நிறைய ஸ்டால்கள் காற்று வாங்கிக் கொண்டிருந்தன.சென்ற ஆண்டைப் போல இல்லை.முன்புறம் சாமியானவில் கூட அடர்த்தியின்றி அங்கொன்றும்...இங்கொன்றுமாகச் மக்கள் குழுக்களாகச் சிதறி இருந்தார்கள்(பார்க்க ஒரு ஒழுங்கின்றி காமா...சோமாவென்றிருந்தது அந்தக் காட்சி),இயற்கை விவசாயத்தையும்...சுற்றுச் சூழல் மாசுபடுவதைத் தடுத்தலைப் பற்றியும் மேடையில் ஏதோ நிகழ்ச்சி நடந்து கொண்டிருந்தது.
உள்ளே ஒரு ரவுண்டு சுற்றி விட்டு வந்து பார்க்கலாம் என்றார் தேவ் ,
போனமுறை எனக்கு ஸ்டால்களைத் தேர்ந்தெடுப்பதில் பயங்கரக் குழப்பம் இருந்தது,எந்த பதிப்பகத்தில் நான் தேடும் புத்தகங்கள் கிடைக்கும் என்கிற தெளிவேதும் இல்லாமல் முழு கண்காட்சி அரங்கையும் சுற்றிச் சுற்றி வர வேண்டியதாகி விட்டது,இந்த முறை அப்படி எல்லாம் நான் தேவ் மற்றும் பாப்புவை சோதிக்கவில்லை.
முதலில் எனக்குப் பிடித்தமான பதிப்பகங்களின் ஸ்டால் எண்களை பார்த்து விட்டு பிறகு தான் உள்ளே சென்றோம்.சில குழந்தைகள் கையில் பலூன்களுடன் எதிர்ப்படவும் பாப்புவும் பலூன் வேண்டுமென்று ஆரம்பித்து விட்டாள்,சில ஸ்டால்களில் அலங்காரத்துக்கென பலூன்களைத் தொங்க விட்டிருந்தனர், அவர்களிடம் கேட்டால் தருவார்களா என்னவோ என்ற ஐயமிருந்ததால்...நாங்கள் பாப்புவிடம் உள்ளே வேறு ஒரு இடத்தில் பலூன் விற்கிறார்கள் வாங்கித் தருகிறோம் என்று சமாளித்து விட்டு
முதலில் நியூ செஞ்சுரி புக் ஹௌஸ் சில் நுழைந்தோம்.யாரோ சொன்னார்கள் இங்கே நல்ல நல்ல ரஷ்யன் நாவல்கள் எல்லாம் விலை மலிவாகக் கிடைக்கும் என்று. நான் தேடியது ஆன்டன் செகாவ்...கிடைத்ததோ அலேசாண்டர் குப்ரினின் "செம்மணி வளையல்" இந்த ஆசியரைப் பற்றி எனக்கு எதுவும் தெரியாது,தலைப்பை பார்த்தே புத்தகம் வாங்கினேன்.வாசித்த பிறகு தான் தெரியும்...லாடமா ...லட்டுவா என்று!!!
இன்னொரு சுவாரஸ்யமும் அங்கே நடந்தது ,பாப்பு எப்போதுமே நான் என்ன செய்கிறேனோ அதைக் கொஞ்சம் பின்பற்றும் பழக்கம் உண்டு என்பதால் அன்றைக்கும் நான் புத்தகங்களை எடுத்து...சிலவரிகள் வாசித்து விட்டு பிறகு அதை அதே இடத்தில் வைத்து விட்டு அடுத்த அடுத்த புத்தகங்களையும் இதே முறையில் கொஞ்சம் புரட்டிப் பார்த்து எனக்கானதைத் தேர்ந்தெடுப்பதை அவளும் கவனித்திருக்கக் கூடுமோ என்னவோ ,தேவ் தான் பாப்புவைப் பார்த்துக் கொள்கிறாரே என்று நான் புத்தகங்களில் கவனித்துக் கொண்டிருக்க பாப்பு நான் என்னவெல்லாம் செய்கிறேனோ அதையே அவளும் செய்து கொண்டு இருந்திருக்கிறாள்.
