Thursday, March 17, 2011

கானல்வரி - தமிழ்நதி ( வாசிப்பிலிருந்து ... )





கானல்வரி - தமிழ்நதி

சமீபத்தில் ஓர் நாளில் ஒரு கையில் மஞ்சள் வெயில் இன்னொரு கையில் கானல் வரி .இரண்டையும்வைத்துக்கொண்டு மாற்றி மாற்றிப் பார்த்துக்கொண்டிருந்தேன் ,எதை முதலில்வாசிக்கலாம் என்பதை தெரிவு செய்யாமல் வெறுமே இரண்டையும் பார்த்துக் கொண்டு எதையோயோசித்தவாறிருந்தேன் .

யோசனைக்கென்ன கேடு?! அது பாட்டுக்கு 'போன இடம்... வந்த இடம் ' என்றவிலக்குதல்கள் இல்லாமல் இருபத்தி ஒன்பது வயதுக்கு எத்தனை ஞாபகக்கொள்முதல் செய்ய முடிந்ததோ அதுவரையிலும் விகல்பங்கள் இன்றி ஊர்ந்துகொண்டே இருந்தது ,ஊர்ந்து கொண்டு என்பதைக் காட்டிலும் மிதந்து கொண்டுஎன்பதே சாலச் சிறந்த வார்த்தைத் தேர்வு .ஆனால் ஊர்ந்தது என்றும் சொல்லிக்கொள்ளலாம் . என்ன நட்டமாகி விடப்போகிறது ?

மாதவியும் மௌலியும் என்னவோ பல நாட்கள் எனக்கு சிநேகிதர்களாய் இருந்தார்போலொரு நினைவு . புத்தகம் அளவில் மிகச் சிறிது .ஒரு தேன் சிட்டைப் போல...ஒரு பட்டாம்பூச்சியைப் போல ....ம்ம் ...ஏன் ஒரு ஈசலைப் போல இன்னும்என்னவெல்லாம் வாழ்வின் உன்னதமான குறுஞ் சுவாரஸ்யங்கள் எல்லாம்உண்டோ அத்தனையும் சேர்த்துக் கொள்ளுங்கள் இந்தப் புத்தகத்தை கைகளில்ஏந்திக் கொள்ளும் முன். (அதென்னவோ தமிழ்நதி உங்களது புத்தகம் பற்றிஎழுதவாரம்பிக்க நினையும் போதெல்லாம் இப்படித் தான் கவிதைத் தனமாய்எதையேனும் கிறுக்கி விட நேர்கிறது. தங்களது எழுத்தின் வன்மையோ இல்லை என்புரிதலின் மென்மையோ அறிய நேர்ந்திடக் காத்திருக்கட்டும் காலங்கள் ஒருபுறத்தே ;)))

இந்த சிறு நாவலைப் படித்திருக்கிறாயா ? என்று தமிழ்நதி "நந்த குமாரனுக்குமாதங்கி எழுதிய கடிதங்களைப் பற்றி " என் வலைப்பக்கத்தில் நான் பகிர்ந்தபோதே கேட்டிருந்தார். அப்போது புத்தகம் கிடைத்திருக்க வில்லைஎனக்கு,நேற்று கிடைத்ததும் ஒரே அமர்வில் வாசித்து முடித்தேன். என்ன சொல்லஇந்த நாவலைப் பற்றி ?! மாதவியையும் மௌலியையும் எப்படி விளங்கிக் கொள்வதுஎன்றால் அவர்களை அப்படி அப்படியே தான் விளங்கிக் கொள்ளதல் நலம் என்றுதோன்றிக் கொண்டே இருக்கிறது இப்போதும் .

இதே மனிதர்களை . வாதையின் எல்லை வரை சென்று மீளாது காற்றுக்குதுடிக்கும் தரை மீனாய் மறுதலிக்கப் பட்ட காதலுக்காய் பட படக்கும்இதயங்களை நாம் அறிந்தே இருக்கிறோம் தானே?! இவர்களை இந்த இணையவெளியின்உள்ளும் புறமுமாய் நாம் ஒருமுறையேனும் தரிசித்திருக்கா விடில் நம்ஜென்மம் சாபல்யம் அடைத்து விடவும் கூடுமோ!
மாதவி தன் வழமை மாறிப் போன இடமாகக் குறிப்பிடுவது ராகவனின் ஒரு சொல்லில் ;

" நானும் ராமனில்லை மாதவி "

