1. கோணல் மானல் கவிதைகள் :
காத்திருக்க நேர்ந்தால் என்னவெல்லாம் செய்யலாம் ?
நகம் கடித்து துப்பலாம்
சுட்டு விரலுக்கும் பாம்பு விரலுக்கும் மேலாய் கிடத்தி
சொடக் சொடக்கென உடைத்துப் போடலாம் ;
சிலும்பு தென்பட்டால் சும்மா இருப்பானேன்
கோணல் தென்னை மரங்களோ பனை மரங்களோ
மனம் போன போக்கில் கண்ணில் பட்ட
இன்னும் என்னவெல்லாம் செய்யலாம் ?
நேரம் போக்கலாம்.
2. பூமியில் அகப்பட்டுக்கொண்ட எலிகள் :
சொல்லிக் கொண்ட சமாதானங்கள் அனைத்துமே
சொர்க்கத்தில் நிச்சயிக்கப் பட்டவையாமே !
சொர்கத்துக்குப் போக ஷார்ட் கட்
அமிர்தம் குடிப்பது
அமிர்தம் குடிப்பவர்கள் தேவர்கள் தானே ?
நான் மேருவை மத்தாக்கி
வாசுகியை கயிராக்கி
பாற்கடலை கடையும் போதில்
மணி காலை 5 .30
பிரம்ம முஹூர்த்தம்
அலறியது அலாரம்
இன்னுமா ...இன்னமும்
பால் பாக்கெட் வரக்காணோம்!
பேப்பர் காரன் வந்தானோ?
சிலிண்டர் புக் பண்ண இன்றைக்கு தான் கடைசி நாளோ?!
சொர்கமாவது அமிர்தமாவது
பூமியில் அகப்பட்ட எலிகளுக்கு
வலைகள் மட்டுமே சாஸ்வதம்
நிறுத்த வகையின்றி
சதா மூளையை சிதறடிக்கும் அக அலாரங்கள்
ஆம்புலன்சின் ஓசை போல
அடாத மழையிலும்
விடாது ரீங்கரிக்கும...
3. கனவு ரசம் :
கா முதல் ரா வரை
என்ன குழம்பு ?
என்ன காய்?
என்ன கூட்டு ?
என்ன பொரியல் ?
என்ன மசியல்?
என்ன அவியல்?
இட்லியா...சப்பாத்தியா...பொங்கலா...பூரியா?
வெறும் சாதமா...கலந்த சாதமா?
இன்னோரன்ன
வினாக்களை நசுக்கிப் பிழிந்து
இடையிடையே
விட்டு விட்டுத் தொடரும்
கனாக்களை அரைத்துக் கரைத்து
பொடித்த முந்திரியிட்டு
ஞாபகமிருக்கட்டும்
முந்திரி பொன் வறுவலாய் இருத்தல் நலம்.
பெரிய சைஸ் பூப் போட்ட
கண்ணாடி கிளாசில் ஊற்றி
எவர்சில்வர் ஸ்பூனால்
இதம் பதமாய்
கலக்கோ கலக்கென்று கலக்கி
மடக்கென்று குடித்து விடுதல் கூடாது
மிடறு மிடறாய்
ரசித்து ருசித்துக் குடிக்கலாம் ;
அர்ச்சனாவுக்குக் கல்யாணமாம்
அவளுக்கு தான் பெரிய சைஸ் பூப்போட்ட கிளாஸ்
தளும்பத் தளும்ப கனவு ரசம்...
4. லெட்சுமி அக்கா சிகரெட் பிடிப்பாளா?
லெட்சுமி அக்கா சிகரெட் பிடிப்பாளா?
நட்ட நடு ராத்திரியில்
விநோதக் கனவு !
கதை கேட்க திண்ணையில் கூடும்
நாட்களில் எல்லாம் சிரிக்காமல் இருக்க
பெரும்பாடு பட்டேன் ;
டேய் கோபிக்கண்ணு கோமுட்டிக் கண்ணு
கெக்கே பிக்கேன்னு என்னடே இளிப்பு
எந்நேரமும் ?
நறுக்கென்று தொடையில் கிள்ளுவாள் ;
விளையாட்டாய்
மெழுகுவத்தி ஏற்றி அணைத்து புகையுமுன்
வாய்க்குள் விட்டு எடுத்து
அபாரமாய் சிகரெட் புகை விடுவாள் ;
ஆயிற்று பல வருடங்கள்
எனக்கு 50
அவளுக்கு 70
அடையாளம் தெரிந்திருக்க வாய்ப்பில்லை ;
பாகப் பிரிவினைக்கு ஊருக்குப் போய் திரும்புகையில்
பஸ் ஸ்டாண்டில் பார்த்தேன்
சுருட்டுப் பிடித்துக் கொண்டிருந்தாள் ;
சேவல் மார்க் சுருட்டு ...
ஒரு மெழுகு வத்தி சேவலாக மாறி விட்டது ;
இன்னமும் சிரிப்புத் தான் ;
1 comment:
இப்படி கோணல் மானல் கவிதைகள் எழுதி
நேரம் போக்கலாம்//
போக்கலாமே ,
நல்லாயிருக்கு..
Post a Comment