Friday, July 23, 2010

சர்வ ஜாக்ரதையாய் இருக்க வேண்டியவர்கள் யார்?

எழுத நினைத்த விஷயங்கள் ஒரு வண்டி நிறைய குப்பையாய் குவிந்து கிடக்கிறது,கொதிக்கும் சாம்பாரில் அவ்வப்போது கொதிப்பில் மேலெழுந்து சாம்பாருக்குள் மறையும் கத்தரிக்காய் பத்தை போலவோ முருங்கைக் காய் துண்டு போலவோ "ஆமாம் என்னத்த பெருசா எழுதி...என்னத்த படிச்சு " இப்படி ஒரு அயர்ச்சி கலந்த அசட்டை வந்து வந்து போவதால் ஒவ்வொரு முறையும் நியூ -போஸ்ட் பக்கத்தை திறப்பதும் புறக்கணிப்பதுமான நாட்கள் தான் சமீப காலமாய்.

இப்போதும் பெரிதாய் ஒன்றும் எழுதிக் கிழிக்கப் போவதில்லை .

மனதை வெகுவாகக் பாதித்த சில நிகழ்வுகளை பதியத் தோன்றியதால் இந்தப் பதிவு ...

நிறைய கோபம், அதிர்ச்சி,பதட்டம், பயம் இன்னோரன்ன கலவையாய் மனம் .

மனுஷ்ய புத்ரனின் கவிதை வரிகளில் ஒன்று ;

"காதலில் என்ன நல்ல காதல்...கள்ளக் காதல்,காதல் காதலாய் மட்டுமே இருக்க முடியும் "என்பது ஏற்றுக் கொள்ளக் கூடிய வரிகள் எனில்

"உறவு என்ற சொல்லுக்கு நல்ல உறவோ ...கள்ள உறவோ உரிமை என்பதான ஒரே விதமான அர்த்தமே தானே இருக்க முடியும்?!"

அப்படிப் பட்ட உறவின் மீதான நம்பிக்கையின்மை,அதனால் அடைந்த ஏமாற்றங்கள் ஒரு பெண்ணை இப்படி எல்லாம் செய்யத் தூண்டும் என்றால் இங்கே சர்வ ஜாக்ரதையாய் இருக்க வேண்டியவர்கள் யார்?!

தவறு செய்த ஆண்களா? (அப்பாக்களா !) ...பெண்களா? (அம்மாக்களா!)


அல்லது புதிதாய் மலர்ந்த பூக்களைப் போன்ற குழந்தைகளா?

சுற்றி வளைப்பானேன்!

மூன்றரை வயது பாலகனை இரக்கமே இல்லாமல் கழுத்தை நெரித்துக் கொன்று விட்டு சடலத்தை சூட்கேசில் போட்டு மூடி நாகபட்டினத்து பஸ்ஸில் அனாமத்தாக அனாதையாகப் போட்டு விட்டுப் போனாலே ஒரு பேய் ! அவளுக்குப் பெயர் பூவரசியாம்?! பூக்கள் கோரக்கொலை செய்கின்றன !

பெற்றோர்களின் பாவம் பிள்ளைகளைப் பீடிக்கும் என்பது சரியாய் தான் போயிற்று.அந்த சிறுவனின் தந்தை இவளை ஏமாற்றிய பாவம் உலகம் அறியா பசும் மண்ணை படு கொடூரமாகப் பலி வாங்கிக் கொண்டது.துரோகம் அது எந்த சூழலிலும் தன் கோரப் பற்களை காட்ட மறப்பதில்லை,ஆண்களே ...இல்லை தகப்பன்களே தயவு செய்து உங்களது குழந்தைகளை முன்னிட்டு துரோகங்களின் பட்டியலை கொஞ்சம் குறுக்கிக் கொள்ளுங்கள்.இதையே பெண்களுக்கும் சொல்ல நினைப்பவர்கள் பெண்களே ...இல்லை அம்மாக்களே தயவு செய்து உங்களது குழந்தைகளை முன்னிட்டு துரோகங்களின் பட்டியலை கொஞ்சம் குறுக்கிக் கொள்ளுங்கள்...இப்படிச் சொல்லிக் கொள்ளலாம் ,இதற்கு உதாரணம் பாட்டு டீச்சர் அனந்தலட்சுமி,அனந்த லட்சுமி அவரது மகன் சிறுவன் சூரஜ்குமார் இரட்டைக் கொலைவழக்கு இன்னும் ஒரு முடிவுக்கு வரவில்லை.யூகங்கள் காற்றில் பறந்து கொண்டிருக்கின்றன.உண்மை எங்கோ இழுத்துப் போர்த்தி கொண்டு நல்ல உறக்கத்தில்!

