Wednesday, December 10, 2008

குல தெய்வக் கதை (தொடர்கிறது )

அண்ணிகளுக்குள் நடந்து கொண்டிருந்த சம்பாசனை எதுவும் தெரியாத கிச்சம்மாள்எப்போதும் போல வீடு திரும்புகிறாள் கொஞ்சம் சீக்கிரமாகவே ;
ஒட்டுக் கேட்ட அண்ணன் போய் மற்ற அண்ணன்களிடம் என்ன சொன்னானோ?
அத்தனை பெரும் அன்று சீக்கிரமாகவே வீடு திரும்பி விட்டனர்.
மறுநாள் விடிந்தால் வெள்ளிக்கிழமை .
பொழுது விடிந்தது ;
என்றும் இல்லாத அதிசயமாக அன்றைக்குப் போய் பெரிய அண்ணன் கோழி அடித்துக் குழம்பு வைக்கச் சொன்னார்.சரி என்று வீட்டில் தடா புடலாக கோழி அடித்தக் குழம்பு வைத்து எல்லோரும் ஒன்றாக உட்கார்ந்து தங்கையுடன் சாப்பிட்டனர் .
அண்ணன்கள் ஒவ்வொருவரும் பாசம் மிகுந்து தங்கைக்கு மாறி மாறிப் பரிமாறினர்.கிச்சம்மவுக்கு நெஞ்சடைக்க அழுகை வந்தது அவர்களது பாசத்தைக் கண்டு ;இப்படிப் பட்ட பாசக்கார அண்ணன்களை விட்டு விட்டு யாரோ ஒரு ஆணைக் கல்யாணம் செய்து கொண்டு இன்னொரு வீட்டுக்கு போகப் போகிறோமே!
யாரோ ...எந்த ஊரோ ?
அந்த ஊர் இந்த ஊரிலிருந்து இன்னும் எத்தனை தூரமோ?
நினைத்தால் உடனே புறப்பட்டு வரக்கூடிய தொலைவோ இல்லையோ?
என்ன தான் முகம் கொட்த்துப் பேசா விட்டாலும் அண்ணிகளைப் பிரிவதும் கூட இந்த நேரத்தில் இவ்வளவு துக்கமாக இருக்கிறதே ?
என்று அந்த பேதை பெண் நினைத்து மறுகிக் கொண்டிருந்தாள் .
ஆயிற்று ...எல்லோரும் சாப்பிட்டு முடித்தார்கள் .
கிச்சம்மா ரொம்ப நாட்கள் கழித்து அண்ணிகள் வருவதற்கு முன்பு தன் வீட்டில் எப்படி சுதந்திரமாகப் புழங்கினாலோ அதே போல இருப்பதற்கு தைரியம் உள்ளவளாய் ;பின்வாசலில் தலையணை போட்டு கொஞ்சம் கண்ணயரலாம் என்று ஆசை ஆசையாக பின்வாசலுக்கு நேரே வெறும் பாயில் தலையணை இட்டுக் கொண்டு கோழிக் குழம்பு தந்த தூக்கம் மெதுவாக கண்ணைச் சுழற்ற ஒருக்களித்து படுத்து கண் அயர்ந்தாள்.
ஏதேதோ கனவுகள் சூழ மெல்ல மெல்ல உறங்கிப் போனாள்;ரொம்ப நாட்கள் கழித்து நிம்மதியான உறக்கம் .
தன்னைக் காப்பாற்ற அண்ணன்கள் இருக்கிறார்கள் என்ற நிம்மதியோ என்னவோ?
தன்னைச் சுற்றி என்ன நடக்கிறதென்றே அறிந்துகொள்ள தேவையில்லை எனும்படி ஆழ்ந்த உறக்கம் .
ஆனாலும் மிகப் பயங்கரமான நேரத்தை நாம் உணரா விட்டாலும் நமது புலன்கள் அறிந்து கொள்ளுமாமே ?!அப்படித்தான் தலைமாட்டில் ஏதோ ஆள் அரவம் கேட்டு ; வீட்டுப் பூனையோ ...ஆட்டுக் குட்டியோ ? என்று அரைக்கண் தூக்கமாய் விழிகளை மலர்த்தியவள் அதற்குப் பிறகு அதிர்ச்சியில் பிரமை பிடித்துப் போய் நாக்கு மேலண்ணத்தில் ஒட்டிக் கொள்ள தொண்டை வறண்டு போய் மலங்க மலங்க விழித்தாள்.