ஒரு நான்கு வயது குட்டிப் பெண் அதி தீவிரமாக புத்தக அடுக்குகளில் ஆர்வமாகப் புத்தகம் தேடுவது அங்கிருந்த போட்டோ கிராபர்களுக்கு அதிசயமாகப்ப் பாட்டதோ என்னவோ நான்கைந்து புகைப்படங்களாவது எடுத்திருப்பார்கள் பாப்புவை அவள் புத்தகம் தேடும் போஸில் .இது பத்திரிகையில் வருமா அல்லது சும்மா குழந்தை தானே என்று விளையாட்டுக்கு பொய்யாக எடுத்தார்களோ என்னவோ ? அது அந்த போட்டோ கிராபர்களுக்கே வெளிச்சம்.
பிறகு உயிர்மைக்குள் சென்று பார்த்தோம்...எஸ்ரா,ஜெயமோகன்,சாரு,தமிழச்சி தங்க பாண்டியன் இன்னும் சில எழுத்தாளர்களின் புத்தகங்கள் அழகாக அடுக்கியிருந்தனர், எல்லாவற்றையும் ஒரு பார்வை பார்த்து விட்டு எஸ்ராவின் "யாமம் " மட்டும் வாங்கிக் கொண்டேன் .இது போன தடவையே வாங்க நினைத்தது ,இப்போது தான் வாங்கினேன்.சாருவின் "ஜீரோ டிகிரி " எடுத்துப் பார்த்து விட்டு இப்போதைக்கு அதை வாசிக்க போதிய மனப் பக்குவம் இல்லையோ என்று எண்ணி வைத்து விட்டேன்.
அடுத்து "காலச்சுவடில் " ..."ஒற்றன்" வாங்கினேன் ,பாராவின் பக்கங்களில் பரிந்துரைக்கப் பட்ட புத்தகங்களில் ஒன்றை வாங்கிய திருப்தி .அசோகமித்ரனை வாசிக்கும் ஆர்வம் முன்பும் உண்டு ஆனாலும் சிறுகதைகளோடு நிறுத்தி இருந்தேன் .பெரும்பாலும் ,பாலகுமாரனும் ,சுஜாதாவும்,சிவசங்கரியும்,அனுராதா ரமணனும்,லக்ஷ்மியுமே ஆக்கிரமித்திருந்தது சில காலம்,பிறகு அம்மாவின் பள்ளி நூலகத்தில் கிடைத்த பழைய "தேவன்...சாவி...மெரீனா எனக்குப் பிடித்துப் போனது எனது கல்லூரி விடுமுறைக்காலங்களில்..இதுவே முதல் முறை அசோகமித்ரனின் படைப்பை வாங்கினேன்.
எட்டாம் வகுப்பு என்று நினைக்கிறேன் அப்போது எங்கள் ஊரில் புதிதாக நூலகம் திறந்திருந்தார்கள்,முன்புற சுவரில் சிவப்பு மையால் பெரிய எழுத்துக்களில் "வெள்ளி விடுமுறை என்று "எழுதி இருப்பார்கள்.அது ஒரு சின்னஞ்சிறு நூலகம்.பெரும்பாலும் அங்கே ஊற்றில் உள்ள இளைஞர்கள் உட்கார்ந்து தினமலர் வாசிப்பார்கள் அல்லது தினத்தந்தி .
நான் என் அம்மாவுக்காக புத்தகம் எடுக்கப் போவேன் அப்போது தான் வாண்டு மாமா வின் பல மாயாஜாலக் கதைகளை வாசித்தேன்."அந்த காலகட்டத்தில் எங்கே "பூந்தளிர்,சிறுவர்மலர்...பாலமித்ரா...ரத்னமாலா,ராணி காமிக்ஸ் என்ற பெயரைப் பார்த்தாலும் உடனே வாங்கிப் படித்தே ஆகவேண்டும் என்றெல்லாம் தோன்றியதுண்டு.
கூடவே தமிழ்வாணன் அப்போது தான் எனக்கு அறிமுகமானார்,தமிழ்வாணன்
என்ற பெயரை விடவும் வெறுமே கருப்பு மையில் தீட்டப் படும் அவரது தொப்பியும் கண்ணாடியுமே பலரையும் போன்று என்னையும் கவர்ந்தவை.அந்தத் தொப்பிக்கும் கண்ணாடிக்கும் அப்படி ஒரு மவுசு உண்டு தான்.அந்தப் புத்தகங்களில் அப்படி ஒரு ஈடுபாடு .