ஆதித்யாவின் "ஆன்ட்டி ... ப்ளீஸ் என்னை கொல்லாதிங்க ! எனும் பிஞ்சுக் குரலின் கெஞ்சலில் மனம் நெகிழவில்லை பாருங்கள் இந்தப் பிசாசு .இதை நினைத்தால் நெஞ்சு கொதிக்கிறது தானே!இன்றைய இந்தியன் எக்ஸ்பிரசில் முதல் பக்க செய்தி ,அந்த பூவரசியையும் அவளது கொடும் பாதகச் செயலையும் அடையாளம் கண்டு கொண்ட மற்ற பெண் கைதிகள் புழல் சிறையில் காலை உணவு நேரத்தின் போது அவளை தாக்க முயன்றதால் இப்போது பூவரசி தனி செல்லில் அடைக்கப் பட்டிருக்கிராளாம். நிற்க

எந்த நேரம் எப்படிச் சாவோம் என்பதறியாமல் தமக்கே தமக்கென பிரத்யேக பட்டாம்பூச்சிக் கனவுகளுடன் வளர்கிறார்கள் குழந்தைகள்,அம்மாவின் பட்டுப் புடவை மெது மெதுப்பு தாங்கள் ரசிக்கும் வண்ணத்துப் பூச்சிகளின் சாவில் கிடைப்பதென அந்தக் குழந்தைகளுக்கு தெரிந்திருக்க நியாயம் இல்லை,ஒவ்வொன்றாய் அறிந்து கொள்ளும் அவகாசத்தில் பூவரசிகளின் கொலைக் கண் பார்வையை ஆராய பாவம் குழந்தைகளுக்கு கற்றுக் கொடுக்கப் பட்டிருக்கவில்லை ,தும்பியின் வாலில் நூல் கட்டி அதன் சுதந்திரத்தை முடக்கி "தட்டான்...தட்டான் கல்லெடு ,தட்டான்...தட்டான் கல்லெடு " என பொழுது போக்கும் விசித்திர சமூகத்தின் பிரதிநிதிகள் தாங்கள் என அவர்கள் அறிந்து கொள்ள அவகாசம் தரவேண்டாமா?!

இப்போதைக்கு பாலியல் கல்வியைக் காட்டிலும் மிக முக்கியமாய் சிறுவர்,சிறுமிகளுக்கு கற்பிக்கப்பட வேண்டிய பாடம் சூழ இருக்கும் மனிதர்களை படிப்பது.

இந்த அதிர்வில் இருந்து மீண்டு வரும் முன் இன்றைய விகடனில் நாமக்கல் ஆட்சியர் சகாயம் அவர்களின் பேட்டி,நவீன் என்ற சிறுவனின் தாய் பக்கத்து வீட்டு மனிதரோடு ஓடிப் போகிறாள்,அந்த சிறுவனின் தந்தை அவனது தங்கை தம்பியைப் கவனித்துக் கொண்டு சமைத்துப் போடவென இவனது படிப்பை நிறுத்தி விடுகிறார்.அம்மா ஓடிப் போன அவமானம் ,தந்தையின் அலட்சியம்,தன் கல்வி அநியாயமாய் நிறுத்தப் பட்ட நிராசை எல்லாம் சேர்ந்து பத்து வயதுப் பையன் ஆறுதல் சொல்ல ஆளின்றி கண்ணீரோடு மாவட்ட ஆட்சியரிடம் குறை தீர்க்கும் மனு கொடுக்க வருகிறான்.இதுவொன்றும் அதிர்ச்சி அல்ல...கலெக்டர் அந்தப் பையனுக்கு உதவி செய்யும் எண்ணத்தில் இருக்கையில் இடியாய் ஒரு செய்தி அடுத்த சில நாட்களில் ,அந்த சிறுவனின் தந்தை தன் மனைவி ஓடிப் போனதால் அவமானம் தாங்காமல் நவீன் உட்பட தன் மூன்று குழந்தைகளுக்கும் உணவில் மருந்தை கலந்து கொடுத்து கொன்று விட்டு தூக்கிலும் தொங்க விட்டு தானும் தற்கொலை செய்து கொள்கிறார்.

அம்மா அடுத்த வீட்டு மனிதனோடு ஓடிப் போனதற்கும் ,அப்பாவின் இயலாமைக்கும் இந்த சிறுவன் செய்த பாவம் என்ன?

சாக வேண்டும் என முடிவெடுப்பவன் தனியே செத்துத் தொலையலாம் ,வாழ நினைத்து தனக்கென நியாயமான ஆசைகளை வளர்த்துக் கொண்ட மூன்று இளம் குருத்துகளை கருக வைத்தது எப்படி நியாயம் ஆகும்?தகப்பனாகவே இருந்தாலும் !

நவீனின் ஆசை என்ன தெரியுமா?

