Friday, February 12, 2010

ஜெயந்தனுக்கு (நிராயுதபாணிக்கு) அஞ்சலி...




"தீம்தரிகிட" மின்னிதழில் தான் தனது "துப்பாக்கி நாயக்கர்"சிறுகதை மூலமாக முதன் முறையாக ஜெயந்தன் எனக்குஅறிமுகம் ஆனார்.பாஸ்கர்சக்தி ஒரு நினைவுறுத்தும் பகிர்வாக இச்சிறுகதை குறித்து அங்கே எழுதி இருந்தார்.அளவில் நீண்ட சிறுகதை ஆயினும் படிக்கத் தூண்டும் வெகு ஜன வாசம் நிரம்பிய எழுத்து நடை,சற்றே விவரமான வெள்ளந்தி தனமான (!!!) ஆதங்கங்கள்,சமூகம் குறித்த தார்மீகக் கோபங்கள்,வாழைப் பழத்தில் ஊசி ஏற்றும் படியான பகடிகள்,பல்லிளிக்கும் பகட்டான முலாம் தேய்ந்த பின்னான கோர மனித அக முகங்கள்.இப்படி இவரது சிறுகதைகள் பேசாத பொருள் இல்லை எனலாம்.

எல்லாக் கதைகளுமே திட்டமிட்டு கூடுதல் ஆயத்தங்களுடன் எழுதப் பட்டவை போலன்றி இயல்பாகவே தனது நிஜத் தன்மையால் முழுமையும் நிறைவும் பெற்று விட்டதான தோற்றம் தருபவை.

வம்சி வெளியீடான ஜெயந்தனின் "நிராயுதபாணியின் ஆயுதங்கள்" தொகுப்பை வாசித்துக் கொண்டிருக்கிறேன்.மொத்தம் 58 சிறுகதைகள்,அனைத்துமே சிந்தனையை தூண்டத் தக்கவை,சில மிக ஆழ்ந்த பாதிப்பை ஏற்படுத்தக் கூடியவை.'நம்மில் இருக்கும் நானை வெளிக்கொணரும் முயற்சிகளே 'அவரது பெரும்பான்மையான கதைகளும்.

இந்த தொகுப்பில் என்னில் அதிகம் பாதித்த சிறுகதைகள் சிலவற்றை இங்கே பகிர்ந்து கொள்கிறேன் ,இதுவே அந்த உன்னத எழுத்தாளனுக்கு நான் செலுத்தும் அஞ்சலியாகவும் இருக்கட்டும்.இதை தவிர வேறென்ன செய்து விட முடியும் வாசகர்களை நாம் !

ஊமை ரணங்கள்
மரம்
துக்கம்
துப்பாக்கி நாயக்கர்
வெள்ளம்

இந்த ஐந்து கதைகளும் வெகு கனமான விசயங்களை மிக லேசாகப் பேசிச்சென்று முடிவில் கதையைப் பற்றிய உள்ளுணர்தலில் நடுக்கமான ஒரு அதிர்வை ஏற்படுத்தி ஓய்கின்றன.

"மரம்" சிறுகதை வாசிக்கையில் சற்றேறக் குறைய இதே உணர்வை ஏற்படுத்திய பிறிதொரு குறுநாவல் , பாஸ்கர் சக்தியின் "ஏழுநாள் சூரியன் ஏழு நாள் சந்திரன் "ஞாபகத்தில் பளிச்சென்று நிழலாடியது. இரண்டிலுமே நிகழும் எதிர்பாரா துர்மரணங்கள் தற்செயலானவை.முடிவில் வாசிப்பவர்களை பதற வைத்து திடுக்கிடச் செய்பவை.

இதே போல "துக்கம்" சிறுகதை வாசிக்கையில் தமிழ்நதியின் "நந்தகுமாரனுக்கு மாதங்கி எழுதியது" சிறுகதைத் தொகுப்பில் ஒரு கதையான "காத்திருப்பு" ஞாபகம் வந்தது.இரண்டு சிறுகதைகளுமே வாழ்ந்து சலித்த முதியவரின் மரணத்திற்குப் பின் அவருக்கு மிக நெருக்கமாகிப் போன இளைஞனின் அகக்கோபங்களைப் பற்றிப் பேசிச் செல்பவை.