பிறகு யார் தான் சீதையாய் , கண்ணகியாய் இருப்பார்களாம்? ஏன் இருக்கவேண்டும் ? எதிர்பார்ப்புகள் இரண்டு பக்கமும் பொது தானே!இவ்வேளையில்மட்டும் இந்த சமூகம் ஆணாதிக்கம் கொண்டதாகத் தான் என் பார்வைவட்டத்திலும் விழுந்து தொலைக்கிறது .அது ஏனோ? சீதா தேவிகளை யுகம் தோறும்பூமிக்குள் புதைத்துக் கொண்டே இருந்ததால் தான் நிலத்திற்கு சீதா நிலம்என்று வடக்கில் பெயர் துலங்கி வருகிறதோ என்னவோ?எந்தப் பெண்ணிடமும்கேட்டுப் பார்க்கலாம் இந்தக் கேள்விகளை யாரோ எழுதி இருந்தார்கள்....தன்னை சந்தேகிக்கும் ராமனை விட தன் பிரியத்தை யாசிக்கும் ராவணனிடம்சீதை சிநேகமாய் இருக்க விரும்பி இருக்கக் கூடும் என்று .

கலாச்சார பானைகள் உடைந்து நொறுங்கும் இடங்களில் மட்டுமே இத்தகுசந்தேகங்களை நாம் வெளிப்படுத்திக் கொள்ளலாமே தவிர எல்லாரிடத்தும் அல்ல.உண்மை சொன்ன ஒரு பெண்ணுக்கு விளக்குமாற்றைக் காட்டியவர்கள் அல்லவோ எம்இனமானத் தமிழ் சகோதரிகள் .பாவம் அவர்களுக்கு நடத்தப் பட்ட மூளைச் சலவைஆப்ரிக்க பெண்களுக்கு நடத்தப் படும் பெண்மை சிதைவு எனும் சடங்கிற்குசற்றும் சளைத்ததில்லை .

நாவலைப் பற்றி மேலும் சில வார்த்தைகள் சொல்லலாம்.
முன்னுரையில்பிரபஞ்சன் பகிர்ந்த படிக்கு இது காதல் கதை அல்ல ....காதலைப் பற்றிய கதை .இன்னொருவரின் மனைவிக்கும் மற்றொருத்தியின் கணவருக்கும் இடையிலான காதலைஎப்படிச் சொல்லி வகைப்பாட்டில் அடக்குவதென கடைசிவரை மாதவிக்கு கேள்விகள்இருந்து கொண்டே தான் இருக்கின்றன நாவல் .
.பலரும்மேற்கோள் காட்டியதென மாதவி சுட்டிக் காட்டிய ஒரு வரி "காதலில் என்ன நல்லகாதல்...கள்ளக் காதல் " இந்த வரிகளை நாம் கேள்விப் படாமல்இருந்திருக்கலாகாது.அட்லீஸ்ட் புலனாய்வுப் பத்ரிகைகளேனும் நமக்கு இந்தவரிகள் காணக் கிடைத்திருக்க கூடும்.அத்தனை பிரபலமான வரிகளே .கவிஞர்மனுஷ்ய புத்ரனின் கவிதையிலிருந்து எடுத்தாளப் பட்ட இந்த வரிகள் . பலரால்பல சந்தர்பங்களிலும் மேற்கோள் காட்டத் தக்கதாக அவை எழுதப் பட்டநாட்களில் இருந்து நீடித்து வருகிறது போலும் ;))

அன்பில் நெகிழுதல் என்பது யாவர்க்கும் எளிதாகத் தான் மிக மிக எளிதாகத்தான் நிகழ்ந்து விடுகிறது .

நாவலில் இருந்து சில இடங்களைப் பார்க்கலாம் .

//நீ ஏன் கூட்டங்களுக்குப் போகிறாய் ? அங்கு என்ன அறிவு மழையா பொழிகிறது ? //

என்று மௌலி கேட்குமிடத்தில் மாதவியின் பதில் இவ்விதமாக இருந்து விடுதல்மிக நல்ல பகடி . வாசியுங்கள் ;

"இடி விழ என்று நினைத்துக் கொண்டு தான் போகிறேன் .ஆங்காங்கே ஒரு சிலபெண்கள் பாயசத்தில் பயறு போலவோ மலத்தில் புழுக்கள் போலவோ,அமர்ந்திருக்கப் பார்ப்பது " மதுச் சாலைகள் இன்னமும் உன்னதம் என்றுநண்பர்கள் சொல்ல கேட்டிருக்கிறேன் ...பெண்களாகிய நாங்கள் அங்குபிரசன்னமாகி உங்களைப் போன்றவர்களை கலாச்சார அதிர்ச்சிகளாக்கவிரும்புவதில்லை . "

ஒரே சிந்தனை தான் ஆனால் அதன் முரண்கள் ரசிக்கும்படியானவை , இந்த பகடிவாசிக்கையில் சிரிப்பு அள்ளிக் கொண்டு போயிற்று ,இலக்கியக் கூட்டங்களில்பெண்கள் சிலர் கண்களுக்கு பாயசத்துப் பயறுகள் போலவும் சிலர் கண்களுக்குமலத்தில் புழுக்கள் போலவும் தென்படக் கூடும் போலும்! :))