"படித்துப் போலீஸ் ஆபிசர் ஆகவேண்டுமாம்! "
இப்படித் தான் அவன் கலெக்டரிடம் மனு கொடுக்கையில் கூறினானாம்.வாசிக்கையில் கண்கள் கலங்குகின்றன .

அதே பக்கத்தில் இன்னும் சில குழந்தைகளுக்கு எதிரான அதிகார துஷ்பிரயோகங்கள் குறித்தும் சொல்லப் பட்டிருந்தது.அபினா எனும் ஐந்தாம் வகுப்பு மாணவிக்கு ஊஞ்சல் என் சரியாக உச்சரிக்கத் தெரியாததால் அவளை எல்லா மாணவர்களின் முன்பாக அவளது ஆசிரியை ;

"நீ எல்லாம் ஏன் ஐந்தாம் வகுப்பில் உட்காருகிறாய்,போ மறுபடியும் ஒன்றாம் வகுப்புக்கு "

,என்று கடுமையாகத் திட்டி விடுகிறார்,இதற்கு அந்த சிறுமி மனம் நொந்து போய் வீட்டில் மண்ணெண்ணெய் ஊற்றி கொளுத்திக் கொண்டு இறந்து போனாளாம்,இங்கே குறிப்பிடத் தக்க ஒரு விஷயம் ,ஆசிரியை மீது தவறு தான். அதற்கு நடவடிக்கை எடுக்க வசதி இருக்கிறது.ஆனால் அந்த சிறுமி அபினாவின் மனநிலையை எண்ணிப் பாருங்கள் வெறுமே பள்ளியில் ஆசிரியை திட்டினால் அதற்கு தன்னைக் கொளுத்திக் கொண்டு இறந்து போக வேண்டும் என அவளுக்கு எப்படித் தோன்றியது? !

குழந்தைகளை மனதளவில் எதையும் எதிர் கொள்ள திராணியற்றவர்களாக உருவாக்கிக் கொண்டிருக்கும் நமது வளர்ப்பு முறையில் அல்லவா இங்கே முதல் தவறு ஒளிந்திருக்கிறது. ஆசிரியை திட்டியதால் குழந்தை தற்கொலை செய்து கொண்டாள் என பத்திரிகைகளில் வரும் பெரும்பான்மையான செய்திகள் மிக்க மனவருத்தத்தை அளிக்கன்றன. எல்லா ஆசிரியர்களும் மோசமானவர்கள் அல்ல.

மேலும் அந்த ஆசிரியர்களுடன் மாணவர்களுக்கான பந்தம் வாழ்வின் சில காலமே.அப்போதும் தினமும் அந்த ஆசிரியர்கள் விரும்பத் தகாத வண்ணமே பேசிக் கொண்டு இருக்கப் போவதில்லை,எதோ ஒருநாள் திட்டலாம்,அதற்கு முக்கியத்துவம் கொடுத்து ஒட்டு மொத்த வாழ்வை முடித்துக் கொள்வது முட்டாள் தனம் தவிர வேறென்ன? குழந்தைகளே ...மாணவர்களே உங்கள் பக்கம் நியாயம் இருப்பின் தயங்காமல் மரியாதை குறைவின்றி ஆசிரிய ஆசிரியர்களிடம் எதிர்வாதம் செய்யுங்கள்.உங்களை அவர்களுக்குப் புரிய வைக்க முயலுங்கள். காரணமே இன்றி யாருக்கும் யார் மீதும் வெறுப்பு வர வாய்ப்பில்லை. பள்ளிகள் கல்வி கற்பதற்கு தான் .அந்த வேலையில் குறை வைக்காமால் இருந்தால் என்ன தான் முசுட்டு ஆசிரியை என்றாலும் சம்பந்தப் பட்ட மாணவியின் மீது அவர்களுக்கு ஒரு மரியாதை இருக்கத்தான் செய்யும்.அந்தப் பலனை கெட்டியாகப் பற்றிக் கொள்ள முயலுங்கள்.

பெற்றோர்களுக்குச் சொல்ல விரும்புவது. கண்மூடித் தனமாக ஆசிரியர்களை குறை சொல்வதை நிறுத்துங்கள். நாணயத்திற்கு இருபக்கங்கள்.இன்றைக்கு வகுப்பறையில் எல்லோர் முன்னிலும் திட்டி கருத்துக் கொட்டும் ஆசிரியை நாளையே உங்களிடம் உங்கள் மகன் அல்லது மகளை ஏதாவது ஒரு திறமைக்காக வானளாவப் புகழும் நிலை வரும். அதற்கு நம் குழந்தைகள் உயிரோடு இருக்க வேண்டும் .

