Monday, September 7, 2009

விஷாகாவின் டயரி ...

ஹே விச்சு எங்கடி போன ?

எவ்ளோ நேரம் கத்திட்டே இருக்கேன்...வந்து இந்த டவல் எடுத்துக் குடுத்துட்டுப் போய் தொலையேன் .

பாத்ரூமில் இருந்து அம்பிகா அக்கா கத்துவது விஷாகாவின் காதில் விழுந்தும் அவள் சட்டை செய்தாளில்லை ;நிதானமாக நடந்து போய் டவல் எடுத்து கதவருகே நீட்டினாள் .

ஈரக் கைகளால் வெற்று வெளியில் துளாவிக் கொண்டிருந்த அம்பிகா "எருமை மாடே ஏன் இவ்ளோ மெத்தனம் உனக்கு? கருவிக் கொண்டு வெடுக்கென்று டவலைப் பிடுங்கிக் கொண்டு கதவைப் படீரென்று அடித்து சாத்தினாள் .

சமையல் உள்ளில் தேங்காய் துருவிக் கொண்டிருந்த பார்வதி விஷாகாவின் அத்தை
ஏண்டி விஷி ...ஒரு வேலையும் பண்ணாம நீட்டி நெளிச்சிக்கிட்டுத் திரியற காலமே உங்க மாமா இஸ்திரிக் காரன் கிட்ட துணி கொண்டு போய் போடச் சொன்னாரே ? ...போட்டியா? இல்லியா? எப்போ பார்த்தாலும் மச மசன்னு நில்லு சுவத்த வெறிச்சிக்கிட்டு .என் தலையெழுத்துடி உன்னக் கட்டிட்டு மாரடிக்கணும்னு அலுப்புடன் துருவி முடித்த தேங்காய் சிரட்டையை ச்சட்டீர் என்று குப்பைத் தொட்டியில் விசிறி அடித்தாள்.

விஷாகா அசரவில்லை. காதில் எதுவும் விழுந்தார் போலவே காட்டிக் கொண்டாள் இல்லை ;

பார்வதியின் இளைய மகள் ராதா அம்பிகாவின் தங்கை ...எதோ புத்தகம் படித்துக் கொண்டிருந்தவள்...விஷாகாவைக் கண்ணில் கண்டதும்..

ஏய் விச்சு என் சைக்கிள் எடுத்து ஓட்டினியாடி நீ ? வீல் எல்லாம் ஒரே சேறு ...உங்க தாத்தாவா வண்டியக் கழுவித் தருவாரு? மரியாதையா இப்ப என் சைக்கிள் கழுவித் துடைச்சிட்டு அப்புறம் நீ ஸ்கூலுக்கு கிளம்பு .பத்ரகாளி மாதிரி சிடு சிடுத்து விட்டு மீண்டும் பாடம் படிப்பவளைப் போல டெஸ்க்கில் குனிந்து கொண்டாள்.

எதற்கும் வாய் திறக்காத விஷாகா பேசாமல் தனது புத்தகப் பை இருந்த அறைக்கு நடந்தாள் ...

அவளது முதுகுக்குப் பின்னே ...

சரியான அழுத்தம்டி இது ...பாரேன் இத்தனை கரிக்கறோம் ...ஏதானும் வாயத் தொறக்குறதா பார்?!

அறைக்குள் விஷாகா;

சோசியல் ஸ்டடிஸ் புத்தகத்தை அடுத்து கணக்குப் புத்தகத்துக்கும் இங்கிலீஷ் புத்தகத்துக்கும் இடையில் கருநீல நிறத்தில் மெத்து மெத்தென்ற முகப்பு அட்டைகளுடன் நீட்டிக் கொண்டிருந்த தனது டயரியை எடுத்து நடுப்பக்கம் பிரித்து சொருகி வைத்திருந்த ஒரு போட்டோவை எடுத்துக் கொஞ்ச நேரம் வெறித்து விட்டு மறுபடி மூடி பைக்குள் தள்ளினாள் .அவள் கண்ணில் நிறைந்து தழும்பியது நிச்சயம் கண்ணீர் இல்லை .தாங்கவொண்ணா கடுங்கோபம் .

மென்று விழுங்குவதைப் போல ஒரு சொம்பு நீர் மொண்டு தொண்டைக்கு குழிக்குள் விட்டு அந்த கோபத்தைக் கதறக் கதற சாகடித்தாள் ,இப்போது கண்ணில் அந்தப் பழைய கோபத்தைக் காணோம் ,முந்தைய வெறுமை எஞ்சி நின்றது.