வயோதிகத்தில் அவர்களின் இருப்பை புறக்கணித்து மதிக்காத சுற்றமும் வாரிசுகளும் மரணத்தின் பின் கதறி அழுவது "புளிப்பும் கரிப்புமாய் வயிற்றுக்குள் நுரைப்பதைப் போலான ஒரு அவஸ்தையான உணர்வை" அந்த இளைஞர்களிடத்தில் ஏற்படுத்துவதாக வாசிக்கையில் எங்கேயோ...எப்போதோ பெயரற்று உணரப் பட்ட ஏதோ ஒரு உணர்வின் நினைவு மேலெழுகிறது.

"ஊமை ரணங்களில்" மகளுக்கு தலை தீபாவளி சீர் செய்யப் பணம் கிடைக்காமல் திகைக்கும் ஒரு அப்பாவி அப்பாவுக்கும் விவரமான மகளுக்கும் இடையேயான உரையாடல் மெய்யான ஊமை ரணமே தான்.

கல்யாணத்துக்கு முன்பு அவள் தகப்பன் வீட்டில் இருந்து வேலைக்குப் போகையில் பெற வேண்டிய சம்பளப் பணம் அரியர்ஸ் என்ற பெயரில் கல்யாணத்துக்குப் பின் மொத்தமாக கிடைக்கவே படிக்க வைத்து வேலைக்கும் அனுப்பி அதற்கான பலனை அனுபவிக்க கொடுத்து வைக்காத ஆதங்கமும் வேறு வக்கற்ற இயலாமையும் கலந்து மகளிடமே அந்த தகப்பன் பணம் கேட்டுப் பெற தயக்கம் நிறைந்த நம்பிக்கையோடு புறப்பட்டு வருகிறான்,அங்கே மகளிடத்தில் அவனுக்கு கிடைத்த பதில் தான் ஊமை ரணமாகிப் போகிறது அவனுக்கு,நிஜத்தில் நாம் கண்ட கதை தான்,புத்தகத்தில் வாசிக்கையில் புறக்கணிக்க இயலா வருத்தம் தழும்பி அந்த தகப்பனுக்காக திகைக்கச் செய்கிறது .

"துப்பாக்கி நாயக்கர்" இன்னுமொரு அருமையான நிகழ்வு அடிப்படையில் அமைந்த கதை. ஊரே பயந்து மிரளும் ஒரு பெரிய மனிதனின் இளைய தாரத்தை அவரது அடியாட்களில் ஒருவனே கை பிடித்து இழுத்து மானபங்கம் செய்ய விழைய ,ஒரு நிமிட சபலத்திலான அவனது அந்த செய்கை பிற்பாடு "முதலாளி" என்ன செய்வானோ எனு பயத்திலேயே தானாக மருந்து குடித்து தற்கொலை செய்து கொள்கிறான்.சேதி அறிந்து இவனை எவ்வாறெல்லாம் மிரட்டலாம் என்றெண்ணிய அந்தப் பெரிய மனிதனுக்கு இவனது தற்கொலை மிகப் பெரிய அதிர்ச்சியாகி விடுகிறது.இப்படிப் போகிறது கதை.இந்தக் கதைக்கான லிங்க் கீற்று தளத்தில் தீம் தரிகிடவில் கிடைக்கும் என நினைக்கிறேன்,கிடைத்தால் வாசியுங்கள் ,நல்ல எழுத்து.