கண்காட்சியைப் பற்றி எழுத ஆரம்பித்து விட்டு எங்கெங்கேயோ சுற்றி வளைத்து எழுதுகிறேன் பாருங்கள் ,சரி விசயத்துக்கு வருகிறேன்.எப்போதுமே "சுஜாதாவை" மறப்பதில்லை நான் விடுவதும் இல்லை .கணையாழியின் கடைசிப் பக்கங்களில் இருந்து கொலையுதிர்காலம் தொட்டு...ஸ்ரீரங்கத்துக் கதைகள் கடந்து.ஒவ்வொன்றைப் பிரித்துப் பார்த்து விட்டு கடைசியில் "யவனிகாவைத்" தேர்ந்தெடுத்தேன்.
பாப்புவுக்கு அவள் கேட்ட பலூன் காலச்சுவடில்" கிடைத்தது.அங்கிருந்த ஒரு விற்ப்பனையாளர் ஸ்டாலில் நுழையும் எல்லாக் குழந்தைகளுக்கும் பாரபட்சமின்றி பலூன்களை பரிசு போலத் தந்து கொண்டிருந்தார்.பாப்புவுக்கு பச்சை நிற பலூன் கிடைத்தது,அவள் எப்போதும் போல எனக்குப் பிங்க் கலர் பலூன் தான் வேண்டும் என்று மாற்றி வாங்கிக் கொண்டாள் .
ராஜநாராயணனை வாங்க "அன்னம் பதிப்பகம்" சென்றோம்,ராஜநாராயணன் புத்தகங்கள் ஏற்கனவே கொஞ்சம் இருந்ததால் ...நான் வாங்க நினைத்த கி.ரா வுக்கு மற்ற எழுத்தாளர்கள் எழுதிய கடிதங்கள் புத்தகத்தின் விலை பட்ஜெட்டைத் தாண்டி விட்டதால் "இந்த வருட இந்த" இந்த எடுத்துக் கொண்டேன்.தவற விட்ட மற்றொன்று "கழனியூரானின்" குறுஞ்சாமிகளின் கதைகள்" எடுத்துப் பார்த்து விட்டு அடுத்த முறை வாங்கலாம் என்று வைத்து விட்டேன்.ஆலிஸை வாங்கியது பாப்புவுக்காக!
அம்பையைப் பற்றியும் எனக்கேதும் இதுவரை பெரிதாகத் தெரியாது .விருது பெற்ற பெண் எழுத்தாளர் என்ற ஆர்வத்தில்" காட்டில் ஒரு மான் " வாங்கினேன்.அங்கேயே நளினி ஜமீலாவின் "ஒரு பாலியல் தொழிலாளியின் சுயசரிதை" வாங்கினேன்.இதுவும் சென்ற முறை வாங்க நினைத்து மிஸ் பண்ணிய புத்தகமே.படிக்க வேண்டிய புத்தகம் தான் என்று தோன்றவே வாங்கி விட்டேன்.
இவ்வளவு தான் இந்த முறை வாங்க முடிந்தது நான் போட்ட பட்ஜெட்டுக்குள்.இது தவிர கேன்டீனில் வேறு கொஞ்சம் செலவானது .ஸ்ரீ கிருஷ்ணா ஸ்வீட்காரர்கள் தான் இந்த முறை ஆக்கிரமித்திருந்தார்கள்.பலகாரம் நன்றாகவே இருந்தது.அவர்களைத் தவிர ஜமாய் ஐஸ் கிரீம் கடை ஒன்று மட்டுமே இருந்தது. நாங்கள் ஆளுக்கு ஒரு செட் பரோட்டாவும்,தயிர் சாதமும் வாங்கிக் கொண்டோம்.கேசரி அவர்கள் செய்வதைப் போன்ற பக்குவத்தில் நமக்கு அமைவதில்லை ஏனோ என்ற சந்தேகத்துடன் ஒரு பிளேட் வாங்கிக் கொண்டோம்.
paappu ஐஸ் கிரீம் கேட்டாள்,அவளுக்கு அது ஒத்துக் கொள்வதில்லை என்பதால் சின்னதாய் ஒரு வெனிலா வாங்கிக் கொடுத்து விட்டு பாதிக்கு மேல் நான் எடுத்துக் கொண்டேன்.பாப்பு அதை எல்லாம் கண்டு கொள்ளவில்லை.அவளுக்கு கேட்டவுடன் வாங்கிக் கொடுக்கிறார்களா இல்லையா என்ற டெஸ்டிங் அவ்வளவு தான் !
