு விருந்தாளிகளா வந்து போகுது. கட்டிப்போட முடியாத கண்மணிகள்.

நாயைக் கட்டிப்போடலை. ஆனால் பின்பக்கத் தோட்டத்துலே விட்டு வச்சுருக்காங்க. சுற்றிவர நல்ல தடுப்பு உண்டு. ஆள் தப்பி ஓட முடியாது.

இந்த நாய் ரெண்டுவயசு ஆனது. மனுசங்ககூட அதுக்கு இருக்கணும். தனியாக் கிடந்து போரடிச்சுக்கிட்டுக் கிடக்கு.

குலைச்சால் பரவாயில்லை. ஆனால் ஊளையிட்டு அழுது எப்பப் பார்த்தாலும்.

நான் தோட்டத்தில் ஃபென்ஸுக்கு இந்தப் பக்கம் இருந்து பேசிக்கிட்டே நிக்கறேன். கொஞ்சம் சமாதானமாகும். உள்ளே வந்துட்டால் அழ ஆரம்பிச்சுருது.

பேசாம எஸ் பி சி ஏ வுக்கு ஒரு ஃபோன் போடலாம். அடுத்தவீட்டுக் காரரின் நட்பு(????) போயிருமே.

இதுக்கு ஒரு வழி யாராச்சும் சொல்லுங்க.

நீங்க உங்க கதையைச் சொன்னதும் நான் என் கண்ணீர் கதையை உணர்ச்சிவசப்பட்டுக் கொட்டிட்டேன்.

SUREஷ் said...

இதுதான் சூடான இடுகையாக இருக்கிறது...........

அன்புடன் அருணா said...

அச்சச்சோ எவ்வ்ளோ தாங்கறோம்..?இதைத் தாங்கிக் கொள்ள மாட்டோமா??
அன்புடன் அருணா

மிஸஸ்.டவுட் said...

//முரளிகண்ணன் said...

cool

நன்றி முரளிகண்ணன்.

மிஸஸ்.டவுட் said...

//குடுகுடுப்பை

நட்புடன் ஜமால்

முரளி கண்ணன்

சுரேஷ்

அன்புடன் அருணா

வந்தவுங்களுக்கும்...கதையக் கேட்டு ஆறுதல் சொன்னவுங்களுக்கும் ரொம்ப...ரொம்ப நன்றிங்க ...

வீ. எம் said...

ஒரு சின்ன யோசனை.. ! முயற்சித்து பாஅருங்கள்..
அடுத்த இரண்டு முறை அந்த கவரை நீங்களோ, தேவ் அவர்களோ சேர்ந்து மடித்து, அது இருக்க வேண்டிய இடத்தி வைத்துவிட்டு போய் பாருங்கள்.. (அவர்களிடமும் நீங்கள் தான் மடித்து வைத்தீர்கள் என்று சொல்லுங்கள்)

இது என அனுபவத்தில் நடந்தது .. பலன் தந்தது..