அண்டை வீட்டார் ' -என்றொரு நாவல் .
பி.கேசவ தேவ் எழுதி சாகித்ய அகாடமி பரிசு பெற்ற மலையாள நாவல்
விலை ரூ -100
புத்தக் காட்சியில் வ.உ.சி.நூலகத்தில் வாங்கினேன் .
நேற்றிரவு இதை வாசித்ததிலிருந்து அந்த மக்களின் வாழ்விலிருந்து யோசனைகளை அகற்றிக் கொள்ளவே முடியவில்லை.இரண்டு தலைமுறைகளுக்கு முந்தைய கதையாக இருக்கலாம்.ஆனால் அதில் காட்டப் பட்டிருக்கும் பெண்களின் நிலைகளைப் பொறுத்தவரை இன்றும் தொடரும் கதையாகத் தான் தோன்றுகிறது.
பவானி பச்சாழி வீட்டுக் காரணவன் பப்புக் குரூப்பால் கடிமணம் செய்து கொள்ளப் படுவதில் தொடங்கி .கமலாட்சியும் சரோஜினியும் குடிகாரர்கள் மட்டுமல்லாது கொடுமைக்காரர்க்களுமான ஊதாரிக் கணவர்களுடன் பயந்து பயந்து வாழ்ந்து விவாகரத்தாவதும் .
ஈழவனான வீட்டு மேல் வேலைக்காரன் குஞ்சனின் அதிகாரம் சகிக்காது தேவகி இவர்களைப் பற்றி அனாசாரமாக அவதூறு பரப்புவதும் .மங்கல சேரி தரவாட்டின் காரணவர் பத்மனாபப் பிள்ளை தங்கைகளுக்காக தன் மனைவியைத் தள்ளி வைத்து தாட்சாயிணியை மணப்பதும்
.அம்முக் குட்டி தன்னை விரும்பி மணந்து கொண்ட கணவனை பைத்தியக் காரனாக்கி விட்டு அய்யப்ப குரூப்பின் ஆறாம் மனவியாவதும் ஐயோ இந்த மருமக்கத் தாய முறை சம்பந்தத்தில் பெண்களுக்கேது பாதுகாப்பும் மரியாதையும் கொட்டிக் கிடக்கிறதாம்?!
அப்படியும் இந்தக் கதையில் சகட்டு மேனிக்கு வரும் கடா புடா பாத்திரங்களில் மிக்க மரியாதைப் பட்ட ஒருத்தியாக குஞ்சு லக்ஷ்மியைச் சொல்லலாம் .அவளுக்கடுத்து அதே துணிவும் கொடுமைகளுக்கு பதறி துடித்தெழும் பத்ரகாளித் தனமும் அவளது பேத்தி சுமதிக்கு வாய்த்தது .மிகுந்த சிந்தை தெளிவு உள்ள சுமதி பச்சாழி அச்சுதக் குரூப்பை மருதத் பாஸ்கரனை மணந்து சுகப் பட்டாலும் .இடை வழி போன விதி அவளை விதவையாக்கி அண்ணன் வீட்டில் அடைக் கலமாக்குகிறது.
இங்கேயும் இந்தப் பெண்களின் விதியைப் பாருங்கள்!நாயர் குடிப் பெண்கள் ஒரு குடும்பத்தின் காரனவரின் மனைவியாய் இருந்தால் கணவர் இறந்ததும் அவரது உடலைத் தகனம் செய்யும் முன்னே அந்த நாயர் மனைவியும் மனைவிக்குப் பிறந்த வாரிசுகளும் அக்கணமே அவ்விடம் விட்டு நீங்கியே ஆகா வேண்டுமாம் .இது அப்போதைய விதி. இதே சம்பவத்தை லலிதாம்பிகா அந்தர் ஜனத்தின் 'அக்னி சாட்சி' நாவலிலும் நாம் காணலாம்.
நாயர் குடியில் ஆண்கள் எத்தனை சம்பந்தங்கள் வேண்டுமானாலும் செய்து கொள்ளலாமாம் .பெண்களும் செய்து கொள்ளத் தடை இருந்ததாகத் தெரியவில்லை. இல்லா விட்டால் தேவகி பத்ம நாபப் பிள்ளையோடு விவாக உறவு தீர்ந்து போன பின் வெளிநாடு போய் வந்த 'பரங்கிப் புண்' பிடித்த குட்டன் பணிக்கரின் மனைவியாகி பிறகு வைப்பாட்டியாகவும் ஆகும் நிலை வந்திருக்குமோ?!