அதற்கு முன் வெகு முக்கியமாய் பாலியல் ரீதியாக வரக் கூடிய அச்சுறுத்தல்கள் அல்லது உளவியல் ரீதியாக நேரக் கூடும் மனமுடைதல் குறித்து நம் குழந்தைகளின் ("இம்" மெனும் முன் தற்கொலை)பூஞ்சை மனதை வலுப்படுத்த உருப்படியாய் ஏதானும் முயற்சிக்கலாம்.இந்த உலகில் எல்லாவற்றுக்கும் தீர்வு இருக்கிறது.அப்படித் தான் குழந்தைகள் நம்ப வேண்டும்,

கொலையோ,தற்கொலையோ அதற்கான தீர்வாக முடியாது.

உங்களைப் போலவே பாதிப்புக்கு உள்ளான மற்றவர்களுக்கு உங்களது முடிவுகள் பாடமாகி வளரும் சமூகம் பாழாக வேண்டாம்.

முதலில் பாடம் படிக்க வேண்டியது பெற்றோர்களே .

நம்மிலிருந்து நம் குழந்தைகள் கற்றுக் கொள்வார்கள்.

முக்கியக் குறிப்பு :

கற்றுக் கொள்வதென முடிவெடுத்த பின் கற்கும் பாடம் நல்ல பாடமாக இருக்கட்டும் ,இன்னொரு சூட்கேஸ் சடலம் நகரத்தின் பஸ் ஸ்டாண்டுகளில் ஈ மொய்க்கக் தொலைக்காட்சிகளில் காணக் கிடைக்க வேண்டாம்.

"சோகத்தில் பெரிய சோகம் புத்திர சோகம்".

Wednesday, July 7, 2010

ஒன்னாப்பு வாத்தியார் சொன்ன கதை பார்ட்-2 (முடிவு)


நாகரத்தினம் எடுக்கப் புறப்படும் நால்வர் அணியைப் பற்றி கடந்த பதிவில் சொன்னேனில்லையா? அந்த வீர தீர பராக்கிரம திட்டம் என்ன ஆயிற்றென்று பதிவு செய்வது என் கடமையாச்சுதே;

நாங்கள் பொருளெல்லாம் தயார் செய்து வைத்துக் கொண்டு வீரப் பயணத்திற்காகக் காத்துக் கொண்டிருந்தோம் (நம்புங்கள் ...இது நிஜம்)இதோ புறப்பட்டு விட்டோம்....இன்னும் ஒரு பகல்....ஒரு இரவு ....!!!அதற்குப் பிறகு ?

அதற்கு பிறகு அந்த நாளும் விடிந்தது .

அன்றைய விடியலே படு பயங்கர திகிலோடு விடிந்தது என்று தான் சொல்ல வேண்டும்.

எங்கிருந்து வந்தனவென்றே தெரியவில்லை ;அன்றைக்கு மட்டும் மொத்தம் ஆறேழு பாம்புகள் ஊருக்குள் அடித்திருப்பார்கள் .

கொத்து ஆசாரி வீட்டுப் பரணில் இருந்து நழுவி விரைந்த மஞ்சள் சாரைப் பாம்பு .மூக்கம்மா பாட்டி வீட்டு கொட்டாரத்தில் சூர்ய காந்திச் செடிக்கு அடியில் தண்டோடு தண்டாக சுருண்டு இங்கிருந்து போவேனா போக்கு காட்டிய பச்சைப் பாம்பு ஒன்று .

வண்ணார் வீட்டு அழுக்குத் துணி மூட்டைகளுக்கு அடியிலிருந்து சர்ரென்று சீறிப் படமெடுத்து ஆடிய கருநாகம் ஒன்று .

இன்னும் அவரவர் இஷ்டப்படி நல்ல பாம்பென்றும் ,கட்டு விரியன் என்றும் கண்ணாடி சாரைப் பாம்பென்றும் நாமம் சூடிக் கொண்ட பாம்புகள் சில ;இத்தனையையும் தேடித் தேடி அடித்துக் கொன்று விட்டு (அல்லது அப்படி சொல்லி நம்ப வைத்து விட்டு ) கடப்பாரையும் கையுமாக வந்த ஊர் இளவட்டக் கோஷ்டியினரின் வாயைப் பார்த்துக் கொண்டு லீவு நாளில் வெறும் கஞ்சி தேங்காய் துவையலோடு காலை சமையலை ஏறக்கட்டி விட்ட அம்மா,பெரியம்மா,அத்தை,சித்திகள் கூட்டம் .

அன்றைக்கு பள்ளி விடுமுறை நாளானதால் அடுத்தடுத்து பாம்பு அடிப்பதைக் கண்டு அரண்டு போன எங்களை போன்ற வாண்டுகள் கூட்டத்தின் கொட்டம் வேறு ,ஊருக்குள் அன்றைக்கு பாம்பைத் தவிர வேறு பேச்சில்லை என்றானது .

