Sunday, May 1, 2011

கொஞ்சம் தேநீர் கொஞ்சம் கவிதை

நேற்று காலை 8.30 க்கு பொதிகையில் "கொஞ்சம் தேநீர் கொஞ்சம் கவிதை " நிகழ்ச்சியை பார்க்க வாய்த்தது.

கவிஞர் கலாப் ப்ரியா ,கவிஞர் ரமணன் ,கவிஞர் மதுமிதா மூவரும் கவிதைகளைப் பற்றிப் பேசினார்கள் .


பொதுவில் எனக்கு கவிதை அத்தனை பரிச்சயமில்லை ,ஏதோ பள்ளி கல்லூரிகளில் கவிதைப் போட்டிகளில் கலந்து கொண்டு பரிசு வாங்கிய கெத்தில் இங்கே கவிதை என்ற பெயரில் எதையோ எழுதிக் கொண்டிருப்பேனே தவிர எனக்கு கவிதை குறித்து பெரிதாகவோ சின்னதாகவோ ஒன்றுமே தெரியாது தான்.


அகநாழிகை வாசுவின் கவிதையை மதுமிதா வாசிக்கப் போகிறார் என்று குறுஞ்செய்தி பார்த்து விட்டுத் தான் நானும் தேவ் ம் 'கொஞ்சம் தேநீரைப் ' பார்க்க ஆரம்பித்தோம் . "புசிக்கத் தூண்டும் ப்ரியங்கள்" என்ற கவிதையை நினைவுகளின் தாக்கங்களைப் பற்றிய கவிதை என்ற அறிமுகத்தோடு மதுமிதா வாசித்தார்.இந்தக் கவிதை பிடித்திருந்தாலும் கூட வாசுவின் தொகுப்பில் இதை விடவும் வாசிக்கப் பிரியமான கவிதைகள் இருந்தனவே ப்ரியங்களின் நினைவுகளைப் பற்றிய கவிதை என்பதால் இந்தக் கவிதை வாசிக்கப் பட்டதோ என்று சொல்லிக் கொண்டிருந்தேன் தேவ் இடம் . நானாவது தேவலாம் அவருக்கு கவிதை என்றால் கால் வீசை (!!!) என்ன விலை கதை தான்.


இருந்தாலும் நான் கேட்டதற்கு பதில் சொல்லியே ஆகவேண்டுமென்ற கட்டாயம் எதுவும் இல்லாத போதிலும் கூட மனைவிக்குப் பதில் சொல்லும் கடமை தவறாது ;

"அவங்களுக்குப் பிடிச்ச கவிதையை அவங்க வாசிக்கிறாங்க என்றார். "

"ஆமாமில்ல ?! "


தமது மருதாணிக் கவிதையை ரமணனின் வேண்டுகோளுக்கு இணங்க கலாப்ரியா வாசித்துக் காட்டினார்.மருதாணி மனம் கமழ்ந்தது . பகல் மருதாணி பகலில்வைத்துக் கொண்டால் தான் சிவக்கும் , இரவு மருதாணி இரவில் வைத்துக்கொண்டால் தான் கை சிவக்கும் என்று கலாப்ரியா கவிதை வாசிக்கும் முன்புசொன்னார்.


மருதாணி கவிதையில் மணந்து மணந்து மனம் கமழ்ந்தது .ஒரு மருதாணி ஒருகுடும்பம் முழுமையும் எப்படி ஆகர்ஷித்துக் கொள்கிறது என்பது படம் போலவிரிந்தது மனதில் கவிதை வாசிக்கப் பட வாசிக்கப் பட. மிக அழகான கவிதைஇது. ரசனையோடான துன்பியல் அழகு.


மருதாணிக் கவிதைக்கு முன்பு பின்போ ரமணன் தமது பிராயத்தில் முப்பதுவருடங்கள் முன்பு தாம் எழுதியதென ஒரு கவிதையை வாசித்துக் காட்டினார்.


ரயில் பயணத்தில் ஒரு பெண் சக பயணியாக ஒரு இளம் பெண் வெறுமே இளம்பெண்என்றால் பொருந்துவதில்லை மனதுக்குகந்த அல்லது பார்த்த கணத்திலேயேமனதுக்கு இசைவான ஒரு பெண்ணை காண நேர்கிறது . அவள் யாரோ ? எந்த ஊரோ ?எங்கு போகிறாளோ ? ஆனால் பீர்க்கங்கொடியாக படர்ந்து விட்ட பிரியத்தில்வந்து உதிக்கிறது ஒரு கவிதை .இந்தக் கவிதையை ரமணன் வாசிக்கக் கேட்கையில்கேட்கையில் அத்தனை அருமையாக இருந்தது . கவிதை வரிகள் இப்போது நினைவில்இல்லை எனக்கு .


கவிதை யின் அவசியம் என்ன என்பதற்கான பதிலாக கலாப்ரியா சொன்னது;


ஒரு சாலையில் சென்று கொண்டிருக்கையில் எனக்கு முன்னே செங்கல் நிரப்பிய ஒரு மாட்டு வண்டி ஒன்று மறித்துக் கொண்டு பாதை விடாமல் போய்க் கொண்டிருந்தது ,ஒதுங்கிச் செல்லவும் முடியாமல் தாண்டிப் போகவும் முடியாமல் அதன் நிதானத்திற்கு ஈடு கொடுத்து மிக மந்தமாக அதற்குப் பின்னே நடந்து சென்றாக வேண்டிய கட்டாயத்தில் என் மனநிலை மிக எரிச்சலான சூழ்நிலையில் வண்டியிலிருந்து ஒரு செங்கல் நழுவி சாலையில் விழுந்தது ,அதைக் கண்டதும் ஞானக் கூத்தனின் செங்கல் கவிதை ஒன்று ஞாபகம் வந்தது .