இந்தக் கதையில் பரிதாபமிக்கவர்களாக சித்தரிக்கப் பட்டிருப்பவர்கள் பத்மநாபப் பிள்ளையும் அவரது அத்யந்த வேலைக்காரன் குஞ்சன் தன்டனும் தான் .பத்மநாபப் பிள்ளையின் ஒரே தவறு அவர் மனிதாபிமானம் கொண்டவராக இருந்தது ஒன்றே .
நாவலில் மிகக் கடுமையான ஆட்சேபத்தை அசூயையான பொறாமையை ஏற்படுத்துவது யாரெனக் கண்டால் அது குட்டன் பணிக்கர் கூட இல்லை ,அவன் கெட்டவனாயினும் அவனது கெடு குணம் வெளித்தன்மை கொண்டதாய் இருந்தது .ஆயினும் இந்தக் குஞ்சு வரீது இருக்கிறானே குஞ்சு வரீது அவனைமன்னிக்க ஏலவில்லை.என்ன ஒரு கயமைத் தனம் .
அவன் கடும் உழைப்பாளியாய் இருக்கட்டும் . சம்பாதிப்பதை எல்லாம் ஒரு காசு வீணாக்காமல் சேர்த்து வைத்துக் காப்பவனாகவும் இருக்கட்டும்,அவன் மனைவி சதா உழைத்துக் கொட்டும் சாமர்த்தியக்காரியாய் இருக்கட்டும் ஆனால் பத்ம நாபப் பிள்ளை கடனாளியாக இவனே அல்லவோ முதல் காரணம் ஆகிறான்.
அதற்காக இடத்தைக் கொடுத்தால் மடத்தைப் பிடித்த கதையாக அவனது வருகை ஆமை புகுந்த ஆமீனா புகுந்த கதையாக மங்கல சேரி பத்ம நாபப் பிள்ளை குடும்பத்துக்கே பிரளயமாக வந்து தொலைந்திருக்க வேண்டாம். அவரிடத்தில் இனாமாகப் பெற்ற நிலத்தில் பயிர் செய்து அதை எடுத்து விற்று அந்தப் பணத்தை அவருக்கே வட்டிக்கு விட்டு புரோ நோட்டு எழுதி வாங்கி வைத்துக் கொண்டு எல்லாச் சொத்தையும் மீன் போல அரித்து அரித்து வாங்கிக் கொண்டு தனக்கொரு மாளிகை கட்டிக் கொண்டு அவனது இருப்பைக் காணும் போது சுமதிக்கு பொறாமையில் கண்ணோரம் கரிப்பதொன்றும் தகாத செயல் அல்ல தான்.
மகன் ராமச்சந்திரனின் மேற்படிப்புக்காக தாய் சுமதி குட்டன் பணிக்கரின் முறையற்ற கேடு கேட்ட சதிக்கு பழியாகி நோய் வந்து இறந்து போவது இந்த வாழ்கையின் இரக்கமற்ற எதேச்சதிகாரத் தன்மைக்கு ஒரு சோறு பதம். அதே தேவகி குட்டன் பணிக்கருக்கு பலியாவது மிக்க உசிதம் என்று தோன்றாவிட்டாலும் கூட அவளுக்கு அந்தக் கதி வந்ததே என்று ஒருவரும் வருத்தப் படாது இருப்பதும் இந்த சமூகத்தின் எதேச்சதிகாரத் தன்மைக்கு உதாரணமே!
ஒரே ஜாதியைச் சேர்ந்த இரு புராதனப் பெருமை கொண்ட குடும்பங்களுக்கிடையே நிகழும் வன்மங்கள் கடைசியில் குடும்பப் பெருமைகளைக் குலைத்து மண் மூடிப் போகச் செய்வதோடு அந்தக் குடும்பங்களின் ஸ்திரீ விளக்குச் சுடர்களையும் எந்த அர்த்தங்களும் பெருமைகளும் இன்றி அழிந்து போகச் செய்கிறது.
சுமதி தூக்கில் தொங்கும் போது ஆன்ஜிலி மரத்தை வெட்ட வேலைக்காரனோடு தலைமை தாங்கிச் செல்லும் குஞ்சு லக்ஷ்மியின் முகம் மனத்திரையில் வந்து போகிறது.
இந்தப் பெண்கள் பாவப்பட்டவர்கள் .ஆண்களும் தான் .அவர்களுக்கு உழைப்பின் ருசி காட்டப் படவில்லை. உழைப்பதற்கும் நேர் செய்வதற்கும் ஈழவனான ஒரு குஞ்சன் தண்டன் தேவைப் படுகிறான் இந்த வீட்டுக்கு.அவனல்லாத போதில் குடும்பம் சிதைகிறது எனில் இந்தக் குடும்பம் சிதவைடையத் தக்கது தான். தன்னைத் தானே சூதானம் செய்து கொள்ளத் தெரியாத குடும்பங்கள் இருந்தென்ன போயென்ன?!