இப்படி ஒரு சூழலில் நாங்களாவது நாகரத்தின வேட்டைக்குப் போவதாவது !வீட்டுக்குத் தெரியாமல் அப்படியெல்லாம் போகத்தான் விட்டு விடுவார்களா என்ன ?! நல்ல கதை .

மூக்கம்மா பாட்டியின் கொட்டாரத்தை ஒட்டி பாம்பு வரமுடியாத அளவுக்கு பாதுகாப்பான தூரத்தில் நின்று கொண்டு பேசிக் கொண்டிருந்த எங்கள் அம்மாக்கள் பாட்டிகள் கூட்டத்தோடு நின்றிருந்தோம் நாங்கள் நால்வரும் ,அப்போது ரங்கா கேட்டாள்;

"கார்த்தி நீ பாம்ப பார்த்தியா !"

எனக்கு பாம்பு என்று சும்மா சொல்லக் கூட உடம்பெல்லாம் நடுக்கமெடுத்தது.

"இல்...ல்...லல்ல ."

அழகேசன் முந்திக் கொண்டு சொன்னான் .

"நான் பார்த்தேன்,எத்தன்தண்டி சாராப் பாம்பு தெரிமா?"

"அடேயப்பா ...ஒரு ஆள் வெயிட் இருக்கும் நம்ம பெரிய வாத்தியார் அளவுக்கு அவ்ளோ உயரமா இருந்துச்சு சாரப் பாம்பு .(ஆறடி உயரம்) அப்பிடியே வானத்துல பாஞ்சு பறந்து போச்சு தெரிமா .எங்க சூர்யாண்ணன் தான் அந்த பாம்ப அடிச்சான் தெரிமா!"

"ஆ...அவ்ளோ பெரிசா வா இருக்கும் சாரப் பாம்பு ?! " (ருக்கு தான்)

"எங்க சிவா மாமா மலைப் பாம்பையே அடிச்சிக் கொன்னவர் ,போடா நீ உங்க சூர்யாண்ணன் இத்தனூண்டு சாரப்பாம்ப கொன்னத போய் சொல்லிட்டிருக்க."

ஏய் எங்க கண்ணா மாமா கருநாகத்தையே விரல்ல சுத்தி சுழட்டி சுழட்டி அடிச்சே கொன்னுடுவார் தெரிமா ! எங்க கண்ணா மாமா தான் பலசாலி .தைர்யசாலி . (இது ரங்கா)

இந்த விளையாட்டுக்கு நான் வரலை என்று சொல்லி எஸ்கேப் ஆகியிருக்கலாம் நான் .

அதெப்படி ! அப்டிலாம் விட்ற முடியுமா என்ன? அப்புறம் என் friends என்னை மதிப்பாங்களா !

"ஏய் எங்க ரகு மாமா டெய்லி பாம்பு பாலை பிடிச்சுட்டு வந்து தான் காபி குடிப்பார்.எங்க வீட்ல காபியே பாம்பு பால்ல தான் போடுவோம் தெரிமா!? (வேறு யார் நான் தான்!!!) "

இரு ..இரு நாகரத்தின வேட்டை என்னாச்சுன்னு யாரோ கேட்கலாம் .

ஆமாம் நாகரத்தினமா அப்பிடின்னா என்ன?!

நாங்கலாம் பாம்பு பால்ல காபி போட்டுக் குடிக்கிறவங்க எங்க கிட்டப் போய் இப்படிலாம் கேள்வி கேட்டுகிட்டு !

:)))

இது நடந்து வருடங்கள் பல கடந்த பின்னும் இன்னும் சிரிப்பூட்டுவதாய் தான் இருக்கிறது பால்ய நினைவுகள் ...நிகழ்வுகள் .

Thursday, July 1, 2010

ஒன்னாப்பு வாத்தியார் சொன்ன கதையும் ...நாங்க போட்ட சூப்பர் திட்டமும்(திட்டம் தீட்டுற வயசா அது?! ( மீள்பதிவு )





நாங்கள் போட்ட திட்டம் :-

இந்த திட்டம் தீட்டிய போது சர்வ நிச்சயமாக நான் ரெண்டாப்பு(இரண்டாம் வகுப்பு) தான் படித்துக் கொண்டிருந்தேன்,மிஞ்சிப் போனால் என்ன ஒரு ஒரு ஆறு வயசு இருக்கும் என்று வைத்துக் கொள்ளலாம்!திட்டம் தீட்டும் வயசா அது ?ஆனால் நான் இல்லை ...இல்லை நாங்கள் ஒரு குரூப் ஐந்தாறு குழந்தைகள்(அட என்னப்பா ஆறு வயசுனா அது குழந்தைப் பருவம் தான்!) ஒன்று சேர்ந்து நாக ரத்தினத்தை நாகப் பாம்பிற்க்குத் தெரியாமல் காட்டுக்குள் போய் எப்பாடு பட்டாவது கவர்ந்து கொண்டு வந்தே தீருவது என்று ஒன்றல்ல இரண்டல்ல கிட்டத் தட்ட ஒரு வார காலமாகப் பெருசாகத் திட்டம் தீட்டிக் கொண்டிருந்தோம் .