இப்படியாக இந்த வருடப் புத்தகக் கண்காட்சி விசிட் ஒரு வழியாக முடிந்தது.இதில் நான் வாங்க நினைத்து விடுபட்டது பல புத்தகங்கள்.அவற்றில் டால்ஸ்டாயின் "அண்ணா கரீனாவும்" அடங்கும். புத்தகம் கழிவு போக நானூற்று ஐம்பத்து ரூபாய் என்றார்கள் ,அடுத்த முறை வாங்கலாம் என்று வந்து விட்டேன்,தேவ் ஏன் ...பிடித்திருந்தால் வாங்கிக் கொள்ளேன் என்றார்,விருப்பமிருந்தும் வாங்கத் தோன்றவில்லை.அடுத்த புத்தகத்து திருவிழா வராமலா போகும் என்று வெளியில் வந்தேன்!?
manimegaip பிரசுரம்...வானதி பிரசுரம் ...விகடன்...விகடனில் ஏதாவது புத்தகம் வாங்குவது வழக்கம் எப்போதுமே உண்டு.இந்தமுறை பாப்புவின் பொறுமை எல்லை மீறியதில் நிதானமாகப் புத்தகங்களைத் தேட அவகாசமில்லை அதனால் அதொன்றும் வாங்காமல் வந்து விட்டோம், .சத்யாவில் "வண்ணதாசன் சிறுகதைகள்" வாங்க நினைத்து கடைசியில் வாங்கவில்லை.இதற்கும் அடுத்த முறை பார்க்கலாம் என்று எனக்குள் சொல்லிக் கொண்டேன்.
கதைப்புத்தகங்கள் தவிரவும் நான் வாங்க விரும்பியது "டாக்டர் பி.ஆர்.அம்பேத்கரின் "பாகிஸ்தான் அல்லது இந்தியப் பிரிவினை " மேலும் எ.கே .டாங்கே எழுதிய "பண்டைக் கால இந்தியா புத்தகங்கள் வாங்க நினைத்திருந்தேன்.அவற்றைத் தேட முடியவில்லை.எந்த ஸ்டாலில் கிடைக்கும் என்றும் தெரியவில்லை.இதற்கும் அடுத்த முறை தான் என்று சொல்லிக் கொண்டு ஒரு வழியாய் வெளியில் வந்தோம்.
நாங்கள் வெளியில் வரும்போது மகாத்மா காந்தியும் ,அம்பேத்கரும் (கருப்பு நிற கோட்...சூட் அம்பெத்கராகத் தான் இருக்கும்!) அந்த வெயிலில் முகம் முழுக்க வெள்ளை மாவைப் பூசிக் கொண்டு சாமியானவுக்கு முன்பிருந்த மேடையிலிருந்து படிகளில் எதற்காகவோ இறங்கிக் கொண்டு இருந்தார்கள்.பார்க்கப் பாரிதாபமாக இருந்தது,தலையில் கொம்புகளை ஒட்டிக் கொண்டு அரக்கர்கள் போல சிலர் மேடையில் எதோ பாடி ஆடிக் கொண்டு இருந்தார்கள்.
அவ்வளவு தான் இந்த வருடம் புத்தகத் திருவிழா முடிந்தது எனக்கு. உங்களுக்கு எப்படி ?
எழுதுங்கள் மக்களே!!!
24 comments:
நல்லா எழுதியிருக்கீங்க
பாப்பு புகைப்படம் வந்தால்,
எங்களுக்கும் தெரிவிக்கவும்.
ரத்னபாலாவா மாலாவா ...
சலிப்பில்லா நடை. நானும் நீங்கள் சொன்ன அதே நேரம் வந்திருந்தேன்.
//அலேசாண்டர் குப்ரினின் "செம்மணி வளையல்" இந்த ஆசியரைப் பற்றி எனக்கு எதுவும் //
கண்டிப்பாக ஏமாறமாட்டீர்கள்..மிக நல்ல புத்தகம்!!