இவர்களை விட சம்பாதனையிலும் சம்பாதிப்பதை சேர்த்து வைத்துக் கொள்வதிலும் ஆர்வம் கொண்டு குடும்பம் பாழ பட்ட பின் உறவுகளைப் புறம் தள்ளி தானுண்டு தான் வியாபாரம் உண்டு என கடமையே கண்ணாயினனாக மாறிப் போகும் ராஜசேகரன் பரவாயில்லை .
பத்ம நாபப் பிள்ளையிடம் குஞ்சன் தண்டனின் பிள்ளைகள் நடந்து கொள்ளும் முறைகள் அவரிடத்தும் இந்த சமூகத்தின் தூரப் பார்வை முன்னும் அநியாயம் போலிருந்தாலும் காலம் காலமாய் தம்பிரான்களாலும் தம்பிராட்டிகளாலும் ஆளப் பட்டு அழுத்தப் பட்ட அவர்களது சுய அடிமைத் தனத்தை சகித்துக் கொள்ள முடியாத அடுத்த தலைமுறையினரின் சுய மரியாதை சர்ப்பம் தீண்டிய கோபத்தின் முழு வீச்சும் கிளர்ந்து எழும் போது என்ன தான் மனிதாபிமானியானாலும் பத்மநாபப்பிள்ளை வெறும் மனிதராக மதிக்கத் தக்கவரே அல்லாது அவரொன்றும் எஜமானர் அல்ல எனும் உறுதியை குஞ்சனின் பிள்ளைகளில் வாசுவோ,திவாகரனோ,யசோதரையோ எவரும் கை விடவே இல்லை. இவர்கள் பால் மரியாதை ஏற்படுத்திய ரசம் மிக்கதோர் இடம் இது.
பாவப் பட்ட கல்யாணி குஞ்சனின் மனைவியாக வந்து போகிறாள். அவளில் குறையும் இல்லை நிறையும் இல்லை.
எது எப்படியோ மூன்று தலை முறைகளாக மங்கலசெறிக் குடும்பத்தின் வேலைக்காரனாய் இருந்து மூத்த எஜமானத் தம்பதிகளுக்கு வைசூரி வந்த காலத்திலும் சரி கூட அங்கிருந்து விலகாது குடி காத்து கடைசியில் தேவகி இட்டுக் கட்டிய ஊராரின் அவச் சொல் தாளாது பரதேசம் மேற்கொள்ளும் குஞ்சன் எப்படியோ தான் எஜமானனைத் தேடிக் கொண்டு வந்து அவரது அந்திமக் காலத்தை யானைக் கெத்து கழியாது காக்க துணை இருப்பதும் கூட்டிச் செல்வதும் மேற்குத் தொடர்ச்சி மலை கிடங்குகளில் சூரியன் ஆழ்ந்த பின்னான முன்னிரவுக்கான குறியீட்டைப் போல அத்தனை ஒரு அமைதியான நிறைவு.
"இனி மேல் என்ன குஞ்சா ?"
யானையைக் கொட்டிலில் அடைத்து விடக் கூடும் என்ற பயம் மேலெழ பிள்ளை கேட்பதும் அதற்கு குஞ்சன் என்னவோ பதில் சொல்வதும்
துவக்கப் பக்கங்களில் குஞ்சன் வாக்குகளான ..."பிரளயம் வந்திட்டுது எஜமான் "எனும் சொல்லும் கதை வாசித்து முடித்த பல மணி நேரங்கள் கழிந்த பின்னும் இன்னும் காதோடு ஒலித்துக் கொண்டே இருக்கின்றன.
' பட்டால் தான் புத்தி ' -இந்த நாவல் மிகச் சிறந்த உதாரணம் .
2 comments:
நானும் இந்த நாவலை படித்திருக்கிறேன்... இன்னும் கூட அந்த பெண் கதாபாத்திரங்களின் வாழ்வு என்னால் மறக்க இயலாததாக இருக்கிறது... கதை நினைவுக்கு வரும் போதெல்லாம் எங்கிருந்தோ ஓர் இனம் புரியாத சோகம் வந்து மனதை கவ்விக் கொள்கிறது.. பகிர்தலுக்கு நன்றி
நானும் இந்த நாவலை படித்திருக்கிறேன்... இன்னும் கூட அந்த பெண் கதாபாத்திரங்களின் வாழ்வு என்னால் மறக்க இயலாததாக இருக்கிறது... கதை நினைவுக்கு வரும் போதெல்லாம் எங்கிருந்தோ ஓர் இனம் புரியாத சோகம் வந்து மனதை கவ்விக் கொள்கிறது.. பகிர்தலுக்கு நன்றி
Post a Comment