எல்லாவற்றிற்கும் காரணமே இந்த ஒன்னாப்பு (ஒன்றாம் வகுப்பு) வாத்தியார் தான் ,அவரை நாங்கள் மட்டும் அல்ல ஊரே கதை வாத்தியார் என்று தான் அழைத்தது,அவர் பாடம் எதுவும் எடுத்ததாக எனக்கு ஞாபகமே இல்லை,எப்போதும் கதை தான் சொல்வார்.நிறைய....நிறையக் கதைகள் சொல்வார்(தன் கற்பனையையும் சேர்த்து ...தான்)அப்படி அவர் அறிமுகப் படுத்தி வைத்தவை தான்

பட்டி விக்ரமாதித்தன் கதை,

நல்லதங்காள் கதை,

கண்ணகி கோவலன் கதை,

போஜராஜன் கதை(இது இப்போது மறந்து விட்டது தெரிந்தவர்கள் யாரேனும் சொன்னால் தேவலை ...)

கண்ணப்பர் கதை

வள்ளி கல்யாணம்

அப்புறம் ஒரு கீரிப்பிள்ளை கதையைக் கூட அடிக்கடி சொல்வார் இது கண்ணகி கோவலன் கதையில் வரும் ஒரு கிளைக்கதை ,

ஆனாலும் ரொம்ப நல்ல கதை .இவ்வளவு நாட்களின் பின்னும் மறக்கவே இல்லை எனக்கு ,தெருவில் என்றாவது மோடி வித்தைக் காரன் கீரிக்கும் பாம்பிற்கும் சண்டை என்று சொல்லி மேளம் அடித்தால் உடனே எனக்கு ஞாபகம் வருவது ஒன்னாப்பு வாத்தியாரும் அவர் சொன்ன கீரிப்பிள்ளை கதையும் தான்.இது வரை நேரில் நான் கீரியும் பாம்பும் சண்டை இட்டு பார்த்ததே இல்லை ஆனாலும் ரெண்டாப்பு படிக்கும் போது எப்போதெல்லாம் எங்கள் கிளாஸ் வாத்தியார் லீவோ ..! எப்போதெல்லாம் ஒன்னாப்பு வாத்தியார் எங்களைப் பார்த்துக் கொள்ள ஹெட்-மாஸ்டரால் அனுப்பப் படுகிறாரோ அப்போதெல்லாம் நாங்கள் அவரிடம் வேண்டி விரும்பி முதலில் கேட்பது இந்தக் கீரிப்பிள்ளை கதையைத்தான்.

சொல்லப் போனால் நாங்கள் அப்போதெல்லாம் வாரம் ஒரு தடவையாச்சும் பாம்பு-கீரிப்பிள்ளை சண்டையை நேரில் பார்த்தோம் ஒன்னாப்பு வாத்தியாரின் வாய் வழியே ...!அவ்வளவு தத்ரூபமாக கதை சொல்ல இன்றைக்கு யாருமே இல்லை .(அந்தக் கீரிப்பிள்ளை கதையை அடுத்த பதிவில் சொல்கிறேன்)

இப்போது எங்கள் திட்டத்தைப் பார்ப்போம்.எதையுமே நேரில் கண்பது போலவே விவரிக்கத் தெரிந்த அந்த ஒன்னாப்பு வாத்தியார் எல்லாக் கதையையும் போலவே நாகரத்தினக் கதையையும் எங்களுக்கு ஒரு பின் மத்தியான வகுப்பில் சொன்னார்,அதாகப்பட்டது நாகரத்தினம் என்பது வைர...வைடூரியங்களைக் காட்டிலும் மிக விலை உயர்ந்ததாம் (அப்படியா ...மக்களே !!!)

நாகரத்தினம் என்று ஒன்று நிஜமாகவே இருக்கிறதா என்ன?அப்போதெல்லாம் ஆறு வயதில் இந்த டவுட் வரவில்லை.அந்த நாகரத்தினத்தை வைத்து தான் அந்தப் பாம்பு இரை தேடுமாம் .பாம்புக்கு ராத்திரியில் பொதுவாக கண் தெரியாது (யாருக்குத் தான் ராத்திரியில் விளக்கில்லாமல் கண் தெரியக் கூடும்?)அதனால் அது தனது தொண்டையில் இருக்கும் நாகரத்தினத்தை இரை தேடும் இடத்தில் கக்கி விட்டு அந்த வெளிச்சத்தில் இரை ஏதாவது சிக்குமா என்று தேடுமாம் (எல்லாம் வாத்தியார் சொன்னது தான் )அந்த நேரம் யாராவது (நோட் திஸ் பாயிண்ட் நண்பர்களே)நாகரத்தினத்தை பாம்பிடமிருந்து அபகரிக்க வேண்டுமென நினைத்தால் அவர்கள் மகா புத்திசாலிகளாக இருக்க வேண்டுமாம் .

