Saturday, May 21, 2011

அழகர்சாமியின் குதிரை (விமர்சனம்)



அழகர் சாமியின் குதிரை :





முதலில் மைனஸ்களை சொல்லி விட்டுப் பிறகு ப்ளஸ்களுக்குப் போவோம்,




கதை நடந்த காலத்தைப் பற்றிய போதிய குறிப்புகள் ஆரம்ப காட்சிகளிலேயேகுழப்பமின்றி அழுத்தமாகச் சொல்லப் படக்காணோம் ,சுப்ரமணியபுரம் படத்தைப்போல இந்தக் கதை எண்பதுகளின் இடைக்காலத்தில் நடந்தது என்பதற்கு ஒரே சாட்சிகோயில் வரி வசூலில் ஊர் மக்கள் வெகு தாராளமாகப் போடும் ஐந்து ரூபாய் ,ஒருரூபாய் நோட்டுக்கள் மற்றும் சில்லறைக் காசுகள் மட்டுமே ,இந்த சொற்பகாட்சிகளைக் வைத்து கதை நிகழ்ந்த காலகட்டத்தை நாம் தீர்மானித்துக் கொள்ளவேண்டியிருக்கிறது .







அழகர்சாமிக்கும் அவனுக்கு நிச்சயித்த பெண்ணுக்கும் இடையிலான நேசத்தைஇன்னும் கூட கொஞ்சம் அழுத்தமாகச் சொல்லி இருக்கலாம் ,சரண்யா மோகனின்கதாபாத்திரம் ஏனோ தானோவென்று கட்டமைக்கப் பட்டிருக்கிறது ,



ராமகிருஷ்ணனும் அவனது நண்பர்களும் நல்ல தேர்வுகள் ,கோடங்கியின் மகளாகவரும் தேன்மொழி குறுநாவலாகப் படிக்கையில் வேறு விதமாகப் பதிந்துபோயிருந்ததால் அந்தப் பெண்ணிற்கு பதிலாக இந்தப் பெண்ணை ரீபிளேஸ் செய்யமுடியாமல் போய் விட்டது எனக்கு. தேன்மொழி கதாபாத்திரம் படத்தில்ரொம்பவும் அப்பிராணியாக வந்து போகிறது,பாஸ்கர் அண்ணாவின் கதைப் படிஅந்தப் பெண்ணை கொஞ்சம் நகைசுவையோடு கற்பனை செய்திருந்தேன் நான். இந்தப்பெண்ணும் அழகாகவே இருக்கிறார்.
மலையாளத்து கோடங்கியாக வரும் நான் கடவுள் வில்லன் காமெடி என்ற பெயரில்கொஞ்சம் சோதிக்கிறார் .



வெண்ணிலா கபடிக் குழுவின் பரோட்டா பிரியன் இந்தப் படத்தில் மப்டி போலீஸ்சந்திரனாக வந்து குதிரைச் சாணத்தை நீரில் கலந்து தீர்த்தமென்ற பெயரில்வெள்ளந்தி கிராமத்து மக்களுக்கு தந்து கொஞ்சம் சிரிக்க வைக்கிறார்.இந்தப் படத்தில் நகைச்சுவை வலிந்து திணிக்கப் படாமல் கதையோடு பொருந்திநகர்வது நயம் .



தேனீ ஈஸ்வரின் கேமிரா நாடகத்தனங்கள் இன்றி ஊரை ஊராகவே காட்டிஇருப்பதில் வெகு நேர்த்தி .அழகர்சாமியின் மலைக் கிராமமும் பின்னணியில்பசிய மலைகளும் கண்களுக்கு இதமோ இதம் ,"குதிக்கிற குதிக்கிற குதிரை"பாடல் காதுகளுக்கு இதம் . காத்தைக் கேளு பூவைக் கேளு பாடலும் அழகோ அழகு.



அனல் அரசின் சண்டைக் காட்சிகள் வெகு யதார்த்தம் .
படத்தில் வரும் சண்டைக்காட்சிகள் ஒரு கிராமத்தின் மற்றும் அதற்கேஉரித்தான இளவட்ட கோஷ்டிகளின் வழக்கமான பராக்கிரமங்களை நினைவூட்டிச்செல்கிறது. முதலில் அடி அடியென்று அடித்து வெளுப்பதும் பிறகு உடனேஇளகுவதுமான அபூர்வ பிறவிகளைக் கொண்டவை தான் எல்லாக் கிராமங்களும்.