பாப்புவுக்கு பச்சை நிற பலூன் கிடைத்தது,அவள் எப்போதும் போல எனக்குப் பிங்க் கலர் பலூன் தான் வேண்டும் என்று மாற்றி வாங்கிக் கொண்டாள் .///
பொங்கல் வாழ்த்துக்கள்
உங்களுக்கும் பாப்புவுக்கும்!!
தேவ் அவர்களுக்கும்!!!
உங்களையும் பாப்புவயும் பத்தி எழுதிரீங்க! அவரை விட்டிட்டீங்களே!!!
தேவா..
அச்சச்சோ தேவ் ஒன்றுமே வாங்கலியா ???? இப்படி இருட்டடிப்பு செய்துட்டீங்களே???
அன்புடன் அருணா
நல்ல வர்ணணை.. வாங்கினதெல்லாம் படிக்க இப்போ நேரம் வேணுமே.... :)
அனுபவத்தை நல்லா எழுதி இருக்கீங்க. படிக்கும் பழக்கம் இன்னும் மிச்சமிருப்பது ஆச்சர்யமாக உள்ளது..
இவ்வளவு தான் இந்த முறை வாங்க முடிந்தது நான் போட்ட பட்ஜெட்டுக்குள்.இது தவிர கேன்டீனில் வேறு கொஞ்சம் செலவானது//
அப்போ தேவ்க்கு அந்த 50 ரூபாய் இந்த மாசம் கிடையாதா?
புத்தகக் கண்காட்சி பற்றிய தகவலை எனக்கு கொடுத்தால் சந்தோசப்படுவேன்.. எங்கே நடக்கிறது, இன்னும் எவ்ளோ நாட்களுக்கு நடக்கும்?? நான் சன்டே சென்னை வர்றேன்..
//
சாருவின் "ஜீரோ டிகிரி " எடுத்துப் பார்த்து விட்டு இப்போதைக்கு அதை வாசிக்க போதிய மனப் பக்குவம் இல்லையோ என்று எண்ணி வைத்து விட்டேன்.
//
கண்டிப்பாக ஸீரோ டிகிரி படித்துப் பாருங்கள்...உங்களுக்கு லஷ்மி, பாலகுமாரன், சிவசங்கரி, சுஜாதா, ஜெயகாந்தன் படிக்கும் வழக்கம் உண்டென்றால் ஸீரோ டிகிரி படிக்க வேண்டிய புத்தகம்...
தமிழுக்கு பழக்கமில்லாத முற்றிலும் புதிய முகம் காட்டும் எழுத்து அது...சிலருக்கு அது கோர முகம்...ஆனால் வாழ்க்கையின் மிக உண்மையான முகம் அது....உண்மையிலேயே வேற்று கிரக ஜீவி!
ஆனால் எச்சரிக்கை....அதன் மொழி உங்களுக்கு பிடிக்காமல் போகலாம்!
ஏதோ நானே புத்தக காட்சியில் அலைந்து புத்தகம் வாங்கியது போன்ற உணர்வு...உங்கள் எழுத்து இயல்பாக இருக்கிறது!
// நட்புடன் ஜமால் said...
நல்லா எழுதியிருக்கீங்க
பாப்பு புகைப்படம் வந்தால்,
எங்களுக்கும் தெரிவிக்கவும்.
ரத்னபாலாவா மாலாவா ...//
நன்றி ஜமால்...
பாப்பு புகைப்படம் வந்தால் தெரிவிக்கிறேன்,ரத்னமாலாவா...பாலாவா குழப்பமாக இருக்கிறது,யாருக்காவது தெரிந்தால் சொல்லுங்கள்.
// முரளிகண்ணன் said...
சலிப்பில்லா நடை. நானும் நீங்கள் சொன்ன அதே நேரம் வந்திருந்தேன்.
//
நன்றி முரளிகண்ணன்...
அடடா...ஒரு பதிவர் சந்திப்பு மிஸ் ஆகி விட்டதே!
//சந்தனமுல்லை said...
//அலேசாண்டர் குப்ரினின் "செம்மணி வளையல்" இந்த ஆசியரைப் பற்றி எனக்கு எதுவும் //
கண்டிப்பாக ஏமாறமாட்டீர்கள்..மிக நல்ல புத்தகம்!!//
இன்னும் வாசிக்க ஆரம்பிக்கவில்லை சந்தனமுல்லை,மேலோட்டமாகப் பார்த்தாதில் நன்றாகவே இருந்தது கதை,நீங்கள் வேறு சொல்லி விட்டீர்கள்,நன்றாகத் தான் இருக்கும்.