எதிரே ...அம்மா சீதனமாக கொண்டு வந்த பழைய அம்மிக் குழவியை ஏந்தியவாறு பெரிய அண்ணன் நின்றார்.வெகு உறுதியாக அதை தன் தங்கையின் தலையில் போட்டே தீருவது என்ற முடிவோடு.
கிச்சம்மா ஊமையானாள்...பேச்சு வரவில்லை ...!
திக்கித் திணறி ...அண்ணா என்பதற்குள் அந்த பாசமிக்க அண்ணன் ;தன் அழகான சின்னத் தங்கை ...கடைசியாய் பிறந்தாலும் பாதுகாக்க அண்ணன்கள் இருக்கிறார்கள் என்ற நம்பிக்கையிலேயே இத்தனை நாட்கள் வாழ்ந்த ,
தூங்குவதற்கு ஒரு நிமிடம் முன்பு கூட தன் அண்ணன்களின் பாசத்தில் உருகிப் போய் திணறிய அந்த அன்பான வெள்ளந்தி தங்கையின்
இளம் தலையில் அந்தப் பழைய பெரிய அம்மிக் குழவியை போட்டே விட்டான் .
தங்கையின் தலை சிதறிய அடுத்த நொடி உயிர்ப்பறவை கதறிக் கொண்டு பறந்தது .அண்ணா நீயா ? என்று கேட்டுக் கொண்டே அந்த உயிர் தெருவில் கதறிக் கொண்டு பறக்க அந்நேரம் மாலை மயங்கும் அந்தி நேரம் பிரம்மா முகூர்த்தம்
"அந்த ஊர் வழக்கப் படி ஊர்க் காவல் தெய்வம் பெரியாண்டவர் வேட்டைக்குப் புறப்படும் நேரம்.
"ஜல் ஜல் என்று சலங்கை ஒலிக்க வேட்டைக்கு தன் பைரவ மூர்த்தியுடன் எதிரே வந்த பெரியாண்டவர் தன் காலடியில் கதறிக் கொண்டு வந்து மோதிய உயிரின் அலறல் கேட்டு ஒரு வினாடி திகைத்து நின்றாராம்.
மறுநிமிடம் நடந்ததை உணர்ந்து "அண்ணா என்று அபயக் குரலோடு என் காலடியில் விழுந்த கன்னியே இன்று முதல் நானே உனக்கு அண்ணன் ...உனக்கு காவல் ...என்று அழைத்துப் போய் தன் கோயிலில் தனி சன்னதி கொடுத்து ஆட்கொண்டாராம் .
தன் சொந்த அண்ணன்களால் மிக மோசமாக நம்பிக்கைத் துரோகம் இழைத்து கொடூரமாக கொல்லப் பட்ட கிச்சம்மா அன்று முதல் "பெரியாண்டவரால் " குலம் காக்கும் குல தெய்வமானாள் .
இதோடு கதை முடிகிறது .
இந்தக் கோவில் கோவில் பட்டிக்கு அருகே இருக்கிறது .
உண்மையில் நடந்த கதை என்று பேசிக் கொள்கிறார்கள் .
கிச்சம்மளுக்கு பூஜை முடிந்ததும் பெரியாண்டவரையும் மறக்காமல் நன்றியோடு நினைத்து பூஜை புனச்காரங்களுடன் வணங்கி விட்டே பக்தர் கூட்டம் கலைகிறது.
வருடா வருடம் மாசி மாதம் பூஜை நடக்கிறது .

3 comments:

thevanmayam said...

Very good story!
Deva.

மிஸஸ்.டவுட் said...

welcome to my blog
thankx for ur comments Deva

அமுதா said...

நல்லா இருந்ததுங்க கதை