"வெள்ளம்" இந்தக் கதை வாசித்த பின் தான் நான் "கிருஷ்ணி "என்றொரு கதை எழுதினேன்.சம்பவங்கள் வேறு வேறு எனினும் மூலம் ஒன்றே.கல்யாணமாகி மனைவியைப் பிரிந்து இருக்கப்பட்ட அல்லது அவ்வாறு இருக்க எதாவது ஒரு வாழ்வியல் சூழலால் நிர்பந்திக்கப் பட்ட ஒரு ஆணின் பார்வையில் பெண்கள்.சொல்லப் போனால் பெண் எனும் பிம்பம் வயது ஒரு பொருட்டின்றி விவஸ்தை கெட்ட மனதின் அலங்கோல சிந்தனைகளைப் பற்றி சொல்லும் கதை இது,

ஒரு ஆணின் அகத்துக்கும் அவனுக்கு கிட்டிய சந்தர்பங்களுக்கும் இடையிலான உரையாடல் தன்மை ஒத்த இச்சிறுகதை மிக நல்ல முயற்சி.பதற வைக்கும் விஷயம் தான் ஆனாலும் முடிவில் மழை ஓய்ந்து வானம் தெளிவதைப் போல கருமை படர்ந்த அவனது விபரீத எண்ணங்கள் ஓய்ந்து அவன் தெளிவான வானம் பார்ப்பதாய் கதை முடிகிறது.வாழ்வும் இப்படித் தான்.நமக்கு நாமே ஒரு கோல் வைத்துக் கொண்டு நம்மை நாமே எல்லா சந்தர்பங்களிலும் வழுவாதிருக்க முயற்சி செய்து கொண்டு ஆட்சி செய்து கொள்ள வேண்டியது தான். இது ஒரு தீராத ஆட்டம் தான்,ஆனாலும் கரணம் தப்பினால் மரணம் போன்ற ஆட்டம்.

இந்த ஐந்து சிறுகதைகளுமே வாசிப்பளவில் என்னை மிகப் பாதித்தவை,இவை தவிர;

உபகாரிகள் :


பெண் பார்க்கச் செல்கையில் அக்கம் பக்கம் அந்தப் பெண்ணைப் பற்றி எல்லோரிடமும் விசாரிக்கிறார்கள் ஒரு இளைஞனின் சுற்றமும் நண்பர்களும்,லயம் தப்பாமல் எல்லோருமே பெண் மிக நல்லவள்,குணவதி என்று சர்டிபிகேட் தர பையன் ஆகாயத்தில் மிதக்காத குறை ,ஆனால் அந்தப் பென்னிடமிருந்தே "நான் ஒரு பஸ் டிரைவரை காதலிக்கிறேன்,என் அப்பாவும் தம்பிகளும் அவரை சில நாட்களுக்கு முன் நான் வேலை பார்க்கும் பள்ளிக்கு முன்பாகவே எல்லோரும் வேடிக்கை பார்க்க ஆள் வைத்து அடித்து உடைத்து விரட்டி விட்டார்கள்,நான் அவரையே திருமணம் செய்து கொள்ள விரும்புகிறேன் "என்று கடிதம் வரவே அந்த மாப்பிளைப் பையன் ஆகாயத்தில் இருந்து தொபுக்கடீர் என்று தரையில் விழுகிறான்!!!
பிறகெப்படி அப்படி ஒரு பெண்ணை என் தலையில் கட்ட விசாரித்த இடத்தில் எல்லாம் நல்ல பெண் ..நல்ல பெண் என்று சர்டிபிகேட் தருகிறார்களே! என்று இவர்கள் அவர்களிடமெல்லாம் மறுபடியும் விசாரிக்க,

நடந்தது நடந்து போச்சு அதுக்காக ஒரு பொண்ணோட கல்யாண விசயத்துல விளையாட முடியுமா?
அவளுக்கு நல்ல படியா கல்யாணம் ஆகட்டும் என்று எண்ணி தான் இப்படிச் சொன்னதாக சொல்கிறார்கள்
.எப்படிப் பட்ட உபகாரிகள் பாருங்கள் ?!!!இது தான் அந்தப் பெண்ணிற்கு அவர்கள் செய்யும் உபகாரமா!!!