//thevanmayam said...
பாப்புவுக்கு பச்சை நிற பலூன் கிடைத்தது,அவள் எப்போதும் போல எனக்குப் பிங்க் கலர் பலூன் தான் வேண்டும் என்று மாற்றி வாங்கிக் கொண்டாள் .///
பொங்கல் வாழ்த்துக்கள்
உங்களுக்கும் பாப்புவுக்கும்!!
தேவ் அவர்களுக்கும்!!!
உங்களையும் பாப்புவயும் பத்தி எழுதிரீங்க! அவரை விட்டிட்டீங்களே!!!
தேவா..
//
நன்றி தேவன்மயம்...
உங்களுக்கும் உங்களது குடும்பத்தினருக்கும் எங்களது இனிய தமிழ் புத்தாண்டு மற்றும் பொங்கல் நல்வாழ்த்துக்கள்.தேவ் பற்றி நான் எழுதிக் கொண்டு தான் இருக்கிறேன்.முந்தைய பதிவுகளில் .
//அன்புடன் அருணா said...
அச்சச்சோ தேவ் ஒன்றுமே வாங்கலியா ???? இப்படி இருட்டடிப்பு செய்துட்டீங்களே???
அன்புடன் அருணா
//
அட என்ன அருணா இது? தேவ் தான் எல்லாப்புத்தகங்களும் வாங்கினார்.ஐ மீன் வாங்கிக் கொடுத்தார் எனக்கு !!! :):):):):):)
PPattian : புபட்டியன் said...
நல்ல வர்ணணை.. வாங்கினதெல்லாம் படிக்க இப்போ நேரம் வேணுமே.... :)
வாங்க புபட்டியன் ...
கிடைக்கும் நேரத்தில் படிக்கத் தவறுவதில்லை ,யவனிகாவை வாசித்துக் கொண்டிருக்கிறேன் தற்சமயம்.
// குடுகுடுப்பை said...
அனுபவத்தை நல்லா எழுதி இருக்கீங்க. படிக்கும் பழக்கம் இன்னும் மிச்சமிருப்பது ஆச்சர்யமாக உள்ளது..
இவ்வளவு தான் இந்த முறை வாங்க முடிந்தது நான் போட்ட பட்ஜெட்டுக்குள்.இது தவிர கேன்டீனில் வேறு கொஞ்சம் செலவானது//
அப்போ தேவ்க்கு அந்த 50 ரூபாய் இந்த மாசம் கிடையாதா?
வாங்க குடுகுடுப்பையாரே...
உலகத்தில் உள்ள அத்தனை புத்தகங்கள் கிடைத்தாலும் எனக்கு சந்தோசமே!!! வாசிக்கும் பழக்கம் நிறையவே மிச்சம் இருக்கிறது.
தேவ் பற்றியும் ஐம்பது ரூபாய் பற்றியும் எதுவும் சொல்வதிற்கில்லை !(இதெல்லாம் வாழ்க்கைல சகஜம்யா (சாலமன் பாப்பையா ஸ்டைலில் வாசிக்கவும்)
PoornimaSaran said...
புத்தகக் கண்காட்சி பற்றிய தகவலை எனக்கு கொடுத்தால் சந்தோசப்படுவேன்.. எங்கே நடக்கிறது, இன்னும் எவ்ளோ நாட்களுக்கு நடக்கும்?? நான் சன்டே சென்னை வர்றேன்..
வாங்க பூர்ணிமாசரண்...
புத்தகக் கண்காட்சி அமைந்தகரை (அமிஞ்சிக்கரை!!!)புனித ஜார்ஜ் மேல்நிலைப் பள்ளி வளாகத்தில் நடைபெறுகிறது.ஜனவரி எட்டாம் தேதி முதல் பதினெட்டாம் தேதி வரை நடைபெறும்.மேலதிக தகவல்களுக்கு ;
www.writerpara.net (or)
www.nizhalkal.blogspot.com
பாருங்கள்...அதில் புத்தக் கண்காட்சி பற்றிய தவல்களை தொடர்ந்து எழுதி வருகின்றனர்.
//அது சரி said...
