Saturday, June 19, 2010

பள்ளி கழிப்பறையில் குழந்தை பெற்ற 14 வயதுச் சிறுமி - உடனடித்தேவை கல்வியா மனநல சிகிச்சையா?!

ராமநாதபுரம் புனித ஆந்த்ரேயா பள்ளியில் பத்தாம் வகுப்பு படிக்கும் 14 வயது மாணவி பள்ளி டாய்லட்டில் குழந்தை பெற்றுக் கொண்டது நேற்றை விட இன்றைக்குப் பழைய செய்தி,பலரும் அதை பத்திரிகைகளில் படித்திருப்பீர்கள் .சம்பந்தப் பட்ட மாணவி அந்தப் பள்ளியில் இருந்து நீக்கப் பட்டிருக்கிறாள்.பள்ளி அந்த மாணவியை நீக்கியது தவறு என்று சில அமைப்புகள் கூறி வருகின்றன.

குற்றம் நடந்தது என்ன? என்ற ரீதியில் இதை அணுகும் முன் ;

அந்த மாணவிக்கு ஏன் மனநலப் பரிசோதனை செய்வதைப் பற்றி பரிசீலிக்கக் கூடாது.

யாருக்கும் எந்த சந்தேகமும் எழும்பாத வகையில் கருவை வயிற்றில் சுமக்கத் தெரிந்திருக்கிறது,ஏன் இத்தனை குண்டாக இருக்கிறாய் என்று கேட்டவர்களிடம் எல்லாம் தவறான மாத்திரை உண்டதால் உடல் பருமனில் ஏற்பட்ட கோளாறு என்று சமாளிக்கத் தெரிந்திருக்கிறது ,அத்தனைக்கும் மேல் பெற்ற குழந்தையை கழிவறைப் பீங்கான் கோப்பையில் அமுக்கி கொல்லவும் முயற்சி செய்திருக்கிறாள்.உயிருக்குப் போராடிய நிலையில் தான் அந்த குழந்தை மீட்கப் பட்டிருக்கிறது .இதெல்லாம் அறியாமையில் அச்சத்தில்...இயலாமையில் செய்த தவறுகளாக கருதிக் கொள்ள இடமிருந்தாலும் பிரசவ வலியை யாருக்கும் தெரியாமல் எப்படி அவளால் பொறுத்துக் கொள்ள முடிந்தது.பெண்களுக்கு மறுஜென்மம் என்பார்களே பிள்ளைபேற்றை.மிகக் கடுமையான வலி அதை ஒரு சிறுமி பொறுத்துக் கொண்டு சத்தமே இன்றி குழந்தை பெற்றிருக்கிறாள் என்றால் அவள் சாதாரண மனநிலையில் இருப்பதாக எப்படி ஒத்துக் கொள்ள முடியும்.

ஆகவே பிறந்த குழந்தைக்கு தகப்பனைக் கண்டுபிடிக்கும் முன்பு;

அந்தச் சிறுமியை மீண்டும் அதே பள்ளியில் சேர்த்தே ஆக வேண்டும் என அமைப்பு ரீதியாகப் போராடும் முன்பு ;

அந்த சிறுமிக்கும் அவளது அம்மாவுக்கும் (ஒரு தாய்க்கு தன் மகள் வயிற்றில் கருவைச் சுமக்கும் விஷயம் பிரசவம் வரை தெரியாது என்பது நம்பத் தகுந்ததாக இல்லை) மனநலப் பரிசோதனை செய்து அவர்களிடம் இருந்து நடந்த விவரங்களைக் கண்டறிவது முதல் தேவை என்று தோன்றுகிறது.

மீட்கப் பட்ட குழந்தை அரசின் தொட்டில் குழந்தை காப்பகத்தில் பராமரிக்கப் பட்டு வருகிறது.அந்தக் குழந்தையின் எதிர்காலம் என்ன!

இவளே சிறுமி எனும் போது இனி இவளது எதிர்காலம் என்ன?