இளையராஜா இந்தப் படத்தில் தீபாவளி கொண்டாடவில்லை ,காதுகளை அதிரடிக்காமல்பயணங்களில் ரசிக்கத் தக்க இதமான இசை. ஆஹா ஓஹோ என்றில்லைஎனினும் பாடல்கள்எனக்குப் பிடித்திருந்தன. மீண்டும் கேட்கத் தூண்டும் பாடல் "குதிக்கிறகுதிக்கிற குதிரை " தான்.



கோடங்கியின் மனைவியாக வரும் பெண்மணியும் ,அழகர்சாமியை ஊராரிடம் இருந்துகாப்பாற்றி சோறு போடும் விதவைப் பெண்மணியும் ஒரே சாயலில்இருக்கிறார்கள்,ஒருவேளை இருவரும் சகோதரிகளோ ?



சுசீந்திரனுக்கு சில காட்சிகளுக்காக பிரத்யேகமாக ஸ்பெசல் நன்றிகளைத்தெரிவித்தே ஆக வேண்டும்.



கோயில் வரி வசூலிக்க ஊர் பெருசுகள் வீடு வீடாகப் போகையில் ஒவ்வொருவீட்டிலும் ஒவ்வொரு விதமான வரவேற்பு ,தட்டிக் கழிப்புகள் ,சிறுவர்களின்நையாண்டிகள்,


"எம் குலப் பெண்களுக்கு மஞ்சள் அரைத்துக் கொடுத்தாயா? மாமனா ? மச்சானா?மானங்கெட்டவனே உனக்கெதற்கு கிஸ்தி ,வரி ? சிரிப்பு அள்ளிக் கொண்டுபோகிறது அந்தச் சிறுவன் கேட்கையில் .
காது கேளாதவள் போல நடிக்கும் கிழவியின் சாமர்த்தியம் இவைகளை எல்லாம்காட்சிப் படுத்திய விதம் அருமை.



இதே விதமாக ஊர் பிரசிடன்ட் மகன் ராமகிருஷ்ணன் குதிரைக்காரன்அழகர்சாமியிடம் குதிரையை அவிழ்த்துக் கொண்டு ராவோடு ராவாக ஊரை விட்டுஓடும் படி உதவ முன் வரும் போது ,ஊரின் கொண்டாட்ட மனநிலையை பார்த்துவிட்டு இத்தனை சந்தோசங்களும் இந்தக் குதிரை இல்லாவிட்டால் தடைபடும் ஊர்த்திருவ்ழாவால் நின்று போகும் என்றெண்ணி திருவிழா முடிந்த பிறகே தான் தன்குதிரையை கொண்டு போவதாக அந்த அப்பாவி சொல்லும் இடம் ஒரு கவிதைக்கானகளம்.



கிராமத்திலிருந்து திருப்பூர் பனியன் கம்பெனிக்குப் போய் சம்பாதிக்கும்சின்னஞ்சிறுசுகள் திருவிழாவை முன்னிட்டு விடுமுறை கிடைத்து லாரியில்கும்பலாய் சாயமிழந்த வண்ணத்துப் பூச்சிகளாய் வந்திறங்கும் காட்சி,புதுச்சட்டை தைக்க டெய்லரிடம் அளவு கொடுக்கும் சிறுவன் இப்படி அந்தக்காட்சி முழுதும் கவிதையாய் உணர்வு மயம்.



ஆஸ்பெஸ்டாஸ் தகர வீடுகள் அப்படியே எனது கிராமத்தை கண்முன் கொண்டுவருகின்றன. அந்தத் தகரங்கள் காற்றில் பறந்து விடாமல் இருக்க கூரை மேல்கற்கள் வைக்கப் பட்டிருந்த கற்கள், காலத்தைக் காட்டும் கடிகாரங்கள் எனச்சொல்லலாம் ,இப்போது ஒரு பத்தி என்றாலும் கான்க்ரீட் வீடுகள் தான்கிராமங்களிலும் கூட. சிமென்ட் ரோடுகள் தான் ,வெறும் மண் சாலைகள் தேடித்தான் கண்டடைய வேண்டும்.



பிரசிடன்ட்,காளமேக வாத்தியார், கண்ணு ஆசாரி, ராமகிருஷ்ணன் ,அவனதுநண்பர்கள் வரை அப்படி அப்படியே அவரவர் கிராமங்களை மீண்டுமொருமுறைஞாபகத்தில் இருத்திப் பார்க்க வைக்கும் வெள்ளந்தி முகங்கள்,பாத்திரத்தேர்வுகள் இயல்பு. மைனர் (இந்தப் பாத்திரம் கதையில் வராது ! சுவாரஸ்யம்கருதி சேர்த்திருக்கிறார்கள் போலும் ! - பரவாயில்லை மனிதர் சிரிக்கவைக்கிறார் .