இதே போல "பைத்தியம்" என்றொரு சிறுகதை ; இன்ஜினியரான தன மகனுக்கு நா பைசா வரதட்சினை இன்றி திருமணம் செய்து வைக்கும் ஒரு பேராசிரியரை ஊரும் அந்த ஊர் எம்.எல் ஏ வும் புகழ்ந்து வாழ்த்துகிறார்கள்,"புரட்சித் திருமணம்" என்று வாழ்த்துத் தந்தி எல்லாம் அனுப்பி கொண்டாடுகிறார்கள் அவரை.அதில் மிதப்பாய் சந்தோஷித்து திளைக்கும் அந்தப் பேராசிரியரை அவரில்லாத இடம் என்று எண்ணி அவரது சொந்த அக்காள் கணவரும் அவரது நண்பர்களும் "இப்படி ஒரு பைத்தியத்தைப் பாரேன்" என்றே ரேஞ்சில் எள்ளி நகைத்துப் பேச வானளவு மிதந்து கொண்டிருந்த அந்தப் பேராசிரியர் பூமிக்கு இறங்கி தரையில் கால் பாவி பித்துப் பிடித்தது போல அவர்களைக் கண்டு என்ன சொல்வதென புரியாமல் உரத்துச் சிரிக்கிறார்,நம் செயல்கள் மிக உயர்ந்தவையாய் இருப்பினும் அதைக் குறித்து நாம் மட்டுமே உன்னதம் கொள்கிறோம்,பிறருக்கு ஏதோ ஒரு வகையில் அது எள்ளல் மிகுந்ததாய் அமைந்து விடுகிறது,விசித்திரம் தான்.இது தானே வாழ்கை !

இதே வரிசையில்

வாசித்து நிமிர்கையில் இதழ்களில் மிக மெல்லிய புன்னகை பூசத்தக்க எள்ளல் நடையில் இன்னும் சில சிறுகதைகள் இதிலுண்டு ,அவை

4 வது பரிமாணம்

இங்கே மனிதர்கள் இருக்கிறார்கள்

ஓர் ஆசை தலைமுறை தாண்டுகிறது

அவர்கள் வந்து கொண்டிருகிறார்கள்

கவிமூலம்

மிஸ்.காவேரி

இந்தக் கதைகளைக் கூறலாம்.

இவை மட்டுமல்ல "பிடிமானம் " எனும் சிறுகதை ஏற்றுக் கொள்ளவியலாத வகையில் அமைந்த ஒரு பெண்ணின் தாய்மையைப் பற்றி பேசுகிறது.

"மொட்டை" இதே சாயலில் இனி எந்தக் கதை வந்தாலும் ஜெயந்தனின் இந்தக் கதை ஞாபகம் வரும்.


"நிராயுதபாணியின் ஆயுதங்கள் " கதையின் தலைப்பே எத்தனை அர்த்தம் பொதிந்திருக்கிறது பார்த்தீர்களா?! இதில் விளக்கம் சொல்ல என்ன இருக்கிறது?! இந்த சிறுகதையும் வாசிக்க வேண்டிய சிறுகதையே.

"டாக்கா மஸ்லின் " ஒரு மாறுபட்ட கற்பனை,வாசிப்பவர்களின் மனதில் ஒரு பாதிப்பை ஏற்படுத்தி நீடிக்கத் தக்க சிறுகதைகளை எழுதும் ஆசை இருக்கும் புதியவர்கள் வாசிக்க வேண்டிய படைப்புகளில் ஒன்று ஜெயந்தனின் சிறுகதைகள்.அந்த எளிமையான எழுத்தாளருக்கு எமது அஞ்சலி இந்தப் பதிவு.
புத்தகம் நிராயுதபாணியின் ஆயுதங்கள்
ஆசிரியர் ஜெயந்தன்
வெளியீடு வம்சி பதிப்பகம்
விலை ரூ 400


நோட்:

