Sunday, January 24, 2010

சொப்பனக்களிறு

ஆம் என்று மனம் ஒத்துக் கொள்ளும்
எதையுமே;
சரி என்று ஏற்றுக் கொள்ளாமல்
முரண்டு பிடிக்கும் லாவகம் ...
புத்திக்கு எப்போதும் வாய்த்திருக்கிறது;
பாட்டிக்கும் அத்தைக்குமான சச்சரவுகளில்
அத்தையின் கண்ணசைவில்
மௌனமாகும் மாமாவைப் போல்
சட்டை செய்யாது
தாண்டி நடக்க ஆசை தான் ;
மனம் முன்னிழுக்க
புத்தி பின்னிழுக்க
சாலை நிழற்குடையில்
ஒய்யாரமாய் சாய்ந்து நிற்கும்
நவ யுக நாகரீக யுவனில்
கண் பதிக்காமல் புறக்கணித்து விட்டதாய்
எட்டி நடக்கையில்
எப்போதும் போல் பரிகசித்தது மனம்
என் சாகசத்தைச் சொல்லிச் சொல்லி
சொப்பனக் களிறுகளை
பிணைத்துக் கட்டும் புத்திச் சங்கிலிகள்
அறுந்து அறுந்து விழுந்தாலும்
இற்றுப் போக விடாத
என்ன ஒரு சாகசம்?!

10 comments:

அண்ணாமலையான் said...

நல்ல சாகசம் தான்..

அமிர்தவர்ஷினி அம்மா said...

சொப்பனக்களிறு - அழகான வார்த்தை பிரயோகம்

கவிதையும் நல்லா இருக்கு

கண்மணி/kanmani said...

அழகான புதுப் புது வார்த்தைகள்

யாத்ரா said...

கவிதை ரொம்ப நல்லா இருக்குங்க, அருமை.

Unknown said...

கவிதை நல்லாருக்கு, எனக்குப் புரியலைன்னாலும். குடுகுடுப்பைக்கிட்ட இருந்து எதிர் கவுஜ எதிர்பாக்குறேன்.

நேசமித்ரன் said...

தலைப்பு கவிதைங்க . அதுக்கு அப்புறம் எத்தனை வார்த்தை எழுதினாலும் அதுவும் கவிதைதானே

"உழவன்" "Uzhavan" said...

கவிதையின் எழுத்தின் நடையே அருமை. நல்லாருக்குங்க

KarthigaVasudevan said...

கவிதை வாசித்து கருத்து சொன்ன அனைவருக்கும் எனது நன்றிகள்.:)

நட்புடன் ஜமால் said...

மனம் முன்னிழுக்க
புத்தி பின்னிழுக்க]]

பல விடயங்களில் இப்படியே நிகழ்கிறது

தலைப்பும் கவிதையும் நலம்.

sathishsangkavi.blogspot.com said...

கவிதை நல்லா இருக்கு