அறையை விட்டு வெளியே வந்தவள் யாரிடமும் ஒரு வார்த்தை பேசினாள் இல்லை ..அங்கிருப்பவர்களும் அவளை பார்வையால் சதா ஆராய்ந்தார்களே தவிர ;என்ன வேண்டும் என்றும் கேட்கவில்லை..சாப்பிட்டாயா ...சாப்பிடுகிறாயா என்றும் ஒப்புக்கு கூட சொன்னார்கள் இல்லை.

அத்தை பார்வதி இடைநிலைப் பள்ளி ஆசிரியை ...அவளது பள்ளி நேரத்துக்கு சரியாக அவள் வெளிக் கிளம்பிப் போனாள் ,அவளுக்குப் பின்னே அம்பிகா பல்கலைக் கழகத்துக்கும் ,ராதா கல்லூரிக்கும் ஒவ்வொருவராய் கிளம்பி இடத்தைக் காலி செய்தனர்.

விஷாகா மட்டும் தனியானாள் அங்கே.

அவளும் தான் பள்ளிக்குப் போக வேண்டும்

பிளஸ் டூ ...மாதாந்திரத் தேர்வு நேரம் வேறு...

வீட்டில் வேலைகள் என்று அதிகப் படியாய் செய்ய நிறைய இருந்தன தான் ..ஆனால் அதில் பட்டுக் கொள்ள அவளுக்கு இப்போதெல்லாம் விருப்பமே இல்லை.
மாமா வீடென்று அவள் இங்கே தங்கிக் கொள்ள வந்து ஆறேழு மாதங்கள் கடந்து விட்டிருந்தன,

பாட்டியும் தாத்தாவும் ஊரில் விவசாயம் பார்க்கின்றனர். அங்கிருக்கும் பள்ளி இவளை ஆங்கில அறிவாளியாக்காது என்று நம்பி இங்கே அனுப்பி விட்டு அவர்கள் நிம்மதியாகி விட்டனர் அப்போதே.

அவர்கள் பாவம் வயதானவர்கள் ..

அவர்களைப் பற்றி விஷாகாவுக்கு எந்த கோப நினைவுகளும் அற்றுப் போய் நாட்கள் பல கடந்து விட்டிருந்தன. அவர்கள் மட்டும் அல்ல ..யாரைப் பற்றிய நினைவுகளும் இன்றி அவள் ஏதோ தனியானா கூட்டுக்குள் அடைபட்டுப் போனதைப் போலத் தான் சில மாதங்களாக உணர ஆரம்பித்திருந்தாள் .

விஷாகாவின் அம்மாவும் ..அப்பாவும் எங்கே ...?!

கேட்கத் தோன்றுமே ?!

நாளை அவளே சொல்லக் கூடும்.

10 comments:

நட்புடன் ஜமால் said...

கேட்க்க தோன்றியது தான்

நாளை அவர்களே சொல்லட்டுமுன்னு

வெயிட்டிங் ...

சந்தனமுல்லை said...

நல்லாருக்குங்க கதை..

அது சரி(18185106603874041862) said...

நல்ல ஆரம்பம்.....

அது சரி(18185106603874041862) said...

//
கேட்கத் தோன்றுமே ?!

நாளை அவளே சொல்லக் கூடும்.
//

நாளைன்னா செப்டம்பர் 8, 2009 தான?? இல்லாட்டி திருப்பி கேட்போம் :)))

Vidhoosh said...

சிறிது நேரம் கழித்து வந்திருக்கலாம். வைடிங் சாமி. சீக்கிரம் சொல்லுங்க.

--வித்யா

GEETHA ACHAL said...

கண்டிப்பாக நாளைக்கு மீதி கதை (அல்லது உண்மையாக நிகழ்வது) சொல்லிவிங்களா...

உலவு.காம் (தமிழர்களின் தளம் வலைபூக்களின் களம் - ulavu.com) said...

புத்தம் புதிய தமிழ் திரட்டி உலவு.காம்
தமிழ் வலைப்பூகள் / தளங்களின் சங்கமம் உலவு.காம்
www.ulavu.com
(ஓட்டுபட்டை வசதிஉடன் )
உங்கள் வலைப்பூவை இணைத்து உங்கள் ஆதரவைதருமாறு வேண்டுகிறோம் ….

இவண்
உலவு.காம்

R.Gopi said...

ரொம்ப‌ நெகிழ்ச்சியா இருந்த‌து...

சீக்கிர‌ம் சொல்லுங்க‌... நாங்க‌ள் எல்லாருமே வெயிட்டிங்...

ஜாஹிர் ஹுஸைன் said...

நாளை என்பதற்க்கு உங்கள் கணக்கில் 219 நாட்கள் ஆகுமே

ஜாஹிர் ஹுஸைன் said...

நாளை என்பதற்க்கு உங்கள் கணக்கில் 219 நாட்கள் ஆகுமே