இந்தக் கேள்விகளுக்கு ஒரே பதில் செய்தியைப் படித்தவர்கள் அனைவரும் இன்னொமொரு செய்தி எனும் ரீதியில் அப்படியே கடந்து போவதாக மட்டுமே இருந்து விடுதல் சரியா!

ஒரு பெண்ணின் மனநிலையில் நான் இந்தக் கருத்தை கூறுகிறேன்.வாசிப்பவர்கள் விருப்பமிருப்பின் உங்களது கருத்துகளை பகிர்ந்து கொள்ளுங்கள்.

13 comments:

அமுதா கிருஷ்ணா said...

மிகவும் அதிர்ச்சிகரமான செய்தி.மென் மனம் படைத்தவர்கள் பெண்கள் என்பதை கேள்வி குறி ஆக்கி உள்ளது இந்த பெண்ணின் செயல்.நிச்சயம் அந்த பெண்ணிற்கு மனநல மருத்துவம் தேவை தான்.

Thamiz Priyan said...

\\அமுக்கி கொள்ளவும் முயற்சி செய்திருக்கிறாள்\\\

கொல்ல..??

நல்ல மனோதிடம் உள்ள பெண்ணாகத் தெரிகின்றாள்.. அவளுக்கு ஏன் மனநலசிகிச்சை?

Anonymous said...

The school reported that she herself asked for TC as she does not want to face her friends and others in the school out of shame. You are repeating that the school expelled her. Please cross check.

You are asking for psychiatric counseling for her. What about others? There are so many, but they dont get pregnant; and even if they did, they abort. It is confined not only to school girls, but to the girls everywhere, esp rural areas where parents go to work and return in the evening; and chances of young people getting intimate secretly, are common.

Will you suggest psychiatric counselling for all of them?

My dear friend,

It is impossible.

Such attitude to life, before they know the consequences of pregrancy and motherhood, or responsbilities of becoming an adult, etc . CANNOT BE CHANGED by mere psychiatric counseling.

Then, when else can? is a good question. Why dont you find out the answers?

ஜெய்லானி said...

எந்த சிகிச்சையா இருந்தாலும் முதல்ல அவங்க பெற்றோருக்கு குடுக்கனும். இதுக்கு காரணம் அவங்க

என்ன கேள்வி இது .. நிறை மாத கர்பிணி யாருக்கும் சந்தேகம் வராதா என்ன ?

தலை சுற்றுது. எனக்கு பதில் தெரியல

அவ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்

pudugaithendral said...

ரொம்ப அதிர்ச்சியாக இருக்கிறது.

மனநல சிகிச்சை கண்டிப்பாய் தேவை. பெண் மற்றும் அவள் சார்ந்த குடும்பத்தினர் அனைவருக்கும் கூட.

பேரண்ட்ஸ் கிளப்புக்கு சுட்டித்தந்ததற்கு நன்றி

adhiran said...

sir,
no need for psychotry. just they should know about condom. that awarness is morethen enough I thought.

நிகழ்காலத்தில்... said...

இதில் ஏற்கனவே இரண்டுமுறை கருக்கலைப்பு செய்துள்ளதாகவும் அடுத்த நாள் செய்தி வந்தது..:((

நானானி said...

கல்விக்கூடம் பிரசவக்கூடமாகக் காரணம் யார் என்பதை உடனடியாகக் கண்டறிய வேண்டும். இது மற்ற மாணவிகளுக்கு ஒரு தவறான முன்மாதிரியாக ஆகிவிடக் கூடாது.

பெற்றோரின் கண்காணிப்பில் எங்கோ
தவறிருக்கிறது.

KarthigaVasudevan said...

வாங்க அமுதாகிருஷ்ணா ...(நீங்க சொல்றது சரிதான்)

வாங்க தமிழ்ப்ரியன் (பிஞ்சுக் குழந்தையை கொல்ல முயற்சி செய்வது தான் மனோதிடம் மிக்க செயலா ! சபாஷ் சரியான புரிதல்) மனநலம் என்பது வேறு மனோதிடம் என்பது வேறு என்றே நினைக்கிறேன்.இப்படிப் பட்ட மனோதிடம் கொண்டவர்கள் எல்லோரையும் நல்ல மனநலம் கொண்டவர்கள் என்று ஒத்துக் கொள்வீர்களோ!