இணை இயக்குனர் என்ற டைட்டிலின் கீழ் (பாஸ்கர் சக்தி )பாஸ்கர் அண்ணாபெயரைப் பார்க்க சந்தோசமாக இருந்தது. சுபஷ்ய சீக்ரம் ...அடுத்து துணிந்துஇயக்குனர் அவதாரம் எடுக்கலாம் இன்னும் நேர்த்தியான காட்சியமைப்புகள்வசனங்களோடு அவரது "ஏழு நாள் சூரியன் ஏழு நாள் சந்திரன்" குறு நாவலை மாயஉலகின் கமர்சியல் அம்சங்களையும் இயல்பு கெடாமல் கலந்து வெற்றிப்படமாக்கலாம். நிறைய மெனக்கெட வேண்டியிருக்கும் ,கதை வெகு அருமையான கதை.அதை உரிய வகையில் திரைப்படமாக்கினால் வெற்றி நிச்சயம்.



நல்லது நடந்தாலும் சரி,கெட்டது நடந்தாலும் சரி ஊரைப் பொறுத்த மட்டில்எல்லாம் அழகர் சாமி தான்.

மொத்தத்தில் அழகர்சாமியும் ஒரு கதாபாத்திரமாக்கப் பட்டிருக்கிறார் இந்தப்படத்தில் .எது நடந்தாலும் அது சாமியால் தான் என்று நம்பும் கிராமத்துநம்பிக்கைகள் ,எதற்கும் சாமி பார்த்துக் கொள்ளும் என சாமியின் மேல் பாரம்ஏற்றி விட்டு நிம்மதியாய் அடுத்த வேலையைப் பார்க்க நகர்ந்து விடும்கிராமத்து மனநிலைகள். என்று படம் முழுக்க கிராமத்து மக்களின்நம்பிக்கைகளையும் பிடிவாதத்தையும் மையமாகக் கொண்டு நகர்கிறது.




குடும்பத்தோடு எல்லோரும் உட்கார்ந்து பார்க்கத் தக்க நயமான நகைச்சுவைபடம் முழுக்க இழைந்தோடும் யதார்த்தமான ஒரு படம் "அழகர் சாமியின் குதிரை"காதுகளை செவிடாக்கும் இசை,குத்துப் பாடல்கள் ,ரசக்குறைவான காட்சிகள்என்றெல்லாம் இல்லாமல் எல்லோரும் ஒருமுறை பார்க்கலாம். நல்ல படம்.









Sunday, May 1, 2011

கொஞ்சம் தேநீர் கொஞ்சம் கவிதை

நேற்று காலை 8.30 க்கு பொதிகையில் "கொஞ்சம் தேநீர் கொஞ்சம் கவிதை " நிகழ்ச்சியை பார்க்க வாய்த்தது.

கவிஞர் கலாப் ப்ரியா ,கவிஞர் ரமணன் ,கவிஞர் மதுமிதா மூவரும் கவிதைகளைப் பற்றிப் பேசினார்கள் .


பொதுவில் எனக்கு கவிதை அத்தனை பரிச்சயமில்லை ,ஏதோ பள்ளி கல்லூரிகளில் கவிதைப் போட்டிகளில் கலந்து கொண்டு பரிசு வாங்கிய கெத்தில் இங்கே கவிதை என்ற பெயரில் எதையோ எழுதிக் கொண்டிருப்பேனே தவிர எனக்கு கவிதை குறித்து பெரிதாகவோ சின்னதாகவோ ஒன்றுமே தெரியாது தான்.


அகநாழிகை வாசுவின் கவிதையை மதுமிதா வாசிக்கப் போகிறார் என்று குறுஞ்செய்தி பார்த்து விட்டுத் தான் நானும் தேவ் ம் 'கொஞ்சம் தேநீரைப் ' பார்க்க ஆரம்பித்தோம் . "புசிக்கத் தூண்டும் ப்ரியங்கள்" என்ற கவிதையை நினைவுகளின் தாக்கங்களைப் பற்றிய கவிதை என்ற அறிமுகத்தோடு மதுமிதா வாசித்தார்.இந்தக் கவிதை பிடித்திருந்தாலும் கூட வாசுவின் தொகுப்பில் இதை விடவும் வாசிக்கப் பிரியமான கவிதைகள் இருந்தனவே ப்ரியங்களின் நினைவுகளைப் பற்றிய கவிதை என்பதால் இந்தக் கவிதை வாசிக்கப் பட்டதோ என்று சொல்லிக் கொண்டிருந்தேன் தேவ் இடம் . நானாவது தேவலாம் அவருக்கு கவிதை என்றால் கால் வீசை (!!!) என்ன விலை கதை தான்.


