Friday, June 3, 2011

தி.ஜா.வின் அமிர்தம் நாவல் :









போன வாரமெல்லாம் என்ன செய்து கொண்டிருந்தேன் ?




தி.ஜா வின் 'அமிர்தம் ' நாவல் வாசித்தேன் .அவருடைய முதல் நாவலாமே இது? வாசிப்பிற்கு குந்தகமில்லை,ஆனால் முடிவு தான் எனக்கென்னவோ மெகா சீரியலை ஞாபகப்படுத்தியது ,அந்த நாவலை அப்படித் தான் முடிக்க வேண்டும் போல! தி.ஜா வுக்குத் தெரியாததா? அமிர்தத்தை காட்டிலும் துளசி மற்றும் குசலம் இருவரும் ரசிக்க வைக்கிறார்கள் தங்களின் குண இயல்புகளால். சபேச முதலியார் நடப்புலக பிரதிநிதி .அவருக்கு அமிர்தத்தின் மீது இருக்கும் ஆசையை காட்டிலும் சமூகத்தில் தன் கௌரவத்தின் மீதான பிரேமை மிக அதிகமாய் இருக்கின்றது.





சபேச முதலியார் நல்லவர் தான்,அவருக்கு அமிர்தத்தின் தகப்பனார் வயது கூட இருந்து விட்டுப் போகட்டுமே! ஆனாலும் அவரால் அமிர்தத்தை இரண்டாம் தாரமாக்கி மனைவியாகவெல்லாம் நினைத்துப் பார்க்க இயலாது தாசி என்றால் அவளை பணத்தை கூட்டிக் கொடுத்து அரங்கேற்றம் செய்து தனக்கே தனக்கென்று வைத்துக் கொள்ளத் தான் வேண்டும்,தாலி கொடுத்து கல்யாணம் செய்து கொள்வதெல்லாம் அதிகப் படி என்ற எண்ணம் தான் முதலியாருக்கு .இறந்து போன முதல் தாரத்தின் மகன் சித்தப்பாவுடன் ரங்கூனுக்குப் போனவன் திரும்பி வரும் வரை எல்லாம் நாவல் சீராகத் தான் போகின்றது.





அப்பாவுக்கும் மகனுக்கும் ஒரே பெண் மீது காதல் உண்டானால் என்ன ஆகும் ?





அமிர்தம் தான் ஒரு கணிகை என்று அடையாளம் காணப் படுவதை வெறுக்கிறாள். அவளை கட்டாயப் படுத்தி சபேச முதலியாரின் சிநேகத்தை ஏற்படுத்தி வைத்த அவளது அம்மா குசலமும் கூட இறந்து போன பின் அவள் பாவம் என்ன செய்வாள்.முதலியாரிடத்திலும் தனது விருப்பமின்மையைச் சொல்லி அவரையும் தூர நிறுத்திய பின் தான் முதலியாரின் மகனைக் கண்டு காதல் கொண்டாள் அவள். அமிர்தம் களங்கமற்றவள் என்பது முதலியாரும் அறிந்ததே .அப்படி இருந்தும் ஒரு கணிகை தன் வீட்டு மருமகள் ஆவதா ?என்ற அடக்க முடியாத சீற்றம் ...தான் ஆசைப் பட்ட பெண்ணை தன் மகனை விரும்புவதா என்ற பொறாமை ,எல்லாம் கலந்து நேசம் கொண்ட இருவரின் காதலைப் பிரித்து தூரப் போடும் வேலையை முதலியாரின் கடிதம் செய்கிறது.






தன்னை அபாண்டமாக விமர்சித்து எழுதப் பட்ட அந்தக் கடிதம் கண்டதும் அமிர்தம் அந்த ஊரை விட்டு பொய் விடுகிறாள். முதலியாரின் மகன் அமிர்தம் இல்லாமல் தனக்கு இங்கே வேலை இல்லை என்று மீண்டும் ரங்கூன் போய் விடுகிறான்.





மீண்டும் தனித்தவர் ஆகிறார் முதலியார். நிச்சயம் அவர் அதற்காக வருத்தப்பட்டிருக்க மாட்டார் என்றே நம்ப வேண்டியதாய் இருக்கிறது. அவருக்கு தன் மருமகள் ஒரு கணிகை என்பதைக் காட்டிலும் தன் மகனுக்கு கல்யாணமே ஆகாமல் போனாலும் தேவலாம் என்ற மனநிலை தான் நாவலில் தெளிவாய் காட்டப்பட்டிருக்கிறதே.





நாவலைப் பொறுத்தவரை அன்றைய காலகட்டத்தில் ஒழிக்கப்பட வேண்டிய ஒரு பிரச்சினையின் தீவிரம் குறித்த கவலை எல்லாம் காணப் படவில்லை. ஒரு சமூகப் பிரமை பிடித்த ஒரு பணக்கார நடுத்தர வயது ஆணின் மனநிலை,தான் வளர்ந்த விதம் மற்றும் தனித்தியங்க பயிற்றுவிக்கப்படாத நிலையில் வளரும் ஒரு தாசிப்பெண்ணின் மனநிலை, இவர்களுக்கிடையில் அகஸ்மாத்தாய் வந்து மாட்டிக் கொண்டு அலைக்கழியும் ஒரு இளைஞன் . குலத்தொழில் என்ற பெருமை பேசுமிடத்து குசலத்தை நினைக்கையில் பரிதாபமாய் இருக்கிறது .வேலைக்காரியானாலும் துளசியும் அவள் கணவன் வேலுவையும் மறக்க முடியாது இந்நாவலில் .



கொஞ்ச நேரமே வந்தாலும் புது வேலைக்காரி மீனி (என்ன பெயரோ சீனி...சாணி என்று!!!) ஆடி வெள்ளி படத்தின் வெள்ளிக் கிழமை ராமசாமி போல சிரிப்பு மூட்டி விட்டு குசலம் கிணற்றடியில் வழுக்கி விழக் காரணமாகி ஒரு வழியாய் அவளை கொன்று விட்டே வேலையை விட்டு நிற்கிறாள்.



அமிர்தம் என்ன முடிவெடுத்தாள் ?



அதை நாவலை வாங்கி வாசித்து விட்டு தெரிந்து கொள்ளலாம். கட்டாயம் வாசித்தே ஆக வேண்டும் என்றில்லை ,மனம் ஒரு சிக்கல் விழுந்த நூல் கண்டு தான். என்று தி.ஜா வழக்கம் போல நிரூபித்திருக்கிறார் இந்நாவலிலும்.










2 comments:

அகநாழிகை said...

நாவலைப்பற்றிய பகிர்வு அருமை.

சே.வேங்கடசுப்ரமணியன் said...

அமிர்தம் ஓர் அழியா காவியம்.தி.ஜா வின் பாத்திரப் பெயர்கள் யதார்த்தம் நிரம்பியவை.அமிர்தம் பற்றி மீண்டும் படிக்க வேண்டும் எனத் தூண்டிய பதிவு.தி.ஜா எழுத்து முறை பற்றி இங்கே வாசிக்கலாம்.http://ninaivu.blogspot.com/2010/11/17.html