வம்சி புக்ஸ் பவா செல்லத்துரை சொன்னதாக ஒரு வாக்கியம் நெட்டில் ஜெயந்தன் அஞ்சலிப் பதிவுகள் எதிலோ ஒன்றில் வாசித்தேன் ,அப்படித்தான் எனக்கும் தோன்றுகிறது,ஏன் ஜெயந்தன் அதிகம் கொண்டாடப்படவில்லை?!அவருக்கு தன்னை மார்கெட்டிங் செய்து கொள்ளத் தெரியவில்லையோ!!! அல்லது அவரது சிறுகதைகளில் அப்பட்டமாய் வெளித் தெரியும் இயல்புத் தன்மை போலவே "இது போதும்" என்று தன்னிறைவாய் இருந்து விட்டாரோ!எப்படியானாலும் சரி இலக்கிய வாசிப்பில் தவிர்க்க முடியாத படைப்புகள் ஜெயந்தனுடையவை.


வாசிப்பவர்கள் ஜெயந்தன் குறித்த உங்களது பகிர்வுகளை இங்கே பதிந்து செல்லுங்கள்

24 comments:

அண்ணாமலையான் said...

குப்பைகளை என்ன மார்க்கெட் செய்தாலும் சாயம் வெளுத்து விடும். ஜெயந்தன் போன்ற சிறந்த படைப்பாளிகளின் படைப்புகள் காலத்திற்கும் அவர் பெயர் சொல்லும்...

CS. Mohan Kumar said...

ஜெயந்தனின் " எங்கும் யாருக்கும் எதுவும் நடக்கலாம்" என்று துவங்கும் கவிதை எனக்கு நிரம்ப பிடித்த ஒன்று. அது பற்றி இங்கு கூறியுள்ளேன் : http://veeduthirumbal.blogspot.com/2009/06/blog-post.html

நட்புடன் ஜமால் said...

ஜெயந்தன் அவ்வளவு பரிச்சியமில்லை

ஒரு வேலை பெயர் தங்காமல் இருந்திருக்கலாம் நினைவில்

”காந்தம்” வருவதால் ...

KarthigaVasudevan said...

நன்றி அண்ணாமலையான் ...

சரிதான் நீங்கள் சொல்வது .ஜெயந்தனின் படைப்புகள் காலத்திற்கும் நிற்கும் .

KarthigaVasudevan said...

நன்றி மோகன் குமார் ...உங்க லிங்க் போய் பார்க்கறேங்க

KarthigaVasudevan said...

நன்றி ஜமால் ...
ஜெயகாந்தன் இல்லை ...இவர் ஜெயந்தன் ,சிறுகதை கிடைச்சா லிங்க் போடறேன் படிங்கப்பா.

அகநாழிகை said...

ஜெயந்தன் அதிகம் கவனிக்கப்படாத முக்கிய படைப்பாளி. குறைந்த அளவே எழுதியவர், தன்னை முன்னிலைப்படுத்துவதை விரும்பாதவர். இதுபோன்ற எழுத்தாளர்களும் இருக்கத்தான் செய்கிறார்கள். பகிர்வுக்கு நன்றி. ஜெயந்தனுக்கு அஞ்சலி.

ஜெயந்தனின் ‘துக்கம்‘ கதை வாசிக்க..
http://nathiyalai.wordpress.com/2010/02/11/thukkam/

ஜெயந்தனின் மற்றொரு கதை
http://www.uyirmmai.com/Uyirosai/Contentdetails.aspx?cid=1869

ஜெய்லானி said...

இனையம் (வலைப்பதிவு) வந்ததால் தான் நிறைய விஷயங்கள் வெளியே தெரிகிறது.

KarthigaVasudevan said...

ஜெயந்தன் பற்றிய பகிர்வுக்கு நன்றி அகநாழிகை ,
உங்களது இணைப்பில் "துக்கம்" புத்தகத்திலேயே வாசித்து விட்டேன், உயிரோசை இணைப்பை இனி பார்க்கிறேன் .

KarthigaVasudevan said...

நன்றி ஜெய்லானி...நேற்றும் இன்றும் உங்களது புது வருகையும் பின்னூட்டமும் உற்சாகமளிக்கிறது,அடிக்கடி வாருங்கள்.

”ஆரண்ய நிவாஸ்”ஆர்.ராமமூர்த்தி said...