//உனக்குள் ஒரு கீழைத்தேய அடிமை இருக்கிறாள் ,அவள் ஆளப்படுவதை வரவேற்கிறாள் //

இப்படியான வார்த்தைகளில் எனக்கு பெரிதாக நம்பிக்கை இருந்ததில்லை . பலப்பல தருணங்களில் ...கணங்களில் அல்லது சிற்சில பொழுதேனும் அடிமையாகஇருந்து பார்க்கும் ஆசை பெண்களுக்கு மட்டுமே அல்ல ஆண்களுக்கும்இருக்கிறது என்பதே பொருந்தக் கூடும் .இதில் கீழைத் தேயம் மேலைத் தேயம் என்பதெல்லாம் எனக்குப் புரியவில்லை.எங்கெங்கிலும் அடிமையாகி இருந்து பார்க்கும் மனோபாவம் எவரிடத்தும்எப்போது வேண்டுமானாலும் வெளிப்படக் கூடுமானதே. என்ன ஒன்று சந்தர்பங்கள்மட்டுமே நிர்ணயிக்கின்றன ஆண்டான் அடிமை மனோபாவங்களை.

பெண்கள் மட்டுமே எப்போதும் ஆளப்படுவதை வரவேற்கிறார்கள் என்ற கருத்தைஎப்போதுமே என்னால் ஏற்றுக் கொள்ள முடிந்ததில்லை .
முடிவாக இப்படித் தான் திருப்திப்படுத்துகிறது இந்த குறுநாவல் .

ஆளற்ற புராதனப் பூங்காக்களின் அடர் மதியப் பொழுதுகளில கீழ்நோக்கி இமைகள்சரிய கையிலேந்திய குடத்து தண்ணீர் பதவிசாய் குளத்தில் வழிய ...வழியவழிய மனோகரமாய் புன்னகைக்கும் சாந்துச் சிலைப்பெண்ணாய் அவள் கண்களிலும்இமைகளிலும் துலங்கும் கிறங்கடிக்கும் மோன வசீகரம் ...தமிழ்நதிவிவரித்திருப்பார் இப்படி ...அங்ஙனமே இந்த குறுநாவல் தன் முடிவால்திருப்தியானதே .

மாதவிக்கும் மௌலிக்கும் இப்போது தன்னைத் தானே பலி கேட்கும் குற்றஉணர்வுகளில் இருந்து ஒரு வழியாய் விடுதலை கிடைத்திருக்கக் கூடும் எனநம்புவோமாக.

//காதல் ஒரு பொய்யாகவே இருக்கட்டும் ,காமத்தைச் சென்றடையும் நெடுவழியாகவேஇருந்து விட்டுப் போகட்டும்.அந்தமிதப்பு,நெகிழ்வு,உருக்கம்,கிறக்கம்,பாசாங்கு,பிதற்றல்,பொய்கள்...நன்றாகத் தானே இருந்தன .பொய்யென்று தெரிந்தும்அதனுள் வாழ்தலும் அதற்காக மரணித்தாலும் கூட //

கடைசியாக இதையும் மறுப்பதற்கில்லை தான் .இதை மறுத்தோம் எனில் நாம்ரசிக்கும் எல்லாவற்றையும் ஒன்றன் பின் ஒன்றாக மறுத்ததாக வேண்டியகட்டாயத்தில் தள்ளப் படுபவர்கள் ஆவோம் :)))
நாவல் - கானல்வரி
ஆசிரியர் - தமிழ்நதி
வெளியீடு - உயிர்மை
விலை ரூ - 50.

6 comments:

முல்லை அமுதன் said...

nantru.
nantry.
paaraddukaludan,
mullaiamuthan
http://kaatruveli-ithazh.blogspot.com/

ஜெய்லானி said...

அருமையான நாவலாதான் இருக்கு :-)

அன்புடன் அருணா said...

படிக்கணுமே!

KarthigaVasudevan said...

நன்றி முல்லை அமுதன் :)

நன்றி ஜெய்லானி :)

நன்றி அருணா (படிக்கலாம் நல்ல இருக்கு :)

நட்புடன் ஜமால் said...

இருபத்தி ஒன்பது வயதுக்கு எத்தனை ஞாபகக்கொள்முதல் செய்ய முடிந்ததோ அதுவரையிலும் விகல்பங்கள் இன்றி ஊர்ந்துகொண்டே இருந்தது

:P

by the way book intro is nice as usual

R.Gopi said...

ஆஹா...

அருமையாய் இருக்கும் போல் இருக்கிறதே.....

கண்டிப்பாய் படிக்க வேண்டும்...