முதலில் தைரியம் ரொம்பத் தேவை .நடு இரவில் தான் பாம்பு காட்டில் இரை தேடுமாம் .(இங்கே ஒரு டவுட்)மத்த நேரமெல்லாம் பாம்புக்குப் பசிக்காதா?தப்பித் தவறி இந்த டவுட் ஐ கேட்ட சில புத்திசாலி குழந்தைகளுக்கு(ஹி..ஹி...ஹி...அப்போ நாங்கலாம் குழந்தைங்க தான...!!!) வாத்தியார் சொன்ன கலப்படமில்லாத காமெடி பதில் என்ன தெரியுமா?"கதைக்கு காலுண்டா ...உங்க அப்பனுக்கு வாலுண்டா?" எனக்கு தெரியாது சார் என்று சொன்னால் போதும் ...இதுக்கே உனக்கு பதில் தெரியலை ...பேசாம உட்கார் கதையக் கேளு....கதையக் கேளு என்றே ஒவ்வொரு வகுப்பையும் ஓட்டோ ..ஒட்டென்று ஓட்டியே விடுவார் .

இப்படியாப் பட்ட ஒன்னாப்பு வாத்தியார் சொன்ன மீதிகதையைக் கேட்டு தான் நாங்கள் அம்மாம் பெரிய திட்டத்தை தீட்டிக் கொண்டு காத்திருந்தோம் .நாங்கள் என்றால் நாங்க நாலு பேர் (அழகேசன்,ரங்கா,கார்த்தி,ருக்கு)வாத்தியார் சில டெக்னிக்குகள் சொல்லி இருந்தார் இல்லையா நாகரத்தினத்தை ஹீரோ எப்படி எல்லாம் அதனிடம் இருந்து திருடிக் கொண்டு போனார் என்று (அதிக பட்சம் வாத்தியாருக்கு கதை ஹீரோவாக கோவலனோ...விக்ரமாதித்தனோ,போஜராஜனோ தான் கிடைப்பார்கள்)மூன்று பேரையும் மாற்றி மாற்றிப் போட்டுக் கொண்டு புதுசு புதுசாகக் கதை சொல்வதில அவர் தான் கில்லாடி நம்பர் ஒன் ஆச்சே?

அப்படி அவர் சொன்ன ஒரு கதையில் ஹீரோ விக்ரமாதித்தன் (எங்களுக்கு) உங்களுக்கு யாரைப் பிடிக்கிறதோ அவர்களை கற்பனை செய்து கொள்ளலாம்(ரஜினி,விஜய்,அஜீத்,சூர்யா...!!!) நாகத்தை(அதான் பாம்பை ஏமாற்றி நாகரத்தினத்தை எடுக்க (திருட) ஒரு பையில் சாணி(கெட்டிச் சாணி) எடுத்துக் கொள்கிறார் முதல் வேலையாக,பிறகு ஒரு டார்ச் லைட் இதெல்லாம் எதற்கு என்று நீங்கள் யோசிக்கலாம் ? பாம்புக்கு ராத்திரியில் கண் தெரியாது ...அதுவே நாகரத்தினத்தை கக்கி அது தரும் ஒளி வெளிச்சத்தில் தான் இரை தேடிக் கொண்டு இருக்கும் ,அப்படியானால் பாம்பை ஏமாற்ற முதலில் நாகரத்தினத்தின் ஒளியைத் தடுத்தே ஆக வேண்டும்.ஆனால் பாம்புக்குப் பக்கத்தில் போக முடியுமா?!


அதான் தூர இருந்தே குறி பார்த்து கெட்டிச்சாணியை சரியாக வீசி எறிந்து நாகரத்தினத்தை சாணி மூடுமாறு பார்த்துக் கொள்ள வேண்டும் ,இல்லாவிட்டால் கதை கந்தல் பாம்பு ஹீரோவைப் பார்த்து விடக் கூடும்.அதற்குத் தான் கெட்டிச்சாணி...அப்புறம் டார்ச் லைட் எதற்கு என்று கேள்வி வரும்? அதற்கும் பதில் இருக்கிறது , அதாகப் பட்டது வெளிச்சம் வர வைக்கும் நாக ரத்தினத்தை சாணி மூடி விட்டால் ஹீரோ (எங்கள் திட்டப் படி நாங்கள்) கண் தெரியாமல் எப்படி அதைப் போய் பாம்புக்கு அகப்படமல் நைசாக நழுவி எடுத்துக் கொண்டு ஓட முடியும் ?அதான் டார்ச் லைட் ...