இருந்தாலும் நான் கேட்டதற்கு பதில் சொல்லியே ஆகவேண்டுமென்ற கட்டாயம் எதுவும் இல்லாத போதிலும் கூட மனைவிக்குப் பதில் சொல்லும் கடமை தவறாது ;

"அவங்களுக்குப் பிடிச்ச கவிதையை அவங்க வாசிக்கிறாங்க என்றார். "

"ஆமாமில்ல ?! "


தமது மருதாணிக் கவிதையை ரமணனின் வேண்டுகோளுக்கு இணங்க கலாப்ரியா வாசித்துக் காட்டினார்.மருதாணி மனம் கமழ்ந்தது . பகல் மருதாணி பகலில்வைத்துக் கொண்டால் தான் சிவக்கும் , இரவு மருதாணி இரவில் வைத்துக்கொண்டால் தான் கை சிவக்கும் என்று கலாப்ரியா கவிதை வாசிக்கும் முன்புசொன்னார்.


மருதாணி கவிதையில் மணந்து மணந்து மனம் கமழ்ந்தது .ஒரு மருதாணி ஒருகுடும்பம் முழுமையும் எப்படி ஆகர்ஷித்துக் கொள்கிறது என்பது படம் போலவிரிந்தது மனதில் கவிதை வாசிக்கப் பட வாசிக்கப் பட. மிக அழகான கவிதைஇது. ரசனையோடான துன்பியல் அழகு.


மருதாணிக் கவிதைக்கு முன்பு பின்போ ரமணன் தமது பிராயத்தில் முப்பதுவருடங்கள் முன்பு தாம் எழுதியதென ஒரு கவிதையை வாசித்துக் காட்டினார்.


ரயில் பயணத்தில் ஒரு பெண் சக பயணியாக ஒரு இளம் பெண் வெறுமே இளம்பெண்என்றால் பொருந்துவதில்லை மனதுக்குகந்த அல்லது பார்த்த கணத்திலேயேமனதுக்கு இசைவான ஒரு பெண்ணை காண நேர்கிறது . அவள் யாரோ ? எந்த ஊரோ ?எங்கு போகிறாளோ ? ஆனால் பீர்க்கங்கொடியாக படர்ந்து விட்ட பிரியத்தில்வந்து உதிக்கிறது ஒரு கவிதை .இந்தக் கவிதையை ரமணன் வாசிக்கக் கேட்கையில்கேட்கையில் அத்தனை அருமையாக இருந்தது . கவிதை வரிகள் இப்போது நினைவில்இல்லை எனக்கு .


கவிதை யின் அவசியம் என்ன என்பதற்கான பதிலாக கலாப்ரியா சொன்னது;


ஒரு சாலையில் சென்று கொண்டிருக்கையில் எனக்கு முன்னே செங்கல் நிரப்பிய ஒரு மாட்டு வண்டி ஒன்று மறித்துக் கொண்டு பாதை விடாமல் போய்க் கொண்டிருந்தது ,ஒதுங்கிச் செல்லவும் முடியாமல் தாண்டிப் போகவும் முடியாமல் அதன் நிதானத்திற்கு ஈடு கொடுத்து மிக மந்தமாக அதற்குப் பின்னே நடந்து சென்றாக வேண்டிய கட்டாயத்தில் என் மனநிலை மிக எரிச்சலான சூழ்நிலையில் வண்டியிலிருந்து ஒரு செங்கல் நழுவி சாலையில் விழுந்தது ,அதைக் கண்டதும் ஞானக் கூத்தனின் செங்கல் கவிதை ஒன்று ஞாபகம் வந்தது .


"சூளைச்செங்கல்லிலிருந்து தனித்துச் சரிகிறது ஒற்றைக் கல்"

எனும் கவிதையை அப்போதைய என் வாழ்வியல் சூழ்நிலையில் அந்நேரம் பொருத்திப் பார்த்ததும் சூழலின் வெறுமை மறைந்து மனம் லேசாகி விட்டது .இப்படி கவிதை என்பது வாழ்வை ரசிக்க நமக்கு பல நேரங்களில் கற்றுத் தருவதால் கவிதைகளால் வாழ்வு ரசனையாக்கப் படுகிறது. அதனால் கவிதைகள் ரசிக்கப் படுகின்றன. கவிதைகளால் வாழ்வும் ரசனைக்குரியதாக ஆக்கப் படுகிறது என்ற பொருளில் கலாப்ரியாவின் விளக்கம் ஏற்றுக் கொள்ளக் கூடியதாக இருந்தது.