காலத்துக்கும் நிற்கும் படைப்புகளைப் படைத்தவர்கள் எதையும் இழக்க மாட்டார்கள் including popularity.
அவர்தம் எழுத்துக்கள் அவர் புகழ் பாடும்!!

Ayyanar Viswanath said...

புல்லைக் கொண்டு குண்டர்களின் வயிற்றைக் கிழிப்பது என்கிற ஆத்மநாமின் வரிகளைத்தான் ஜெயந்தன் கதைகளை வாசிக்கையில் நினைத்துக் கொள்கிறேன்.
மத்தியதர வர்க்கத்தினரின் இயலாமை கையாலகாத்தனம் என்கிற ஒற்றைப் புள்ளியில் சுருக்கும் பொது புத்தி முத்திரைகளோடு நகர்ந்து விடாமல் தமது கதைகளின் மூலமாக அதன் இன்னொரு பக்கத்தை பதிவித்தவர் ஜெயந்தன். இவரின் பாஷை என்ற சிறுகதையை பாலுமகேந்திரா குறும்படமாக்கியிருக்கிறார்.

அன்னாருக்கு அஞ்சலிகள்

அன்புடன் அருணா said...

ஜெயந்தன் படித்திருக்கிறேன்...ஏன் பெயர் பெறவில்லை என வியந்துமிருக்கிறேன்.

கமலேஷ் said...

ஒரு நல்ல படைபாளியை பற்றிய
உங்களின் பகிர்வுக்கு என் மிக்க நன்றி...

KarthigaVasudevan said...

நன்றி ஆரண்யநிவாஸ் ஆர்.ராமமூர்த்தி ...

ஆரண்யநிவாஸ் நல்லா இருக்குங்க பேருக்கான உங்க விளக்கம்.

ஜெயந்தன் எதையும் இழந்து விட்டார் என்று சொல்ல வரவில்லை நான்,சொல்லப் போனால் எண்பதுகளில் குமுதம் ,விகடனில் இவரின் படைப்புகள் பிரசித்தமானவை என்று எங்கோ வாசித்தேன்.வெகுஜனப் பத்திரிகைகளில் எழுதிக் கொண்டிருந்த ஒரு அருமையான படைப்பாளியை தீவிர இலக்கிய வாசிப்பாளர்கள் தவிர இன்னும் பலருக்குத் தெரிந்திருக்கவில்லை என்பது வருத்தமளித்தது, எனக்கு இரண்டு ஆண்டுகளுக்கு முன்பு தான் ஜெயந்தன் என்று ஒரு எழுத்தாளர் இருப்பதே தெரிந்தது,இத்தனை நல்ல கதைகளை தாமதமாக அறிந்து கொண்டுவிட்டோமே என்ற நினைப்பில் எழுந்த ஆதங்கமே அந்த வரிகள்.

KarthigaVasudevan said...

நன்றி அய்யனார்...

ஜெயமோகன் தளத்தை அடுத்து உங்கள் தளத்தில் தான் ஜெயந்தன் அஞ்சலி பதிவை வாசித்தேன் ."துக்கம்" சிறுகதை இணைப்பு இருந்தது அங்கே.ஜெயந்தன் அஞ்சலிப் பதிவாக அவரது மொத்த சிறுகதைகளில் பலவற்றைக் குறித்தும் எழுதி வைத்திருந்தேன்,மிக மிக நீளமான ஸ்க்ரிப்ட் என்று ப்ளாக்கரில் ஏற்ற முடியாமல் போயிற்று இரண்டு பாகமாகப் போட பெரும்பாலும் விரும்புவதில்லை நான்,இன்னும் சில நல்ல சிறுகதைகள் விடுபட்டுப் போயின.

"பாஷை" வெகு இயல்பான கதை.ஒளி ஓவியமாக பாலு மகேந்திரா அந்தக் கதைக்கு நியாயம் செய்திருப்பார் என்று நம்புகிறேன்.ஒட்டு மொத்தமாக எல்லாக் கதைகளுமே ஜெயந்தன் வழியாக தங்களை எழுதிக் கொண்டன என்று சொல்வது பொருத்தமானதே.