கருத்துக்கு நன்றி Jo Amalan Rayen Fernando

நான் ஒரு பெண் மேலும் ஒரு பெண் குழந்தைக்குத் தாய் என்ற மனநிலையில் மட்டுமே எழுதப் பட்ட கருத்து இது.அந்த மாணவியின் இந்த நிலைக்கு காரணமானவன் யார் என்று அவளே இன்னும் வெளிப்படுத்தவில்லை என்பது பத்திரிகை செய்தி,மேலும் அவளது தாயிடம் நடத்தப் பட்ட விசாரணையில் அவள் தன் மகளை ஊர் திருவிழா சமயத்தில் யாரோ மூன்று பேர் ஊர் கம்மாய்க்குள் தூக்கிச் சென்று பலாத்காரம் செய்து விட்டதாக சர்வ சாதாரணமாக கூறினாராம். இப்படிப்பட்ட சூழலில் அந்த சிறுமி குறித்து மட்டுமே பேச முடியும்,அவளது அந்த நிலைக்கு காரணமானவர்கள் அல்லது உலகில் இது போன்ற குற்றங்களை செய்பவர்கள் அனைவருக்குமே ஒட்டு மொத்தமாக மனநல சிகிச்சை அளிக்கப் படவேண்டும் என்று நான் எழுதினால் அது உடனே செயல்படுத்தப் பட்டு விடுமா என்ன !?

மேலும் பள்ளியே அவளை நீக்கியதாக வாசித்ததும் இதே பத்திரிகைகளில் தான் ,அந்த மாணவியே பள்ளியை விட்டு நீங்கியதாக நீங்கள் சொன்ன பிற்பாடே நான் அறிகிறேன்.இவையெல்லாம் நான் வாசித்த பத்திரிகை செய்திகள் (இந்தியன் எக்ஸ்ப்ரஸ்,ஜூ.வி) இவை அப்படியே உண்மையாக இருக்க வேண்டுமென்பது அவசியமில்லை ,பர பரப்பிற்காக எதையும் எழுதக் கூடியவையே நமது பத்திரிகைகள். பள்ளி அவளை நீக்கியிருந்தாலும் அல்லது அவளே பள்ளியை விட்டு நீங்கியிருந்தாலும் சரி அவளது முதல் தேவை கல்வியா அல்லது மனநல சிகிச்சையா என்பதே இப்போதையே கேள்வி.

மாணவிக்கு மனநல சிகிச்சை அளிக்கப் படவேண்டும் என்று நான் சொல்லக் காராணம் பிறந்த குழந்தையை அதன் ரத்தம் காயும் முன்னே கொல்லத் துணிந்த அந்த சிறுமியின் செயல்பாடு அதிர்சிகரமானது.வயிற்றில் இருக்கும் கருவை கலைப்பதே தண்டனைக்குரிய குற்றம் என்கையில் பிறந்து விட்ட ஒரு உயிரை கொல்லத் துணிவது என்பது அந்த சிறுமியின் மனநலம் சார்ந்த விஷயம் அல்லவா! எத்தனை வெறுப்பு அல்லது கோபம் அவளை அவ்வாறு செய்யத் தூண்டியிருக்கும்?இதே வெறுப்பான அல்லது குற்ற உணர்வுடன் கூடிய மனநிலையில் அந்த மாணவி நீடிப்பது அவளது எதிர்கால வாழ்வுக்கு நன்மையா ! நடந்தது முடிந்து விட்டது,இனி நடக்க வேண்டியது !அவளுக்கான முதல் தேவை என்ன?

KarthigaVasudevan said...

நன்றி ஜெய்லானி...