//
சாருவின் "ஜீரோ டிகிரி " எடுத்துப் பார்த்து விட்டு இப்போதைக்கு அதை வாசிக்க போதிய மனப் பக்குவம் இல்லையோ என்று எண்ணி வைத்து விட்டேன்.
//
கண்டிப்பாக ஸீரோ டிகிரி படித்துப் பாருங்கள்...உங்களுக்கு லஷ்மி, பாலகுமாரன், சிவசங்கரி, சுஜாதா, ஜெயகாந்தன் படிக்கும் வழக்கம் உண்டென்றால் ஸீரோ டிகிரி படிக்க வேண்டிய புத்தகம்...
தமிழுக்கு பழக்கமில்லாத முற்றிலும் புதிய முகம் காட்டும் எழுத்து அது...சிலருக்கு அது கோர முகம்...ஆனால் வாழ்க்கையின் மிக உண்மையான முகம் அது....உண்மையிலேயே வேற்று கிரக ஜீவி!
ஆனால் எச்சரிக்கை....அதன் மொழி உங்களுக்கு பிடிக்காமல் போகலாம்!//
சில வினாடி யோசனையில் தான் ஜீரோ டிகிரி வாங்குவதை தவிர்த்தேன்.நீங்கள் சொல்வது சரி தான் அது சரி ...அதன் மொழி எனக்குப் புரியாமல் போகும் என்பதை விட பிடிக்காமல் போய்விடுமோ என்ற எண்ணத்தில் தான் வாங்குவதை தவிர்த்தேன்,இன்றைக்கு வாசிக்கப் பிடிக்காத ஒரு விஷயம் எதிர்காலத்தில் என்றேனும் ஒருநாள் பிடித்தும் போகலாம்.ஒருகாலத்தில் எனக்கு எஸ்ராவின் எழுத்துக்களில் இருக்கும் கனம் பிடித்தமில்லை,சிறுகதைகள் தவிர எஸ்ராவை தேடுவதில்லை,இன்று அப்படி இல்லை.அப்படித்தான் சாருவும்...ஜீரோ டிகிரியும் !!!
//அது சரி said...
ஏதோ நானே புத்தக காட்சியில் அலைந்து புத்தகம் வாங்கியது போன்ற உணர்வு...உங்கள் எழுத்து இயல்பாக இருக்கிறது!
//
நன்றி அதுசரி
அது ரத்னபாலா தான்.
அம்புலி மாமா, பாலமித்ரா, ரத்ன மாலா, பூந்தளிர் எல்லாம் அப்போதைய பேவரிட்கள்.
ஸ்டால் எண் 35, மேப்ஸ் இண்டியா ஸ்டாலில் தமிழ் காமிக்ஸ்கள் கிடைக்கிறது. (லயன் மற்றும் முத்து)
ஆஹா சென்ற கமெண்டில் மீண்டும் ரத்ன மாலா என்று அடித்துவிட்டேன்.
ரத்ன பாலா
ரத்ன பாலா
ரத்ன பாலா
// மிஸஸ்.டவுட் said...
PoornimaSaran said...
புத்தகக் கண்காட்சி பற்றிய தகவலை எனக்கு கொடுத்தால் சந்தோசப்படுவேன்.. எங்கே நடக்கிறது, இன்னும் எவ்ளோ நாட்களுக்கு நடக்கும்?? நான் சன்டே சென்னை வர்றேன்..
வாங்க பூர்ணிமாசரண்...
புத்தகக் கண்காட்சி அமைந்தகரை (அமிஞ்சிக்கரை!!!)புனித ஜார்ஜ் மேல்நிலைப் பள்ளி வளாகத்தில் நடைபெறுகிறது.ஜனவரி எட்டாம் தேதி முதல் பதினெட்டாம் தேதி வரை நடைபெறும்.மேலதிக தகவல்களுக்கு ;
www.writerpara.net (or)
www.nizhalkal.blogspot.com
பாருங்கள்...அதில் புத்தக் கண்காட்சி பற்றிய தவல்களை தொடர்ந்து எழுதி வருகின்றனர்.
//
Thank you so much:)
நானும் உங்ககூடவே புத்தகத் திருவிழாவில் சுற்றிவந்தேன்.
கூட்டிக்கொண்டு போனதுக்கு நன்றி.
Post a Comment