KarthigaVasudevan said...

வாங்க அருணா...

பெயர் பெறாமல் இல்லை அருணா...அவராக தொடர்பின்றி ஒதுங்கி இருக்க நினைத்து இருந்தாரோ என்னவோ!!! அவரது சிறுகதைகளை வாசித்து பிரமித்து நிமிர்வதற்குள் அவருக்கான அஞ்சலி செய்தி கேட்டு மிக வருத்தமாகத் தான் இருக்கிறது.

KarthigaVasudevan said...

நன்றி கமலேஷ் ...

ஜெயந்தன் தொடர்பான பிற இடுகைகளை இங்கே வாசியுங்கள்.

இன்னும் சில இணைப்புகள் உள்ளன பதிவர் நண்பர் சுரேஷ்கண்ணனின் இந்த தளத்தில்.

http://pitchaipathiram.blogspot.com/2010/02/blog-post_13.html

அன்புடன் மலிக்கா said...

நல்ல படைப்பாளிகள் வெளியுலகிற்கு
தெரிவது அரிது.

தாங்களின் பணிக்கு பாராட்டுக்கள்..

KarthigaVasudevan said...

நன்றி அன்புடன் மலிக்கா

Anonymous said...

நல்ல அலசல். என் ஜெயந்தன் அஞ்சலி பதிவிலும் இந்த போஸ்டை லிங்க் செய்திருக்கிறேன். முடிந்தால் என் பதிவையும் படித்துப் பாருங்கள்.

http://koottanchoru.wordpress.com/2010/02/17/எழுத்தாளர்-ஜெயந்தன்-மறைவ/

KarthigaVasudevan said...

நன்றி koottanchoru...

உங்களது பதிவையும் பார்த்தேன் ,நன்றாக பதிவு செய்திருக்கிறிர்கள்.உங்களது வலைத்தளத்தில் என் பதிவை இணைத்ததற்கு நன்றி.நான் எழுதக் கற்றுக் கொள்ள உதவும் எழுத்து ஆளுமைகளில் ஜெயந்தனுக்கு பிரத்யேக இடமுண்டு,சமூகத்துக்கு அறிவுரை சொல்லும்படியான பிரச்சாரத் தன்மை இல்லை அவருடைய எழுத்துக்கள் "உள்ளது உள்ளபடி" என்று சொல்லத் தக்க முறை தான் எனக்குத் தென்பட்டது.பார்வைகள் மாறுபடும் என்பதை ஏற்றுக் கொள்கிறேன்.

:)

எம்.ஏ.சுசீலா said...

நான் மதிக்கும் எழுத்தாளர்களில் ஜெயந்தன் குறிப்பிடத்தக்கவர்.
தங்கள் அஞ்சலி சிறப்பானது.
என் பதிவையும் காண்க.
http://masusila.blogspot.com/2010/02/blog-post_21.html
பி.கு; அவரது கிளி குறும் புதினம் எத்தொகுப்பிலுள்ளது..தெரியுமா.தெரிந்தால் சொல்லுங்கள்

KODU கோடு ஓவியமும் எழுத்தும் said...

நான், ஜெயந்தனின் மகன் சீராளன். என் தந்தைபற்றிய செய்திகளை படிக்க, கேட்க இன்னும் மனம் தைரியப்படவில்லை. மேற்கண்ட பதிவுகள் மீண்டும் கண்ணீர் வரவைத்தன. அனைவருக்கும் நன்றி. எம்.ஏ. சுசீலா, தாங்கள் எங்கள் வீட்டிற்கு வந்திருக்கிறீர்களா? வம்சி பதிப்பகத்தார் தந்தையின் நாடகங்களையும் நாவல்களையும் தொகுப்புகளாக கொண்டுவரவிருக்கிறார்கள். அவற்றில் "கிளிகள்" குறுநாவல் இடம்பெறுகிறது எனத் தெரிவித்துக் கொள்கிறேன். தொடர்புக்கு