ஆம்...அந்த மாணவிக்கும் அவளது அம்மாவுக்கும் மனநல சிகிச்சை அல்லது குறைந்த பட்சம் தேர்ந்த மனநல மருத்துவர் மூலம் கவுன்சிலிங் மட்டுமேனும் முதல் தேவை என்றே நானும் சொல்கிறேன் .


நன்றி புதுகை தென்றல் ...

பேரன்ட்ஸ் கிளப்பில் பல நல்ல விசயங்களைப் பற்றி எழுதுவதற்காக நான் அல்லவா உங்களுக்கு நன்றி சொல்ல வேண்டும். :)

மாணவி விசயத்தில் உங்கள் கருத்தே எனது கருத்தும்.


@ adhiran ...

நீங்கள் சொல்வது வயது வந்தவர்களுக்கு வேண்டுமானால் அவரவர் மனநிலை சார்ந்து பொருந்தலாம்,இங்கே குழந்தை பெற்றதும் அதை கொல்ல முயன்றதும் ஒரு சிறுமி என்பதையும் நீங்கள் வெகு முக்கியமாக கவனத்தில் இருத்த வேண்டும் அதிரன் .

KarthigaVasudevan said...

வாங்க நிகழ்காலத்தில் ...

நீங்கள் பகிர்ந்த தகவல் எனக்குப் புதிய செய்தி என்பதால் அதை பற்றி என்ன சொல்ல!!!
:(

ஆம் நானானி...மற்ற மாணவிகளுக்கு இது ஒரு முன் மாதிரி ஆகி விடக் கூடாது.அந்த மாணவியே முன்வந்து சொன்னாலன்றி எப்படிக் கண்டு பிடிக்க முடியும் அவளை இந்த நிலைக்குத் தள்ளியவர்களை ! சில செய்திகள் அதிர்சிகரமானவை மட்டுமல்ல குழப்பமானவையும் கூட.பெற்றோர்கள் தங்கள் பொறுப்பை சரிவர உணர்ந்து நடந்தால் தவறுகளின் எண்ணிக்கை குறையும்,மேலும் வளரும் அல்லது வளர்ந்த குழந்தைகளுக்கென்றும் சில பொறுப்புகள் இருக்க வேண்டுமல்லவா! குறைந்த பட்ச பாதுகாப்பு உணர்வு கூட இல்லாமல் அச்சத்துடன் குழந்தைகள் வளர்வதை தடுக்க வேண்டும் தானே.

முத்துலெட்சுமி/muthuletchumi said...

:( சிகிச்சை என்று எதும் தேவைப்படுவதுபோல் தெரியவில்லை...

உண்மையில் சரியான வழிநடத்துதல் தான் தேவையோ?

நம் சமூகத்தின் அழுத்தத்தால் கொலை செய்யத்துணிந்தது ஒன்றும் ஆச்சரியமான விசய்ம் இல்லை.. பெண் என்றால் கொலை செய்யமாட்டாள் என்பதெல்லாம் அந்த காலவாதம்..

ஹுஸைனம்மா said...

//இதெல்லாம் அறியாமையில் அச்சத்தில்...இயலாமையில் செய்த தவறுகளாக கருதிக் கொள்ள இடமிருந்தாலும் //

அப்படி நினைக்க முடியவில்லை! 14 வயது மாணவிக்கு இவ்வளவு அறியாமை இருக்குமா என்ன? அவளைப் பலாத்காரம் செய்திருக்கிறார்கள் என்றால், கருவுறுவாள் என்பது தாய்க்குத் தெரியாதா என்ன? அதைக் கண்காணித்திருக்க மாட்டாளா? இதில் பிண்ணனி வேறாக இருக்குமோ என்று தோன்றுகிறது.

எதுவாய் இருந்தாலும், அந்தப் பெண்ணிற்கு நிச்சயம் மனநல சிகிச்சை தேவை, இக்கொடூர மனம் தொடராமல் இருக்கவாவது!!

நகரங்களில்தான் நாகரீகத்தின் விளைவால் இப்படி நடக்கலாம் என்பது மாறி, கிராமங்களிலும்!! காலக்கொடுமை!!