"சூளைச்செங்கல்லிலிருந்து தனித்துச் சரிகிறது ஒற்றைக் கல்"

எனும் கவிதையை அப்போதைய என் வாழ்வியல் சூழ்நிலையில் அந்நேரம் பொருத்திப் பார்த்ததும் சூழலின் வெறுமை மறைந்து மனம் லேசாகி விட்டது .இப்படி கவிதை என்பது வாழ்வை ரசிக்க நமக்கு பல நேரங்களில் கற்றுத் தருவதால் கவிதைகளால் வாழ்வு ரசனையாக்கப் படுகிறது. அதனால் கவிதைகள் ரசிக்கப் படுகின்றன. கவிதைகளால் வாழ்வும் ரசனைக்குரியதாக ஆக்கப் படுகிறது என்ற பொருளில் கலாப்ரியாவின் விளக்கம் ஏற்றுக் கொள்ளக் கூடியதாக இருந்தது.


மேலும் சில கவிதைகளை வாசித்துக் காட்டுகையில் மிக எளிதான ஆங்கிலக் கவிதை ஒன்றை கலாப் ப்ரியா பகிர்ந்து கொண்டார்.
E = Mc 2 (இந்த 2 வை square என்று வாசித்துக் கொள்ளுங்கள் .கீ போர்டில் square எப்படிப் போடுவதென தெரியவில்லை எனக்கு :( , கவிதைக்கான தலைப்பே இது தான்.

E = Mc 2


"He erased Hiroshima
By a piece of chalk !"


இரண்டே வரிகளில் மிக ஆழமான கவிதை .

அடுத்து ;


வியட்நாம் 'போர்' பற்றிய ஹிந்திக் கவிதை ஒன்று ; போரின் அலங்கோலத்தை விளக்கும் " கபாலத்தில் வண்ணத்துப் பூச்சி " என முடியும் குறுங்கவிதை ஒன்று முதல் வரி எனக்கு ஞாபகமில்லை .கலாப்ரியா வாசித்துக் காட்டுகையில் நுட்பமான கவிதை எனப் பட்டது. வியட்நாமியப் போரின் அவலத்தைப் பற்றி ஒரு மராட்டியக் கவிஞன் தனது உணர்வுகளை இவ்விதம் பகிர்ந்து கொண்டது தான் உலகம் முழுவதையும் ஒன்றிணைப்பதான கவிதை எனும் வடிவத்தின் வெற்றி என்பதாக அவர்களுடைய உரையாடல் நீண்டது .


மதுமிதா அக்கமகா தேவி உட்பட இன்னும் சிலரது கவிதைகளை வாசித்துக் கட்டினார் .


எனக்குத் தோன்றிக் கொண்டிருந்தது ; கவிதை என்பது வெறுமே எழுதி வைத்து விட்டுப் போவதில் மட்டும் இல்லை அதற்கான பூரணத்துவம் என்பது அந்தக் கவிதை மிகச் சரியான விதத்தில் வாசிக்கப் படுவதிலும தான் இருக்கிறது என்று நிகழ்ச்சியை பார்க்கத் தொடங்கிய கணத்தில் இருந்தே தோன்றிக் கொண்டே இருந்தது ,அதற்கு காரணம் கவிஞர் ரமணன் .


மனிதர் என்னமாய் கவிதை பாடுகிறார்!


வெகு அருமையாக இருந்தது கேட்கக் கேட்க . கடந்த வருடத்தில் ஒரு நாள் எஸ் எஸ் மியூசிக் சேனலில் உமா சக்தி கலந்து கொண்ட கவிதை நிகழ்ச்சி ஒன்றில் அவருடன் கலந்து கொண்ட ஒரு கவிஞர் எனக்கு இப்போது பெயர் மறந்து விட்டது . ஞானக் கூத்தனின் "அம்மாவின் பொய்கள் " மிக அருமையாக கவிதையை வாசித்துக் காட்டினார். அப்போதே தோன்றியது தான். கவிதையின் நிறைவு அது வாசிக்கப் படும் விதத்திலும் தான் இருக்கிறதென.


இது என் கருத்து மட்டுமே .இதில் யாருக்கும் ஏன் கவிஞர்கள் பலருக்குமே உடன்பாடில்லாமலும்இருக்கலாம். அதைப் பற்றி எனக்கென்ன?! :)


ஒவ்வொரு வாரமும் கவிஞர் ரமணன் தான் இந்த நிகழ்ச்சியில் கவிஞர்களை ஒருங்கிணைத்து "கொஞ்சம் தேநீர் கொஞ்சம் கவிதை "வழங்கிக் கொண்டிருக்கிறார் எனில் தொடர்ந்து இந்த நிகழ்ச்சியைப் பார்க்கலாம் என்றிருக்கிறேன் நான் .

இந்த நிகழ்ச்சி திங்கள் இரவு 9,30 மற்றும் மறுஒளிபரப்பாக சனி காலை 8,30க்கு ஒளிபரப்பாகிறதாம் .************************************* முடிந்தது **********************************

2 comments:

நட்புடன் ஜமால் said...

எனக்கு கவிதை குறித்து பெரிதாகவோ சின்னதாகவோ ஒன்றுமே தெரியாது தான்.

sari ok rightu ...

சி. சரவணகார்த்திகேயன் said...

This is how it should be superscriped!
E=mc<sup>2</sup>