அதை எரிய விட்டு ரத்தினத்தை எடுத்துக் கொண்டு ஓடி விட வேண்டும் .பாம்புக்கு கண் வேண்டுமானால் தெரியாது ஆனால் காது கேட்கக் கூடுமே(விஞ்ஞானிகள் கூற்றுப் படி பாப்புக்கு காது கேட்காதாம் ஆனால் அப்போது எங்களுக்கு இதெல்லாம் தெரியாதே ...ஏனென்றால் அப்போதெல்லாம் நாங்கள் தான் குழந்தைகள் ஆச்சுதே!!!)அப்படி காது கேட்டு பாம்பு எங்களைத் துரத்தினால் யாரும் மறந்து போய்க் கூட நேராக மட்டும் ஓடி விடக் கூடாது...கூடவே கூடாது ,வளைந்து வளைந்து பாம்பு போலவே ஓட வேண்டும் அப்போது தான் பாம்பால் நம்மை வேகமாகத் துரத்த முடியாமல் போகும்,இது நிரூபிக்கப் பட்ட உண்மையா? என்றெல்லாம் தெரியாது என்னவோ வாத்தியார் சொன்னார் ;


(இப்போது கூட ஒருவேளை... பாம்பு துரத்தினால்(கனவில் தான் ..நம்புங்க ...ப்ளீஸ் ) நாங்கள் வளைந்து வளைந்து தான் ஓடுவோம் .நீங்களும் அப்படியே ட்ரை பண்ணி பாருங்களேன் (பாம்பு துரத்தினால் மட்டும்). இதுவரை பாம்பு மனிதர்களை கதைகளைத் தவிர நிஜத்தில் எப்போதாவது துரத்தி இருக்கிறதா?!


சரி இப்போது சொல்லி முடித்து விடுகிறேன் எங்கள் நால்வர் அணியின் திட்டத்தை ,ஒரு வழியாக முடிவுக்கு வந்தே விட்டோம்,(நான் எங்கள் திட்டத்தை தான் சொல்கிறேன்)அதாவது அழகேசன் அவனது தாத்தா வீட்டு மாட்டுத் தொழுவத்தில் இருந்து கெட்டிச்சாணி எடுத்து வருவதாக ஒப்புக் கொண்டான் (அதற்கான பிளாஸ்டிக் பை கூட அவனே கொண்டு வந்து விடுவதாக பெருந்தன்மையாகச் சொல்லி விட்டான் ,ரங்கா சும்மா பாதுகாப்புக்கு கையில் இருக்காட்டுமே என்று அவள் வீட்டு அரிவாள் மனையை எடுத்துக் கொண்டு வருவதாகச் சொல்லி நம்பிக்கை ஊட்டி விட்டாள், கார்த்தி (சாட்சாத் நானே தாங்க) டார்ச் லைட் கொண்டு வர வேண்டும் என்று நால்வர் அணி கட் அண்ட் ரைட் ஆக சொல்லி விட்டது( அவள் தான் கொஞ்சம் வள்ளல் எங்கள் குரூப் இல்) வேறு யார் வீட்டில் டார்ச் லைட் எடுத்துப் போக விடுவார்களாம்?! :))) அப்புறம் ருக்கு ரொம்பவே பெருந்தன்மையாக எங்களை எல்லாம் வழிநடத்தி அதாகப் பட்டது எங்களை அதட்டி உருட்டிக் சட்டாம் பிள்ளைத் தனம் செய்து எங்களை அதிகாரம் செய்து ஒருவேளை நாகரத்தினம் கிடைத்தல் அதில் பெரும்பங்கு எடுத்துக் கொள்ளும் நல்ல(கெட்ட) நோக்கத்தோடு வர ஒத்துக் கொண்டாள்.


இதோ இன்னும் ஒருநாள் இருக்கிறது ...நாங்கள் பொருளெல்லாம் தயார் செய்து வைத்துக் கொண்டு வீரப் பயணத்திற்காகக் காத்துக் கொண்டிருந்தோம் (நம்புங்கள் ...இது நிஜம்)இதோ புறப்பட்டு விட்டோம்....இன்னும் ஒரு பகல்....ஒரு இரவு ....!!!அதற்குப் பிறகு ?


அஸ்க்கு புஸ்க்கு ...இப்பவே சொல்லிட்ட த்ரில் போயிடும்ல?அடுத்த பதிவு போட மேட்டர் வேணாமா ?கொஞ்சம் பொறுங்க


will be back soon...