மேலும் சில கவிதைகளை வாசித்துக் காட்டுகையில் மிக எளிதான ஆங்கிலக் கவிதை ஒன்றை கலாப் ப்ரியா பகிர்ந்து கொண்டார்.
E = Mc 2 (இந்த 2 வை square என்று வாசித்துக் கொள்ளுங்கள் .கீ போர்டில் square எப்படிப் போடுவதென தெரியவில்லை எனக்கு :( , கவிதைக்கான தலைப்பே இது தான்.

E = Mc 2


"He erased Hiroshima
By a piece of chalk !"


இரண்டே வரிகளில் மிக ஆழமான கவிதை .

அடுத்து ;


வியட்நாம் 'போர்' பற்றிய ஹிந்திக் கவிதை ஒன்று ; போரின் அலங்கோலத்தை விளக்கும் " கபாலத்தில் வண்ணத்துப் பூச்சி " என முடியும் குறுங்கவிதை ஒன்று முதல் வரி எனக்கு ஞாபகமில்லை .கலாப்ரியா வாசித்துக் காட்டுகையில் நுட்பமான கவிதை எனப் பட்டது. வியட்நாமியப் போரின் அவலத்தைப் பற்றி ஒரு மராட்டியக் கவிஞன் தனது உணர்வுகளை இவ்விதம் பகிர்ந்து கொண்டது தான் உலகம் முழுவதையும் ஒன்றிணைப்பதான கவிதை எனும் வடிவத்தின் வெற்றி என்பதாக அவர்களுடைய உரையாடல் நீண்டது .


மதுமிதா அக்கமகா தேவி உட்பட இன்னும் சிலரது கவிதைகளை வாசித்துக் கட்டினார் .


எனக்குத் தோன்றிக் கொண்டிருந்தது ; கவிதை என்பது வெறுமே எழுதி வைத்து விட்டுப் போவதில் மட்டும் இல்லை அதற்கான பூரணத்துவம் என்பது அந்தக் கவிதை மிகச் சரியான விதத்தில் வாசிக்கப் படுவதிலும தான் இருக்கிறது என்று நிகழ்ச்சியை பார்க்கத் தொடங்கிய கணத்தில் இருந்தே தோன்றிக் கொண்டே இருந்தது ,அதற்கு காரணம் கவிஞர் ரமணன் .


மனிதர் என்னமாய் கவிதை பாடுகிறார்!


வெகு அருமையாக இருந்தது கேட்கக் கேட்க . கடந்த வருடத்தில் ஒரு நாள் எஸ் எஸ் மியூசிக் சேனலில் உமா சக்தி கலந்து கொண்ட கவிதை நிகழ்ச்சி ஒன்றில் அவருடன் கலந்து கொண்ட ஒரு கவிஞர் எனக்கு இப்போது பெயர் மறந்து விட்டது . ஞானக் கூத்தனின் "அம்மாவின் பொய்கள் " மிக அருமையாக கவிதையை வாசித்துக் காட்டினார். அப்போதே தோன்றியது தான். கவிதையின் நிறைவு அது வாசிக்கப் படும் விதத்திலும் தான் இருக்கிறதென.


இது என் கருத்து மட்டுமே .இதில் யாருக்கும் ஏன் கவிஞர்கள் பலருக்குமே உடன்பாடில்லாமலும்இருக்கலாம். அதைப் பற்றி எனக்கென்ன?! :)


ஒவ்வொரு வாரமும் கவிஞர் ரமணன் தான் இந்த நிகழ்ச்சியில் கவிஞர்களை ஒருங்கிணைத்து "கொஞ்சம் தேநீர் கொஞ்சம் கவிதை "வழங்கிக் கொண்டிருக்கிறார் எனில் தொடர்ந்து இந்த நிகழ்ச்சியைப் பார்க்கலாம் என்றிருக்கிறேன் நான் .

இந்த நிகழ்ச்சி திங்கள் இரவு 9,30 மற்றும் மறுஒளிபரப்பாக சனி காலை 8,30க்கு ஒளிபரப்பாகிறதாம் .



************************************* முடிந்தது **********************************